JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

கொடிமலர் 1

Subageetha

Well-known member
ராம்

மாடியில் தனது அறையில் புத்தகங்கள் புடை சூழ நடுவில் நடுநாயகமாக அமர்ந்து தீவிரமாக படித்துக்கொண்டு இருந்தான் ராம். இந்த நுழைவுத் தேர்வையும், அது தொடர்பான நேர்காணலையும் நல்லபடியாக முடித்துவிட்டு, மேற்படிப்பை தொடரும் அவனது தீவிரம் இரண்டு தலைமுறைகளாக வெற்றிகரமான தொழில் குடும்பமாக சமூகத்தில் நிலைபெற்றிருக்கும் அவர்களுக்கு புதியதல்ல. வெளிநாடு சென்று மேனேஜ்மென்ட் படிப்பது அவனுக்கே விருப்பம் இல்லை.
இந்தியாவில் இருக்கும், உலக அளவில் நல்ல பெயர் பெற்ற அந்த கல்வி நிலையத்தில் இடம் கிடைக்க இவ்வளவு தயார் செய்கிறான் ராம்.
ராம் பற்றி கொஞ்சம்...

ஆறடி உயரம், அதற்கு ஏற்ற உடல்வாகு. கொஞ்சம்...ம்ஹும்...கோபம் அதிகம். சிறு வயதில் இருந்தே நல்ல கல்வி நிலை. தமிழ்நாடு பூர்விகம் ஆனாலும் மும்பை மாநகரத்தில் வியாபாரம் செய்ய வந்து மூன்று தலைமுறை ஆகிவிட்டது. ஏழாயிரம் சதுர அடியில் மாளிகை ஜூஹு கடற்கரை ஓரம். இன்னும் நிறைய சொத்துக்களும் தொழில்களும் உண்டு.
பணத்தின் செழுமை அவனை பார்த்த உடனேயே தெரிந்து விடும். ஆனாலும், அலட்டல் இல்லாத பாவம்.
வெளியில் அதிகம் பணம் பற்றி பேசாதவன், அடிப்படையில் பொறியியல் பட்டதாரி. கல்லூரி செல்லும் போது கூட காரில் சென்றது இல்லை.

அடிப்படை உலக விஷயங்கள் பழக வேண்டும் என்று அவனை பெற்றவர் செய்த ஏற்பாடு.
ஒருமுறை அவன் கல்லூரி வாயிலில் பைக் பஞ்சர் ஆகி நின்று கொண்டிருக்க, அந்த வழியாக காரில் வந்த அவன் அப்பா அவனை கண்டுகொள்ளாமல் சென்று விட்டார். இத்தனைக்கும் அவர் பார்க்க வந்தது அவனைத்தான். எந்த இடத்திலும் அவர்கள் வீட்டு பிள்ளைகள் தங்கள் குடும்ப பின்னணியை முன்னிறுத்தி வேலைகள் சாதிப்பதில் வீட்டு பெரியவர்களுக்கு இஷ்டம் இல்லை.
மறுக்கும் எண்ணம் அவனுக்கும் இல்லை.

வெளியூரில் தங்கி படித்தவனுக்கு ஹாஸ்டல் சாப்பாடு ஒத்துக்கொள்ளாமல் போக தனியே அறை எடுத்து சமையல் செய்யவும் கற்றுக்கொண்டான். ஏனோ தனியாக இருக்கும் சமயம் வேலைக்கு ஆள் தேவை இல்லை. நானே பார்த்துக்கொள்வேன் என்ற எண்ணம் அவனுக்கு.

அவனது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் செதுக்கி கொள்ள துடிக்கும் இருபத்து நான்கு வயது இளைஞன். இரண்டு வருஷங்கள் தங்கள் நிறுவன பேக்டரியில் வேலை செய்தான். அனுபவம் போல் பெரிய ஆசான் இல்லை.

குடும்பம், தொழில் இரண்டையும் சார்ந்ததுதான் அவன் முடிவுகள் இருக்கும். எதுவரை,?
நந்தனா எனும் புயல் அவன் வாழ்வில் மையம் கொள்ளும் வரை...! அதன் பிறகு...நந்தனா:

இளமையும், செழிப்புடன் கூடிய வாழ்க்கையும் கொண்ட அப்பர் கிளாஸ் குஜராத்தி கூட்டு குடும்பம். மூன்று பையன்களுக்கு நடுவில் ஒரே பெண்.
செல்லம் மிகுந்தவளாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இல்லை. இவளுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும். பாசம்...ம்ம்ம்.ம்ஹும்.
அப்பா, அம்மா அண்ணன்கள் தம்பி அப்பாவின் வழி பாட்டி தாத்தா... அத்தைகள் அவர்கள் குடும்பம் என்று பெரிய குடும்பத்தில் பிறந்த அனாதை அவள்.
அவர்களது வெறுப்புக்கு காரணம் தெரியாமல் தவிக்கிறாள். வீட்டில் இருக்கும் மற்ற பெண் குழந்தைகளுக்கு கிடைக்கும் ஆதரவு இவளுக்கு கிடையாது. காரணம் தேடி சோர்ந்து போனவள் மனதில் இறுக்கம்!
இருபத்து மூன்று வயது மங்கை. முகத்தில் தவிப்பை மீறிய கர்வம். நிமிர்ந்த தலை குனிந்தது இல்லை இன்று வரை. அவள் மனதில் ஆயிரம் எண்ணம் உண்டு.

ஷ்யாம்

உஜ்ஜைனை பூர்வீகமாக கொண்ட குடும்பம். ஆனால் தில்லியில் வாழ்க்கை. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் நாடு முழுவதும் இவர்களுக்கு உண்டு. சமீப வருஷங்களில் நகை விற்பனையிலும் கால் பதித்து வெற்றிகரமாக செய்கிறார்கள்.

அவர்கள் வீட்டு வாரிசுகளில் ஒருவன் ஷ்யாம். முகம் சொல்லும் பணக்கார செழுமை.
ஏனோ அவனுக்கு கட்டிடங்கள் மேல் ஆர்வம். சிவில் எடுத்து படித்தவனுக்கு, அவன் அப்பா வங்கியில் லோன் வாங்கி கொடுத்தார் தொழில் தொடங்க.
வீட்டில் யாருக்கும் விருப்பம் இல்லாமல் தான் சிவில் படித்தான். அதற்கான வார்த்தைகளையும் வாங்கினான்.

மூத்த மகன் குடும்பத் தொழில்களை பொறுப்புடன் கவனிக்க கொஞ்ச காலம் தன்னாலும் அதில் ஈடுபட முடியுமா என்று முயற்சி செய்து பார்த்தான் ஷ்யாம்.அப்பா வாங்கி கொடுத்த வங்கி கடனில் தொழில் தொடங்கி கொஞ்சம் லாபம் வந்ததுதான்.
கொஞ்ச வருஷங்கள் அங்கு இருந்து தொழில் செய்தவனுக்கு அண்ணனுடன் ஏற்பட்ட தகறாரில், குடும்பம் முழுவதும் அண்ணனுக்கு வக்காலத்து வாங்கி நிற்க, மனம் வெறுத்தவன் பெங்களூரு வந்து தானே ஒரு தொழிலை நிறுவி வெற்றிகரமாக நடத்தவும் தொடங்கினான். இந்த முறை அப்பாவிடம் பணம் கேட்கவோ, அவர் மூலம் வங்கி கடன் பெறவோ அவனுக்கு விருப்பம் இல்லை.
இத்தனை நாட்களில் வந்த லாபம், தன் பெயரில் குடும்பம் பிரித்து கொடுத்த சொத்துக்கள் என்று தன்னிடம் உள்ளவற்றை முதலீடாக்கி தொழில் செய்யும் நிர்பந்தம். எங்கேனும் சிறிது சறுக்கினாலும் அதள பாதாளம் தான்.
குடும்பமும் அவனை சேர்ந்த மற்றவர்களும் அவனுக்கு முத்திரை குத்தி ஒதுக்கி விடும் அபாயம் உண்டு.

ஆனாலும், அவனுக்கு இந்த சவால் பிடித்திருக்கிறது.இதன் சுவை, சிறு வெற்றியும் கூட தரும் போதை ம்ஹும்..
தனக்காக ஒரு தொழில்... தனக்கே தானக்காய். யாரிடமும் எதற்காகவும் கைகட்டி நிற்க வேண்டியதில்லை. காதில் ரத்தம் வடியும் அளவிற்கு யாரின் உபதேசத்தையும் கேட்க வேண்டியதில்லை. லாபமோ நட்டமோ கணக்கு முழுவதும் அவனுக்கு. நினைக்கும் போதே அவனுக்குள் மமதை ஏறியது. இது வெற்றிகளைக் குவிக்கும் போதையாக இருந்தால் அவன் வாழ்நாள் முழுவதும் பூக்காடு தான்!

பொம்மநஹள்ளியில் நிலம் பார்த்து, தனக்கான அலுவலகம் ஒன்றை கட்டி கொண்டான். மொத்தம் மூணு கிரௌண்ட் நிலம். அதில் ஒரு கிரௌண்ட் நிலத்தில் அலுவலகம் அமைத்தவன்,மீதம் உள்ள இடத்தில் தோட்டம் போட்டான். அலுவலகம் பார்க்க சிறியதாக இருந்தாலும், இன்டீரியர் முழுவதும் அவனேப் பார்த்துப் பார்த்து செய்திருந்ததால், ஒரு முறை பார்த்தாலே அவனிடம் வேலையை கொடுக்கும் அளவிற்கு அமைத்திருந்தான்.

அவனது அலுவலகம் முறையாக செயல் பட தனக்கு உதவியாக அலுவலக வேலைக்கு ஆட்கள் எடுத்தவன் முழுவதும் ஆண்களை தெரிவு செய்திருக்க,
உஜ்ஜயினில் இருந்து இவனை பார்க்க வந்த இவனது அத்தை மகன், 'ஒரே ஒரு பெண்ணையாவது வேலைக்கு
சேர்த்துக்கொள்' என்று சிரித்து கொண்டே அழுத்தமாக அட்வைஸ் செய்ய அதை பற்றிய தீவிர சிந்தையில் ஷ்யாம்.

சியா

பெயருக்கேற்றபடிக்கு சாட்சாத் சீதா தேவிதான். அவ்வளவு பொறுமை. என்ஜினீயரிங் சிவில் எடுத்து படித்தவள் மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் பொழுது ஆரம்பம் ஆனது விதியின் விளையாட்டு. சூப்பர்வைசராக அவள் அப்பாவுக்கு
வேலை. வேலை செய்யும் பேக்டரியில் மிஷின் ரீப்பேர் ஆக அதை சரி செய்ய முயன்றவரின் இடது கையை கபாளீகரம் செய்தது அந்த மிஷின். கூடவே சேர்த்து சியாவின் கனவு, லட்சியம் எல்லாம் சுவாஹா...

நிறுவனம் கொடுத்த பணம் வைத்து மிச்ச வாழ்க்கை ஓட்டுவதே கஷ்டம்.இதில் எங்கே கனவுகளும் கட்லேட்டும்...

சியா வாழ்க்கையின் ஓட்டத்தை அதன் போக்கிலேயே ஓட தீர்மானம் செய்துவிட்டாள். அடுத்து பீஸ் கட்ட நிச்சயம் பெற்றோரிடம் கேட்க முடியாது.
கர்நாடக மைசூர் போகும் வழியில் இருக்கும் அரசு பொறியியல் கல்லூரியில் அவளுக்கு பிரீ சீட் கிடைத்தும் வீட்டுக்கு அருகில் தான் கல்லூரி சேர வேண்டும். ஹாஸ்டலில் தங்கி வீட்டில் இருந்து தொலைவில் செல்ல வேண்டாம் என்று அவள் அம்மா ஒரே பிடிவாதம். அதனால் தான் தனியார் கல்லூரியில் சேர வேண்டியதாயிற்று. இன்று ம்ஹும்... சொல்ல என்ன இருக்கிறது?
வீட்டில் ஒரே பெண் அல்ல இவள். இன்னும் ஒரு தங்கை உண்டு.
சட்டென்று தான் பெரியவளாக வேண்டிய அவசியம் சியாவுக்கு.

ஒரு முடிவெடுத்தவளாக பொறியியல் படிப்புக்கு ஒரு புள்ளி வைத்துவிட்டாள். செக்கரேட்டரி படிப்புக்கு டிப்ளமோ சேர்ந்து பயிற்சி பெற்றவளுக்கு ஆங்கிலம் அருவி போல் கொட்டும். பூர்வீகம் தமிழ்நாடு என்பதால் தினமும் தமிழ் படிப்பது அவர்கள் வீட்டில் கட்டாயம். பள்ளியில் ஹிந்தியும், பிரெஞ்சு மொழியும் பயின்றதால் கொஞ்சம் அந்த மொழிகளும் தெரியும். பெங்களூரு என்பதால் ஹிந்தியில் அவளுக்கு பரிச்சயம் அதிகம்.பிரெஞ்சு வாய்ப்பு கிடைத்தால் கற்க வேணும் என்னும் எண்ணம் உண்டு.
ஒருவழியாக டிப்ளமோ முடித்து வெளியே வந்தவளுக்கு, முதல் வேலை என்பதால் வாய்ப்பு கொடுக்க மார்க்கெட்டில் தயக்கம்.

தனது மதிப்பெண்கள், மொழி அறிவு இவற்றை அடிப்படையாக கொண்டு வேலை எளிதாக கிடைக்கும் என நம்பியவளுக்கு விஞ்சியது ஏமாற்றம்.

அப்போதுதான் புதியதாக திறக்க பட்டிருக்கும் அந்த நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்தது.

பனஸ்வாடியில் இருக்கும் அவள் வீட்டிலிருந்து பொம்மனஹள்ளி நாற்பத்து ஐந்து நிமிட பிரயாணம்.
கோரமங்களா,போன்று எங்காவது இன்னும் கொஞ்சம் அருகில் வேலை கிடைத்தால் பரவாயில்ல... இவ்ளோ தூரம் போகணுமா.. என்று அவள் அம்மா பாட ஆரம்பித்துவிட, வேற யாரும் கூப்பிடல... இருக்குற நிலமைல இதையும் விட முடியாது என்று முணங்கிவிட்டு தன்னை தயார் செய்துக்கொள்ள அறைக்குள் சென்றுவிட்டாள் சியா.

தன்னால் இனி உபயோகம் என்ன என்று நினைத்த அவள் அப்பா ராஜரிஷி ஒன்றும் சொல்ல முடியாமல் மௌனம் என்னும் அஸ்திரத்தை கையில்
ஏந்திக்கொண்டார்.

பெண்ணை பெற்றவர்கள் இப்படி எல்லாம் ஒதுங்கி போகலாமா... என்ற கேள்வி என்னுள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

இந்த கதையின் போக்கில் மடை மாற ராஜரிஷியின் பல சமயங்களின் மௌனம் பெரிய காரணி.

சியா எதையும் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை. இப்போது, செலவுகளை இழுத்து பிடிக்கும் நிலை. ஓரளவு வேலை செய்து, பணம் சேர்த்தாவது தனது படிப்புக்கு ஏதாவது வழி கிடைக்குமா என்று தவிக்கிறது பெண்.

அப்படி ஏதாவது வழி தெரிந்தால் சியா அந்த வாய்ப்பை விட தயாரில்லை.

இந்த கதையின் முக்கியமான பாத்திரங்கள், அவர்கள் இருக்கும் நிலைமை இவற்றை புரிந்து கொண்டு இருப்பீர்கள்.
இனி கதைக்குள் நம் பயணம்... தொடரும்.
 

Members online

No members online now.

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top