JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஆலமரத்துப் பறவைகள் – அத்தியாயம் 49 & 50

Uthaya

Member
ஆலமரத்துப் பறவைகள் – அத்தியாயம் 49 & 50

49

அடுத்த நாள் இரவும் பொன்னுத்தாயால் விரால்ராசோடு அங்கயற்கண்ணியின் வீட்டுக்குச் சாப்பிடப் போக முடியவில்லை. மற்ற நண்பர்கள் நால்வரும் மூன்றாம் நாளும் அங்கயற்கண்ணியின் வீட்டில் கூடி, இரவு சாப்பிட்டுவிட்டு, முன்பு விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடர்ந்தனர்.

பலவற்றைப் பற்றிப் பேசி மகிழ்ந்து கொண்டிருந்தபோது, திடீரென மைதிலி விராலைப் பார்த்து, “தம்பி விராலு, எஸ்ட்டேட்டில வேல செய்துகிட்டு இருந்த ஓனக்கு, திடீர்ண்ணு எப்பிடி நம்ம ஊருக்கு வரனும்மின்னு தோணுச்சி,” என்றாள்.

விரால் தன் தலையை அண்ணாந்து கூரையைப் பார்த்தவாறே அமைதிகாத்தான். நண்பர்கள் அவன் தன் நினைவுகளை ஓன்று திரட்டுகிறான் என்பதை அறிந்து அவன் சிந்தனையைக் கலைக்காமல் அமைதியாகக் காத்திருந்தனர். ஒரு நீண்டபெருமூச்சை வெளியே விட்ட விரால்ராசு, அவன் எப்படித் திடீரென்று எஸ்ட்டேட்டிலிருந்து கிளம்பி வந்து கொலை செய்துவிட்டுப் போய்விட்டான், என்றகேள்விக்கு நேரடியாகப் பதில்சொல்லாமல், கொலை நடந்த அந்த வெள்ளிக்கிழமைக்கு, ஒரு மாதத்திற்கு முன் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி விவரிக்கத் தொடங்கினான்.

இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து அவன் மனைவியையும் மற்ற உறவினர்களையும் சந்தித்துவிட்டுச் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட விரால்ராசு ஒரு வார விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தான். மூன்று நாட்கள் ஓடிவிட்டன. அவன் மனைவி பொன்னுத்தாய் அவனுக்கு நாள்தோறும், கோழிக்கறி, கருவாட்டுக்குழம்பு, மீன், முட்டை என விருந்து படைத்தாள். விரால் ஒவ்வொரு நாளும் தன்னுடைய சொந்தக்காரர் யாரையாவது விருந்துக்கு அழைத்து வருவான்.

அன்று விராலும் அவனுடைய அத்தை மகன் கணேசனும் மதிய உணவைச் சுவைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். விரால்ராசுவின் மனைவி பொன்னுத்தாய், “நல்லாச் சாப்பிடுங்க அண்ணன்,” என்று மீண்டும் தட்டு நிறையச் சோற்றைக்கொட்டி, கறித்துண்டுகளோடு கோழிக்குழம்பை ஊற்றினாள். அது கணேசனுக்கு மூன்றாவது தட்டு. அவன் அவசரம் இல்லாமல் சோற்றைப்பிசைந்து வாயில்போட்டு உதப்பி விழுங்கினான். தொடர்ந்து ஒரு கறித்துண்டை கடித்து எலும்பிலிருந்த சதையைப் பிய்த்து எடுத்து மென்று விழுங்கினான். பின் அந்த எலும்பைக் கடித்து அதில் இருந்த மிச்சம்மீதிக் கறியைக் கடித்துச் சுவைத்தான். கடைசியில் எலும்பைக் கீழே போடாமல், அதைக் கடித்து, அதனுள் இருந்த சத்தை உறிஞ்சினான். அவ்வெலும்பில் இனி ஒன்றுமில்லை என அறிந்தபின், தன் தட்டுக்கு அருகில் தரையில் போட்டான். விரால்ராசும் அதுபோல் தன் முன் இருந்த மூன்றாம் தட்டைத் தாக்கினான்.

கணேசனின் தட்டு காலியாகுமுன் சோற்றோடு வந்தாள் பொன்னுத்தாய். கணேசன் வேண்டாம் என்று அவசரமாகத் தலையை அசைத்து, தன் இரு கைகளையும் தன் தட்டின்மேல் வைத்து, விரல்களை விரித்து பொன்னுத்தாயை மேலும் சோறு போடவிடாமல் தடுத்தான். அவனுடைய முரட்டுக் கைகளில் பல தழும்புகள் காணப்பட்டன. அவனது இடது கைப் பெருவிரலில் நகம் இல்லாதது போல் இருந்தது. கூர்ந்து கவனித்தால் வெட்டுப்பட்டு நீளம் குறைந்த அந்தப் பெருவிரலின் நுனியில் ஒரு சிறு நகம் உள்நோக்கி வளைந்திருப்பதைப் பார்க்கலாம். சிறு வயதில் பனையிலிருந்து வெட்டிப்போட்ட நுங்குக்காயை இடது கையில் பிடித்து, கூறிய அரிவாளால் அதைவெட்டி, அதன் கண்களில் உள்ள தித்திக்கும், திரவமும் அல்லாத திடப்பொருளும் அல்லாத, வெறும் சுவை மட்டுமே உள்ள அமிர்தம்போன்ற நுங்கைச் சுவைக்க எண்ணி, வெட்டிய அவசரத்தில் பெருவிரல் நுனி துண்டுபட்டு விடைபெற்றிருந்தது. அதன் விளைவுதான் குட்டையான பெருவிரலும், சின்னஞ்சிறிய நகமும்.

பொன்னுத்தாயின் கண்களில் அந்த விரல் பட்டாலும் அதைப்பொருட்படுத்தாது, “அண்ணெ கொஞ்சம்..;” என்று அன்பாய் வற்புறுத்தினாள். வாயில் சோறு நிறைய இருக்கவே பதில் சொல்லாமல் வேண்டாம் என்று தலையசைத்தான் கணேசண்.

“அண்ணே கொஞ்சம், ரசத்துக்கு.. நல்ல உறைப்பா ரசம் வச்சிருக்கேன்,” என்றாள் பொன்னுத்தாய்.

அதற்குள் வாயிலிருந்த சோற்றை விழுங்கியிருந்த கணேசன், “சரி கொஞ்சம் போடுதாயி... ரொம்ப வற்புறுத்திறேயே என்ன செய்ய..,” என்று தன் இரு கைகளையும் தட்டைவிட்டு விலக்கிக்கொண்டான்.

அரைத்தட்டுச் சோறு போட்டு, ரசத்தைக் குளிர விட்டாள் பொன்னுத்தாய். பின் கோழிக்குழம்பு இல்லாமல் கறியை மட்டும் வடித்து ஒரு கரண்டி வைத்தாள். விரால்ராசுக்கும் கேட்காமலேயே சோறு, ரசம், கறி வைத்தாள்.

நண்பர்கள் இருவரும் வயிறு புடைக்க உண்டு கைகழுவியபின், அதற்குமேலும் ஆளுக்கு ஒரு செம்பு நீரை அண்ணாந்து குடித்தனர். இருவருக்கும் வயிறு பானைபோல் உருண்டு திரண்டு காணப்பட்டது.

கணேசன் பொன்னுத்தாயிக்குச் சித்திமகன். அவளுடைய ஆத்தா கூடப் பிறந்த சித்தி இல்லாவிட்டாலும், ஒன்றுவிட்ட சித்தியின் மகன்தான் என்றாலும், அப்படியெல்லாம் பிரித்துப்பார்ப்பவர்கள் அல்ல அந்த மண்ணில் பிறந்தவர்கள். அவர்களுக்கு விட்டுப்போனது ‘ஒன்றுவிட்ட’ என்ற சொல்லே தவிர உறவினர்கள் அல்ல. எல்லா உறவுகளும் நெருக்கமானதுதான். எவரேனும் விளக்கம் கேட்டால் மட்டுமே, ‘எங்க பாட்டியும் அவுக பாட்டியும் கூடப்பிறந்தவங்க,’ என்பார்கள்.

ஏற்கனவே கணேசன் சிறு வயதுமுதல் விரால்ராசுக்குத் தோழன், கணேசனுடைய மாமன் மகன் விரால்ராசு. விரால்ராசு, தன் பெரியம்மா மகள் பொன்னுத்தாயை கட்டியதிலிருந்து அவர்களின் பிணைப்பு மேலும் நெருக்கமானது. கணேசன் பொன்னுத்தாயை தன் உடன்பிறந்த தங்கைபோல் பார்த்துக்கொண்டான்.

விரால் ஊரில் இல்லாத நாட்களில், காலை மாலை எந்நேரமும் விரால்ராசு வீட்டுக்குப் போய், தொழுவின் கதவைத் திறந்து, “என்ன தாயி எப்பிடி இருக்கெ. மச்சினன் கடிதம் போட்டானா?” என்று கேட்காமல் போகமாட்டான்.

பொன்னுத்தாய்க்கு அவள் மாமியார் இறந்தபின் தனியாக இருப்பதில் பயமொன்றும் இல்லை என்றாலும், சித்திமகன் அண்ணன், கணேசன் அடிக்கடி வந்து போவதில் ஒரு ஆறுதல் இருந்தது. கணேசனுடைய உதவியோடுதான் அவள், விரால்ராசுவின் பங்கான ஒன்றரை ஏக்கர் புஞ்சையில் கடலை, கேப்பை என்று ஏதோ ஒன்றை விளைய வைக்க முடிந்தது.

ஏதோ ஒரு உந்துதலில் தன் இளம் மனைவியை விட்டுவிட்டு ஏலக்காய் எஸ்ட்டேட்டில் வேலைக்குப் போய்விட்டான் விரால்ராசு. போகுமுன் ‘இந்த ஒன்னர ஏக்கர் நிலத்த வச்சிக்கிட்டு எப்பிடி காலந்தள்ள. மழைவேற பாதிநாள் பொய்ச்சிருது,’ என்று சொல்லிவிட்டுச் சென்றதிலிருந்து அவன் மனதில் என்ன இருக்கிறது என்று ஓரளவுக்குப் புரிந்து போயிற்று பொன்னுத்தாய்க்கு. அவளுக்கும் அவன் சொல்வது சரியென்று பட்டது. அப்போது விரால்ராசுவின் தாய் உயிரோடு இருந்ததால், கொஞ்ச நாள் பொன்னுத்தாய் அவளுக்கு அனுசரனையாக இருந்துகொண்டு, நிலத்தையும் பார்த்துக் கொள்ளட்டும் மற்றமுடிவுகளைப் பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என முடிவு செய்துகொண்டார்கள்.

விரால் கிளம்பிப்போன வருடம் மழை முற்றிலும் பொய்த்துவிட்டது. ஆகவே இளவட்டங்கள் பலர் வேலைதேடி வெளியே கிளம்பிவிட்டனர். பலவற்றைப் பற்றியும் யோசித்த விரால்ராசுவும் தன் யோசனையை தன் உயிர் நண்பன் கணேசனிடம் தெரிவித்தான். கணேசனுக்கும் விராலின் முடிவு சரியாகத்தான் பட்டது. அவனுக்குத் தன் நண்பன் தன்னைவிட்டு வெகு தொலைவுக்குப் போய்விடுவான் என்பதில் வருத்தம் ஏற்பட்டாலும், நண்பனின் குடும்ப நலம் கருதி அக்கருத்தை ஆமோதித்தான். “சரி மாப்பிள, நீ விராலுல்ல, நீ போய்ப் பாரு, எப்பிடி இருக்குண்ணு. பிடிச்சிருந்தா வந்து தங்கச்சியையும் கூட்டிடுப் போயிரு. அதுவரைக்கும் அவ அத்தகூட இருந்துக்கிட்டு, கிடக்கிற நிலத்தையும், இந்த நாலு எருமை மாட்டையும் பாத்துக்கிட்டு இருக்கட்டும். நான் கூடமாட ஒத்தாசை செய்யிதேன்,” என்றான்.

அந்த ஏற்பாடு நன்றாகவே செயல்பட்டது. விரால்ராசு எஸ்ட்டேட் போன நாள் முதல் அவனுக்கு அங்கு நல்ல வரவேற்பு இருந்தது. உடல் உழைப்பில் அவனை மிஞ்ச எவராலும் முடியாது என்பது மட்டுமல்ல, அவனுடைய புத்திக்கூர்மை அவனுடைய உடல் பலத்தையும் மிஞ்சியது. இவற்றையெல்லாம் விட அவனுடைய நாணயம் எஸ்ட்டேட் முதலாளியையே கவர்ந்தது. ஆக விராலுக்கு எஸ்ட்டேட்டில் ஏக வரவேற்பு. அந்த மரியாதையை அவன் இழக்க விரும்பவில்லை.

விரால்ராசு எஸ்ட்டேட்டில் வேலைக்குச் சேர்ந்து ஆறு மாதத்தில் சொந்த ஊரில் நல்ல மழை பெய்து கிணற்றில் நீர் நிரம்பியதால், நல்ல மகசூல் கிடைத்தது. விரால்ராசு போன்ற மற்ற வாலிபர்களுக்கு ஊரிலேயே விவசாய வேலை தாரளமாய்க் கிடைத்தது. அது போக, கிணறு வெட்டும் வேலை, கரை போடும் வேலை, வீடுகட்டும் வேலை என்று பலதரப்பட்ட வேலைவாய்ப்புக்கள் வந்தன. விரால்ராசு இரண்டு மாதத்திற்கொரு முறை ஊருக்கு வரும்பொழுது ஒரு தடவை பொன்னுத்தாய் அதைப்பற்றிச் சொல்லி, ஊரிலேயே தங்கிவிடுமாறு சொல்லியும் அவனுக்குப் பிரியம் இல்லை.

விராலுக்கு எஸ்ட்டேட் வாழ்க்கையும், முக்கியமாக அங்கு அவனுடைய உடல் பலத்திற்கும், உண்மையான உழைப்பிற்கும் கிடைத்த மரியாதையும், ஊதியமும் அவனுக்கு வெகுவாகப் பிடித்திருந்தது. அவ்வாழ்வில் அவன் தனக்கு ஒரு எதிர்காலம் இருப்பதை உணர்ந்தான். பொன்னுத்தாயும் சரி என்று சொல்லிவிட்டாள். இரண்டு வருடங்கள் போனதே தெரியவில்லை. ஒரு நாள் வயதான விராலின் தாய் அதிகம் தொல்லை கொடுக்காமல் திடீரென்று தலையைச் சாய்த்துவிட்டாள். இனி விரைவில் பொன்னுத்தாயையும் எஸ்டேட்டுக்கு அழைத்துக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என நினைத்துக்கொண்டான் விரால்ராசு. விரைவில் வீட்டையும் காட்டையும் சரியாக ஒதுங்க வைத்துவிட்டு பொன்னுத்தாயும் எஸ்டேட்டுக்கு வந்துவிடுவதாக் சொன்னாள்.

அதற்குள், இதுவரை சுமூகமாகத் தங்குதடையின்றி சென்று கொண்டிருந்த விரால்ராசு பொன்னுத்தாய் இருவரின் வாழ்வில் ஒரு பூகம்பம் முளைக்கும் அறிகுறி தோன்றியது.

அன்று கோழிக்கறியும் சோறும் உண்டபின் கணேசனும் விரால்ராசும், தின்ற சோறு செமிக்கவேண்டும் என்பதற்காக மெல்ல குளத்தங்கரையில் நடந்தனர். ஊரைவிட்டு நல்ல தூரம் வந்துவிட்டபின், காதுகேட்கும் தூரத்தில் எவரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, அதுவரை பேசிவந்த வெட்டிப் பேச்சை நிறுத்தினான் கணேசன். விரால்ராசுவை நோக்கி, “வேய், உம்மட்ட ஒன்னு சொல்லனும்மின்னு நினைச்சேன்,” என்றான் கணேசன்.

“சொல்லும் ஓய்,” என்றான் விரால்ராசு.

“அந்தச் சங்கரலிங்கம் பய, ஒம்ம வீட்ட நோட்டம் விடுத மாதிரி தெரியிது. தங்கச்சி பொன்னுத்தாய் மேல எந்தத் தப்பும் இல்ல. ஆனால், சங்கரலிங்கம் மோசமான பய. எச்சரிக்கையா இல்லைண்ணா எந்தக் கூரையயும் புடுங்கிருவான்,” என்றான் கணேசன்.

“ம்ம்...” என்ற விரால்ராசுவின் தாடை இறுகுவதையும், புஜங்கள் துடிப்பதையும் கணேசன் கண்டான்.

“மாப்பிள, நான் இன்னும் ரெண்டு வாரம் இருப்பேன், அதுக்குப் பிறகு மெட்ராஸ்ல எனக்கு ஒரு வேல கிடச்சிருக்கு. பியூன் வேலதான், நம்ம படிப்பும் அவ்வளவுதானெ. எஸ்.எஸ்.எல்.சி பாஸ் பண்ணப்போய் இது கிடச்சிருக்கு. இத விட்டிறப்பிடாதுன்னு என் யோசனை. அதான் நானும் ஊருல இல்லாட்ட... ” என்று தன் மனதில் ஏற்பட்ட அய்யத்தை வெளிப்படுத்தினான் கணேசன்.

சில வினாடிகள் அங்கே மௌனம் நிலவியது.

கணேசன் தொடர்ந்து, “எங்க அய்யா, ஆத்தா இருக்காக, மத்த சொந்த பந்தம் இருக்கு. எல்லாரும் பாத்துக்கிடுவாகண்ணாலும்..,” என்று இழுத்தான்.

“நானும் யோசிச்சிக்கிட்டுத்தான் இருக்கேன். எஸ்ட்டேட்ல எனக்கு நல்ல மரியாத.. நல்ல துட்டு.. பொன்னுத்தாயிட்ட நீயும் அங்க வந்திருன்னு சொன்னேன். அவளும் விளையில போட்டிருக்க கடலையும் கேப்பையும் விளையட்டும், மகசூல எடுத்திட்டு, எருமைமாட்ட வித்திட்டு வந்திருதேன். ரெண்டு மூணு மாசம் மேல ஆகும்மின்னு சொன்னாள்,” என்றான் விரால்ராசு.

“சரி பயப்படதுக்கு ஒன்னுமில்ல. தங்கச்சி கெட்டிக்காரி, செருப்பால அடிச்சு அனுப்பிருவா, நீ பயப்படாத. நானும் ஊரவிட்டுப் போற எண்ணம் இருக்கிறதால, ஒங்கிட்ட ஒரு அலுக்கு அலுக்கிட்டா (லேசாச் சொல்லிட்டா) நிம்மதின்னு...,” என்றான் கணேசன்.

“சரிதான் மாப்பிள,” என்று விரால் சொல்ல, நண்பர்கள் மீண்டும் பழையபடி தங்கள் வாலிபப் பேச்சுக்குப் திரும்பினார்கள்.

லீவு முடிந்து விரால் எஸ்ட்டேட்டுக்கு திரும்ப வேண்டிய நிர்பந்தம். இந்த ஒரு வாரத்திற்கே மேனேஜர், “விராலு நீ இல்லாம கை ஒடிஞ்ச மாதிரி இருக்கும்பா, சீக்கரம் வந்திருப்பா. ஒன் சம்சாரத்தையும் கூட்டிக்கிட்டு வாப்பா. முதலாளிட்ட சொல்லி ஓனக்கு நல்ல குவாட்டர்ஸ் தரச் சொல்றேன், வசதியா இருக்கலாம்,” என்று கிட்டத்தட்ட கெஞ்சாத குறைதான்.

முதலாளிகூட மெட்ராஸ் போகுமுன், “விரால், மெட்ராஸ் போயிட்டு மூணு வாரத்தில வந்திருவேன். நீ ஒரு வாரம் லீவு போட்டிருக்கேன்னு மேனேஜர் சொன்னார். போயிட்டு வந்திரு. சீக்கிரமா குடும்பத்தையும் கூட்டிகிட்டு வந்திரு. உனக்கு எல்லா ஏற்பாடும் செய்துதரச் சொல்லுறேன்,” என்றார்.

இதற்குமேல் தனக்கு எங்கே மரியாதையும், வரவேற்பும், ஏன் அன்பும் கிடைக்கும் என்று எண்ணியவன், குறித்த தேதியில் பஸ் ஏறிவிட்டான். பஸ் ஏற்றிவிட்ட கணேசன், “அடுத்த தடவ நாம பாக்கும்போது நானும் வேலையில சேந்திருப்பேன். மெட்ராஸ்க்கு ஒருதடவ வரணும் என்ன,” என்று விடைகொடுத்தான்.

“சரி மாப்பிள,” என்று எல்லாவற்றுக்கும் சேர்த்து விரால் பதில் அளித்தான். பஸ் கிளம்பியது.

ஊரில் இருந்து வந்ததுமுதல் விரால்ராசுக்கு சிந்தனையெல்லாம் ஊரைப்பற்றித்தான். தன் மனைவி தனியாய் இருப்பதையும், அந்த சங்கரலிங்கம் அவளுக்குத் தீவிரமாக வலை வீசுவதையும் எண்ணி எண்ணிப் பார்த்தான். அந்நேரங்களில் அவன் பல்லைக்கடிப்பான், தாடை இறுகும். முறுக்கேறிய புஜங்களை முன்னும் பின்னும் ஆட்டிக்கொள்வான். இரவு சில சமயம் தூக்கம் வராது.

அவன் மனதில் ஓடியதை எடைபோட்டவர்போல், ஒரு நாள் மேனேஜர் மோகன், “ஏன் விராலு வீட்டு நினைப்பா? அதான் ஒரே அடியா இங்கேயே கூட்டிட்டு வந்திருன்னு சொல்லிக்கிட்டே இருக்கேன்,” என்றார்.

அதிலிருந்து பகலில் அந்நினைவுகளில் ஈடுபடுவதைப் பெரும்பாலும் தவிர்த்தான். இருப்பினும் அந்நினைவுகள் அவன் மனதில் எழாமல் இல்லை. வேலை முடிந்தபின் கொஞ்சம் அதிகமாகவே அந்த நினைவுகள் தோன்றின. கணேசன் ஊரைவிட்டு மெட்ராஸ் புறப்படும் நாள் வந்து போனதிலிருந்து விரால்ராசுக்கு உள்ளூரக் கோபம் அதிகரித்தது. ஆனால் எஸ்ட்டேட்டில் வேலை ஏகமாக இருந்ததால் அவனுடைய மனம் திசைதிருப்பப் பட்டிருந்தது.

சொன்னதுபோல் முதலாளி மூன்று வாரம் கழித்துத் திரும்பிவிட்டார். மேலும் மூன்று வாரத்தில் திரும்பவும் மெட்ராஸ் பாம்பே என்று புறப்பட்டுவிடுவார். அவர் இருக்கும் வரை சிலசமயம் மாலை, இரவு நேரங்களில்கூட அவருக்கு உதவிக்கு ஆள் தேவைப்பட்டால் விராலைத்தான் அழைத்து வரச்சொல்வார். அவனும் தயங்காமல் போய் உதவி செய்வான். சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் மாலையிலோ இரவிலோ அவனை அழைக்க மாட்டார். ‘சிறு வயது, கொஞ்சம் அனுபவித்துவிட்டுப் போகட்டும்,’ என்று அவர் மேனேஜரிடம் சொல்வதை அவனே காதுபடக் கேட்டிருக்கிறான். ஆனால் அவன் அவ்வாறு ஓவர் டைம் வேலை செய்தால் அவனுக்கு இரட்டிப்பு சம்பளம் கொடுக்குமாறு மேனேஜரிடம் சொல்லிவைத்திருந்தார்.

விரால்ராசு ஊரிலிருந்து வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. கணேசன் மெட்ராஸ் சென்று இரண்டு வாரங்கள் ஆகியிருக்க வேண்டும். அன்று வெள்ளிக்கிழமை, காலையிலிருந்தே விராலின் மனம் நிம்மதி இல்லாமல் உளைச்சல் எடுத்தது. அவனை அவ்வாறு பார்த்த எஸ்ட்டேட் மேனேஜர் மோகன், பன்னிரெண்டு மணியளவில் “விராலு ஏன் ஒரு மாதிரி இருக்க. வேணுமின்னா தேனி போய்விட்டு வரயாப்பா,” என்றார். மேனேஜருக்கும் விராலுக்குமிடையே உள்ள ஒரு எழுதப்படா ஒப்பந்தம் அது. மாதா மாதம் ஒரு வெள்ளிக்கிழமை அவன் சீக்கிரமாகக் கிளம்பி தேனி சென்று பிரியாணி, மட்டன் என்று நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, பிராந்தி குடித்துவிட்டு, சினிமாவும் பார்த்துவிட்டு வருவான். வரும்பொழுது மேனேஜருக்கு பாட்டில் ஒன்று வாங்கிவருவான். மேனேஜர் பாட்டிலுக்காகவெல்லாம் அவ்வாறு கீழிறங்கமாட்டார், அவர் விராலுக்காகச் செய்யும் சலுகை அது. அவனுடைய கடின உழைப்பிற்குக் கொடுக்கும் விடுமுறை. விராலும் மற்ற நாட்களில் வேகமாக வேலை செய்து அவன் செய்யாத வேலைக்கும் சேர்த்து ஈடுகட்டிவிடுவான். எவரும் மாலை நாலுமணிக்குள் வந்து சோதனை செய்யாத பட்சத்தில், விரால்ராசு மாலை நாலு மணி வரை வேலை செய்ததாய்ப் பதிவேட்டில் பதிந்துவிடுவார் மேனேஜர். அப்படியே சோதனை செய்தால் அவன் லீவு சொல்லிவிட்டுச் சென்று விட்டான் என்று குறித்துக்கொண்டால் போதும், ஆனால் அவ்வாறு இதுவரை நடைபெற்றதே இல்லை.

விரால்ராசு எஸ்ட்டேட்டிலிருந்து புறப்படும்போது எப்போதும் போல் தேனி போய் உல்லாசமாய்ப் பொழுதைக் கழித்துவிட்டு வரலாம் என்ற எண்ணத்தோடுதான் கிளம்பினான். மலையிலிருந்து கீழிறங்கும் லாரியில் ஏறியபின் அவன் மனம் முழுவதிலும் அவன் மனைவி பொன்னுத்தாய்தான் வியாபித்திருந்தாள். இருப்பினும், அவன் சொந்த ஊர் செல்லும் எண்ணத்தை வளர்த்துக்கொள்ளவில்லை. ஆனால் எந்த நிமிடம் தேனி புரோட்டாக் கடையில் ஒரு லாரி டிரைவர், ‘திருனவேலி போறோம், வாரையா?’ என்றாரோ அதே நொடியில் விரால்ராசின் மனம் மாறியது. அவனை அறியாமலேயே அவன் அவர்களுடன் போக முடிவு செய்தான்.

அன்று விராலை ஆட்டிப்படைத்து, ஊருக்கு வரவழைத்தது எதுவேன்று யாராலும் சொல்ல இயலாது. ஒரு வேளை சனீஸ்வரன், விரால்ராசுவின் மனதில் புகுந்து, வா வா, வந்து ஒருவனை வெட்டிக் கொலை செய்யென்று அழைப்பு விடுத்தானா? அல்லது விரால்ராசின் இறந்துபோன தாய் ஆவியாய் தன் மகன் மனதில் இறங்கி, அவனை, வா, வந்து, உடனே என் மருமகளின் மானத்தைக் காப்பாற்று என்று அழைத்து வந்தாளா? ஏன், எல்லாமே ஒரு குருட்டுப் போக்கில் ஒரே நாளில் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து நிகழ்ந்து, விராலை ஊரை நோக்கித் தள்ளிக்கொணர்ந்ததா? அடுத்து நடந்த கொலை, தீ இரண்டும் நிகழ்வதற்கும் அதே சக்திதான் காரணமா? இல்லை மனிதனின் உணர்சிகள்தான் காரணமா, எல்லாமே புதிர்தான். ஆனால் கொலை தீ இரண்டும் நிகழ்ந்து ஊரையே கலக்கிவிட்டது.




50



இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.யிடம், “இளங்கோ, நான் வந்ததிலிருந்து ஸ்பாட்டுக்கு போகவே இல்ல. ஒரு தடவ போய்ட்டு வந்திருவோம் வாங்க,” என்று அழைத்தார்.

எஸ்.ஐ., “சரிசார், இப்பவே கிளம்பிருவோம்,” என்று இன்ஸ்பெக்டரை மட்டுமல்ல, ஏட்டையும், கான்ஸ்டபிள் 107 ஐயும், கூட்டிக்கொண்டு கிளம்பினர், பெரியாண்டபுரத்தை நோக்கி.

ஏட்டு ஜீப்பை ஓட்டிச்செல்ல, இன்ஸ்பெக்டர் முன்னால் அமர்ந்திருந்தார். பின்னால் எஸ்.ஐ. இளங்கோவும் 107ம் உட்கார்ந்திருந்தனர். ஜீப் பெரியாண்டபுரத்தை நெருங்கிவிட்டது.

இன்ஸ்பெக்டர் திடீர் என, “அது என்ன குளத்துக் கரையில என்னமோ எழுதியிருக்கு,” என்றார்.

அது வரை நேராகச் சாலையை மட்டும் பார்த்தவாறே ஓட்டிவந்த ஏட்டு, குளக்கரையில் எழுதியிருந்ததைப் பார்க்கவில்லை. உடனே வேகத்தைக் குறைத்து, ஜீப்பை நிறுத்திவிட்டார். அப்போதுதான் பார்த்தார், அங்கே குளக்கரையில் 107 என்று காய்ந்த மாட்டுச் சாணியை அடுக்கிப் பெரிய எழுத்துக்களால் எழுதியிருந்தது.

அதைப் பார்த்த ஏட்டு சிரித்துக்கொண்டே, “ஏவ் 107, நீர் பிரபல்லியமா ஆயிட்டீர். ஊர் ஊருக்கு இப்பம் ஒம்ம பேர, சாணியில எழுதி வச்சுக் கொண்டாடுறாங்க.” என்றார்.

கான்ஸ்ட்டபிள் 107, எவரிடமும் சொல்லாமல் ஜீப்பிலிருந்து குதித்து கரையில் எழுதியிருந்ததை வாய்விட்டு, ‘107’ என்று படித்தார். 107க்கு ஆத்திரமாக வந்தது. ஓடினார் அந்த சாணியால் எழுதப்பட்டிருந்த 107 ஐ நோக்கி. அருகில் செல்லச் செல்ல அவ்வெழுத்துக்கள் ஆறடி நீளத்திற்கு இருப்பதைக் கண்டார். இருப்பினும் கோபம் குறையவில்லை, அதிகரித்தது. தன் பூட்ஸ் காலால், அந்த சாணிக்குவியலால் ஆன எழுத்தை ஓங்கிப் பலமுறை உதைத்தார். மேலே காய்ந்திருந்தாலும் அடியில் சாணி காயாமல் பொத பொதவென்றிருக்க, 107 ன் பூட்ஸ்சில் மட்டுமல்லாமல் அவரின் உச்சிமுதல் உள்ளங்கால் வரை சாணி ஒட்டிக்கொண்டது.

தான் கோமாளியாக்கப் பட்டுவிட்டதை உணர்ந்த 107க்கு, மேலும் கோபம் அதிகரித்தது. மீண்டும் மீண்டும் சாணிக்குவியலை தன் கால்கள் ஓயும் வரை உதைத்தார். சாணிக்குவியல் அசைந்துகொடுக்காததனால் அவர் கோபம் சற்றும் தணியவில்லை. கடைசியில் வேறு வழியின்றி, தன் கோபத்தை யார் மீது செலுத்துவது என்று தெரியாமல் குமுறிக்கொண்டே ஜீப்பை நோக்கி வந்தார்.

அதற்குள் எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர், ஏட்டு மூவரும் ஜீப்பிலிருந்து இறங்கி 107 வருவதைப் பார்த்துக்கொண்டு நின்றனர். உடல் பெருத்த 107, மேனி முழுவதும் சாணியாக, ஒரு பெரிய சாணி உருண்டை உருண்டு வருவதுபோல் வந்தார். அவரின் கோலத்தைக் கண்ட மூவரும் வாய்விட்டுச் சிரித்துவிட்டனர். 107ன் கோபம் மேலும் மேலும் அதிகரித்தது, ஆனால் அவரால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

எஸ்.ஐ., “107 இந்தக்கோலத்தில ஜீப்பில உக்காந்தா ஜீப்பெல்லாம் சாணியாப் போயிரும். ஏதாவது இலை தழைய வச்சுத் தொடச்சிட்டு வாரும்,” என்றார்.

107க்கு எஸ்.ஐ. சொன்ன யோசனை சரியென்று தோன்றவே, அருகில் பச்சைப்பசேல் என்று வளர்ந்து கிடந்த கொழுஞ்சிச் செடியைப் பிடுங்கி அதனை மடக்கி அதை வைத்து தன் முகம், சட்டை, பூட்ஸ், போன்ற தனக்கு எட்டும் இடங்களை எல்லாம் துடைத்தார். அவர் அவ்வாறு செய்தது சாணியை அவர் சட்டையெல்லம் பரப்பிவிட்டது. அன்னிலையில் 107 தன் உடலை சாணியால் மொழிகியதுபோல் தோன்றியது.

அதைக்கண்ட ஏட்டு, “ஏவ் 107, என்னய்யா சாணிய வச்சு வீடு மொழுகுவாங்க, முத்தம் தொளிப்பாங்க, நீர் என்னண்ணா சாணிய வச்சு ஒம்ம ஒடம்பையே மொழுகியிருக்கெயறு,” என்று சொல்லிச் சிரித்தார். எஸ்.ஐ.யும், இன்ஸ்பெட்டரும் சேர்ந்து சிரித்தனர். 107ன் கோபம் உச்சக்கட்டத்துக்கு ஏறி இருந்தது.

“சரி நேரம் ஆகுது, கிளம்பலாம்,” என்றார் இன்ஸ்பெக்டர்.

எஸ்.ஐ. 107ஐப் பார்த்துவிட்டு, “ஒம்ம வச்சுக்கிட்டு என்னய்யா செய்ய? சரி சரி ஏறிக்கோரும். அப்புறமா கழுவிக்கிடலாம்,” என்றார்.

நால்வரும் ஜீப்பில் ஏற ஜீப் கிளம்பி ஊருக்குள் நுழைந்தது. எஸ்.ஐ., “ஏட்டு, ஜீப்ப ஊர் கிராம்ஸ் வீட்டு முன்னால நிறுத்தும். இன்ஸ்பெக்டர் சார் அவர பாத்தமாதிரியும் இருக்கும், ஒரு நல்ல காப்பி சாப்பிட்ட மாதிரியும் இருக்கும்,” என்றார்.

வெளியூரிலிருந்து அரசு அதிகாரிகள் வந்தால் அவர்கள் கிராம்ஸ் என்றழைக்கப்பட்ட கிராமமுன்சீப் வீட்டிற்குப் போவது வழக்கம். அங்கு கிராம்ஸ் அவர்களை வரவேற்பதற்காகவே அவர் வீட்டில் அழகிய நாற்காலிகளும் சோபாக்களும் வாங்கிவைத்திருந்தார். மேலும் வந்தவர்களுக்குக் காப்பி, தேனீர் வழங்குவதற்கு ஏற்ற வகையில் அவர் வீட்டில் பசும்பால் எப்போதும் இருக்குமாறு பார்த்துக்கொண்டார். அவருக்கு வேலை அதிகம் இல்லாததால் அவரைத் தேடி வரும் விருந்தினர்களைச் சந்திப்பதை அவர் ஒரு பொழுது போக்காகக் கருதி மகிழ்ந்தார்.

ஜீப் கிராம்ஸ் வீட்டின் முன் நிற்கவும் 107 இறங்கினார். கிராம்ஸ் வீட்டுக் காம்பவுண்டை அடைக்கும் இரும்புக் கதவில், எழுதித் தொங்க விட்டிருந்த வீட்டு எண் 107 அவர் கண்களில் பட்டது. அவரின் கோபம் தலைக்கேறியது. 107 ஓடிப்போய் அந்த இரும்புக் கதவை ஓங்கி ஒரு உதை விட்டார்.

இரும்புக் கம்பிகளால் ஆன வேலைப்பாடு மிக்க அந்தக் கதவுகளில் ஏகப்பட்ட கம்பிகள் நீட்டிக்கொண்டிருந்தன. அவற்றில் ஒரு கம்பி 107ன் காலில் குத்தி பெரிய வெட்டுக்காயம் ஒன்றை ஏற்படுத்தி விட்டது. அதில் இருந்து ரத்தம் கொட்டியது. 107ன் கோபம் அதிகரிக்கவே, அடிபடாத மற்றொரு காலால் அந்தக் காம்பவுண்டுக் கதவை அதே இடத்தில் மீண்டும் ஓங்கி உதைத்தார். அதே கம்பி 107ன் அடுத்தகாலிலும் வெட்ட, அதிலிருந்தும் ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. இரண்டு கால்களிலும் வெட்டுக்காயம் ஏற்ப்படவே 107 நொண்டிக் குதித்தவாறே வந்தார்.

அப்போது ஜீப் வந்த சத்தம்கேட்ட கிராம்ஸ் உள்ளிருந்து வெளியே வந்தார். அவருடைய வேலைக்காரன் காம்பவுண்டுக் கதவைத் திறந்தான். கிராம்ஸ் கண்ட காட்சி அவரை உலுக்கியது. அவர் முன் மூன்று காவல்துறை அதிகாரிகள் நின்றார்கள், கூடவே இன்னொருவனும் நின்றான். அந்த நான்காவது மனிதனின் உடலெங்கும் சாணி மெழுகப்பட்டு இருந்தது மட்டுமின்றி, அவனின் இரண்டு கால்களிலும் சில இடங்களில் சிவப்பாகவும் சில இடங்களில் கருப்பாகவும் பச்சையாகவும் தோன்றின. அவன் அவ்வப்போது ஒரு கோமாளிபோல் குதித்துக் குதித்து நடக்கவும் செய்தான்.

அக்காட்சியைக் கண்ட கிராம்ஸ், வந்தவர்களை வரவேற்க மறந்து, “என்ன சார். இவனை எங்க பிடிச்சீங்க. சாணிப்பால் தொளிச்சு, கரும்புள்ளி செம்புள்ளி அடிச்சு கூட்டியாந்திருக்கீங்க,” என்றார்.

எஸ்.ஐ., கிராம்ஸ்ஐப் பார்த்து, “அய்யா, நம்ம ஏரியாவுக்குப் புது இன்ஸ்பெக்டர் வந்திருக்காங்க. ஒங்களப் பாக்கவந்துகிட்டு இருந்தோம்..,” என்றவரை முடிக்க விடாமல், கிராம்ஸ் பேச ஆரம்பித்தார்.

“அட அட, நல்ல நேரத்திலுமா இப்பிடி. சரி திருட்டுப் பயல விலங்கு போட்டு வைங்க, ஓடிப் போயிரப்போறான்,” என்றார் கிராம்ஸ்.

எஸ்.ஐ., “அது வேற யாருமில்ல சார், கான்ஸ்ட்டபிள் 107 தான். வருப்போது லேசா விழுந்திட்டார், அடிபட்டுருச்சு,” என்றார்.

அதற்குள் கிராம்ஸ்சின் வீட்டுமுன் ஒரு கூட்டம் கூடி விட்டது. அக்கூட்டத்தில் பல சிறுவர்களும் இருந்தனர். எஸ்.ஐ. 107 என்று சொல்லவும். கூட்டமே கொல் என்று சிரித்தது. கூட்டத்தில் சிலர் உரக்க 107 என்று கூவினர்.

நிலைமையைப் புரிந்துகொண்ட கிராம்ஸ், “உள்ள வாங்க சார்,” என்று அழைத்தார். 107 தயங்கியவாறே நின்றார். கிராம்ஸ் அவரைப் பார்த்து, “நீங்களும்தான். உள்ள வாங்க நான் மாத்து உடைக்கு ஏற்பாடு செய்றேன்,” என்றார்.

107 ன் பிரச்சனை அதிகரிப்பதற்குள் கிராம்ஸ், “சரி முதல்ல உள்ள வந்து உக்காருங்க எல்லாரும்,” என்று அழைத்து வரவேற்பறையில் மற்ற மூன்று காவல் துறை அதிகாரிகளையும் அமரவைத்தார்.

பின்னர் கிராம்ஸ் வேலைக்காரனிடம், “நல்ல காப்பி டிபனுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னேன்னு சொல்லு. பின்ன 107 க்கு ஒரு வேட்டி சட்ட குடு,” என்றார்.

அப்போது எஸ்.ஐ., “அய்யா இதுதான் நம்ம வட்டத்துக்கு புதுசா வந்து சேர்ந்திருக்கிற இன்ஸ்பெக்டர். சார் பேர் ராஜா,” என்று முறையாக அறிமுகப் படுத்திவைத்தார் கிராம்ஸ்சிடம்.

இன்ஸ்பெக்டர், “வணக்கம் சார். உங்களைச் சந்தித்ததில ரெம்ப மகிழ்ச்சி,” என்றார்

கிராம்ஸ், “வணக்கம் இன்ஸ்பெக்டர். உங்களப் பாத்ததில எனக்குத்தான் ரெம்ப ரெம்ப சந்தோசம். எங்க ஏரியா பிடிச்சிருக்கா?” என்றார்.

இன்ஸ்பெக்டர், “இப்பந்தான வந்திருக்கேன் சார். நல்ல ஏரியா மாதிரித்தான் இருக்கு,” என்றார்.

கிராம்ஸ்சின் உத்தரவை உள்ளே சொல்லிவிட்டு வந்த வேலைக்காரன் முதலில் 107ன் ரத்தக் காயங்களை துடைத்துக் கட்டுப்போட்டான். பின் 107க்கு வேட்டி சட்டை கொண்டுவந்து கொடுத்தான். 107 தன் சாணி மொழுகிய காவல்துறை உடையைக் களைந்து வேட்டி சட்டையில் வலம் வந்தார்.

காவல்துறை அதிகாரிகளும் கிராம்ஸும் பொதுவாக பல காரியங்களைப் பற்றி பேசியபின், “அந்த சங்கரலிங்கம் கொலை சம்பந்தமா விசாரிச்சிட்டுப் போகலாம்ன்னு வந்தோம்,” என்றார் இன்ஸ்பெக்டர்.

கிராம்ஸ், “சரிதான், ஒங்க கடமையச் செய்ய வேண்டியதுதானே,” என்றார்

இன்ஸ்பெக்டர், “சார், இந்தப் பக்கத்தில யாராவது சாராயம் விக்காங்களா. வேற சட்டவிரோதமான செயல்கள்ள ஈடு படுறாங்களா?” என்றார்.

கொஞ்சம் யோசித்த கிராம்ஸ், “இங்க சாராயம் விக்கதுன்னா அந்த தண்ணிக்காரிதான். வேற இங்க யாரும் சாராயம் விக்கலை,” என்றார்.

அதற்குள் காப்பியும் சிற்றுண்டியும் வந்து சேர, பேச்சு வேறு திசையில் திரும்பியது. சற்று நேரத்தில் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு கிராம்ஸுக்கு நன்றி சொல்லிவிட்டு ஜீப்பில் ஏறி ஊரைச் சுற்றி வந்தனர் காவல்துறை அதிகாரிகள். தீயில் எரிந்த வீடுகள் பெரும்பாலும் சுத்தம் செய்யப்பட்டு இருந்தன. சாம்பல் ஆங்காங்கே கொஞ்சம் கிடந்தாலும் ஓரளவுக்கு அகற்றப்பட்டு விட்டன. எரிந்த கட்டைகளும் குச்சுகளும் ஒவ்வொரு வீட்டின் அருகிலும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இனி மாதக்கணக்கில் அதுதான் அவர்களுக்கு அடுப்பு எரிக்க உதவும்.

பாதி வீடுகள் புதிய கூரை வேயப்பட்டு, ஆட்கள் மீண்டும் குடி புகுந்து விட்டனர். ஒரு சில வீடுகள் பாதி சரி செய்த நிலையில் இருந்தன. ஒன்றிரண்டு வீடுகள் எரிந்த பின் எப்படிக் கிடந்தனவோ அப்படியே கிடந்தன.

சங்கரலிங்கம் வீடு பெரிய வீடு. இரண்டு தெருக்களைச் இணைக்கக்கூடியது. உண்மையில் அது இரண்டு வீடுகளை இணைத்து ஒன்றாக்கப்பட்டது. தென் புறம் இருந்த வீடு மண்சுவரால் கட்டப் பட்டு ஓலை வேய்ந்தது. வடபுறம் இருந்த வீடு, செங்கல்லும் சுண்ணாம்பும் சேர்த்துக் கட்டப்பட்ட காரை வீடு. அதன் கூரையும் செங்கல் பாவப்பட்டு மச்சுவீடாக அமைக்கப் பட்டிருந்தது. முதலில் கூரை வீட்டை வாங்கிய சங்கரலிங்கம், வட்டிக் காசு பெருகவே தன் வீட்டின் பின்புறம் இருந்த காரை வீட்டையும் வாங்கிவிட்டான். அதன்பின் சிறு சிறு மாற்றங்கள் செய்து, இரண்டையும் இணைத்து ஒரே வீடாக ஆக்கியிருந்தான். இருப்பினும் கூர்ந்து பார்ப்பவர்களுக்குத் தெரியும் அது இரண்டு வீட்டைச் சேர்த்து இணைத்து ஒன்றாக்கியது என்று.

தீயில் சங்கரலிங்கத்தின் ஓலை வேய்ந்த கூரை எரிந்துவிட்டது. ஆனால் காரைவீட்டுக்கு ஒரு சேதமும் இல்லை. அதில்தான் சங்கரலிங்கத்தின் மனைவி வேலம்மாள் எப்போதும் குடியிருந்தாள். கூரைவீட்டில் இரண்டு பசு மாடு கட்டும் அளவுக்கு சிறு தொழு இருந்தது. அந்த வீட்டில் ஒரு அறைக்குள் அரங்கு ஒன்று இருந்தது. அது நவீனமாக சிமெண்ட் வைத்துக் கட்டப்பட்டு, அதன் உட்கூரையும் வலிமைவாய்ந்த சிமெண்ட் காங்கிரீட்டால் கட்டப்பட்டிருந்தது. வெளிப்பார்வைக்கு அது கூரைவீடுபோல் தோன்றினாலும் அந்த அரங்கு அறை கடப்பாரையால் இடித்தாலும் இடிக்கமுடியாத அளவுக்கு பலம்பொருந்தியதாய் இருந்தது. அதை நெருப்பால்கூட அளிக்க முடியாது. அந்த அரங்கின் கதவுகூட இரும்பால் ஆனது. அந்த அறைக்குள்தான் சங்கரலிங்கம் காசு பணம் மட்டுமல்ல, அடகு பிடித்த நகைகளையும், மற்றவர்கள் எழுதிக்கொடுத்த பத்திரங்களையும் வைத்திருந்தான். சங்கரலிங்கம் அந்த அறையின் சாவியை எப்பொழுதும் தன் இடுப்பில் கிடந்த அறைஞாண் கயிற்றில் கட்டி வைத்துக்கொள்வான். அவன் கொலை செய்யப்பட்டபின், அந்தச் சாவி எங்கோ ஒழிந்துகொண்டது. இதுவரை அது எவர் கண்ணிலும் அகப்படவில்லை.

சங்கரலிங்கத்தின் பழைய வீட்டின் கூரை எரிந்து சாம்பலாகிப் போய்விட்டிருந்தாலும் அரங்கில் இருந்த பொருட்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.




 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top