JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

  • Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், jbtamil18@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Dear Guest, Please register in the forum to read stories of the writers and post your valuable comments. Please email: jbtamil18@gmail.com or whatsapp: +91-6384850278 any login related queries.

JLine Bookstore Online

இதயம் திறவாயோ இதயனே 23

அத்தியாயம் 23 :
"என்ன செழியா யோசனை?"
காலை வந்தது முதல் தன்னிடம் கூட எதுவும் பேசாது, ஏதோ சிந்தனையிலேயே உழன்று கொண்டிருந்த செழியனிடம் தமிழ் வினவினான்.
"விழி அளவுக்கு நான் காதலிக்கவில்லையோ... தோணுது டா."
செழியனிடத்தில் வருத்தம் மேலோங்கி இருந்தது.
தமிழ் மேற்கொண்டு எதுவும் கேட்டிடாது அமைதியாக இருக்க, நேற்று இரவு நறு வீட்டிற்கு வந்தது மற்றும் இன்று வகுப்பில் நடந்த ஹரிஷ், ரம்யா நிகழ்வு வரை எல்லாவற்றையும் கூறிய செழியன்,
"இந்த சின்ன பசங்ககிட்ட இருக்க உறுதி, தெளிவு என்கிட்ட இல்லையோன்னு தோணுது தமிழ்."
"நான் மறுக்கிறேன் என்று நன்றாக தெரிந்தும் விடாது என்னை நேசிக்கும் விழியின் காதல் என்னை குற்றவுணர்வை உண்டாக்குது டா." செழியனின் கண்கள் கலங்கிவிட்டது.
"நீயும் தானடா நறுவை விரும்புகிறாய். அதை அவளிடம் சொல்லிவிடு." தமிழ் கூறுவது எளிதான தீர்வு தான், இதையே தான் செல்வமும் கூறினான்.
"நான் இப்போ அவளுக்கு ஆசிரியர் டா...!" இயலாமையால் வெளி வந்தது செழியனின் குரல்.
"அப்போ வேலையை விட்டுடு." சாதரணமாகக் கூறினான் தமிழ்.
"விவசாயம் நம்ம பரம்பரை குடும்பத் தொழில் தான் தமிழ். நானில்லையென சொல்லவில்லை. அப்பாவுக்கு உடம்பு முடியவில்லை இனி சேற்றில் அவரால் வேலை செய்ய முடியாது என்பதால் விருப்பப்பட்டு தான் விவசாயத்தில் இறங்கினேன். ஆனால் மீண்டும் இந்த ஆசிரியர் பணியில் அமர்ந்த பிறகு தான் எனக்கு ஆத்மார்த்தமான, முழுவதும் மனது நிறைந்துவிட்ட உணர்வு கிடைக்கிறது" என்ற செழியனின் உள்ளத்து உணர்வுகளை தமிழால் புரிந்துகொள்ள முடிந்தது.
"அப்போ நறு படிப்பு முடியும் வரை அமைதியாக இரு..." என்ற தமிழ் தன் வகுப்பிற்கு சென்று விட்டான்.
"இன்னும் அவளை கஷ்டப்படுத்த வேண்டுமா...!" நினைக்கும் போதே செழியனுக்கு ஆயசமாக வந்தது. ஆனால் இதெல்லாம் ஒன்றுமில்லை எனும் விதமாக குடும்பத்தையே குலைக்கும் நிகழ்வு ஒன்று நடைபெற உள்ளது. கண் முன்னால் நிகழ்ந்தும் தடுக்க முடியா நிலையில் தன்னவளின் தவிப்பை கண்டு மனம் கலங்கி நிற்க போவதை அவன் அறிந்திருக்கவில்லை.
எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் ஒரு வாரம் கடந்திருந்தது. அன்று வெள்ளிக்கிழமை, அடுத்த இரண்டு நாட்கள் கல்லூரி விடுமுறை. குல தெய்வம் கோவிலுக்கு செல்வதற்காக சிவநேசன் ஊருக்கு அழைத்திருக்க, இன்று இரவு கிளம்புவதாக இருந்தான். உடன் நறுவையும் அழைத்து வருமாறு தெய்வானை பாட்டி கூறியிருந்தார்.
"தான் அழைத்தால் வருவாளா?" யோசனையோடு தனது வகுப்பிற்கு சென்றவன், சாந்தி மேடம் பாடம் நடத்திக் கொண்டிருக்க... அவரிடம் அனுமதி கேட்டு நறுவை வெளியே அழைத்தான்.
நறு அருகில் வந்ததும், "கல்லூரி முடிந்ததும் உனக்காக வெயிட் பண்ணுகிறேன், கிளம்பி வா" என்றவன் அவ்வளவு தான் முடிந்தது என்பது போல் நகர்ந்து செல்ல,
"எங்கே? எதுக்கு?" எனக் கேட்டிருந்தாள்.
"வீட்டில் யாரும் உன்னிடம் சொல்லவில்லையா?"
"என்னது?"
"கேள்விக்கு கேள்வியே பதிலாகாது" என்ற செழியன், "குல தெய்வ கோவிலுக்கு போகணும் வர சொன்னாங்க... நீ வரவில்லையா?" என்றான்.
"செல்வா சொன்னான். ஆனால் உங்களோட நான் ஏன் வரணும். உங்களை நம்பியா இங்கு படிக்க வந்தேன். வந்த எனக்கு போகத் தெரியும்" என்றவள் அவனை பாராது வகுப்பிற்குள் சென்று விட்டாள்.
செழியனுக்கு கவலையாகிப் போனது. இவ்வளவு நாள் காதலென்று சுற்றி வந்தவள், இனி தன்னை ஒதுக்க ஆரம்பித்து விடுவாளோ என்று வருந்தினான்.
அடுத்த பத்து நிமிடத்தில், "மேம் நறுவிழியை தமிழ் சார் அழைக்கிறார்" என்று பியூன் வந்து சொல்ல நறு ஸ்டாஃப் ரூம் சென்றாள்.
அங்கு தமிழ் மற்றும் செழியன் மட்டுமே இருந்தனர்.
நறு எதற்காக அழைத்தீர்கள் என்றுகூட வினவாது அமைதியாக நிற்க,
"இவனோட ஊருக்கு போவதில் உனக்கென்ன பிரச்சினை" என்றான் தமிழ்.
"எனக்கு தனியா போகிற அளவுக்கு தைரியம் இருக்கு" என பட்டென மொழிந்தாள்.
"உன் தைரியம் நேற்று நான் அட்ரெஸ் சொன்னதும் அங்க போய் நின்னுயே அதுலே தெரிஞ்சிக்கிட்டேன்" என்று தமிழ் சொல்ல, "எல்லாம் அவனிடம் சொல்லிவிட்டாயா?" என நறு செழியனை பார்க்க, "நீ தான் தானிருக்கும் அட்ரெஸ் அவளிடம் சொன்னாயா?" என்று செழியன் தமிழையும் ஒரே நேரத்தில் முறைத்து பார்த்தனர்.
"தேவையில்லாமல் உலறிட்டமோ...!" தமிழ் மைண்ட் வாய்ஸ் என நினைத்து வாய்விட்டு கேட்க இருவரும் ஒன்றாக ஆமென்றனர்.
அதில் தமிழே பேச்சினை மாற்றினான்.
"முடிவா என்னதான் நறு சொல்ற" என்று தமிழ் கேட்க, செழியனின் கெஞ்சல் முகம் கண்டவள்...
"எனக்கு ஓகே சொல்ல சொல்லுங்க தமிழண்ணா, அவர் கூட நம்ம ஊருக்கு என்ன, பூமிக்கு அந்த பக்கம் கூட சேர்ந்து போக நான் ரெடி" என்றாள்.
அந்நேரம் சரியாக மாலதி வந்தார்.
நறு சொல்லியது அவருக்கு நன்றாகவே கேட்டது. அவள் தமிழண்ணா என்றது, "இவள் தமிழின் தங்கையா! அதான் அவள் மயங்கி விழுந்த அன்று தமிழ் பதறினானா" என்று யோசிக்க வைத்தது.
மாலதியை கண்டதும் மேலும் பேச்சினை வளர்க்க நினைக்காத செழியன்,
"நீ கண்டிப்பா என்னோடு வர, கிளம்பிட்டு எனக்கு கால் பண்ணு" என்றவன் "இப்போ நீ கிளாஸ்க்கு போ" என்றான்.
மாலதி இருப்பதால் எதுவும் பேச வேண்டாமென நினைத்த நறு மௌனமாக வெளியேறிவிட்டாள்.
"என்ன தமிழ் சார் இந்த பொண்ணு உங்க தங்கையா?" மாலதி கேட்க,
"நீங்க உங்க வேலையை பாருங்க மேடம்" என்று அன்று மாலதி கூறியதையே இன்று தமிழ் அவருக்கு கூறினான்.
இறுதியாக நறுவிடம் செழியன் சொல்லியதை மாலதி கேட்டிருந்தாலும், அதனை கேட்டது போல் காட்டிக் கொள்ளவில்லை.
"அவளிடம் அப்படியென்ன உரிமை இந்த செழியனுக்கு" என்று மனதில் குமைந்தாள் மாலதி.
****
மூன்று மணியளவில் கல்லூரி முடிந்ததும் விடுதிக்கு வந்த நறு, நேற்றிரவே எடுத்து வைத்திருந்த பேக்கினை ஒருமுறை சரி பார்த்தவள் செழியனுக்கு கால் செய்தாள்.
செல்வம் நீ அண்ணாவோடு தான் வரவேண்டும் என்று சொல்லியிருந்தாலும், அவனாக அழைக்காது அவனுடன் செல்லக்கூடாது என்றிருந்தவள், அவனுடனான இந்த நீண்ட தனிமை பயணத்தை விட்டுவிடக் கூடாதென்றே நினைத்தாள்.
"அவன் அழைக்காவிட்டால் என்ன செய்வது" என எண்ணியவள் "தன்னவனோடு தான் இந்த பயணம்" என்று உறுதியாக நினைத்தால்.
செழியன் அழைத்த போது நறுவின் மனம் உல்லாசமாக விசில் அடிக்கத்தான் செய்தது, ஆனால் மறுப்பின் வேதனையை இதிலாவது அவனுக்கு காட்ட வேண்டுமென நினைத்தே, செழியனிடம் வர முடியாதென்று விளையாட்டாகக் கூறினாள்.
"காலேஜ் பஸ் ஸ்டாப்பில் நில் நான் வருகிறேன்" என்று செழியன் சொல்ல,
"அதை இங்கிருந்தே கூட்டிப்போனால் ஆகாதா?" என்று முணுமுணுத்துக் கொண்டே காலினை கட் செய்தாள். அது செழியனுக்கும் நன்றாகவே கேட்டது.
அந்நேரம் தனக்கு எப்படி எவ்வித தடையுமின்றி வீட்டிற்கு செல்ல வார்டனிடம் அனுமதி கிடைத்தது என்று அவள் யோசிக்கவில்லை.
பொதுவாக கல்லூரி விடுதியில் லோக்கல் கார்டியன் வந்து சைன் செய்து அல்லது வீட்டிலிருந்து பெற்றோரின் சைன் இடப்பட்ட கடிதம் வந்தால் தான் மாணவர்களை வெளியே செல்ல அனுமதிப்பர். நறுவிக்கு விடுதி வாசம் புதிது என்பதால் அது தெரியவில்லை.
ரிஜிஸ்டரில் வீட்டிற்கு செல்வதாக எழுதி செல்ல வந்த நறு, வார்டன் அறைக்கு முன் நின்றிருந்த தனது பக்கத்து அறை தோழியிடம் என்ன என்று வினவ,
"அப்பாகிட்ட இருந்து லெட்டர் வந்தால் தான் நைட் அவுட் ஸ்லிப்பில் சைன் போடுவேன் அப்படியில்லை என்றால் லோக்கல் கார்டியன் வரசொல்லி போ" என்கிறார் என்று அவளும் கூற, அப்போதுதான் 'தன்னை மட்டும் எப்படி அனுமதித்தார்' என்று நறு சிந்தித்தாள்.
உடனடியாக பதிவேட்டில் நறுவிழி என்ற பெயரினை செக் செய்ய, அவளது பெயருக்கு நேராக செழியன் தனது முகவரியையும் உறவு முறைக்கு நேராக மாமா என எழுதியும் கையெழுத்திட்டிருந்தான்.
அதனை பார்த்ததும் நறுவிக்குள் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தோஷ அலை ஊற்றெடுத்தது. அதே மகிழ்ச்சியோடு பேருந்து நிலையத்திற்கு வர, அவளுக்கு முன்னராகவே செழியன் அங்கு காத்திருந்தான்.
நறுவியிடமிருந்து அவள் கையிலிருந்த சிறு பேக்கினை வாங்கி தனக்கு முன்னால் பெட்ரோல் டேங்கின் மேல் வைத்தவன், அவளை ஏறுமாறு சைகை செய்ய... அவள் அமர்ந்ததும் அவனின் கைகளில் உல்லாசமாக வண்டி காற்றில் பறந்தது.
அவர்கள் செல்வதை ஒரு ஜோடி கண்கள் வன்மத்துடன் பார்த்திருந்தது. அது வேறு யாருமில்லை மாலதி தான்.
மாலதிக்கு அருகில் இருந்த ஆசிரியர்,
"நீ செழியனிடம் சீக்கிரம் உன் காதலை சொல்வதுதான் நல்லது. அந்தபொண்ணு அவருக்கு உறவு போல் தெரிகிறது" என்றார்.
மாலதிக்கும் அவர் சொல்வது சரியென பட, திங்களன்று தனது விருப்பத்தை நேரடியாக சொல்லிட வேண்டுமென்று மாலதி முடிவு செய்தாள்.
நம் முடிவுகள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் தெய்வம் எதற்கு. தெய்வத்தின் முடிவு வேறாக இருக்கும் போது நாம் என்ன செய்ய முடியும்.
நறுவிழியை வீட்டிற்கு அழைத்து வந்த செழியன், "நைட் எட்டு மணிக்குத்தான் பஸ், டிக்கெட் புக் பண்ணிட்டேன். அதனால் டைமுக்கு போனால் போதும், நீ கொஞ்சம் ஓய்வெடு" என மற்றொரு அறையை காண்பித்தவன் தன்னறைக்குள் புகுந்து கொண்டான்.
அறைக்குள் சென்ற விழி, பால்கனி வழியாக அந்த பகுதியினை பார்வையால் அலச,
"நீ தூங்கவில்லையா" என்று செழியனின் குரல் அவளின் முதுகுக்கு பின்னால் ஒலித்தது.
அவளின் கையில் பழச்சாறு அடங்கிய குவளையை திணித்தவன், "குடிச்சிட்டு சற்று தூங்கி எழு" என சொல்லி சென்றுவிட்டான்.
செழியன் ஆறு மணி போல் நறு இருந்த அறையை எட்டி பார்க்க அவள் உறங்கிக் கொண்டிருந்தாள். சில நிமிடங்கள் தன்னவளை ரசித்திருந்தவன், அவளிடம் அசைவு தெரிய டிவி முன்பு சென்று அமர்ந்து கொண்டான்.
ஏழு மணி வாக்கில் நறுவியை எழுப்ப அறைக்குள் வந்த செழியன் அவளை எப்படி எழுப்பவது என்று தெரியாமல் இரு முறை பெயர் சொல்லி அழைக்க அவளிடம் அசைவில்லை.
தண்ணீர் தெளிக்கலாமா என்று யோசனை செல்லும் போதே வேண்டாமென்று தோன்ற மெல்ல அவள் தோள் தொட்டு அசைத்தான்.
"டேய் செல்வா மாமா எப்போடா எனக்கு ஓகே சொல்லுவாறு" என்று தூக்கத்திலே உலறியவள், "இங்க ரொம்ப வலிக்குதுடா" என்று தன் இதயப்பகுதியில் கை வைத்தாள்.
அவளின் பேச்சிலும் செயலிலும் ஆணி அடித்தார் போல் செழியன் நின்று விட்டான்.
"என்ன மாதிரியான அன்பு இது, தூக்கத்தில் கூட என் காதலுக்கான தவிப்பு மட்டுந்தானா..!" செழியனுக்கு வாய்விட்டு கத்த வேண்டும் போலிருந்தது.
அந்நேரம் நறுவியும் எழுந்துக்கொள்ள "குளித்து கிளம்பு சாப்பிட்டு கிளம்பினால் பேருந்து நிலையம் செல்ல நேரம் சரியாக இருக்கும்" என்றவன் வெளியேறிவிட்டான்.
நறு கிளம்பி வரும்போது செழியன் பையோடு கிளம்பி தயாராகி வரவேற்பறை நீள் இருக்கையில் அமர்ந்திருந்தான்.
நறுவியை கண்டவன் உணவு மேசை நோக்கி நகர, நறுவின் கால்கள் தானாக அவனின் பின்னால் சென்றன.
தட்டில் மூன்று இட்லி வைத்து, அவளுக்கு பிடித்த மிளகு சாம்பார் மற்றும் பச்சை மிளகாய் துவையலை வைத்தவன் சாப்பிடு என்று கண் காட்ட, அவளுக்கு உணவு அமிர்தமாக தொண்டைக்குள் இறங்கியது.
"இதுவும் வெறும் அத்தை மகள் என்கிற அக்கறை மட்டும் தான், இல்லையா மாமா?" எனக் கேட்டவள் அவனின் பதிலை எதிர்பார்க்காது சாப்பிட்டு முடித்து பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டே வந்தாள்.
"எனக்கு பிடிச்சது எல்லாம் பார்த்து பார்த்து செய்வாங்களாம், லவ்வ சொன்னால் மட்டும் இல்லைன்னு மறுக்கிறது." அவளின் புலம்பல் தெளிவாக கேட்டபோதும் செழியன் வாய் திறக்கவில்லை.
அதன்பின்னர் கேப் பிடித்து பேருந்து நிலையம் வந்தவர்கள், தங்கள் ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறி, முன்பதிவு செய்திருந்த இருக்கையில் அமர்ந்தனர். இவர்கள் சரியான நேரத்திற்கு வந்ததால் பேருந்தும் உடனடியாக கிளம்பியிருந்தது.
சன்னலோரம் நறு அமர அவளுக்கு அருகிலிருந்த இருக்கையில் செழியன் அமர்ந்தான். அவனை நறு அதிசயமாக பார்க்க, அவனோ என்னவென்று பார்வையால் வினவினான்.
"என் பக்கத்தில் உட்கார மாட்டீங்க நினைத்தேன்." சொல்லிவிட்டு அவள் சன்னலில் தெரிவதை வேடிக்கை பார்க்க தொடங்கிவிட்டாள்.
அவளையே பார்த்திருந்தவன் ஹெட் செட்டினை காதில் மாட்டிக்கொண்டு ஐ பாடில் பாட்டினை கேட்கத் துவங்கினான். வாகாக சீட்டில் தலை சாய்த்து அமர்ந்தவன், தன்னவளின் அருகாமையை பாடலின் இதத்திற்கு ஏற்றவாறு கண்மூடி ரசித்திருந்தான்.
ஒரு மணி நேரம் கடந்திருக்க, உறக்கமும் வராததால் செழியனின் புறம் திரும்பியவள் அவனின் நிலை கண்டு மனதிற்குள் அவனை அர்ச்சனை செய்து, தன் பக்கமிருந்த இயர் பட்டினை செழியனின் காதிலிருந்து எடுத்து தன் காதில் வைத்துக்கொண்டாள்.
அவள் செய்கையை உணர்ந்தபோதும் செழியன் கண்களை திறக்கவில்லை.
"தூங்கிட்டார் போல" என்றவள் பாடலினை கேட்க, அதுவோ அவனின் அகம் உணர்த்தும் பாடலாய் இருந்தது.
"தாலியே தேவையில்லை
நீதான் என் பொஞ்சாதி...
தாம்பூலம் தேவையில்லை
நீதான் என் சரிபாதி..."
"ம்க்கும் இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை" என்று சத்தமாகவே முணுமுணுத்தவள், செழியனின் பாக்கெட்டிலிருந்த ஐ பாட் எடுத்து அடுத்த பாட்டினை மாற்ற, அதுவோ இன்னும் அவளை கடுப்பேற்றியது.
"நீதானே .. நீதானே
என் நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன்
நீயே அர்த்தம் (2)
என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசி கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதையோ.
நீதானே... நீதானே
என் கண்கள் தேடும் இன்பம்
உயிரின் திரையில்
உன் பால் பின்பம்."
"கேட்கிறது எல்லாம் லவ் சாங்... ஆனால் லவ் மட்டும் வராது" என புலம்பியவள் இயர் பட் எடுத்து மீண்டும் அவன் காதிலே வைத்து விட்டாள்.
மீண்டும் சன்னல் பக்கம் பார்வையை ஓட்டியவள், எப்போது தன்னவனை ரசிக்கத் தொடங்கினாள் என்று தெரியவில்லை. ஆனால் அதனை கண்கள் மூடியிருந்த போதும் செழியன் உணர்ந்தே இருந்தான்.
மெல்ல செழியனை நெருங்கி நன்றாக ஒட்டி அமர்ந்தவள் தனது அலைபேசியை எடுத்து, அவனின் தோளில் பட்டும் படாமல் தன் தலை வைத்து இரண்டு மூன்று சுயமிகள் (selfie) எடுத்துக் கொண்டாள்.
செழியனிடம் கள்ளச்சிரிப்பு மட்டும் குடியேறியிருந்தது.
சற்று நேரத்தில் உறங்கிவிட்ட நறு முன்பக்கம் விழ போக, கண் திறந்து வாகாக அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டவன்... அவனது விழியின் தோளை சுற்றி அணைத்தவாறு கைபோட்டு அவளை தனக்குள் பொதிந்து கொண்டான்.
அவள் கண் மூடுவதற்காகவே காத்திருந்தவன் போல், இமைக்காது தனது விழியையே விழி நோக்கிக் கொண்டிருந்தது. அவளுடனான தனிமையை விரும்பி அனுபவித்தான். இந்த இனிமையான பயணம் இப்படியே தொடரக் கூடாதா என்று ஆசைகொண்டான்.
திரும்பி வரும் பயணத்தை இதைவிட இனிமையானதாக இருக்க வேண்டுமென்று மனதில் வேண்டுதல் வைத்தான்.
ஆனால் திரும்பி வரும் பயணம் இந்த இதம் தொலைத்து, கண்ணீரோடு அமர்ந்திருக்கும் தனது விழியின் விழிநீரை துடைக்க கூட இயலாது, தனக்கு உரிமை உள்ளவளாக மாறிய போதும் உரிமையற்றவனாக நிற்கும் துன்பத்தில் கழியுமென்று அவன் அறியவில்லை.
தொடரும்...
 

Members online

No members online now.

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top