JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

இன்று அன்றி(ல்)லை - அத்தியாயம் 7

JLine

Moderator
Staff member
அன்றில் 7

அடுத்த நாள் அவன் செய்ய வேண்டியது சத்ர சிகிச்சை.

"அதனால் நா இன்னிக்கி ஹாஸ்பிட்டலிலேயே தங்கிடறேன் மா.." என்று பாலாவுக்கு அலைபேசியில் அழைத்தவன் சொன்னதைக் கேட்டதும், பாலாவுக்கு அவன் இங்கு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நாட்கள் நிழலாய் மனதில்.

வீட்டிலிருந்து தான் செல்வேன், கல்லூரி விடுதியில் தங்கமாட்டேன் என்று அவன் செய்த அழிச்சாட்டியம் கொஞ்சம் அல்ல. இன்றோ மகன் வளர்ந்துவிட்டான். நுண்ணிய சத்ர சிகிச்சைகளை மேற்கொள்ளும் மிகப்பெரிய மருத்துவனாக. ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாயாக அவள் மனம் சந்தோஷத்தில் திளைத்தது.

இந்த நிமிடம் அவள் எவ்வளவு சந்தோஷத்தில் திளைக்கிறாள் என்பது அவளுக்கு மட்டுமேயான உணர்வு. ஒருவேளை அவளை போலவே வாழ்வில் பிள்ளைகளை முன்னுக்கு கொண்டு வருவதை மட்டுமே லட்சியமாகக் கொண்டு ஒவ்வொரு கணமும், கனாக்களுடனே போராடிக் கொண்டிருக்கும் பெற்றோருக்கு, அவள் உணர்வுகள் வெகு எளிதாய் புரியலாம்.

திசைக்கு ஒருவராய் தாயும் தகப்பனும் பிள்ளைகள் வாழ்வை முன்னிருத்தி ஓடிக் கொண்டிருப்பதை, நீங்கள் எங்கள் சந்தோஷத்திற்காக எதையும் செய்யவில்லை, உங்கள் கனவுகளை நிறைவு செய்ய, பணத்தை ஈட்ட மட்டுமே உங்களது போராட்டம் என்று ஒதுங்கி ஒதுக்கி நின்று பேசுமானால் பெற்றோர்களின் மன நிலை என்ன? அதுவும் அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே புரியும். இரண்டு வகை விஷயங்களையும், நாம் கண்டோ, கேட்டோ, அனுபவித்தோ இருப்போம்.

பாலாராமனுக்கு நல்லவேளை பிள்ளைகள் அவ்வாறு அமையவில்லை. இதை எண்ணி நான் நிம்மதியாய் உணர்கின்றேன்.

பாலா தனது கணவன் ராமனிடம், "மாமா, இன்னிக்கி ஆனந்த் ஹாஸ்பிட்டல்லயே தங்கிக்கிடரானாம். நாளைக்கி காலையிலேயே ஏதோ ஆபரேஷன் இருக்காம். நாம ரெண்டு பேருக்கு மட்டும்தான் ராத்திரி சாப்பாடு." என்றவாறே சமயலறைக்குள் நுழைந்தாள்.

ஆனந்த் வந்த பிறகு அவள் முகத்தில் ஒரு ஒளி தெரிகிறது. என்னதான் கணவனும் மற்ற உறவுகளும் சூழ இருந்தாலும் பெற்றவளுக்கு தம் மக்களுடன் இருப்பதுதான் சுகம் என நினைத்தவருக்கு கண்கள் குளம் கட்டியது. இளம் வயதில் கணவனை இழந்த தனது தாயாருக்கும் கூட,தாம் பெற்ற மக்கள்தாம் பற்றுக்கோடு. தன் இளமையை நெய்யாக்கி கடும் உழைப்பு எனும் தீ மூட்டி எங்களை வளர்த்தாள். தமது ஆசைப்படியே எல்லா வேலைகளையும் முடித்து இரவு உறங்கியவர், மீளா உறக்கத்தில் அமிழ்ந்தார். எத்தனை வருஷங்கள் ஆனாலும் தாயாரின் இழப்பு ஈடு செய்ய முடிவதில்லை.

மறுநாள் காலையில் சத்ர சிகிச்சையை முடித்துவிட்டு, சிறிது நேரம் உறங்கியவனை, காலை பார்க்க வேண்டிய நோயாளிகளின் பட்டியலுடன் பார்க்க வந்த ரம்யாவிற்கு அவனை எழுப்பவே மனம் வரவில்லை. ஒரு வாரமாக இதற்காக அவன் எவ்வளவு மெனக்கட்டான் என்பதை அவள் கண்கூடாக பார்த்திருக்கிறாள்.

மருத்துவர்களும் மனிதர்கள் தாம். ரத்தம் சதை நரம்புகளுடன் கூடிய, பசி, தூக்கம் போன்ற எல்லா உணர்வுகளுடனும் சூழ்ந்த சாதாரண மனிதர்கள். நம் நோயை குணப்படுத்தும் சமயம் அவர்களை கடவுள் என்கிறோம். ஆனால் அவர்களை புரிந்துகொள்ள மறுக்கிறோம். ஒருவேளை கடவுளுக்கு ஏது உணர்வு என எண்ணுகிறோமோ?

உள்ளூர எண்ணங்கள் வட்டமிட வேறு வழியே இல்லை, இவரை இப்பொழுது எழுப்பவில்லை என்றால் காலை பார்க்க வேண்டிய நோயாளிகள் நேரம் தாமதமாகலாம். பிறகு டாக்டரும் நானும் நிர்வாகத்திற்கு பதில் சொல்ல வேண்டும்.

காண்டீனுக்கு சூடாக காபிக்கும், காலை உணவுக்கும் தெரிவித்தவள் ஆனந்தையும் எழுப்பினாள். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனை எழுப்புதல் சுலபமாக இல்லை. விடியற்காலையிலேயே சத்ர சிகிச்சை முடித்துவிட்டு அவன் வந்து உறங்க ஆரம்பித்து இரண்டு மணி நேரங்கள்தான் ஆகின்றது. புற நோயாளிகளை பார்த்துவிட்டு ஆனந்த் பன்னிரண்டு மணி அளவில் கிளம்பலாம். ஆனால் அவனால் ஏனோ கண்களைத் திறக்கவே முடியவில்லை. உண்மையில் தூக்கத்தில் அவன் சுற்றுப்புறம் மறந்து நிகிலாவுடன் லண்டனில் இருந்தான்.

ரம்யாவின் குரல் அவனுக்கு கனவின் ஒரு பாகமே. எங்கோ குரல் கேட்கிறது என தூக்கத்தை தொடர்ந்தவனை உலுக்கி எழுப்புவதைத் தவிர ரம்யாவிற்கு வேறு வழி இருக்கவில்லை.

உலுக்கி எழுப்பியவளை, வேகமாக எழுந்தவனுக்கு சுத்தமாக அடையாளம் புரியவில்லை. வெறும் இரண்டு நாட்களாகத்தானே அவளை பார்க்கின்றான்?

ஒருவாறு இருப்பிடம் புரிய மணியை பார்த்தவன் வேகமாக குளியலறைக்குள் நுழைந்தான். விரைவுகதியில் தயாராகி வந்தவனை காலை உணவு மற்றும் காபியுடன் நின்றிருந்த ரம்யாவைக் கண்டதும் அவனுக்கு சிறிதே வெட்கமாயிற்று.

"சாரி ரம்யா... இப்போதான் தூங்க ஆரம்பிச்சேன். அதான்.."

காபியை மட்டும் குடிக்க முயன்றவனை, "என்ன டாக்டர்., டிஃபன் சாப்பிடாம காபி குடிக்கறீங்களே?" என லேசாக கடிந்தவாறே அவனிடம் சூடான இட்லிகளை நீட்டியவளை சிறு புன்னகையுடன் எதிர்கொண்டவன், "விடமாட்டீங்களா... பிளீஸ், நேரமாகிடுச்சு." என்றவனை ஒருவாறு வற்புறுத்தி சாப்பிட வைத்தவள் பற்றி தெரிந்துகொள்ள, அவனுக்கு ஆவல் எழ, அவள் ஏற்கனவே ரிபோர்ட் செய்த டக்டர் விக்டரிடம் அவளை பற்றி விசாரிக்க முடிவு செய்துக் கொண்டான்.

நிகிலாவிடம் கற்ற பாடம்., பெண்களிடம் சற்று தொலைவில் இருக்கவேண்டும். அவர்களைபற்றி ஓரளவாவது தெரியாமல் வட்டத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என்பது.

"உங்க அக்கறைக்கு நன்றி ரம்யா..." என்றவனாய் அவளிடம் அவனது அன்றைய சந்திப்புகளை பற்றிய விபரங்களில் அமிழ்ந்தான்.

நான்கு நாட்கள் விடுமுறையில் வந்திருந்த சிவாவிடம் தனது நிலையை ஆனந்தன் சொல்லி இருக்க, விடுமுறை முடிந்து வந்த சிவாவின் மனது முழுதும் ஆனந்தின் வார்த்தைகளே. ஒருவகையில் அவனுக்கு அதிர்ச்சியும் கூட. வெறும் காதல் என்பது வேறு. மனதுடன், உடலையும் அவளுடன் பகிர்ந்து கொண்டேன் என அண்ணன் சொன்னது சிவாவினால் நிஜத்தில் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை. அண்ணனை தேற்றும் வகை தெரியாமல், "அந்த நாட்டுல இது சகஜம் அண்ணா.. இங்க வீட்டுக்கு வந்துட்ட. அந்த நினைவுகளை கனவுன்னு நினை. தப்பு செயுறது மனுஷ இயல்பு. அதுலேந்து வெளிய வரலன்ன பிறகு தவறுகள் நம்மை மூழ்க வச்சிடும். இதப் பத்தி அப்பாகிட்ட பேசுண்ணா. உனக்கு சரியான பாதையை அப்பாவால சொல்ல முடியும்.."

இவ்வாறாக இருந்தது இருவரின் உரையாடல்.

வாணியும் அவனும் இங்கு வந்து சேரும் வரை சிவா ஒன்றுமே பேசவில்லை. வாணியால் இந்த அமைதி தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவளுக்கு வீட்டில் நடந்தவற்றை சொல்ல ஆயிரம் விஷயங்கள் இருக்க, அவள் அண்ணானோ இடித்த புளிபோல் இருந்தால் எப்படியாம்?

ஒருவாறாக இருவரும் பங்களூரு வந்து சேர, மறுநாள் திங்கள்கிழமை.. தேவையானவற்றை எடுத்து வைக்கவும் தூங்கவும் தான் சரியாக இருந்தது.

திருச்சி வந்த பால சரஸ்வதிக்கு நான்கு நாட்கள் பற்றவில்லை. கொள்ளிடக்கரையில் அமர்ந்து கொண்டு பள்ளிக்கால, கல்லூரிகால நாட்களில் திளைத்தாள். ஜானகியின் கைமணம், அப்பாவின் தோள் சாய்தல் எல்லாமே சுகம்தான்.

இனி வருங்காலம் எப்படி எங்கு கொண்டு சேர்க்குமோ, இந்த நிமிடங்கள் பொக்கிஷம். ஆயிற்று, ஞாயிறு மதியம் அவளும் கிளம்ப வேண்டுமே.

மீண்டும் அடுத்த பதிவுடன் சந்திக்கிறேன்.

உங்கள் தோழி


சுகீ.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top