JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஒருபக்க கதை2 - "என் நபுசு(மனசு) கேக்கலையே!"

Nuha

Member
IMG-20220305-WA0000.jpg
முன்னுரை :

நபுசு என்பது "நாஃப்ஸ்" என்ற அரபி சொல்லின் தழுவலாய் தமிழில் கூறப்படுகிறது.
இதற்கு அர்த்தம் நம் சுயம், உள்ளுணர்வு, மனசாட்சி, ஆழ்மனம் ஆன்மா... என்ற நம் உள்ளத்தின் தனி மனிதத்தை சார்ந்தது என கூறலாம்.

நபுசு ஒருவரிடம் புகுந்துவிட்டால். அது நம்மை ஆட்டிபடைக்கும். ஒரு விடயத்தை "செய் செய்" என நம் உள்ளுணர்வாக அந்த நபுஸானது நமக்குள் இரண்டாம் மனதாக இருந்துக்கொண்டு தூண்டிக்கொண்டே இருக்கும். அப்படியான உள்ளுணர்வு நன்மையான காரியத்தை சார்ந்து இருந்தால் தாராளமாய் ஈடுபடலாம். ஆனால்??

எடுத்துக்காட்டாக: தர்மமாக செலவு செய்யும் காரியம்... பிறருக்கோ நம் உறவுகளுக்கோ அவசரத்தில் ஒரு உதவி தேவை படும் போது. நம்மிடம் அவர்கள் கேட்காமலேயே நாம் செய்வோம் என நமக்குள் தோன்றுமானால் அது நல்ல நபுசு.

உதவி மட்டுமின்றி நியாயமான உத்தியோகம் செய்து முன்னேற தூண்டும் நபுசும்.. இது போல நல்லதை செய்ய தூண்டும் நபுசு ஒன்றும் பிரச்சனை இல்லை ஆனால் இதில் பல வகை உண்டு.. ஒரு கட்டத்தில் அது அகம்பிடித்து அடம்பிடித்து தீயதையும் செய்ய தூண்டும்(ego).. என மாறும் போது!

இந்த நாஃப்ஸ் ஏழுவகை படுகிறது.

1. தூண்டும் (செய் செய் என தூண்டும் உள்ளுணர்வு)
2. சுய குற்றம் சாட்டும்.
(தப்பு செய்துவிட்டாயே?? என வருந்தவோ.. அடங்கி போய்விட்டாயே இது நீயே இல்லை! என இன்னும் அகத்தை இறுக்கவோ செய்யும் )
3. ஈர்க்கப்பட்டது. (நம்மை ஒரு குறிப்பிட்ட காரியத்தில் இழுத்து செல்லும்)
4. அமைதியானது ( ஒன்றுமே தோன்ற செய்யாமல் நிம்மதியாய் விட்டுவிடும்)
5. மகிழ்ச்சியடைந்த நபசு
6. மகிழ்ச்சியான நபுசு
7. தூய்மையானது.

சரி அதிகம் சொல்லிவிட்டோம் இப்போது கதை பக்கம் திரும்பலாம். நம் கதையில் ஒருவர் அப்படி தான் ஒரு நபுசை மனதில் வைத்துக் கொண்டுவிட்டார்... அவர் என்ன ஆனார்?? சிறிய விடயம் தான் தேடினார். அதனால் என்ன விளைந்தது என்று "அமானுஷ்யம்" கலந்து பார்போமா??

வாங்க இப்ப கதைகுள்ள போகலாம். :)

கதை தலைப்பு::
"என் நபுசு கேட்கலையே!"

வீடே பரபரப்பாக இருக்கிறது. குடும்பம் ஒன்று கூடிவிட்டால் பரபரப்புக்கு அளவேது? அங்கும் இங்குமாய் சில சிறுவர்கள் விளையாடிக்கொண்டும் ஓடிக்கொண்டும் இருக்கிறார்கள். ஊரில் இருந்த வந்து இரண்டு நாட்களாக நம் நாயகனின் வீட்டில் தங்கி இருக்கும் சொந்தம் தான் அவர்கள். நாயகன் என்றதும் இளம் நபர் என்று எண்ணிட வேண்டாம். இவரின் இரு மகன்களும் இரு மகள்களும் கல்யாணம் ஆகி அவர்களுக்கும் வாரிசுகள் வந்துவிட்டன. ஓடி விளையாடிய அந்த சிறார்கள் இவரது பேரன் பேர்த்திகள் தாம்.

அவர்களை சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடியே வேடிக்கை பார்கிறார் நம் நாயகன்.

இவருக்கு என்ன பெயர் வைப்பது..ம்ம்ம்... பரசுராமுனு வச்சுக்குவோம்.(டபக்குனு இந்த பேரு தான் தோனுச்சி ஹிஹி)

அப்போது பரசுராமின் நண்பர் வருகிறார்.

"என்னப்பா பரசு வீடே ஜேஜேனு இருக்கே உன் பிள்ளைகளும் மருமக மருமகங்களும் அதுங்க பிள்ளைகளும் னு வந்ததும் உன் டீ பார்டனர் என்ன மறந்துட்ட பாத்தியா?" என்றபடியே வந்தமர்ந்து, டீபாய்யில் கிடந்த நாளிதழலை புறட்டினார்.

"உன்னய மறக்க முடியுமா ய்யாா? அப்படியே முடிஞ்சாலு... என்ன மறக்க விட்டுட்டு தான் நீ அடுத்த வேல பாக்கற மாதிரி பேச வேண்டியது" என அவரை வாரிய பரசு,


"அம்மாடி பக்கத்து வீட்டு மாமா வந்துருக்காக இரண்டு கப்பு டீ கொண்டுவா!" என குரல் கொடுத்தார்.

சற்று நேரத்துக்கெல்லாம் டீயும் வந்தது. விருந்தாளியை நமஸ்கரித்து விட்டு உள்ளே போய் விட்டாள் பரசுவின் மருமகள்.

"நல்ல பொறுமைசாலி பொண்ணா தான் இருக்கு..." என பாராட்டியவர் தொடர்ந்து, "ஹூம் ஆனா இதுவே மதினி இருந்திருந்தா... நீ கேட்காமலேயே டீ வந்திருக்கும்ல உனக்கு"

"டீ மட்டுமா வரும் கொரிக்கவும் கொதுத்துட்டு அது முடியுற நேரம் கரட்டா வந்து ஏனத்தலாம் எடுத்துட்டும் போவா.. ஹூம் ஆனாலும் கட்டுனவ போனதும் தான் யா அவ அரும தெரியுது"

"என்ன பரசு இப்புடி சொல்லி புட்ட... ஆம்பிள ஆளுக்கு மனையாட்டி போன துக்கமெல்லாம் வெறும் முழங்கையில பட்ட அடி மாதிரி தான ய்யா... அது வலிக்குற நேரந்தே வலிக்கும் பிறகு கடந்து வந்துட்டா இயல்பு பழகிடும் அத உட்டுபுட்டு!!
உன் புள்ளவோ தான் இங்க வர்ரபலாம் நல்லா பாத்துகுதுங்க உன்னையும் கூட கூப்புடுதுக நீ போயிருக்கலாம்ல..?"
என்றார் நண்பர்.

"அதில்லையா அவ எதுனாலும் என்னிய பாத்து பாத்து பாத்துகிடுவா.. நான் இந்தா.. இந்த குடிச்சு வச்ச டீ கப்ப கூட எடுக்க மாட்டேன்.. எது வேணும்னாலும் பச்ச புள்ள தாய தேடுறா மாதிரி அவள கூப்பிட்டா எனக்கு சலிக்காம எடுத்து குடுத்துட்டு போவா... அவ வீட்டுல இருந்தானு வையேன் எல்லாமே நல்லா இருக்கும்யா.."

"அதெல்லாம் எல்லா ஊட்டுலயும் நடக்குறது தான பரசு. அது அவுக கடம"



"ம்ப்ச் உனக்கு புரியல யா.. நான் இப்படி சாப்டுகிட்டு உக்காந்திருப்பேன். தாகம் எடுத்தாலும் தண்ணி பான கண்ணு முன்ன இருந்தாலும் நானா எடுத்து குடிச்சதில்ல.. எனக்கு தாகம் வரப்பலாம் நான் கேக்காமயே மொண்டு குடுத்துட்டு போவா..பாரு..
நீ சொல்றாப்புல
அப்ப வேல ஏவுறப்பலாம் இது அவ கடம தான செய்யிறதுல என்ன இருக்குனு தான் நானும் நினச்சிருந்தேன்" என்றார் யோசனையாக.

"இப்பவும் என்னத்த குறைஞ்சிட்டு. வீட்டாளுவட்ட சொன்னா செய்ய போறாக.."

"இவுக சொன்னா மட்டும் தான செய்வாக"

"என்னப்பா வம்பா போச்சு அவுகளுக்கு சொல்லாட்டி எப்புடி தெரியும் பரசுராமாா"

"அத தான் இம்புட்டு நேரமா நானும் சொல்றேன். அதுக்கு தான் மனையாட்டிய மதிக்கனும் ங்குறது. நீயு என் தங்கச்சி ய நல்லா பாத்துக்கையா.."
என்ற பரசு பிறகு வேறு கதைகளை பேசிவிட்டு தன் நண்பரை அனுப்பிவைத்தார்.


இரவு உணவு நேரம் வந்தது. எல்லாரும் கல கலவென பேசிக்கொண்டே உண்டனர் அந்த கலகலப்பில் தன் தாத்தன் பரசுவையும் பிடித்துக்கொண்டு சிறார்கள் லூட்டி அடிக்க சரிசமமாக பேசி சிரித்து க்கொண்டு இருந்தாலுமே பரசு சாப்பிடும் போது நீரே பருக வில்லை.

'தன் மனைவி போல் யாராவது பிள்ளைகளோ மருமகள்களோ கவனித்து தண்ணீர் மொண்டு தருவார்களா' என காத்திருந்தார்.

"ம்ஹூம்" யாருமே தானாக தரவில்லை... எப்படி முடியும் கேட்டால் தானே அவருக்கு வேணும் என தெரியும்?

எதிரிலேயே தண்ணீர் ஜெக் வைத்திருக்கிறது! வேண்டுமானால் ஊற்றி குடித்துக்கொள்ளும் தூரத்தில் இருக்கும் போது... யார் ஒவ்வொன்றை கவனித்து கொண்டிருப்பார்.

பரசுராமோ இன்று மனதில் பிடிவாதமாய் இருந்துவிட்டார்.


"யாராவது தந்தா தான் தண்ணி குடிப்பேன் இல்லாட்டி தாகத்திலயே கிடக்கேன்" என வம்பாக எண்ணினார்.

எல்லோமே பேச்சும் சிரிப்புமாக உண்டுவிட்டு உறங்க சென்றார்கள். நம் பரசுவும் சோர்வுடன் சென்றார். கடைசி வரை அகமாய் தானாய் மொண்டு நீர் பருகவில்லை. தாகம் தனியாமல் தண்ணீர் குடிக்காமலே படுத்துவிட்டார்.
இப்போது நபுசு வந்து புகுந்து கொண்டது.

"நீ யே போய் தண்ணி குசி போ போ" என துரத்தியது ஒரு நபுசு.

"வேணாம் குடிக்காத தாகமாவே படுத்துகிட" என அகமாய் இறுக்க வைத்தது மற்றொண்று.

நேரம் ஆக ஆக தாகம் அதிகமானது. ஆயினும் வீராப்பாய் படுத்திருந்தவர் அசதியினால் கண்ணயர்ந்து விட்டார் பரமு. ஆனாலும் தூக்கத்திலும் துக்கமாய் அந்த நபுசு அவரை விடவில்லை.

"அய்யோ எனக்கு தாகமா இருக்கே. தண்ணி வேணும் எனக்கு தண்ணி வேணும் எனக்கு தண்ணி வேணும்" என விடாமல் புலம்பியது நபுசு.

இவரோ அதை கண்டுகொள்ளாமல் நபுசை அடக்கிக்கொண்டு தூக்கத்திலுப் புரண்டார்.
பின் அந்த தாகம் அதிகமாக..
நபுசும் "தண்ணி வேணும் ஆனா நீ போவாத" என புலம்பலை நிறுத்தாது உரும. ஒரு கட்டத்தில் இவரின் உடலில் இருந்து நபுசு(ஆன்மா) மட்டுமே தனியாக பிரிந்தே வந்துவிட்டது.

"சர்... சர்..." என பரசுவின் நபுசு அடுப்பங்கரைக்கு ஓடியது. தண்ணீர் பானையை பார்த்தது.

"ஐயா தண்ணி .. நா தண்ணி குடிக்க போறேன்" என்றபடி மூடியை தட்டிவிட்டுவிட்டு தண்ணீர் பானைக்குள் புகுந்து கொண்டது.

விரும்பும் மட்டும் நீரை பருகியது. அப்போது பரசுவின் மகள் எதார்தமாக வந்தவள். ஒரு முறை கேஸ் சிலிண்டர் அணைத்து வைக்கபட்டுள்ளதா என எப்போதும் போல் பார்த்துவிட்டு, அடுப்பங்கரையையும் நோட்டம் விட தண்ணீர் பானை திறந்து கிடப்பதை பார்த்து.

"இது நான் பெத்ததுகளோட வேலை யா... என் அண்ணன் பெத்ததுகளோட வேலையானு தெரிலியே? எப்ப பாரு தண்ணிய குடிச்சுபுட்டு சால் பானையா மூடாமயே ஓடிடுறது" என சிறார்களை திட்டியவள், அவளை பெத்த பரசுவின் நபுசு தான் மூடியை தட்டிவிட்டுவிட்டு தண்ணீர் பானைக்குள் புகுந்து இருப்பதை அறியாமல் மூடிவிட்டு சென்றுவிட்டாள்.

பாவம் பரசுவின் நபுசு( எனும் ஆன்மா) இது தெரியாமல் வேண்டிய மட்டும் நீரை பருகுவதாக நினைத்து பானைக்குள் உலாவிவிட்டு வெளியேற பார்க்க, அந்தோ பாவம் பானை மூடி போட்டு இருப்பதால் வெளியேற முடியவில்லை.

பரசுவின் நபுசு உள்ளேயே அகபட்டுக்கொண்டது.

மறுநாள் விடிந்து.
காலையிலே எழுந்த மகள்களிள் ஒருவள் நீரை மொள்ள பானையை எடுக்க,

"யக்கா பழைய தண்ணில குழகுழப்பு வந்துருக்கும். கொள்ள புறத்துல புது தண்ணி புடிச்சிட்டேன் அத கொண்டாந்து இங்க வச்சிட்டு. இத தூக்கி போய் கொள்ள வாசல்ல வையி மாறி வந்ததும் தண்ணி மரத்துக்கு ஊத்திடுவான்"
என்றாள். மாறியோ அன்றைக்கென பார்த்து வரவில்லை.

பானைக்குள் இருந்த பரசுவின் நபுசு, "ஐய்யோ என்ன வெளிய விடுங்களேன் பயமா இருக்கே!" என கதறி கொண்டிருப்பது மகள்களுக்கோ தெரியவில்லை.

சூரியன் உச்சிக்கு வரபோராடும் நேரம். காலை பத்து மணி. தினமும் ஆறு மணிக்கே எழுந்து டீ கேட்கும் பரசு எழவே இல்லை என பதறிய குடும்பதார்கள் எழுப்பி பார்த்தும் பலனே இல்லை.

பரசுவிடமோ மூச்சே இல்லை. அவர் இந்த லோகத்தை விட்டு பானைக்குள் போனதறியாமல் இறையடி போய்விட்டார் என தப்பாக நினைத்தவர்கள். கதறி அழுது ஊருக்கே பறை கூறி... உற்றார் உறவினர் கூடி ஒரே ஆர்பாட்டமாய் போய்விட்டது.

தாரை தப்பட்டை எல்லாம் வந்தாகி விட, வீட்டுக்குள் அழுகை ஓலம் கேட்க,
"நேற்று நல்லாய் தானே பேசினார் இப்போ போயிட்டாரா" என பரசுவின் நண்பர் கூட பரசுவின் காலை பிடித்துக்கொண்டு அழுதிட,

ஒரே அல்லோல்கல்லோலாய் போய்விட்டது.
"நல்ல மனுசனாச்சே ஓரெட்டு வீட்டுக்கே போயிடுவோம்" என்று இவரது இறுதி சடங்குக்கென திரண்டு வந்த ஊரார்களுக்கு உணவு தர வேண்டி பின் கட்டில் இட்லி யும் சால்னாவும் தயார் படுத்தி கொண்டு இருந்தார் இவர்களால் வரவழைக்கபட்ட பண்டாரி. இன்னும் சற்று நேரத்தில் ஈம காரியம் துவங்கிட வேண்டியது என்ற பேச்சு கூட அடிபட்டது. அந்த நேரத்தில் தான் அந்த பண்டாரி,

"தாகிக்குதே" என்று குடி தண்ணி வேண்டி உள்ளே எட்டி பார்க்க, அந்த செம்பு தண்ணீர் பானையும் பக்கத்திலே குவளையும் கண்ணில் பட்டிட, மூடியை திறந்து தண்ணீர் மொண்டு குடித்துவிட்டு வேலையை பார்க்க போய்விட்டார்.

ஆனால் இதற்கிடையில் இரவெல்லாம் இருட்டு பானைக்குள் வழி தெரியாமல் தவித்த பரசுவின் நபுசு இருக்கிறதே.. பண்டாரி பானையை திறந்த மறுகணமே வழி கிடைத்ததும்...

"சர்... சர்..." என புகைவடிவமாக ஓடி, தன்னை தேடி தனது உடம்புக்குள் சென்று சேர்ந்துவிட்டது.

படக்கென எழுந்து அமர்ந்தார் பரசுராம். சுற்றி இருந்தவர்களின் அழுகை சப்தம் சுவிட்ச் போட்டது போல் நின்றது. மாலையும் கழுத்துமாய் தான் இருப்பதை கண்டு கடும் கோபம் கொண்ட பரசுராம் எல்லாரையும் வசவ,
அதுவரை பேயோ? என பயந்து போய் திக்பிரம்மை பிடித்தது போல் அந்தரத்தில் நீட்டி அழுத கைகள், அந்தரத்திலேயே நிற்க உரைந்து போய் பார்த்தவர்கள்.

பரசுவின் கோபத்தில் 'இது பேய் இல்லை உண்மையில் இவர் இறக்கவில்லை' என்று அறிந்து அதிர்ந்து எழுந்தே விட்டார்கள். அனைவரும்.

பரசுவிற்கே சங்கடமாய் போய் நெளிந்து கொண்டே கூனி நின்றார்.

வந்தவர்களெள்லாம் வாயை பிளந்த வண்ணமே கிளம்பி போயிருக்கே, பரசுவின் குடும்பமும் அவரின் நண்பரும் தான் மீதம் இருந்தார்கள்.

அமைதியை கிழித்துக்கொண்டு,

"தாத்தா நீ நல்லா இருக்கியா.. அப்புனு சாமிட்ட போயிட்டனு சொன்னாங்க" என்று குளித்து விட்டு வந்த அவரை சூழ்ந்து கொண்டான் அவரின் பேரன். குடும்பத்தில் மற்றவருக்கெல்லாம் அதிர்ச்சியில் குற்ற உணர்வில் அமைதியாய் இருக்க,
அவர் நண்பர் தான்...

"என்னாச்சுடா பரசு நல்லா தான இருந்த நேத்தி இம்புட்டு நேரமா மூச்சி பேச்சி இல்லாம கிடந்த எப்புடி ய்யா" என்க,

"ம்ம்ம்ம். எனக்கு ராத்திரி யாருமே தண்ணி மொண்டாந்து தரல. தூக்கத்துல எழுந்து தண்ணி குடிக்க போனேன். என்ன பானைக்குள்ள வச்சி பூட்டிட்டது யாரு????" என கத்தியதுமே இன்னும் திகைத்து விட்டார்கள்.

பின் என்ன?? அவர் நடந்ததை கூற அவரது நபுசின் விளையாட்டை அறிந்து இவரை வைது விட்டு கலைந்து போனார்கள்.

அவ்ளோ தான் கதை :)

கதை கருத்து:: நமக்குள்ள எப்போதுமே நல்ல நபுச மட்டுமே விட்டு வைப்போம்... வளர வைப்போம். கெட்டது முளச்சா முளையிலயே கிள்ளி எரிஞ்சி புடனும். ஹான் ஆனா... சாப்பாட்டு விசயத்துல முக்கியமா தண்ணி(தூய்மையான) தாகம் விடயத்துல'லாம் நபுசுவ அடக்கி வைக்கவே கூடாது புரிஞ்சுதா!


பிரியமுடன் நுஹா :)
 
Last edited:

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top