JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அன்பில் விளைந்த அமுதே 13

பகுதி 13
கற்பகம் பவித்ராவைப் பார்த்து உலகையே மறந்து நிற்க, தன் தாயின் நிலையைப் பார்த்த மாறன், அவள் எங்கு கீழே விழுந்து விடுவாறோ என்று அஞ்சி அவன் தாய்க்கு ஆதரவாய் கை கொடுத்து நிற்க..

அவன் கண்களும் அப்போது தான் பவியை கவனிக்கத் தொடங்கியது. “சோ ஸ்வீட் டா செல்லம்,!! சூப்பரா பேசுனீங்க”.. என்று பவி மனதார பாராட்ட..

“தாங்க்ஸ் ஆன்ட்டி!!.. ஆன்ட்டி நீங்க அர்ஜுனை கூட்டிக்கிட்டு எங்க வீட்டுக்கு ஒரு நாள் கண்டிப்பா வரணும்!!”

“ம்.. நிச்சயமாக வரேன்!!” என்று பவி கிளம்பப் போக..

“ஆன்ட்டி நில்லுங்க!!” என்று அவள் கையைப் பற்றிக் கொண்டவள்..
“எங்க அப்பா வந்துட்டாங்க.. வாங்க எங்க அப்பாவை அறிமுகப்படுத்துறேன்!!.. அர்ஜுன் நீயும் வா” என்று அபி அவர்கள் இருவரையும் கையைப் பற்றி கூட்டி செல்ல..

கற்பகத்தை நெடு நாட்களுக்குப் பிறகு பார்த்த பவியும் சில நிமிடங்கள் சிலையாகிப் போனாள். அவள் கண்கள் லேசாக கலங்கத் தொடங்க.. தன்னை கட்டுப் படுத்திக் கொண்டவள்.. “அத்தை” என்று அவள் நெருங்கி வர..

“பவிம்மா”என்று அவர் அவளை அணைத்துக் கொள்ள.. இரு பெண்களுமே பாசப் போராட்டத்தில் சிக்கித் தவித்தனர். நெடுநாளுக்குப் பின் தன் தாய் அன்பே கிடைத்தது போல் அவளும் உணர்ச்சி வசப்பட.. மாறனும் அந்த இரு குழந்தைகளும் ஆச்சர்யமாக பார்க்க..

“டேய் அர்ஜுன்!! நாம ஃப்ரெண்ட்ஸ் மட்டும் இல்ல!!.. இனிமே சொந்தக் காரங்க போல டா” என்று அபி உற்சாகமாக சொல்ல..

“அப்படியா!!.. அப்ப அபி நாம அடிக்கடி மீட் பண்ணி விளையாடலாம் ஜாலி!!” என்று அர்ஜூனும் குதூகலிக்க..

அந்த வாண்டுகள் ஒரு பக்கம் அரட்டை அடிக்க.. மாறனோ பவியின் மீது இருந்த கண்களை அகற்றவே இல்லை. நேற்று அவனைப் பார்த்த போது எந்த வித உணர்ச்சியும் வெளிக் காட்டாதவள்.. இன்று கற்பகத்தின் கண்ணீரிலும் அணைப்பிலும் அவள் வைராக்கியம் உடைந்து, அத்தையும் அவளும் உருகி அழுக, பழைய பவியாக அவன் கண்களுக்குத் தெரியத் தொடங்கி இருந்தாள்.

“பவி என் செல்லமே!! உன்னை இத்தனை நாளாக என்கிட்ட இருந்து பிரிச்சிட்டானே அந்த ஆண்டவன். எப்படிடா இருக்க!!..” என்று அவள் கன்னத்தை அவர் ஆசையுடன் தடவ..

“நல்லா இருக்கேன் அத்தை”

“அம்மா!!.. இவங்க இப்ப சாதா பவி இல்ல.. தி கிரேட் வக்கீல் பவித்ரா மேடம்” என்று மாறன் குறும்புடன் சொல்ல..

“அப்படியா பவி!! டேய் அப்ப நீ சொன்னியே.. நேத்து கோர்ட்ல ஒரு வக்கீல் வெளுத்துக் கட்டினாள்னு!! அப்ப அது பவி தானா?” என்று ஆச்சரியமாக கேட்க..

சிறு சங்கடத்தை மறைத்த மாறன்.. “ஆமா அம்மா” என்று ஒத்துக் கொள்ள..

அபி இங்க வா என்று அழைத்த கற்பகம்... “ இங்க பார்த்தியா பவி!! அபிக் குட்டிக்கு உன்னை மாதிரியே வேஷம் போட்டு, வசனம் சொல்லிக் கொடுத்து ஜெயிக்க வச்சிருக்கான். ” என்று பெருமையாக சொல்ல..

“அத்தை யாரு என்ன சொல்லிக் கொடுத்தாலும் இவ்வளவு பெரிய மேடையில் எல்லார் முன்னாடி பேசனும்னா அதுக்கு தைரியம் வேணும்ல. அபி.. யூ ஆர் ஏ ஸ்டார் டா குட்டி!! அவள் நிச்சயம் அவுங்க அம்மா மாதிரின்னு நினைக்கிறேன்.!! என்ன மிஸ்டர் மாறன்.. நான் சொல்றது சரிதானே??” என்று அவள் கண்களும் இதழ்களும் கேலியுடன் அவனிடம் கேட்க..

மாறன் கடைசி வரை அவள் தந்தையை எதிர்த்து அவளுக்காக வர வில்லை என்பதை மறைமுகமாகக் குத்துகிறாள் என்பது அவனுக்கு புரியாமல் இல்லை.. “ இல்ல பவித்ரா மேடம் என் பொண்ணுக்கு தைரியத்தைக் காட்டிலும் யாரையும் ஏமாத்தாம நேர்மையா வாழுறது எப்படின்னு நிறைய சொல்லிக் கொடுத்து இருக்கேன்” என்று மாறன் அவளுக்கு பதிலடி கொடுக்க..

அவனிடம் இருந்து பார்வையை திருப்பிக் கொண்டவள்.. “அத்தை எங்க உங்க மருமக?” என்று அவள் அவர்கள் பின்னால் இருக்கிறாளா என்று தேட..

“இல்ல பவிம்மா!!.. அபிக் குட்டிக்கு அம்மா இல்ல” என்று கற்பகம் சொல்ல.. அர்ஜுனுடன் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டு இருந்த அபியைப் பார்த்த பவி மனம் இளகிப் போனது. தாய் இல்லாமல் வாழந்தவளுக்கு அந்த சின்ன குழந்தையின் ஏக்கம் நெஞ்சைத் தொட்டது.

அப்போது அர்ஜுன் அவள் அருகில் வந்து “அம்மா போவோமா”.. என்று அழைக்க..

“பவிம்மா.. இது உன் பையனா??” .. என்று கற்பகம் ஆசையுடன் அந்த சிறுவனை தூக்கிக் கொள்ள..

“ஆமா அத்தை! அர்ஜுன்” என்று பவி சொல்ல...
மாறன் முகம் சட்டென மாறி இருக்க.. அந்த சிறுவனின் அம்மா என்ற அழைப்பு அவன் இதயத்தையே கீறியது போல் ஒரு வலியை ஏற்படுத்தி இருந்தது.

அவள் முன் மன வேதனையை காட்டிக் கொள்ளக் கூடாது என்று தன் கூலிங் கிளாஸைப் போட்டு தன் கண்களை மறைத்துக் கொண்டான்.

“என் செல்லமே!! என்னடா படிக்கிறீங்க?” என்று கற்பகம் ஆசையுடன் விசாரிக்க..

“செகண்ட் ஸ்டாண்டர்ட் பாட்டி” என்று சொல்ல.. அவன் கன்னத்தில் முத்தம் பதித்த கற்பகம்..

“நாம என்ன என்னவோ கனவு கண்டோம்!!. ஆனா விதி நாம எல்லாரையும் பிரிச்சு.. உங்க வாழ்க்கையே புரட்டிப் போட்டிருச்சே”.. என்று கற்பகம் பழைய நினைவுகளில் சொல்ல..

“முடிஞ்சி போன கதையைப் பேசி என்ன ஆகப் போகுது அத்தை!!”..

“ஆமா பவி.. எங்க அண்ணா எப்படி இருக்கார்??” என்று கற்பகம் ஆசையுடன் கேட்க..

“ இல்ல அத்தை!! அப்பா இறந்து பல வருஷம் ஆயிடுச்சு” என்று பவி சொல்ல..

மாறனும் கற்பகமும் அவளை அதிர்ச்சியுடன் பார்க்க.. “என்ன பவி சொல்ற எங்க அண்ணன் உயிரோட இல்லையா” என்று அவர் கண்கள் மறுபடியும் கண்ணீர்க் குளமாக..

“அத்தை இது ஸ்கூல் அத்தை” என்று கற்பகத்தை பவி சமாதானப் படுத்த.. கூட்டம் கலைந்து இருந்த போதும்.. மற்றவர்கள் வித்தியாசமாக பார்க்கக் கூடும்.. என்று கற்பகம் தன்னை போராடி கட்டுப்படுத்த முயற்சித்தார்.

“பவிம்மா.. நம்ம வீட்டுக்கு வா!!.. கொஞ்ச நேரம் பேசிட்டு போகலாம்”.. என்று கற்பகம் அழைக்க..

“இல்ல அத்தை இன்னொரு நாள் கண்டிப்பா வரேன்.

“எங்க அர்ஜுன் அப்பாவைக் காணும்??” என்று மாறன் கேட்க..

ஒரு பெரிய மூச்சை எடுத்துக் கொண்ட பவி.. “அவரு இப்ப எங்க கூட இல்ல!!” என்று சொல்ல..

“என்னம்மா சொல்ற!!.. அவரு எங்க போயிட்டாரு??”.. என்று கற்பகம் வேதனையுடன் கேட்க..

“அத்தை வேண்டாம் அத்தை!! அவரைப் பத்தி இப்ப பேச வேண்டாம்!!.. நானும் அர்ஜுனும் சந்தோசமா தான் வாழ்ந்துட்டு இருக்கோம்.”.. என்று நிறுத்திக் கொள்ள..

பவி வேதனையுடன் சொன்ன சொற்கள் மாறனுக்கு ஏனோ மயில் இறகால் வருடியது போல் இதமாய் இருந்தது.

“அத்தை நாங்க கிளம்புறோம்” என்று பவியும் அர்ஜூன்னும் விடை பெற்றுச் செல்ல..

பின் மாறன் குடும்பமும் வீடு திரும்பியது. விழா களைப்பில் வீட்டை அடைந்ததுமே அபிக் குட்டி தூங்கி விட.. மாறன் உடை மாற்றி வந்தான்.

அவன் மனதுக்குள் என்ன என்னவோ எண்ணங்கள் ஓட.. பவியின் கணவன் அவளுடன் இல்லை என்பது ஏனோ அவனுக்கு எல்லை இல்லா ஆனந்தத்தைக் கொடுத்தது.

அடுத்த நொடியே பாவம் அந்த அர்ஜுன்!! தந்தை இல்லாமல் வாழ்வது எவ்வளவு பெரிய துயரம். எத்தனை அவமானம் எத்தனை வேதனை என்று நெஞ்சு துடித்தது.

கற்பகம் பவித்ராவை சந்தித்து வீடு திரும்பியதில் இருந்தே சோர்வாகவும் அமைதியாகவும் தென்பட்டார்.

பாவம் அண்ணன் இறந்த துயரைத் தாங்க முடியவில்லை போல என்று அவருக்கு தனிமையைக் கொடுத்து ஒதுங்கி கொண்டான்.

மறுநாள் காலை அவன் எப்போதும் போல் பணிக்கு செல்ல..

“சார் இன்னைக்கு அந்த ஹிட் அன்ட் ரன் கேஸ் கோர்ட்ல விசாரணைக்கு வருது” என்று சற்குணம் சொல்ல..

அன்று கூண்டில் பவித்ரா முன் அவமானப்பட்ட நினைவு வர..

“சார் நீங்க வேணா கோர்ட்டுக்கு வர வேண்டாம். நாங்க ஏதாவது சொல்லி சமாளிச்சிக்கிறோம்” என்று சற்குணம் சமாதானப் படுத்த..

“அதெல்லாம் வேண்டாம் நான் வந்துருவேன்.!.. நீங்க அக்யூஸ்டைக் கூட்டிட்டு முன்னால ஜீப்பில் கிளம்பிடுங்க”.. என்று மாறன் சொல்ல..

சற்குணம் அதற்கான வேலையில் இறங்கினார். மாறனும் அந்தந்த ஃபைல்களைத் தயார் படுத்திக் கொண்டான்.

கோர்ட்டில் அன்றும் பவித்ரா சாமர்த்தியமாக வாதிட...

“எனது கட்சிக்காரர் திரு ராஜேஷ் அதிக வேகத்தில் வண்டியை செலுத்தி வந்து, இந்த விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டுகின்றனர். அவர் அப்படி வண்டி ஒட்டவில்லை என்பதற்கு எனக்கு புதிய ஆதாரம் கிடைத்து இருக்கிறது யுவர் ஆனர்!!.. “
என்ற பவித்ரா சில பேப்பர்களை நீதிபதியிடம் கொடுக்க..

“மை லார்ட்.. நான் கொடுத்த ஆதாரங்கள் எனது கட்சிக்காரர் திரு ராஜேஷ் நாற்பது கிலோ மீட்டர் ஸ்பீடில் தான் அன்று பயணித்தார் என்பதை சம்பவம் நடந்த இடத்துக்குச் செல்லும் முன் பொருத்தப் பட்டிருந்த ஸ்பீட் கேமரா வின் உதவியால் பெற்று உள்ளேன் யுவர் ஆனர்”

“இந்த ஸ்பீடில் எனது கட்சிக்காரர் காரை ஓட்டி வந்தால் அவர் அப்படி ஒரு விபத்தை நிச்சயம் ஏற்படுத்தி இருக்க வாய்ப்பே இல்லை யுவர் ஆனர்!!
எனது கட்சிகாரரிடம் காசை வசூலிக்க.. அவர் மீது வீண் பழி சுமத்தி..” என்றவளின் கண்கள் மாறனைப் பார்த்து விட்டு.. “பொய் சாட்சிகளைக் கொண்டு ஜோடிக்கப்பட்டிருக்கிறது இவ்வழக்கு யுவர் ஆனர்”.. என்று பவித்ரா இந்த முறையும் சாமர்த்தியமாக வாதிட்டு முடிக்க.. கேஷும் ஒத்தி வைக்கப்பட்டது.

“சற்குணம்.. அந்த வக்கீல் எதுக்குயா கோர்ட்டுக்கு வர்றாரு!.. அந்த வக்கீல் பவித்ரா பாயின்ட்ஸ் எடுத்து அடுக்குது.. இவரு என்னடான்னா அடுத்த ஹியரிங்கில் பார்த்துக்கலாம்னு ஒவ்வொரு தடவையும் சொல்றாரு!!..

சரி சற்குணம்!! அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லையாம். நான் வீட்டுக்கு போயிட்டு ரெண்டு மணி நேரத்துல வந்திடறேன்..” என்று ஜீப்பில் ஏறி அமர்ந்தான்.

வீட்டை அடைந்தவன் “அம்மா என்னம்மா பண்ணுது உங்களுக்கு.. வாங்க ஆஸ்பத்திரிக்கு போவோமா” என்று கேட்க..

அவன் வருகைக்காக காத்திருந்த கற்பகமோ..

“படுபாவி!!.. எங்க அண்ணன் மகள் வாழ்க்கையையே அழிச்சிட்டியேடா!! “ என்று கற்பகம் மாறனின் கன்னங்களில் மாறி மாறி அடிக்க..

தன் தாயின் திடீர் கோபத்துக்கு காரணம் புரியாத மாறன் “என்னம்மா ஆச்சு உங்களுக்கு!!.. நான் என்ன அவளை பண்ணேன்!!” என்று அவன் புரியாமல் கேட்க..

“ஒரு பாவமும் அறியாத பச்ச மண்ணோட வாழ்க்கையை இப்படி பட்ட மரமா ஆக்கிட்டியேடா!!.. இந்த பாவம் உன்னைச் சும்மா விடுமா??” என்று அவர் ஆக்ரோஷமாக கத்த..

மாறன் குழம்பிப் போனான். “ அம்மா நான் என்னம்மா பண்ணேன். எனக்கு நீங்க சொல்றது எதுவுமே புரியல” என்று அவனும் கத்த..

“ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்காதடா!!.. கல்யாணம் ஆகாத பொண்ண தாயாக்கிருக்கியே!!.. இது எவ்வளவு பெரிய பாவம்!!” .. என்று கற்பகம் கேட்க..

மாறன் கற்பகம் சொன்னதை நம்ப முடியாமல் விரைத்து நின்றான்.

------------
உங்கள் கருத்துகளை மறவாமல் பதிவிடுங்கள் தோழமைகளே. போன பதிவுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி.

தொடரும்

அன்புடன் லக்ஷ்மி.
 

Members online

No members online now.

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top