JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம்-3

saaral

Well-known member
அத்தியாயம் -3

வான்மதி வலுவாக மறுத்தும் அழுது புலம்பி பார்த்தார் அவரால் முடியவில்லை . அந்த வார இறுதியில் ஒரு பல்பொருள் அங்காடியின் அருகில் சிஸ்டர் நிர்மலாவை சந்தித்தனர் தாயும் மகளும் .

"குட் ஈவினிங் சிஸ்டர் " வான்மதியின் குரல் கேட்டு திரும்பிய அவர் புன்னகையுடன் பேச தொடங்கினார் .

"குட் ஈவினிங் மதி , எப்படி இருக்கீங்க அகிலம் " அவரின் முகத்தில் எப்பொழுதும் போல் நிறைந்து இருக்கும் அமைதி மற்றும் சாந்தம் இன்றும் இருந்தது .

"இருக்கேன் சிஸ்டர் " சலிப்புடன் கூறினார் அகிலம் .

தனது தாயை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்த மதி "அம்மா என்ன இது " என்றாள் மெதுவாக .

"என்னாச்சு அகிலம் , ஏன் மதி உங்களை மிரட்றா ?"

"அது இல்லை சிஸ்டர் சிவாவை இவள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நானும் அண்ணனும் ஆசைபட்டப்ப உங்களிடம் கூறினேன் நீங்களும் பேசி பார்த்து இது சரி வராது சொன்னீங்க , நீங்கள் சொன்னா சரியாக தான் இருக்கும் என்று நம்பி அமைதி காத்தேன் ....இப்ப அந்த சிவாக்கு சென்னையில் கல்யாணம் அதுக்காச்சும் போயிட்டு வரலாம் வா என்றால் சொல் பேச்சு கேக்க மாட்டீங்கிறாள் " தாயிற்கே உரிய தவிப்பு .

அதை புரிந்து கொண்டார் அந்த அனுபவஸ்தர் . "ஏன் மதி போய்ட்டு வா மா " என்றார் . அவளின் கண்களை தீர்க்கமாக பார்த்துக்கொண்டே கூறினார் .

"சிஸ்டர் " என்று அலறிய மதி அவரின் பார்வை கண்டு ஏதும் பேசாமல் அமைதி காத்தாள் .

"அவள் வருவாள் அகிலம் இங்கு ஒரு மாணவி படிக்க வசதி இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறாள் அவளை பார்த்து எதாவது உதவ முடியுமா என்று பார்க்க வந்தேன் ...நீங்கள் வார இறுதி நாளில் கடைக்கு வந்திருப்பீர்கள் போய் வாங்கிவிட்டு செல்லுங்கள் " என்றார் சிஸ்டர் .

"சரி சிஸ்டர் போய்ட்டுவரோம் வா மதி " என்றார் அகிலம் .

"அகிலம் நீங்க போங்க ஒரு நிமிடம் மதியிடம் பேசிவிட்டு பின்னோடு அனுப்புகிறேன் "

"சரி சிஸ்டர் நீங்க நல்ல புத்தி சொல்லி அனுப்புங்க நான் முன்னே செல்கிறேன் , பேசிட்டு வா மதி " என்று கூறி முன்னே நகர்ந்தார் அகிலம் .

தனக்கு முன் அமைதியாக நிற்கும் மதியை பார்த்து சிரித்த சிஸ்டர் "என்ன மதி பயமா " கேள்வியுடன் நிறுத்தினார் .
அதில் சட்டென்று நிமிர்ந்து பார்த்த அவள் "எனக்கு என்ன பயம் சிஸ்டர் " நேராக பார்த்து கேட்டாள் .

"அப்ப ஏன் நிஜத்தை எதிர்கொள்ள தயங்குற "

"இல்லை சிஸ்டர் அம்மாக்கு ஏதும் தெரியாது .....மாமா வீட்டில் எனக்கும் சிவாகும் கல்யாணம்னு பேசி எங்கள் சொத்தை முழுதாக அபகரிக்க திட்டம் தீட்டினர் .....நான் ஒப்புக்கொள்ளவில்லை என்று அம்மாவிடம் என்னலாமோ சொல்லி மனதை குழப்ப முயற்சித்தனர் ...அவங்க குழந்தை போல் குணம் கொண்டவர் ....என் மீது இருக்கும் பாசத்தில் அப்பொழுது சண்டை போட்டார் இப்பொழுது மீண்டும் அண்ணனின் பாசம் அவரின் கண்களை மறைக்கிறது இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை " சலிப்பாக கூறினாள் ...உறவுகள் பொய்த்துப்போனதின் வலி அவளை தாக்கியது .

அந்த முதியவரோ புன்னகை மாறாமல் "இது மட்டும் தான் காரணமா மதி " நீ இன்னும் முழுதாக உண்மையை சொல்லவில்லையே என்னும் பார்வை பார்த்தார் .

"சிஸ்டர் உங்ககிட்ட சின்ன விஷயம் கூட மறைக்க முடியாது .....அம்மாக்கு முழுதாக விஷயம் தெரிந்தால் தாங்குவார்களா என்று கவலை மேலும் அந்த ஊர் கசப்பான நினைவுகளை தோற்றுவிக்கும் " முகத்தில் எரிச்சல் தென்பட கூறினாள் .

"மதி தவறு உன் மீது இருக்கும் சமயம் நீ தயக்கம் கொள்ளலாம் ஆனால் இது எவரோ செய்த சதி ...இதை பொருட்படுத்தாமல் கடந்து வா மகளே ... உன் அம்மா தயிரியமானவர் மேலும் உன் மீது அன்பு கொண்டவர் நிச்சயம் அனைத்தையும் புரிந்துகொள்வார் ...சென்னை சென்று வா சரியா ...இப்ப நான் கிளம்பனும் நாளை கல்லூரியில் பார்க்கலாம் " என்று விடைபெற்றார் .

பாவம் மதியின் மனதை நெருடியதை போன்ற பல சம்பவங்கள் தமிழகத்தின் தலைநகரில் அவளுக்காக காத்து கொண்டிருக்கின்றது என்று தெரியாமலே அந்த இரு நல் உள்ளங்களும் அவளை சென்னை செல்ல வற்புறுத்தினர் .


.................................................

இங்கு சென்னையில் தனது அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த கௌஷிகின் அறையினுள் அவனின் அசிஸ்டன்ட் நுழைந்தார் .

"சொல்லுங்கள் சதாசிவம் " தனது வேலையில் கவனமாக இருந்து கொண்டே கேட்டான் அவன் .

"சார் மிஸ்டர் சாரதி வந்திருக்கிறார் அவரின் மகள் மேகலாவின் திருமணத்திற்கு அழைப்புவிடுக்க வந்திருக்கிறார் " சதாசிவம் மரியாதையுடன் கூறினார் .

"ஓஹ் யா நான் தான் இப்பொழுது வர சொன்னேன் அவரை உள்ளே வரச்சொல்லுங்கள் ...ஒரு ஐந்து நிமிடத்தில் இரண்டு கப் டீ கொண்டுவரச் சொல்லுங்கள் " அவனும் அவரின் வயதிற்கு மரியாதையை கொடுக்க தவறமாட்டான் . சதாசிவம் நம்பிக்கையானவர் கௌஷிகின் அணைத்து அசைவுகளும் அவர் அறிவார் சொல்லப்போனால் அவர் மட்டுமே அறிவார் , நடுத்தர வயதில் இருப்பவர் அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள் .

சொன்னது போல் செய்த சதாசிவம் அறையினுள் நுழைந்து சாரதி அருகினில் இருக்கும் இருக்கையில் கௌஷிகின் கண் அசைவிற்கு கட்டுப்பட்டு அமர்ந்து கொண்டார் .

"என்ன சாரதி சார் சாதாரண இடத்தில் பெண் கொடுக்கிறீர்கள் போல ....மாப்பிள்ளையின் தந்தை ஏதோ அரசாங்க அலுவகத்தில் வேலை பார்க்கிறார் அவரின் பெயர் சாம்புவேல் என்று போட்டிருக்கிறது " என்றான் கௌஷிக் .

சதாசிவத்தின் காதுகள் கூர்மையாகின கௌஷிக்கை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தார் . அவரின் பார்வை மாற்றத்தை புரிந்துகொண்ட கௌஷிக் பிறகு அவரிடம் பேசிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டான் .

"என்ன பண்றது மிஸ்டர் கௌஷிக் உங்களை போன்ற மணமகனின் கண்கள் எங்கள் வீட்டின் பெண்களின் பக்கம் திரும்புவது இல்லை ....சரி நாம் மாப்பிளை பார்ப்போம் என்று எண்ணி பார்த்தாள் எங்கள் வீட்டு பெண்களுக்கு பிடிப்பது இல்லை ...காதல் என்று வந்தாள் ...விசாரித்தேன் பையனிடம் பெரிய குறை என்று காண்பதற்கில்லை எதோ அத்தை மகளுடன் பேசிய கல்யாணம் விடுபட்டது என்பது மட்டுமே பேச்சு அதும் தவறு பெண்ணின் பக்கத்தில் ஆகையால் சரி என்று சொல்லிவிட்டேன் " ஒருமுறை மறைமுகமாக தூது விட்டும் கௌஷிக் சம்மதம் சொல்லவில்லை என்ற ஆதங்கம் அவரிடம் தென்பட்டது .

எதையும் முகத்தினில் காட்டாமல் பத்திரிகையை பார்த்த கௌஷிக் "மாப்பிளை சிவா ....ஹ்ம்ம் நல்ல நிறுவனத்தில் தான் வேலை செய்கிறார் போல " என்றான் . சதாசிவம் அவனிடம் எதையோ சொல்ல துடிப்பது அவனுக்கு புரிந்தது .

"ஆமாம் கௌஷிக் இன்னும் நான்கு மாதத்தில் லண்டன் சென்றுவிடுவார் ....மகளும் அவருடன் அங்கு செல்ல விருப்பம் தெரிவித்தாள் ....நிச்சயம் திருமணத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் ...சரி கௌஷிக் இன்னும் நிறைய இடம் செல்ல வேண்டும் கிளம்புகிறேன் " என்று கூறி எழுந்து நின்று கையை நீட்டினார் சாரதி ...கௌஷிக்கும் கை குலுக்கி அவருக்கு விடைகொடுத்தான் .

அவர் சென்று விட்டதை உறுதி செய்துகொண்டு தனக்கு எதிரில் நிற்கும் சதாசிவத்தை பார்த்து ."இப்ப சொல்லுங்க சதாசிவம் " என்றான் .

"தம்பி இந்த மாப்பிளை யார் என்று தெரிகிறதா " மெதுவாக எங்கே அவன் கோபம் கொள்வானோ என்று பயந்து தான் கேட்டார் . அவர் எங்கே அறிவார் முன்பு ஒருபெயரை சொன்னால் கோபம் கொள்ளும் அவன் இப்பொழுது சிந்திக்க தொடங்கிவிட்டான் என்று அறிவாரா ....

சற்று யோசித்து பார்த்த கௌஷிக் "தெர்லயே யார் அவர் ? " என்று கேட்டான் .

"தம்பி இந்த சாம்புவேல் அந்த பெண் வான்மதியின் தாய்மாமன் .... மாப்பிள்ளை பையனுக்கும் அத்தை பெண்ணிற்கும் கல்யாண ஏற்பாடு என்று கூறினாரே அது அந்த வான்மதியுடன் உடன் தான் ....மேலும் இந்த பேச்சு வார்த்தை தொடங்கிய வேகத்தில் நின்றது அதும் நான்கு ஆண்டுகள் முன் பிரச்சனை தலைதூக்கி இருந்த சமயம்" என்றார் .

அவனின் கண்கள் சிவந்தன அது கோபத்தினால் அல்ல தன்னுடைய பிழையை எண்ணி . யார் பெற்ற பெண்ணோ என்று வரும் பொழுது அலட்சியமாக இருந்த மனது தன்னுடைய வீட்டு பெண் என்று வரும்பொழுதுதான் துடிக்கிறது .

"அப்ப அந்த பெண் மதி ....ஹ்ம்ம் வான்மதியும் வருவாள் இல்லையா சதாசிவம் " எதற்காக கேக்கிறான் என்று அவர் அறியார் ஆனால் ஒரு பெண் பிள்ளையின் தகப்பனாக மேலும் அந்த பெண் துன்பப்படக்கூடாது என்று எண்ணி வருத்தத்துடன் பேச துடங்கினார் .

"தம்பி அந்த பெண் பாவம் தம்பி எல்லாத்தையும் விற்றுவிட்டு தந்தையையும் இழந்து ....தாயுடன் எங்கோ சென்றுவிட்டாள் என்று கேள்விப்பட்டேன் ....மேலும் அந்த பெண்ணை கஷ்டப்படுத்த வேண்டாமே .." கிட்டத்தட்ட கெஞ்சினார் . பெண் பிள்ளைகளை பெற்ற தாய் தந்தையருக்கு மட்டுமே ஆன உணர்வு அவரிடம் வெளிப்பட்டதை கண்டுகொண்ட கௌஷிக் விரக்தியாக சிரித்தான் .
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top