• Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், jlinepublications@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Dear Guest, Please register in the forum to read stories of the writers and post your valuable comments. Please email: jlinepublications@gmail.com or whatsapp: +91-6384850278 any login related queries.

Buy Tamil Novels online

கண்ணன் என் மைந்தன் 2

கண்ணன் என் மைந்தன்

பகுதி 2

ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக.ஸ்டைலாக தன் கேசத்தை நீவிவிட்டு தன் வசீகரப் புன்னகையை அவன் பூக்க, ஆண் அழகனாய் தன் முன் நின்றவனைப் பார்த்தவள்..
அர்ஜுன்.. வந்துட்டியா அர்ஜுன் என்று தன்னை மறந்து அவன் தோள்களில் சாய, அவன் உருவம் மறைந்து யாமினியின் பிம்பம் மட்டுமே தெரிய, ஏமாற்றமும் விரக்தியும் அவள் மனதில் நொடிப்பொழுதில் சூழ.. டிங் என்ற சத்தத்துடன் லிப்டின் கதவு திறந்து கொண்டது.
ம்.. இனி அர்ஜூனைப் பற்றி யோசிக்காமல் தன் முழு கவனத்தையும் தன் பணியில் மட்டுமே செலுத்த வேண்டும் என்று தீர்மானித்து மலர்ந்த் முகமாய் அவள் முகம் வேடமிட, துள்ளல் நடையுடன் அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.
ஹாய் யாமினி.. குட் மார்னிங் என்று அனைத்து சக ஊழியர்களும்.. அவள் தோழிகளும் அவளை உற்சாகத்துடன் வரவேற்க, யாமினியும் குட் மார்னிங் ஃப்ரன்ட்ஸ் என்று போலியாக அவள் பூசிக் கொண்ட புன்னகை இப்போது நிஜமாகிப் போனது.
பின் அவள் கேபினில் வந்து அவள் அமர, அவள் கண்கள் தானாக தன் அருகில் இருக்க வேண்டிய தன் உயிர்த் தோழி வாணியைத் தேடியது.
பின் இன்றைய பொழுது நல்லபடியாக அமைய வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டு கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆன் செய்தாள் யாமினி. அது அவளுடைய வழக்கமாகவே மாறியிருந்தது. கடவுள் நம்பிக்கை எதுவும் பெரிதாக இல்லா விட்டாலும் இந்த சாப்ட்வேர் துறையில் வந்ததிலிருந்து பிரச்சினைகள் எங்கிருந்து வேணாலும் வரலாம் என்று புரிந்துகொண்டதில் இருந்து சிறிது தொற்றிக் கொண்டது என்று கூட சொல்லலாம்.

இன்னும் வாணியைக் காணவில்லையே என்று யோசிக்கும் போதே வந்து சேர்ந்தாள் அவள் தோழியும் சக ஊழியையுமான வாணி.
என்னடி..இன்னைக்கும் வழக்கம் போல லேட்டா என்றாள் குறும்புடன் யாமினி. ம்.. நீ ஏன்டிபேச மாட்ட.. உன் வீடு பக்கத்துலே இருக்கு.. நான் ரெண்டு பஸ் மாறி வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது.
ம்.. இன்னொரு வசனத்தை விட்டுட்டியே.. எனக்கு ஒன்னு தான் உனக்கு ரெண்டு, அதையும் சொல்லிடு என்று எடுத்துக் கொடுப்பது போல் யாமினி சிறு குறும்புடன் சொல்ல.
என் பாடெல்லாம் உனக்கு புரியாது யாமினி. பட்டால்தான் தெரியும். இரண்டுன்னு நீ சாதாரணமா சொல்லிட்ட..காலையில அவசர அவசரமா எந்திரிச்சு குளிச்சு, பிள்ளைகளைக் கிளப்பி, அவர்களை பள்ளிக்கு அனுப்பி பஸ்ல ஏறுவதுக்குள்ள லேட் ஆயிடுது.
நீ உனக்கு மட்டும் சமைச்சா போதும். அதுதான் கஷ்டம் தெரியல..என்றாள் வாணி. ஆனால் அவள் அவ்வாறு கூறியதும் யாமினியின் முகம் சட்டென வாடி விட்டது. வாணிக்கும் தான் அவ்வாறு கூறியது எவ்வளவு பெரிய தவறு என்பது புரிய.
ஐ ஆம் சாரி, யாமினி. நான் உன்னைக் காயப்படுத்த அப்படிச் சொல்லல என்று அவள் கையைப் பிடித்து மன்னிப்பு கேட்டாள். யாமினிக்கு வாணியைய் பற்றி நன்றாகவே தெரியும்.. என்பதால் பரவாயில்லை வாணி.. விடு.. என்று உடனே சகஜ நிலைக்குத் திரும்பி.. ஒரு மெல்லிய புன்னகையைப் படர விட்டாள்.
அப்போது அவர்கள் டீம் லீடர் அவர்கள் அருகில் வர... இருவரும் வேலையில் மூழ்கினர்.
இரவு 6 மணி வரையிலும் இருவருக்குமே ப்ராஜெக்ட் முடிக்க வேண்டிய நெருக்கடியில் நேரம் கிடுகிடுவென ஓடியது. வீட்டுக்கு திரும்ப கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆஃப் செய்த போது வாணி மறுபடியும் யாமினியின் கைகளைப் பிடித்து மன்னிப்புகேட்டாள்.
ஏய் அதெல்லாம் நான் அப்போதே மறந்துட்டேன்..

இல்லை யாமினி.. எனக்கே தெரியுது.. நான் வரவர ரொம்ப புலம்ப ஆரம்பிச்சிட்டேன்ல.. நானும் பல தடவை யோசிச்சு.. இனிமே இந்த மாதிரி புலம்பக் கூடாதுன்னு தீர்மானிப்பேன். ஆனா வேலை பழுதுல என்னைய மறந்து பேசிடறேன்.. இப்ப எனக்கே என்னைப் பிடிக்கல.. ஒருவேளை இந்த குழந்தைகள் இரண்டுமே என் குழந்தைகளா இருந்தா இப்படி புலம்பி இருக்க மாட்டேனோன்னு சந்தேகம் வரும்.
யாரு விக்னேஷ் பத்தி சொல்றியா என்று யாமினி வினவ.. ம்.. என்று மட்டும் வாணி தலையாட்ட..
போடி...உன்னை மாதிரி பெருந்தன்மையான மனசு யாருக்குமே வராது. ஒரு கார் விபத்துல உன்னுடைய கணவரோட அண்ணனும் அண்ணன் மனைவியும், ஒரே நேரத்தில் உயிரை விட்டு விட. யாருமே இல்லாம அனாதையா நின்ன ஆறு வயசு சின்னப் பையன் விக்னேஷ்..அவனை உடனே உன் மகனா தத்தெடுத்துக்கிட்டியே.. உன் மனசு யாருக்கு டீ வரும் என்று மெச்சினாள் யாமினி.
விக்னேஷையும் அர்விந்தையும் நான் ஒன்னா தான் நினைக்கிறேன். இருந்தாலும் என் மாமியாரில் இருந்து என் புருஷன் வரைக்கும் நான் விக்னேஷ்னு ஒரு வார்த்தை அதட்டி சொல்லிட்டா போதும்.. அவங்க பார்ப்பாங்களே ஒரு பார்வை.. வாழ்க்கையே வெறுத்துப் போய்விடும். எனக்கு இதெல்லாம் தேவையான்னு ஆயிருது என்று வாணி தன் மனதில் உள்ளதை கொட்ட..
சரி விடு. உன் மனசு எல்லாருக்குமே ஒரு நாள் நிச்சயம் புரியும். கவலைப்படாத என்று தேற்றினாள் யாமினி. ஆமா வாணி.. உன் கிட்ட முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்துட்டேன். நாளைக்கு நம்ம ஆபிஸ்க்கு புது எம். டி.வருகிறாராம். காலையில் கண்டிப்பா வேகமா வந்திடு. புது எம்.டீ..ரொம்பக் கோபக்காரர்னு பேசிக்கிறாங்க..என்று யாமினி நினைவுபடுத்த..
ம் சரிடி கண்டிப்பா முயற்சி பண்றேன் என்று இருவரும் வீடு நோக்கி கிளம்பினார்கள்.

ஆபீஸிலிருந்து தன் தாய்வீட்டை களைப்புடன் அடைந்தாள் யாமினி. யாமினியைக் கண்டதும், அங்கு தரையில் தவழ்வதற்கு முயற்சி செய்து கொண்டிருந்த கண்ணன் புன்னகை பூத்து தன் கை கால்களை உதறி தன் உற்சாகத்தைத் தெரிவித்தான்.
யாமினிக்கும் அவனைப் பிரிந்து நெடுநேரம் ஆனது போல தோன்ற, தன் மைந்தனை அள்ளி அணைத்துக் கொண்டாள். உள்ளிருந்து வந்த சிவகாமி..மகளிடம் குழந்தை நெகிழ்வதைப் பார்த்து பாவம் எவ்வளவு நேரம் தாய் இல்லாமல் குழந்தை ஏங்கி விட்டானோ என்று மனதில் உறுத்தல் தோன்றினாலும்.. கைகால் கழுவி குழந்தையைத் தூக்கு யாமினி என்று சிவகாமி கூற..
இருக்கட்டும்மா..வீட்ல போய் குளிக்கப் போறேன்..
ம்.. சொன்னா எங்க கேட்கப் போற.. சரி வா சாப்பிடுவோம் என்று மகளைச் சாப்பிட உட்கார வைத்தார்.
ஜிம்மியை வாக் கூட்டிப் போன கமலும் அப்போது தான் வீடு வந்து சேர்ந்தான். மம்.. அப்பா எங்கேம்மா என்று தாயிடம் வினவ..ஏதோ பக்கத்து கிராமத்துக்கு ஒரு ப்ராஜெக்ட் விஷயமா அப்ரூவல் வேலையா போயிருக்காங்க. வருவதற்கு லேட்டாகும். நீயும் கமலும் சாப்பிடுங்க. நான் கண்ணனுக்கு டிரஸ் மாத்திட்டு வரேன் என்று உள்ளே சென்றார்.
என்னடா காலேஜ் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு என்று கமலிடம் விசாரிக்கத் தொடங்கிய யாமினி கை கழுவி வந்து, தன் தம்பிக்கும் தனக்கும் உணவு பரிமாறினாள்.
ம்.. நல்லா போய்ட்டு இருக்குக்கா.. எல்லாப் பேப்பரும் கண்டிப்பா பாசாகிடுவேன்னு நினைக்கிறேன் என்றான் உறுதியாக.
ம்.. நம்பிட்டேன்.. அதை விடு.. என்னடா அம்மா விமலுக்கு பொண்ணு பார்க்கனும்னு என்கிட்ட சொல்லிக்கிட்டே இருக்காங்க.. இந்த காதல் மன்னன் அம்மா கிட்ட அவன் கவிதாவைக் காதலிக்கிற விஷயத்தை இன்னும் சொல்லலையா..

அக்கா, அதை ஏன் கேக்குற. நான் கூட கமிஷனர் மகளைக் காதலிக்கிறானே, அதனால அடியாட்கள் விட்டுக்கு வந்து மிரட்டுறது.. அப்புறமா விமலைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அள்ளிட்டு போயி கவிதாவ மறக்குறியா இல்லையான்னு மிரட்டி லாடம் கட்டுவது என்று நிறைய தரமான சம்பவங்கள் நடக்கும்னு நினைச்சேன்..
இரு.. இரு.. நெனச்சியா.. இல்ல ஆசைப்பட்டியா.. என்று யாமினி சந்தேகமாக கேட்க..
அட ரெண்டும் தான்க்கா.. ஆனா கடைசில விஷ்யம் ரொம்ப சப்பையா போயிருச்சு.. கவிதா அவங்க அப்பா கிட்ட நம்ம ஃபேமிலி பற்றி சொல்லி இருக்கா.. அவுங்க நம்ம அப்பாவோட பெயரைக் கேள்விப்பட்ட உடனே கவிதா அப்பா உடனே ஒத்துக்கிட்டாங்களாம்.
அப்படியா அப்ப ரொம்ப நல்லதாப் போச்சு.. என்ன.. அம்மா மட்டும் ஒத்துக்கனும்.. என்ன என்றாள் யாமினி உற்சாகமாக.
அக்கா, அம்மா எல்லாம் ஒரு மேட்டரே இல்ல. வெளியில தான் அம்மா கரடுமுரடு..விமலுக்காக எதையும் விட்டுக் கொடுத்து விடுவாங்க. ஆனா இப்போ பாவம்.. அவனே அவன் காதலுக்கு சங்கு ஊதின மாதிரி ஒரு வேலைய பார்த்துட்டான்.. என்று கமல் சொல்ல..
என்னடா பயங்காட்ற. ஏன்டா கவிதாகிட்ட ஏதாவது எசகு பிசகா நடத்திக்கிட்டானா என்றாள் யாமினி பதறியபடி.
போக்கா.. நீ வேற..நேத்து கவிதாவுக்கு பிறந்தநாள்.நம்ம ஆளு கிஃப்ட் எல்லாம் வாங்கி தயாரா வச்சிட்டான். நைட் 12 மணிக்கு அவளுக்கு போன் போட்டு வாழ்த்தி இருக்கான்.
அவள் உடனே, உனக்கு தூக்கம் வருதான்னு கேட்டு இருக்கா. ஆமா பன்னெண்டு மணி ஆயிடுச்சு இல்லன்னு இவனும் சொல்லி இருக்கான். இல்ல..எங்க அப்பா ஊர்ல இல்ல.. நீ இங்க வர்றியா.. என் ரூம்ல வச்சு கேக் கட் பண்ணலாம் ஆசை படத்தில் மாதிரின்னு கேட்டு இருக்கா..

இவன் உடனே..ஐயைய்யோ எங்க அம்மா திட்டுவாங்க.. நாம நாளைக்கு காலைல மீட் பண்ணலாம்னு போனை கட் பண்ணிட்டான்.
கவிதா ரொம்ப நொந்து போயிட்டா. சரி பையன் ரொம்ப பயப்படறான்னு விட்டுட்டா. மறுநாள் விமல் அவளை நேரில் போய் பார்த்து கிஃப்ட் கொடுத்திருக்கான்.
கிஃப்ட வாங்கிட்டு போனவள் இவன் போன் நம்பரையே பிளாக் பண்ணி வெச்சுட்டா. ஏன் அப்படி? என்ன கொடுத்தானாம் என்று புரியாமல் யாமினி கேட்க..
புக்ஸ் ப்ரசென்ட் பண்ணி இருக்கான்க்கா.. அதுவும் என்ன புக்கு... ஹவ் டு பீ சக்சஸ்புள் இன் லைஃப்.. [How to be successful in Life] யாமினிக்கு அதைக் கேட்டவுடன் சிரிப்பு தான் வந்தது.
ஹேய்..ஏன்டா இவன் இப்படி இருக்கான் என்று யாமினியும் தம்பியிடம் அங்கலாய்க்க..
அதுதான்க்கா எனக்கும் புரியல. எனக்கு அண்ணனா பொறந்து.. இவன் ஏன் இப்படி பழமா இருக்கானேன்னு தெரியல.
நானா இருந்தா.. ஆசை படம் என்ன.. வல்லவன் படத்தின் சீன் அளவுக்கு போய் இருப்பேன் என்று கமல் சொல்ல.. முதலில் தன் தம்பியின் பேச்சில் தன்னை மறந்து சிரித்து விட்டு..
ஏய் வயசுக்குத் தக்கன பேசுடா என்று தலையில் செல்ல குட்டுவைத்தாள்.
பின் தன்அக்காவிடம் தணிந்த குரலில் “அக்கா மாமா பத்தி ஏதாவது தகவல் தெரிஞ்சதா”என்றான் கமல்.
அந்த கேள்வியில் யாமினியின் முகம் சட்டென மாறியது.

தொடரும்.
 
asasa11
asasa11

Members online

No members online now.
Top
document.oncontextmenu = document.body.oncontextmenu = function() {return false;}