https://www.youtube.com/watch?v=0zK3tfgcDVk
முன்னுரை
பரந்து விரிந்திருக்கும் அந்த பெரிய வீட்டின் நடுவறையில் விசேஷம் நடைபெற்றுக் கொண்டிருக்க, வீட்டைச் சுற்றிலும் காவல்பணியில் நடமாடிக் கொண்டிருந்த காவலர்களையும் மீறி வீட்டினுள் புயலென நுழைந்தான் அவன்.
வருண் தேஸாய்.
பிஸ்னஸ் டைக்கூன் என்று தொழில் வட்டாரத்தில் பெயர்!
சாணக்கியன் என்று அரசியல் வட்டாரத்தில் புகழ்!
"சார், ப்ளீஸ். விசேஷம் நடந்திட்டு இருக்கு. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நான் எஸ்.எஸ்.பி. சாரிடம் பெர்மிஷன் கேட்டுட்டு வரேன்."
எவ்வளவோ முறை காவல் பணிக்குத் தலைமை வகிக்கும் காவல் அதிகாரிக் கூறியும் அடங்க மறுத்தவனாய் வீட்டின் முன்னறைக்குள் நுழைந்தவனின் சத்தத்தில் திரும்பினான் எஸ்.எஸ்.பி ஷிவநந்தன் ஐ.பி.எஸ்.
அங்கு தயவுதாட்சண்யம் இன்றி தனக்கு எதிரில் வருபவர்களை ஒரு கையால் பிடித்துத் தள்ளியவனாய் அதிரடியாய் நடந்து வருபவனின் வேகத்தில் அவனது ஆக்ரோஷத்தின் அளவை புரிந்து கொண்டான் ஷிவநந்தன்.
இது எதிர்பார்த்தது தான். ஆனால் இவ்வளவு சீக்கிரம் நடைபெறும் என்று நினைத்திராததில் முதலில் சற்று யோசித்தவன் பின் காவலதிகாரிகளை நோக்கி வருண் தேஸாயிற்கு வழிவிடுமாறு கையசைத்து கட்டளைப் பிறப்பித்தான்.
"நீ வருவன்னு எனக்கு தெரியும் வருண். ஆனால் இன்னைக்கே வருவன்னு எதிர்பார்க்கலை. Anyways, உன் வாழ்க்கையில் நடக்கும் முக்கிய விசேஷத்தை நான் தடை செய்யறதும், என் வாழ்க்கையில் நடந்துட்டு இருக்கிற விசேஷங்களை நீ தடுக்கிறதும் சகஜம் தானே."
கூறிய ஷிவநந்தன் சிறிய சிரிப்புடன், தொடர்ந்தான்.
"நமக்குள்ள என்ன மாதிரியான சந்திப்புகள் நிகழுதுப் பார்த்தியா வருண்? Do you think destiny is pre-written or do we make our own destiny?"
ஷிவநந்தனின் நக்கல் சிரிப்பு, அகோர கோபத்தில் உழன்றுக் கொண்டிருந்தவனின் உணர்ச்சிகளை மேலும் கிளறிவிட்டதில் ஆவேசத்துடன் அவனது சட்டைக் காலரை விருட்டென்று இழுத்துப் பிடித்தான் வருண் தேஸாய்.
"நீ நேத்து பிறந்தவன் ஷிவா, ஆனால் எங்க தேஸாய் குரூப்ஸ் பல வருடங்களுக்கு முன்னால் விதைகளாய் போடப்பட்டு விருட்சங்களாய் வளர்ந்து இப்போ ஒரு அடவியாய் நிற்குது. அதுல ஒரு கிளையைக் கூட உன்னால் உடைக்க முடியாது. உடைச்சா நீ இல்லாமல் போயிடுவ."
தன் சட்டைக்காலரை இறுக்கிப் பிடித்திருக்கும் வருணின் கரங்கள் மேல் தன் கையை இலகுவாகப் பதித்த ஷிவநந்தன், "பார்ப்போமா வருண்?" எனவும், "பார்ப்போண்டா. நீயா நானான்னு பார்த்திருவோம். ஆனால் அதன் முடிவில் நீ உயிருடன் இருக்க மாட்ட, அதையும் தெரிஞ்சுக்கோ." என்று அடித்தொண்டையில் சீறியவனின் கண்கள், ஷிவநந்தனிற்கு பின் புறமாக, மாடிப்படிகளின் நடுவில் நின்றிருந்த கன்னிகையின் மீதுப் படிந்தது.
சிரிப்பென்பதையே மறந்திருந்த அவனது உதடுகளின் கடையோரத்தில் குறுநகைப் படர்ந்தது.
****************************************
அந்த மெர்சிடிஸ் ஜி சிக்ஸ்டி த்ரீ [Mercedes g63 AMG] சுழல்காற்றையும் தோற்கடிக்கும் வேகத்தில் பார்க்கிங் லாட்டைக் கடந்து வணிக வளாகத்தை விட்டு வெளியேற, அதன் வேகத்திற்கு ஈடான விதத்தில் அவளது மூளையிலும் அடித்து அடித்து ஓய்ந்து கொண்டிருந்தன கேள்விகள் பல.
'என்னைப் பணயக் கைதியாகத் தான் இவர் எப்பவும் நினைச்சிட்டிருக்காரா? ஆண்களுக்குள் நடக்கிற யுத்தத்துல பொண்ணுங்களை பகடைக்காயா சிக்க வைக்கிறது இது முதல் முறை இல்லை தான். ஆனால் முடிவும் இல்லையா? அப்படின்னா திரும்பவும் ஒரு குருக்ஷேத்திரமா?'
"என்ன முகம் இப்படி ரெட் கலர்ல மாறி இருக்கு. எதிர்பாராதவிதமா திடீர்னு என்னைப் பார்த்ததில் வெட்கமா, இல்லை பார்க்கக் கூடாத எதையோப் பார்த்துட்ட மாதிரியான திகிலா."
தன் அருகில், அதாவது தன்னை உரசிக் கொண்டு வெகு அருகில் அமர்ந்து கிண்டலாக உரைப்பவனின் கூற்று அவளைச் சென்று சேரவே இல்லை.
மீண்டுமா என்று அரற்றியவாறே பேதையவளின் உள்ளம் உதிரத்தை வடித்த அதே வேளையில், அவளை இறுக்கப் பற்றியிருந்தவனின் இராட்சஷ பலத்தில் செக்கச்செவேலென கன்றிப் போனது அவளின் மெல்லிடை.
பெண்கள் என்றாலே பல அடிகள் தள்ளி நிற்கும் இளம் சாணக்கியன் என்று தேசம் போற்றும் அவனது அதீத நெருக்கம் மனதினில் பெரும் அச்சத்தை விளைவித்ததில் தேகம் அதிர அமர்ந்திருந்தாள் அவள்.
அது வைகறைப் பொழுது.
ஆங்காங்கு கண் சிமிட்டும் விண்மீன்களின் மெல்லிய வெளிச்சத்தைத் தவிர மனித நடமாட்டமே அல்லாத அவ்விடத்தைக் கண்டு அச்சத்தில் மனம் திடும் திடுமென அதிர, விழிகளிலிருந்து வழியும் நீரைத் துடைக்கவும் மறந்தவளாய் நின்றிருந்தவளின் நடுங்கும் விரல்களுக்குள் மீண்டும் தன் விரல்களை நுழைத்தான்.
வீட்டின் நடுவில் பசுமையான தென்னங்கீற்றாலும், மாவிலைத் தோரணங்களாலும், மலர்களாலும், கிழக்கு நோக்கி சூரியன் உதிக்கும் திசையைப் பார்த்து மணமக்கள் அமரும் வண்ணம் அழகாய் வீற்றிருந்தது மணவறை.
சுபமுகூர்த்த வேளை!
"பொண்ணு ரெடியாகிட்டா வரச் சொல்லுங்க."
தட்டில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம்பழங்கள் வைக்கப்பட்டு அதன் மீது மஞ்சள் கயிற்றில் கோர்த்திருந்த திரு மாங்கல்யம் கம்பீரமாய் காட்சியளிக்க, மணமக்கள் அமர்வதற்கு என்று போட்டிருக்கும் இருக்கைகளில் ஒன்றில் வருண் தேஸாய் அமர்ந்திருக்க, அவனுக்கு வலபுறமாக அமர வைக்கப்பட்டாள் பேதையவள்.
தலைமகன் தன்னினும், தமரினும் பெறாது, வலுக்கட்டாயமாகப் பெண்ணை அடைதல் என்ற எண்வகை திருமணங்களில் ஒன்றான இராக்கதம் திருமணம்!
மேள தாள ஓசையின்றி 'மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா' என்ற மந்திரத்தைப் புரோகிதர் ஓதிய சத்தத்தைத் தவிர வேறு ஓசை அங்கு எழவில்லை.
தன் முன் நீட்டப்படும் தட்டில் இருக்கும் மாங்கல்யத்தைக் கையில் எடுத்தவன், குனிந்திருந்த தலையை நிமிர்த்தாது விழிகள் கலங்கிய நிலையில் அமர்ந்திருந்தவளை விநாடிகள் சில ஆழமாகப் பார்த்துவிட்டு அவளது சங்குக் கழுத்தில் அணிவித்தான்!
மாங்கல்யத்தை அணிவித்தானா அல்லது அவள் மீதான தன் உரிமையைப் பறை சாற்றினானா?
உனக்கும் எனக்குமான பந்தம் முன்கூட்டியே விதியில் எழுதப்பட்டிருந்ததா அல்லது நான் நம் இருவரின் விதியை உருவாக்கினேனா?
'Do you think destiny is pre-written or do we make our own destiny?'
**************************************************************************
Book Release details:
ஃப்ரெண்ட்ஸ்,
என்னுடைய எட்டாவது நாவலான 'அரிமாக்களின் வேட்டை!' புத்தகத்திற்கான அறிவிப்புடன் வந்திருக்கேன்.
நவம்பர் 9-ஆம் தேதி முதல் புத்தகங்கள் கிடைக்கும்.
JB Series: JB- 8 : அரிமாக்களின் வேட்டை!- Hunt or Get Hunted!
புத்தகங்களை வாங்க விரும்புவோர் கீழே கொடுத்திருக்கும் விநியோகஸ்தர்களை அணுகவும்.
1. ப்ரியா நிலையம் - சென்னை
Phone: +91 94444 62284
2. JB site:
https://jlinebooks.com/product-category/bookstore/...
(அரிமாக்களின் வேட்டை புத்தகப்பக்கம் இன்னும் இரண்டு நாட்களில் ஆக்டிவ் செய்யப்படும்
JB Series: JB-8 : Book release by 9th November 2024
உங்கள்
ஜேபி