JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம்-24,25 (final)

saaral

Well-known member
அத்தியாயம்-24

மேலும் ஒருவாரம் கடந்திருந்த நிலையில் பிரவீன் குடும்பத்தில் அனைவரும் அந்த கோவிலுக்குள் நுழைந்தனர் .

சற்று நேரம் களித்து சஹானாவின் வீட்டினர் அனைவரும் உள்ளே வந்தனர் .

இன்று சதீஷ் மற்றும் அஹானாவின் திருமணம் எளிமையாக கோயிலில் நடைபெற இருக்கிறது .

விபத்திற்கு முன்னான வாழ்க்கையில் இருந்து எதுவும் நியாபகம் இல்லாத அஹானா சதீஷை மட்டும் மறக்கவில்லை . அவளின் ஆழ்மனதில் பதிந்திருந்த அவனை பார்த்தவுடன் அவனை விட்டு வர மாட்டேன் என்று அடம் பிடித்தாள் .

அவளின் உடல் நிலை கருதி ப்ரவீனும் , ஸ்ரீதரும் அனைவரையும் பேசி பேசியே கரைத்து திருமணம் வரை கொண்டு வந்தனர் .கீர்த்தனா அம்மாவிற்கு சற்றே மனமும் உடலும் தேறி இருந்தது .

அஹானா தான் தன் பெண் என்றும் அவளின் உண்மையான பெற்றோர்கள் தயாளன் மற்றும் சுபத்ரா தம்பிதியர் என்றும் அவர் புரிந்து கொண்டார் . இன்முகத்துடன் தனது மகளின் திருமணத்தில் கலந்து கொண்டார் .

சதீஷ் அந்த இறைவனிடம் மனதார வேண்டினான் தன்னால் நிலைகுலைந்திருக்கும் இந்த பெண்ணிற்கு தான் என்றும் துணையாக இருக்க வேண்டும் என்று எண்ணினான் .

நல்ல நேரத்தில் சதீஷ மங்கலநாணை அவனின் அம்முவின் மணிக்கழுத்தில் பூட்டினான் .

பின் அனைவரும் அருகில் இருந்த உணவகத்தில் உணவை உண்டுவிட்டு சௌம்யா அவர்களின் வீட்டிற்கு சென்றனர் .

...............................................................

சௌம்யாவின் வீடு ...

அங்கு மிருதுளா அந்த வீட்டுப்பெண்ணாக மாறிப்போனாள் . வந்திருந்த பிறந்த வீட்டினரையே பார்த்து பார்த்து கவனித்துக்கொண்டாள் .

சாரதா மொத்தமாக ஓய்ந்து போய் இருந்தார் . அவரின் கணவர் செய்த செயல் எதையும் அவரால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை . அவர் பகட்டானவர் ஆனால் நல்லவர் , மேலும் ஒரு பெண்ணின் அன்னை ஆவார் .

சௌம்யா அவர்கள் வேண்டுமென்றே பிரவீன் மற்றும் சஹானாவை பார்த்துக்கொண்டே தயாளனிடம் பேச்சு கொடுத்தார் "அப்பறம் தம்பி ஒரு பொண்ணுக்கு கல்யாணம் முடிச்சாச்சு , சஹானாக்கு எப்ப பார்க்கலாம் "

சௌம்யாவின் நோக்கம் புரிந்த தயாளனும் அவரின் பேச்சிற்கு இசைந்து கொடுக்க ஆரம்பித்தார் . ஆனால் தன்னவளை புடவையில் ரசித்துக்கொண்டிருந்தவனின் செவிகள் இவர்களின் பேச்சில் கூர்மையாக இவர்கள் பக்கம் சென்றது .

"ஆமாம் அண்ணி பார்க்கணும் ...பெங்களூர்ல ஷியாம் சுந்தர்னு ஒரு பையன் அவங்களும் தொழில் தான் நம்ம சஹானாவை விரும்பி கேட்டு வராங்க " என்று முறுவலுடன் சொன்னார் .

பிரவீனின் விழிகள் சஹானாவையே அழுத்தமாக பார்த்துக்கொண்டு இருந்தன . சஹானா எதை பற்றியும் கண்டுகொள்ளாமல் அலைபேசியில் மூழகிப்போய் இருந்தாள் ...இல்லை இல்லை அப்படி காட்டிக்கொண்டாள் . மேலும் அவர்களின் பேச்சு ஷியாம் சுந்தரின் குடும்பம் என்று திசை மாறியது .

அதற்குமேல் அங்கு இருக்க முடியவில்லை அவளால் . அந்த கூடத்தில் தயாளன் , சுபத்ரா,சாரதா ,சௌம்யா , ஸ்ரீதர் ,மிருதுளா, பிரவீன் மற்றும் சஹானா இருந்தனர் . சாரதாவிற்கு சஹானாவின் மேல் மரியாதை வந்திருந்தது ஒற்றை பெண்ணாக நின்று கொண்டு இரண்டு ஜாம்பவான்களை ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டாள் அதுவும் தனது தங்கைக்காக என்று எண்ணினார் .

சதீஷ் அஹானாவை அழைத்துக்கொண்டு அவளின் அறைக்குள் ஓய்வெடுக்க சென்று இருந்தான் .
கீர்த்தனா அம்மாவும் ஓய்வெடுக்க சென்று இருந்தார் .

சஹானா தனது பெரியம்மாவின் பேச்சை அதற்கு மேல் கேட்க இயலாமல் எழுந்து அவளின் அறைக்கு செல்ல முற்பட்டாள் ....தன்னை தாண்டி செல்லும் சஹானாவின் கரங்களை இடது கையால் அழுத்தமாக பிடித்து நிறுத்தினான் பிரவீன் .

சஹானா திடுக்கிட்டாள் . சௌம்யா மற்றும் தயாளனிற்கு பெரும் மகிழ்ச்சி இந்த நொடிக்காக தானே அவர்கள் இவ்வாறு பேசியது ...எதுவாகினும் சிறியவர்கள் வாயில் இருந்து வரட்டும் என்று எண்ணினார்கள் .

சஹானாவின் கரங்களை பற்றி இழுத்துக்கொண்டே எழுந்து நின்றான் பிரவீன் . இப்பொழுது தனக்கு மிக அருகில் தெரியும் அவனின் முகத்தை அதிர்ந்து நோக்கினாள் பெண்ணவள் .

"அங்கிள் சஹானாவை எனக்கு திருமணம் செஞ்சு தரீங்களா ?" அவளை பார்த்துக்கொண்டே தயாளனிடம் பெண்கேட்டான் அந்த கள்வன் .

"அட நீங்க வேற பிரவீன் சித்தப்பாவும் அம்மாவும் எப்படா நீங்களா வாய தொறப்பீங்கனு இருகாங்க ,இந்த ஷியாம் சுந்தர் எல்லாம் லுழலைக்கு " என்று வம்பளந்தான் ஸ்ரீதர் . மிருதுளாவும் இருவரையும் பார்த்து சிரித்துக்கொண்டாள் .

"கண்டிப்பா நீங்க எனக்கு மாப்பிள்ளையா வருவதில் எனக்கு முழு சம்பந்தம் " இதை கூறியவர் சுபத்ரா . அவர் அறிவார் மகளின் மனதை ...மேலும் தனது மகள் என்னதான் அவர்களின் தொழில் நஷ்டத்தை ஏற்படுத்தி , தந்தையை சிறை அனுப்பினாலும் கண்களில் நிரம்பிய காதலுடன் பெண் கேட்கும் பிரவீனை அவரால் முழுமனதாக ஏற்றுக்கொள்ள முடிந்தது .

எல்லோருக்கும் சதீஷிடம் இன்னும் அந்த சிறு கோபமும் தயக்கமும் இருந்ததே ஒழிய பிரவீனை முழுதாக நம்பினார்கள் .

"எனக்கு கல்யாணம் வேண்டாம் " நிர்தாட்சண்யமாக மறுத்தவள் நமது நாயகி சஹானாவே தான் .

அவளும் பிரவீனை விரும்புகிறாள் , எல்லாம் சுபமாக முடிந்தபின் அவனை மணப்பதற்கு சஹானாவிற்கு எந்த தடையும் , தயக்கமும் இருக்காது என்றே நம்பி இருந்தனர் . அவளின் கூற்றில் அனைவரும் குழம்பிப்போனார்கள் .

புருவத்தை சுருக்கி அவளின் கண்களை நேராக பார்த்தவன் லேசாக உதட்டை வளைத்து சிரித்துக்கொண்டே "வெள் நமக்கு எத்தனை முறை தான் கல்யாணம் செய்யுறது நீ சொல்றதும் சரிதான் சஹானா " நகையுடன் கூறினான் .

அவள் ஸ்தம்பித்தாள் ,இதை இப்படி அனைவரின் முன்னும் போட்டு உடைப்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை .

அனைவரும் "என்ன ?" என்ற கேள்வியுடன் அதிர்ந்து எழுந்தனர் . எவரும் இதை அறியவில்லை.

அவர்களின் கேள்விக்கு பதிலாக பிரவீன் உரிமையுடன் தன்னவள் புடைவைக்குள் அழகாக , பொக்கிஷமாக மறைத்து வைத்திருந்த மங்கலநாணை அவளின் கண் பார்த்துக்கொண்டே வெளியே எடுத்து போட்டான் .

'பாவி ' என்று அவள் அதிர்ந்தால் , சௌம்யா அந்த மங்கலநாணை கண்டு உறைந்து போனார் . ஏன் என்றால் அன்று நகை கடையில் மயில் முகப்பு வைத்து அவள் ஆசையாக எடுத்து வைத்த தாலிக்கொடி தான் அது . அதில் இவர்களின் சம்பிரதாய மாங்கல்யம் கோர்த்து அழகாக அனைவர்க்கும் காட்சி அளித்தது .

"சஹானா என்ன இது ?" தயாளன் சற்றே கண்டிப்புடன் கேட்டார் .

அவளை பற்றி அனைத்தும் தெரிந்து வைத்துக்கொண்டிருந்த அந்த தந்தைக்கு இது அதிர்ச்சி , மேலும் நண்பனை போல் பழகும் தனது மகள் இதை தன்னிடம் இருந்து மறைத்தது மேலும் அதிர்ச்சி .

தந்தையின் கேள்வியில் கோபம் கொண்டு அவனின் கையை உதறிக்கொண்டு மேலே தனது அறைக்கு ஓடிச்சென்றாள் சஹானா .

இப்பொழுது அனைவரின் பார்வையும் பிரவீனிடம் திரும்பியது அவன் சொல்லவருவதற்குள் "என்ன நடந்துச்சுனு நான் சொல்றேன் " என்று கூறிக்கொண்டே வந்து நின்றான் சதீஷ் .

"அன்னைக்கு அண்ணிக்கு பிறந்தநாள் , அம்முக்கும் அன்னைக்கு தான் பிறந்தநாள் , அண்ணியை அம்முனு நினச்சு அவங்கள பின்தொடர்ந்து வடபழனி கோயிலுக்கு போனேன் அங்க ஒரு மஞ்சள் கிழங்கு கட்டி வச்சிருந்த மஞ்சள் கயிறு வாங்கிட்டு போய் அண்ணி முன்னாடி நின்னேன் "

...................

அன்று

"அம்மு இன்னைக்கு உனக்கு பிறந்தநாள் இன்னைக்கே நம்ம கல்யாண நாளாவும் மாத்திடலாம் " என்று கூறிக்கொண்டே சஹானாவை நெருங்கினான் சதீஷ் .

சஹானா அதிர்ந்த பார்வையுடன் என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு நொடி திகைத்தாள் அதை பயன் படுத்திக்கொள்ள முயன்ற சதீஷை முந்திக்கொண்டு வந்து நின்ற பிரவீன் தனது சட்டை பையினுள் வைத்திருந்த மயில் முகப்பு வைத்த தாலி சரடை எடுத்து சஹானாவின் கழுத்தில் அணிவித்தான் .

எல்லாம் நொடிப்பொழுதில் நடந்தேறியது , சஹானா அதிர்ந்து நிற்பாள் என்ற நினைத்த பிரவீனிற்கு ஏமாற்றத்தை தந்து அசுவாசத்துடன் கண்களை மூடி அந்த நொடியை ஆழ்ந்து அனுபவித்தாள் அவள் . அதில் அவனின் இதழோரத்தில் மென்முறுவல் .

"அண்ணா " என்று சத்தமாக அழைத்த சதீஷை நோக்கி திரும்பியவன் அசட்டையாக பார்த்துவைத்தான் .

நிதானமாக அவளின் தோளில் கைபோட்டு அருகே நிறுத்திக்கொண்டு "இப்ப நான் செய்ததற்கு கண்டிப்பா நீ சந்தோசம் தான் அடைவ சதீஷ் ....இவ உன் அம்மு இல்லை உன் அண்ணி " என்று அழுத்தமாக கூறி அவளுடன் வெளியேறினான் .

சதீஷ் ஸ்தம்பித்து போய் நின்றான் .

வெளிய வந்தவன் அங்கு குரு நிற்பதை கண்டு அவனிடம் சென்றான் . காரின் பின் கதவை திறந்து அதில் சஹானாவை அமர்த்தியவன் அவளின் நெற்றியில் ஆழ்ந்த பரிசை கொடுத்துவிட்டு "பை பொண்டாட்டி " என்று முறுவலுடன் சொன்னான் . சாவி கொடுத்த பொம்மை போல் செயல்பட்டுக்கொண்டிருந்தவள் அவனின் பொண்டாட்டி என்ற விழிப்பில் அதிர்ச்சியுடன் அவனை நோக்கினாள் .

குரு அனைத்திற்கும் மௌன சாட்சியாக மாறினான் "குரு நாங்க சொல்ற வரைக்கும் எதுவும் யாருக்கும் தெரிய வேண்டாம் ...அப்பறம் பார்த்துக்கோங்க " என்று கூறி நகர்ந்துவிட்டான் .

..............................

சதீஷ் சொல்லி முடித்தவுடன் "அங்கிள் " என்று நெளிந்தான் பிரவீன் .

நிலைமையை புரிந்துகொண்ட தயாளன் "விடுங்க மாப்பிள்ளை இப்ப போய் அவளை சமாதானம் செய்ங்க " முறுவலுடன் கூறினார் .

சற்றே விரிந்த பார்வையுடன் அவரை நோக்கி படிக்கட்டுகளின் பக்கம் திரும்பியவன் தயக்கத்துடன் நின்றான் அதை பார்த்து ,"பிரவீன் மேல லெப்ட் செகண்ட் ரூம் " என்று முறுவலுடன் தகவல் கொடுத்தான் ஸ்ரீதர்
.

அதன் பிறகு பிரவீனை தடுக்க எவரும் இல்லை . மேலே ஏறி சென்றவன் சாற்றி இருந்த அறையின் முன் நின்று பலமுறை தட்டி பார்த்தான் . திறக்கத்தான் இல்லை .

"சஹானா ஓபன் தி டோர் "சத்தமாக சொன்னான் , பலன் தான் இல்லை .

வேண்டுமென்றே கீழ் நோக்கி சத்தமாக ஸ்ரீதரிடம் பேசினான் "ஸ்ரீதர் இப்ப இந்த கதவை ஒடச்சு உள்ளே போனா உங்களுக்கு பிரச்சனை இல்லையே " என்றான் .

ஸ்ரீதரும் "பாத்துக்கலாம் பிரவீன் " என்று சத்தமாக கூறினான் . மிருதுளா தான் ஸ்ரீதரின் கையில் கிள்ளிவைத்தாள் .

"ஏன்மா " என்று பாவமாக பார்த்தான் அவன் .

மேலே பிரவீனின் பேச்சு கேட்டு அந்த சொர்க வாசல் கதவு திறந்து கொண்டது .

விரிந்த புன்னகையுடன் உள்ளே நுழைந்தான் பிரவீன் .கதைவடைத்து சஹானாவின் அருகில் சென்றான் .

சஹானாவோ கப்பல் கவிழ்ந்தது போல் ஜன்னலை வெரித்துகொண்டு நின்று இருந்தாள் .

"சஹானா " மென்மையாக அழைத்தான் .

"ப்ளீஸ் போய்டுங்க " அழுகை வருவேனா என்று துடிக்க பேசினாள் அவள் .

"சஹானா உன் பிரச்சனை தான் என்ன , யாருக்காக நீ இவ்ளோ போராடுனியோ அவளே இப்ப நிம்மதியா இருகப்ப என்ன வந்துச்சு உனக்கு " ஆற்றாமையுடன் கேட்டான் அவன் .

"நாங்க ரொம்ப வருஷம் எல்லாம் சேர்ந்து இல்ல , அவளை தொலைச்சுட்டு நாங்க ஜேர்மன் போனப்ப எனக்கு நிறைய உடம்பு முடியாம போச்சு அப்பறம் அப்பா தான் கஷ்டப்பட்டு என்னை மீட்டு கொண்டு வந்தார் , அங்க நான் நல்லா படிச்சேன் நிறைய நண்பர்கள் ....திடிர்னு அஹானா போட்டோ பார்த்தப்ப என்னால தாங்கவே முடில உடனே அப்பாகிட்ட சொல்லி டிடெக்ட்டிவ் வச்சு விசாரிச்சோம் ....அப்பறம் திரு அப்பாகிட்ட பேசினேன் "

"...." அவளே பேசட்டும் என்று மௌனமாக கைகளை கட்டிக்கொண்டு கேட்டிருந்தான் அவன் .

"திரு அப்பா எதோ அவளை வச்சு யாரோ மிரட்றாத சொன்னார் , நீங்க சொல்லுவீங்களே வலது பக்க முக தோற்றம் அதை வச்சும் அந்த மச்சத்தை வச்சும் தான் அவள் அஹானா அப்படினு கண்டு பிடிச்சோம் .....உடனே கிளம்பி கோத்தகிரி வந்தப்ப கீர்த்தனா அம்மா அவள் எங்கயோ பிகினிக் போயிருக்கிறதா சொன்னாங்க நாங்களும் வண்டிய அங்க விட்டோம் , கீர்த்தனா அம்மாக்கு எங்களை அடையாளம் தெரியலை திரு அப்பா நண்பர்கள் வீடுன்னு மட்டும் சொல்லி வச்சிருக்கார் ...."

"......"

ஜன்னல் கம்பிகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு மேலும் தொடர்ந்தாள் அவள் "அந்த இடத்தை நெருங்கிறப்பவே என் மனசுக்குள்ள எதோ ஒரு படபடப்பு எங்க காருக்கு முன்னாடி ஒரு பெண்ணின் உடம்பு உருண்டு வந்து விழுந்துச்சு ...நிறுத்தி இறங்கி அவளை திருப்பி பார்த்தா அது அம்மு ...எல்லாரும் ரசிச்ச அவளோட வலப்பக்க முகம் முழுசா சிதைஞ்சு போய் இருந்தா ....அப்பறம் அப்பா தான் திரு அப்பா சொன்னத வச்சு சத்யா மூலமா ஆபத்துனு வேற டெட் பாடிய மாத்தி வச்சாங்க ....அதுவும் முழுசா சிதைஞ்சு போன மாதிரி ....பொலிடிகல் பிரஷர் மூலமா எல்லாத்தையும் மரச்சோம் ...அதே நேரம் சத்யா அப்பறம் நீங்க ஏவி விட்ட ஆட்கள் எல்லாரும் விஷயத்தை மறச்சது வசதியா போச்சு "

"நாங்க அம்முவை தெரிஞ்சவங்க மருத்துவமனையில வச்சு டிரீட்மென்ட் பார்த்துட்டு இருந்தப்ப நியூஸ்ல பார்த்தோம் திரு அப்பா இறந்ததை ....உடனே அப்பா இறங்கி வேலை பார்த்தாங்க சடங்கு எல்லாம் முடிஞ்சப்பறம் சித்தம் கலங்கி போய் இருந்த கீர்த்தனா அம்மாவை எங்களோட வச்சுக்கிட்டோம் , விசாரிச்சப்ப சத்யா அப்பறம் உங்க அப்பா தான் திரு அப்பா சாவிற்கு கரணம் தெரிஞ்சுக்கிட்டோம் "

"இதுக்கு நடுவுல அஹானாவோட பழைய பாஸ்ப்போர்ட்டை திரும்ப எடுத்து ரெனீவல் பண்ணினோம் , அப்பா பல பேர் வச்சு என்னலாமோ செஞ்சு எங்க எல்லாரையும் ஜேர்மன் கூட்டிட்டு போய்ட்டாங்க ....அங்க பார்த்த டாக்டர் அம்முக்கு பலமான காயம் ஏகப்பட்ட எலும்பு முறிவு இது போக அவ கோமாக்கு போய்ட்டானு சொன்னாங்க , அப்பறம் அப்பறம் " அதற்குமேல் சொல்ல முடியாமல் அழுதாள் .

அவளை நெருங்கி நின்று அணைத்துக்கொண்டான் அவன் , அதில் சற்றே தெளிந்தவள் மேலும் தொடர்ந்தாள் "அவளுக்கு வயிற்றில் பலமான அடி அதுனால கருப்பை எடுக்கணும் சொல்ட்டாங்க .... எதையும் தாங்க முடியல அவளை பார்க்க பார்க்க ஒரு வெறி , இங்க சத்யாவோட கை ஓங்கி இருந்துச்சு காத்திருந்து அடிக்கணும்னு கீர்த்தனா அம்மாவோட பெங்களூரு வந்தேன் ...அவங்களுக்கும் டிரீட்மென்ட் போச்சு "

"முடிலைனா விட்டுடு நான் எதுவும் கேக்கலைமா " மென்மையாக தன்னுள் புதைந்து இருந்தவளை தட்டி கொடுத்துக்கொண்டே சொன்னான் அவன் .

" அவங்க கொஞ்சம் கொஞ்சமா தெளிஞ்சங்க என்னை அம்மு நினைக்க ஆரம்பிச்சாங்க எனக்கும் அவங்க அம்மா தான் , இதுக்கு நடுல அப்பாகிட்ட சொல்லி அந்த சின்ன வயசுலயே தொழில் ஆரம்பிக்க வச்சு நான் பார்த்தேன் அதை ஒரு பெரிய சம்பிராஜ்ஜியமா சுபத்ரா குரூப்ஸ்னு கொண்டு வந்தேன் ...அரசியல்வாதிங்களுக்கு நன்கொடையா காசை வாரி இறைச்சேன் ....பலன் சத்யாவை தொழிலில் அடிச்சு வீழ்த்தினேன் "

"ஆனந்தை கட்டம் கட்டி தற்கொலை செஞ்சுக்க வச்ச நீ சதீஷ் விசயத்துல ஏன் தொழிலுல அடிச்ச " அவன் மனதில் அரித்துக்கொண்டிருந்த கேள்வியை கேட்டான் அவன் .

"எல்லாம் இந்த ஸ்ரீதர் அண்ணாவால் வந்துச்சு .....ஆனந்தை விர்ச்சுவல் ரியாலிட்டி அண்ட் 3டி டெக் யூஸ் பண்ணி அம்முவை முன்னாடி கொண்டு வரமாதிரி வந்து பைத்தியம் பிடிக்க வச்சோம் அவனே தொழில் நஷ்டம் இந்த ப்ரீசர் தாங்கமா போய்ட்டான் ...ஆனால் சதீஷ் ஜேர்மன் வந்தப்ப இதையே யூஸ் பண்ணோம் ஆனந்த் மாதிரி அவன் அவ்ளோ வீக் இல்லை ...இதுக்கு நடுல அண்ணா வந்து என்னை உங்க ஆபீஸ்ல பாத்துட்டு பெரியம்மா கிட்ட சொல்லிட்டான் அதான் சதீஷ் கம்பெனில கை வச்சேன் "

"நீ என்னோட தனியா வந்திருக்கவே மாட்ட உன்னை பொறுத்த வரை நானும் இவங்களுக்கு ஆதரவா நின்னு அவங்களை வெளிய எடுத்தவன் ....ஆனால் எப்படி அன்னைக்கு என்கூட வெளிய வந்த " அவள் அறியாமல் அவளை பேச வைத்தான் அவன் .

"நீங்க சொன்ன மாதிரி உங்கமேலயும் தப்பொன்னு யோசிச்சேன் ஆனால் எனக்கு கிடைச்ச தகவல் இல்லைனு சொல்லுச்சு ...அப்பறம் அம்மு முதல் முதலா கோமாவில் இருந்து எழுந்து சொன்ன பெயர் சதீஷ் சோ முழுசா அவன் தான் காரணம் , உங்க அப்பா உடந்தைனு திரு அப்பா சொல்லி தெரியும் ....விஸ்வம் அவர் மகன் அப்படினு மட்டும் தான் திரு அப்பா சொன்னாங்க , எனக்கு அது யார்னு கண்டு பிடிக்க கொஞ்ச நாள் ஆச்சு அதுக்குள்ள மிருதுவோட நல்ல நட்பு வேற .....இதுல ட்விஸ்ட் மிருது ,ஸ்ரீ அண்ணாவை லவ் பண்ணது தான் " முறுவலுடன் கூறினாள் அவள் .

"சோ இந்த சஹனாவிற்கும் என்னை பிடிச்சு தான் இருக்கு இருந்தும் என்ன தயக்கம் " இதான் வாய்ப்பு என்று கேட்டு விட்டான் அவன் .

அப்பொழுதுதான் நினைவு வந்தவளாக அவனின் அணைப்பில் இருந்து விலகி "வெளிய போங்க " என்று கர்ஜித்தாள் .

********************************************************************************

அத்தியாயம்-25

"வெளிய போங்க" என்ற அவளின் கூற்றில் குழம்பி நின்றான் அவன் .

"சஹானா என்ன ஆச்சு ?" குழப்பமே அவனிடம் .

"ப்ளீஸ் போய்டுங்க நான் நீங்க காதலிச்ச பெண் இல்லை " வீறிட்டாள் அவள் .

அவளின் இந்த கூற்றில் அவன் மேலும் குழம்பினான் "சஹானா புரியாம பேசாத நான் விரும்பி காதல் சொல்லி காத்திருந்து மணந்த பெண் நீ தான் ...இப்ப என்ன உளறல் இது " சத்தியமாக அவனிற்கு புரியவில்லை .

"நீங்க முதலில் பார்த்து நேசிக்க எண்ணியது அஹானாவை , இந்த சஹானாவை இல்லை " மனதில் அழுதிக்கொண்டிருந்த விஷயத்தை அழுத்தம் தாளாமல் கொட்டி விட்டாள் பெண்ணவள் .

ஒரு நொடி யோசித்த பிரவீனிற்கு எல்லாம் விளங்கியது "ஹே எனக்கு முதலில் பார்த்த அந்த சின்ன பொண்ணு மேல ஜஸ்ட் ஈர்ப்பு , ஆனால் நான் உணர்ந்து தொடர்ந்து நேசித்தது உன்னை இது கூடவா உனக்கு தெரியாது " சிரிப்புடன் கேட்டான் பிரவீன் . பெரிய பெரிய விஷயங்களை செய்யும் இந்த பெண் இந்த சிறு விஷயத்தை புரிந்து கொள்ளாமல் தன்னையும் வருத்தி அவளையும் வருத்திக்கொள்கிறாளே என்று எண்ணினான் .

"இல்லை என்ன இருந்தாலும் நான் இல்லை உங்க முதல் காதல் நான் அவளின் தோற்றத்தில் இடையில் வந்தவள் " பிடிவாதமாக கூறினாள் பெண்ணவள் .

அவனிற்கு புரிந்தது ....கீழே வந்து இன்னும் இரு மாதத்தில் எளிமையாக திருமணம் , பின் விமர்சையாக வரவேற்பு என்று அவளை கேளாமல் சொல்லி விட்டு சென்றான் .

பின் இரண்டு மாதத்தில் தோற்றத்தில் மட்டும் வருவதல்ல நேசம் உள்ளம் உணர்ந்து விரும்பிய முதல் பெண் நீ தான் என்று அவளை உணர வைத்து மணமுடித்தான் .

..............................................................................................

ஐந்து ஆண்டுகள் கழித்து ...

ஸ்ரீதர் மற்றும் மிருதுளா தங்களின் மகன் திருவுடன் பிரவீனின் இல்லம் வந்து சேர்ந்தனர் .

இன்று அஹானா மற்றும் சதீஷின் மகன் அஜய்க்கு நான்காம் பிறந்தநாள் கொண்டாட்ட விழா .
சஹானாவின் விருப்பப்படி அவளிற்கு , பிரவீனிற்கும் பிறந்த முதல் மகனை அம்முவிற்கு தத்து கொடுத்துவிட்டனர் .

அஹானாவும் ...சதீஷின் அன்பிலும் , தொடர்ந்து எடுத்த சிகிச்சைகளாலும் தேறி இருந்தாள் . இன்னும் பழைய விஷயங்கள் அவளிற்கு நியாபகம் இல்லை எவரும் அதை திரும்ப நியாபக படுத்த முயற்சிக்கவும் இல்லை .

இன்னும் சதீஷை பார்க்கும் சமயம் சஹானாவின் பார்வையில் அனல் பறக்கும் "அவன் தான் அம்முவை நல்ல வச்சிருக்கான்ல " என்று பிரவீன் சொன்னாலும் கேக்க மாட்டாள் .

அஜய்கு பிறகு பிரவீன் தம்பதியினருக்கு ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் என்று இரட்டையர்கள் பிறந்தனர் . அவர்களின் பெயர் லக்ஷனா ,ரக்ஷன் . இப்பொழுதான் அந்த பெரிய மனிதர்களுக்கு இரண்டு வயது ஆகிறது .


கேக் வெட்டியவுடன் அதை "அம்மா " என்று அழைத்த அஜய் அஹானாவிற்கு ஊட்டி விட்டான் . பின் "சஹானா அம்மா " என்று அவளிற்கு ஊட்டி விட்டான் .

இனி அவர்களின் வாழ்வில் எல்லாம் சுபமே என்று நாமும் விடைபெறுவோம் .....!!!





no_photo.png
ReplyForward




 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top