JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

சது(ரங்கம் ) 4

Subageetha

Well-known member
“ரங்கன் தன்னுடன்
சாதுர்யாவை விளையாட கூட்டிக்கொண்டு அலைவதும், பாட்டியோ தாத்தாவோ துணைக்கு ஒருவர் வர, ரங்கனிடம் ஏதேனும்
வளவளத்துக் கொண்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் கல்லணைக்கும் சுற்றி விட்டு வருவதும், நண்பர்கள் புடை சூழ அம்மா மண்டபத்தில் விளையாடுவதும், காவிரியுடன் போட்டி போட்டுக்கொண்டு தானும் ஓடி விளையாடுவதும், லக்ஷ்மி அம்மாள் வீட்டில் பின்பக்கம் வளர்க்கும் பசு மாடுகளுடன் கொட்டிலில் அமர்ந்து கொஞ்சி கொண்டிருப்பதும், தாத்தாவை கூட்டிக்கொண்டு அவர்களுக்கு சொந்தமான கிராமங்களில் இருக்கும் நிலங்களுக்கு சென்று நானும் நாற்று நடுகிறேன்,களை எடுக்கிறேன், என்று அங்கு வேலை செய்யும் பெண்களுடன்
வம்படித்துக்கொண்டு அவர்களுடைய குழந்தைகளை தூக்கிக்கொண்டு கொஞ்சி தெரிவதும் திருச்சி மலைக்கோட்டை, உச்சி பிள்ளையார் கோவில் செல்வதும்,சுற்றியிருக்கும் கிராமங்களில், அருகில் இருக்கும் ஊர்களில் பஸ்ஸில் தாத்தாவுடன் பயணம் செய்வதும் என்று அவளது நேரம் அவளிடம் இல்லாமல் பறந்து கொண்டே தான் இருக்கிறது. நடுவில் இருபது நாட்கள் வயலூரில் அத்தை ரேணுகாவின் வீட்டில்
சாதுர்யாவின் இருப்பு, ரேணுகாவிற்கு தன் அண்ணன் மகள் தங்கள் வீட்டில் வந்து தங்குவதில் சொல்லொண்ணா மகிழ்ச்சி. சாதுர்யாவுக்கு எப்போதுமே கால் ஒரு இடத்தில் தங்காது. நிற்காமல் எப்பொழுதுமே ஓடிக்கொண்டே இருப்பாள். அவள் ஒரு இடத்தில் உட்கார வேண்டும் என்றால் ஒன்று படிக்க உட்காரும் நேரம், இல்லையென்றால் யாராவது அவளுடன் கதை பேசிக் கொண்டிருக்க வேண்டும். அது என்னமோ கதை கேட்பதில் அதிலும் சரித்திர கதை கேட்பதில் அவளுக்கு அலாதி பிரியம்.
அவளுக்கு விடுமுறையில் ரங்கன் சதுரங்கம் சொல்லிக் கொடுப்பதிலும் பரமபத விளையாட்டு சொல்லி தருவதிலும் நேரத்தை கடத்தினான். சாதுர்யாவுக்கு கணக்கு பாடம் ரொம்பவுமே தகராறு. ரங்கனுக்கு கணக்கு என்றால் இனிப்பு அளவுக்கு பிரியம். கணக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறேன் என்று அவளை ஒரு வழி ஆக்கி விட்டான். கதற கதற கணக்கு கொடுத்து கற்றுக் கொண்டாள் சாதுரியா. ரங்கன் வீட்டில் ரேழியில் இருக்கும் பெரிய மர ஊஞ்சலின் மீது
சாதுர்யாவுக்கு ஏதோ ஒரு மோகம். வருடாவருடம் வருவதுதான்.
ஆனால், இந்த வருடம் கொஞ்சம் விபரம் புரியும் அளவில் பெரிய பெண்ணாக வளர்ந்திருந்தாள் சாதுர்யா. வளர்ந்திருந்தாள் என்றால் ஆமாம் நிச்சயம் அவள் இப்போதே நல்ல உயரம் தான். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ரங்கனின் காது அளவிற்கு வந்திருக்கிறாள். அழகிதான். மாநிறத்திற்கு சற்றே கூடுதல் நிறம்,துருதுருவென்று பேசும் கண்கள். எப்பொழுதும் குறும்பு. அதீத கோபம், கோபத்தின் சமயம் ஜொலிக்கும் முகம், வாய் ஓயாத பேச்சு, என்று பேசுவதற்கு அவளுக்கு ஆள் தேவையில்லை கேட்பதற்கு தான் ஆள் தேவை. மற்றவர்கள்
யாரும்' அறுக்காதே 'என்று சொன்னால் கூட அது என்னமோ அவள் பாட்டி லட்சுமியும், அவளது ரங்கனும் எப்போதுமே அவள் பேசுவதை கேட்க தயார்தான்.

ஒருவழியாக விடுப்பு முடிந்து,பெண்ணும் அப்பா அம்மாவுடன் ரங்கனை விட்டு பிரியும் துன்பம் தாங்க முடியாமல், எப்பொழுதும் போல, சிறு சிறுமியாக பாட்டி வீட்டை விட்டு வரமாட்டேன் என்று ஒரே அழுகை. அவளுக்கு என்னமோ போலி முகங்கள், ரொம்ப சாமர்த்தியம் மிகுந்த நட்பு சூழல் பிடிக்கவில்லை. அவளுடன் பயிலும் எல்லா மாணவர்களுமே சாமர்த்தியம் தான். குழந்தைப் பருவத்தை மீறிக்கொண்டு வெளிப்படும் அந்த குணம் அவளுக்கு பிடிப்பதில்லை.இதோ ஊருக்கு சென்றவுடன் ஆறாம் வகுப்பு,கல்வி சாலைக்குச் சென்று புத்தகங்களுடன் மல்லுக் கட்ட வேண்டும். நினைக்கும் போதே தலை பாரமாக உணர்ந்தாள் சாதுர்யா. ஒருவழியாக வெங்கடேசனும், சாதுவின் அம்மா மாலாவும் மகளை சமாதானப்படுத்தி தில்லிக்கு கூட்டிச் சென்றார்கள். திரும்பவும் அடுத்த விடுமுறைக்கு வர வேண்டும் என்று பேரம் பேசி தான் சென்றாள்.

ஆனால் மாலாவுக்கு, தன் மகளை விடுமுறை வகுப்புகளில் சேர்த்து விட வேண்டும். சம்மர் கேம்ப் வகுப்புகளுக்கு மற்ற குழந்தைகள் செல்வது போல இவளும் செல்லவேண்டும், அப்பொழுது தான் மற்ற குழந்தைகளுடன் ஈடுகட்ட முடியும் தன் மகளால் என்ற எண்ணம் உள்ளூர இருந்து கொண்டிருக்கிறது. சாதுர்யா அடங்கும் ரகம் அல்ல.

சாதுர்யா கிளம்பிய மறுநாள், ரங்கனுக்கு பத்தாம் வகுப்புக்கான வகுப்புகள் ஆரம்பம் ஆகிவிட்டது. காலை எது மாலை எது என்று தெரியாத அளவிற்கு ரங்கன் ஓடிக்கொண்டிருந்தான். அவனின் அப்பா தீர்மானமாகச் சொல்லிவிட்டார்

'எனக்கும் வயசு ஆகுது ரங்கா... நீ படிப்பை முடித்து என்னோடு கூட வந்து, தொழில் கத்துக்கணும். நம்ம தொழில இப்ப இருக்கிற மாதிரி இன்னும் ஒரு மடங்கு பெருக்க வேண்டியது உன்னோட பொறுப்பு. உனக்கு தொழில் கத்து கொடுக்கணும்,உலகம் முழுக்க நம்ம தொழில பரப்பணும்.அதுதான் என்னுடைய ஆசை... இப்ப ஸ்பெயின்ல உங்க அத்தை, நம்ம தொழில பார்த்துக்கறாங்க. அவங்களால, மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு குடும்பத்தை விட்டுட்டு போய் வர முடியல. அங்க எல்லாம் நம்ம தொழில் பரவணும். அதுக்கு உன்னை நீயே தயார் படுத்திக்கோ'.
தந்தையின் சொற்கள், ஒவ்வொரு நொடியும்
அவனது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஏற்கனவே பொறுப்பானவன்தான். இப்பொழுது இன்னும் தன்னை செதுக்கி கொள்ள முனைந்தான் அந்த சிறுவன். எப்படியும் குடும்ப தொழில் தான் அவன் வேலை என்றாகிவிட்டது. அது சம்பந்தமாக தெரிந்து கொள்வதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் தந்தையுடன் சென்று, அவர்களது தொழிலை புரிந்து கொள்ள முயற்சி செய்யலானான்.நிலங்களுக்கு சென்று விவசாயம் பற்றிய அறிவை வளர்த்து கொள்ள முனைந்தான்.
சிறுவனுக்கு இவ்வளவு பெரிய பாரத்தை சுமத்தி இருப்பது தாமோதரன் -லட்சுமி தம்பதிக்கு மிகவும் சுத்தமாக ஏன் என்று புரியவில்லை. ஆனால் மருமகனிடம் இதை நேரடியாக கேட்டுவிட முடியாது.
ஆனால், ரங்கனின் அப்பா மனது முழுவதும் 'தனது தம்பி குடும்பத்தை,குடும்ப தொழிலை விட்டுவிட்டு கேவலம் காதலித்து பின்னால் சென்று விட்டானே, தன் மகனும் அதுபோல தவறுகள் செய்து விடக்கூடாது'. இந்த வயதிலேயே ரங்கனின் புத்தி புல் மேய போகாமல், சீராக அவனது பொறுப்புகளை ஏற்க பழக வேண்டும்' என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னை சுற்றி நடக்கும் விஷயங்கள், நிகழ்வுகள் தான் அவனுடைய தீர்மானங்களை செயல்வடிவமாக மாற்றுகிறது.கற்று தருவதுடன் பிறருக்கு பாடம் சொல்லவும்
பயிற்றுவிக்கிறது.
ரங்கன் தலையில் படிக்கும் வயதில் இப்பொழுது வேண்டுமானால், இது பெரிய பாரமாக தெரியலாம். ஆனால் இன்னும் பல பெரிய குடும்பங்களில், குடும்பத் தொழிலில் சிறுவயதிலேயே பழக்குவது வழக்கத்தில் இருப்பதுதான். இது சரியா தவறா என்பதை விட, அதன் போக்கில் அந்த விஷயங்களை விட்டு விடுவது தான் சரி. ரங்கனும் நன்றாக படிப்பதும் மதிப்பெண்கள் வாங்குவதும் எவ்வளவு முக்கியமோ தொழிலை கற்றுக் கொள்வதும் அவ்வளவு முக்கியம் என்று போதிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறான். பருவ வயதிற்கு உரிய எந்த ஆசைகளும் இதுவரையும் அவனது மனதில் பதியவில்லை. அவன் அப்பா விரும்புவது இதைத்தான்.
காலையும் மாலையும் பத்தாம்வகுப்புக்காக சிறப்பு வகுப்புகளுக்கு செல்வதும், விடி காலையிலேயே எழுந்து படிக்க அமர்வதுமாக, ஒரு பக்கம் அவன் நேரம் அவனை விழுங்க, இன்னொரு பக்கம் அப்பாவுடன் கற்றுக்கொள்வது, அம்மாவிற்கு வீட்டு நிர்வாகத்தில் உதவி செய்வது என்ற மெனக்கெடல் அதிகமாக இருந்தது. ஒருவேளை அவனிடம் பொறுமை குறைவு மட்டும் இருந்தால் நிச்சயம் வெடித்திருப்பான்.
ரேணுகாவுக்கு உள்ளூர வருத்தம் இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ள அவளுக்கு விருப்பமில்லை. ஆனால் ரேணுகாவின் மாமனார் மாமியாருக்கு தன் மகன், பேரனை பயிற்றுவிப்பது சரியே என்ற எண்ணம்.

நடுவில் பத்து நாள் விடுப்புகாக தில்லியில் தன் வீட்டில் ரகளை செய்து ஸ்ரீரங்கம் செய்வேன் என்று வந்து சேர்ந்தாள் சாதுர்யா. ஆனால் பத்தாம் வகுப்பு படிக்கும் தன் தோழன் தன்னை பார்ப்பதற்காக, முதல் நாள் சிறப்பு வகுப்புகள் முடிந்து இவளுடன் நேரம் செலவிட்டு விட்டு, அடுத்தநாள் விடி காலையிலேயே கிளம்பி விட்டான் தன் வகுப்புகளுக்கு. அவனது நிலையை புரிந்து கொள்ளும் நிலையில் சிறுமி இல்லை. அவள் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவன் சென்று விட்டதால், காலையில் தூங்கி விழித்து கொண்டவள் ஒரே ஆர்ப்பாட்டம் தான். தாமோதரன் லக்ஷ்மியால் கண்டிப்பாய் அவளை சமாதானம் செய்ய முடியவில்லை.
ரங்கனுடன் விளையாடலாம், வெளியே சுற்றலாம் என்று ஆயிரம் கனவுகளுடன் வந்தவளுக்கு ரங்கன் பெரிய வகுப்பில் படிக்கிறான் என்பது சுத்தமாகப் புரிபடவில்லை.
மதியம் ரேணுவுக்கு அழைத்து, லட்சுமி அம்மாள் ' ரங்கனை வரச் சொல்லு ரேணு, என்று சாது செய்யும் அனைத்து
ரகளைகளையும் மூச்சு விடாமல் சொல்லிவிட்டார்.'சரி, வர சொல்றேன் மா... இன்னும் அவன் க்ளாஸ் முடிஞ்சு வீட்டுக்கு வரல என்று சொல்லி வைத்து விட்டாள். ரங்கனும் இரவு வகுப்பு முடிந்து வருவதற்கு மிகவும் தாமதமாகிவிட்டது. ரங்கன் வந்துவிடுவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த சாதுர்யாவுக்கோ, அழுது அழுது ஜுரமே வந்துவிட்டது. மறுநாள் காலை வகுப்புகளை முடித்துவிட்டு மதியதிற்கு மேல்தான் ரங்கன் வந்தான். சிறுமியை பார்த்தவனுக்கு மனது தாங்கவில்லை. அவள் முகத்தை பார்த்து அவன் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

ஒரு வழியாக அவளுக்கு நிலைமையை எடுத்துச் சொல்லி 'எனக்கு இந்த வருஷம் பெரிய கிளாஸ் சாது, ஸ்பெஷல் கிளாஸ் எல்லாம் போகாம இருக்க முடியாது, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோம்மா ' என்று அவளிடம் கெஞ்சி கொஞ்சி சமாதானப்படுத்தி விட்டு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாலை நேரத்தில் வருவதாக சொல்லிவிட்டு அன்றைய மாலைநேர வகுப்புகளுக்கு விரைந்தான் ரங்கன்.

சிறுமிக்கு எதுவும் புரியாவிடினும், ரங்கன் கண்கள் உதித்த நீர் தனக்காக தான் என்பதை மனதில் வைத்து சமாதானம் அடைந்தாள் சிறுமி.

விடுமுறை முடிந்து
சாதுர்யாவை தானே தில்லியில் கொண்டுபோய் விட்டுவிட்டார் தாமோதரன்.
அவரும் டில்லி சென்று பல வருடங்கள் ஆகிவிட்டது.
ரங்கன் -சாதுர்யா பள்ளி நாட்கள் அதன் போக்கில் விரைந்தன.

நிமிடம் போல் ஆறு மாதங்கள் ஓடி விட, முழு ஆண்டு பரீட்சை முடிந்து ரங்கனுக்கும் பதினோரம் வகுப்பு சேர்க்கை ஆரம்பிக்க அவன் தொழிற்கணிதம் எடுத்துக் கொண்டான். நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தான். அவன் அப்பாவின் ஆசைக்கு இணங்க குடும்பத் தொழிலிலேயே நுழைவது எனும் எண்ணம் அவன் மனதில் ஆழமாக.

இங்கு தில்லியில் சாதுர்யாவின் அம்மாவோ, விடுமுறை காலத்தில் நடன வகுப்பு செல், வரைய கற்றுக்கொள், கணினி வகுப்பில் சேர் என்று வரிசையாய் பட்டியல் நீட்ட நொந்து போனாள் மகள். அவளை தேற்றும் வகையில் லட்சுமியும் தமோதரனும் பத்து பத்து நாட்கள் வந்து செல்ல, அவள் மனமோ ரங்கனை நாட அலைபேசியில் அவனை அழைத்து பேசினாள்.அவனோ 'அம்மா -அப்பா சொல்றது நாம நல்லதுக்குத்தான் சது... அவங்க பேச்சு கேளு' என முடித்துவிட்டான்.

மனம் ஏக்கம் இருந்தாலும் பிடிவாதம் மிக தான் அம்மா சொல்படி நடக்க ஆரம்பித்தாள் மகள்.அவனுக்கு உள்ளுர வருத்தம் மிகுந்தாலும் வளரும் பருவத்தில் சில விஷயங்கள் கற்க வேண்டும் என தன்னை தேற்றிகொண்டான்
அவள் தனக்காக உருகி அழுதது அவன் கண் முன்னே வந்து செல்ல கண்களை இறுக மூடிக்கொண்டான். அதிலிருந்து ஓரு சொட்டு கண்ணீர் அவன் கன்னத்தை முத்தமிட்டு சென்றது.
அவர்கள் மீண்டும் சந்திக்கும் தருணம்...

@@@@@@@@@@@@@@@

அருணாச்சலம் சென்னை சென்று வந்து ஒரு மாதம் ஆகி விட்டது. விஷயம் பழம்தான். முக்கிய கட்சியின் ஒன்றிணைப்பாளர் எனும் பதவி. கவுன்சிலர் பதவிக்கான ஆதரவு என்று மனிதர் மிகுந்த சந்தோஷத்தில். அவரது நட்பு ராமேஸ்வரம் 'இப்போ இந்த பதவி, சீக்கிரம்
எம் எல் ஏ ஆகணும். அதுக்கு வழிய பாரு'என்று வாழ்த்துடன் அருணாச்சலம் செய்ய வேண்டியவற்றை கோடிட்டு காட்டி அனுப்ப ஊருக்கு வந்த பிறகும் அவர் மனம் அதை சுற்றியே. மகன் குரு பற்றிய எண்ணம் அவரை அணுகவில்லை.
மனைவியிடம் ஆடிட்டர் சொன்னவற்றை கேட்டு கொண்டவர்,'இனி நீதான் எல்லாத்தையும் பாக்க பழகணும் அன்னம் 'என்று சென்னை விஷயங்களை சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

ராகாயியை அனுப்பி விட்டு இரவு தனிமை தாளாது குருபரன் தோப்பு வீட்டிலேயே முழு போதையில் முழுகி விட்டான். தனது தோழர்களுக்கு கூட தான் தங்கியிருப்பது பற்றி சொல்லவில்லை.
வீட்டுக்கு மகன் வரல என்பது அந்த தாயின் மனது தவிக்க, தந்தையோ எதிர்கால அரசியல் எண்ணி கோட்டைகள் கட்ட, எதிர் காலம் பற்றிய எண்ணமே இன்றி குரு குப்புற படுத்து கிடைக்கிறான்.
அருணாச்சலத்துக்கு அரசியல் எதிர்காலம் நன்றாக இருக்கு. ஆனால், அவர் குடும்பம்?

ராகாயி மனதில் குரு சீராழிகிறானே, என்று வருத்தம். அவள் வாழ்க்கை பிரண்ட பதினேழு வயதை வெறுத்தவாறே எண்ணி பார்த்தாள்.

சதுரங்க கட்டத்தில் முதல் காயை நகர்த்திவிட்டேன்.போர் நிச்சயம் ஆகிவிட்டது. வேகமாக உருளும் காலமான என்னோடு நீங்களும் வாருங்கள். இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

சுகீ.






.
 

Members online

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top