JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

தெவிட்டா தீஞ்சுவை நீ-28

Janani Naveen

Well-known member
அத்தியாயம்-28

காலையில் விழித்தவன் அருகே உறங்கி கொண்டு இருந்த மனைவியின் துயில் கலையாது அவளை அருகே இருந்த தலையணையில் படுக்க வைத்து விட்டு அவனது நாளை தொடங்கினான்.

முக்கியமான அலைபேசி அழைப்பு ஒன்று செய்து சற்று நேரம் பேசி விட்டு வந்தவன் குளித்து விட்டு வரும் போது யசோ சோர்வுடன் அமர்ந்திருந்தாள். காலையில் எழுந்ததுமே சோர்வும், தலை சுற்றலும் அவளை பாடாய் படுத்தி எடுத்தது.

மனைவி சோர்ந்து இருப்பதை பார்த்து “யதும்மா எழுந்து வா பல் தேய்ச்சுட்டு வந்து கொஞ்சம் பால் குடி, தெம்பா இருக்கும்” என்று அவளது கை பற்ற அவனது கையை உதறி

“விடு டா எல்லாம் உன்னால தான். உன்னால தான் என் பையன் என் கிட்ட வர மாட்டேங்கறான், உன்னால தான் எனக்கு தலை சுத்தது, உன்னால தான் எனக்கு வாந்தி வாந்தியா வருது. தள்ளிப்போ டா” என்று அவனை திட்டிக் கொண்டே அவன் மீது சாய்ந்து கொண்டு குளியல் அறைக்கு போனாள்.

அவனும் அவள் பாராட்டு பத்திரம் வாசித்தது போல முகம் முழுதும் புன்னகையுடன் “ஆமா பட்டுக் குட்டி, நீ வாந்தி எடுக்கறன்னா அது என்னால மட்டுமா தான் இருக்க முடியும். சரி தான் டா நீ சொல்றது. அப்படியே பல்ல தேச்சுட்டு வந்துடு செல்லம்” என்று குழந்தைக்கு சொல்வது போல சொல்லி ஒரு வழியாக அவள் குளித்து வந்ததும் தளர்வாக அமர்ந்து விட்டாள்.

“அத்து ருத்துவை பார்க்கனும். ரொம்ப சோர்வா இருக்கு நடக்க முடியலை” என்றாள் மகனை அப்போதே பார்க்க வேண்டும் என்ற பரிதவிப்பில்.

“இதோ இப்போ காலை சாப்பாடு நேரம் தான். நான் போய் நம்ம மூனு பேருக்கும் இங்கேயே சாப்பாடு கொண்டு வரேன்” என்று கூறி கீழே சென்றான்.
அங்கிருந்த மலரின் பெற்றோரிடம் மரியாதை நிமித்தமாக சிரித்து விட்டு “சாப்பிடிங்களா மாமா?” என்றான் மரியாதையாக.

“ஹான் இதோ இனிமேத் தான். வாங்க உட்காருங்க சாப்பிடுவோம்” என்றார் முத்துக்கருப்பன்.

அதை பொருட்படுத்தாமல் ஆத்ரேயன் அங்கு அமர்ந்திருந்த ருத்ரனை அள்ளி அணைத்து உயரே தூக்கி போட்டு பிடிக்க குழந்தை கிளுக்கி சிரித்தது.

“ருத்து கண்ணா சமத்து பையனா குளித்து சாப்பிட ரெடி ஆகிட்டான் போலயே. வாங்க நம்ம மாடிக்கு போய் அம்மா கூட சாப்பிடுவோம்” என்றான் குழந்தையிடம்.

“ஹுஹும் ஹுஹும் அம்மா இல்லை சித்தி. நான் வத மாத்தேன்” என்று பட்டென்று கூற அங்கே அமர்ந்து இருந்த பேச்சியம்மாளை ஒரு பார்வை பார்த்தவன் திரும்பி குழந்தையிடம்
“சித்தி இல்லை. அது யசோ அம்மா. மலர் அம்மா மாதிரி அது யசோ அம்மா. ருத்து குட்டியோட அம்மா” எனவும் தலை அசைத்து மறுத்து

“இல்லை இல்லை எனக்கு வேண்தாம். மகிக்கு ஒதே ஒது அம்மா தான்.” என்று ப்ளே குரூப் வரும் அவனது தோழிக்கு ஒரே ஒரு அன்னை தான் என்று கூறினான்.

அவனது புத்தி கூர்மையை பார்த்து வியந்து “மகியை விட ருத்து குட் பாய். அதான் சாமி அவனுக்கு ரெண்டு அம்மா கொடுத்து இருக்கார். இப்போ பார் உன் அப்பா ரொம்ப பேட் பாய் சின்ன வயசுல. அதனால அப்பாக்கு அம்மாவே இல்லை” என்று கூற

“தாதி(டாடி) உனக்கு அம்மா இல்லையா என்று உதடு பிதுக்கியது.

“ஆமா டா குட்டி. சரி வா மாடில போய் விளையாடிட்டே சாப்பிடலாம்.” என்று சமாதானப்படுத்தி அழைத்து சென்றவன் நின்று வள்ளியம்மையிடம் “அக்கா சாப்பாட்டை மேல கொடுத்து விடுங்க” என்று கூறி மலரின் பெற்றோரை ஒரு பார்வை பார்க்க கட்டுப்படுத்திய கோபம் பேச்சியம்மாளின் முகத்தில். முத்துக்கருப்பன் உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்து கொண்டு இருந்தார்.

குழந்தையை தூக்கி கொண்டு மாடியேரும் போது சரியாக சுஜியும் கீர்த்திவாசனும் உள்ளே வந்தார்கள்.

“அடடே வாங்க டாக்டர். வாம்மா” என்று முறையாக வரவேற்று

“வாங்க சாப்பிடலாம்” என்றான் ஆத்ரேயன்.

“அச்சோ இல்லை ஆதி இப்போ தான் சாப்பிட்டு வரோம்.” என்றார் கீர்த்தி.

“ஆமாம் ஆதி நாங்க அப்பா அம்மாவை பார்க்க தான் வந்தோம். கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டு ஹாஸ்பிட்டல் போகனும்” என்றாள் சுஜி.
“நீங்க குழந்தைக்கு சாப்பாடு கொடுத்துட்டு வாங்க “ என்றார் கீர்த்தி அருகே உணவு தட்டுகளுடன் நின்ற வேலை செய்யும் பெண்ணை பார்த்து.
சுஜியும் அவனை பார்த்து கண்கள் மூடி திறந்து சமிக்கை செய்ய அவன் ஒரு அர்த்தப் பார்வையை சிந்தி விட்டு குழந்தையுடன் மாடிக்கு சென்றான்.

அவர்களுக்கு குடிக்க பழரசம் கொடுக்கப்பட்டதும் அவர்கள் முன் சென்று அமர்ந்தார் முத்துக்கருப்பன்.

சாதாரண நல விசாரிப்புக்கு பின் “எப்படி இருக்கிங்க அம்மா? அப்பா மாத்திரை எல்லாம் சரியா சாப்பிடுறிங்களா?” என்று சுஜி தொடங்கினாள்.

“ஏதோ இருக்கோம் மா.” என்றார் முத்துக்கருப்பன்.

“மலரு மட்டும் போய் இருந்தா நாங்களும் வெசத்தை குடிச்சுபுட்டு கூடவே போய் சேர்ந்து இருப்போம். ஆனா இந்த சின்னவனை அவளோட பிம்பமா விட்டுட்டு போய் இருக்காளே! அவ பெத்த பிள்ளைக்காக வேண்டி உசுர கையில் பிடிச்சுட்டு கெடக்கோம்” என்றார் பேச்சியம்மாள் மூக்கை புடவை தலைப்பில் துடைத்து கொண்டு.

“அம்மா” என்று அவரது கைகளை பிடித்து கொண்டவள் கீர்த்தியை ஒரு பார்வை பார்த்தாள். மலர் சொன்னது எத்தனை உண்மை! அவள் இல்லாது போனால் இவர்கள் இல்லை. கீர்த்தி ஆமோதிப்பாக தலை அசைத்து பேச்சை மாற்றும் பொருட்டு

“என்ன அம்மா என்ன சொல்றார் குட்டி பையன்? ரொம்ப குறும்பு செய்யறாரா?” என்று ருத்ரனை பற்றி கேட்டான்.

“பிள்ளை குறும்பு அதுவும் அழகுதேன். குறும்பு இருந்தாலும் சொல்ற பேச்சை கேட்டுக்கிடும் நல்ல பிள்ளை நம்ம மலரை மாதிரியே” என்று பேசிக் கொண்டே வந்தவரின் குரல் கடைசியாக உடைந்தது.

“கொஞ்சம் கொஞ்சமா தேற்றிக்கோங்க. குழந்தை இருக்கான் அவன் முகத்தை பார்த்து ஆறுதல் அடைங்க. ஆனால் அந்த குழந்தையை தவிக்க விடாமல் அதுக்கு மலர் மாதிரியே பார்த்துக்க ஒரு அம்மாவை கொடுத்து இருக்கார் கடவுள். யசோ அவனை நல்லா பார்த்துப்பா” என்றார் கீர்த்திவாசன்.

“அது எத்தனை நாளைக்கு? அவளுக்குன்னு இப்போ புள்ளை வர போகுது. ஊரு ஒலகத்துல மூத்தாள் பிள்ளையை தனக்குன்னு ஒரு பிள்ளை வார வரைக்குந்தேன் கையில வச்சு தாங்குவாங்க. தனக்கே தனக்குன்னு வந்த பின்னாடி எப்படி நடந்துக்குவாக எத்தனை இடத்துல பார்த்து இருக்கோம்.” என்று தாடையை தோள்பட்டையில் இடித்து கொண்டார் பேச்சியம்மாள்.

“ச்ச ச்ச யசோ அப்படி எல்லாம் இல்லை. அவ சித்தியா இல்லாமல் அம்மாவா தான் பார்த்துப்பா. ருத்ரனுக்கே தெரியாது அவன் ம.ம..மலருக்கு பிறந்தது” என்று சுஜி ஒருவாறு கூறி முடித்தாள்.

“அது என்ன சுஜி நீ அப்படி சொல்ற? பெத்த ஆத்தாளை புள்ளை தெரிஞ்சுக்காம இருக்கறதா? எங்க காலம் வரைக்கும் மலர் ன்னு ஒருத்தி இருந்தது நினைப்புல இருக்கும் நாங்க போய்ட்டா அவ பெத்த பையன் கூட அவளை மறக்கறது எத்தனை கொடுமை? அவேய்ன் மலரோட புள்ளையாத்தேன் வளரனும்.” என்றார் பேச்சியம்மாள் அழுகையிலும் கோபத்திலும் குரலை உயர்த்தி.

அப்போது சுஜிக்கு மலர் சொன்ன “என் அப்பா அம்மாக்கு என் மேல இருக்கறது பாசம் இல்லை சுஜி, பாச வெறி” என்றது தான் சட்டென்று நினைவில் வந்து சென்றது.

“ஆனால் அது குழந்தை மனசை பாதிக்காதா அம்மா? வேற வழி இல்லைன்னா அம்மா இல்லைன்னு மனசை தேத்திட்டு குழந்தை வளரும். ஆனால் அம்மா மாதிரி பார்த்துக்க இல்லை, அம்மாவாவே இருக்க ஒருத்தி தயாரா இருக்கும் போது அது குழந்தைக்கு செய்யும் பாவம் இல்லையா?” என்றாள்.

“எனக்கு அது எல்லாம் தெரியாது சுஜி. அவளை கட்டினவரு கூட அவளை மறந்து வேற வாழ்க்கை வாழ ஆரம்பிச்சாச்சு. அவுகளுக்கு வேற பிள்ளையும் வரப் போகுது. இந்த குழந்தையை எங்க கிட்ட கொடுத்தா நாங்க கூட்டி போய் வளர்த்துக்கிடுவோம். எங்க மகளை மறந்துட்டு சந்தோசமான வாழ்க்கையை நாங்க வாழ முடியாது. அவளை நெதம் நெதம் நினைச்சுட்டே தான் எங்க கட்டை வேவும். அதே பாசத்தை எங்க பேரனும் எம்மக மேல வைக்கனும்.” என்று கூற கூற இவர்களிடம் என்னவென்று கூறி சம்மதிக்க வைப்பது என்று விழித்தாள் சுஜி.

“நீங்க உங்க பொண்ணை பத்தி மட்டுமே யோசிக்கறிங்க. ஆனால் உங்க பொண்ணு அப்படி இல்லை. அந்த குழந்தை அவங்க அப்பா மாதிரி அம்மா இல்லாத பயலா ஆகிட கூடாதுன்னு தான் இந்த பொண்ணை கட்டி வச்சுட்டு போய் இருக்கா. அப்போ உங்க பொண்ணோட செயலுக்கு நீங்க கொடுக்கும் மரியாதை இவ்ளோ தானா?” என்றான் கீர்த்தி சற்று அழுத்தமாக.

முத்துக்கருப்பனின் முகம் சற்று யோசனையை காட்டியது. ஆனால் யோசிக்கும் நிலையில் எல்லாம் பேச்சியம்மாள் இல்லை.

“என்னதேன் ஆத்தா கணக்கா பார்த்துக்கிட்டாலும் பெத்த ஆத்தா ஆகிட முடியாது. தன்னோட பிள்ளைக்கும் மூத்தாள் பிள்ளைக்கும் வித்தியாசம் இருக்கத்தேன் செய்யும். அது இந்த பிள்ளை மனசை உடைச்சிடாதா? சரிப்பட்டு வராது இது எல்லாம். எங்க பேரனை நாங்க கூட்டிட்டு போக தான் யோசிச்சிட்டு இருக்கோம்.

என்று தனது பிடியில் நின்றார்.
“இது..இதனால் தான் எங்கே உங்க பெண்ணுக்கு கொடுத்த வாக்கை காப்பாத்தாமல் போய்டுவோமோன்னு இந்த யசோ குழந்தையை கலைக்க சொல்லி வந்து கேட்கறா” என்றாள் சுஜி கோபமாக.

பேச்சியம்மாள் திகைத்து நிற்க முத்துக்கருப்பன் அதிர்ச்சியுடன் “என்..என்ன தாயி சொல்லுத?” என்றார் நடுங்கும் குரலில்.

“ஆமாம் அதுவும் ஒரு குழந்தை இல்லை ரெட்டை குழந்தைகள் வேற. ஆனால் ருத்ரன் தான் முக்கியம்ன்னு குழந்தைகளை கலைக்க சொல்லி வந்து நிக்கறா. ஆதி தான் திட்டி கூட்டிட்டு வந்தார்” என்றாள் தெளிவாக.

“இது எல்லாம் நீ அடிக்கிற மாதிரி அடி, நான் அழற மாதிரி அழறேன்னு சொல்லி வச்சு செய்யறது. கலைக்கலை தானே? அப்புறம் என்ன” என்று பேச்சியம்மாள் நொடித்து கொள்ள சுஜிக்கு “ச்சீ” என்றானது.

“இந்தா புள்ளை சும்மா இரு” என்று மனைவியை அடக்கி விட்டு

“நெசமாவா சுஜி. அவ ருத்ரனை நல்லா பார்த்துக்கிடுவா ன்னு எம் பொண்ணு நம்பிச்சா? அது தான் அவளோட ஆசையா?” என்று கேட்க சுஜி “ஆம்”என்று தலை அசைத்து
"அவ உயிரோட இருந்தப்போவே கடைசி நிமிடங்களில் அவ புருஷனை இன்னொரு பொண்ணு கையில் பிடிச்சு கொடுத்து இருக்கான்னா அவ எந்த அளவுக்கு நம்பி இருக்கனும்? எந்த பெண்ணும் செய்யாததை செய்யும் அளவுக்கு அவ யசோ மேல நம்பிக்கு வச்சு இருந்தா." என்றாள் திடமாக. அது முத்துக்கருப்பனை யோசிக்க வைத்தது.

பின் சற்று நேரம் பேசி கொண்டு இருந்து விட்டு அவர்கள் விடை பெற்று சென்றனர்.

முத்துக்கருப்பன் ஏதோ யோசனையில் இருக்க பேச்சியம்மாள் தான் “எந்த காரணத்துக்காக வேண்டியும் பிள்ளையை விட்டு கொடுக்க கூடாது. அந்த மனுசன் வந்ததும் பேசிப்புடுங்க மாமா”என்று புலம்பி கொண்டு இருந்தார்.

முத்துக்கருப்பனுக்கு மகளின் எண்ணத்தை எப்படி மதிக்காமல் போவது என்ற யோசனை தான். அவர் தான் மகள் சொன்ன சொல்லை சிரம் மேல் ஏற்று செய்து முடிக்கும் பாசக்கார தந்தை ஆயிற்றே.

அவர்களிடம் கூட கடைசியாக இதை தானே சொல்லி சென்றாள் என்று யோசனையில் இருந்தவர் ஒரு முடிவோடு மனைவியிடம் தங்கள் துணிகளை எடுத்து வைக்க உத்திரவிட்டார்.

மாடிக்கு குழந்தையை கூட்டி சென்றதும் குழந்தை யசோவிடம் செல்ல மறுத்தது. ஆத்ரேயன் எத்தனை எடுத்து கூறியும் யசோ அருகே கூட செல்லாது அவளை கண்ணீர் சிந்த வைக்க இருவருக்குள்ளும் சிக்கி தவித்தது ஆத்ரேயன் தான்.

ருத்ரன் ஆத்ரேயனை ஒட்டி கொண்டு அமர்ந்து அவன் ஊட்ட ஊட்ட உணவு உண்டு அவனிடமே இருக்க கலங்கிய கண்களோடு வெறித்து கொண்டிருந்த மனைவியிடம் கண் மூடி திறந்து பொறுமை காக்க சொல்லி அறிவுறுத்தினான்.

குழந்தை மனம் கொஞ்சம் விட்டு தான் பிடிக்க வேண்டும். ஆழமாக பதிந்த ஒன்றை மாற்ற அதனிடம் அன்பு செலுத்தினால் போதும். அதனால் பொறுமையாக கையாள முடிவு செய்தான்.

அன்று மாலையே ஊருக்கு கிளம்பி நின்ற மலரின் பெற்றோரிடம் வந்தவன்

“நான் நீங்க இந்த வீட்டை விட்டு போகனும்ன்னு நினைக்கலை மாமா. குழந்தை மனசு பாதிக்காத வகையில் நடந்துக்கனும்னு தான் நினைச்சேன்” என்றான் உணர்ந்து ஆழமான குரலில்.

“அது என்ன இருந்தாலும் எங்க புள்ளை வாழ்ந்து இருக்க வேண்டிய வாழ்க்கைன்னு ஒரு ஒரு நாளும் மனசு கிடந்து அடிச்சுக்குது. என்ன இருந்தாலும் நாங்க மலரை பெத்தவக. அவ எடத்துக்கு வந்த புள்ளையை நீங்க பொஞ்சாதியா ஏத்துக்கிடலாம். ஆனா எங்க மகளா ஏத்துக்கிட அம்புட்டு பெரிய மனது எங்களுக்கு இல்லை. இந்த புள்ளை நல்ல புள்ளையாவே இருந்தாலும் எங்க மலர் மாதிரி வராது எங்களுக்கு. நாங்க கிளம்பறோம். எங்க பேரனுக்காக வேண்டி தான் உசுர கையில் பிடிச்சு வச்சு கெடக்கோம். மூனு நாலு மாசத்துக்கு ஒருக்கா ருத்ரனை ஊருக்கு கூட்டியாங்க. எங்களோட ஒரு வாரம் வச்சிருந்து அனுப்பி விடுறோம். அது மட்டும் பண்ணுங்க எங்களுக்காக வேண்டி” என்று கை எடுத்து கும்பிட

“ஐயோ என்ன மாமா இது?” என்று அவரது கையை பிடித்து கொண்டான்.

அவன் அருகே நின்றிருந்த யசோவின் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்து விட்டு கிளம்பினார். மலர் விழி வழியே அவரது காட்சிகளை மாற்றி கொண்டார் அவரது மகளின் சொல்லுக்காக.

ஆனால் அது பேச்சியம்மாளுக்கு இயலவில்லை. தனது மகளை விட இந்த யசோவின் மீது அதிக காதலைஆத்ரேயன் பொழிவதாக உருவான அந்த தோற்றத்தை கடந்து அவளை நல்ல விதமாக அவருக்கு எண்ண தோன்றவில்லை.

ஆயினும் கணவனின் சொல்லுக்கு இணங்கி ஒன்னும் பேசாமல் ருத்ரனை அணைத்து அழுது கொண்டே விடை பெற்று சென்றார்கள்.

யசோ அவர்கள் வீட்டை விட்டு செல்ல வேண்டும் என்று எண்ண வில்லை. குழந்தையின் மனதில் எதிர்மறை எண்ணங்களை விதைக்காமல் இருந்தால் போதுமே என்று தான் நினைத்தாள்.

இங்கே இருப்பது அவர்களது மனக்காயத்தை அதிகரிக்கிறது என்ற போது அவர்களது மனம் போல விட்டு விட வேண்டும் என்று பேசாமல் இருந்து விட்டாள்.

வீடு இயல்புக்கு திரும்பினாலும் ருத்ரன் யசோவிடம் ஒரு அளவுக்கு மேல் நெருங்கி வர மறுத்தான். அதிகம் பளூ தூக்குவது குழந்தைகளுக்கு மட்டும் அல்லாது அவளது உயிருக்கும் பாதகமாக முடியும் என்று சுஜி மீண்டும் மீண்டும் வலியுறுத்தி இருந்ததால் வேறு வழி இன்றி ருத்ரனை தூக்கி வைத்து கொள்ளவும் முடிவதில்லை. தந்தையுடன் அதிகமாக ஒட்டிக் கொண்டான்.

அவனது அம்மாச்சியும் தாத்தாவும் கிளம்பியது ஒரு வகையில் அவனை பாதிக்க ஆத்ரேயனிடம் அதிகம் ஒட்டிக் கொண்டான்.

சாப்பாடு ஊட்டுவதில் இருந்து குளிக்க வைப்பது வரை அனைத்தும் ஆத்ரேயன் தான் செய்ய வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க அவன் மகிழ்ச்சியுடனே செய்தான். ஆனால் ருத்ரன் அருகாமைக்காக யசோ தான் தவித்து போனாள்.

மலரின் பெற்றோர் அவர்களது ஊருக்கு சென்று ஐந்து மாதங்கள் கண் சிமிட்டும் நேரத்தில் கடந்திருந்தது. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வந்து குழந்தையை அழைத்து சென்று ஒரு வாரம் வைத்திருந்து விட்டு அனுப்புவார்கள்.

குழந்தை சற்று நெருங்கி வரும் போது ஊருக்கு சென்று வந்தால் மீண்டும் ஒட்டாத தன்மை வந்துவிடும் அவனிடம் .
அந்த சின்னஞ்சிறியவனிடம் நெருங்க யசோ எடுக்கும் முயற்சிகளை பார்த்து விட்டு “அவன் சின்ன குழந்தை டி. போக போக அவனே சரி ஆய்டுவான். நீ அவனை விடாமல் உன் கிட்ட இழுக்க இழுக்க தான் அவன் இப்படி தள்ளிப் போறான். அவனை விடு” என்று சொன்னாலும் தாய் மனது தவிக்கும்.

அந்த சிறு உறுத்தலை தவிர அவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றது.

அன்று இரவு உறங்குவதற்கு முன் படுக்கையில் அமர்ந்து தந்தையும் மகனும் கட்டிப் புரண்டு விளையாடிக் கொண்டு இருந்தனர்.

விளையாடிக் கொண்டே மூச்சு வாங்க படுக்கையில் சாய்ந்து கொண்டு “சரி சரி ரொம்ப நேரம் விளையாடியாச்சு. போதும் டா” என்று கூறி அவனை கை அணைவில் வைத்து கொண்டு கதை பேசி தூங்க வைக்கும் அழகை அருகே நீள்விருக்கையில் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தாள் யசோ.
பெரிய வயிற்றுடன் மகிழ்ச்சியில் பூரித்திருந்த முகம் அவளை அத்தனை அழகாக காட்டியது.
மகனிடம் பேசிக் கொண்டே மனைவியை ஓரக் கண்ணால் பார்த்து ரசித்து கொண்டு இருந்தவன் “ஆமாம் ருத்து கண்ணா அம்மா வயித்துல டூ பாப்பா இருக்கே. உனக்கு குட்டி தம்பி வேணுமா, குட்டி தங்கை வேணுமா இல்லை ரெண்டுமே வேணுமா?” என்று கேட்டான் ஆத்ரேயன்.

குழந்தை பிறக்க சில வாரங்களே இருக்கும் நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக ருத்ரனை அதற்கு தயார் செய்யும் முயற்சியில் இறங்கி இருந்தான்.

குழந்தையோ தந்தையை விடவும் ஜித்தன் என்பதை போல “ஹுஹும் எனக்கு நாய் குத்தி தான் வேணும். நாய் குத்தி இல்லைன்னா கததி(கரடி) குத்தி வேணும்” என்று சொல்லி தந்தையை திகைத்து விழிக்க வைத்தவன் தாயை தன்னை மறந்து வாய் விட்டு சிரிக்க வைத்திருந்தான்.

வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தவளை பார்த்து “ஏய் மெதுவாக டி. எங்கேயாவது பிடிச்சுக்க போகுது” என்று அவளிடம் கூறி விட்டு
“ஹும் கரடி குட்டி தானே வங்குவோம் வாங்குவோம்” என்று மகனிடம் அவன் வழியில் சென்று பேசி கொஞ்சி தூங்க வைக்க மேலும் ஒரு மணி நேரம் சென்றது.

குழந்தை உறங்கியதும் படுக்க வந்தவள் கணவனின் கை அணைவில் படுத்து கொண்டு அவனது மறு புறம் உறங்கி கொண்டிருந்த மகனின் தலையை கோதி கொண்டு இருந்தாள்.

“எனக்கு ஒரு ஆசை சொல்லுவா?” என்றாள் தயங்கி கொண்டே.

“என்னங்க மேடம் புதுசா இந்த தயக்கம்?” என்றவனிடம்

“உங்களுக்கு நாலு குழந்தை வேணும்ன்னு ஆசை தானே?” என்றாள் கேள்வியாக.

“இரு டி முதல்ல இது ரெண்டும் வெளியே வரட்டும்” என்றவன் வாய் விட்டு சிரித்து
“ஆனாலும் நம்ம பண்ணின லவ்வுக்கு நான் குறைஞ்சபட்சம் ஒரே பிரசவத்தில் மூனு பிள்ளை எதிர்பார்த்தேன். ஜஸ்டு மிஸ்ஸு” என்று நக்கல் செய்தவனின் விலாவில் இடித்து “சொல்றதை கேளுடா” என்றவள் தொடர்ந்து
“இது மூனு போதும். நாலாவது தத்தெடுத்து வளர்ப்போமா? என்றவளின் நெற்றி முட்டி “நானும் அது தான் நினைச்சேன் டா” என்றான்.
பின் எதையோ யோசித்து

“சரி எட்டு மாசம் ஆச்சு. ஊர் கூட்டி வளை காப்பு பண்ணலாமா?” என்றான் கணவன் ஆசையாக.

சற்று நேரம் யோசித்தவள் அவனிடம் “இல்லை அத்து வேண்டாம்” என்க அவளிடம் இருந்து இந்த பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை.

“ஏன் டி? கல்யாணம் தான் நடு ராத்தியில் நடந்தது. ருத்து பிறக்கும் போது வளைகாப்பு நடந்த விதம் சொல்லிக்கற மாதிரி இல்லை. இப்போவாவது கொஞ்சம் சிறப்பா செய்யலாமே. அழகா பட்டுப்புடவை கட்டி முழு அலங்காரத்தில் உன்னை பார்த்ததே இல்லை யது” என்றான் கணவனாக.

“அ..அதுக்கு இல்லை. ஊரை கூட்டி விசேஷம் நடத்த மலரக்கா அப்பா அம்மாவை கூப்பிடனும். அவங்க வராமல் இருந்தா நல்லா இருக்காது. வேற வழி இல்லாமல் வந்தாலும் அவங்களுக்கு போன தடவை அக்காக்கு செஞ்ச சடங்கு நியாபகம் வந்து மனசு வேதனை படுவாங்க. வேண்டாம். சிலருக்கு சிலது கொடுத்து வைக்கறது இல்லை. அப்படி எடுத்துக்கலாம்” என்று கூற தனக்கு தோன்றாத ஒன்று மனைவிக்கு தோன்றியதை நினைத்து பெருமிதம் கொண்டவன் சொல்ல வார்த்தைகள் இன்றி அவளது நெற்றியில் ஆழ முத்தம் பதித்தான்.

ஊரை அழைத்து சடங்கு செய்ய தானே முடியாது? வீட்டோடு செய்யலாமே என்ற நினைவில் சென்னையில் இருந்து ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் ஆட்களை கூப்பிட்டு யசோதாவுக்கு அழகாக அலங்காரம் செய்து வீட்டோடு சடங்கு செய்தான்.
அதோடு சேர்த்து வித விதமாக மகனுடனும் மனைவியுடனும் இன்றைய நாகரிகப்படி அழகிய புகைப்பட தொகுப்பு(ஃபோட்டோ ஷூட்) எடுத்து நியாபகங்களை பதிவு செய்து வைத்து கொண்டான்.


தவற விட்ட தருணங்கள் வாழ்வில் மீள்வதில்லை. கிடக்கும் தருணங்களின் அழகை ஆராதிப்பது தான் வாழ்வின் சூட்சமம்.
அந்த வகையில் கடந்து சென்ற எட்டு வருடங்களை திரும்ப பெற இயலாது போனாலும் இப்போது கிடைத்த இந்த வாழ்வி அடிக்கரும்பாக தித்தித்தது தான்.


அன்று வளைகாப்பு கேளிக்கைகள் யாவும் முடிந்து சற்று தளர்வாக அமர்ந்திருந்தாள்.

அதே பால்கனி ஊஞ்சல், அதே நிலவு இன்றும் முழுமதியாக, அதே தென்றல் குழல் கலைத்து விளையாட அடர்ந்த போர்வையாக மௌனம் இருவரையும் கட்டி வைத்திருந்தது.

அவனது முழங்கையூடு கையிட்டு தோள் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.

“அத்து” என்றாள் மெல்லிய குரலில்.

“ஹும் சொல்லு டா” என்றான் மென்மையாக.

“நடுவில் அந்த எட்டு வருஷ பிரிவு நேராமல் இருந்திருந்தா எப்படி இருந்து இருக்கும் நம்ம வாழ்க்கை?” என்றாள் அவனது கண்களை பார்த்து.

“இப்போ ஒரு ஒரு நொடியையும் ஆழ்ந்து அனுபவித்து பொங்கிஷமா வாழற மாதிரி அப்போ வாழ்ந்து இருப்போமா தெரியலை. கண்டிப்பா சந்தோஷமா இருந்து இருப்போம். இளமை துள்ளல் அது வேற மாதிரி இருந்து இருக்கும். ஆனால் கிடைக்காதுன்னு மனசோட மரணித்து இருந்துட்டு கையில் கிடைத்த வாழ்க்கை இது பொக்கிஷம் தான். பக்குவப்பட்ட காதலா தோனுது இது” என்றான் அவனும் ஆழ்ந்து.

அவன் முன்பு ‘சொன்ன காரணங்கள் இன்றி காரியங்கள் இல்லை’ என்ற வாக்கியம் நினைவுக்கு வந்தது. அந்த காரணம் நிச்சயமாக மலர் தான் என்பதும் அந்த நேரம் மறக்காமல் நினைவுக்கு வந்தது.
அதோடு சேர்த்து அவளது மைந்தனின் நினைவும் வந்தது.

“ஏன் அத்து ருத்து எங்கிட்ட அதிகம் ஒட்டவே மாட்டேங்கறான்? இப்படியே இருந்துடுவானா?” என்று கண்ணீர் குரலில் கேட்ட மனைவிக்கு பதில் அவனிடம் இல்லை. காலத்தின் கைகளில் தான் அது. அதனால் மனைவியின் மனநிலையை மாற்றும் பொருட்டு

“ஏன் டி ஒன்னு பெத்து வச்சு இருக்கும் போதே எப்போ பார் அவனை பத்தியே நினைச்சிட்டு இருக்க. இதில் இந்த ரெண்டும் வந்தா மொத்தமா கண்டுக்க மாட்டியோ” என்றான் விளையாட்டாக. அதில் அவனை பார்த்து முறைத்தவள்

“ருத்ரனை பார்த்துக்கறது பூரா நீங்க தான். அப்படி இருக்க இது ரெண்டும் வெளியே வந்தால் நீங்க தான் என்னை கண்டுக்க மாட்டிங்க” என்று அவனுக்கு சளைத்தவள் தான் இல்லை என்று பதில் அளித்தாள்.

“ யாரை பார்த்து என்ன பேச்சு பேசற? அப்படி எல்லாம் மறக்கும் ஆள் நான் இல்லைன்னு இதோ இப்போவே நிரூபிக்கறேன்” என்றவன் அவனது வழியில் அதை நிரூபிக்க தொடங்கினான்.

அழகிய ஒரு அதிகாலை வேளை தாயை அதிகம் வலியில் துடிக்க வைக்காது அழகிய பூக்குவியலாக ஆண் ஒன்று பெண் ஒன்று என இரண்டு ரோஜா குவில்களை பெற்றெடுத்தாள் யசோதா.

கைகளுக்கு ஒன்றாக குழந்தைகளை அள்ளிக் கொண்டவன் அருகே இருந்த தங்களின் மூத்த செல்வத்திடம் அவனது உயரத்துக்கு குனிந்து குழந்தைகளை காட்டினான் ஆத்ரேயன் “இதோ இவங்க ரெண்டு பேரும் ருத்ரனோட குட்டி பாப்பாஸ். இனி ருத்ரன் தான் இவங்களை பார்த்துக்க போறான்” என்று அவனை பெரிய மனிதனாக பாவித்து அவனுக்கு மிக முக்கியமான பொறுப்பை கொடுத்தான்.
குழந்தைகளை ஆசையுடன் வருடிய ருத்ரன் சற்று யோசித்து விட்டு தாயின் புறம் திரும்பினான்.
அங்கே சோர்வுடன் அந்த காட்சியை கலங்கிய கண்களும் இதழ்களில் புன்னகையுமாக பார்த்து கொண்டிருந்த தாயை கண்டு என்ன தோன்றியதோ சட்டென்று ஓடி சென்று அவளது கழுத்தை கட்டிக் கொண்டான்.

குழந்தை மனம் ஆயிரம் அதிசயங்கள் கொண்டது. அதன் எண்ணங்கள் பெரியவர்களின் கற்பனைகளுக்கும் எட்டாத தூரம். பிறந்த அவனது இளவல்களை கண்டு என்ன தோன்றியதோ ருத்ரனை தனது அன்னையை அணைத்து கொள்ள தூண்ட, அது நிலைத்து இருக்கும் என்ற நம்பிக்கை எழ,

நொடியில் அவளது கண்கள் பொங்கி வழிந்து மனது சந்தோஷத்தில் விம்மியது.
அதே சந்தோஷத்துடன் அவர்கள் அருகே வந்த ஆத்ரேயன் ஒரு குழந்தையை யசோவிடம் கொடுத்து மற்ற மூவரையும் அணைத்து கொள்ள அவர்களை சந்தோஷம் அணைத்து கொண்டது இன்றும் என்றும் என்றென்றும்.

சுபம்
 
Last edited:

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top