JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஆலமரத்துப் பறவைகள் : கதைச்சுருக்கம், அத்தியாயம் 1 & 2

Uthaya

Member
கதைச்சுருக்கம்

வீடு நிலம் கிணறு எல்லாவற்றையும் இழந்து தன்னை மாட்டுத்தொழுவத்தில் வாழும் கேவலத்திற்குத் தள்ளிய கையாலாகாத தன் கணவனை ஏமாற்றுவது தவறில்லை என்று நினைத்துக் கணவனுக்குத் துரோகம் செய்துவிடுகிறாள் மைதிலி. செல்வங்கள் அனைத்தையும் மட்டுமில்லாமல் மானம் மரியாதையையும் இழந்து நிற்கும் தங்கச்சாமியோ ஊர்மாட்டை மேய்த்துக் காலம்தள்ளும் நிலைக்கு ஆளாகின்றான். ஊரே அவனை எள்ளி நகையாடுகிறது. இவை அனைத்திலிருந்தும் விடுபடத் தற்கொலை செய்துகொள்வதென முடிவுசெய்து அதிலும் தோல்வி அடைகிறான்.

இவர்கள் வாழ்வில் வந்த சோதனை போதாதென்று ஊரில் ஒரு கொலை விழுவதோடு ஒரு தெருவே எரிந்து சாம்பலாகி விடுகின்றது. கொலையுண்டவனுக்கும் தங்கச்சாமிக்கும் தொடர்பு இருக்கவே போலீஸ் அவனைச் சந்தேகிக்கின்றது.

இதன் ஊடே அம்மணத்திருடன் ஒருவன் இரவில் கோமாளித்தனம் செய்து ஊரையே கலக்குகிறான்.

கொலை செய்தவன் யார்? பிடிபடுவானா? மைதிலி தங்கச்சாமி இருவரின் வாழ்வு சீராகுமா? இவற்றை ஆராய்வதோடு மின்சாரம் வருவதற்குமுன் இருந்த கிராமத்து வாழ்க்கையையும் விளக்குகிறது ஆலமரத்துப் பறவைகள்.




1​

நள்ளிரவைத் தாண்டிய பின்னும் உறக்கம் வராமல் கிடந்தான் தங்கச்சாமி. பாய் நெருப்பாய் சுட்டது அவனுக்கு. அவன் துயரத்திற்கு அவன் உடம்போ பாயோ காரணம் அல்ல. அவன் மனைவி ஊர் உறங்கியபின், தன் கணவன் தூங்குகிறானா என பார்த்து விட்டு, மெல்ல நழுவி வெளியேறி பின் சில மணி நேரம் கழித்துத் திரும்புவதுதான் அவன் துயரத்திற்குக் காரணம். அதை விட கொடுமை அவள் அப்படி வெளியேறும்வரை அவன் தூங்குவது போல் பாசாங்கு செய்ய வேண்டியிருப்பதுதான். அவனால் அவளைத் தட்டிக் கேட்க முடியாது. ஏன் அவன் தூங்காமல் இருந்தால் அவன் முன்னாலேயே அவள் வெளியேறினால்கூட அவனால் ஒன்றும் செய்ய இயலாது என அவள் அறிவாள். அதனால்தான் அவன் தூங்குவதுபோல் பாசாங்கு செய்வான். அவமானம் அவனை வாட்டி வதைத்தது. இந்தக் கேவலம் இன்று நேற்றாய் நடக்கும் காட்சி அல்ல. பல மாதங்கள் ஏன், வருடங்கள் இருக்கும் அவன் வீட்டு பூனை இரவு வெளியேற ஆரம்பித்து. வாரம் இருமுறை தவறாமல் அவள் இரவு வெளியேறி வீடு திரும்புவதை வழக்கமாக்கிக்கொண்டாள். அவன் அதைப் பற்றி ஒன்றும் அறியாதவன்போல் நாடகமாடுவான். அது அவர்கள் இருவரும் ஆடும் ஒரு கண்ணாமூச்சி.

மைதிலி, அதுதான் அவன் மனைவியின் பெயர், விடிய கண் விழித்து, தங்கச்சாமியைத் தட்டி எழுப்பினாள். “என்ன தூக்கம் ஆம்பளைக்கு,” என்று வசைபாடியமட்டும் விட்டிருந்தால் பரவாயில்லை. மேலும், “ஆம்பளைன்னு நடமாடுரத பாரு,” என்று அவன் காதுபடவே கூர் அம்பு வார்த்தைகளால் தைத்தாள்.

முந்தைய இரவு, அவள் வெளியேறி வீடு திரும்பியபின் நிம்மதியாக உறங்கி விட்டதால் அவளுக்கு களைப்பு தெரியவில்லை. ஆனால் தங்கச்சாமி என்றும் சரியாய் உறங்கியதில்லை. அதுவும் அவள் வெளியேறின நாட்களில் அவன் முற்றிலும் தூக்கமற்றுக் கிடந்தான். அன்று அதிகாலையில்தான் சற்றுக் கண்ணயர்ந்தான். அதற்குள் அவள் அவனை எழுப்பி வசைபாடி அவன் மனதைப் புண்ணாக்கினாள்.

கண்ணைக் கசக்கி, கைகளை முறுக்கி, கட்டிப்பிடித்துக்கொண்டு விலக மறுக்கும் சிறு குழந்தையைப்போல், அவனை விட்டு போக மறுத்த தூக்கத்தை வழித்து எறிந்துவிட்டு எழுந்தான். கை கால்களை உதறினான். அப்பொழுதுதான் அவள் “ஆம்பளைன்னு நடமாடுரத பாரு,” என்ற அந்த கடைசி அம்பை எய்தாள். அது அவன் முகத்தில் குளிர்ந்த நீரை அள்ளி எறிந்தது போல் தாக்கவே, சிலிர்த்தான். தூக்கம் முற்றிலுமாக விடை பெற்றுக்கொண்டது. ஒரு கணம், ஒரே ஒரு கணம், தன் பலங்கொண்டமட்டும் ஓங்கி இவள் கழுத்தை வெட்டி விட்டால் என்ன என்று அருகில் கிடந்த விறகு வெட்டும் வெட்டரிவாளைக் கூர்ந்து பார்த்தான்.

நேற்று இரவு அவள் வெளியேறிவிட்டு வந்ததும், சற்றுமுன் தன்னைக் கேவலமாய் பேசியதும் நினைவுக்கு வந்தது. இது போல் ஆயிரம் முறை அவள் செய்தாலும் தன்னால் ஏதும் செய்ய இயலாது என அறிவான் அவன். அதைவிட அதை, அவள் மிக நன்றாக அறிவாள். ஆகவேதான் அவனை அவள் அப்படிச்சீண்டினாள்.

“சரி சரி, போயி ஒரு குடம் தண்ணி எடுத்துட்டு வாரும் அதுக்குள்ள நான் காப்பி போட்டு வச்சிருக்கேன்” என அவனை விரட்டினாள் மைதிலி.

தங்கச்சாமி மறு பேச்சில்லாமல் பித்தளைக் குடத்தை எடுத்து பெண்பிள்ளைபோல் இடுப்பில் இடுக்கிக்கொண்டு ஊர்க்கிணற்றை நோக்கி நடந்தான். முன்னொரு நாள் அவன் மற்ற ஆண்களைப்போல் குடத்தை தலையில் சுமந்து வருகையில் கல் தடுக்கி குடத்தை கீழே போட்டுவிட்டான். “இடுப்பில இடுக்கியிருந்தால் இப்படி ஆகியிருக்குமா. மரியாதையா இனிமேல் இடுப்பில வச்சிக்கிட்டு வாரும்,” என்று கட்டளையிட்டாள் அன்று. மேலும், “உமக்குத்தான் நல்ல இடுப்பு வாச்சிருக்கே. பொம்பள தோத்திருவா... மத்தவங்க சிரிக்காங்கண்ணு கவலப்பட்டா குடம் கிடைக்குமா,” என்று சிரித்துக்கொண்டே நையாண்டி செய்தாள். அன்றிலிருந்து அவன் குடத்தை இடுப்பில் இடுக்கிக்கொண்டு நடந்தான்.

எப்படி இவ்வளவு கேவலமாக இறங்கிவிட்டோம் இதற்கு வேறு வழியே கிடையாதா என எண்ணி எண்ணி நித்தமும் வெந்து கொண்டிருந்தான் தங்கச்சாமி. அவன் மனது அவ்வெட்கையினால் புண்ணாகி புடம்போட்டு ரணமாகி, மெல்ல மெல்ல அவன் உடல் உள்ளுக்குள்ளாகவே சொட்டியது. அவ்வாறு சொட்டிச்சொட்டி சன்னம் சன்னமாய்த் தேய்ந்து உருத்தெரியாமல் போய்விட இன்னும் பல காலமில்லை என அவன் உணர ஆரம்பித்துவிட்டான். ஆனால் அவளோ இன்னும் எதையும் உணரவில்லை. அவளின் இரவுக் கேளிக்கைகள் இப்பொழுதுதான் சூடு பிடித்திருப்பதைப்போல் தோன்றியது அவளுக்கு.

தங்கச்சாமி தயங்கி பின் வாங்க வாங்க மைதிலி வெற்றிச் சிரிப்போடு மேலும் மேலும் தன் ஆட்டத்தை தீவிரப்படுத்துவதுபோல் தோன்றியது.






2

அன்று காற்று திசைமாறி வீசிற்று. அன்றையப்பொழுது விடியுமுன்னமே பெண் ஒருத்தி தங்கச்சாமியின் காதில் ரகசியமாய் சொன்னாள், “நாளைய பொழுது எப்பிடி விடியுமுண்ணு யாருக்குத்தெரியும். நமக்கு நல்லாத்தான் விடியுமிண்ணு நம்புங்க,” என்று விடை கொடுத்து அனுப்பிவைத்தாள். அவளுடைய பொய்யாமொழி அவ்வூரின் விதியை நிர்ணயிக்கும் என்று அவன் அறியவில்லை, அடுத்து நிகழ இருக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றியும் அப்போது அவன் நினைக்கவில்லை.

அன்று விடிவதற்குச் சில மணி நேரங்கள் இருக்குமுன்னமே கூவிய முதல் சேவல் ஏனோ மிகக் கோபமாகக் கூவியது போல் ஊரார் உணர்ந்தனர். கடுகடுப்போடு உதித்த சூரியனும் காலையிலேயே தன் காட்டத்தைக் காட்ட ஆரம்பித்தான். நேரம் செல்லச் செல்ல, நிலமே கொதிக்கத் துவங்கியது.

“இதென்ன இன்னைக்கு இப்பமே இந்த வெயில் அடிக்கிது,” என்று அங்கலாய்த்தாள் செண்பகம், தங்கச்சாமியின் எதிர் வீட்டில் வாழ்ந்த அவன் சித்தி. தங்கச்சாமியின் மனைவி மைதிலியும் தன் வீட்டு வாசல் படியில் நின்றவாறே, “ஆமா அத்தை, இப்பிடி வெயில ஒரு நாளும் காணேன். தீயா எரியுதே... எவ வீட்டுல தீ விழப்போவுதோ?” என்றாள்.

சிலருக்கு கரு நாக்கு என்பார்கள். மைதிலியின் நாக்கில் கருப்பு ஒன்றும் தெரியவில்லை எனினும், அன்று அவளின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள், வெறும் ஒலி அலைகளாக மட்டும் இல்லாமல், எந்த அளவுக்கு பலிக்கப் போகின்றது என்று எவருக்கும் தெரியாது.

தங்கச்சாமி ஊர் மாடு மேய்க்கப்போய்விட்டான். காட்டு வேலைக்குச் செல்பவர்கள் நாலாபக்கமும் சென்று விட்டார்கள். பள்ளிப்பிள்ளைகள் வகுப்பறையில் அமர்ந்து இரு நாழிகைகள் ஆகியிருக்கும். மைதிலி செண்பகத்துடன் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் தெருவில், வடக்கே இருந்து, சங்கரலிங்கம் வந்து கொண்டிருந்தான்.

கிட்டத்தட்ட ஆறடி உயரத்தில், மாநிறத்தைவிட கொஞ்சம் கருப்பாக, ஆஜானுபாகுவாக இருந்தான். நறுக்கு மீசையும் வழித்த முகமும், சரியாக வெட்டப் பட்ட தலைமுடியும், காதுவரை இறக்கப்பட்ட கிருதாவுமாக ஒர் அழகனாகக் காட்சியளித்தான். கழுத்தில் கிடந்த உறமான தங்கச் சங்கிலியிலிருந்து போலிப் புலி நகங்களால் செய்யப்பட்ட டாலர் தொங்கியது. அந்த சங்கிலியும் புலி நகங்களும் வெளியே தெரியுமாறு தன் இள மஞ்சள் நிற சில்க் ஜிப்பாவுக்கு மேல் அவற்றை எடுத்து விட்டிருந்தான். இடையில் புதிதாய்த் துவைத்து இஸ்த்திரி போட்ட உயர்ரக எட்டுமுழ வேட்டி கட்டியிருந்தான். கைகள் இரண்டிலும் பலவர்ணக் கற்கள் பதித்த இரண்டிரண்டு பெரிய மோதிரங்கள் அணிந்திருந்தான். கால்களில் ஊரில் எவரிடமும் இல்லாத விலை உயந்த செருப்புகள் அணிந்திருந்தான். அன்றும் அவன் விரல் இடுக்குகளில் சிகரெட் புகைந்துகொண்டிருந்தது.

அவனைப் பார்த்ததும் செண்பகம், “அடுப்பில வேல கெடக்கு,” என்று வீட்டுக்குள் மறைந்துவிட்டாள்.

தன் வீட்டு மேல் வாசல்படியில் நின்றவண்ணம் சங்கரலிங்கத்தைக் கவனித்த மைதிலி அவன் அருகில் வர தன் அழகுப் பல்வரிசையைக் காட்டி புன்னகைத்தாள். சங்கரலிங்கம் ஓரக்கண்ணால் அவளைப் பார்த்துக் கண்சிமிட்டிவிட்டு, தன் தங்கப்பல் மின்ன லேசாகச் சிரித்துவிட்டு, நேராக நடந்து சென்றான். அது அவர்கள் பார்த்துக்கொள்ளும் கடைசிப் பார்வை எனத் தெரிந்திருந்தால் ஒரு வேளை நன்றாக நின்று, பார்த்துப் பேசியிருப்பார்களோ என்னவோ தெரியாது. போகிறவனையே விரைத்துப் பார்த்தவாறே நின்ற மைதிலியின் மார்பு ஏனோ திக் திக் என்று அடித்துக் கொண்டது. ஏனென்று புரியவில்லை அவளுக்கு. மைதிலி வீட்டிற்குள் நுழைந்துகொண்டாள்.

சூரியன் உச்சிக்கு ஏற ஏற வெயிலின் உக்கிரம் அதிகரித்துக்கொண்டே போனது. தெருவில் நடமாட்டமில்லை. பணக்கருவாடு விற்பவனோ சவ்வுமிட்டாய் விற்பவனோ கூட தெருவில் நடமாடவில்லை. மச்சு வீடுகளில் யாராவது தாணியம் காயப்போட்டிருகிரார்களா, அல்லது எங்காவது ஏதாவது இரை கிடைக்குமா என்று தேடி அலையும் காக்கை குருவிகள்கூட மர நிழலைத்தேடிப் போய்விட்டன. ஐஸ் வண்டிக்காரன் மட்டும் தன் சைக்கிளில் பெரிய பெட்டி ஒன்றை வைத்துத் தள்ளிக்கொண்டு, பூப் பூப் என்று தன் ரப்பர் ஊதியால் ஒலி எழுப்பித் தன் வருகையைக் கூக்குரலிட்டு அறிவித்தவாறே வந்தான். அன்று அவனுக்கு நல்ல வியாபாரம் என்று ஊரார் சொல்லிக்கொண்டார்கள்.

மாலை பள்ளி முடிந்து குழந்தைகள் வீடு திரும்பியபின், காட்டு வேலைக்குச் சென்ற மக்களும், ஊர் மாடு மேய்க்கும் தங்கச்சாமியும் வீடு வந்து சேர்ந்து விட்டனர். மாடுகளும் அதனதன் வீடுகளைச் சென்றடைந்தன. வீட்டுக் கூரைகளின் உட்புறம் கூடுகட்டிக் கொண்டு, பகல் முழுவதும் கீச்சிட்டுக்கொண்டே பறந்து திரியும் ஊர்க்குருவிகளும் அடைந்துவிட்டன. காற்றில் வெப்பம் தணிந்திருந்தாலும் பூமி இன்னும் கொதித்துக்கொண்டுதான் இருந்தது. வெட்கை தணியட்டும் என்று, தன் வீட்டு முற்றத்தில் குடம் குடமாய் நீரைத் தெளித்தான் தங்கச்சாமி. அதன்பின் எப்போதும் போல் சாப்பிட்டுப் படுத்தான்.

காட்டில் அலைந்து களைத்து வந்த தங்கச்சாமி, வீட்டிலும் வெளியிலும் வேலைகள் பல செய்துவிட்டு அப்போதுதான் கண் அயர்ந்தான். எங்கோ ‘தீ.. தீ..’ என்று பதறியது ஒரு பெண்ணின் அபலக்குரல். அவளின் உடலே பற்றி எரிவதுபோல் இருந்தது அக் குரலின் நடுக்கம்.

தங்கச்சாமி வெளியே எட்டிப்பார்த்தான். தென்திசையில் வானளாவி நின்றது நெருப்பின் ஜுவாலை, அது வீடுகளின் கூரைகளுக்குமேல் நூறு அடி உயரத்திற்குத் தீயைக் கக்கும் ஒரு மாபெரும் இராட்சசனின் சிவந்தமஞ்சள் நாக்கைப் போல் காணப்பட்டது. தெருவில் அங்கும் இங்கும் மக்கள் கூக்குரல் இட்டுக்கொண்டே ஓடினர். தங்கச்சாமியின் அருகில் மைதிலியும் நின்று கொண்டிருந்தாள். இருவரும் தெருவில் அங்கும் இங்கும் ஓடும் ஆண்களையும், பீதியுடன் கூக்குரலிடும் பெண்களையும், தெற்கே விண்ணை எட்டும் இராட்சச நெருப்பின் ஜுவாலைகளையும் வெறித்துப்பார்த்துக்கொண்டே நின்றனர்.

தெற்கே போன சிலர் மீண்டும் வடக்கே திரும்பி ஓடினர். திடீர் என்று ஆணும் பெண்ணும் அடங்கிய ஒரு சிறு கூட்டம் தெற்கிலிருந்து அரை ஓட்டமாய் ஓடி வந்தது. அந்த இருட்டிலும் அவர்கள் முகத்தில் பீதியைக்காண முடிந்தது. ஒரு அசுரக்காற்று அவர்களை வடக்கிலிருந்து தெற்காக தள்ளுவதுபோல் சுழித்து அடித்தது.

அவர்களுக்குள் ஒருத்தி, “வெட்டிட்டானாம், வெட்டிட்டானாம்,” என்று இரட்டைச் சொற்களால், தன் சொந்த ஊரில் நடந்துவிட்டிருந்த பெரும் அதிர்சியையும் வேதனையையும் அளிக்கும் அக்காரியத்தின் பிரமாண்டத்தை விவரித்தாள். அதுதான் அவ்வூரில் நிகழும் முதல் கொலை என்பதால் அது அனைவரையும் திக்குமுக்காட வைத்து விட்டது.

“தலை துண்டாயிடுச்சாம்,” என்றாள் இன்னொருத்தி, அவள் குரல் தழுதழுத்த விதம் அவள் எந்த நொடியிலும் அழுதுவிடுவாள் என்றது.

“யாரை, யாரை வெட்டிட்டான்?” எங்கோ ஒரு குரல் கேட்க.

“சங்கரலிங்கத்தை யாரோ வெட்டிட்டானாம்,” என்று பதில் வந்தது இருட்டிலிருந்து.

மைதிலி மட்டுமில்லை, தங்கச்சாமியும் நெஞ்சில் கை வைத்து பதைபதைத்தான். இருவரையும் ஏனோ இனந்தெரியாத ஒரு பீதி கவ்விக்கொண்டது.

தெற்கே வீடுகள் எரிந்து சாம்பலாகிக்கொண்டிருந்தன. அருகருகே இருந்த வீடுகளின் கூரைகள் கிட்டத்தட்ட ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டு இருந்ததாலும், அவை சருகாய் காய்ந்த பனை ஓலைகளால் வேயப்பட்டிருந்ததாலும், நெருப்புக்கு ஏகக் கொண்டாட்டம். ஒரு பறக்கும் கால் பந்தாட்ட வீரனைப்போல் அங்கும் இங்கும் சாடி ஓடி பற்றி எரிந்து குதூகலித்தது நெருப்பு.

எருமைகளும் பசுக்களும் ‘அம்மா, ..ம்மா’ என கதறி பீரிட்டு அழுதன. காளைகள் மூக்கணாங்கயிறோடு சேர்த்து கட்டியிருந்தாலும் அவற்றை அறுத்துக்கொண்டு தப்பி ஓடின. அச்சமயம் வழியில் வந்தோரை உயிர் பிழைத்தால்போதும் என்று தன் காலடியில் சமட்டி எரியவும் தயங்கவில்லை அம்மிருகங்கள். கூண்டில் அடைபட்டிருந்த கோழிகள் தப்ப வழியில்லை, எரிந்து சாம்பலாயின. அடைக்கப்படாத கோழிகள் அங்கும் இங்கும் பறந்தன, சில வழி தெரியாமல், உயர உயரப் பறந்து, எங்கும் நெருப்பாய் இருக்கவே இறங்க இடமின்றி மீண்டும் நெருப்பிலேயே விழுந்து சாம்பலாகின. ஒரு சில எப்படியோ தப்பிவிட்டன. அவை அனாதைகளாய் வழி தெரியாமல் ஊரெங்கும் பல நாட்கள் அலைந்துதிரிந்தன.

தலை தப்பினால் போதும் என்று மக்கள் கட்டிய துணியோடு தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஓடினர். ஒரு தாய் உறங்கிக்கொண்டிருந்த தன் குழந்தைகளை எழுப்பி இடுப்பில் ஒன்றை இடுக்கிக்கொண்டு, கையில் இன்னொன்றைத் தரதரவென இழுத்துக்கொண்டு, வேகவேகமாய் மூச்சிரைக்க ஓட்டமும் நடையுமாய் உயிர் தப்பினாள். ஒருமனிதர் நடக்க முடியாத வயதான தன் தாயை தன் தோளில் தூக்கிச் சுமந்தவண்ணம் இருட்டில் தட்டுத்தடுமாறி ஓடி நெருப்பிலிருந்து அவளைக் காப்பாற்றினார். ஒரு சில ஆண்கள் மட்டும் தத்தம் கால்நடைகளைக் காப்பாற்ற முயன்றனர். நெருங்க முயன்றவர்களை நெருப்பு வா வா எனத் தன் மஞ்சள் நாக்கைச் சுழற்றிச் சுழற்றி வரவேற்றது. நெருப்பை அணுகுவது மனித உயிருக்கே ஆபத்தாய் முடியும் என கை விட்டு விட்டனர் அந்த மண்ணில் பிறந்த வீர மனிதர்கள். அன்று நெருப்புக்கு முழு வெற்றி.

தங்கச்சாமி ஒரு கல்மரம்போல் நின்று பார்த்துக்கொண்டிருக்கையில் இரண்டு பெண்கள் தென்திசையிலிருந்து அல்லல்பட்டு, அலறிக்கொண்டும் அழுதுகொண்டும் வந்தனர். ‘அய்யோ, அய்யோ,’ என்று அழுதாள் ஒருத்தி. ‘வா... வா...’ என்று ஊக்கப்படுத்தியவாறே மற்றவள் அவளை இழுத்து வந்தாள். தீயைவிட்டு தப்பிவிட்டோம் என அறிந்ததும் இருவரும் சற்று நிதானித்து நடக்க ஆரம்பித்தனர்.

வீட்டு வாசல்படியில் நிற்கும் தங்கச்சாமியையும் மைதிலியையும் பார்த்தவுடன் நின்றனர், ஒருத்திக்கு உதவி தேவைப்பட்டது. நிற்பது யார் என நோக்கியவர்கள் தங்கச்சாமியைக் கண்டு தயங்கினர். அவர்கள் தயங்கியதற்கு காரணம் இருந்தது. அக்காரணத்தை அவர்கள் இருவர் மட்டுமின்றி மைதிலியும் அறிவாள். அவர்களை விட தங்கச்சாமி மிக நன்றாகவே அறிவான். அனுபவித்தவன் ஆயிற்றே அவன்.
 

Uthaya

Member
It’s a social novel in which a crime of passion is committed. Who is the murderer? If he killed the bad Apple does he deserve punishment?
 
எளிமையாகப் புரிந்து கொள்ளும் மர்ம நாவல். நெல்லைத் தமிழில் நகைச்சுவையுடன் கூறப்பட்டுள்ளது. எழுத்தாளர் உதயகுமாருக்கு வாழ்த்துகள்!
 

Parimala Nathan

New member
Dr. Uthayakumar , the author of this novel, is a veterinary doctor who managed to find time in the midst of his practice to nurture his innate talent of writing to create a gripping story with an ethical predicament . He has skillfully used his experience of growing up in a small town of Tirunelveli district to weave an authentic context with native characters and their situations. He brings to mind names such as James Herriot , an English veterinary doctor who wrote stories based on his practice . Another big name is the Scottish physician A. J. Cronin who wrote famous novels like “The Citadel” and several others. Dr. U is a Tamil James Herriot and A. J. Cronin bundled into one. He promises to be a great contributor to the Tamil novel genre.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top