JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஆலமரத்துப் பறவைகள் : அத்தியாயம் 3 & 4

Uthaya

Member
ஆலமரத்துப் பறவைகள் : அத்தியாயம் 3 & 4



3​

வீட்டின் நான்கு சுவர்களுக்குள் தன் மனைவி தன்னைத் திட்டி தீர்த்து எள்ளி நகையாடிக் காறித்துப்பிவிட்டாலும், வெளிப்படைக்கு எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருப்பது போல் காட்சி அளித்தால் போதும் தங்கச்சாமிக்கு, அவன் அதை சரி என்று ஏற்றுக்கொண்டிருப்பான். மனைவியிடம் வசவு வாங்காத கணவன் உண்டா என்ன? அவனுக்கு அது தெரியாதா என்ன? ஆனால் அவன் கதையே வேறு. அவன் குட்டு வெளிப்பட்டு நடுத்தெருவுக்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டிருந்தன.

அவனை எல்லோரும் எப்பொழுதும் கேலி செய்வது போன்றே தோன்றிற்று அவனுக்கு. ஊரில் ஒரு சுடு குஞ்சி கூட அவனை மதிப்பதில்லை என்பதுதான் அவனுடைய ஏமாற்றம். ஊரில் நல்லவர்கள்கூட அவனை கிள்ளிப்பார்ப்பதாய் தோன்றும் அவனுக்கு.

ஏன், ஊரிலேயே நல்லவர் என்று பெயரெடுத்த, யாருக்கும் உதவி செய்ய மறுக்காத மேலத்தெரு செல்லையா வாத்தியார் கூட, தன்னை தங்கச்சாமி என்று அழைக்காமல், ‘தங்கம்’ ‘தங்கம்’ என்று தன்னை ஒரு பெண்ணை அழைப்பது போல் அழைத்தது அவனுக்குப் பிடிக்கவே இல்லை. அவர் பெரியவர், யார் வம்புக்கும் போகாதவர். அவரிடம்போய் எப்படிச்சொல்வது என்று தெரியாமல் விட்டுவிட்டான். இருப்பினும் அவரும் இந்த ஊர் மக்களோடு சேர்ந்து கொண்டு தன்னை ஒரு பொண்ணையனாக கருதுகிறாரோ, என்ற எண்ணம்தான் துக்கத்தைத் கொடுத்தது. என்ன செய்வான் அவன், யாரிடம் போய்ச் சொல்லி அழுவான்? எல்லோரும் இரட்டை அர்த்தம்படவே பேசுவதுபோல் தோன்றிற்று தங்கச்சாமிக்கு.

எதிர்வீட்டு செண்பகம் சித்தி, “ஏ... தங்கம். இங்க வா.. இந்த ரசத்தில உப்பு சரியா இருக்காண்ணு பாத்துச்சொல்லு. எனக்கு ரெண்டு நாளா தடுமம், ருசியே தெரியமாட்டேங்குது,” என்று கூப்பிட்டாள். தன்னை ஏன் கூப்பிடவேண்டும், தன் வீட்டில் சமையல் எல்லாம் அவன்தான் செய்வான் என்பதைச் சுட்டிக்காட்டுகிறாளோ சித்தி, என்று நினைத்து கொந்தளிக்கும் தங்கச்சாமியின் மனம். சில நேரங்கள்களில் ஓ என்று வாய்விட்டு அழவேண்டும் போல் தோன்றும் அவனுக்கு. அப்போது அடக்கிக்கொண்டாலும் யாருமில்லாதபோது கண்ணீர்விட்டு அழுவான். மாடு மேய்க்கும்பொழுது காடு கரைகளில் யாருமில்லா வேளைகளில் கதறி அழுவான். என்று தணியும் இவன் சோகம்?

ஆனால் கேவலம் அந்த அமலிச் சிறுக்கி செய்ததுதான் அவனை ஊரில் ஒரு பெரும் கேலிப்பொருளாய் ஆக்கிவிட்டது. அன்று அவள் பேசிய பேச்சும், எள்ளி நகையாடிய விதமும் இன்றும் மறக்கவில்லை அவனுக்கு. சொல்லிவிட்டுப் போகட்டும், சிரித்துவிட்டுப்போகட்டும். எல்லோரிடமும் ஏன் தம்பட்டம் அடிக்க வேண்டும். ‘சிறுக்கி வௌங்காமத்தான் போவா,’ என்று மனதுக்குள்ளேயே சாபமிட்டான் அன்று.

அந்த நாள் அவன் மனம் பொருமியது ஞாபகம் வந்தது, ‘பொம்பள ஒண்ணுக்கு போனா ஒரு தடுப்பில, ஒரு மறவில போவா. இந்த அமலி தொட தெரிய குதிங்காலிட்டு நாலு பேரு வார வழியில ஒண்ணுக்கு போய்க்கிட்டு இருக்கா. நான் என் வழியில போய்க்கிட்டு இருக்கேன். சுவருக்கு அந்தப்பக்கம் இருக்கிறவரைக்கும் இந்தச்சிறுக்கி உக்காந்துக்கிட்டு இருக்கிறது தெரியல. அந்த சுவரு முக்கு திரும்பினா இவ உக்காந்துகிட்டு இருக்கா. டக்குண்ணு எந்திரிக்க வேண்டாமா நல்ல பொம்பளயா இருந்தா. இவ உக்காந்து ஒண்ணுக்கு போயிக்கிட்டே இருக்கா. சரி வெவுசாரி போயிட்டு போறாண்ணு நாம்பாட்டுக்கு என் வழியில போனா இவ சும்மா இருக்க வேண்டியதுதான. ‘யோவ் தங்கம்,’ ண்ணு என்ன கூப்பிட்டு ‘யாரும் ஆம்பிள வந்தா சொல்லும்,’ ங்கா.

நான் ஆம்பிள இல்லயாடீ? எம் முன்னால இப்படி இருக்கலாமா, வெக்கமா இல்லையா? ண்ணு சொல்ல வந்தத கட்டுப்படுத்திக்கிட்டேன். ஆனாலும் அந்த வெவுசாரிக்கு எம்மன ஓட்டம் எப்பிடித்தான் தெரிஞ்சதோ. ‘ஒம்மக்கண்டு எனக்கு என்ன வெக்கம். வேற நல்ல ஆம்பிள எவனும் பாத்திரப்போறான். அங்கின நிண்ணு ஆள் பாரும். ஒரே ஒரு நிமிசம்தான்,’ ண்ணு சொல்லி கொல்லுண்ணு சிரிச்சா.

அப்பம்பாத்து அவளுக்கு அடுத்த வீட்டு லெச்சி (லெச்சுமி) வர ரெண்டு பேரும் சேந்து ஊர்பூராம் தம்பட்டம் அடிச்சிட்டாளுக. இப்பம் எல்லாப்பயலும் என்ன கண்டா சிரிக்கான்.

இவ, எம் பெண்டாட்டி, என்னண்ணா, ‘பொம்பள ஒண்ணுக்கு போற இடத்துக்கு ஏன் போரையறு’ ண்ணு நான் ஏதோ வேணுமின்னே போனது மாதிரி சொல்லுதா. சொன்னதோட விடாம ஒரு நமட்டுச்சிரிப்பு வேற.’

தற்போது தன் எதிரே நிற்பது அதே அமலியும், லெச்சியும்தான் என்பதை தங்கச்சாமி அறிந்தான். அமலியின் சேலை முக்கால்வாசி வெந்துவிட்டிருந்தது. மிச்சம்மீதியிருந்த சேலையிலிருந்து புகை வருவதை அப்போதுதான் உணர்ந்தான் தங்கச்சாமி.

“அங்கேயே நில்லுடி,” என்று ஒரு அதட்டுப் போட்டவன், வீட்டுக்குள் விரைந்தான். ஒரு வினாடியில் தண்ணீர் குடத்துடன் வந்தவன் அக்குடத்தை அமலியின் தலையில் கவிழ்த்தான்.

பின், “உள்ள போடி,” என்றான்.

அவன் குரலில் இருந்த ஆண்மைத்தனத்தைக் கேட்ட அமலி லெச்சி மட்டுமல்லாமல், மைதிலியும்கூட கண்களை விரித்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றனர்.

“உள்ள போண்ணு சொல்லுதேன்,” என்று அதட்டினான் தங்கச்சாமி, மீண்டும்.

அமலி மட்டுமல்ல, லெச்சியும் மைதிலியும் வீட்டுக்குள் அவசர அவசரமாக ஓடிச் சென்றனர். ஆணையிடுவது தன் கணவன்தானா என்பதுபோல் மைதிலி அவனை மேலும் கீழும் பார்த்தாள். ஆனால் அவன் பார்வை அவள் மீது இல்லை.

விளக்கொளியில் அமலியின் சேலை அனேகமாக வெந்துவிட்டது தெரிந்தது. அவளின் இடது தொடை இடுப்புவரை திறந்து கிடந்தது மட்டுமில்லாமல், அவளது இடது மார்பகம் ஒரு அனாதை போல் கிடந்ததை அப்பொழுதுதான் பார்த்தனர்.

தங்கச்சாமி தன்னைப் பார்த்த்துவிட்டான் என தெரிந்ததும் அமலி வெட்கித்தலை குனிந்தாள். அவள் சட்டென்று தரையில் அமர்ந்து தன் அங்கங்களை மறைக்கப்பார்த்தாள்.

ஏனோ அவளுக்கு அதுவரை வராத அழுகை மடைதிறந்த வெள்ளம்போல் வந்தது. அழுது கொண்டே, “என்ன மன்னிச்சிருங்க,” என்றாள்.

“சரி, சரி. மைதிலி, ஏன் பாத்துக்கிட்டு நிக்க, அவளுக்கு வேற சேலை ஒண்ண குடு. தீப்பட்ட இடத்தில தேங்காய் எண்ணையப் போடு.” என்று ஆணையிட்டவன், வீட்டைவிட்டு வெளியேறியது மட்டுமல்லாமல், கதவைச் சாத்திவிட்டும் போனான்.

இவன் ஒரு மண்ணாந்தை என்று இத்தனை நாட்களாய் நாம் நினைத்திருந்தோம், இவன் இத்தனை தெரிந்தவனா, என்பதைப்போல் மூன்று பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்துத் திகைத்து நின்றனர்.




4



அடுத்த நாள் விடிய ஊரில் போலீஸ் ஜீப் அங்கும் இங்கும் விர் விர் என்று கரும் புகையைக் கக்கியவண்ணம் சென்றது. பெண்களும் குழந்தைகளும் சன்னலுக்கு உள்ளேயோ அல்லது சுவர் மறைவிலோ நின்று பயந்துகொண்டே பார்த்தனர். ஏதோ தங்கள் முகத்தைப் பார்த்துவிட்டால் தங்களையும் பிடித்துக்கொண்டு போய் காவல் நிலையத்தில் வைத்து அடித்து உண்மையைக் கக்க வைத்து விடுவார்களோ என்ற பயம்.

ஏன் ஆண்களும்கூட வெளிக்காட்டிக் கொள்ளவில்லை தங்கள் முகத்தை, ஏன் வம்பு என்று. ஒரு சில விபரம் தெரிந்த மக்களும், அரசாங்க வேலை பார்க்கும் ஆசிரியர்கள் போன்றவர்களும், விட்டியான், தலையாரி, மற்றும் ஊர் பெரியவர்கள் தவிர, தெருவெல்லாம் வெறிச்சோடிக் கிடந்தது.

இரண்டு தெருக்களில் கூரைகளும் வீட்டில் இருந்த சாமான்களும் எரிந்து சாம்பலாகிவிட்டிருந்தன. மண் சுவர்கள் மட்டும் கட்டமண்ணாய் நின்று சிரித்தன. போலீஸ் கணக்கெடுப்பில் 21 வீடுகள் எரிந்து சாம்பலாகி விட்டன. மேலும் ஒர் உயிர் விடை பெற்றுக்கொண்டதும் எல்லோருக்கும் தெரியும். கூடவே அருவாள் வெள்ளச்சாமி தலைமறைவாகி விட்டதும் தெரியும்.

அவன்தான் பெயருக்கு ஏற்றார்போல் எப்பொழுதும் அருவாளைச் சுமந்துகொண்டு சங்கரலிங்கத்திற்குக் கையாளாய் சுற்றும் வெள்ளைச்சாமி. அவன் வரவை ஊரார் ‘அருவாள் வந்திரிச்சு’ எனச் சுருக்கமாக அறிவிப்பார்கள். தீப்பட்ட தெருவில் தப்பிய ஒரே வீடு தண்ணிக்காரி வீடு மட்டும்தான். தீண்டத்தகாதவள் போல், அவளைத் தங்களோடு சேர்த்துக்கொள்ளாமல் ஒதுக்கி வைத்ததோடு மட்டுமல்லாமல், அவள் வீட்டை ஐம்பது அடி தள்ளிக் கட்டச்சொன்னதும், அவள் கூரை வேயாமல் ஓடு போட்டுக்கொண்டதுவும், தீ அவள் வீட்டைத் தீண்டாததன் காரணம்.

போலீஸ் ஜீப் வெள்ளச்சாமியின் வீட்டின் முன் நின்றது, அதிலிருந்து இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க எஸ்.ஐ. இளங்கோ இறங்கினார். வீடு தெருவின் மேற்புறம் ப வடிவத்தில் இருந்தது, வலது புறம் ஓடு போட்ட தொழு அதன் எதிரே சிமென்ட் பூசப்பட்ட காரை வீடு. தொழுவில் ஒரு கறவை மாடு கட்டிக்கிடந்தது. அந்த மாட்டின் அருகருகே இரண்டு மூன்று மாடுகள் கட்ட இடமும் மாடுகட்டும் தும்புகளும் கிடந்தன, மற்ற மாடுகள் மேயப்போய் இருக்கலாம், என நினைத்துக்கொண்டார் எஸ்.ஐ. மாட்டுத்தொழுவுக்கு எதிரே இருந்த திண்ணையில் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். அழுதுகொண்டிருந்தவள் காவல் துறை அதிகாரிகளைக் கண்டதும் முந்தானையால் முகத்தை துடைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

அதிகம் போனால் முப்பது முப்பத்தைந்து வயது இருக்கலாம், என கணித்தார் எஸ்.ஐ. இளங்கோ. அவள் தலை முடி வாராமல், முடியாமல் ஏனோ தானோ என்று கிடந்தது. அவளின் இரண்டு காதுகளும் ஊஞ்சலாகத்தொங்க அதிலிருந்து பாம்படங்கள் இரு குழந்தைகள் உட்கார்ந்து ஊஞ்சல் ஆடுவது போல் அங்கும் இங்கும் ஆடின. அவை இரண்டு மூன்று சிறிதும் பெரிதுமான பொன் உருண்டைகளை, தங்கத்தால் ஆன சதுரத்தைச் சுற்றி ஒட்ட வைத்து, ஒரு கொக்கியையும் சேர்த்து அவள் காதில் மாட்டியிருந்தது போல் காணப்பட்டன. அவளின் நிறம் சிவப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும் மாநிறத்தைவிட மேல் என்றுதான் சொல்ல வேண்டும். அவள் தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டிருந்தால் சிவப்பு, கிட்டத்தட்ட சிவப்பு என்று பாஸ் மார்க்கு வாங்கியிருப்பாள். ஆனால் அன்று அவள் வாழ்வே தோல்வி அடைந்து விட்டிருக்க, தன் நிறத்தைப் பற்றி அவள் கவலைப்படவில்லை.

அருகில் அழுது வடிந்த வண்ணம் பாவாடை சட்டை அணிந்த எட்டு வயதுச் சிறுமி நோஞ்சானாய் நின்றது. அடுத்த பக்கம் பத்து பதினைந்து வயது மதிக்கத்தக்க பையன் அரைக்கால் சட்டை மட்டும் அணிந்து பரக்கப் பார்த்து கொண்டு முழித்தான். அவனுக்கு எஸ்.ஐ.யின் குட்டைத் தொப்பியைவிட ஏட்டும் கான்ஸ்டபிளும் அணிந்திருந்த சிவப்பும் ஊதாவும் கலந்த உச்சியில் கூம்பு வைத்த தொப்பிதான் பிடித்திருந்தது. வைத்தியலிங்கம் என்று பெயர் சூட்டப்பட்டாலும், அவனை அவன் ஒத்த வயதுப் பயல்கள், வைத்தி என்று அழைக்க ஆரம்பித்து, தற்போது கொய்த்தி தைய்த்தி என்றெல்லாம் அழைத்தனர். குளத்தங்கரையில் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நின்ற மரத்தில் ஏறி மரத்தான் விளையாடுகையில் அவனை விட மூன்று வயது அதிகமுள்ள சீமைராசு சொன்னான், “ஏய் கைதி என்ன பிடிச்சிரு பாப்பம்.” அன்றிலிறுந்து அவன் பெயர் கைதி ஆயிற்று. மற்றொரு நாள் அவ்வாறு விளையாடிக்கொண்டிருக்கையில், என்றும்போல் அவனைக் கைதி என்று யாரோ அழைக்க, மாரியம்மன் கோவில் வேப்பமர நிழலில் சுகமாகக் காலை நீட்டி மரத்தின் மேல் சாய்ந்து உட்க்கார்ந்துகொண்டு, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இரண்டு பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள், “கைதியப் பிடிக்க வரையில, கைதி போலிஸ் தொப்பிய தூக்கிட்டு ஓடிட்டா, போலிசுக்கு உத்தியோகம் போயிருமாமில்லோ.”

வைத்திக்கு இப்போது அது நினைவுக்கு வர, அவன் அந்த உடல் பெருத்த கான்ஸ்டபிளின் தொப்பியையே பார்த்தான். அவரும் அந்த சிறுவனைப் பார்த்தார், இருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பதைக் கண்ட எஸ்.ஐ., கான்ஸ்டபிளைப் பார்த்து, “107” என்று அதட்டினார்.

“எஸ் சார்,” என்று சல்யூட் அடித்தார் 107. அதன்பின் கைதி என்றழைக்கப்பட்ட அந்த வைத்திலிங்கத்தை அவர் பார்க்கவே இல்லை. ஆனால் அவன் தன்னைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான் என்பதை அவர் அறிவார்.

கைதி என்றழைக்கப்பட்ட அந்த வைத்திலிங்கம் ‘107’ என்று வாய்க்குள்ளையே முணுமுணுத்துக்கொண்டான். முந்தின இரவுமுதல் அவனுடைய தகப்பன் வெள்ளச்சாமி தலைமறைவாகி இருந்தாலும். அவனுடைய தாய், “ஐயோ எம் பிள்ளைகள எப்பிடி நான் காப்பாத்துவேன்,” என்று அழுது புலம்பிக்கொண்டிருந்தாலும், அவன் எதைப்பற்றியும் கவலைப் பட்டதாய்த் தெரியவில்லை. மாறாக அவன் வாயில் ஒரு சிறு புன்முறுவல் காணப் பட்டது. சோகம் என்றால் என்ன என்று அறியா பச்சைக்குழந்தை, தாய் விட்டுச்சென்ற சில நிமிடங்களில் நாய்க்குட்டியைப் பார்த்தவுடன் சிரித்து விளையாடுவதுபோல் இருந்தது அவன் நடந்துகொண்ட விதம். எஸ்.ஐ. இளங்கோ வெள்ளச்சாமியின் மனைவியைப்பார்த்து, “உன் பேர் என்னம்மா?” எனக் கேட்டார்.

அவள் பேசாமல் எஸ்.ஐ. யையும் மற்ற காவல்துறை ஊழியர்களையும் மாறி மாறி பார்த்தாளே தவிர, பேச எத்தனிக்கக்கூட இல்லை. எஸ்.ஐ. என்னசெய்வது என்று தவிக்கும்போது, ஏட்டு அவரைப்பார்க்க, வேண்டாம் என்று கண் அசைவாலேயே நிறுத்தி விட்டார். “பச்சையம்மாள்,” திடீர் என்று பதில் வந்துவிட்டது, எப்படியோ சொல்லிவிட்டாள். அதை நினைத்து அவள் ஒரு நொடி பெருமிதம் கொண்டாலும், மறுநொடியில் சோகம் அவள் மனதை மீண்டும் கவ்விக் கொண்டது.

அரசாங்க அதிகாரிகள், அதுவும் காவல்துறை அதிகாரிகள் தன் முன் நிற்கையில் தான் உட்கார்ந்து கொண்டு பதில் சொல்வது சரி அல்ல என அவள் மனதில் தோன்றியதோ என்னவோ, எழ முயன்று தோற்றாலும், தன் விளங்காத கைகளைத் திண்ணையில் ஊன்றி, எழுவதற்கு மீண்டும் மீண்டும் முயற்சித்தாள். அவள் படும் அவஸ்தையைக் கண்ட எஸ்.ஐ., “பரவாயில்லம்மா. உக்காந்துக்கிட்டே பதில் சொல்லு,” என்று இரு கைகளாலும் சைகை செய்து அமர்த்தினார்.

பச்சையம்மாள் தன் கால்களைக் காட்டி, முக்கியமாக முட்டு கணுக்கால் இடுப்பு எல்லாவற்றையும் காட்டி, போச்சு போச்சு என்று கைகளை உதறி உதறி சைகையால் விளக்கினாள். பின் திடீர் என்று கொஞ்சம் பேச்சு வந்துவிட, “வாதம், முடக்குவாதம்,” என்று கூறி தன் இரு கைகளையும் கூப்பி, “மன்னிச்சிக்கிடனும், மகராசன் இந்த பாவிமகள மன்னிச்சிக்கிடனும். என்னால மிடியாமத்தான்,” என்று திரும்பவும் கை கூப்பினாள்.

உடல் உபாதை மட்டுமில்லாமல், அவள் கணவன் கொலை செய்துவிட்டு ஓடிவிட்டதாலும், பச்சையம்மாளுக்குப் பேச்சு வர மறுக்கிறது என எண்ணிய, எஸ்.ஐ. இளங்கோ சமாதானம் அடைந்தார். மேலும் இவளை மிரட்டினால் தன் நேரம் வீணாவது மட்டுமில்லாமல், இவளுடைய கொஞ்ச நஞ்ச பேச்சும் ஓடிப்போய் விடக்கூடும் எனவும் எண்ணினார். எல்லாவற்றிற்கும் மேலாக இவளை நல்லபடியாக வைத்துக்கொண்டால் நடந்த கொலைக்கு இவள் சாட்சியாக வராவிட்டாலும் வெள்ளைச்சாமியைப் பற்றிய தகவல்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது எனவும் எண்ணினார்.

அன்று அவர் மேலும் பலரை விசாரிக்க வேண்டியதிருந்ததால் இவளை இன்னொருநாள் தீர விசாரித்துக் கொள்ளலாம் என முடிவு செய்தார். உடனே, “சரிம்மா, நீ கொஞ்சம் ஓய்வு எடு, நான் இன்னொரு நாள் வந்து பேசிக்கிடுரேன்,” என்று சொல்லிவிட்டு எஸ்.ஐ. இளங்கோ அங்கிருந்து கிளம்பினார்.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top