JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

உதயேந்திர வர்மன்... டீஸர் 2

JB

Administrator
Staff member
உதயேந்திர வர்மன்...

அன்றைய தன் பணியைச் செவ்வனே செய்து முடித்த திருப்தியில் வெகு விரைவாகக் கதிரவன் கரங்களைத் தனக்குள் இழுத்து மறைத்துக் கொள்ள, இருள் நன்றாகவே கவிழத் துவங்கியிருக்கும் இரண்டாம் ஜாம இரவு நேரத்தில் சுக்கிலபட்சத்தின் இறுதி காலத்தில் வெளிப்போந்த முழுமதியின் ஒளியில், அவ்விஜயநகரம் முழுவதுமே அழகு பரிமளித்துக் கிடந்தது.

அரண்மனையின் இரண்டாம் தளத்தில், தனக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த உப்பரிகையில் நின்று கொண்டிருந்த உதயேந்திரனின் இதயம், மட்டும் மீண்டும் மீண்டும் அக்காரிகையிடமே சென்று சேர்ந்து கொண்டிருந்தது.

யார் அவள்?

நான் அவளை முதன்முறையாகச் சந்தித்த அன்று அவள் ஆரோகணித்திருந்த புரவியின் வேகத்தைக் காணும் பொழுதும், சந்திரநந்தனுக்கும் எனக்கும் இடையில் மின்னல் ஒன்று வெட்டியதைப் போல் புகுந்து சென்றதில் கொடிப்போன்ற மேனியை கொண்ட மெல்லியலாளின் வலிமையைப் பார்க்கும் பொழுதும், வீரத்தையும் திடத்தையும் பேரழகையும் ஒருங்கே கொண்டிருக்கும் இப்பெண், சாதாரண ஒரு பிரஜையாக இருக்க வாய்ப்பே இல்லையே!

உப்பரிகையை மென்மையாய் தொட்டு கடந்து செல்லும் தென்றலானது, கால்சராயை மட்டுமே அணிந்து கொண்டு பரந்துவிரிந்த வெற்று மார்புடன் ஆறடிக்கு மேல் உயரமாக நின்றுக் கொண்டிருந்த உதயேந்திரனின் இரு தோள்களின் வழியாகவும் புரண்டிருந்த நீளக்கேசத்தைக் காதலுடன் அசைத்து செல்ல,

இமைகளைச் சிறிதே மூடியவனின் கருமைப் படர்ந்த இருளுக்குள், செவ்வரளியின் சிகப்பையும் செண்பக மஞ்சளையும் கலந்து தீட்டியிருந்த சித்திரத்தை போன்றவளின் பிம்பமே மீண்டும் துளிர்த்தெழுந்ததில், வெடுக்கென்று விழிகளைத் திறந்தான் வர்ம இளவரசன்.

"மீண்டும் மீண்டும் எனக்குள் தோன்றி என்னை நிலைத்தடுமாறச் செய்யும் இவள் யார்?"

மிக மெல்லிய கிசுகிசுப்பான குரலில் தனக்குதானே கேட்டுக் கொண்டிருந்த உதயேந்திரனின் வலது புறமாகத் திடுமென அந்த ஒலிக் கேட்க, வெகு இலேசாகத் தனது தலையை இடது புறமாகத் திருப்பியவன் செவிகளைக் கூர்மையாக்க, அவன் நினைத்தது போல் நிலவியிருக்கும் நிசப்தத்தைக் கிழிக்கக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் மெதுவாக நடந்துவந்த புரவி ஒன்றின் குளம்பொலிக் கேட்டது.

சடாரென்று திரும்பியவனின் பார்வையில், சந்திரனையும் தோற்கடிக்கும் விதத்தில் பிரகாசிக்கும் வெண்மை நிறத்தில் சேலைப் புனைந்திருந்த மகிழ்வதனி, தனது கறுப்பு நிற புரவியின் மீதமர்ந்திருந்தவள், உப்பரிகையில் இருந்து தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கும் வர்ம இளவரசனை அறியாது, அரண்மனையின் திட்டி வாசல் வழியாக வெளியேறிக் கொண்டிருந்தாள்.

அவளைச் சந்தித்த முதல்நாளில் இருந்தே அவளைப் பற்றிய சந்தேகத்துடனே வலம் வந்திருந்த உதயேந்திரனிற்கு, மதியம் தனது விழிகளில் பட்ட நிமிடத்தில் இருந்தே பெண்ணவளைப் பற்றிய அனைத்தையும் அறிய வெகுவாகத் தவித்திருந்தவனுக்கு, இப்பொழுது அந்தி சாய்ந்திருக்கும் இவ்வேளையில் அவள் தனித்து வெளியே செல்வது பெரும் ஐயத்தையும், அதனைத் தொடர்ந்த ஆர்வத்தையும் உருவாக்கியிருந்தது.

இரண்டே விநாடிகள் அவள் சென்ற பாதையையே புருவங்கள் முடிச்சிட பார்த்திருந்தவன், விருட்டென்று தானும் தனது அறைக்குள் நுழைந்து மஞ்சத்தில் கிடந்த தனது குறுவாளை இடைக்கச்சையில் சொருகியவாறே உறைக்குள் இருந்த நெடுவாளையும் எடுத்துக் கொண்டு விடுவிடுவென்று படிகளில் இறங்கினான்.

தன்னைக் கண்டதும் சிரம் தாழ்த்தி வணங்கி நின்ற காவலர்களை அசட்டை செய்யாது ஓட்டமும் நடையுமாக அரண்மனைக்குப் பின் அமைக்கப்பட்டிருக்கும் குதிரை இலாயத்திற்கு ஓடியவன், "பைரவா..." என்று கிசுகிசுப்பான குரலில் அழைக்க, சடாரென்று சப்தம் வந்த திசையை நோக்கி தலையை உயர்த்திப் பார்த்த அவனது வெண்ணிற புரவி, நான்கு கால் பாய்ச்சலில் நண்பனை நோக்கி பாய்ந்து வந்தது.

வழக்கம் போல் அதன் அங்கவடியில் கூடக் கால் பதிக்காது ஒரே தாவில் புரவியின் மீது ஏறி அமர்ந்தவன் அதனது கடிவாளக்கயிறை தனது இடது கரத்தால் பிடித்து இழுக்க, அவனது உணர்வுகளை உணர்ந்து கொண்ட பைரவன் காற்றை விட வேகமாகப் பறந்ததில், மறுநிமிடமே திட்டிவாசலை கடந்திருந்தார்கள் இருவரும்.

"காவலனே! இப்பொழுது ஒரு பெண் கறுப்பு நிற புரவியில் இதே திட்டி வாசலின் வழியாகச் சென்றாளே.. அவள் எந்தத் திசையில் சென்றாள் என்பதைக் கண்டாயா?"

திட்டி வாசலிற்கு அருகில் காவல் புரியும் காவலன் ஒருவனைக் கண்டு வினாவைத் தொடுத்த இளவரசனுக்குச் சிரம் தாழ்த்தி மரியாதை செலுத்தியவன்,

"இங்கிருந்து அரைக் காத தொலைவில் சோலை ஒன்று இருக்கின்றது இளவரசே.. அங்குச் செல்வதாக என்னிடம் கூறிவிட்டு தான் அவர்கள் சென்றார்கள்.. ஆனால் இளவரசே .." என்று இழுத்தான்.

ஒரு சிறிய கேள்விக்கு விரைவாகப் பதிலளித்து முடிக்காது 'ஆனால்' என்று இழுப்பவனைக் கண்டு சட்டெனச் சினம் துளிர்க்க, இளவரசனின் முகமாற்றத்தைக் கண்ட காவலனுக்கு உச்சி முதல் பாதம் வரை நடுநடுங்கத் துவங்கியது.

தொண்டையிலேயே தடைப்பட்டிருந்த எச்சிலை சிரமப்பட்டு விழுங்கியவனாக,

"ம.. மன்னிக்க வேண்டும் இளவரசே.. எ... எவரும் தன்னைத் தேடினாலோ அல்லது தன்னைப் பற்றி விசாரித்தாலோ அவர்களிடம் தான் செல்லும் இடத்தைப் பற்றிக் கூறக்கூடாது என்று உ...உ... உத்தரவிட்டே சென்று இருக்கின்றார்கள் இளவரசே.." என்றான் மரியாதையும், உதயேந்திரனின் முகத்தில் படிந்திருக்கும் கடினத்தையும் கண்டு அச்சமும் கலக்கமும் கலந்த குரலில்.

"ஹ.. உத்தரவா? மகாராணி உத்தரவிட்டு சென்றிருக்கிறார்களா?"

காவலனின் பதிலில் வியப்புற்றவனாய் ஒற்றைப் புருவத்தைத் தூக்கி கிண்டலும் ஏளனமுமாய்ப் பேசியவாறே பைரவனின் சேணத்தை வெடுக்கென்று இழுக்க, அவன் கூறாமலேயே சோலையை நோக்கி பறக்கத் துவங்கியது உதயேந்திரனின் புரவி.

"அரைக் காத தூரத்தில் இருக்கும் சோலைக்கா? இந்நேரத்தில் அவளுக்கு அங்கு என்ன வேலை?"

மனதிற்குள் கூறிக் கொண்டவனாக அடுத்தச் சில மணித்துளிகளிலேயே சோலையை அடைந்தவன் அங்குமிங்கும் புரவியைச் செலுத்திக் கொண்டே மகிழ்வதனியைத் தேட, கண்ணுக்கெட்டும் தூரம் வரை அவள் சென்ற சுவடையே அறியாது குழம்பிப் போனான் உதயேந்திரன்.

"அதற்குள் எங்கு மறைந்துவிட்டாள்? இவ்விடத்தைப் பார்த்தால் சோலைப் போன்றே தெரியவில்லையே.. ஏதோ அடர்ந்த காடு போல் தெரிகிறதே.. இந்நேரத்தில் ஒரு பெண்ணிற்கு இதற்குள் என்ன வேலை இருக்க முடியும்?"

அவ்விருள் வேளையிலும் வெண்மதியின் மங்கலான வெளிச்சத்தில் பிரகாசிக்கும் செங்கழுநீர்ப் புஷ்பங்களைச் சுமந்த மரங்களும், குயில்கள் விரும்பி உண்டு வாழும் கொத்துக்கொத்தாகப் பூக்கும் நறுமணம் மிக்கக் குரவ மலர்களைத் தாங்கியிருக்கும் குரவமரங்களும், தென்றலின் தழுவலினால் முல்லை மல்லிகைப் பூக்களை ஏந்திக் கொண்டிருக்கும் கொடிகளின் அசைவும் உதயேந்திரனை அச்சோலையின் பால் இழுத்ததில், தனது இடையில் சொருகியிருக்கும் நீண்ட வாளையும், குறுவாளையும் ஒரு முறை சோதித்துப் பார்த்தவன் சட்டென்று சோலைக்குள் நுழைந்தான்.

எங்கோ மலர்ந்து கொண்டிருந்த மனோரஞ்சித மலர்களின் நறுமணமும், சோலைக்கு நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் வாவியில் ஆங்காங்கு அந்தி நேரத்தில் விரிந்து பொழுது புலரும் வேளையில் சுருங்கிப் போகும் சிகப்பு நீர் அல்லி மலர்களின் சுகந்தமும், அச்சோலை முழுவதிலும் நறுமணத்தைத் தென்றலுடன் இணைந்து தவழவிட்டிருந்ததில், மதியை மயக்கும் சூழ்நிலைக்கு வித்திட்டு இருந்ததை இரசித்தவாறே ஏறக்குறைய ஒருநாழிகைக்கும் மேலாகச் சென்று கொண்டிருந்தவனின் விழிகளில் மட்டும், அப்பெண் தென்பட்டால் இல்லை.

'எங்குப் போயிருப்பாள்? மாயமாய் மறைய அவள் என்ன தேவதையா? அல்லது மோகினியா?'

எண்ணியவாறே புரவியை வெகு நிதானமாகவும், மெதுவாகவும் செலுத்திக் கொண்டிருந்த உதயேந்திர வர்மன் கண்களை நாற்புறங்களிலும் சுழலவிட, அடர்த்தியான இருளை சுமந்திருக்கும் அச்சோலையினுள் மரங்களுக்கும், சொடிகொடிகளுக்கும் இடையில் வெளிச்சத்தைப் பாய்ச்சியிருந்த சந்திரனின் ஒளியில் தெரிந்த காட்சியைக் கண்ட உதயேந்திரனின் கண்கள், சில விநாடிகள் இமைக்க மறந்தது போல் ஒரு இடத்தில் நிலைக்குத்தி நின்று, பின் தானாகவே மெல்ல மூடி திறந்தது..

*************

வானவெளியில் ஓடிய பிறைமதி தனது மோகனாஸ்திரங்களை நேராக மங்கையவளின் மீது தெளித்திருக்க, பூமேனியை நெருடக்கூடாது என்பது போல் இலகுவாகச் சுற்றியிருந்த வெண்ணிற சேலையில் புஷ்பக்கொடி ஒன்று அமர்ந்திருப்பதைப் போன்று,

வாவிக்கருகில் இரு கால்களையும் மடித்துத் தனது கரங்களைக் கொண்டு வளைத்தவாறே, முழங்கால்களில் தலையைச் சற்றே சாய்வாகப் பதித்து வாவியினுள் மலர்ந்திருக்கும் மலர்களின் மீது அழகிய விழிகளைப் பதித்தவாறே அமர்ந்திருப்பவளைக் கண்ட, எதற்குமே சலனப்படாத உதயேந்திரனின் இதயம் கூட அந்தச் சமயத்தில் கனவேகமாக அடித்துக் கொள்ளத் துவங்கியது.

'மாயமாய் மறைய இவள் மோகினி, இல்லையில்லை, தேவதையே தான்!!!'

விநாடிகள் நேரம் ஸ்தம்பித்து நின்றவன் அவள் ஏதோ ஒரு மோன நிலையில் இருப்பது போல் தோன்றியதில், அரவம் ஏதும் செய்யாது மெல்ல தனது புரவியை விட்டு கீழிறங்கியவன் தலையசைவாலேயே பைரவனுக்குக் கட்டளையிட, சத்தமிடாது மெல்ல அடி எடுத்து வைத்து மரங்களுக்கிடையில் மறைந்து போனது அவனது புரவி.

குதிரையின் குளம்பொலியோ அல்லது தான் அதனை விட்டுக் கீழிறங்கியதில் கேட்ட மெல்லிய சப்தமோ கூட அப்பெண்ணவளின் மெய்மறந்த நிலையைக் கலைக்காதிருக்க, ஸ்வாசிக்கும் சப்தம் கூட வெளிவராது திறந்திருக்கும் இமைகள் திறந்தபடியே, அவளை ரசிக்கத் துவங்கினான் வர்ம இளவரசன்.

அள்ளி முடியாது விரித்துவிட்டிருந்த நீண்ட கூந்தலானது அவள் அமர்ந்திருந்ததால் நிலத்தின் மீது காதல் கொண்டது போல் புரண்டு கொண்டிருக்க, திடுமென வீசிய தென்றல் காற்றின் வேகத்தில் கேசமானது மெல்ல எழுந்து பக்கவாட்டில் பறந்ததில் மங்கையவளின் பின்னழகு, கால்கள் இரண்டும் வேரோடி போனது போல் அசையாது நின்றிருந்த உதயேந்திரனின் உள்ளத்தையும் அசைத்துப் போட்டதில், அவனது வலிமையான உடலே ஒரு முறை சிலிர்த்து அடங்கியது.

அவனையும் அறியாது நெஞ்சத்தைப் பிளந்து வெளியிட்ட நெடுமூச்சில், அதுவரை உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது போல் முழங்காலில் தலைபதித்து அமர்ந்திருந்தவளின் புலன்கள் விழித்தெழ, பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்த சந்திரனின் ஒளி மேகங்களால் மறைக்கபடாதிருந்ததில், தனக்கு வெகு அருகில் விழுந்திருக்கும் நிழலைக் கண்டு தனக்குப் பின்னால் நிற்பவனை உணர்ந்து கொண்டால் மகிழ்வதனி.

ஆயினும் அசையாது அமர்ந்திருந்தவள் சத்தமிடாது தலையை மட்டும் நிமிர்த்த, அவளின் செய்கையில் மெல்ல அவளை நோக்கி அடி எடுத்து வைத்த உதயேந்திரனே திகைத்துப் போகும் அளவிற்கு மின்னலென எழுந்தவளின் கரம், தனது சேலை மறைவில் இடைக்கு அருகில் மறைத்திருந்த வாளை விருட்டென்று வெளியே எடுத்தது.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தரையில் இருந்து எழுந்திருந்தவள் உதயேந்திரன் சுதாரிக்கும் முன்னரே தனது வாளை அவனது கழுத்தில் பதித்திருக்க, தன்னை இரு பாகங்களாக வெட்டிப் போடும் நோக்கில் வாளை வீசியவளின் வேகத்தில் அசந்து போனான் என்றால்,

விநாடிக்கும் கீழ் மிகத்துல்லியமாகத் தான் யாரென்பதை உணர்ந்ததும் தன்னைக் கொன்றுப் போடாமலும், அதே சமயம் வாளைக் கீழே இறக்காமலும் நின்றிருக்கும் அவளின் சாதுர்யத்தை எண்ணி, வியப்பில் ஆழ்ந்து போனான் வர்ம இளவரசன்.

மங்கலான வெளிச்சத்தைச் சிருஷ்டித்திருந்த நிலவின் கிரணம் அவள் புனைந்திருந்த வெண்மை நிறப் பட்டுச்சேலையில் பல புறங்களிலும் சிதறி ஒளிர்ந்ததில், பெண்ணவளின் பேரழகு வதனம் தன் மீது மோகனாஸ்திரங்களை வீசிக்கொண்டிருப்பதைப் போல் உணர்ந்த உதயேந்திரனின் விழிகள், அவளின் முகத்தை ஈட்டியைவிடக் கூர்மையாகத் துளைத்தெடுக்கத் துவங்கியது.

வாள் போல் வளைந்து கிடந்த அவள் நுதலும், சற்றுக் கீழே விற்கள் போல் நெளிந்திருக்கும் புருவங்களை அடுத்து கரிய இமைகளுக்குள்ளே நீண்ட அகன்ற வாட்களைப் போன்ற விழிகளும், கோபத்தில் இலேசாக விடைத்திருக்கும் கூரிய நேரான நாசியும், நேர்த்தியாக மேடிட்டு இருக்கும் பட்டுக்கன்னங்களின் பளபளப்பும், தன்னைக் கண்டதும் எதுவோ கூற முற்பட்டது போல் மென்மையாகத் துடித்துக் கொண்டிருக்கும் செவ்வதரங்களும் ஆடவனுக்கு மிதமிஞ்சிய மயக்கத்தை அளிக்க, இன்னமும் தனது கண்களை ஊடுருவுவது போல் பார்த்து நின்றவளின் காந்த விழிகளை மீண்டும் பார்த்த உதயேந்திரனின் உள்ளம் திடுக்கிட்டது..

தனிமையை விரும்பியது போல் அடர்ந்த இருள் சுமந்திருக்கும் இச்சோலைக்குள் தனித்து அமர்ந்திருந்தவள், எனது அரவத்தைக் கேட்டும் அசையாது சில விநாடிகள் நிதானித்து, பின் விருட்டென்று எழுந்தவளின் கூரிய வாள் எனது உயிரை பதம் பார்க்க விரும்புவது போல் கழுத்தில் அழுந்திப் பதிந்திருக்க, இத்தகைய துணிவும் வீரமும் கொண்டுள்ள இப்பெண்ணின் மயக்கும் விழிகளில் இருந்து வழியக் காத்திருக்கும் நீரா?

தன்னை ஆழ்ந்து ஆராயும் நோக்குடன் பார்த்திருக்கும் இளவரசனின் கண்கள் சற்றே இடுங்கியதில், அவன் தனது கண்ணீரை கண்டு குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறான் என்பது புரிந்தாலும், அவனது கழுத்தில் அழுந்திக் கிடக்கும் வாளை அகற்றாது, மறு கரத்தால் தனது இடையில் சொருகியிருக்கும் குறுவாளையும் இறுக்கிப் பிடித்தவாறே நின்றிருப்பதால் விழி நீரைத் துடைக்க இயலாது நிற்க, தன்னையும் அறியாது அவளது நீண்ட முடிகள் கொண்ட இமை மூடித் திறந்ததில், நீர் மணிகள் சட்டென்று கன்னத்தில் வழிந்தன.

"வீரத்தையும், துணிவையும் ஒருங்கே சுமந்திருப்பவளின் விழிகளில் கண்ணீரா?"

அழுத்தமான கணீரென்ற குரலில் கூறும் உதயேந்திரனின் மார்பை தாண்டி சிறிதே உயரமாக இருந்தவள் அவனை அண்ணாந்து பார்த்திருக்க, பெண்களின் கண்ணீரால் கூட எனது கடினமான மனத்தைக் கரைக்க இயலாது என்பது போல் முடிச்சிட்ட புருவங்களோடு அவளையே ஆழ்ந்துப் பார்த்திருந்தவன் அடுத்த விநாடி செய்த செயலில், திடுக்கிட்டு அதிர்ந்துப் போனாள் அவ்விளம் பேதை.

கண்ணிமைக்கும் நேரத்தில் தனது கழுத்தில் வாளை பதித்திருக்கும் அவளது வலது கரத்தை தன் இடது கையால் பற்றியவாறே சட்டென்று குனிந்து நகர்ந்தவன், அவளை ஒரு முறை சுழற்றி தனது வலிய உடலின் முன்பகுதி முழுவதுமாக அவளது மெல்லிய மேனியின் பின்புறம் மோதுமாறு நிற்கச் செய்ய, எதிர்பாராது அவன் சிருஷ்டித்திருந்த இச்சூழலில் திகைத்தவள் குறுவாளை சேலைக்குள்ளிருந்து உருவ முனைவதற்குள், அவளது மறுகரத்தையும் அசையவிடாது இறுக்கப் பற்றியிருந்தான் இளவரசன்.

தனது மேனி முழுவதுமே மேலாடையில்லாத அவனது வனப்பமும் திடகாத்திரமுமான உடலுக்குள் அடங்கியிருந்ததில் தவித்துத் திகைத்தவள் தன்னை விடுவித்துக் கொள்ளப் போராட, அங்குலத்திற்கும் குறைவான அளவுக் கூட அவள் தன்னைவிட்டு நகர இயலாது இறுக்கிப் பற்றியிருந்தவனின் உறுதிக்கு முன், சீறிப்பாயும் வேங்கையின் பாய்ச்சலுக்கு அஞ்சி ஓடும் புள்ளிமானின் தொய்வைப் போன்று, பெண்ணவளின் மென்மை தோற்றுப் போனது.

"தனித்திருக்கும் ஒரு பெண்ணிடம் இவ்வாறு நடந்து கொள்ளவது தவறென்று உங்களுக்குத் தோன்றவில்லையா?"

கோபமும் ஆற்றாமையும், அதனுடன் தன்னை ஒரே விநாடியில் அவனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் அடக்கி வைத்திருப்பவனின் வன்மையை உணர்ந்து கொண்ட கலக்கத்திலும், செக்கச்சிவந்திருக்கும் முகத்துடன் வார்த்தைகளை அழுத்தமாக உச்சரிப்பவளைக் கண்டு அவளின் செவியோரம் குனிந்தவன்,

"இந்த உதயேந்திர வர்மனை எதிர்த்து வாளை வீசிய எவருமே அரை விநாடிக்கும் மேல் பிழைத்திருந்ததில்லை பெண்ணே.. ஆனால் நீ இன்னும் உயிருடன் தான் இருக்கின்றாய்.. அதுவே நான் செய்து கொண்டிருக்கும் தவறன்றி, என்னைக் கொல்ல முனைந்த உன்னை இவ்வாறு சிறைப்பிடித்திருப்பது அல்ல.." என்றான் எள்ளலும், அத்துடன் அளவுக்கதிகமாகவே அதிகாரமும் மிரட்டலும் கலந்த குரலில்.

சொற்களை உதிர்த்துக் கொண்டே மெல்லிய பெண்ணவளின் கைகள் இரண்டையும் தன் வலிய கரங்களால் இறுக்கிப் பிடித்தவாறே தன்னைவிட்டு அவள் தப்பி ஓட இயலாத வகையில், அவளைத் தனது மார்புக்குள் மேலும் அழுத்திக் கொண்டவனின் வார்த்தைகள் அழுத்தமாக வெளிவந்து கொண்டிருந்தாலும், ஆண்மையின் சுயரூபமாக நின்று கொண்டிருக்கும் ஆண்மகனின் குரல் இரும்பை விடக் கடினமாகத் தோன்றினாலும்,

அவளின் உணர்வுகளை ஒரு பொருட்டாக மதியாத உதயேந்திரனின் சரீரத்தில் முதன்முறையாகப் பட்டுக்கொண்டிருக்கும் இளம் காரிகையின் ஸ்பரிசம் நெருப்பை வாரிக்கொட்டத் துவங்கியதில், கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்த அக்னியின் விளைவாக விவரிக்க இயலாத உணர்ச்சி அலைகளில் திடுமென ஆட்கொள்ளப்பட்டான் வர்ம இளவரசன்.

திமிறவும் இயலாத வகையில் அடங்கி ஒடுங்கிக் கிடந்தவளின் தாமரைத் தளிர் மேனி, எஃகை ஒத்த உடலைக் கொண்டிருந்தவனின் இறுக்கத்தைத் தாளாது மெல்ல துவண்டு அவன் மேலேயே சாய, அவளின் நெகிழ்தலை உணர்ந்திருந்த உதயேந்திரனின் முகம் அவளது கன்னத்தை நோக்கித் தாழ்ந்தது.

ஆடவனின் வெட்பத்தைச் சுமந்திருக்கும் மூச்சுக் காற்று பெண்ணவளின் கன்னத்தில் பட்டுப் பின் கழுத்திற்கு இறங்க, வாழ்க்கையில் இதனைப் போன்ற எத்தனை எத்தனையோ பயம் சூழ்ந்த தருணங்களைச் சந்தித்திருந்தவளுக்கு, விக்கிரம்மசிம்மன் போன்ற காமத்தின் பிடியில் சிக்கியிருக்கும் மனித மிருகங்களிடம் இருந்து சாதுர்யமாகத் தப்பித்து இருந்தவளுக்கு,

ஏனோ இவ்விளைஞனின் அருகாமை வியப்புறும் வகையில் அதிக அச்சத்தைக் கொடுத்ததில், செய்வதறியாது அதிர்ந்துப் போய் நின்றவள் தன்னையும் அறியாது விழிகளை இறுக்க மூடிக்கொண்டாள்.

அவளது கன்னத்திற்கு வெகு அருகில் குனிந்திருந்தவனின் பார்வையில், தனது ஸ்பரிசத்தை ஏற்க இயலாத திகிலில் மகிழ்வதனியின் அகன்ற விழிகள் அழுந்த மூடிக் கொள்வது பட்டதும், மெல்லிய நகையை உதடுகளில் பரவவிட்டவாறே,

"உனது துணிவை மற்றவர்களிடம் தான் காட்டுவாய் போல் தெரிகின்றது.. என்னிடம் இல்லையா?" என்று கரகரப்பான குரலில் கேட்கவும், அழுந்த மூடியிருந்த இமைகளை வெடுக்கென்று திறந்தவளின் அகங்காரமும் ஆத்திரமும் மீண்டும் துளிர்க்கத் துவங்கின..

"என்னை விடப்போகிறீர்களா இல்லையா?"

"விட்டுவிடுகிறேன், ஆனால் நீ யார் என்று சொல்லும்பட்சத்தில்?"

"யாரென்றே அறியாத பெண்ணை இப்படித் தான் உங்களது வர்ம ராஜ்யத்தில் திமிற திமிற இறுக்கிப் பிடித்திருப்பார்களா, இளவரசே?"

வார்த்தைகளை மொழிந்தவாறே தனது முகத்தை நோக்கி சரேலெனத் திரும்பியவளின் நீர் திரண்டிருக்கும் விழிகளையும், மௌனமாகத் துடித்திருக்கும் இதழ்களையும், செந்தாமரைப் போன்று மலர்ந்திருக்கும் முழு வதனத்தையும் கண்ட உதயேந்திரனின் இதயம், அவளை அந்நிமிடமே அபகரித்துவிடும் நோக்கில் தவித்துத் தத்தளித்துச் சுருங்கி விரிந்தது ஒரு கணம்..

ஒன்றோடு ஒன்றாக இழையத்தூண்டும் தூரத்தில் இருவரின் உதடுகளும் நெருங்கியிருந்ததில், மங்கையவளின் செம்பவளத்தையும் தோற்கடிக்கும் விதத்தில் சிவந்திருக்கும் அதரங்களின் மீது ஒருமுறை பார்வையைப் பதித்த உதயேந்திரன் மீண்டும் அவளது விழிகளை நோக்கி தன் பார்வையை உயர்த்த, இளவரசனின் குத்திக்கிழிக்கும் கண்களின் நோக்கைக் கண்ட மகிழ்வதனியின் நெஞ்சுக்கூட்டினுள் குளிர் ஏறத் துவங்கியது.

இருந்தும் தைரியத்தை கைவிடாதவளாக அவனிடம் மீண்டும் முரண்டுப்பிடிக்க,

"எனக்கு மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியைக் கேட்பதும் பிடிக்காது, எனது கேள்விக்குப் பதிலளிக்க மறுப்பவர்களையும் பிடிக்காது பெண்ணே.. ஆகையால் பதில் கூறாதவரை இந்த உதயேந்திர வர்மனின் கரங்களில் இருந்து நீ விடுபடப் போவதில்லை என்பது இந்நேரம் உனக்கும் புரிந்திருக்க வேண்டும்.. இருந்தும் ஏன் இந்தப் பிடிவாதம்?.." என்றவாறே, குறுவாளைப் பிடித்திருந்தவளின் கரத்தோடு சேர்த்து தனது கையையும் அவளின் வயிற்றில் மேல் அழுந்த பதித்தான்.

இளவரசனின் செய்கைகள் அத்து மீறிக் கொண்டிருப்பதை உணர்ந்ததில் தன்னை அவனிடம் இருந்து விடுவித்துக் கொள்ளத் தன் ஒட்டு மொத்த வலுவையும் ஒருங்கிணைத்தவள், அவனைப் புறம் தள்ள வெகுவாக முயற்சித்த விநாடி, இருவருக்கும் பின்னால்,

"உதயா! விடு அப்பெண்ணை.." என்ற குரல் திடுமெனக் கேட்டது.

சட்டென மகிழ்வதனியை விட்ட உதயேந்திரன் பின் புறம் நிற்கும் சந்திரநந்தனைத் திரும்பிப் பார்க்க, அதற்குள் உதயேந்திரனை விட்டு சில அடிகள் நகர்ந்து நின்றவள், இளவரசர்கள் இருவரின் மீதும் மாற்றி மாற்றித் தன் விழிகளை நகர்த்தினாள்.

"பெண்ணே! யார் நீ? இந்நேரத்தில் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்? உங்கள் இருவருக்குள்ளும் என்ன நடந்தது?"

புரவியில் இருந்து கீழே குதித்திறங்கியவாறே கேட்கும் சந்திரநந்தனின் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் வாயைத் திறக்கப் போனவள் மீண்டும் ஒரு முறை உதயேந்திரனின் மீது பார்வையைப் படியவிட்டு,

"வாவியில் பூத்திருக்கும் மலர்களை இரசிப்பதற்கும், மனதை மயக்கும் நறுமணம் வீசும் மனோரஞ்சித பூக்களின் சுகந்தத்தை இரசிப்பதற்கும் நேரம் காலம் இருக்கின்றதா நந்த இளவரசே?" என்றாள் ஏளனமும் அசட்டையும் தோன்றும் புன்னகையுடன்.

அவள் தன்னைக் கண்டு தான் இகழ்ச்சி நகைப் பூக்கிறாள் என்பதை உணர்ந்துக் கொண்டாலும், புன்னகைக்கும் பேரழகு பெண்ணவளின் கண்களின் கூர்மையும், அதில் பளிச்சிடும் ஒளியும் உதயேந்திரனின் புத்திக்கு எதனையோ வலியுறுத்தியதில் அவனது புலன்கள் எச்சரிக்கையடைய,

"பூக்களை ரசிப்பதற்கும் நறுமணத்தை முகர்வதற்கும் நேரமும் கிடையாது காலமும் கிடையாது, ஆனால் அவை பாதுகாப்பான இடங்களில் இருக்கும் பட்சத்தில்... நடுச்சாம வேளையில் பெண்ணொருத்தி தனிமையில் இச்சோலைக்குள் வருவது பாதுகாப்பல்ல.." என்றான் உதயேந்திரன், தொனியில் ஆணவத்தைக் கொணர்ந்து.

"வாளும் குறுவாளும் இருக்கும் பொழுது பாதுகாப்பிற்கு வேறு என்ன வேண்டும்?"

சீற்றம் தனியாத குரலில் சிறிதே நக்கலையும் கலந்துக் கூறுபவளின் முகத்தையே வைத்த கண் வாங்காது பார்த்திருந்த உதயேந்திரனின் கண்கள், அவள் தன்னிடமிருந்து தள்ளி அகன்ற நேரத்தில் மங்கையவளின் மேனியை தழுவியிருந்த வெண்ணிற சேலையானது இலேசாக நெகிழ்ந்துக் கிடக்க, இன்னமும் வாளின் மீதும் குறுவாளின் மீதும் கைகளை வைத்திருந்தவளைக் கண்டு வேண்டுமென்றே இகழ்ச்சி நகையை உதிர்த்தவனாக,

"ஆயுதங்களின் மீது மட்டுமே கரங்களைப் பதித்திருப்பது பாதுகாப்பல்ல பெண்ணே.. பெண்களின் கரங்களுக்கு வேறு சில வேலைகளும் சில நேரங்களில் அத்தியாவசியம் ஆகிவிடுகின்றன.." என்றான் அதுவரை இகழ்ச்சியுடன் நெளிந்துக் கிடந்த முறுவலை இதழ்களில் இருந்து சட்டென்று துடைத்தெடுத்தவாறு..

உதயேந்திரனின் கூற்றில் பொதிந்திருக்கும் பொருள் புரியாது விழிகளைச் சுருக்கியவாறே சந்திரநந்தன் அவனையே பார்த்திருக்க,

தன்னிடமிருந்து வெடுக்கென்று நகர்ந்திருந்தவளின் அவசரத்தில், மங்கையவளின் மென்மேனியைத் தழுவி கொண்டிருந்த சேலையானது சற்றே நெகிழ்ந்திருந்ததில் ரவிக்கையானது மார்பு பகுதில் லேசாக விலகியிருக்க, பளிங்குடன் போட்டியிடும் வெண்சங்கு கழுத்தில் புரண்டுக்கொண்டிருக்கும் முத்துமாலையின் பளபளப்பில் அவளின் வழவழக்கும் தேகம் மேலும் பிரகாசித்திருக்க,

ஆயுதங்களைப் பிடிக்க வேண்டிய ஒரே குறிக்கோளுடன் தன்னை மறைக்க, தான் மறந்துப் போனதையே அவன் கூறுகிறான் என்பதை அவனது விழிகளின் போக்கை வைத்தே உணர்ந்திருந்த மகிழ்வதனி வெகுண்டெழுந்தாள்.

உதயேந்திரனின் இடது கரம் கச்சையில் சொருகப்பட்டிருக்கும் குறுவாளின் மீதும் வலது கரம் அவனுக்கு வெகு அருகில் நின்று கொண்டிருக்கும் சந்திரநந்தனின் தோளிலும் கிடந்ததைக் கண்டவள், அவனது இடது கைப்பழக்கத்தை அறியாதவளாகச் சடாரென்று தனது வாளை மீண்டும் அவனை நோக்கி வீச,

அதற்குள் தனது இடது கரத்தால் குறுவாளை கச்சையில் இருந்து உருவியிருந்தவன் அவளது வாளை சரேலெனத் தடுத்த விதத்தில் பெண்ணவள் தடுமாறி கீழே விழப்போகவும், சட்டென்று இரு அடிகள் முன்னோக்கி நகர்ந்த சந்திரநந்தனின் கரங்களில் தொப்பென்று சரிந்து விழுந்தாள் அந்தக் கோதை.

மின்னெல் வெட்டியது போல் அனைத்தும் அரை விநாடிக்குள் நடந்துவிட, தனது கரங்களில் புஷ்பக்கொடி போல் விழுந்துக்கிடக்கும் தளிர் மேனியவளின் மென்மையையும் தோற்கடிக்கும் மெல்லிய ஸ்பரிசத்தில், ஒரு கணம் உணர்ச்சி வெள்ளத்தில் சிக்கிப்போனதில் அடியோடு ஸ்தம்பித்திருந்த சந்திரநந்தனைக் கண்ட உதயேந்திரனின் இதயம், முதல்முறை தனது பணியை மறந்ததைப் போல் உறைந்து நின்று பின் துடித்தது.

அதுவரை அவளைச் சீண்டிக் கொண்டும், கடினமாக வார்த்தைகளை உதிர்த்து கடிந்துக் கொண்டும், அவள் யார் என்பதை அறியும் ஆர்வத்தில் மிரட்டிக்கொண்டும் இருந்தவனுடைய உள்ளம், சந்திரநந்தனின் இறுக்கியபிடியில் தவழ்ந்து கிடப்பவளைக் கண்ட அந்நொடி அதிர்ந்ததில் மனம் உலைக்களம் போல் கொதிக்க, அவனையும் அறியாது குறுவாளைப் பிடித்திருந்த உதயேந்திரனின் பிடி, நரம்புகள் தெறித்துவிடும் அளவிற்கு இறுகியது..

ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்..
சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய்..

அட நான் என்ற ஆணவம் அழிய வைத்தாய்..
உன் பார்வையிலே என்னைப் பணிய வைத்தாய்...

என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்..
உன் காலடியில் என்னைக் கனிய வைத்தாய்...

ஒரு மலையில் நான் கண்ட மாணிக்கமா..
என்மனதில் உந்தன் ஆதிக்கமா...

இது ஒருநாள் இருநாள் நீடிக்குமா..

இல்லை உயிரின் மூலத்தைப் பாதிக்குமா....
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top