JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

சது(ரங்கம் )2

Subageetha

Well-known member
நாட்கள் மாதங்களாக, மாதங்கள் வருடங்களாக உருண்டோட தொடங்கிவிட்டது. காலம் யாருக்காகவும் எங்குமே தடைபட்டு நிற்பதில்லை. சக்கரம் போன்ற அது வேகமாக சுழல ஆரம்பித்து விடுகிறது. கால சூழற்சி வெறும் நேரத்தை மட்டும் கடத்தவில்லை. அது ஒவ்வொரு நொடியும் மனிதனையும், அவனது குணாதிசயங்களையும் சேர்த்து செதுக்குகிறது.

சாதுர்யாவும் ரங்கனும் கால சக்கரத்தின் சுழற்சியில் வேகமாக வளர்கிறார்கள்.
ரங்கன் திருச்சியில் இப்போது ஆறாம் வகுப்பு, சாதுர்யா தில்லியில் இரண்டாம் வகுப்பு. ரங்கன் அவன் வளரும் திருச்சி மாநகருக்கு ஏற்றபடி கொஞ்சம் சாதுவாகவும் அமைதியான மனப்போக்கு உடையவனாகவும் வளர்கிறான். காவிரியின் செழுமை அவனிடம் கூட பிரதிபலிக்கிறது. ஆறாம் வகுப்பு படிக்கும்போதே பத்தாம் வகுப்பா என்று கேட்கக்கூடிய உயரம்.ஆனால் அவன் மனமோ சிறு குழந்தை தனத்துடன் தான் இருக்கிறது.
கூடவே கொஞ்சம் பக்குவமும் வந்தி ருக்கிறது.
எப்பேர்பட்ட கடுமையான விஷயங்களையும் எளிதாக ஏற்கும் பாங்கு, அவனுக்கு இயற்கையாகவே அமைந்துவிட்டிருக்கிறது . ஒருவேளை காலம் அவனுக்கு நிறைய ஏமாற்றங்களையும், ஏற்ற இறக்கங்களையும் பரிசாய் அளிக்க ரங்கனை தயார் செய்கிறதா என்பதைப்பற்றி கதையின் போக்கில் தெரிந்து கொள்வீர்கள் . எப்போதும் அமைதி மட்டும் ஆயுதமாக இருக்க முடியாது. சாம- தான -பேத- தண்டம் என்ற நான்கு முறைகள் இருக்கிறது வெல்வதற்கு.
காலம் வைக்கும் தேர்வுகள் அவற்றின் தேர்ச்சி, வாழ்க்கைக்காக கற்கும் பாடங்கள் இவை தான் மனித சமூகத்தை செதுக்க முடியும்.
ரங்கன் மிக அமைதியான பையன் என்று பள்ளியிலும், சுற்றியிருக்கும் மனிதர்கள் நடுவிலும் பெயர் வாங்கியாயிற்று. அவன் இருக்கும் இடம் தெரியாது. அவனைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவன் மதிப்பெண்கள் அவன் வகுப்பில் பேசும். எப்பொழுதுமே முதல் பெஞ்ச் தான். பெரும்பாலும் இது போன்ற சிறுவர்களுக்கு பள்ளியிலும் வெளியுலகிலும் வரவேற்பு அதிகம்.இத்துடன் நன்றாகவும் படித்தால் கேட்கவே வேண்டாம். இதுதான் நம் ரங்கராஜன்.

"சாதுர்யா''அவள் ரகமே தனிதான்.அம்மம்மா... வாரம் இரண்டு முறை அவளது அம்மா இவளுக்காக தலையை தொங்க போட்டு கொண்டு வகுப்பு ஆசிரியர் முன் நின்றாக வேண்டும் இவள் செய்யும் சுட்டித்தனங்களின் பட்டியலை கேட்டுக்கொண்டு நின்றாக வேண்டும்.எவ்வளவோ நன்றாக படித்தும் கூட அவளது குறும்புத்தனங்களும், முன்கோபமும் அவளை எப்போதுமே கடைசி பென்சில் தான் அமர வைத்தது.
அப்பாவின் துறை மாறுதல், இடம் மாறுதல் என்று ஆயிரம் இருந்தாலும், ஏனோ தில்லியில் அவள் வளர வேணும், என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது போலும். தில்லியை சுற்றியே அவள் அப்பாவின் பணி. ஒரு வேளை தில்லி அவள் வாழ்வில் சதுரங்க ஆட்டத்தில் அவளை ராணி ஆக்க பயிற்சிக் களம் ஆகலாம். இயல்பிலேயே போராளி அவள். வெற்றி -தோல்வி பற்றி கவலை இல்லை. தன் உச்ச பட்ச நிலை வரை போராடும் குணம் அவளுக்கு உண்டு. அவள் சந்திக்கப் போகும் நிகழ்வுகள் அவளை உங்களுக்கு புரிய வைக்கும்.
புது தில்லியில் அந்த பள்ளியில் பயிலும் அநேகரின் பெற்றோர் மத்திய அல்லது மாநில அரசின் முக்கிய பெரும் பதவிகளில் வகிப்பவர்களின் பிள்ளைகள், அரசியல் களத்தில் கரை கண்டவர்களின் வீட்டு பிள்ளைகள் என்று அந்த வட்டம் பெரியது. சாதாரண வீட்டு சிறுவர் சிறுமியர் படிக்கும் பள்ளி அல்ல அது. அப்பேர்ப்பட்ட பள்ளியில் குட்டி ரவுடி போல வலம் வந்தாள் நம் சண்டிராணி.
சாதுர்யா பொதுவாக தானாக வம்புக்கு செல்லும் ரகம் இல்லை. ஆனால், அழுத்தமும், பிடிவாதமுமாக இருக்கும் அவளுக்கு யாராவது வம்புக்கு இழுத்தாலோ, ஏதேனும் தவறு செய்தாலோ தாங்க முடியாமல் கோவம் வந்துவிடும். ஏழு வயதில் எங்கிருந்து இந்த கோவம் என்று வீட்டினருக்கு புரியவில்லை.பிறகு அவளின் அம்மா பள்ளியில் அட்டெண்டென்ஸ் போட வேண்டியதுதான்.
அவளுக்கென்று ஒரு தோழமை கூட்டம் இல்லை...இல்லை ரசிகர் கூட்டம் என்று கூட சொல்லலாம், அவள் வகுப்பில் உண்டு. அவள் துணிவும், ஆளுமையும் அவளுக்கு இவ்வாறான கூட்டத்தை இரண்டாம் வகுப்பிலேயே கொடுத்திருந்தது. இது அவளுக்குத்'தான்' என்ற கர்வத்தை சிறிது கொடுத்திருக்கிறது என்று கூட சொல்லலாம்.நான்கு வயதிலேயே மழலை மாறிவிட்டது. பேசுவதும் பெரிய பெண் போல் இருக்கும்.

அவள் படிக்கும் பள்ளி அவளது சுற்றுவட்டாரம், அவள் வாழும் இடம், அவள் அப்பா வகிக்கும் உயர் பதவி எல்லாம் அவளது வளர்ப்பின் பாணியை நிறையவே மாற்றியிருக்கிறது. எப்பொழுதுமே அவளது நடையில் ஒருநிமிர்வுடன் கூடிய கம்பீரம்,துள்ளலும் பார்ப்போரை அவள்புறம் பார்க்காமல் செல்ல அனுமதிப்பதில்லை.( ஒரு வேளை பாட்டி லட்சுமி அம்மாளை கொண்டு இவள் பிறந்திருப்பாளோ எனும் எண்ணம் எனக்கு.)இதை கவனித்துக் கொண்டதாலோ என்னவோ, அவளால் மனதில் தான் செய்யும் விஷயங்கள் தான் நடந்து கொள்ளும் விதம் எல்லாம் சரிதான் என்ற எண்ணப் போக்கையும் விதைத்திருக்கிறது.
நினைத்ததை எப்பாடுபட்டாவது நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற பிடிவாதம் வளர்ந்து இருக்கிறது. ஆனால், இந்த பிடிவாதம் அவளை எங்கெல்லாம் கொண்டு செல்லப் போகிறது இந்த முன்கோபம் அவளை எங்கே நிறுத்தப் போகிறது, இதனால் அவள் படப்போகும் வேதனை என்ன, அவள் கொடுக்கும் விலை என்ன என்ற பல்வேறு கேள்விகள் தொக்கி நிற்கத்தான் செய்கிறது. ஆனால் பிடிவாதம் என்பது சில சமயங்களில் நம்மை முன்னோக்கி கொண்டு செல்லும். அவளும் கூட முன்னே ஏதோ ஒரு இடத்தில் கால்பதிக்க தான் வேண்டும்!

அவளின் பெற்றோரின் இருப்பக்க உறவுகளின் பிள்ளைகளில் சாதுர்யா
அதிகம் தேடுவதும் ஒட்டுவதும் ரங்கனை மட்டும் தான். தன்னை விட நான்கு வருஷங்கள் சிறு வயதினாளான அவளை விடுமுறைக்கு வரும் சமயங்களில் தன்னுடனே வைத்துக்கொண்டு, அவளுக்கு சமமான விளையாட்டுகளை தானும் விளையாடுவதும், தான் செல்லும் இடங்களுக்கு அவளை கூட்டி செல்வதும்,தன் நண்பர் குழுவில் அவளை பிடிவாதமாக சேர்த்து விளையாட வைப்பதும் அவன் மட்டுமே. அவனுக்கு மாமன் மகளின் வயது அல்ல, அவள் மட்டுமே முக்கியம். பிறந்த பொழுது என்ன பாசம் வைத்து அவள் அருகில் அமர்ந்தானோ, அதே பாசம் இந்த நொடி வரை. அவள் குணம் வேறு, அவன் குணம் அதற்கு நேரேதிர். ஒருவேளை எதிரெதிர் துருவங்கள்
ஈர்க்கும் என்ற விதிப்படி, இருவரும் ஒன்றாக சுற்றுகிறார்களோ என்னவோ? ஆனால் சாதுரியாவின் எல்லா குணநலன்களிலும் ஈடு கொடுப்பவன் ரங்கன் மட்டுமே.

****----****

அருணாச்சலம் தனது காலை கடமைகளை முடித்து, உணவு அருந்த உட்கார்ந்திருக்க, அவர் மனைவி அன்னபுரணி மெத்தென்ற
இடியாப்பங்களை அவரது வெள்ளித் தட்டில் எடுத்து வைத்து, அதற்கு துணையாக தேங்காய் பாலும், குருமாவும் தனித் தனி வெள்ளி கிண்ணங்களில் எடுத்து வைத்தாள் . சூடாக பரிமாறப் பட்ட காலை உணவில் நிச்சயம் அருணாச்சலத்தின் கவனம் இல்லை. நாற்பதுகளில் பயணிக்கும் அவருக்கு இரண்டு முக்கிய விஷயங்கள் அவர் கவனத்தை சிதற செய்கிறது.

முதலில் அவர் கவுன்சிலர் தேர்தலில் நிற்பது. பூங்குவளை வட்டாரத்தில் பெரும் பணம் பெற்றவர் அவர். பரம்பரை பணக்காரர்.தனியாக போட்டியிடுவதா... இல்லை ஏதேனும் முக்கிய கட்சியில் சேருவதா என்று குழப்பம்.அவரிடம் உள்ள பணம் பாதாளம் வரை பாயலாம். சமீபத்தில் அருணாச்சலத்துடன் பள்ளியில் படித்த ராமேஸ்வரம் தனது சொந்த ஊரை பார்க்க வந்த பொழுது, அருணாச்சலத்தை சந்தித்த சமயம் அவரையும் அரசியலுக்கு வருமாறு அழைக்க அங்கு வந்த யோசனைதான் இது. ராமேஸ்வரத்தின் குடும்பம் பணம் கொண்ட குடும்பம் எல்லாம் இல்லை. ஆனால் அரசியலில் சேர்ந்த பிறகு, எப்படியோ கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, இன்று ஒரு முக்கிய கட்சியில் முக்கிய பதவியில் இருக்கிறார். எம்எல்ஏவும் ஆகிவிட்டார். செல்வாக்கும் வந்து விட்டது. என்னதான் பணமும், பவிசும் இருந்தாலும் பதவி தரும் போதை வேறுதான். இதனால்தான் அவர் கவுன்சிலர் தேர்தலிலாவது போட்டியிட வேண்டும் என்று நினைப்பது. முதலில் அரசியலில் நுழைந்துவிட்டால் பதவி எல்லாம் தானாக வந்து சேரும் என்றும் நம்புகிறார்.

மற்றொன்று, அவரது பத்தொன்பது வயது மகன் குருபரன். நன்றாக படித்து கொண்டிருந்தவன் திடீரென பாதை மாறிப் போனான். பண்ணிரண்டாம் வகுப்பில்கூட வெற்றி பெறவில்லை. கூடா நட்பு வேறு.தனக்கு பிறகு இந்த மொத்த சொத்துக்கும் சொந்தகாரன், கணக்கு வழக்குகளையாவது பார்க்க தொடங்கலாம். சொத்துக்களை பற்றி எந்த ஈடுபாடும் இன்றி செலவு செய்வதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு சுற்றி வருகிறான். திருச்சி தஞ்சாவூர் சுற்றி இவர்களின் பொன் விளையும் நிலங்கள் ஏராளம். தங்கத்தட்டில் சாப்பிடவே வசதி உண்டு. குருபரன் சமீப காலமாய் சேர்க்கைவேறு சரியில்லை. அடிக்கடி தோப்பு வீட்டுக்குள் யாரவது ஒரு பெண் துணையோடு ஒதுங்குவதாய் கணக்கு பிள்ளை சிவன் சொல்லியி ருந்தார். தோப்பின் காவலுக்கு இருக்கும் வீரனிடம் விசாரித்ததில் விவகாரம் நிசம் என்று தெரிகிறது. இன்னும் விஷயம் அன்னத்தின் காதுகளுக்கு போகவில்லை. சென்றால் அவள் உயிரே நின்று விடும்.தவமிருந்து பெற்ற ஒற்றைபிள்ளை.எப்படியோ
மனைவியின் காதுக்கு விஷயம் செல்லாமல் காபந்து செய்கிறார். மகனை கண்டித்தாக வேணும். கை மீறி போனால்... அவருக்கு நினைக்கவே நடுங்குகிறது. மகன் ஏற்கனவே கைமீறிவிட்டாயிற்று என்று இன்னும் அருணாச்சலத்துக்கு புரியவில்லை.இந்த வயதில் பெண் துணை தேடுவது, தனியே ஒதுங்கு வது என்பது அசாதாரணம்.திருத்தி விடலாம் என ஒரு தகப்பனாய் நம்புகிறார். திருமணம் செய்து வைக்கலாம் என்றால் இன்னும் அவனுக்கு அதற்கான வயது வரவில்லை. திருமணவாழ்வுக்குரிய பக்குவம் கிடையாது.

அவனது அடாத செய்கைகள் வரம்பு மீறிய நியாயங்கள் வெளியில் தெரிந்தால் நிச்சயம் அருணாச்சலம் அவர்களின் பொது வாழ்வும், அரசியல் ஆசைகளும் சூனியம் தான். அவருக்கு உள்ளுர மன உளைச்சல் அதிகமாக இருக்கிறது.

மேற்படிப்பும் படிக்காத நிலையில் இருந்த சொத்துக்களை ஆள தெரியாத, அக்கறை இல்லாத ஒரு மகனை வைத்துக் கொண்டு என்ன இருந்து என்ன என்று அவருக்குள் ஒரு ஆயாசம். எப்படி மேற்கொண்டு அவனது வாழ்க்கையை சீர் செய்வது என்பது அருணாசலத்திற்கு பெரிய சவாலாகவே இருக்கிறது. ஊரில் எல்லோருக்கும் நடுவில் நல்ல மரியாதையாக இவர் வாழ்ந்து கொண்டிருக்கும் சமயத்தில் மகனின் நடத்தைகள் அவரது மரியாதையை சாய்க்க போகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை. மனதிற்குள் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவராக தன் மனைவியிடம் திரும்பி,

அன்னம்... நான் சொல்றத கொஞ்சம் நிதானமா கேக்குறியா?

ம்ம்ம்... சொல்லுங்க மாமா.

கொஞ்ச நாளா அரசியல் சமாச்சாரங்களில் தலையை கொடுத்துட்டேன் இல்ல...நேரமில்லாதால நம்ம தோப்புகளை
என்னால போய் பாத்துட்டு வர முடியல. உனக்கு நேரம் கிடைக்குமுன்னா அடிக்கடி போய் தோப்புல இருந்துட்டு வாயேன்... அப்படியே கணக்கு சிவத்துகிட்ட கிட்ட சொல்லி கணக்கு வழக்கையும் நீயே பாத்தீயுன்னா தோது.எவ்ளோ சொத்து இருந்தாலும் உடையவன் பார்க்கலைன்னா சொத்தெல்லாம் நிமிஷமா கரைஞ்சு போயிடுமில்லை?

சரிங்க மாமா, இனிமே தோப்பு விவகாரம் எல்லாம் நானே பாத்துக்கிறேன்... நீங்க கவலைப்படாதீங்க.

கணவனின் யோசனை படிந்த முகத்தை வைத்து அவரது தீவிர சிந்தனை எதற்கு என்று புரியாவிட்டாலும் அவருடன் சேர்ந்து பயணம் செய்ய முடிவு எடுத்தவள் இனி கணக்கு விஷயங்களை தானே பார்ப்பது என்று முடிவு செய்து கொண்டாள்.
அவளது இந்த முடிவே அவளுக்கு முடிவை கொண்டு வரப் போவது நல்லவேளை அவளுக்கு தெரியாது.

நிம்மதி பெருமூச்சு விட்டு மனைவி வைத்த இடியாப்ப ருசி நாக்கில் உறைக்க மன சஞ்சலம் குறைந்தவராய் ஒரு பிடி பிடித்தார்.

அருணாச்சலம் ஒரு வாரத்திற்கு சென்னை செல்ல, வீட்டுக்கு வராது குரு என்ன செய்கிறான் என்ற குழப்பம் மேலிட தவித்து நின்றார் அன்னம். அவரது முகத்தில் ஒரு தெளிவு இல்லை முகம் கசங்கலாக இருந்தது.

என்னதான் கணவர் மறைத்தாலும் சமீப காலமாக குரு அவனது நடத்தை இரண்டுமே, பெற்ற தாயாக அன்னத்தின் மனதில் சஞ்சலத்தை தான் உண்டு பண்ணுகிறது. அன்னமும் கவனித்துக்கொண்டே தானே இருக்கிறாள்?

கணக்கு பிள்ளை சிவன், அன்னத்தின் மனதை திருப்ப சொத்துக்களின் சமீப கால கணக்குகள், ஆடிட்டர் கேட்டுள்ள விவரங்கள் என்று முக்கிய விஷயங்களில் அன்னத்தை ஈடுபடச் செய்தார்.

சரி, வீட்டிக்காரரும் ஊருக்கு சென்றுள்ள சமயம், வீட்டிலும் பெரிதாக வேலை இல்லை. மாந்தோப்புக்கு சென்றுவிட்டு மதியம் அங்கேயே வீட்டில் இருந்து கணக்கு வழக்குகளையும் பார்க்கலாம் என்ற முடிவில் அன்னபூரணி சிவத்தையும் கூட்டிக்கொண்டு காரில் மாந்தோப்பில் நோக்கி சென்றாள். செல்லும்போது அருணாசலத்திற்கு அழைத்து விபரத்தையும் சொல்லி விட்டு சென்றார்கள்.
அங்கே மாந்தோப்பில் காவலுக்கு நின்ற வீரனிடம் காணப்பட்ட தவிப்பும், கலவரம் நிறைந்த முகமும் பாரதூரமாக ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என்று அன்னத்தை யோசிக்க செய்ய, சிறிது நேரம் வீரனுடன் பேசிவிட்டு உள்ளே சென்றாள்.

மீண்டும் அடுத்த அத்யாயத்தில் சது(ரங்கம்)ஆட்டம் தொடரும்.

சுகீ
 

Members online

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top