JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அன்பில் விளைந்த அமுதே 12

பகுதி 12
மாறனின் உள்ளம் அடுக்கு அடுக்கான அதிர்ச்சிகளை அன்று சந்தித்து கொண்டு இருந்தது. பவித்ரா பிறந்த நாளில் இருந்தே அவனிடம் எப்போதும் பிரியமாக மாறா மாறா என்று அவன் பின்னே சுற்றி வருவாள். அதிலும் அவளுக்கு அவன் மீது காதல் அதிகமாகி விட்டால், மாறா என்ற அழைப்பு “மாமா“ என்று குழையத் தொடங்கி விடும்.

அவளின் அந்த அழைப்பு மாறனை சொர்க்கத்துக்கே அழைத்துச் செல்லும்.

அப்படிப்பட்டவள் அவனை விடுத்து எப்படி அந்த மாப்பிள்ளையுடன் ஒட்டிக் கொண்டு நிக்கலாம்?? அவனுக்கு சொத்து இல்லை, அந்தஸ்து இல்லை, நல்ல எதிர்காலம் இல்லை என்று யோசித்து நல்ல வளமான வாழ்க்கை வாய்ப்பு வந்தவுடன் அவனை மறந்து கைவிட்டுச் சென்றவள்.

அவளை இனி வாழ்வில் சந்திக்கவே கூடாது, அப்படியே அவளை சந்திக்கும் தருணம் ஏற்பட்டால் அவன் மனதை உடைத்துச் சென்றவளுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று தான் காத்து இருந்தான்.

ஆனால் இத்தனை வருடங்கள் கழித்து அவளை நேரில் கண்டதும்.. அவன் வைராக்கியம் எல்லாம் காற்றில் கரைந்து போக அவன் பவி என்று ஆர்வமுடன் பார்த்திருக்க, ஆனால் அந்த திமிர் பிடித்தவளோ.. “யார் நீ” என்று கேட்காமல் கேட்க.. அந்த நொடியில் மாறன் மனம் ஏமாற்றத்திலும் அவமானத்திலும் சுக்கு நூறாக நொறுங்கி போனது.

அவன் ஐ.பி.எஸ்ஸை வெற்றிகரமாக முடித்து.. பதவி ஏற்ற இத்தனை நாளில்.. மேல் அதிகாரிகளிடமும் மக்களிடமும் நல்ல பெயரை மட்டுமே பெற்று இருக்கிறான். அதிலும் கோவைக்கு வந்ததில் இருந்து.. அவர்கள் குழு சிறப்பாகச் செயல்படுவதாக கலெக்டரே இன்று காலை கூட கூப்பிட்டு பாராட்டினார்.

அந்த பாராட்டு அவனுக்குள் சிறு கர்வத்தை கொடுக்க, அப்படி சந்தோசமாக வந்தவனை, நீ என்ன பெரிய காவல் அதிகாரி?? என்று ஒரு பெண் தன்னை இந்த அளவுக்கு அவமானப் படுத்துவதா என்று துடித்துப் போனான்.

பவித்ராவுக்குப் பதில் வேறு வக்கீல் இருந்திருந்தால் கூட, இதை எளிதாக ஏற்று இருப்பான். ஆனால் யார் முன் கம்பீரமாக நிற்க வேண்டும் என்று இத்தனை வருடங்கள் காத்து இருந்தானோ.. இன்று அவள் முன்னே சபையில் அவமானப் படும்படி ஆகிவிட்டதே என்று நினைக்க நினைக்க அவன் இரத்தம் கொதித்தது.

இந்த கேஸில் நிச்சயம் ராஜேஷ் தான் குற்றவாளி என்று நிரூபிக்க வேண்டும். அவள் வாதத்தை பொய் என்று அடுத்த விசாரனையின் போது அம்பலப்படுத்த வேண்டும். அந்த அரசாங்க வக்கீல் மூலம் அதற்கான எல்லா முயற்சியையும் எடுக்க வேண்டும் என்று சபதம் செய்து கொண்டான்.

அவன் ஜீப்பில் ஏறப் போக, அவன் முன் பவித்ரா காரில் ஏறிக் கொண்டிருந்தாள். இது தான் சரியான தருணம் என்று காத்திருந்த மாறன் அவளுடன் காரில் ஏறி அமர்ந்து கொண்டான்.

அவனை யாரென்றே தெரியாதது போல் பேசியவள்.. இது உங்க வண்டி இல்ல எஸ்பி சார் என்று நக்கல் செய்ய..

“இது என் வண்டி இல்லைன்னு எனக்கு தெரியும் பவித்ரா!!.. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்! அதுக்கு தான் உன் வண்டியில ஏறி இருக்கேன்.”

“ஆனா எனக்கு உங்க கிட்ட பேச இஷ்டம் இல்லையே.. சோ குட் யூ ப்ளீஸ் கெட் டவுன் மிஸ்டர் வெற்றி மாறன்” என்று அவள் கைகளை விரிக்க..

அவன் கண்கள் மட்டும் சிவக்கத் தொடங்க.. இருந்தும் தன் உணர்ச்சிகளை அடக்கி கொண்டவன். “நீ ரொம்ப மாறிட்ட பவி” என்று அவன் ஒருவித வலியுடன் சொல்ல..

“என்ன பண்றது எஸ்பி சார்!!.. நாம காலத்துக்குத் தக்கபடி மாறலைன்னா ஒரு புழு பூச்சி கூட நம்மள மதிக்காது. ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருக்கும்” என்று முடித்தவள் அவனை ஒரு ஓரப் பார்வை பார்க்க.

அவளின் ஜாடைப் பேச்சைப் புரிந்தவன் “ஹ்ம்ம்”.. என்று மெல்லிய புனனகை புரிந்து.. “எப்படி இருக்காங்க உங்க அப்பா அப்புறம் உன் வக்கீல் புருஷன்” என்றவனுக்கு கடைசி வார்த்தையை சொல்ல பிடிக்கவில்லை தான்!!

“எஸ்பி சார்.. உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி!!.. எப்படி இருக்காங்க உங்க அம்மா!! அப்புறம் உங்களவள்!!” என்று அவளும் பதிலுக்கு விசாரிக்க..

எப்போதும் அத்தை என்று ஆசையுடன் அழைப்பவள்.. இன்று யாரும் எனக்கு வேண்டாம் என்பதைப் போல் ஆர்வமின்றி கேட்க.. அதே நேரம் அவன் குடும்பத்தைப் பற்றி அவள் விசாரிக்கையில் அவள் நாவின் சிறு தடுமாற்றம் அவனுக்கு ஒரு வித திருப்தியை கொடுத்தது.

“ம்.. ரெண்டு பேரும் சூப்பரா இருக்காங்க!!.. நீ எங்க வீட்டுக்கு வாயேன் பவி!!.. அம்மா ரொம்ப ஆசை படுவாங்க” என்று மாறன் கண்கள்.. அவளை விட்டு விலகாமல் கேட்க..

“முன்ன மாதிரி வெட்டியா கண்டவுங்க பின்னாடி சுத்தற அப்பாவிப் பெண் இல்ல நான், மிஸ்டர் வெற்றி மாறன். தப்பு பண்ணுறவங்களையும், அதிலும் பெண்களை ஏமாத்த நினைகிறவங்களுக்கு தேடிப் பிடிச்சு தண்டனையை கொடுக்கிறதுக்காகவே இந்த கருப்பு கோட் போட்டிருக்கேன். “ என்று பவி அவனைத் தாக்க.

அதுவரை பொறுமையுடன் கேட்டவனுக்கு சினம் பொங்கியது. இவள் என்னை ஏமாத்திட்டு போயிட்டு, ஏதோ சாதனை பெண்மணி மாதிரி வசனம் பேசுறாளே என்று கோபம் பொங்க..

“ஏண்டி காசுக்காக அந்த ராஜேஷ் ஒரு கொலைகாரன் என்று தெரிஞ்சி இருந்தும் அவனுக்காக வாதாடுறியே.. உன்னால ஒரு குடும்பமே தெருவுக்கு வரப் போகுது.. நீ பெண்களுக்காக போராடுறியா??” என்று மாறன் கொட்டித் தீர்க்க..

பவித்ரா நிதானமாக அவள் அருகில் இருந்த வாட்டர் கேனை அவனிடம் நீட்டி. “எஸ்பி சார்... இந்த தண்ணியைக் குடிங்க. ரொம்ப சூடாயிட்டிங்கன்னு நினைக்கிறேன்.”

“ஏய்!! இந்த நக்கல்லாம் போதும். உனக்கு என்னைப் பார்த்தா எப்படி தெரியுது.??”.. என்று அவன் கண்களில் கோபக்கனலுடன் அதட்ட..

“எஸ்பி சார் உங்களுக்கு இந்த கேஸ்ல தோத்திடுவோம்ன்னு பயம் வந்திருச்சு போல” என்று அவள் நிதானமாக சொல்ல..

“ஹ்ம்ம்.. அதுக்கு வாய்ப்பே இல்ல!!”

“அப்ப தைரியமா இருங்க.. எதுக்கு இந்த மறைமுக மிரட்டல்!!”

“எனக்கு என்ன பயம்?? அந்த ராஜேஷ்க்கு ஜெயில் தண்டனை வாங்கித் தராமல் ஓய மாட்டான் இந்த மாறன்!! பாவம் ஒரு பெண்ணை அசிங்கப் படுத்த வேண்டாமேன்னு உன்கிட்ட சொல்ல வந்தேன். அதுக்கு மேல உன் இஷ்டம்.”

“உங்க அக்கறைக்கு நன்றி மிஸ்டர் வெற்றி மாறன். எனக்கு நிறைய வேலை இருக்கு. கொஞ்சம் வண்டியை விட்டு கழே இறங்குறீங்களா??” என்று அவள் துடுக்காக சொல்ல..

“ஏய் நிறுத்து!! நான் மட்டும் என்ன வெட்டியாவா உக்காந்திட்டு இருக்கேன்!!.. நான் இந்த கேஸ்ல ஜெயிக்கிறதுக்காக எந்த எல்லை வரையும் போவேன். ஞாபகம் வச்சுக்கோ” என்றவன் அங்கிருந்து சென்று விட..

ஜீப்பில் ஏறிய மாறனின் கோபம் சற்றும் தனியவில்லை. அந்த பவி முகத்தில் கரியை பூசியே ஆக வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அவளை ஜெயிக்க விட்டு விடக் கூடாது. என்ற ஒரே எண்ணம் அவன் மனதில் உருண்டு கொண்டு இருக்க.. ஸ்டேஷனையும் எட்டி இருந்தான்.

அவன் அறைக்குள் புகுந்து கொண்டவன் சற்குணத்தை அழைக்க..

“யோவ் சற்குணம் என்னய்யா இந்த கேஸ்ல பண்ணி வச்சு இருக்கீங்க?? அந்த கல்யாண் கிட்ட நிஜமாவே வாக்கு மூலம் வாங்குனீங்களா இல்லையா??” என்று அவன் அந்த அறையே அதிரும்படி உரும..

“இல்ல சார்... இப்படி ஒரு சாட்சியை ஏற்பாடு பண்ணா தான் கேஸ் நிக்கும்னு வக்கீல் சொன்னார்” என்று அவன் மெல்லிய குரலில் சொல்ல..

“புல் ஷிட்!!.. அந்த ஆளுக்கு அறிவே இல்ல!!.. இப்படியா பண்றது. தப்பை சரியா செஞ்சிருந்தா தப்பே இல்ல..” என்று மாறன் சொல்ல..

சற்குணம் அவன் சொன்னதை நம்ப முடியாமல் தலை உயர்த்தி பார்க்க.. “யோவ் அந்த பணக்காரன் எப்படியாவது சாட்சிகளை அழிச்சு ஜெயிக்க பார்ப்பான்னு உங்களுக்கு தெரிய வேண்டாமா?? பொய் சாட்சிக்கு ஏற்பாடு பண்றதுன்னு முடிவு பண்ணா! சரியான சாட்சியா ஏற்பாடு பண்ணி இருக்க வேண்டாமா?
உங்களால நான் கோர்ட்ல அவமானப்பட்டு நிக்க வேண்டியது ஆயிடுச்சு!!.. நீ அந்த வக்கீல் கிட்ட பேசி என்ன செய்வியோ தெரியாது.. ஆனா இந்த கேஸ்ல நாம தான் ஜெயிக்கணும்.” என்று மாறன் முடிவாக சொல்ல..

“சார் நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க.. அந்த வக்கீல் பவித்ராவுக்கு நம்ம ஸ்டையிலில் டார்ச்சர் கொடுத்து.. அவளை உண்டு இல்லைன்னு பண்ணி.. கேசை விட்டு விலகச் செய்து விடலாம்.” என்று சற்குணம் விஷத்தைக் கக்க..

சட்டென்று அவன் சட்டையை தன் கைகளில் கொத்தாக அள்ளிய மாறன்.. “யோவ்.. அவள் மேல உன் கை பட்டுச்சி.. உன்ன தொலைச்சிடுவேன்” என்று மாறன் நொடிப் பொழுதில் எரிமலையாய் மாறி நிற்க..

சற்குணம் அவன் மனநிலையை சற்றும் புரிந்து கொள்ள முடியாமல் நிற்க..

தன் கைகளை தளர விட்டவன் அவன் சீருடையை சரி செய்து “ஐ ஆம் சாரி சற்குணம்!!. வக்கீல் மேல கை வச்சா அவள் சும்மா விடுவாளா?? கேஸ் இன்னும் சிக்கலாக ஆகிடாதா. அதான் கோபப்பட்டேன். விடுங்க வேற ஏதாவது சாட்சிக்கு ஏற்பாடு பண்ணச் சொல்வோம்.” என்று அவன் சமாதானமாய் சொல்ல..

சற்குணத்திற்கு மாறனின் செயல் விசித்திரமாக இருந்தது. அதிலும் இந்த கேஸுக்காக இவர் ஏன் இவ்வளவு அலட்டிக் கொள்கிறார் என்பதும் சுத்தமாக புரியவில்லை.

பின் மாறன் அன்று இரவு எட்டு மணிக்கு அவன் வீட்டை எட்ட.. வழக்கம் போல் அபிக் குட்டி தான் அவனை வரவேற்று கதவை திறந்தாள்.

“அப்பா!! ஏன்ப்பா லேட்டு!! உனக்காக நான் எவ்வளவு நேரமா காத்துட்டு இருந்தேன் தெரியுமா?..

அபியின் முகத்தைப் பார்த்த மாறனுக்கு அன்றைய மனப் போறாட்டம் எல்லாம் ஒரு நொடியில் மறந்து போக.. புன்னகையை முகத்தில் பூசிக் கொண்டவன்.. “சாரிடா செல்லம்!! ஒரு கேஸ்ல ரொம்ப பிசி ஆகிட்டேன்.

“இப்படியே தினம் எதாவது சாக்கு சொல்லுங்க!!..அப்புறம் எனக்கு பாடத்துல சந்தேகம் இருந்தா யார் சொல்லிக் கொடுப்பாங்க?”... என்று அவள் அதட்ட..

“அதுக்கு உங்க அப்பனை முதல்ல கல்யாணம் பண்ணச் சொல்லு”.. என்று வழக்கம் போல் கற்பகம் உள்ளிருந்து குரல் கொடுக்க..

“நீ சும்மா இரு அப்பத்தா!! அப்பா நான் சொன்னதை வாங்கிட்டு வந்தியா?” என்று அபி தீவிரமாக அவனை பார்த்து கேட்க..

அவள் என்ன கேட்டு இருந்தாள் என்பதே அவன் நினைவில் வர மறுக்க..

“அப்பா!! எங்க ஸ்கூல்ல நாளைக்கு சாயங்காலம் ஃபேன்ஸி டிரஸ் காம்பெட்டிசன்!! உங்க கிட்ட எத்தனை தடவை சொன்னேன். மறந்து போயிட்டீங்களா” என்ற அபி அவனை முறைத்து பார்க்க..

“ஸ்.. சாரிடா செல்லம்!!.. அதுக்கு என்ன டிரஸ் போடலாம்னு கேட்டு இருந்தீல!!.. ஃபைவ் மினிட்ஸ் டா செல்லம். அப்பா குளிச்சுட்டு வரும் போது நல்ல ஐடியாவோட வரேன்” என்று குளியல் அறைக்குள் சென்றவன்.. துண்டை கட்டிக் கொண்டு ஷவருக்கு அடியில் நிற்க..

உச்சந்தலையில் அருவியாய் கொட்டிய சில்லென்ற நீர்த் துளிகள் அவன் இறுக்கத்தை குறைக்க.. கண்களை இறுக மூடிக் கொண்டு அபிக்காக அவன் மனம் யோசிக்க.. அவன் கண் முன் தோன்றியது என்னவோ பவித்ரா தான்.

அவள் நினைப்பில் அவன் உடல் சட்டென முறுக்கேறத் தொடங்க.. அவன் உள்ளம் அவள் நினைவுகளில் நீந்தத் துடிக்க.. “மாமா”.. என்ற அழைப்புடன் அவனைக் கட்டி அணைத்து அவனை அவள் எழுப்பிய நாட்கள் நினைவு வர, தன் உணர்ச்சிகளை அடக்கி அன்று விலகி இருந்தவனுக்கோ.. அவளின் அந்த அணைப்பு இன்று கிடைக்காதா?? என்று அவன் மனம் அவளுக்காக ஏங்கத் தொடங்க. அவன் வலிய கரங்கள் அவளை இறுக கட்டித் தழுவுவது போல் அடுத்த நொடியே அழகான கற்பனையில் மனம் அவனை இழுத்து செல்ல..

சட்டென தன் தலையை உதறிக் கொண்டவன்.. தன் எண்ணப் போக்கை எல்லையிட்டு அடக்கி.. ச்ச என்ன நினைப்பு இது!! என்று தன்னையே கண்டித்தவன் தண்ணீரில் இருந்து வெளி வந்தான்.

அவன் தலையை உலர்த்திக் கொண்டே வெளியே வர.. “அப்பா என்ன அப்பா யோசிச்சீங்களா?? ஐடியா கிடைச்சிருச்சா??” என்று அபி ஆர்வமுடன் கேட்க..

“ம்.. எல்லாம் ரெடி!!.. நீ சாப்பிட்டியா?”

“ம் ஆச்சுப்பா!!”

“சரி அப்ப அப்பத்தாட்ட குட் நைட் சொல்லிட்டு வா!!.. நாம டிஸ்கஸ் பண்ணலாம்” என்ற மாறன் அபிக்காக காத்து இருந்தான்.

பின் மாறன் ஐடியா அவளுக்கு மிகவும் பிடித்து போக.. “சூப்பர்ப்பா தேங்க் யூ..” என்ற அபி ஆசையுடன் தன் தந்தையின் கன்னத்தில் முத்தம் பதித்து விட்டு அதை தன் அப்பத்தாவிடம் விவரிக்க ஓட..

“அபி.. மெல்ல டா” என்பதைக் கேட்க அவள் அங்கு இல்லை.

மறுநாள் காலை மாறன் தன் பணிக்கு தயாராக..

“அப்பா இன்னைக்கு சாயந்திரம் சரியா நாலு மணிக்கு புரோக்ராம் ஸ்டார்ட் ஆகிடும். நீங்களும் அப்பத்தாவும் கண்டிப்பா எங்க ஸ்கூலுக்கு வந்திடனும். வழக்கம் போல நான் மறந்துட்டேன்னு சொன்னீங்க.. அப்புறம் நான் உங்க கிட்ட பேசவே மாட்டேன்” என்ற அபி ஸ்கூல் பஸ்ஸில் ஏறிச் செல்ல..

அம்மா அவளுக்குத் தேவையானதை எல்லாம் வாங்கி ஸ்கூலுக்கு கொடுத்து விட்டுருங்க!! என்ற மாறன் தன் தட்டில் இருந்த இட்லியை சுவைக்க..

அவனுக்கு பரிமாறிக் கொண்டு இருந்த கற்பகம் “இதெல்லாம் அவள் அம்மா பார்க்க வேண்டிய வேலை!! நான் எத்தனை நாள் செய்யணுமோ” என்று கற்பகம் சடைக்க..
மாறனுக்கு சட்டென பவியின் நினைப்பு வர.. அவன் இதழ்கள் அவளை பார்த்ததைப் பற்றி கற்பகத்திடம் வர்ணிப்போமா என்று துடிக்க..

மனமோ.. வேண்டாம்!! சும்மாவே அம்மா எதாவது சொல்லி புலம்பு வாங்க!! அப்புறம் அவள் கிட்ட போய் எதாவது தேவை இல்லாம பேசுவாங்க என்று நிறுத்திக் கொண்டான்.

“அம்மா நான் வர லேட் ஆயிடுச்சுன்னா நீங்க ஒரு ஆட்டோ பிடிச்சு ஸ்கூலுக்கு போயிடுங்க!! நான் நேரா வந்துடுவேன்!”.. என்று மாறன் ஜீப்பில் சென்று விட்டான்.

அன்றைய பொழுது கிடு கிடு வென்று செல்ல.. மூன்றறை மணி அளவில் ஸ்டேஷனில் தன் பணியை முடித்து கொண்டு.. அங்கேயே காக்கி உடையை மாற்றி கலர் சட்டைக்குள் மாறியவன் நேராக பள்ளிக்குச் சென்றான்.

அந்த பள்ளியில் தோரணங்களும் பலூன்களும் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருக்க, பெரிய ஸ்பீக்கரில் இசை ஆர்ப்பரிக்க, மாணவச் செல்வங்கள் துள்ளலுடன் ஓடி விளையாட, மாறனுக்கு அந்த கோலாகலத்தை பார்த்தவுடன் உற்சாகம் தொற்றிக் கொண்டது. கூட்டத்தில் தன் தாயைத் தேடிச் சென்று அமர்ந்து கொண்டான்.

நிகழ்ச்சி தொடங்கியதும் அனைவரும் அமைதி காக்க.. குழந்தைகள் பல விதமாக மேக்கப் போட்டு பிரமாதமாகப் பேசினார்கள்.

இந்திரா காந்தி, ஹல்க், ஸ்பைடர் மேன், தேவதை என்று குழந்தைகள் பல கெட்டப்களில் வந்து அசத்த.. மாறன் மனமோ அபி எப்படி பேசப் போகிறாளோ என்று பதை பதைக்க..

மேடையில் அபி வந்து நின்று இருந்தாள்.

அவள் வக்கீல் உடை அணிந்து.. “பாரதி கண்ட புதுமைப் பெண் நான். இந்த நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமையைத் தட்டிக் கேட்கவே நான் சட்டம் படித்திருக்கிறேன். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம். ஆணும் பெண்ணும் சமம் என்பதை நான் நிரூபித்துக் காட்டுவேன்” என்று அபி முடிக்க.. அந்த அவையின் கரகோஷம் காதைக் கிழித்தது.

பிழை இல்லாமல் தன் மகள் பேசியதிலும், என்னம்மா பேசுறா இந்த பொண்ணு!! என்று அருகில் உள்ளவர்கள் பேசிக் கொள்ள.. மாறன் அந்த பாராட்டுப் பேச்சில் எல்லை இல்லா ஆனந்தம் கொண்டான்.

ஆனால் அபி மேடையில் பேசும்போது அவன் கண்களுக்கு அவள் அபியாக தெரியவில்லை. பவி தான் அவனைப் பார்த்து பேசுவது போல் தோன்றியது.

“மாறா.. இது நம்ம அபி தானான்னு நம்பவே முடியலை. நல்லா ஆக்ஷனோட சொல்லிக் கொடுத்திருக்க.. எப்படிடா??” என்று ஆச்சர்யமாக கேட்க..

“அது ஒன்னும் இல்லம்மா.. நேத்து கோர்ட்ல ஒரு லேடி அட்வகேட் சூப்பரா பேசி வாதாடினாள்!!.. அவள் பேசுன ஸ்டைல்ல அபி குட்டிக்கு சொல்லிக் கொடுத்தேன்”.

இறுதியாக முதல் பரிசை அபி வென்றதாக மேடையில் அறிவிக்க.. தாய் மகன் இருவருமே பேரானந்தத்தில் கை தட்டினர்.

பின் கூட்டம் கலையத் தொடங்க மாறனும் கற்பகமும் அபியை. அழைக்க மேடை அருகில் சென்றனர்.

அபி வக்கீல் உடையில் அவர்களைப் பார்த்துச் சிரிக்க.. அப்போது அபி ஒரு சிறுவனுடன் ஆசையாக பேச.. அவன் தாயும் அபியை பாராட்டி அவள் நெற்றியில் முத்தம் வைக்க.. புடவை அணிந்து முதுகை காட்டிக் கொண்டு நின்ற அந்த பெண் பரிச்சயம் ஆனவள் போல் தோன்ற..

கற்பகம் மாறனின் கையை திடீரென இறுக்கமாகப் பற்ற.. “என்னம்மா ஆச்சி!!” என்று அவன் பதட்டத்துடன் கற்பகத்தைப் பார்க்க..

“பவிம்மா” என்று அவள் கண்கள் அவர்கள் முன் திரும்பி நின்ற பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியில் விரிந்து இருந்தது.


உங்கள் விமர்சனங்களுக்கு மிக்க நன்றி அன்பு நெஞ்சங்களே!! இந்த பகுதியை பற்றிய கருத்துகளையும் மறவாமல் பதிவிடுங்கள். நன்றி.

தொடரும்
அன்புடன் லக்ஷ்மி.
 

Members online

No members online now.

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top