JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

கொடிமலர் 10

Subageetha

Well-known member
என் முன்னே பதட்டத்துடன் அமர்ந்து கொண்டு என்னை விழி அகற்றாது பார்த்துக் கொண்டிருக்கும் சியா மீது ஏற்படும் உணர்வுகள், என்னால் புரிந்துகொள்ள முடியாமல் இல்லை. ஆனாலும், அவள் பேச வேண்டும் என்று அமைதியாய் இருக்கிறேன்.

நாங்கள் அமர்ந்து கொண்டிருப்பது கஃபே காபி டே... அவளுக்கு காபி குடிப்பது பிடித்தமான ஒன்று. நிறைய பெங்களூரு வாசிகள் காபி பிரியர்களாய் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். நான் டீ குடிப்பதை விரும்புவேன். குடிக்கும் பானம் முதல் உணவு, பழக்கவழக்கங்கள், பொருளாதார நிலை என்று எனக்கும் அவளுக்கும் எதிலுமே பொருத்தம் என்பது இல்லை... அவள் முன்னே ஹார்ட் வடிவதில் மேலே அலங்கரிக்கப்பட்ட காபிசினோ... நான் கோல்டு காபி வாங்கிக்கொண்டேன்.
வழக்கமாய் காபீயை சூடாக கண்ணை மூடி ரசித்துக்கொண்டே பருகும் சியா இதோ தன் முன் இருக்கும் அந்த பானத்தை இன்னும் கைகளில் கூட தொடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
அவள் கண்கள் யோசனை, பயம் என்று உணர்ச்சிகலவையாய். அவளை பேச வைக்கவே எனக்கு இன்னும் எனர்ஜி தேவை. ஆனால் அவளிடம் மௌனம் தவிர வேறேதும் இல்லை.

வேறு வழி இல்லாமல் என்னை நிமிர்ந்து பார்த்தவள் கண்கள் லேசாக கலங்கி பளபளத்தது.

"இப்போ எதுக்கு இந்த சீன் சியா? ஒண்ணு எஸ் சொல்லு, இல்லாட்டியும் உனக்கு வேற ஆப்ஷன் இருக்குறதா எனக்கு தோணல "

கிட்ட தட்ட மிரட்டல் தோணியில் இருந்தது என் பேச்சு.மனமோ இதென்ன விசித்திரமாய் என்று என்னை சாடியது.

"சார் புரிஞ்சுதான பேசறீங்க?"

அவளது சந்தேகம், நான் சுய நினைவுடன்தான் இருக்கிறேனா, இப்படி கேட்கிறேனா எண்டு பரீட்சை செய்தது.

ஹும்... சுய நினைவுல தான் இருக்கேன் சியா. அவளிடம் நான் திருமணத்திற்கு கேட்கிறேன். லேசில் சம்மதிப்பதாக இல்லை.
முதலில் சாதாரணமாகத்தான் ஆரம்பித்தது எங்கள் பேச்சு. தீபாவளி சமயத்தில் நான் வீட்டில் சொல்லிவிட்டு வந்ததை மீண்டும் என் ஞாபக அடுக்குகளில் இருந்து தூசி தட்டி அவள் முன்னே வைத்தேன்.

கண்டிப்பா எனக்கு கல்யாணம் பண்ணிக்கணும் என்கிற எண்ணம் வர மாட்டேங்குது சியா. இன்னும் சொல்லப்போனால் கல்யாணத்து மேல பெரிய நம்பிக்கை எல்லாம் இல்லை. கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க எல்லாம் சந்தோஷமா இருக்காங்களான்னு எனக்கு சந்தேகம் கூட உண்டு. பட் வீட்டுல எனக்கு கல்யாணம் பண்ணி வைக்காம விட மாட்டாங்க போல இருக்கு.

வேற யாரையும் கல்யாணம் செய்வதற்கு பதிலா, ரொம்ப வருஷமா பார்க்கிற உன்னையே கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னன்னு எனக்கு தோணுது. கல்யாணம் பண்ணி கொஞ்ச நாள் வாழ்ந்து பார்க்கலாம். பிடிக்கலன்னா பிரிஞ்சிடலாம்.

ஆரம்பம் முதல் நான் சொல்வதை பொறுமையாக கேட்டுக் கொண்டு வந்தவள் கடைசியில் பிரிவு என்ற வார்த்தையை கேட்டவுடன், திடுக்கிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் பார்வையில் இருந்தது என்ன என்று எனக்கு தெரியும். அலுவலக சமயங்களில் கூட அவளது கள்ள பார்வையை நான் ரசித்துக் கொண்டிருப்பவன் என்று அவளுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பது, கொஞ்சம் அல்ல ரொம்பவே கஷ்டம். அவள் மனதில் எனக்கான இடம் இருப்பது என்னவோ நிஜம்தான்! அதை மீறிய சில எண்ணங்களும் அவளுக்கு உண்டு. அவளை அறிந்து வைத்திருப்பதாலேயே அவளை திருமணம் செய்துக் கொள்வதில் தயக்கம் இல்லை.

இந்த சமூகத்தின் பார்வை, அதை பற்றிய தயக்கம் அவளுக்குள் இருக்கலாம். ஏன் இந்த இடத்தில் சியா இல்லாமல் வேறு ஒரு பெண்... எனது வாழ்க்கை நிலைக்கும், அந்தஸ்திற்கும் சற்றும் பொருந்தி வராதவள் இங்கு அமர்ந்திருந்தால் நிச்சயம் திருமணம் போன்ற வாழ்நாள் பந்தத்திற்கு நான் கேட்டிருக்க மாட்டேன்.

ஆரம்பத்திலிருந்து, நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தங்கத் தட்டில் தான். எனது நிலையை புரிந்துகொள்வது கடினம்.

அவள் மெல்ல தனது கண்ணீரை உள்ளிழித்து, "உங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க ஷ்யாம். இது வீண் பிரச்சனை உண்டுபண்ணும்." அவளுக்கு விருப்பம் என்று புரிந்து கொண்டேன்.

"ஸோ, எங்க வீட்டுல ஓகே சொன்னா நீ ஒத்துப்பியா "?
அவளிடம் நிச்சயம் இதற்கு பதில் இல்லை.

லுக் சியா, உனக்கு ஒரு பிரச்சனைனு என்கிட்ட சொன்ன.. என்னால முடிஞ்சதை உனக்கு நா செய்தேன்.. இப்போ, எனக்கு ஒரு தேவைன்னு நான் வந்து உன்கிட்ட கேட்கும் போது, நீ ரொம்ப யோசிக்கிற சியா.

வெகு சமீபத்தில் தான், சியாவின் தங்கையின் திருமணம், வெகு ஆடம்பரமாக நடந்து முடிந்திருந்தது. திருமணம் முடியும் வரையில் எதுவும் பேசக்கூடாது என்று தான் நான் மௌனம் காத்தேன். ஆனால் இப்போது இது சரியான தருணம். இப்பொழுது பேசினால் அவளை சம்மதிக்க வைக்க முடியும் என்றுதான் இந்த பேச்சை ஆரம்பித்தேன்.

"சரி ஷ்யாம் நா கேக்குறதுக்கு பதில் சொல்லுங்க... பணமும் உங்களுடைய லைஃபும் ஒண்ணா... என்னைக்கு இருந்தாலும் எத்தனை வருஷம் ஆனாலும் உங்களுடைய பணத்தை நான் திருப்பி குடுக்க தான் போறேன்."இந்த கல்யாணம் அதை மாத்தாது. நம்ம கல்யாணம் கடனை அடைக்கும் குறுக்கு வழி இல்ல.
வாழ்நாள் முழுக்க இந்த உறவு கண்டினியூ பண்றது பத்தி யோசிக்காமல் பிடிக்கலன்னா பிரிஞ்சிடலாம்னு ஈஸியா சொல்றீங்க. சோ இந்த கல்யாணத்துல எந்த கமிட்மெண்டும் இல்ல காதலும் இல்லை. இப்படிப்பட்ட உறவு தேவையான நான் கேட்கிறேன். உங்கள பொறுத்த வரைக்கும் எப்படின்னு எனக்கு தெரியாது ஷ்யாம்.

கல்யாணம் அது என்னை பொறுத்த வரைக்கும் ரொம்ப புனிதமான உறவு அதுக்கு கட்டுப்படணும். அது நடக்கணும்னா ரெண்டு பேருக்குள்ள காதல், புரிதல் இருக்கணும். என்னால தோத்துப்போன கல்யாணத்தோடு வாழ்நாள் முழுக்க போராட முடியாது ஷ்யாம்."

"நம்ம கல்யாணம் தோத்து போக வழி இல்ல சியா. எனக்குள்ள வேணா காதல் இல்லாம இருக்கலாம். ஆனா என் மேல உனக்கு அது ரொம்ப இருக்குன்னு எனக்கு தெரியும். எவ்வளவு தூரம் அந்த காதல் இருக்குன்னா, லைப் முழுக்க உன்கிட்ட நான் காதலை காமிக்கலைன்னா கூட என்ன விட்டுட்டு போகணும்னு உனக்கு தோணாது."

என் வார்த்தைகளில் தாக்கத்தை தாங்க முடியாமல் உறை நிலையில் சியாவை பார்க்கும் பொழுது எனக்கு ரொம்பவும் பாவமாக இருக்கிறது. அவள் பார்வையில் இவனுக்கு நான் இவனை காதலிப்பது தெரியுமா... என்ற கேள்வி.

அவள் பார்வையை படித்தவனாக 'தெரியும். ரொம்ப நாளாவே நான் உன்னை கவனித்துக் கொண்டுதான் வரேன்.அதனால தான் இந்த கேள்வியை நான் உன்கிட்ட கேட்டேன் சியா."

என் முகத்தில் இருக்கும் புன்னகை அவளுக்கு தோன்றவில்லை. அவளிடம் விவரிக்க இயலாத இறுக்கம்.
"அப்போ, எல்லாம் தெரிஞ்சு தான் இப்படி கேக்குறீங்களா சார்?? ".
ஷ்யாம் என்ற வார்த்தை சட்டென்று சார் ஆகிப் போய்விட்டது.

நான் அமைதியாக இருக்கிறேன். அவளிடம் காதல் தோன்றுமா என்று எனக்கு நிச்சயம் இல்லை. ஆனால், அவளுடன் தான் என் வாழ்க்கையை பகிரவும், வாழவும் முடிவு செய்யும் அளவுக்கு அவளிடம் நம்பிக்கை உண்டு. எப்படி சொல்லி புரியவைக்க என்று தெரியாமல் தான் அவளுக்கு நான் கொடுத்த பணம் பற்றி பேசியதே!

"திரும்ப திரும்ப காதல் அது இதுன்னு ஒளறாதே சியா.. பி பிரக்டிகல்.

என்னை பொறுத்தவரை கல்யாணம் அது ஒரு வித ஒப்பந்தம். அண்ட் உலகத்தோட பார்வைல ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ லைசென்ஸ். தட்ஸ் இட்."

அவளுக்கு திருமணம் பற்றிய எனது கருத்துக்களை கேட்கவே பிடிக்கவில்லை.

"எல்லாமே உங்க பார்வைல சொல்றீங்க ஷ்யாம் சர்... எனக்குன்னு உணர்வுகள் இருக்கு. நான் ஒன்னும் மரம் இல்ல.. உணர்வுகளை கொன்னுட்டு உங்களோட என்னால எப்படி வாழ முடியும்?"

அவள் சொல்வது எனக்கு புரிபடவில்லை. "எதுக்கு உணர்வுகளை கொல்லனும்? நார்மல் ஹஸ்பண்ட் அண்ட் வைப் எப்படி வாழுவாங்களோ அதே போல தான் நம்ம லைப் போகும்.. அண்ட் நீ ஆபீஸ் வந்து வேலை பாரு. உன்னை விட்டா என்னோட வேலைகளை சரியா செய்ய ஆள் இல்ல " சொல்லிவிட்டு அவள் பதிலுக்காக காத்திருந்தேன்.

அவள் மீண்டும் என்னை ஆராய்ச்சி பார்வை பார்த்தாள். ஒருவேளை என்னிடம் நான் இது வரை உணராத காதலை தேடிப் பார்க்கிறாளா என்று தெரியவில்லை.

சற்றே என்னை உத்துப் பார்த்தவள் பெருமூச்சுடன், 'எனக்கு வீட்ல பேசணும். அவங்க ஒப்புக்கிட்டா கல்யாணம்' என்றாள்.

நான் அவளிடம், சம்பளம் வாங்கி உங்களுக்கு குடுத்துடறேன்னு சொல்லு. இன்னும் அவங்க இருக்க வீடும் தரேன். விஷயம் அவங்களுக்கு சாதகம்னா நிச்சயம்
ஒத்துப்பாங்க 'என்றேன்.
இது தான் அவள் வீட்டு உண்மை நிலை.அவள் இம்முறை கண்ணீரை உள்ளிழுக்க முயற்சி செய்யவில்லை. என்னிடம் இருக்கும் கர்ச்சீப் அவள் கைகளில், அவளது கண்ணீரை துடைக்கும் முயற்சியில்.

இருவரும் அன்றே பிரபலமான துணிக் கடைக்கு சென்றோம். கல்யாணம் அன்று அணிய அவளுக்கு சில பட்டுப் புடவைகள் வாங்கிவிட்டு, எங்கள் முறைப்படி அணிய அவளுக்கு லெஹங்காவிற்கு ஆர்டர் கொடுத்துவிட்டு, எனக்கும் ஆடைகள் தெரிவு செய்தோம்.

என் மனது முழுவதும் வீட்டில் எப்படி சொல்வது என்கிற யோசனை. பெண்ணிடம் இது பற்றி பேச முடியாது. வழக்கமான என் பிடிவாதம். அவள் முகத்தில் கல்யாணம் எனும் சந்தோஷமோ, நிறைவோ இல்லை.

இந்த திருமண பந்தம் என்றைக்கும் நிலைத்து நிற்கும் என்கிற நம்பிக்கை அவளுக்கு தேவைப்படுகிறது. அதை சொல்ல, அந்த நம்பிக்கையை தர முதலில் என் முடிவில் நான் தெளிவாக இருக்க வேண்டுமே!

நகைக்கடையில் அவளுக்காக நான் செய்த செலவை அவள் தடுக்கவில்லை. யாருக்கு எனும் பாவனையில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பவளை என்ன செய்வது?

நான் மாங்கல்யம் வாங்க எத்தனிக்கும் பொழுது தடுத்தவள், "அத மட்டுமாவது நல்ல நாள் பார்த்து வாங்கலாமே "என்றாள். அவள் குரலில் என்ன இருந்தது?

அவள் சொன்னதை கேட்டு, மறுக்க எனக்கு தோன்றவில்லை. ஒரு தோள் குலுக்களுடன் கிளம்பிவிட்டேன்.

என் விஷயம் சொன்னதும் மொத்த குடும்பமும் கிளம்பி வந்து இதோ, இங்கு பெங்களூரு வீட்டில்.

நீண்ட வாக்குவாதம், அம்மாவின் அழுகை, அப்பா அண்ணா சித்தப்பா என்று வீட்டு ஆண்களின் அதிரடி மிரட்டல் இவற்றை ஒரு வழியாக கடந்து திருமண ஒப்புதல் வாங்கி ஆயிற்று. என் போக்கு அவர்களுக்கு தெரியும்.

சியா வீட்டில் நான் சொன்னவற்றை அவள் அப்படியே ஒப்பிக்க, பணக்கார முதலாளியுடன் தன் மகள் திருமணம் என்று அவர்களும் ஒப்புக்கொள்ள, இரண்டு மாதங்களில் திருமணம் என்று நிச்சயம் ஆகிற்று.

அப்பாவுக்கு அதற்குள் என் மனம் மாறுமா என்று பார்க்க வேண்டும்.

சியாவை பார்த்து என் அம்மாவுக்கு ஒரு புறம் கோவம்.. என்னை மயக்கிவிட்டாள் என்று என் வீட்டு பெண்கள் அவளை பேசினாலும், சியா ஒன்றும் பதில் சொல்லவோ எதிர்த்து பேசவோ இல்லை.

அதில் என் பாட்டிக்கும் அம்மாவுக்கும் கொஞ்சம் ஆறுதல். பெண் குடும்பம் செய்ய தகுதியானவள் தான் என்று முடிவு சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்கள்.

ஆனால், பிறகும் கூட சியா முகத்தில் வேதனையின் சாயல் தான்.
திருமண நாள் வரை.
 

Members online

No members online now.

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top