JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

கயல் விழியால் சிறை பிடித்தாள் 1

பகுதி 1
அந்த பெரிய நட்சத்திர ஹோட்டலில் விஜி பொறுமை இழந்து அமர்ந்திருக்க,. அந்த மேல் நாட்டு மெல்லிய இசை காதுக்கு ரம்யமாக இருந்த போதும் அவளுக்கு என்னவோ அது இரைச்சலாகவே தோன்றியது.

இதோடு பதினைந்து முறை தன் கைக்கடிகாரத்தை திருப்பிப் பார்த்தவளுக்கு பதட்டம் கூடி விட.. “மேம் யுவர் ஆர்டர் பிளீஸ்”.. என்று நான்காவது முறையாக அந்த வெயிட்டர் வந்து கேட்டுவிட..

இந்த முறையும் “அப்புறம்” என்று அனுப்பினால் பின் அவனும் “அப்புறமா வாங்க” என்று வெளியில் தள்ள வாய்ப்பு இருக்கிறது என்று பயந்தவள் “டூ காபி பிளீஸ்” என்று சொல்ல..

“கப்பிசினோவா, அரபிக்காவா, என்று அவன் அடுக்க

“எதையாவது ஒன்றைக் கொண்டு வந்து தொலையேன்டா” என்ற மைண்ட் வாய்ஸைச் சொல்லாமல்..

“டூ கோல்ட் காபி” என்று முடித்துக் கொண்டாள்.
அவள் பார்வை வாசலிலேயே நிலைத்து நிற்க.. பொறுமை இழந்தவள்.. தன் கைபேசியில் ரீசன்ட் கால்ஸ்க்குச் செல்ல ஜனனி என்ற பெயர் முதல் இடத்தில் பளிச்சிட்டது.


அவளைத் தாக்க முடியாத விரல்கள்.. அவள் பெயரில் மொத்த அழுத்தத்தையும் கொடுக்க.. அவள் முகம் திரையில் வர.. காலிங் என்று காட்டியது.

இந்த முறையும் பதில் இல்லாமல் போக.. “நேர்ல வரட்டும்” என்று அவள் உதடுகள் வெளிப்படையாக முணுமுணுக்க..

“ஹாய் விஜி, சாரி டீ லேட் ஆயிடுச்சு!!”.. என்று விஜி கண் முன் அவள் எதிர்பார்த்து காத்து இருந்த அவள் உயிர்த்தோழி ஜனனி அவதரித்து நின்றாள்.

அதுவரை ஆத்திரத்துடன் ஜனனிக்காக காத்திருந்த விஜியின் மனம், தன் தோழியின் அன்பான முறுவலிலும் குறும்புடன் அவளது அழகான செவ்விதழ்கள் மன்னிப்பு கோரிய தொனியிலும் அவள் மீது இருந்த அத்தனை கோபமும் திசை அறியாமல் பறந்து சென்று இருந்தது.

இருந்தும் அதை வெளிக்காட்டாத விஜி.. “ஏண்டி இவ்வளவு லேட்?.. எனக்கு டென்ஷன் ஏறிடுச்சு தெரியுமா”

‘சாரி டீ ஒரே ட்ராஃபிக்!!.. சரி அதை விடு இன்னும் டைம் இருக்கு. நீ தேவை இல்லாம டென்ஷன் ஆகாத விஜி!!”.என்று ஜனனி அவளை சமாதானப்படுத்த..

“என்னன்னு தெரியலை ஜனனி,. எனக்கு ஒரே படபடப்பாக இருக்கு!!.. நாம எடுத்திருக்கிற முடிவு சரி தானான்னு அடிக்கடி பயமாகவும் சந்தேகமாகவும் இருக்கு” என்று விஜி பதட்டத்துடன் சொல்ல..

“விஜி.. நான் இருக்கிற நிலையில இப்ப எதுவுமே தப்பு இல்ல” என்று ஜனனி விளக்க..

“ம்”.. என்று ஒரு பெருமூச்சை எடுத்துக் கொண்ட விஜி.. “ஃபைன்!!.. ஜனனி நான் சொன்னது எல்லாம் உனக்கு நல்லா நியாபகம் இருக்குல??”

“”ம்.. எல்லாமே அத்துப்படி!!” என்று ஜனனி உற்சாகமாக சொல்ல..
விஜிக்கோ மனதுக்குள் வலிக்க.. “ஜனனி இப்ப கூட ஒன்னும் மோசம் போகலை!! நாம இப்படியே திரும்பிப் போயிடலாம்.. இது உன் வாழ்க்கை பிரச்னை டீ!!”

“விஜி.. இந்த ஜனனி என்னைக்கும் முன் வச்ச காலை பின் வைக்க மாட்டா!!. நான் நல்லா யோசிச்சுட்டேன்!! எனக்கு இதுல எந்த வருத்தமும் இல்ல.” என்று ஜனனி உறுதியாக சொல்ல..

விஜி மனது தான் தவித்தது. அவளை ஒருமுறை பார்த்தவர்கள் விழி உயர்த்தி மறுமுறை பார்க்க தவற மாட்டார்கள். அப்படி ஒரு கொள்ளை அழகை அவளுக்கு அள்ளிக் கொடுத்த இறைவன்.. இப்படி ஒரு சோதனையையும் அவளுக்கு கொடுக்க வேண்டுமா!!

“ஜனனி.. எனக்குத் தெரியும் எல்லா பெண்களையும் போல நீயும் உன் எதிர்காலத்தைப் பற்றி என்ன என்ன கற்பனை பண்ணி வச்சிருந்தேன்னு எனக்கு தெரியும். இப்ப அந்த அத்தனை ஆசையையும் புதைச்சுட்டு வாழ்க்கை ஃபுல்லா நரக தண்டனையை அனுபவிக்க போறியா?? வேணாம் டீ. வா நாம இப்படியே போயிடலாம்”.. என்று அவள் கையைப் பிடித்து விஜி அழைக்க..

“விஜி.. உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு. இது ஒன்னு தான் என் கஷ்டத்தை போக்கிறதுக்கு கடவுள் கொடுத்து இருக்கிற ஒரே சந்தர்ப்பம்!.. இதையும் கோட்டை விட்டுட்டு என்னைக் கண்ணீர் விடச் சொல்றியா!!. “

“இல்ல ஜனனி, நாம நல்லா யோசிச்சா.. நிச்சயம் வேற எதாவது ஒரு வழி கிடைக்கும்னு தான் தோணுது.”

“அய்யோ விஜி.. போதும்!! நான் நிச்சயம் இதை சந்தோசமா தான் ஏத்துகிட்டு வந்துருக்கேன். பிளீஸ் நீ இனிமே தடங்கலாக எதுவும் பேச வேண்டாம். சரி விஜி டைம் ஆகப் போகுது. நீ கிளம்பு”.. என்ற ஜனனி தன்னைச் சரி செய்து கொண்டவள் அந்த ரிசப்ஷனை நோக்கி நடந்தாள்.

விஜியின் கண்கள் வேதனையுடன் தன் தோழியை பார்த்து நின்றன.

“எக்ஸ்கியூஸ் மீ, ஐ ஹேவ் காட் ஏன் அப்பாயின்ட்மென்ட் டூ மீட் மிஸ்டர் கவின் பிளீஸ்.” என்று சொல்ல..

“ஓ.. ஜஸ்ட் எ மினிட் மேம்” என்ற ரிசப்சனிஸ்ட் ஒரு பேப்பரில் சரி பார்த்து விட்டு.. “எஸ் மேம்.. அவர் உங்களுக்காக ஏற்கனவே அறை எண் முன்னூற்றுப்பத்தில் காத்துக் கொண்டு இருக்கிறார்” என்று ஆங்கிலத்தில் சொல்ல..

இவ்வளவு நேரமாக விஜிக்கு தைரியம் சொல்லிய ஜனனிக்கோ.. இப்போது தான் கை கால்கள் லேசாக நடுங்க தொடங்கின.

லிஃப்டை நோக்கி கால்கள் நடை போட., யார் அந்த கவின்?? அவன் கருப்பா? சிவப்பா? எதுவுமே தெரியாது!! ஆனால் அவனை மட்டும் அவள் மணம் முடித்தால் அவள் வாழ்க்கையே மாறிவிடும். அவள் துன்பம் நீங்கி விடும்.

இந்த உண்மையை அவளுக்குச் சொன்னவள் உண்மையில் விஜி தான்.
லிஃப்ட் மேலே ஏற, அவள் நினைவுகள் பின்னோடியது.

***

ஆம் விஜியும் ஜனனியும் சிறு வயதில் இருந்தே உயிர்த் தோழிகள். அந்த கான்வென்ட் பள்ளியில் நான்கு வயது ஜனனி அருகில் விஜி உட்கார வைக்கப்பட, முதல் நாள் பள்ளியில்.. தன் தாயயைப் பிரிந்த விஜியின் விழிகள் கலங்க.. “அழுவாத ஃப்ரெண்ட்”!! நான் இருக்கேன் ல என்று ஜனனி அரவணைப்பாக அவள் கைகளைப் பற்றிக் கொள்ள, அந்த தொடுகை அவள் கண்ணீரை நிறுத்தின. அன்று கை கோர்த்து.. பூத்த அவர்கள் நட்பு இந்த இருபது வருடங்களாக ஆலமரம் போல் இருவர் மனதிலும் வேர் ஊன்றி நிலைத்து விட்டது.

ஜனனி நர்ஸாக வேண்டும் என்ற ஆசையினால் அவள் அதற்கான கல்லூரியில் சேர.. தன் உயிர்த் தோழியைப் பிரிய மனம் இல்லாத விஜியும் அதே படிப்பை தேர்வு செய்து உடன் படிக்க.. இருவரும் படிப்பை வெற்றிகரமாக முடித்து செவிலியர் பட்டம் பெற்றனர். வெவ்வேறு மருத்துவமனைகளில் பணிக்கும் சேர்ந்தார்கள். இருவரும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த செவிலியர் வேலை அவர்களுக்கு இன்றியமையாதது ஆகிப் போனது.

விஜி பணி புரியும் மருத்துவமனை சென்னையில் மிகப் பிரபலமான மருத்துவமனைகளில் ஒன்றாகும். விஜி தன் தோழி ஜனனியையும் அங்கு சேரச் சொல்லி வலியுறுத்த, ஜனனிவும் விரைவில் மாறுவதாக உறுதி கூறி இருந்தாள்.
அவர்கள் இருவரின் வாழ்வும் இத்தனை வருடங்களாக நிம்மதியாகவும் சந்தோசமாகவும் தான் சென்று கொண்டு இருந்தது.

ஆனால் ஜனனி வாழ்வு தான் திசை மாறத் தொடங்கி இருந்தது. தன் தோழிக்கு ஏன் தான் கடவுள் இவ்வளவு பெரிய சோதனையை கொடுக்க வேண்டுமோ??.. என்று மனம் கடவுளையே பழித்தது.

அவளுக்கு உதவ வேண்டும் என்று விஜி மனம் துடித்தது. ஆனால் அதற்கு அவள் குறைந்தது அம்பானியின் தூரத்து உறவாகவாவது இருக்க வேண்டும்.!! ஆம்! அப்படி ஒரு நெருக்கடி அவளுக்கு!!

அந்த விடுமுறை நாளில் “ஜனனி, உன் கிட்ட கொஞ்சம் பேசணும்!.. எங்கடி மீட் பண்ணலாம்” என்று விஜி கைப்பேசியில் அழைத்து கேட்க..

“மனசு சரி இல்லை விஜி!!..கண்டிப்பா வரணுமா?கோவிலுக்கு வேனா போவோமா??” என்று ஜனனி கேட்க..

“சரி ஜனனி!!.. நாம நாளைக்கு அஷ்டலட்சுமி கோவில்ல பத்து மணிக்கு மீட் பண்ணலாம்!!..பை” என்று துண்டித்தாள்.

பின் இருவரும் கோவிலில் சந்திக்க.. எப்போதும் இருக்கும் இடத்தையே கலகலப்பாக மாற்றும் அவள் உயிர்த் தோழியோ.. முகம் வாடிப் போய் சோர்ந்து வந்தாள். அவர்கள் அங்கிருந்த மர நிழலில் அமர..

“ஜனனி சியர் அப்!!.. எல்லா பிரச்னைகளுக்கும் நிச்சயம் ஒரு தீர்வு உண்டு. நீ கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு தைரியமா இரு!!.. நிச்சயம் கடவுள் நல்ல வழி காட்டுவார்!!”..

“போ விஜி!! அதெல்லாம் சினிமாவில தான் நடக்கும். கடவுள் மேல எல்லாம் எனக்கு நம்பிக்கை போயிடுச்சு. எந்த மாயாஜாலமும் நடந்து.. என் நிலைமை மாறப் போறதில்ல!! நீ கூப்பிட்டன்னு தான் நான் கோவிலுக்கு வந்தேன்”.. என்று ஜனனி வெறுப்புடன் கூற

“ஏய் ஜனனி !! நீ தான் நம்ம செட்டுலையே தைரியமான பொண்ணு!! நீ இப்படி நம்பிக்கையைக் கை விடலாமா??”

“விஜி.. நான் தைரியமா தான் இருக்கேன். இப்ப கூட.. என் மூளையை ரொம்ப கசக்கி யோசிச்சு.. ஆறு பிளான் போட்டு வச்சு இருக்கேன். இதுல எதாவது ஒன்னை செயல்படுத்தி என் நிலையை மாத்தப் போறேன்”.. என்று ஜனனி நம்பிக்கையுடன் சொல்ல..

“சூப்பர் ஜனனி !!.. இந்த ஸ்ட்ராங் ஜனனியைத்தான் நான் எதிர் பார்த்தேன். ம்.. வேகமாகச் சொல்லு.. என்ன என்ன ஆப்ஷன்”.. என்று ஆர்வமாக கேட்க..

“ம்.. முதல் பிளான் என்னன்னா.. நான் பிளாக் மார்கெட்டில் ஒரு சின்ன துப்பாக்கியை வாங்கிட்டு, பேங்க்ல போய் அதைக் காட்டி மிரட்டி கொள்ளை அடிக்கப் போறேன்.” என்று ஜனனி வர்ணிக்க..

அதைக் கேட்டுக் கொண்டிருந்த விஜி முகம் கோபத்தில் சிவந்து போனது. அவள் ஜனனியை நிறுத்தப் போக..

“விஜி.. பொறுமையா கேளு.. நான் எல்லா வாய்ப்புகளையும் சொல்றேன் அதுக்கப்புறம் நாம டிஸ்கஸ் பண்ணலாம்”.. என்று ஜனனி தொடர..

விஜி தான் தண்டனையாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
அதுக்கப்புறம் இரண்டாவது ஆப்ஷன் யாராவது பெரிய பணக்காரங்களுக்கு கிட்னி, நுரையீரல் இப்படி எதாவது உறுப்புகள் கொடுத்து அந்த பெரிய தொகையை கேட்க போறேன்.

இல்லைன்னா வாடகைத் தாய்

அதுவும் இல்லைன்னா பெரிய பணக்காரக் கிழவனுக்கு மூன்றாவது தாரம் இல்ல நான்காவது தாரமா கல்யாணம் பண்ண வேண்டுமானாலும் எனக்கு ஒகே.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்.. இது கொஞ்சம் அபத்தமாகத்தான் இருக்கும்.. என்றவள் தன் தோழியின் முகத்தை பார்த்து சற்று தயங்கி விட்டு தொடர்ந்தாள்.

விஜி அவள் முகத்தையே வேதனையுடன் பார்த்திருக்க..

நான் கேட்ட தொகை எனக்கு கிடைக்கும்னா நான் எதுக்கும் தயார் ஆகிட்டேன். சுருக்கமாகச் சொல்லனும்னா ஒரு பெரிய பணக்காரனுக்கு வப்பாட்டி, கீப்.. இல்ல தாசியா எதுனாலும் எனக்கு ஓகே!!.. என்று ஜனனி முடிக்கும் முன் விஜியின் கரம் அவள் கன்னத்தை தாக்கி இருந்தது.

“சீ முதல்ல போய் வாயைக் கழுவு டீ!!.. என்னடீ பேச்சு இதெல்லாம்.”

“ஆ.. வலிக்குது விஜி!!” என்ற ஜனனி அவள் சிவந்து போன கன்னத்தை தேய்த்து விட..

தோழியின் வாடிப் போன முகத்தைப் பார்த்த விஜியால் அதற்கு மேல் தன் கோபத்தைத் தொடர முடியாமல்.. அவள் வேதனையில் உருகிப் போனவள்..“சாரி ஜனனி !!.. நீ சொன்னதை எல்லாம் என்னால தாங்க முடியலை ஜனனி !! அது தான் கொஞ்சம் அவசரப் பட்டேன்.”.. என்று அவள் கைகளைப் பிடித்து உளமார மன்னிப்பு கோரினாள் .

“ஏய்.. விடு விஜி!.. உன்னைத் தவிர யாரால் என்கிட்ட இப்படி உரிமையா நடந்துக்க முடியும். எனக்கு என்ன ஆசையா!!.. இப்படி எல்லாம் பண்ணனும்ன்னு.. எல்லாம் என் தலை எழுத்து. உனக்கே தெரியும் நாங்க இருக்கிறது வாடகை வீடு. வேற எந்த சொத்து பத்தும் கிடையாது. பேங்க் லோன், கந்து வட்டி இப்படி எதுவும் கிடைக்க மாட்டேங்குது. ஹாஸ்பிடல்ல என் தேவைக்கு பத்து சதவீதம் கூட முன் பணமாக தர மாட்டேங்குறாங்க..

எந்த சொந்தம், பந்தம், நட்புன்னு யாரும் எனக்கு உதவுற நிலையில் இல்ல. கண்ணுக்கு எட்டுன வரை ஒரே இருள் மட்டும் தான் இருக்கு.

இந்த நிலையில என்னால வேற எந்த மாதிரி யோசிக்க முடியும் சொல்லு”.. என்று ஜனனி தன் மனதில் உள்ள அத்தனை வேதனைகளையும் கொட்ட.. அவள் விழிகள் மட்டும் நீரை உதிர்க்காமல் அடக்கிக் கொண்டன..

விஜிக்கு தன் தோழியின் துயர் பொறுக்க முடியவில்லை. அவளை தேற்றும் வழி தெரியாமல் அவள் தலையை வருடி விட்டவள் அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். ஜனனிக்கும் அந்த அரவணைப்பு தன் தாயை நினைவுபடுத்த, பொங்கி வரத் துடித்த அழுகையை அடக்க முடியாமல் அவள் மடியில் சிறு குழந்தை போல் கரையத் தொடங்கி இருந்தாள்.

விஜிக்குத் தான் தன் தோழியின் நிலை கண்டு இதயமே நின்று விட்டது. அவள் எவ்வளவு தைரியமான பெண்.. இன்று இப்படி உடைந்து போய் விட்டாளே.. என்று வேதனையாக இருந்தது.

“ஜனனி .. நீ நினைக்கிற மாதிரி இல்ல ஜனனி .. நிஜத்திலும் நிறைய அதிசயங்கள் நடக்கத்தான் செய்யும். நீ பார்த்துட்டே இரு நிச்சயம் ஒரு அதிசயம் நடக்கும்..” என்று தோழியை தேற்றினாள்.

அதன்பின் நாட்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டு இருக்க..
ஒரு நாள் ஜனனியை அவள் வீட்டில் சென்று சந்தித்த விஜி..

“ஹேய் ஜனனி, இந்த விளம்பரத்தைப் பாரேன்.” என்று விஜி காட்ட..

அதில் ஒன்றும் பெரிதாக ஈர்க்கப்படாத ஜனனி யோ.. “என்னடீ இது! மேட்ரிமோனியல் விளம்பரம்!!.. இதைப் பார்த்து என்ன ஆகப் போகுது” என்று அவள் தூக்கிப் போட..

“ஹேய் அவசரப்படாதே ஜனனி, அந்த விளம்பரத்தை நல்லா படி” என்று மறுபடியும் திணிக்க..

மணப்பெண் தேவை “நல்ல சேவை மனப்பான்மை கொண்ட பெண் தேவை. வாய் பேச வராத இருபத்தி ஆறு வயது வாலிபனுக்கு பெண் தேவை. படித்த பெண்ணாக இருப்பது அவசியம்.”
ஆர்வமுள்ளோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி *******

“ம்.. நல்லா இருக்குறவங்களுக்கே பொண்ணு கிடைக்கிறது இந்த காலத்துல கஷ்டமா இருக்கு.!! இதுல குறை உள்ள பையனுக்கு படிச்ச பொண்ணா வேணுமாம்!!.. இதெல்லாம் கொஞ்சம் டூ மச் இல்ல.. எனக்கு தெரிஞ்சு எந்த பொண்ணும் இதுக்கு ஒத்துக்காது” என்று ஜனனி சொல்ல..

எதையோ ஆர்வமாக சொல்ல வந்திருந்த விஜியோ.. ஜனனி சொன்னதைக் கேட்டு அமைதியாகி விட்டாள்.

“ஏய்.. என்னடீ ஆச்சு உனக்கு!.. என்னமோ சொல்ல வந்த திடீர்னு ஆஃப் ஆகிட்ட??” என்று தூண்ட

“விடு ஜனனி நான் என் மனசுல ஒன்னு நினைச்சேன். ஆனா அது சரி வராது”

“என்னடீ சொல்ற?? புரியும்படியா சொல்லேன்” என்று அவள் தூண்ட..

“வேணாம் ஜனனி ” என்று விஜி மறுக்க..

“ஏய்.. நீ இப்ப சொல்லப் போறியா? இல்லையா??” என்று ஜனனி மிரட்ட..


“ஜனனி.. நீ அந்த விளம்பரத்தில் வந்த பையனை கல்யாணம் கட்டிக்குவியா” என்று விஜி கேட்டே விட்டாள்.

ஒரு நிமிடம் ஜனனிக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. தன் உயிர்த் தோழி இப்படி ஒரு கேள்வி கேட்கிறாள் என்றால், அதன் பின்னால் நிச்சயம் ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்று புரிந்து கொண்டவள்..

“நிச்சயமா!! எனக்கு ரெண்டு கோடி ரூபாய் பணம் கிடைக்கும்னா.. எனக்கு இந்த கல்யாணத்துக்கு முழு சம்மதம்”.. என்று ஜனனி பட்டென்று உடைத்தாள்.

“எனக்குத் தெரியும் ஜனனி, நீ நிச்சயம் இப்படித்தான் சொல்வேன்னு”

தொடரும்.
உங்கள் கருத்துகளை மறவாமல் பதிவிடுங்கள் தோழமைகளே.
 

Members online

No members online now.

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top