JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அ(ஆ)ழகா(மா)ய் ஓர் காதல் 💘 4.

Priyadharshini.S

Active member
ராஜீவ் மனிஷாவிற்காக காத்திருந்த நேரம், அவனை உரசியவாறு உயர் ரக கார் வாயிலை கடந்து வெளியேறியது.

காரினுள் மனிஷா தீபக்குடன்,

மலர்ந்த முகத்துடன்... அதீத சிரிப்புடன் தீபக்கின் தோளில் தலை சாய்ந்து இருக்கையில் அமர்ந்திருந்தாள். காரின் சன்னல் கதவுகள் திறந்திருந்ததால் உள்ளிருக்கும் இருவரையும் ராஜீவால் தெளிவாக பார்க்க முடிந்தது.

மனிஷாவை அந்நிலையில் பார்த்தவனால் என்ன நினைப்பதென்று அவனுக்கே தெரியவில்லை.

காதலிக்கும் பெண் மற்றொரு ஆணுடன் பேசினாலே அவளை தவறாக நினைக்கும் சாதாரண ஆணில்லை ராஜீவ்.

ஆனால் மனிஷாவின் நெருக்கம் அவனுள் பிரளயத்தை ஏற்படுத்தியது.

"ச்சீ.. ச்சீ... அப்படியெல்லாம் இருக்காது".

ஒரு மனம் அடித்து கூறினாலும் மற்றொரு மனமோ, அவர்களின் நெருக்கத்தை கண்டு குழம்பியது. இதயத்தில் சொல்ல முடியாத வலி பரவுவதை அவனால் உணர முடிந்தது.

மனிஷா மற்ற ஆண்களிடம் ஒதுங்கி செல்வதைத்தான் பார்த்திருக்கிறான். அவளின் ஒதுக்கம் யாரோ ஒருவனின் மீது வீசப்படும் வலையாக அவள் நினைக்க, ராஜீவின் கண்ணிற்கு அது அமைதியான அடக்கமாகத்தான் தெரிந்தது.

ராஜீவின் கண்களில் வலி அப்பட்டமாக நிறைந்திருக்க.. சொல்ல முடியாத வேதனையுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

தீபக்குடன் செல்லும்போது, தனக்காக காத்திருக்கும் ராஜீவை கண்டுகொண்டாலும், அவனை அலட்சியம் செய்தவளாக சென்றுவிட்டாள். இருப்பினும் அவனிடம் தோன்றிய உணர்வு மாறுதல்களை புரிந்து கொண்டவளால், இப்படியே அமைதியாக ராஜீவை தவிர்ப்பது இயலாதென கணக்கிட்டு அவனிடம் பேச முடிவு செய்து தூங்க முயற்சித்தாள்.

ஆனால், தூக்கம் தான் வரவில்லை. மாறாக தீபக்கின் தவறான தொடுகையும், செய்கைகளுமே மனதில் தோன்றி இம்சை செய்தது.

'ஒருவன் தன்னை எந்த நோக்கில் தொடுகிறான் என்பதை உணராத அளவிற்கு அவள் சிறுமியல்லவே', தெரிந்தே சகித்துக்கொண்டாள். அதற்கு காரணம் அவளுக்கான தீபக்கின் கணக்கிலடங்கா செலவுகள்.

ராஜீவின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றைய தினத்தில் தானெடுத்த முடிவாக மறுநாளே மனிஷா தீபக்கை சந்தித்தாள்.

தீபக் கல்லூரிக்கு வருவதே சைட் அடிப்பதற்கு தான். மிகப்பெரிய கோடீஸ்வரரின் ஒரே வாரிசான அவனுக்கு படிப்பு முக்கியமல்ல. பள்ளி பருவத்திலேயே அனைத்து விதமான தீய பழக்கங்களையும் அனுபவித்தவன்.

'பதினேழு வயதிலேயே பெண் சுகத்தையும் அறிந்தவன்.'

'அவனிடம் வலிய வரும் பெண்களை விட, விருப்பமின்றி பெண்ணை இச்சைக்கு ஆட்படுத்துவதில் தான் அவனுக்கு விருப்பம் அதிகம்.'

முதன் முதலாக மனிஷாவை தீபக் கண்டதும், அவனின் நாடி நரம்புகள் அனைத்தும் அவள் வேண்டுமென துடித்தது.

அவளின் அழகு தீபக்கை பித்துக்கொள்ள செய்ய, அமைதி அவளிடம் தான் அதிகம் போராட வேண்டியிருக்குமென்று தோன்றியது.

மற்ற பெண்களிடமிருந்து அவள் தனித்து தெரிய.. அவளைப்பற்றி அனைத்து தகவல்களையும் அடுத்த இரண்டு நாட்களில் தானே சேகரித்தான். அவன் அறியாத ஒன்று மனிஷாவின் பணத்தின் மீதான மோகம்.

தனது ஆசையை தன் மனம் தவிர வேறு யாரிடமும் அவள் பகிர்ந்து கொள்ளாததால் தீபக்கிற்கு அவளின் எண்ணம் தெரியாமல் போனது.

கட்டாயப்படுத்தி சுகிப்பதில் சுகம் அதிகமென்ற தனது ஆசைக்கு மனிஷா சரியாக இருப்பாளென்று நினைத்தவன் அவளுக்காக காத்திருக்கத் தொடங்கினான். அவளின் குணமறியாது.

மற்ற ஆண்களிடம் மனிஷா பழகியிருந்தாலாவது அவளும் மற்ற பெண்கள் போல் சாதாரணமாக தெரிந்திருப்பாளோ எண்ணவோ.. ஆண்களிடம் அவள் காட்டும் ஒதுக்கமே தீபக்கை மனிஷாவை அனுபவிக்க வேண்டுமென்ற ஆசையை வெறியாக்கியது.

மனிஷாவை கடத்தி சென்று அவளின் வாழ்நாள் முழுக்க தன்னுடனே வைத்துக்கொள்ள வேண்டுமென்று நினைத்தானேத் தவிர அவளை மணந்துகொள்ள வேண்டுமென்று எண்ணவில்லை.

பணக்கார மற்றும் அவன் மீது விழும் பெண்களிடம் அவன் காணாத மனிஷாவின் பேரழகு தினம் தினம் அவனின் வெறியை அதிகரித்தது.

எப்படியும் அவளை நாளை கடத்திட வேண்டுமென்ற நிலையில் அவனிருக்க, இன்று தன் காதலை மனிஷா தீபக்கிடம் சொல்ல,

'ச்சீ... ச்சீ... இந்தப் பழம் புளிக்கும்.'

என்று தான் அவனுக்குத் தோன்றியது.

தட்டி பறிப்பதில் சுகம் கண்டவன், தானாக வந்ததும் அவளை கண்டுகொள்ளாது விட்டுவிட்டான்.

ஆனால், மனிஷாவின் மீதான மோகம் நாளுக்கு நாள் குறையாது அவனை தனது சுயமிழக்கச் செய்தது. இறுதியில் அவளாக வந்தால் என்ன, எப்படியிருந்தாலும் தனது இச்சை தீர்ந்தால் போதுமென்ற நிலைக்கு வந்திருந்தான்.

தீபக் காதல் கூறி அவளை தன்வசம் வைத்துக்கொள்ள வேண்டி, மனிஷாவை சந்தித்தான்.

காதலை பகிர்ந்து கொண்டதோடு சரி... சராசரி காதலர்கள் போல் அல்லாது விலகியே இருந்ததால் மனிஷா ராஜீவின் காதல் தீபக்கிற்கு மட்டுமல்லாது கல்லூரியில் பிற மாணவர்களுக்கும் தெரியாமல் போனது.

மனிஷா - தீபக் சந்திப்பு:

மனிஷா மீண்டுமொருமுறை தீபக்கிடம் காதல் வசனம் பேசி பார்க்கலாமென்று அவனைத் தேடி தன்னுடைய பார்வையை சுழற்ற, தீபக்கே மனிஷாவை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

என்ன பேசுவதென்று அறியாது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்திருக்க,

"ஐ நீட் யூ மனிஷா" என்றான்.

காதலின்றி காமமாக மட்டுமே அவன் அவளை வேண்டினான்.

அவனின் பணத்தின் மீது மட்டுமே குறியாய் இருந்தவளுக்கு அவன் காதலை சொல்லாது "நீ எனக்கு வேண்டும்" என்று இரட்டை அர்த்தத்தில் சொன்னதின் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொள்ளாது மகிழ்ச்சியில் புன்னகை சிந்தினாள்.

மனதிற்குள் தன் திட்டம் நிறைவேறியதை எண்ணி குத்தாட்டம் போட்டாள்.

அந்நொடி உண்மையான காதல் எது என்பதை அவள் மறந்தாள். குற்றவுணர்வு சிறிதுமின்றி தீபக்குடன் உல்லாசமாக சுற்ற ஆரம்பித்தாள்.

ஐந்து நாட்களுக்குள் மனிஷாவை தன் பணத்தின் வளமை கொண்டு தனக்கு அடிமையாக்கினான் தீபக்.

மனிஷா தெரிந்தே புதை குழியின் ஆழத்தை நோக்கி மெல்ல இறங்கி கொண்டிருந்தாள்.

இந்த ஒரு வார காலத்திற்குள்ளாகவே தீபக் மனிஷாவின் மீதான பண மோகத்தை கண்டுகொண்டான். அவளும் தீபக் அவள் மீது கொண்ட மோகத்தை அறிந்தாள். அவனின் "தன் மீதான மோகமே தனக்கு பலமான ஆயுதம்" என்று எண்ணியவள் அதனை கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள்.

தீபக்கை எப்போதும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க, தனது குடும்ப நிலை மறந்து.. பெண்ணென்ற எண்ணம் சிறிதுமின்றி தெரிந்தும் தெரியாமலும் தன்னுடைய பெண்மை வனப்புகளை அவனுக்கு காட்டிக் கொண்டிருந்தாள்.

தீபக்கும் அவளின் பார்க்க முடியாத அழகை பார்க்க எண்ணி தவியாய் தவிக்க.. அவனை தன் பின்னால் மனிஷா பைத்தியம் பிடிக்க செய்து சுற்ற வைத்தாள்.

தான் அருகில் சென்றாலே தன்னை பார்வையாலே துயிலுறிக்கும் தீபக்கின் பார்வையில் அவளால் புதைக்கப்பட்ட பெண்மை கூசிப்போகும். இருப்பினும் அவனிடமிருந்து பரிசாகக் கிடைக்கும் ஆடம்பர பொருட்களுக்காக அவற்றையெல்லாம் சகித்துக்கொண்டு அவனுடன் பழக ஆரம்பித்தவளுக்கு அதுவும் பழகிப்போனது.

மனிஷாவின் குணமறிந்து தீபக்கும் அவளுக்கு பரிசு என்கிற பெயரில் ஆடைகள், நகைகள், என்ற ஆடம்பரப் பொருட்களை வாரி வழங்கினான்.

இவற்றையெல்லாம் நினைத்து பார்த்தவளுக்கு ராஜீவால் எங்கே தனது செழிப்பு நிலை பறிபோகுமோ என அஞ்சி தன் வீட்டு தெருமுனையில் இருக்கும் பூத்திலிருந்து ராஜீவிற்க்கு போன் செய்தாள்.

நாளை உன்னிடம் பேசியே ஆக வேண்டும் லைப்ரரிக்கு அருகிலிருக்கும் மரத்தடியில் கல்லூரி முடிந்த பிறகு சந்திக்கலாம் என்றவள் ராஜீவின் பதிலை கூட கேட்காது தொலைபேசியை வைத்துவிட்டாள்.

மனிஷா தன்னிடம் பேச விரும்புவதை யூகித்தாலும் அவள் சொல்லிய நேரத்திற்கு சரியாக அங்கு காத்திருந்தான்.

ராஜீவை எப்படி சந்திப்பது, அவனிடம் என்ன பேசுவதென்று சிறு பதட்டம், குற்ற உணர்வு ஏதுமின்றி அவன் முன் ஜாம்பமாக வந்து நின்றாள்.

அவளை ராஜீவின் பார்வை அளவிட்டது.

மனிஷா எப்போதும் அணியும் பாவாடை தாவணி, ஜீன்ஸ் ஸ்லீவ்லெஸ் டாப்புமாக மாறியிருந்தது. நீண்டு பின்னலிடப்பட்டு சாட்டையென காட்ச்சியளிக்கும் கூந்தல் ஸ்டைலாக வெட்டப்பட்டு தோள் வரை மட்டும் தொங்கி காற்றில் அலை பாய்ந்தது.

அவளின் வெளித்தோற்றமே ராஜீவிற்கான பதிலை சொல்லிவிட.. அவளிடம் எதுவும் பேசாது திரும்பி நடந்தான்.

அவனின் அமைதி முதல் முறையாக குற்றவுணர்வினை அளிக்க,

"ராஜ்" என்று விளித்தாள்.

தனது நடையை நிறுத்தினானே தவிர அவளை திரும்பியும் பாராது,

"நன்றாக இரு, தீபக்கிற்காவது உண்மையாக இரு" என்றதோடு அங்கிருந்து விடுவிடுவென சென்றுவிட்டான்.

உண்மையாக இரு என்ற வார்த்தையில் ராஜீவ் கொடுத்த அழுத்தம் ஒரு நொடி அவளை அதிரத்தான் செய்தது. அடுத்தநொடியே தன்னுடைய வேலை சுலபமாக முடிந்து விட்டதென்று நிம்மதி கொண்டாள்.

விதி அவளுக்கும் பதில் சொல்ல காத்திருக்கிறது என்பது அவளுக்கு அப்போது தெரியவில்லை.

அவளின் வாழ்வு அவளாக தேடிக்கொண்டது.

அதன் பிறகு ராஜீவ் மனிஷாவை பார்க்க கூட முயலவில்லை. தன் குடும்பம், தன் தொழிலை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முழ மூச்சாய் முயன்று வெற்றியும் கண்டான்.

ஆனால், தற்செயலாக மனிஷாவை காண நேரும் சமயங்களில் தன் சுயமிழந்து நொருங்கிப் போவான்.

இன்றும் அதே போல் தான்......

துணி எடுக்க தீபக்குடன் தனது கடைக்கு வந்திருந்த மனிஷாவை கண்டவனின் காதல் மனம் வலியை பிரதிபலிக்க கடையில் இருக்க முடியாது வீடு வந்தவன் அறையில் சென்று முடங்கிவிட்டான்.

ராஜீவின் இந்நிலைக்கு காதல் தான் காரணமென்று.. ஆருயி விவரம் தெரிந்த பிறகு உணர்ந்து கொண்டாள்.

அந்த முகம் தெரியாத பெண் மீது ஆருயிக்கு கோபம் தான் வந்தது. ராஜீவ் போன்றொரு நல்லவன் தேடினாலும் கிடைக்காதே, கிடைத்தவனை தொலைத்து விட்ட முட்டாளாகவே மனிஷாவை கருதினாள்.

'ஆனால்... இத்தகைய நல்லவனால் தான் தன் வாழ்வு வலி நிறைந்த பாதையில் பயணிக்க போகிறது என்பதை பேதையவள் உணரும் காலம் வெகு அருகில் வந்து கொண்டிருந்தது.'

வலியை சுமந்து, சிவந்த விழிகளுடன் அமர்ந்திருப்பவனுக்கு எப்படி ஆறுதல் கூறுவதென்று தெரியாது ஆருயி கலங்கி நின்றது ஒரு கணம் தான்....

அடுத்த மணித்துளிகளில் தன்னை சமன் செய்தவள்.. தான் வயதில் அவனை விட மிகக் சிறியவள் என்பதை மறந்து ராஜீவிற்க்கு ஆறுதல் கூற விழைந்தாள்.

ராஜீவின் முன் மண்டியிட்டு அமர்ந்து அவன் கரங்களுக்குள் தன் கரத்தை வைத்தவள்,

"மாமா" என்றழைத்து ராஜீவின் கவனத்தை தன் பக்கம் திருப்பினாள்.

ஆருயின் வருத்தம் தோய்ந்த முகத்தினை கண்டவன், துடிக்கும் இதயத்தின் வேகத்தை கட்டுப்படுத்தி...

"எனக்கு ஒன்றுமில்லை டா" என்க...

"நீ கல்யாணம் பண்ணிக்கோ மாமா" என்றாள்.

அவள் என்ன சொல்கிறாள் என்பது புரியாது பார்த்தவன், புரிந்ததும் தன்னுடைய காதலுக்கு துரோகம் செய்வதா என்று பதறினான்.

காதலை மறந்து மனிஷா வேண்டுமானால் சென்றிருக்கலாம்... ஆனால், இன்று வரை அவள் மீது தான் கொண்ட காதல் அப்டியேத்தானே இருக்கிறது. தான் வேறொரு பெண்ணை மணந்து கொண்டால் அது தன்னுடைய காதலுக்கு செய்யும் துரோகமாக கருதியவன்,

"என்னால் முடியாது" என்றான், மிக அழுத்தமாக..

அந்நேரம் அறைக்குள் நுழைந்த சங்கரன்,

"நீ விரும்பிய பெண்ணே உன்னை மறந்து வேறொருவனுடன் நிம்மதியாக வாழும் போது நீ ஏன் அவளை நினைத்து உன் வாழ்வை வருத்திக்கொள்ள வேண்டும்."

தந்தையின் கூற்றை ராஜீவ் ஏற்கனவே சிந்தித்திருந்தான். ஆனால், அவனின் மனதில் புரையோடியிருக்கும் காதலை அவனால் விலக்கி வைக்க முடியுமென்று தெரியாததால் தடுமாறி நிற்கின்றான்.

"காயத்தை ஏற்படுத்தியது ஒரு பெண்ணாக இருக்கும் போது அதற்கு மருந்தாகவும் ஒரு பெண்ணால் மட்டும் தான் முடியும் ராஜீவ்."

பூர்ணிமா ராஜீவின் கன்னத்தை ஆதுரமாக தடவியவாறு கூற,

"ப்ளீஸ் மாமா, உன்னால் தான் நம் குடும்பம் சந்தோஷமாக இருக்கிறது.. சந்தோஷத்திற்கு ஆணி வேரான நீ சோகமாக இருப்பதை எங்களால் எப்படி ஏற்க முடியும்... வாழ்க்கைத் துணையை நமக்காக மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டுமென்பது தெரியும்.. இருந்தாலும் உன் தேர்வு தவறான பின், மாமாவின் தேர்வு சரியாக இருக்குமென்று நினைத்து ஒப்புக்கொள் மாமா".. என்ற ஆருயி அவனிடம் கெஞ்சினாள்.

தான் மடித்தாங்கி வளர்த்த பிள்ளை கெஞ்சுவது பிடிக்காமல், தன் தந்தையை ஏறிட்டு பார்த்தான் ராஜீவ்.

அவரின் கண்கள் திருமணத்திற்கான அவனின் சம்மதத்தை எதிர்பார்த்து யாசிக்க...

"சரிப்பா, பெண் பாருங்கள்"... என்றான்.

தன்னவர்களுக்காக முயன்று முகத்தில் புன்னகையை படர விட்டான்.

திருமணத்தில் நடக்கவிருக்கும் களேபரம் அறியாது நால்வரும் அந்நொடி மகிழ்ந்திருந்தனர்.

தான் ஆடப்போகும் விளையாட்டை எதிர்நோக்கி காலம் நகர ஆரம்பித்தது.


#FOREVER AND ALWAYS 💘

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top