JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அ(ஆ)ழகா(மா)ய் ஓர் காதல் 💘 - அத்தியாயம் 2.

Priyadharshini.S

Active member
அ(ஆ)ழகா(மா)ய் ஓர் காதல் 2.

யாரென்று தெரியாத ஒருவன் மீது மோதியிருந்தாலும், ஆருயிக்கு அவனிடம் தான் சற்று அதிகமாக பேசிவிட்டதாகவேத் தோன்றியது.

அவளின் விளையாட்டுத் தனம் யாவும் வீட்டோடும், தனது தோழிகள் மற்றும் ஆதிக்குடன் மட்டும் தான். தன்னுடைய வகுப்பு மாணவர்களிடம் கூட ஒதுங்கியே தானிருப்பாள். வகுப்பில் முதல் மாணவி என்பதால் சந்தேகமென கிட்ட வரும் ஆண் பிள்ளைகளுடன் கூட, புத்தகத்தை தாண்டி எதுவும் பேச மாட்டாள். அப்படிப்பட்ட தானின்று ஒருவனிடம் பேசியது சற்று அதிகமென்றே கருதினாள்.

"இறுதியில் தான் திரும்பி நடந்ததும் அவன் ஏதோ முணுமுணுத்ததை போன்று இருந்ததே"

அர்ஜுன் கூறிய "ஐ லவ் யூ" அவளின் செவிகளைத் தீண்டவில்லை.

அன்று நடந்த போட்டித் திருவிழாவில் ஆருயி தான் கலந்துகொண்ட பேச்சு போட்டியின் முடிவிற்காக காத்திருக்க, மற்றொரு மேடையில் நடைபெற்றுக் கொண்டிருந்த பாட்டு போட்டியில் இவளின் பெயரை ஒலிவாங்கியில் அழைத்தனர்.

மரத்தடியில் ரிஷியுடன் அமர்ந்து ஆருயியை நினைத்துக் கொண்டிருந்தவனின் செவிகளில் கீதமாக அவளின் நாமம் ஒலிக்க, பாட்டு போட்டி நடக்கும் இடம் நோக்கி அர்ஜூனின் கால்கள் தானாக நகர்ந்தன.

மேடைக்கு அருகில் செல்லும்போதே அது அவளாகத்தான் இருக்க வேண்டுமென்று அவனின் மனம் துடித்தது. மற்றொரு மனமோ அவள் ஒருத்தி மட்டும்தான் ஆருயியா என்று கேள்வி கேட்டது.

உன் கேள்வி தவறென்பதை போன்று, ஒரு கையால் மைக் பிடித்து, மற்றொரு கையால் தொடையில் தாளமிட்டு, அத்தாளத்திற்கு ஏற்ப பாதத்தையும் தட்டியவாறு அவள் பாடத் துவங்கியது அவன் கண்களுக்கு நளினமாகத் தெரிந்தது.

குயில் போல் ஒலித்த அவளின் குரலில் முற்றிலும் தன்னை தொலைத்து முழுதாய் லயித்து நின்றவன், அவள் பாடி முடித்து நகர்ந்த பிறகும் அங்கேயே அசையாது நின்றிருந்தான்.

ரிஷியின் குரலில் நினைவு மீண்ட அர்ஜூன் தன் பார்வையை சுற்றி சுழல விட, ஆருயி இருப்பதற்கான எந்தவொரு அடையாளமும் அங்கில்லை.

"நான் தான் கனவில் மிதந்து கொண்டிருந்தேன், நீ அவள் எங்கே செல்கிறாளென்று பார்க்க வேண்டியது தானே டா"

"என்னது நான் பார்க்க வேண்டியதா???"

கடுப்பில் சிடுசிடுத்த அர்ஜூனிடம் அவ்வாறு கேட்ட ரிஷி.. உள்ளுக்குள், "உன் ஆளென்று தெரிந்த பின்னரும் அவளை பார்ப்பதற்கு எனக்கென்ன பைத்தியமா?" என்று அலறினான்.

"இங்கு தான் மச்சான் இருப்பாள், நன்கு தேடி பார்க்கலாம்" என்ற ரிஷி ஆருயியை தேடும் சாக்கில் அவனிடமிருந்து கழண்டு கொண்டான்.

மைதானத்தின் நடுவில் நின்றிருந்த அர்ஜூன் என்ன செய்வதென்று தெரியாது குழம்பினான்.

காலையில் அவளை பார்த்த பிறகு, ஆருயின் சீருடையை வைத்து அவளின் பள்ளியை அடையாளம் கொண்டதோடு சரி. மேலும் அவளைப்பற்றி தெரிந்துகொள்ள முயலவில்லை. அவளைப்பற்றி தகவல்களை சேகரித்து நேரத்தை வீணாக்குவதை விட, அவளை சைட் அடிப்பதே முக்கியமென்று இருந்துவிட்டான்.

ஆனால் இப்போது அங்கு அவளில்லை என்றதும், எப்படி உணர்கின்றோமென்றே அவனுக்கு புரியவில்லை.

இந்த வயதில் இது காதல் தானாயென்று சிந்திக்கும் நிலையையெல்லாம் தான் கடந்துவிட்டதாகவே எண்ணினான்.

'அர்ஜூனின் ஆழ்மனம் அவளுக்கான இந்த சிறு தேடலே காதல் என்பதை அழுத்தமாகக் கூறியது.'

அலைப்பாய்ந்து திரிந்து கொண்டிருந்த அவனின் கண்களில் சிறு மின்னல்,

ஆசிரியை அழைப்பதாக ஆருயியை அழைத்துச் சென்ற மாணவி அவனின் கண்களில் விழுந்தாள்.

மின்னலென விரைந்து அவள் முன் நின்றான்.

சற்றும் எதிர்பாராத அவனின் வருகையில் அதிர்ந்து இரண்டடி விலகி நின்றாள். அர்ஜூன் அவளின் அதிர்வையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.

"ஆருயி எங்கே?"

அர்ஜூனின் நேரடி கேள்வியில் அவனை ஒரு மாதிரி பார்த்தவள், காலையில் இவனுடன் ஆருயி நின்று பேசிக்கொண்டிருந்ததை நினைவு கூர்ந்ததும்.. தன் பயம் நீங்கியவளாக நிமிர்ந்து நின்றாள்.

அவன் இவ்வளவு உரிமையாக கேட்பதால் ஆருயிக்கு தெரிந்தவனென்று எண்ணியவளும், அவன் தன் முகத்தையே பார்த்திருப்பதை உணர்ந்து..

"அவள் வீட்டுக்கு போய்விட்டாளே" என்றாள்.

"ஏன்?"

போட்டிகள் இன்னும் முடியாத நிலையில் நண்பகலே தன்னவள் செல்ல காரணமென்ன என்பதை தெரிந்துகொள்ளும் வேகம் அவனின் ஒற்றை வார்த்தையில் வெளிப்பட்டது.

"அவள் கலந்து கொண்ட இரு போட்டிகளும் முடிந்துவிட்டது... அதனால் சென்றுவிட்டாள்."

சாதாரணமாக மொழிந்தவள், நடக்கத் தொடங்கினாள்.

சென்றுவிட்டாளா... அதற்குள்ளா.... தனக்குள் உழன்றவன், அப்பெண் நகர்வதை உணர்ந்து..

"நீ எந்த வகுப்பு?" எனக் கேட்டான்.

அவளோ "+1" எனக் கூறியதும் அவனுள் இனம் புரியா ஒன்று தோன்றி மறைந்தது.

'இது அர்ஜூனின் துரதிஷ்டமோ!!!!.'

பாட்டு பாடி முடித்து... அங்கெழும்பிய கரகோஷத்தில் புன்னகை முகமாக மேடையிலிருந்து கீழிறங்கியவளை எதிர்கொண்டார் சங்கரன்.

"மாமா நீங்க, இங்கு எப்படி?"

ஆருயி அவரின் வருகையை கேட்டு முடிப்பதற்குள்.. சங்கரனின் முகத்தில் தென்பட்ட பதட்டத்தை கவனித்தவள், வேறெந்த கேள்வியும் கேட்காது அவருடன் வீடு வந்து சேர்ந்தாள்.

உள்ளே நுழைந்தவளை வரவேற்றது பூரணியின் அழுகை ஒலி தான்.

என்னவென்று ஆருயி மாமாவின் முகம் பார்க்க, அவரோ... ராஜீவின் அறையை கண் காமித்தார்.

நொடியில் நடந்திருப்பதை யூகித்த ஆருயி, ராஜீவின் அறை கதவை தட்டினாள். எவ்வித எதிர்வினையும் உள்ளிருந்து வரவில்லை.

"மாமா"

அந்த ஒற்றை அழைப்பு போதுமானதாக இருந்தது. அறையின் கதவை நொடியில் திறந்தவன், கட்டிலில் சென்று அமர்ந்துக்கொண்டான்.

ராஜீவின் இந்நிலைக்கு காரணம் தெரிந்தாலும், அவனிடம் என்ன பேச வேண்டுமென்று ஆருயிக்கு தெரியவில்லை. அவன் இம்மாதிரி உடைந்து சோகத்தில் மூழ்கும் தருணங்களில் ஆருயின் முகம் அவனை சமன்படுத்துகிறது என்பதை அறிந்து கொண்டதால் அவள் அவனுடன் இருக்குமாறு சங்கரன் பார்த்துக்கொள்வார்.

மூன்று வருடங்களுக்கு முன்பு ஓர் நாள் உற்சாகமாக வெளியில் சென்ற ராஜீவ் வீடு திரும்பியது நள்ளிரவில் தான், முகம் வாட, உடை கசங்கி.. நலிங்கிய தோற்றத்தில் அவனை கண்ட சங்கரனும், பூர்ணிமாவும் பறிதவித்தனர்.

அவர்கள் இருவரும் என்னவென்று எவ்வளவோ கேட்டும் காரணத்தை சொல்லாதவன், அமர்ந்திருந்த சோபாவிலிருந்து எழுந்து கண்ணில் படும் பொருட்கள் அனைத்தையும் தரையில் போட்டு உடைத்தான். கைகளில் சிக்கியவற்றை தூக்கி எறிந்தான். உடைந்த கண்ணாடி பொருட்கள் குத்தி கைகளில் ரத்தம் வழிவதையும் காயம் ஏற்படுத்திய வலியையும் பொருட்படுத்தாது வீட்டையே அலங்கோலமாக்கினான்.

அவன் மனதில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்திட முடியாது... அது ஏற்படுத்திய தாக்கத்தால் என்ன செய்வதென்று தெரியாது கண்ணில் பட்ட உயிரற்ற பொருட்களிடம் தனது கோபத்தைக் காட்டிக்கொண்டிருந்தான்.

பொருட்கள் உடையும் சத்தம் கேட்டு, அறையில் உறங்கிக்கொண்டிருந்த பதினான்கு வயது ஆருயி கண்களை கசக்கிக் கொண்டே..

"அம்மா"

என்ற அழைப்புடன் வெளியில்வர, எப்போதும் அவளுக்கு முன்னோடியாக இருக்க வேண்டுமென்று கருதுபவன்.. தன்னை பின்பற்றி அவள் தீயதை செய்திட கூடாது என்பதில் கவனமாக இருப்பவன்... தான் தூக்கி வளர்த்த குழந்தையின் முன்பு கோபமேறிய கோர முகத்துடன் காட்சியளிக்க கூடாதென்று நொடியில் தன்னறையில் புகுந்துகொண்டான்.

உறக்க கலக்கத்தில் தரையிலிருக்கும் களேபரம் அறியாது கால் வைத்த ஆருயியின் பாதத்தினை கண்ணாடி துண்டு பதம் பார்த்தது.

வலியில் அலறிய ஆருயி ரத்தத்தை கண்டு மேலும் அலற, அறைக்குள் சென்று மறைந்த ராஜீவ் மின்னலென வெளியில் பாய்ந்து வந்தான்.

தான் குழந்தையாய் பாவிக்கும் ஜீவனின் வலிக்கு காரணமான தனது கோபத்தை அடக்கியவன்... அந்நொடியிலிருந்து தனது வலியை உள்ளுக்குள் புதைத்து வெளியில் சிரிக்க கற்றுக் கொண்டான்.

'நம் கோபம் நம்மைச் சார்ந்தோரையே தாக்கும்' என்ற நிதர்சனம் புரிந்ததில், 'வீண் கோபங்கள் யாவும் வலியை மட்டுமே கொடுக்கும் என்பதை அறிந்தான்.

இப்போதைய தனது நிலைக்கான காரணத்தை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளா விட்டாலும், அதனை மறைத்து வாழ முடிவு செய்தான்.

அன்று சங்கரன் உணர்ந்து கொண்டது தான் ராஜீவின் துக்கங்கள் யாவிற்கும் ஆறுதல் ஆருயி என்று,

அதனாலே ராஜீவ் இம்மாதிரி மனநிலையில் இருக்கும் போது அதற்கான காரணம் அறிந்திருக்காவிட்டாலும் ஆறுதலுக்கு ஆருயி அவனருகில் இருக்குமாறு பார்த்துக் கொள்வார்.

ஆருயின் ஒற்றை அழைப்பிற்கு கதவினை திறந்து வழிவிட்ட ராஜீவ் மெத்தையில் அமர்ந்து உள்ளங்கைகளால் முகத்தை மூடிக்கொண்டான்.

"என்னாச்சு மாமா"

அழுது சிவந்த விழிகளை அழுத்தமாக துடைத்தவன் ஆருயியை நிமிர்ந்து பார்த்து "மனிஷா" என்றான்.

ஆருயின் நினைவாக வீட்டிற்கு வந்து சேர்ந்த அர்ஜூன் உடை கூட மாற்றாது அமர்ந்துவிட்டான். ஒரே நாளில் தன்னை மொத்தமாக களவாடிய தன்னவளின் மீது காதல் பல்கிப் பெருகியது.

பெயர் தவிர ஒன்றும் தெரியாது. எப்படி அவளை அணுகுவது.. 'அர்ஜூனின் மனம் சிந்திக்க மறுக்க, மூளையோ வழியைத் தேடி அலைந்தது.'

அந்நேரம் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி மாலை சிற்றுண்டி உடன் அவன் முன் தோன்ற தன் பார்வையாலே அவரை எச்சரித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினான்.

வந்ததிலிருந்து அவனின் தடுமாற்ற செயல்களையும், அலைப்புறும் விழிகளையும், கலக்கம் சுமந்த முகத்தையும், தெளிவற்ற கோபத்தையும் கவனித்த அலமேலு யாருக்கோ கால் செய்தார்.

'அலமேலு அர்ஜூனின் தந்தை வழி பாட்டி.'

தலையை தாங்கியவாறு அமர்ந்திருந்த அவன் முன் வந்து நின்ற அலமேலு பாட்டி, பேரனின் தலை வருட, நிமிர்ந்து பார்த்தவன் மீண்டும் தலை கவிழ்ந்து கொண்டான்.

அர்ஜூனின் கையில் தொலைபேசியை திணித்தவர் அங்கிருந்து சென்றார்.

இணைப்பில் இருப்பவர் யாராக இருக்குமென்று யோசிக்க வேண்டிய அவசியமில்லாமல்,

"சொல்லு ஆதி" என்று தனது பேச்சினைத் துவங்கினான்.

"நீ தான் சொல்லணும் அஜூ"...

ஆதியின் வார்த்தையிலேயே தனது நிலையை பாட்டியின் மூலம் அவனறிந்திருக்கின்றான் என்பதை யூகித்த அர்ஜூன்,

காலையில் தான் பார்த்த பெண்ணைப் பற்றி மறைக்காது கூறினான்.

"ஒரு நாளில் இருமுறை பார்த்திருக்கின்றாய், அவ்வளவு தான்... 'கண்ணுக்கு பிடிக்கும் பெண்ணையெல்லாம்' நினைத்துக் கொண்டிருந்தால் இப்படி தான் தேவையில்லா சிந்தனைகள் தோன்றும்".

ஆதி தன்னுடைய கருத்தினை தெரிவிக்க..

"இவளை என் கண்ணுக்கு மட்டுமில்லை, மனசுக்கும் பிடிச்சிருக்கு ஆதிண்ணா" என்று அர்ஜூன் மறுத்தான்.

ஒரு நொடி அவனின் குரலில் தெரிந்த காதல் அழுத்தத்தில் ஆதியும் தடுமாறினான். அர்ஜூன் நெகிழ்ந்து மற்றும் தன்னால் விடையறிய முடியா தருணங்களில் மட்டுமே ஆதியை அண்ணா என்று அழைப்பான். ஆதலால் அர்ஜூனின் தற்போதைய மனநிலை ஆதிக்கு தெளிவாக புரிந்தது.

ஆனால் இது காதலிக்கும் வயதில்லையே... எனவே அர்ஜூனிற்கு பலவாறு எடுத்துக்கூறி புரிய வைக்க முயன்றான். 'பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.'

"நீ முதலில் பள்ளி படிப்பை முடி, அதன் பிறகு மற்றவற்றை பார்த்துக்கொள்ளலாம்."

இதுதான் எனது இறுதி கருத்து என்றான் ஆதி.

"ஆதிண்ணா ப்ளீஸ்"

அடுத்து என்ன எப்படி சொல்வதென்று அர்ஜூன் தடுமாற... ஆதி அமைதியை கடைபிடித்தான்.

சில நொடி மௌனத்திற்கு பிறகு,

"என்னால் இன்று ஒரு நாளைக்கே முடியவில்லை ஆதிண்ணா, மனசுல கல்லத் தூக்கி வச்ச மாதிரி பாரமாயிருக்கு, இதுக்கு மேலும் இந்த உணர்வை தாக்குப்பிடிக்க முடியுமென்று எனக்குத் தெரியவில்லை. அவளிடம் என் காதலை சொல்லி அவளது விடையறிந்த பின்னரே என் மனம் அமைதி கொள்ளுமென்று நினைக்கின்றேன்."

'அர்ஜூன் தன் உள்ளது நிலையை உள்ளவாறு ஆதியிடம் ஒப்புவித்தான்.'

"உண்மையில் இது காதல் தான் என்பதில் உனக்கு சந்தேகமில்லையா அஜூ?"

"நிச்சயமாக இதில் சந்தேகம் ஏதுமில்லை ஆதி, அவள் மீது பார்த்ததும் எனக்குள் எழுந்து என்னை சுருட்டி செல்லும் உணர்வு காதல் தான் என்பதை அந்நொடியே உணர்ந்துகொண்டேன்."

"என்னையும் அறியாது என் மனதின் வார்த்தைகள் 'ஐ லவ் யூ' என்று வாய் வழியாக வெளி வந்ததே, அப்போ இது காதல் தானே ஆதிண்ணா."

ஆதியாலும் அர்ஜூனின் காதலை புரிந்துகொள்ள முடிந்தது.

"அந்தப்பெண் உன் பள்ளி தான் ஆதி."

"என்னோட ஸ்கூலா???", சற்று யோசித்த ஆதி 'ம்' என்றான்.

"சரி அஜூ... நீ உன் விருப்பத்தை அப்பெண்ணிடம் தெரிவித்து, அவள் மறுத்தால்.. உன் காதலை மறந்துவிட வேண்டும்" என்ற ஆதி,

"எனக்கு என் தம்பி ரொம்ப முக்கியம்" என்றதோடு இணைப்பைத் துண்டித்தான்.

தாயில்லா அர்ஜூனிற்கு அனைத்தும் ஆதி தான். அஜூவின் சிறு குழப்பத்திற்கும் ஆதியிடம் விடை கிடைக்கும் என்பது அவனின் நம்பிக்கை. தந்தை தொழிலின் பின்னால் ஓட, அஜூ தன்னுடைய பாட்டி வீட்டில் வளர்ந்து வருகிறான்.

(ஆதி அஜூவிற்கு எவ்வழியில் உறவு என்பதை கதையின் போக்கில் தெரிந்து கொள்ளலாம்.)

'ஆதியிடம் ஆருயியை பற்றியும்... அவள் உன்னுடைய பள்ளி தான் என்பதையும் தெரிவித்த அர்ஜூன் அவளின் பெயரையும் தெரிவித்திருக்கலாமோ!!??.'

#LOVING YOU LIKE CRAZY

♥♥♥♥♥♥♥♥
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top