JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

மகிழேந்திரனின் உதயம் - Teaser

JLine

Moderator
Staff member
View attachment 371

மகிழேந்திரனின் உதயம்!


கண்ணுக்கெட்டும் தூரம் வரை நீல வர்ணப் போர்வையைப் போர்த்தியது போன்று பரந்து விரிந்திருந்த கருங்கடலின் பொங்கிக் கொண்டிருந்த அலைகளின் ஓசை கேட்போரின் செவிகளை இதமாக வருட, அதன் தாலாட்டுப் பாடலில் துயில் கொள்ளலாம் என்று சிறகை விரித்துக் கீழிறங்கிய பறவைகள் சடாரென்று படபடவெனச் சப்தத்துடன் ஆகாயத்தை நோக்கிப் பறந்தன, வெகு தொலைவில் வந்து கொண்டிருந்தாலும் அசைந்து அசைந்து கடலின் தாளத்திற்கு ஏற்ப மேலெழும்பியும் கீழே பதுங்கியும் வந்து கொண்டிருந்த கப்பலில் சயனம் கொண்டிருந்த அந்தப் பதினெட்டு பிராயமே ஆன இளைஞனைக் கண்டு.

இரு கரங்களையும் தலைக்குப் பின் கொடுத்து, தனது நீளக்கால்கள் இரண்டையும் நன்றாகவே நீட்டி துயில் கொண்டிருந்தவனின் வயதிற்கு மீறிய ஆறடி இரண்டு அங்குல உயரமும், மேல் சட்டையற்று படுத்திருந்தவனின் வலிமையும் வனப்புமான அவனது உருவமும், புடைத்து மேலெம்பி விரிந்திருக்கும் மார்பின் இடது புறத்தில் காண்போரின் கண்களைச் சட்டென்று இழுக்கும் நீண்ட வடுவும்,

இந்தச் சிறு வயதிலேயே போர்களம் இவனுக்குப் புதிதல்ல என்று உணர்த்தியதில் இவனை நெருங்காது தள்ளி இருப்பதே நலம் என்பதைப் புரிந்து கொண்டு, அவனைத் தீண்டாது அவன் சயனித்திருக்கும் இடத்தினை விட்டு நான்கடிகள் புறந்தள்ளி அவனைச் சுற்றியே சென்று கொண்டிருந்தனர் அந்தப் படகில் பயணித்த அனைவருமே.

நேரம் செல்ல செல்ல பறவைகளின் கீச்கீச்சென்ற சப்தமும், கடல் அலைகள் ஆகாயத்தையே தொட்டுவிடுவது போல் மேலே உயர்ந்து எழுந்து பின் அடங்கியதில் ஆர்ப்பரிக்கும் அதனது ஓசையும், கப்பலின் மைப்பகுதிக்கு அருகில் ஏறத்தாழ நிலைக்குத்தாக நிறுத்தப்பட்டிருக்கும் கழியில், மரத்தினால் அமைக்கப்பட்டிருக்கும் முதன்மைப் பாய்மரங்கள் படபடத்து எழுப்பிய பெரும் அரவமும்,

அவனுக்கருகே கேட்டுக் கொண்டிருக்கும் மக்களின் சலசலப்பு குரல்களும், மேல் தளத்தில் கண்களை மூடி நித்திரையில் ஆழ்ந்திருந்த அந்த இளைஞனின் உறக்கத்தைக் கலைத்து உசுப்பிவிட்டது.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தன்னை எழுப்பிய அனைத்து ஓசைகளின் மீதும் அளவிடலங்காத சீற்றம் கொண்டது போல் சட்டென்று கண்களைத் திறந்தவன், தனது எரிச்சலையும் சலிப்பையும் ஆழப் பெருமூச்செடுத்து வெளிப்படுத்தியவனாக மெள்ள எழுந்து அமர்ந்தவாறே, தன்னைச் சுற்றி கப்பலில் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தவர்களுக்கு இடையில் காணப்பட்ட பரபரப்பை ஆராயத் துவங்கினான்.

தங்களுக்கு உரிய துணி மூட்டைகளையும் சாமான்களையும் எடுத்தவாறே கப்பலில் இருந்து இறங்குவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த பயணிகளையும், கரையில் கப்பலை நிறுத்தும் முயற்சியில் கடுமையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கப்பலோட்டிகளையும் கண்டவன், கைகள் இரண்டையும் மேலே உயர்த்திச் சோம்பல் முறித்தவாறே எழுந்து நிற்க, அவனையே வைத்த கண் வாங்காது பார்த்திருந்த ஒருவன் அவனை நெருங்கினான்.

தனது இடையில் சொருகியிருக்கும் உடைவாளையும் வயிற்றுக்கு வெகு அருகில் இடைக்கச்சையில் பதுக்கியிருக்கும் குறுவாளையும் ஒரு முறை பரிசோதித்துக் கொண்டு அவ்விளைஞனை நெருங்கி வந்தவன், இளைஞனின் ஆறடி இரண்டு அங்குல உயரத்திற்கு ஏற்றவாறே பாதங்களின் நுனியை தளத்தில் அழுந்த ஊன்றி எம்ப, அந்த மனிதனிற்கு உகந்தவாறு தானும் மெள்ள குனிந்த இளைஞனின் காதில் ஒருவருமறியாத வண்ணம் இரகசியமாகக் கிசுகிசுத்தான்.

"கொற்கை பெருந்துறையை அடைந்துவிட்டோம்.."

ஆமோதிப்பது போல் மெதுவாகத் தலையசைத்தவன் கப்பலின் தடுப்புச் சுவரை நோக்கி நடக்க, அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த பயணிகளில் சிலரின் பார்வை இளைஞனின் மீது அவ்வப்பொழுது பட்டுப் பின் மீண்டாலும், அவனை அசட்டை செய்வது போல் நாடகமாடிக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் அனைவரின் கண்களும் சில மணித்துளிகளுக்கு ஒரு முறை தன் மீது விரவி பின் நகர்வதை அவர்களைப் பாராமலேயே அறிந்துக் கொண்டவன், அவர்களைச் சிறிதும் கண்டு கொள்ளாதது போல் பார்வையை வெகு தூரத்தில் தெரிந்த கொற்கை கரையிலேயே செலுத்தியிருந்தவனாகத் தடுப்புச் சுவரை இரு கைகளாலும் பிடித்து நிற்க,

காற்றின் அசைவிற்கு ஏற்ப தழும்பிக் கொண்டிருந்த அவனது கேசத்தின் சில முடிக்கற்றைகள் களை சொட்டும் அவனது வதனத்தின் மீது பட்டு, பார்வையை மறைத்துப் பின் மீண்டும் சிலும்பி நகர, இமைக்க மறந்தது போல் துறைமுகத்தையே பார்த்திருந்தவனின் விழிகளில் தெரிந்த கூர்மையைக் கண்ட பேரலைகள் கூட அதிர்ந்து அரண்டு போனது போல், திடுமெனக் கீழே விழுந்து, கப்பலுக்கு அடியில் தவழ்ந்து, மீண்டும் பின்புறம் எழுந்து நகர்ந்து போனது.

பல நூறு ஈட்டிகளின் முனைகளை ஒன்றிணைத்துக் கோர்த்தது போன்று கூர்மையாகப் பளபளத்திருந்த அவனது பார்வை தொலைவில் தெரிந்த நிலத்தின் மீதே படர்ந்திருக்க, எதனையோ நினைத்தது போல் சட்டென அவனது வலிய உதடுகளின் கடையோரத்தில் புலர்ந்த ஏளனப் புன்னகையைக் கண்ட, அவன் மீது அவ்வப்பொழுது தங்களின் பார்வைகளைப் படரச் செய்திருந்த அப்பயணிகள், அவனது எண்ணங்களைப் புரிந்துக் கொண்டவர்களாகத் தங்களின் உடைமைகளை அடுக்கியவாறே புறப்படத் தயாரானார்கள்.

கப்பலில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் அனைத்து மக்களுமே, கரையை நெருங்கப் போவதை உணர்ந்து கீழே இறங்குவதற்கு ஆயத்தமாக இருக்க, அந்த இளைஞன் மட்டும் அவனது துணி மூட்டைகளையோ அல்லது பிற உடைமைகள் எதனையும் எடுக்காது கப்பலின் தடுப்புச் சுவர் அருகே நின்றிருப்பதைக் கண்ட, அவ்விளைஞனை யாரென்று உணராத கப்பல் பணியாளன் ஒருவன் அவனை நெருங்கியவன்,

"கரையை நெருங்கிவிட்டோம், நீங்கள் இறங்குவதற்கு ஆயத்தமாகவில்லையா?" என்று கேட்கவும் அவனை நிதானமாகத் திரும்பிப் பார்த்தவன் அதனையும் விட வெகு நிதானமாக,

"ஏன் இந்த அவசரம்? கடலிற்குள்ளா இறங்கப் போகிறோம்? கரையில் தானே? கப்பலை நிறுத்தியவுடன் படகு வரட்டும், அதன் பிறகு இறங்குகிறேன்.. எதிலும் பதற்றம், அனைத்திலும் வேகம், இறுதியில் விபரீதம்.." என்றவாறே மீண்டும் தன் பார்வையைக் கரையை நோக்கித் திருப்ப,

அவனது குரலில் இருந்த கம்பீரமோ, தொனியில் தெரிந்த அழுத்தமோ அல்லது பார்வையில் ஒளிர்ந்த கடினமோ, அப்பணியாளனை அடுத்த விநாடியே அங்கிருந்து அகலச் செய்தது.

கொற்கை பெருந்துறை: சோழ தேசத்திற்குத் தெற்கிலும் சேர தேசத்திற்குக் கிழக்கிலுமாக அகன்று பரவி இருந்த தேசம், மூவேந்தர்களுள் ஒரவரான பாண்டியர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த பாண்டிய நாட்டின் பெரும் துறைமுகம்..

கடல் ஓரங்களில் சரிந்தும் மேடும் பள்ளமும் ஆகக் காணப்படும் இந்தத் தேசத்தில் நிறைந்திருக்கும் மலைகளில் பொதியம் மலையே மிகவும் உயரமானது..

சிறு சிறு குன்றுகளுடனும், இத்தேசத்தின் நடுவிலுள்ள சமதளமான பூமியில் சிறு சிறு காடுகளுடனும், செழிப்பான நிலங்கள் அதிகமாகவும் இருக்கும் தேசம்..

குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி நதியும், தெற்கில் பொதியம் மலையில் இருந்து ஊற்றெடுத்திருக்கும் வைகை நதியும், பாண்டிய தேசத்தைச் செழிக்க வைக்கின்றன.

தான் நின்று கொண்டிருக்கும் கப்பல், துறைமுகத்தை நெருங்க நெருங்க விழிகளில் படர்ந்திருக்கும் ஆழத்தை மேலும் அதிகப்படுத்திய அவ்விளைஞன் கரையில் நடந்து கொண்டிருக்கும் காட்சிகளை ஆய்ந்து ஆராயும் பார்வையோடு பார்த்திருக்க,

மது வகைகளையும், கண்ணாடிப் பொருட்களையும், தங்களது புரவிப் படைகளுக்காக நூற்றுக்கணக்கான அரேபியக் குதிரைகளையும் சுமந்து மேனாடுகளிலிருந்து கொற்கைத் துறைமுகத்திற்கு வந்திருக்கும் பாய்மரக் கப்பல்களும், பன்னாடுகளில் வணிக உறவு வைத்திருந்ததில் மேனாடுகளுக்கு அனுப்ப முத்து, பவளம், மிளகு, மற்றும் பலவகைப் பட்டாடைகளையும் கப்பல்களில் ஏற்றிக் கொண்டிருந்த யவனர்களும் சோனகர்களுமாக (அரேபியர்கள்) அந்தத் துறைமுகமே பரபரப்புடன் இருந்ததைக் கண்டவனுக்குத் தோன்றியது ஒன்றே.

இத்தகைய வளம் கொண்ட ஒரு இராஜ்யத்தைச் சேர்ந்த கஜவீர பாண்டியனும், கேசவ பாண்டியனும் எதற்காக எனது தேசத்தை முற்றுகையிடவும், எங்களது வளத்தை அபகரிக்கவும் முயற்சிக்கிறார்கள்?

இராஜ்யத்தை விஸ்தரிக்க அதனைச் சுற்றியுள்ள சிற்றரசுகளைக் கைப்பற்றுவது என்பது சரித்திரத்தில் புதிதல்ல, ஆனால் அதற்காக ஒரு தேசத்தையே தனது ஆதிக்கத்திற்குக் கீழ் கொண்டு வர நினைக்கும் இவர்களை விட்டுவைப்பது என்பது பேரழிவிற்கு வகைச் செய்வதாகும்..

எண்ணி முடித்தவன் விருட்டென்று திரும்பியவனாகத் தனக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் அறையை நோக்கி நடக்க, அவனுக்கு இரு பக்கங்களிலும் ஆங்காங்கு நின்றுக் கொண்டிருப்பவர்களைப் பார்த்தும் பார்க்காதது போன்றும் நடந்து கொண்டிருந்தவன் அறையை அடையும் முன் வெகு இலேசாகத் தலையை மட்டும் அசைத்து உள்ளே நுழைய, மணித்துளிகள் கடந்து ஒவ்வொருவராகக் கப்பலில் இருந்து இறங்குவதற்குத் தயாரானவர்கள் கப்பலின் படிகட்டுகளை நோக்கி நடந்தார்கள்.

சுங்கச் சாவடிகளை நோக்கி போய்க் கொண்டிருந்த அரேபியர்களையும் யவன வணிகர்களின் கூட்டத்தையும், கெடுபிடியான சுங்கச் சோதனைகளையும் கவனித்துக் கொண்டே கப்பலில் இருந்து இழுவை படகிற்குள் இறங்கியவன், படகு கரையை அடைந்ததும் தனது உடைமையை எடுத்துக் கொண்டு ஒரே தாவில் கடலில் குதிக்க,

அவனது நீண்ட கால்கள் கடல் நீரில் பட்ட மறுக்கணமே கஜவீர பாண்டியனின் அழிவை முன்கூட்டியே தேசத்து மக்களுக்கு அறிவிப்பது போல் கதிரவன் மேற்கில் மறையத் துவங்கியதில், நகருக்குள் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்த பெரும் எரி பந்தங்களின் தீ விழிகள், தங்களின் இராஜ்யத்திற்குள் அடி எடுத்து வைத்திருப்பவன் யாரென்று கண்டு கொண்டதில் அவன் வரும் திசையை நோக்கி படபடவென அனலைக் கக்கத் துவங்கின.

அவனது இடையில் தொங்கிய உடைவாள் அதிக நீளமில்லை என்றாலும் அதன் கூர்மையும், குறுகிக் காணப்பட்ட அவனது இடையில் சொருகப்பட்டிருக்கும், மூன்று மெல்லிய குறுவாள்களை ஒன்றாக இணைத்து முறுக்கப்பட்டதுப் [twisted] போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் குறுவாளின் [Tri-Dagger fixed blade knife] அமைப்பும் காண்பதற்கு அச்சம் விளைவிக்கக் கூடியதாக இருந்ததால், அவனை நெருங்காது சுங்கக் காவலர்கள் இரு அடிகள் பின்னோக்கி நகர்ந்து வழிவிட, பன்னாட்டு வணிகர்களுடன் இணைந்து தானும் நடந்த அவ்விளைஞன் சுங்கச் சாவடிக்குள் நுழைந்தான்.

பல நூறு தூண்களுடன் பல்லாயிரம் சதுரடிகளில் பற்பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுக் கட்டப்பட்டிருந்த அந்தச் சுங்கச்சாவடியில் சுங்கம் வசூலிக்கும் அதிகாரிகள், பிரயாணிகளின் சரக்குகளுக்கு மதிப்பீடு செய்து சுங்கப் பணம் வசூலித்து முத்திரையும் பதிப்பதில் கவனமாக இருக்க, வணிகர்கள் அல்லாத பிரயாணிகள் சோதிக்கப்படும் இடத்திற்குச் சென்றவன் தன் இடையிலிருந்த பட்டுப்பையை எடுத்து சுங்க அதிகாரியிடம் அளித்தான்..

அவனை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்த அதிகாரியின் விழிகள் சற்று இடுங்கிப் பின் விரிவதைக் கண்டவன் இளம் முறுவல் ஒன்றை தன் வலிய உதடுகளில் பரவவிட்டவாறே தனது இடைக்கச்சையில் மறைத்து வைத்திருந்த முத்திரை மோதிரம் ஒன்றையும் அவருக்கு இரகசியமாகக் காட்டவும், அவன் யாரென்று புரிந்ததில் ஸ்தம்பித்துப் போன அதிகாரி சிலையென அமர்ந்திருக்க, தனக்கு முன் இருந்த மேடையை ஒற்றை விரலின் நுனியைக் கொண்டு வெகு இலேசாகத் தட்டிய அவ்விளைஞனின் சமிக்ஞையில் சுயநினைவு பெற்றவராக அவனது உடைமைகளைச் சோதிக்காது எழுந்தவர் சுங்கச்சாவடியின் ஓர் முலையில் அமைக்கப்பட்டிருக்கும் ஓர் அறையை நோக்கி நடந்தார்.

அவரைப் பின் தொடர்ந்து நடந்த இளைஞன் சுற்றும் முற்றும் ஆராயும் பார்வையோடு விழிகளால் துழாவியவன் அதிகாரி நுழைந்த அறைக்குள் தானும் நுழைய,

"இ.." என்று தொடங்கியவரை இளைஞனின் உத்தரவும் கடினமும் கலந்த பார்வைச் சட்டென்று தடை செய்தது.

தொண்டைக்குள் அடைத்துக் கொண்டிருக்கும் எச்சிலை மெள்ள விழுங்கிய அதிகாரி,

"ம.. மன்னிக்கவும்.. பழக்கத் தோஷத்தில் உங்களை அப்படி அழைக்க முற்பட்டுவிட்டேன்.. நீங்கள் செல்வதற்கு அனுமதியளிக்க ஏற்கனவே எனக்கு உ.. உத்தரவு வந்துவிட்டது.. ஆயினும் இப்பொழுது நீங்கள் நகரத்திற்குள் செல்வது நல்லதல்ல.. இன்னும் சற்று நேரத்தில் ஓரளவுக்கு இங்குக் கூட்டம் குறைந்துவிடும்.. இருளும் அண்டிவிடும்.. அப்பொழுது செ.. செல்லுங்கள்.." என்று ஒரு வழியாகச் சொல்ல வந்ததைக் கூறி முடித்தார், மிதமிஞ்சிய திகைப்பும் வியப்பும் கலந்த குரலில் திக்கித் திணறியவாறே.

"ஏன் இப்பொழுது செல்லக்கூடாது? இருளுக்குள் பதுங்கிச் செல்லும் கள்வன் போல் என்னை மறைந்து செல்லச் சொல்கிறீர்களா?"

தன்னைக் கோழைப் போன்று பதுங்கிச் செல்லுமாறு கூறியதைக் கேட்டதில் இளைஞனின் உள்ளத்தில் சினம் கொளுந்துவிட்டு எரிய, தன்னை எரித்து விடுவது போன்று பார்த்தவாறே வார்த்தைகளைத் தெறிக்க விடுபவனைக் கண்டு கொஞ்சம் நஞ்சமிருந்த தைரியத்தையும் இழந்த அதிகாரி நடுங்கத் துவங்கவும், அவரின் உடலில் ஏற்படும் உதறலை சலிப்புடன் பார்த்தவன் அறை வாயிலை நோக்கி நடக்கத் துவங்க, இரண்டே எட்டுகளில் அவனது கரத்தை எட்டிப் பற்றியவர்,

"நீங்கள் வருவது தெரிந்துவிட்டதோ என்னவோ எனக்குத் தெரியவில்லை.. ஆயினும் வெளிநாட்டுப் பிரயாணிகள் நகருக்குள் நுழைவதற்கு அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து வாயில்களிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறு இளவரசர் கட்டளையிட்டு இருக்கின்றார்.. ஆகவே தான் சொல்கிறேன்.. நூற்றுக்கணக்கான வீரர்கள் நகரைச் சுற்றிலும் காவல் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.. இப்பொழுது நீங்கள் நகருக்குள் நுழைந்தால் நீங்கள் உயிருடன் உங்கள் தேசம் திரும்புவது என்பது நடவாத காரியம் ஆகிவிடும்.." என்றார், பெரும் பதைபதைப்புடன்.

அவரது வார்த்தைகளைச் செவிமடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தாலும் அவனது விழிகளோ தனது கரத்தை இறுக்கப் பற்றியிருக்கும் அதிகாரியின் கரத்தின் மீதே இருக்க, அதுவரை அவனை எவ்வாறாவது இந்தத் தேசத்தை விட்டு அனுப்பிவிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் படபடத்துப் பேசிக் கொண்டிருந்தவர் அப்பொழுது தான் கவனித்தார், அவனது பார்வை தன் முகத்தின் மீது இல்லை என்பதை.

'இவனது உயிரைப் பற்றியோ, இவன் எங்களது தேசத்திற்குள் காலடி எடுத்து வைத்தவுடனேயே இவனது தலையைச் சீவி எரிந்துவிடுமாறு பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கும் கட்டளையைக் கண்டோ கலங்காது, அதற்கு மாறாக இவனது கரத்தைப் பற்றியிருக்கும் என் கையை இப்படி எரித்துவிடுவது போல் பார்த்துக் கொண்டிருக்கின்றானே..' என்று மனத்திற்குள் திகைத்தவராய் நெருப்பைத் தொட்டுவிட்டது போல் சட்டென்று அவனது கையை விட்டார் சுங்க அதிகாரி.

"ம.. மன்னித்து விடுங்கள்.. அ.. அவசரத்தில் உங்கள் கரத்தைப் பற்றிவிட்டேன்.. உங்கள் உயிர் உங்கள் தேசத்து மக்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நான் உங்களுக்கு எடுத்துக் கூறவும் வேண்டுமா?"

தட்டுத்தடுமாறி கூறுபவரை ஒரே ஒரு முறை ஆழ்ந்துப் பார்த்துவிட்டு,

"என் உயிரைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைக் கொள்ள வேண்டாம்.. அதனை எவ்வாறு தக்க வைத்துக் கொள்வது என்று எனக்குத் தெரியும்.. நான் நகருக்குள் செல்வதற்கு அனுமதிச்சீட்டு வழங்குவது மட்டும் தான் உங்களது வேலை... மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்.." என்றவன் அவர் அமர வேண்டிய இருக்கைக்குச் செல்ல, வேறு வழியின்றி அவனைத் தொடர்ந்த அந்த அதிகாரி அவனிடம் அனுமதிச்சீட்டினை வழங்க, மீண்டும் ஒரு முறை எச்சரிக்கையுடன் சுற்றும் முற்றும் தன் விழிகளைச் சுழற்றியவன் சுங்கச் சாவடியை விட்டு வெளியில் வந்தான்.

இளைஞனின் கால் வாயிலின் வெளிப்புறம் பதிக்கப்பட்டதுமே ஒருவரும் எதிர்பாராத வகையில் அங்கு ஏற்பட்ட பெரும் பிரளயமே அவனுக்குத் தெள்ளென உணர்த்தியது, கப்பலில் இருந்து படகில் வந்து இறங்கிய தன்னைச் சோதனை செய்யாது, தன்னைக் கண்டு ஒன்றும் பேசாது வழிவிட்டு நகர்ந்து நின்ற துறைமுகக் காவலர்களின் அன்னிச்சையான செயலுக்கான காரணம் என்னவென்று.


*************************************************


தங்கச் சூரியன் மறைந்திருந்தாலும் அவன் விட்டுச்சென்ற மிச்சமீதம் கதிரொளி கொற்கை பெருந்துறையின் அழகை முன்னை விட மெருகூட்டி காட்ட, கண்ணையும் இதயத்தையும் ஒருங்கே ஈர்த்த அழகையும் மீறி, தன்னைச் சுற்றிலும் நடந்து கொண்டிருக்கும் விபரீதத்தின் வீரியத்தால் அங்குப் பெரும் அபாயம் நேரவிருப்பதை உணர்ந்த அவ்விளைஞன், காவலர்கள் சிலர் தங்களின் வாட்களின் மீது கைகளை வைத்த வண்ணமாகத் தன்னை அணுகத் துவங்கியதைக் கண்டு கண்ணிமைக்கும் நேரத்திற்குள் இடைக்கச்சையில் சொருகியிருக்கும் உடைவாளை மின்னலென உருவினான்.

அவனையே தொடர்ந்து வந்த, அவனுடன் கப்பலில் பயணித்தவர்களில் சிலரும் சடாரென்று தங்களது வாட்களை உருவியவர்கள் இளைஞனுக்குப் பின்னால் அவனுக்கு அரணாக வந்து நிற்க, மனத்திற்குள் ஏற்பட்டுக் கொண்டிருந்த கொந்தளிப்பின் விளைவினை சிறிதளவேனும் முகத்தில் எதிரொலிக்க விடாது, மாறாகச் இளம் புன்னகையை உதிர்த்தவாறே புருவங்களைச் சற்றே உயர்த்தியவனின் கூரிய விழிகள் தன்னைச் சுற்றி நின்றிருக்கும் காவல் வீரர்களை ஈட்டி போல் ஊடுருவத் துவங்கியது.

"உங்களை எங்குப் பார்த்தாலும் பிடித்து வருமாறு எங்கள் இளவரசரின் கட்டளை.."

"உங்கள் இளவரசரின் கட்டளையை நான் மீறினால்?"

"உங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.."

"அப்படி என்று உங்கள் இளவரசர் என்னிடம் கூறச் சொன்னாரா?"

"அது மட்டும் அல்ல, உங்கள் உயிர் போகும் தருவாயிலும் தான் எச்சரித்ததை உங்களிடம் நியாபகப் படுத்த சொன்னார்.. அப்பொழுது உங்கள் கண்கள் எதிரொலிக்கும் கலக்கத்தை மறக்காது அவரிடம் வந்து தெரியப்படுத்த சொன்னார்.."

காவலர்களில் ஒருவன் சப்தமாக உரைக்க,

"எனது உயிருக்கு உத்தரவாதம் கொடுப்பதற்கு உன் இளவரசர் யார்? கடவுளா? என் கண்களில் இப்பொழுது என்ன உணர்வு எதிரொலிக்கின்றதே அதே உணர்வு தான், நான் மரணிக்கும் வேலையிலும் வெளிப்படும் என்று அவரிடம் கூறு, ஆனால் அதற்கு முன் அவரது உயிர் இந்த உலகத்தை விட்டு விடைப்பெற்றிருக்கும் என்பதையும் மறக்காது கூறிவிடு.." என்று ஏளனமும் இகழ்ச்சியும் தொனிக்கும் குரலில் வாய்விட்டு சிரித்தவாறே கூறுபவனைக் கண்ட அந்தக் காவலன் தன்னருகே நின்றிருந்த வீரர்களைப் பார்த்து தலையசைத்ததில், சடாரென்று அவ்விளைஞன் மீது பாய்ந்தான் மற்றொரு வீரன்.

ஆனால் அவன் இளைஞனின் மீது பாய்ந்ததை மட்டும் தான் சுற்றியிருந்தவர்கள் பார்த்தார்கள்.

விநாடிக்கும் குறைவான நேரத்தில் அவன் உடல் இரண்டு பட்டு ஆகாயத்தை நோக்கி இரு திசைகளில் பறந்து, பின் மீண்டும் நிலத்தில் தொப்பென்று விழுந்ததைக் கண் மூடித் திறக்கும் நேரத்திற்குள் நிகழ்த்திக் காட்டியிருந்த அவ்விளைஞனைக் கண்டு, அச்சத்தில் உறைந்து போனது அவர்களின் உள்ளம்..

மின்னல் கீற்றையும் வென்று விடும் வேகத்தில் நிகழ்ந்துவிட்ட அந்த விபரீதத்தைக் கண்ட பாண்டிய வீரர்கள் திகைத்தாலும் அடுத்த வினாடி அவன் மீது அனைவரும் ஒரு சேர பாய, தனது உடை வாளால் வீரன் ஒருவனின் கழுத்தை சீவி கொண்டே, இடைக்கச்சையில் செருகியிருந்த மூன்று கத்திகளை ஒன்றாக இணைத்து முறுக்கிவிட்டது போன்ற அமைப்பிலான குறுவாளை உருவியிருந்தவன் மற்றொரு வீரனின் வயிற்றில் பாய்ச்சி அவனது உடலிற்குள்ளேயே அதனைத் திருப்ப, அதற்குள் இளைஞனின் பின் புறம் நின்றிருந்த அவனது சக பயணிகளும் பாண்டிய வீரர்களின் மீது பாயவும், அங்குப் பெரும் கலவரம் நிகழத் துவங்கியது.

வாட்போரையும், வெட்டுக் காயங்களுடன் பல்வேறு திசைகளிலும் உதிரம் தெளிக்க வீரிட்டவாறே பாண்டிய வீரர்கள் கீழே சாய்வதையும் கண்ட வணிகர்கள் அலறியவாறே அங்குமிங்கும் ஓட, கட்டிடத்திற்கு வெளியே வீரர்கள் கூக்குரலிட்டு அலறும் சப்தம் கேட்டதில் சுங்க கட்டிடத்தினுள் இருந்த அதிகாரிகளுக்கும் பிற பிரயாணிகளுக்கும் வணிகர்களுக்கும் மத்தியில் பெரும்பீதி பரவத் துவங்க, அவர்களும் என்னவென்று அறியாது பதைபதைத்தவாறே வெளியே ஓடி வரத் துங்கினர்.

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அரண்டடித்து ஓடி வந்ததில் அவர்களின் வேகத்தில் சுங்கச்சாவடியின் பெரு வாயிலின் அருகே தளைகளில் சொருகப்பட்டிருந்த பந்தங்கள் தவறி கிழே விழுந்ததில், அதன் அருகில் போடப்பட்டிருந்த காய்ந்த மரக்கட்டைகளால் வேயப்பட்டிருந்த தடுப்புச்சுவர் எரியத் துவங்கியதில், கலவரம் வெடித்தது போல் அவ்விடமே அமளி துமளிப்பட்டது.

அதற்குள் தங்களைச் சுற்றியிருந்த பாண்டிய வீரர்கள் அனைவரையும் கொன்று போட்டிருந்த அவ்விளைஞன் இந்த அலம்பல்களையும் ஆரவாரங்களையும் பயன்படுத்திக் கொண்டவன் தன் ஆட்களைக் கண்டு வாளால் சைகை செய்ய, அவனுடன் இணைந்து வர்த்தகர்களுக்கும் அடிமைகளுக்கும் இடையே புகுந்த அவனது சக பயணிகளும் கூட்டத்துடன் கூட்டமாகக் கலந்தார்கள்.

சிறிது தொலைவு ஓடியதுமே கலவரத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு அரண்டடித்து ஓடிக் கொண்டிருந்த அரேபியன் ஒருவனின் பின்புறமாக நெருங்கிய அவ்விளைஞன், ஒரு கரத்தால் அவனது இடுப்பை வளைத்துப் பிடித்தவன் மறு கரத்தால் அவனது வாயை இறுக்க மூடியவாறே வீதியின் இருளடைந்த ஒரு பகுதி இழுத்துச் செல்ல, இளைஞனின் உடும்புப் பிடியில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளப் போராடும் அரேபியனின் தலையின் பின் புறத்தில் தனது குறுவாளின் கைப்பிடியைக் கொண்டு அடித்து மயக்குமுறச் செய்த இளைஞன், அடுத்தக் கணம் அரேபியனின் உடையைத் தான் அணிந்திருந்தான்.

அதற்குள்ளாகவே அவனைத் தொடர்ந்து வந்திருந்த அவனது ஆட்கள் இருளுக்குள் இருந்து நெடுநெடுவென்ற உயரத்துடன் அரேபியனைப் போன்ற தோற்றத்துடன் வெளியே வந்தவனைக் கண்டு ஓர் விநாடி திகைத்தவர்கள் பின் சுதாரித்து அவனை நெருங்க,

"இனி நாம் ஒன்றாக இருப்பது பெரும் ஆபத்து.. பிரிந்து செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.." என்றவனின் கூற்றில் திடுக்கிட்டு திகைத்துப் போயினர்.

"பகை நாட்டில் உங்களைத் தனித்துவிட்டு நாங்கள் செல்வதா? உங்களைத் தடுக்காது உங்களுடன் இணைந்து நாங்கள் பாண்டிய தேசத்திற்கு வந்தோம் என்பது மட்டும் மகாராணிக்குத் தெரிந்தால், நாங்கள் அனைவருமே மீதம் இருக்கும் எங்கள் வாழ்நாளை சிறைச்சாலைகளில் தான் கழிக்க வேண்டும்.. இப்பொழுது இத்தகைய சூழலில் உங்களைத் தனித்து விட்டு பிரிந்து சென்றோம் என்றால் பின் எங்கள் தலைகளுக்கு நாங்கள் விடைக்கொடுக்க வேண்டியது தான்.. ஆகையால் உங்களைப் பிரிந்து செல்வது என்பது எங்கள் சொப்பனத்திலும் நடவாத காரியம்.. என்ன நேர்ந்தாலும் நாங்கள் உங்களுடன் தான் வருவோம்.."

இளைஞனின் ஆட்களில் தலைவன் போன்று இருந்த வீரன் கூறவும், எரிச்சலுடன் கோபமும் கலக்க முகத்திலும் வெறுப்பைக் காட்டிய இளைஞன்,

"நாம் ஒன்றாக இருப்பது ஆபத்து என்று கூறிக் கொண்டிருக்கிறேன், அதனைப் புரிந்துக் கொள்ளாது முட்டாள்தனமாகப் பேசிக் கொண்டிருக்கிறாய்.. நம்மைச் சுங்கச்சாவடியில் உள்ள அனைவருமே பார்த்துவிட்டார்கள்.. நாம் கொற்கையில் காலடி எடுத்து வைக்கும் வரை நம்மை அடையாளம் தெரிந்திராதவர்கள் கூட, இப்பொழுது நம்மைக் கண்டால் அச்சு பிசகாது அடையாளம் கண்டு கொள்வார்கள்.. ஆயினும் என்னால் நான் வந்த காரியத்தை நிறைவேற்றாது செல்ல இயலாது.. ஆகவே இக்கணமே நீங்களும் வெவ்வேறு பாதைகளில் பிரிந்து செல்லுங்கள்... நாளை அந்தி சாயும் நேரத்திற்குள் நான் நம் கப்பலுக்குத் திரும்பி விடுவேன்.. நீங்களும் வந்துவிடுங்கள்.. ஒரு வேளை நான் வரவில்லை என்றால் என்னைப் பற்றிக் கவலைக்கொள்ளாது நீங்கள் நம் தேசத்துக்குச் செ.." என்றவனை முடிக்கவிடாது,

"இள..." என்றவனைக் கண்டு சடாரென்று திரும்பியவனின் ஆங்காரத்தில் அதிர்ந்து போனான் அத்தலைவன்.

"நாம் இங்கு இருந்து திரும்பிச் செல்லும் வரை என்னை அவ்வாறு அழையாதே.. இதுவும் என் கட்டளை.."

கூறியவாறே சடுதியில் இருளுக்குள் கலந்து மறைந்துப் போன இளைஞனின் வேகத்தில் திகைத்த அவனது வீரர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறே நிற்க, தங்களின் கண்ணெதிரே திடுமென மறைந்தவன் சென்ற பாதையையே வெறித்துப் பார்த்த அவனது வீரர்களின் தலைவன் இழுத்து நெடு மூச்சுவிட்டவன் மற்றவர்களை நோக்கி,

"அவர் சொன்னதைக் கேட்டீர்கள் அல்லவா? அதே போல் நாம் அனைவரும் பிரிந்திருப்பது தான் நல்லது.. ஆனால் அதற்காக நாளை அவர் கப்பலுக்குத் திரும்பாவிட்டால், அவரை இங்குத் தனித்து விட்டு செல்வதை விடப் பெருங்குற்றம் வேறு எதுவும் இல்லை.. நாளை இதே இடத்தில் நாம் அனைவரும் சந்திப்போம்..." என்றவன் அவர்களின் பதிலுக்குக் காத்திராது தானும் இருளோடு இருளாகக் கலந்தான்.


*************************************


பாலின் வெண்மை நிறத்தில் ஒளி வீசிக் கொண்டிருந்த சந்திரனின் விண்ணொளியில் அந்நகரத்தின் பெரும்பகுதி வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தாலும், இருளடைந்திருக்கும் பிற பகுதிகளில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் பந்தங்களின் சுடரொளியால் அவ்விரவு நேரம் பகற்பொழுது போன்று காட்சியளித்தாலும், வீதிகளின் இரு பக்கங்களிலும் கட்டப்பட்டிருக்கும் மாளிகைகளின் தாழ்வாரங்களுக்கு அடிப்பகுதியில் கன்னங்கரேலென்று படர்ந்திருந்த கருமை, அவ்விளைஞனுக்குப் பெரும் உபகாரம் செய்தது.

அதற்குள் பல அடிகள் தொலைவு சென்றிருந்தவன் எவரின் கண்களிலும் படாதவாறு மறைந்தும் ஒளிந்தும் சென்று கொண்டிருக்க, தனக்கு வெகு அருகில் புரவிகளின் குளம்பொலிகளும், அதன் மீது அமர்ந்தவாறே பந்தங்களைச் சுமந்து கொண்டும் சப்தமாக உரையாடிக் கொண்டும் சென்று கொண்டிருந்த வீரர்களின் ஓசையில் அவர்களின் உரையாடல்களை உற்றுச் செவிமடுக்கத் துவங்க, அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை வைத்து அவர்களும் தன்னைத் தான் தேடுகின்றார்கள் என்பதை அறிந்துக் கொண்டவனாக, இருளடித்துக் கிடந்த மாளிகை ஒன்றை நோக்கி அரவமேதும் செய்யாது ஓடத் துவங்கினான்.

அவன் இருந்த இடத்திற்கும் அம்மாளிகைக்கும் குறைந்தது நூறு அடிகள் தொலைவாவது இருக்கும்..

ஆயினும் அவனுக்கு இருந்தது விநாடிகள் நேர அவகாசமே.. அதற்குள் ஒருவரின் கண்களிலும் படாது அவன் தப்ப வேண்டும்.

ஒரு வேளை பந்தங்களைச் சுமந்து வரும் வீரர்கள் தான் இருக்கும் திசையை நோக்கி வந்துவிட்டால், அதன் வெளிச்சத்தில் தான் இருப்பது எப்படியும் தெரிந்துவிட்டால் பின்னர் மீண்டும் ஒரு வாட்போரினை நிகழ்த்திய பின்னரே அவ்விடத்தில் இருந்து தப்பிச்செல்ல முடியும்..

ஆயினும் அதற்கும் அவகாசம் இல்லை என்பதைப் புரிந்துக் கொண்டவனாக, வாயுவேகத்தில் ஓட,

ஐந்து விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் மாளிகையின் முகமண்டபத்தை அடைந்திருந்தவன், அதன் அருகே தெரிந்த கூரைப்பகுதியின் மீது நான்கே தாவுகளில் ஏறி மாளிகையின் மூன்றாவது அடுக்கினை அடைய, கரணம் தப்பினால் மரணம் என்பதை உணர்ந்திருந்தாலும் சிறிதும் அச்சமென்பதே அல்லாது அம்மாளிகையை நெருங்கியவாறே அமைக்கப்பட்டிருந்த மற்றுமொறு மாளிகையின் கைப்பிடிச்சுவரை எட்டிப் பிடித்தவன், மீண்டும் ஒரே தாவில் அதன் வளைந்த தாழ்வாரத்திற்குள் குதித்தான்.

"எப்படி நான் இங்கு வருவது தெரிந்தது? மிகவும் இரகசியமாகத் தானே வைத்திருந்தேன் எனது திட்டத்தை.. என்னைக் கொன்று போடும் அளவிற்கு உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டிருக்கின்றன என்றால், வருவது நான் தான் என்பதைத் தெள்ளத்தெளிவாக அறிந்திருந்ததால் தானே இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யுமாறு கட்டளையிட்டு இருக்கின்றான்? யார் அவனுக்குத் தகவல் கொடுத்திருக்கும் முடியும்?"

சன்னமான குரலில் முணுமுணுத்துக் கொண்டவனாகத் தாழ்வாரத்தின் தடுப்புச் சுவரினை ஒட்டியே ஓசையேதும் எழுப்பாது நடந்து கொண்டிருந்தவனின் நீண்ட கால்கள், மாளிகைக்குள் இருந்து திடுமெனக் கேட்ட கலகலச் சிரிப்புச் சப்தத்தில் விசையைத் திருகி நிறுத்தியது போல் சட்டென்று நின்றன.

"என்னை என் தந்தையும் தமையனும் இங்குத் தங்குவதற்கு அனுமதித்ததே பெரும் அதிசயம்.. அதிலும் இன்னும் நாம் உறங்காது கதைப் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பது தெரிந்தும், உன்னைக் கடிந்துக் கொள்ளாது விட்டிருக்கின்றார் மாமா என்றால், அது அதனை விடப் பேரதிசயம்... இப்படியே இன்னும் நான்கைந்து நாட்கள் இங்கேயே இருக்க வேண்டும் போல் உள்ளது.. அரண்மனைக்குள் எனக்குப் பொழுதும் போக மாட்டேன் என்று அடம்பிடிக்கிறது.. மாமாவிடம் கேட்டு இன்னும் சிறிது நாட்கள் என்னைத் தங்க அனுமதிக்குமாறு என் தந்தையிடம் பேச சொல்லப் போகின்றேன்.."

கிளி போல் மிழற்றிய அக்குரல் யாழின் இசையையும் தோற்கடிக்கும் வண்ணம் கீதமாய் ஒளிக்க, தென்றலாய் தன் இதயத்தை வருடிச் செல்லும் அக்குரலினால் ஏற்பட்ட மயக்கத்தில் சில விநாடிகள் உறைந்துப் போன அவ்விளைஞன் பூனைப் போன்று ஓசைப்படாது மெள்ள நடந்தவன் சப்தம் வரும் அறையை நெருங்கவும்,

"நாளை காலை அப்பாவிடம் பேசலாம் மது.. நான் கேட்டால் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் நீ கேட்டால் நிச்சயம் மறுக்கமாட்டார்.. அதே போல் அத்தையிடமும் அத்தானிடமும் நான் பேசுகிறேன்.." என்று தன் ஏக்கத்திற்கு விடையாய் பதிலளித்தவளைக் கண்டு மீண்டும் கலகலத்து சிரித்தாள் முதலாமவள்.

"ஏனடி இந்தச் சிரிப்பு?"

"ம்ம்! நீ என் அண்ணனை அத்தான் என்று அழைத்ததில் என்னையும் அறியாது சிரித்துவிட்டேன்.. ஆமாம், நீ கேட்டு என்று என் அண்ணன் மறுத்திருக்கிறார்?"

"சரி சரி, சிரித்தது போதும்.. அதிக நேரம் பேசிக் கொண்டிருந்ததில் உண்ட உணவுக் கூடச் செரித்துவிட்டது போல் இருக்கின்றது.. இரு, கீழே சமையல் அறையில் அம்மா எதனையாவது மிச்சம் வைத்திருக்கிறார்களா என்று பார்த்து வருகின்றேன்.. இன்னும் கொஞ்சம் உண்டால் விடியும் வரை கூட நாம் இருவரும் பேசிக் கொண்டே இருக்கலாம்.."

கூறிய இரண்டாமவள் அறை வாயிலை நோக்கி நடக்க,

"குழலி! ஓசையிடாது செல்.. மாமா பார்த்து விடப் போகிறார்.. பிறகு இந்த நேரத்தில் சமையல் அறையில் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று உன்னைத் ஏசுவது மட்டுமல்லாது, நாளை என் தந்தையிடம் நம் கதைகளைப் பற்றித் தெரிவித்தாலும் தெரிவித்துவிடுவார்... பிறகு நான் இங்குத் தங்குவது என்பது, அதுவும் இரவில் என்பது என் சொப்பனத்தில் மட்டுமே நடக்கக் கூடிய காரியம் ஆகிவிடும்.." என்று ஆழ இழுத்துப் பெருமூச்செறிந்தவாறே கூறினாள் முதலாமவள்.

தன் செவிப்புலன்களை வெகுவாய் அதிகரித்து இருவரின் விவாதங்களையும் கூர்ந்துக் கேட்டுக் கொண்டே வந்த அந்த இளைஞன் பேச்சுச் சப்தம் கேட்டுக் கொண்டிருக்கும் அறையை நோக்கி நடக்க, மீண்டும் தொடர்ந்த இரண்டாமவளின் சொற்களில், இந்தப் பதினெட்டு பிராயத்திற்குள்ளயே எதற்கும் அஞ்சாத மகாவீரன் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் அவ்விளைஞனின் இதயத்தில் பெரும் அதிர்வு ஒன்று ஏற்படத் துவங்கியது.

"நல்ல வேளை நான் உன்னைப் போல் இளவரசியாகப் பிறக்கவில்லை மதுரயாழினி அவர்களே.. என் தந்தையும் உன் தந்தையும் பாலகக் காலத்தில் இருந்தே நண்பர்களாக இல்லாதிருந்தால், உன்னை எங்கள் வீட்டில் தங்குவதற்குக் கூட உன் தந்தை அனுமதித்திருக்க மாட்டார்.. ஒரு வேளை உன் தந்தையே உன் மீது கொண்டிருக்கும் அளவிலடங்கா பாசத்தால் அனுமதித்திருந்தாலும், உன் தமையன் இருக்கிறாரே, அவர் நிச்சயம் எங்கள் வீட்டின் படிகளில் கூட உன் பாதம் பட விட்டிருக்க மாட்டார்... அப்படிப் பார்க்கும் பொழுது அரண்மனையில் இளவரசியாகப் பிறப்பதை விடச் சாதாரணக் குடும்பத்தில் ஒரு ஏழை தந்தைக்கு மகளாகப் பிறப்பது எவ்வளவோ நலம் என்று தோன்றுகிறது, அல்லவா?"

'குழலி' என்றழைக்கப்படும் பூங்குழலி என்னவோ விளையாட்டாகத் தான் கூறினாள்.

ஆனால் அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த முதலாமவளின் பேரழகிய வதனம் சட்டெனச் சுணக்கத்தில் சுருங்க, தனது அன்புத் தோழியின் வசீகரிக்கும் முகம் திடுமென வாடி வதங்கியதில் அதிர்ந்து திகைத்தவளாய் அவளை நோக்கி ஓடி வந்தவள்,

"மது, தயவுசெய்து என்னை மன்னித்துவிடுடி.. உன்னை வருத்தப்படுத்த வேண்டும் என்று நான் இவ்வாறு கூறவில்லை.. விளையாட்டாகத் தான் கூறினேன்.." என்று மன்னிப்பு இறைஞ்சும் குரலில் சமாதானப் படுத்த துவங்கினாள்.

"நீ சொல்வதில் தவறேதும் இல்லையே குழலி.. பார், இதற்கு முன் நான் எங்களது அரண்மனையை விட்டு வெளியில் வந்தது ஏறக்குறைய ஒன்றரை வருடத்திற்கு முன்.. நான் பூப்பெய்திய பின் எங்குமே என்னை அனுப்ப என் பெற்றோர் ஒப்பவில்லை.. நீ விளையாட்டாகக் கூறினாலும் உண்மை அது தானே, தங்கக் கூண்டுக்குள் வாழும் கிளியின் நிலைதானே என்னுடையது.."

கீழே விழவா வேண்டாவா என்பது போல் விழிகளில் நீர் மணிகள் திரண்டு ததும்பி நிற்க, தலை கவிழ்ந்தவாறே அழுகுரலில் கூறுபவளின் கன்னங்களைத் தன் இரு கரங்களைக் கொண்டு ஏந்திய பூங்குழலி,

"கவலையேப்படாதே மது! இந்தத் தங்கக் கூண்டிலிருந்து உன்னைக் காப்பாற்றுவதற்குத் தூர தேசத்தில் இருந்து பேரழகு இளவரசன் ஒருவன் தன் வெண் புரவியில் நிச்சயம் வருவான்.. அந்த மாவீரன் எங்கள் கண்ணெதிரிலேயே உன்னைத் தூக்கிச் சென்றாலும் வியப்பதற்கில்லை.. அப்பொழுது பார், உன் தந்தையும் உன் தமையனும் கைகளைப் பிசைந்து கொண்டு செய்வதறியாது திகைத்து நிற்கப் போகின்றார்கள்.." என்றாள், தோழியை ஆறுதல் படுத்தும் தனிவான குரலில்,

ஆனால் தான் இப்பொழுது உதிர்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு வார்த்தையையும் அச்சுப்பிசகாது பின்னொரு காலத்தில் ஒருவன் நடத்திக் காட்டப் போகிறான் என்பதை அறியாத பேதையாய்.


***********************************************

தோழியின் கூற்றிற்கு இளம் கீற்று போன்ற மென்னகை ஒன்றை வலிய தன் இதழ்களில் விரவச் செய்த மதுரயாழினி, வார்த்தைகள் எதனையும் உதிர்க்க மனமில்லாதவள் போல் அமைதியாகிவிட, பூங்குழலியின் மனம் மென்மேலும் வருத்தத்தில் தோய்ந்தது.

"ஏற்கனவே இருவரும் பேசிப் பேசியே களைத்துவிட்டோம், இப்பொழுது ஏதோ விளையாட்டாகப் பேசுவதாக எண்ணி உன்னை அழ வேறு வைத்துவிட்டேன்.. உன்னை மகிழ்விப்பதற்கு உனக்குப் பிடித்த இனிப்புப் பலகாரம் ஏதாவது இருக்கின்றதா என்று சமையல் அறைக்குச் சென்று பார்த்து வருகின்றேன்.. அத்துடன் நமக்கு உண்டியும் எடுத்து வருகின்றேன்.."

கூறியவள் கீழ் தளத்தில் இருக்கும் சமையல் அறையை நோக்கி கொலுசு சப்தம் கூடக் கேட்காது மெல்ல படிகளில் இறங்க,

ஏனோ தோழி கூறிய, 'இளவரசியாகப் பிறப்பதை விடச் சாதாரணக் குடும்பத்தில் ஒரு ஏழை தந்தைக்கு மகளாகப் பிறப்பது எவ்வளவோ நலம்..' என்ற வார்த்தைகளும், பின் அவள் கூறிய, 'உன்னைக் காப்பாற்றுவதற்குத் தூர தேசத்தில் இருந்து பேரழகு இளவரசன் ஒருவன் தன் வெண் புரவியில் நிச்சயம் வருவான்.. அந்த மாவீரன் எங்கள் கண்ணெதிரிலேயே உன்னைத் தூக்கிச் சென்றாலும் வியப்பதற்கில்லை..' என்ற சொற்றொடரும், முதலாமவளின் மனதினில் அலையலையாய் சஞ்சலங்களையும் சலனங்களையும் தோற்றுவித்ததில் மெல்ல உப்பரிகையை நோக்கி நடந்தவளின் இதயம், பனியில் சிக்கிய நீரைப் போல் கண நேரத்திற்குள் உறைந்து போனது,

மாளிகையின் தாழ்வாரத்திற்கு அடுத்துக் கட்டப்பட்டிருக்கும் உப்பரிகைக்குள், அதன் கைப்பிடிச்சுவரைப் பிடித்தவண்ணம் சடாரென்று ஒரே தாவில் குதித்த அவ்விளைஞனைக் கண்டதில்.

உறங்குவதற்கு ஏதுவாக அவ்வறையில் சிறு விளக்கை மட்டுமே பெண்கள் ஏற்றி வைத்திருக்க, மங்கலான ஒளியைப் பரப்பியிருந்த அவ்விளக்கின் வெளிச்சத்தில் கூடத் தான் தென்பட்டுவிடக் கூடாது என்ற எச்சரிக்கைய உணர்வுடனேயே உப்பரிகையில் குதித்திருந்தவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை, அறைக்குள் பேசிக் கொண்டிருந்த இரு பெண்களுள் ஒருத்தி திடுமென உப்பரிக்கையை நோக்கி நடந்து வருவாள் என்றும், தன்னைக் கண்டு அவ்வாறு அதிர்ந்து திகைத்து நிற்பாள் என்றும்.

ஆயினும் அவன் படீரென்று குதித்ததில் எழுந்த சப்தத்தைக் கேட்டதில் அப்பெண் திடுக்கிட்டு நின்றது ஒரு சில விநாடிகளே.

மறுக்கணமே தன்னைச் சுதாரித்தவளாக விடுவிடுவென்று மீண்டும் அறைக்குள் சென்றவள் பஞ்சணைக்கு அருகில் போடப்பட்டிருக்கும் இருக்கையின் மீது வைத்திருந்த குறுவாளை எடுக்கவும், தன்னைக் கண்டு அரண்டுப் போய் நின்றிருந்தவள் சட்டெனத் திரும்பி நடக்கத் துவங்கும் பொழுதே சுதாரித்திருந்த அந்த இளைஞன், அவளையும் விட அதி விரைவாக நடந்திருந்தவன் ஓர் எட்டில் அவளது கரம் பற்றி இழுக்க, அவனது வேகத்தையும் வலிமையையும் தாங்க இயலாதது போல் ஒரு கரத்தில் குறுவாளுடன் இளைஞனின் மீது படீரென்று மோதி நின்றது அந்த மோகன பிம்பம்.

அந்தப் பதினெட்டு பிராயத்திற்குள்ளேயே எண்ணற்ற போர்களங்களில் குதித்திருந்தவன்.

எண்ணிக்கையில் அடங்காத ஆபத்துக்களையும் விபரீதங்களையும் விரும்பியே சந்தித்திருந்தவன்.

மார்பின் குறுக்கே ஏற்பட்டிருக்கும் வடு அவனது வாழ்நாள் முழுவதுமே மறையாதது போல் எதிரியின் வாளால் ஆழமாக வெட்டப்பட்டிருந்தவன்.

தங்களது தேசத்தின் தலையாயப் பகைவன் என்று அறிந்திருந்தும் பாண்டியனது இராஜ்யத்தில் வெகு தைரியத்துடன் காலடிப் பதித்திருந்தவன்.

ஆயினும் எத்தகைய கூரிய ஆயுதங்களையும், சஞ்சலமோ சலனமோ அச்சமோ இல்லாது எதிர்க்கும் துணிவு பெற்றவனின் அகன்ற மார்பில் புதைந்தவுடனேயே, அச்சத்துடன் தன்னை ஏறெடுத்து நோக்கியிருக்கும் ஏந்திழையின் அஞ்சன வாள் விழிகளின் வீச்சில்,

அறை விளக்கின் பொன்னிற ஒளியுடன் சாளரத்தின் வழியே அறைக்குள் ஊடுருவிய வெண்மதியின் வெள்ளிக் கிரணங்களும் கலந்து, பொன்னையும் வெள்ளியையும் உருக்கி இணைத்துப் படைத்த தேவதையாய் நிற்பவளின் விழிகள் தனது கூரிய கண்களுடன் நடத்தத் துவங்கிய போரில், ஆணவனின் இதயம் வாழ்க்கையில் முதன் முறையாகத் தத்தளித்ததில் ஓர் விநாடி தன் துடிப்பை நிறுத்திப் பின் தொடர்ந்தது.

அச்சத்தையும் அதனுடன் கோபத்தையும் ஒருங்கே கலந்தது போன்று, தனது மார்பில் அவளது முகவாயைப் பதித்தவாறே தன்னை அண்ணாந்து பார்த்திருக்கும் பெண்ணவளின் விழிகள் அவனையும் அறியாது அவ்வீரனின் மனதில் அப்படியே நிலைத்துப் போயின.

பிடிக்குதே திரும்பத் திரும்ப உன்னை..
பிடிக்குதே திரும்பத் திரும்ப உன்னை..
எதற்கு உன்னைப் பிடித்ததென்று தெரியவில்லையே..
தெரிந்துகொள்ளத் துணிந்த உள்ளம் தொலைந்ததுண்மையே..
பிடிக்குதே திரும்பத் திரும்ப உன்னை...
பிடிக்குதே திரும்பத் திரும்ப உன்னை...

ஈட்டியை விடக் கூர்மையாகத் தன் ஆண்மாவையே துளைத்தெடுத்துக் கொண்டிருக்கும் இந்த விழிகளில் தான் எத்தனை எத்தனை பாவனைகள்?

சீற்றம், திகைப்பு, கலக்கம், வெறுப்பு என்ற பலவகையான உயிர்துடிப்புகளை ஒரே நேரத்தில் தனது விழிவீச்சில் கொணரும் இவள் என்ன பூலோகத்து மங்கையா அல்லது தேவலோகத்து ரம்பையா?

"யார் நீ? இந்நேரத்தில் கள்வன் போல் உப்பரிகை வழியாக மாளிகைக்குள் நுழையும் நீ யார்?"

என்ன தான் தன் தோழியின் பெற்றோருக்கு எட்டிவிடக் கூடாது என்று மெல்லிய குரலில் அவள் வினவினாலும், தன்னிடம் இருந்து விடுப்படப் போராடியவாறே மிகுந்த அழுத்தத்துடன் கேட்டுக் கொண்டிருப்பவளை இமைகள் இமைக்க மறந்தது போல் பார்த்திருந்த அவ்விளைஞனின் கண்ணெதிரே மாய உலகம் ஒன்று சிருஷ்டிக்கப்பட்டது போல், மிதமிஞ்சிய மயக்கத்தில் ஆழ்ந்திருந்த அவ்விளைஞனை சிறிதும் அசைக்கவில்லை மங்கையவளின் கோபக் குரல்.

தான் இந்தத் தேசத்திற்கு வந்த நோக்கமும், சுங்கச் சாவடியில் பாண்டிய வீரர்கள் பலரைத் தான் கொன்று போட்டிருந்த நிகழ்வுகளும், தன்னை வெட்டி வீழ்த்திவிடும் நோக்கில் கொற்கை முழுவதையும் சல்லடைக் கொண்டு சலிப்பது போல் தேடிக் கொண்டிருக்கும் பகைவர்களும், அந்த மாய உலகில் மாயமாய் மறைந்து போனது போலவே அக்கணத்தில் உணர்ந்தான் அவ்விளைஞன்.

"இப்பொழுது என்னை விடப் போகிறாயா இல்லையா? நான் யார் என்று தெரியுமா? நீ இவ்வாறு என்னைத் தீண்டிக் கொண்டிருப்பதை என் தந்தையோ தமையனோ பார்த்தால், ஒரு விநாடி நேரம் கூட உன் உயிர் உன் உடலில் தங்காது.. என்னை விடு, இல்லாவிட்டால் உரக்க சப்தமிட்டு கூச்சலிடுவேன்.."

அவனது இறுக்கிய பிடியில் இருந்து தன்னை மீட்டெடுத்துக் கொள்ளப் போராடியவளின் விழிகளையே பார்த்திருந்தவன், அவள் பேச பேச தன் பார்வையை அவள் இதழ்களுக்கு மாற்ற, இருள் பெரிதும் சூழ்ந்துவிட்ட இரவில் ஒளிவிளக்கின் அற்ப வெளிச்சத்தில் காரிகையின் பிரமை தட்டும் அழகில் ஏற்கனவே மயக்கத்தில் ஆழ்ந்திருந்தவனுக்கு, அவளது செவ்விய அதரங்கள் திறப்பதும் மூடுவதுமாக இருந்ததில் விலகிய இதழ்களுக்குள்ளே தெரிந்த முல்லைப் பற்கள் உள்ளத்தினிலே பெரும் பிரமிப்பதை சிருஷ்டித்திருந்ததில்,

இப்படியும் கூடப் பேரழகு வாய்ந்த சொர்ணமென ஒரு சித்தினி இந்த உலகில் இருக்க முடியுமா என்ற சந்தேகம் தோன்றிய நொடியே, அவ்வீரனுக்குச் சுற்றுச்சூழல் மறந்து போனது.

சிறு வயது முதலே கண்டிப்பும் கனிவுமாக நற்பண்புகளை எடுத்துரைத்து, அறிவுரைகள் கூறி பேணி வளர்த்த பெற்றோரின் முகங்கள் காணாமற் போயின.

கலங்கமில்லாது இதுவரை கருத்தாய்ப் பாதுகாக்கப்பட்ட அவனது இளம் இதயத்தில் இருந்து வாழ்வின் நெறிமுறைகள் அனைத்துமே மாயமாய் மறந்துப் போயின.

தனது அகன்ற மார்பினில் புதைந்திருந்தவளின் வலது கரம் குறுவாளைப் பிடித்திருக்க, தன் இடது கரம் கொண்டு அவளது கரத்தை குறுவாளுடன் இணைத்து பிடித்தவனாக அவளது முகுகிற்குப் பின் வளைத்து இறுக்கியவாறே ஒரே கரத்தில் அவளைத் தன்னை நோக்கி உயர்த்தித் தூக்கியவன், தன் வலது கரத்தால் அவளது கழுத்தைப் பற்றித் தன்னை நோக்கி இழுக்க, தனது மிரட்டலிற்குப் பணிந்து தன்னை விட்டு ஓடிவிடுவான் இவன் என்று எண்ணியிருந்தவளுக்கு அவனது செய்கை பேரதிர்ச்சியை வரவழைக்க,

அவனது மார்பளவே உயரமிருந்தவள் தன்னை அவன் உயர்த்தியதுமே அவனது நோக்கம் புரிந்தவளாகத் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் எண்ணத்துடன் "ஆபத்து.." என்று சப்தமிடுவதற்கு அதரங்களைத் திறந்த அவ்விநாடியே, இளைஞனின் வலிய உதடுகளுக்குள் பெண்மையின் மெல்லிய இதழ்கள் சிறைப்பட்டுப் போயின.

மணித்துளிகள் பல கடந்தும் தீராத வேட்கையுடன் தேனை ருசித்துக் கொண்டிருக்கும் வண்டினைப் போல், அவளது இதழ்களின் ருசியில் ஆழப் புதைந்துப் போயிருந்தவன் அவளை விடுவிக்கும் எண்ணமே அற்றது போல் மேலும் மேலும் அவளின் இதழ்களைத் தன் உதடுகளுக்குள் ஆழ மறைத்துக் கொள்ள, புரவியின் வேகத்திற்கு இணையாகத் துடிக்கத் துவங்கிய பெண்ணவளின் இதயம் அதிர்ந்து அதிரடியாகப் படபடத்ததில் தன்னிலை இழக்கத் துவங்கியவள் தன்னையும் அறியாது அவனது வலிய உடலின் மீது நெகிழ்ந்து சாய்ந்தாள்.

மலருக்குள் நுழைந்திருந்த வண்டு அதனுள் பொங்கி வழிந்து கொண்டிருக்கும் தேனை அருந்தியதில், மயங்கத்தில் மூழ்கியதா?

அல்லது மலருக்குள் புகுந்து தன் வாயூறலின் மதுவை வண்டு புகட்டியதில் மலர் நெகிழ்ந்து சாய்ந்ததா?

கணங்கள் பல நீடித்த முத்தங்களின் யுத்தத்தில் திளைத்திருந்தவனின் இதயம், அந்தக் கனியிதழ்களை விட்டு அகல விரும்பாவிடினும், தன் மேல் குழைந்து நெகிழ்ந்து கிடந்தவளின் அசைவற்ற தன்மையில் சிறிதே தன்னிலையை இழுத்துப் பிடித்தவன் அவளின் இதழ்களைத் தன்னிடம் இருந்து மனமில்லாது விடுவிக்க, பின் புறமாக லேசாகச் சாய்ந்தவளின் முழு உருவத்தையும் அத்தருணத்திலும் அங்குலம் விடாது ரசிக்கத் துவங்கினான், அந்தக் கட்டிளங்காளை.

கரிய புருவங்களுக்குக் கீழ் சற்று முன் கூர்வேல்களெனப் பிரகாசித்திருந்த அவளது விழிகள் இப்பொழுது மூடிக் கிடந்த அழகிலும், மூச்சடைத்தது போல் விடைத்து நிற்கும் நுனி சிவந்திருக்கும் நாசியின் மிக எடுப்பான எழிலிலும், கோபத்தாலும் அதிர்ச்சியாலும் அரளியும் செவ்வலரியும் இணைந்தது போல் செக்கச் சிவந்திருக்கும் அவளது வழவழத்த கன்னங்களிலும்,

முத்தமிடுவதற்காகவே சிருஷ்டிக்கப்பட்ட, இன்பம் தரும் ஈரத்தில் தொய்ந்திருந்த மலர் இதழ்களிலும் விரவியிருந்த இளைஞனின் பார்வை, தனக்கு முன் பின்புறமாக வளைந்திருப்பவளின் தந்தத்தையும் வென்றுவிடும் பளபளத்த கழுத்திற்குக் கீழ் இறங்கத் துவங்கியதில், அவள் மயக்கத்தைத் தழுவிக் கொண்டிருக்கிறாள் என்பதை அவனது தாபம் கொண்ட இதயம் உணரவே இல்லையோ?

பார்ப்பவர்கள் பிரமிக்கும் வகையில் படைக்கப்பட்டிருக்கும் அழகிய சிவந்த ஆம்பல் மொட்டுகளை ஒத்த இவ்விரண்டு கோபுரங்களை, குறுகி சிறுத்திருக்கும் இவளது மெல்லிய இடை எங்கனம் தாங்கிக் கொண்டிருக்கிறது என்று திகைத்துப் போனதில், ஆடவனது உள்ளத்தே எழுந்திருந்த உணர்ச்சிகளின் பிரதிபலிப்பின் விளைவால் எழுந்த அவன் பெருமூச்சு வெளியிட்ட காற்றானது, கற்பனைக்கும் அப்பாற்பட்ட எழில்களுடன் நின்றிருப்பவளின் மார்பை வளைத்து ஓடிய சீலையை முழுவதுமாய்க் கீழே சரியச் செய்ய,

குறுவாளோடு சேர்த்து முதுகு புறமாக இறுக்கி தூக்கிப் பிடித்திருந்தவனின் கரம் மீதே பின்புறமாக அவள் சாய்ந்த விதத்தில் அலங்கோலமாய்க் காட்சியளித்த அந்த ஆரணங்கு விளைவித்த இலயமான தருணத்தில், 'இவ்வாறு இவளைக் காணும் முதல் ஆண்மகனும் நானாகத் தான் இருப்பேன், இவளைக் கடைசியில் இத்தோற்றத்தில் காண்பவனும் நான் மட்டுமே.." என்று மௌனமாய் அவனது இதயம் சூளுரைத்துக் கொண்டது.

மெள்ள அவளை இரு கரங்களிலும் ஏந்தியவன் பஞ்சணையில் படுக்க வைக்க, கருத்த சர்ப்பத்தைப் போன்று நீண்டுக் கிடந்த அவளின் கரிய கூந்தல் சற்று முன் பஞ்சணையில் படுத்திருந்ததால் களைந்துக் கிடக்க,

இதில் இவ்வீரனின் எஃகைப் போன்ற இரும்பு கரத்தின் வளைவுக்குள் அவளது கழுத்துப் பெருமளவு நேரம் அகப்பட்டிருந்ததில் முகத்தை ஆங்கிங்கு மறைத்திருந்த கூந்தல் இழைகள், தான் அவளை ஒழுங்காகப் பார்ப்பதற்கு அனுமதிக்க மாட்டேன் என்ற நோக்கத்தில் குறுக்கிடுகிறதோ என்று எண்ணியவன், மயிற் சுருளை தன் விரல்களால் சுற்றி அவளது செவிகளுக்குப் பின் சொருகவும், படிகளில் யாரோ வேகமாக ஏறி வரும் ஓசைக் கேட்கவும் சரியாக இருந்தது.

சப்தம் வந்த திசையை நோக்கி சரேலெனத் திரும்பிப் பார்த்தவன், தனது இடைக்கச்சையில் மறைத்து வைத்திருந்த மோதிரம் ஒன்றை எடுத்துப் பஞ்சணையில் படுத்திருந்த மோகன பிம்பத்தின் மெல்லிய பஞ்சண்ண விரலில் அணிவித்தவன், அப்பொழுதும் முழுவதுமாக விலகியிருந்த அவளது சீலையால் அவளின் அழகுகளை மூடியவாறே அறையைச் சுற்றி கண்களால் துழாவ,

நீண்ட இதழ் யுத்தத்தினால் ஸ்வாசம் தடைப்பட்டதில் மயக்கத்தில் ஆழத் துவங்கியிருந்தவளின் உதடுகள் மெல்ல அசைய,

படிகளில் ஏறிக் கொண்டிருப்பவர்களின் காலடி தடங்களின் ஓசை அதிகரித்தாலும் அதனைத் துச்சமென மதித்தவன் போல் பெண்ணவளின் செவிகளை நோக்கி குனிய, மெல்லிய குரலில், "என் தமையன் கேசவ பாண்டியனிற்கு மட்டும் நீ இப்பொழுது செய்து கொண்டிருப்பது தெரிந்தது, உன்னை அவர் விடப்போவதில்லை.." அன்று அவள் உதிர்த்த வார்த்தைகளைக் கூர்ந்துக் கேட்டவனின் முகம் கோபத்தில் மிளிர்ந்தது.

சடாரென்று எழுந்தவன் உப்பரிகையின் வழியாகத் மீண்டும் தாழ்வாரத்திற்குள் குதித்தவன் இருளோடு இருளாக மறைந்து போனான்.

************************************************

கஜவீர பாண்டியனின் அரசவை மண்டபம்..

"ஒரு சிறுவன் இத்தனை பாதுகாப்பு அரண்களையும் தாண்டி நம் இராஜ்யத்திற்குள் காலடி எடுத்து வைத்ததும் அல்லாமல், எண்ணிலடங்காத வீரர்களைக் கொன்றும் காயப்படுத்தியும் தப்பித்துச் சென்றிருக்கிறான்... இவ்வளவு வீரர்கள் காவலுக்கு இருந்தும் அவனை ஒன்றும் செய்ய முடியாது இப்பொழுது என் முன் தலை கவிழ்ந்து நிற்கின்றீர்களே, உங்களுக்கே இது பெருத்த அவமானமாய்த் தோன்றவில்லை.."

அடிக் குரலில் கர்ஜித்துக் கொண்டிருக்கும் அரசனை நிமிர்ந்துப் பார்க்கும் துணிவு சிறிதும் இல்லாது படைத் தலைவர்களும் தளபதிகளும் உபதளபதிகளும் சிலையென அசையாது நின்றிருக்க,

அரசனை நெருங்க அஞ்சியிருந்தாலும் அவனது பேச்சிற்குப் பதிலளிக்கும் கடமை தனக்கு இருக்கின்றது என்ற நோக்கில் அவனைச் சிறிதே நெருங்கிய சேனாதிபதியைக் கண்டு, கோபத்துடன் திரும்பிப் பார்த்த கஜவீர பாண்டியனின் பார்வையில் கக்கிய அனலைக் கண்டு சற்றே பின் தங்கினான் பாண்டிய சேனாதிபதி கார்வண்ணன்.

"என்ன விளக்கம் கூறப் போகின்றீர்கள் சேனாதிபதி? சொல்லுங்கள், இதற்கு மேலும் என்ன தயக்கம்?"

ஏளனப் புன்னகை உதடுகளில் நெளிந்தாலும், இகழ்ச்சி தொனி வார்த்தைகளில் படர்ந்தாலும், விழிகளில் தெறித்திருக்கும் சீற்றம் மட்டும் மறையாது கேட்கும் அரசனைக் கண்டு சேனாதிபதியின் உள்ளம் படபடக்கத்தான் செய்தது.

ஆயினும் துணிவை வரவழைத்துக் கொண்டவனாக,

"அரசே! கடும் பாதுகாப்பையும் சோதனைகளையும் நம் வீரர்கள் மேற்கொண்டு தான் இருந்தார்கள்.. ஆனால் சுங்க அதிகாரிகளில் ஒருவன், அவனைக் கண்டதும் கொன்றுப் போடும் கட்டளைகளை இட்டிருக்கும் இளவரசரரின் திட்டத்தினைப் பற்றி முன் கூட்டியே தெரிவித்துவிட்டான்... ஆகையால் தான் அவனால் நம் இராஜ்யத்தை விட்டு உயிருடன் செல்ல முடிந்திருக்கின்றது.. இல்லையேல் இந்நேரம் அவனது சிரம் உங்கள் முன் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும்.." என்றான், அரசனின் ஆங்காரத்தை எவ்வழியிலாவது தனித்துவிடும் நோக்கில்.

"மழுப்பாதீர்கள் சேனாதிபதி.. நமக்குள்ளேயே பகைவர்களுக்குத் துணைப் போகும் புல்லுறுவிகள் இருப்பதை நீங்கள் ஏன் முன்னரே கண்டறியவில்லை? கப்பலில் இருந்து அவன் இறங்கிய அக்கணமே அவனைக் கொன்றுப் போட்டிருக்கலாமே.."

அரசனின் ஏளன வார்த்தைகள் சேனாதிபதியின் உள்ளத்திற்குள் பெரும் சீற்றத்தை விளைவிக்கத் தான் செய்தது..

ஆயினும் அரியாசனத்தில் அமர்ந்திருப்பவன் கூறும் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டிருப்பது ஒரு சேனாதிபதியின் கடமை என்பதை உணர்ந்துக் கொண்டவனாக,

"நமது கொற்கை பெருந்துறையை அவனது கப்பல் அடைந்ததுமே வீரர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டுவிட்டார்கள் அரசே.. நீங்கள் கூறுவது போல் படகு நம் கரையை நெருங்கிய அவ்விநாடியே அவனைக் கொன்றுப் போடுவது முடியாத காரியமும் அல்ல.. ஆயினும் துறைமுகம் முழுவதுமே வணிகப் பெருமக்களும் யவனர்களும் அரேபியர்களும் அடிமைகளும் பயணிகளுமாய் நிறைந்திருந்தனர், அச்சூழ்நிலையில் அவ்விடத்தில் அவனைக் கொல்வது சிறந்ததல்ல அரசே.. அதே போன்று அவனது வருகையை நாம் முன்கூட்டியே அறிந்துக் கொண்டோம் என்று அவன் உணரும் அக்கணமே மக்கள் கூட்டத்துடன் ஒன்றாக அவன் கலந்துவிடும் அபாயமும் இருந்தது.. ஆகையால் தான்.." என்று சேனாதிபதி முடிக்கவில்லை,

"ஆகையால் தான் துறைமுகத்தில் அல்லாது சுங்கச் சாவடியில் அவன் மற்றவர்களுடன் கலந்து தப்பித்துச் செல்வதற்கு ஏதுவாகத் திட்டம் வகுத்தீர்களோ?" என்று இறுமாப்புடனும் வெறுப்புடனும் வார்த்தைகளை உதிர்த்தவாறே சேனாதிபதியின் கூற்றினைத் தான் முடித்தான் கஜவீர பாண்டியன்.

அவனது கேள்வியிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது.

ஆகவே அவனது வினாவிற்கு விளக்கம் கூறும் வகையறியாது மௌனமாகிப் போன சேனாதிபதியையும், அவனுக்கு அருகில் நின்றிருக்கும் உபசேனாதிபதிகளையும் தளபதிகளையும் நோக்கி எரித்துவிடும் பார்வை ஒன்றை வீசியவாறே,

"அந்தச் சுங்கசாவடி அதிகாரியையாவது கண்டு பிடித்தீர்களா அல்லது அவனையும் கோட்டை விட்டுவிட்டீர்களா?" என்று இகழ்ச்சி ததும்பும் குரலில் கூறிய அரசனைக் கண்டு தலை தாழ்ந்தார் சேனாதிபதி.

"என்ன கார்வண்ணன், என் கேள்விக்குப் பதிலளிக்காது தலை கவிழ்கின்றீர்கள்? அப்படி என்றால் அவனையும் கோட்டை விட்டுவிட்டீர்கள் என்று கூறுங்கள்.."

"அவனைக் கண்டு பிடித்துவிட்டோம் அரசே... ஆனால் அவனையும் தன்னுடன் கப்பலில் அழைத்துக் கொண்டு சென்றுவிட்டான் அவன்.."

உப சேனாதிபதியின் பதிலில் வெகுண்டெழுந்த அரசன், அரசவைக்குள் அதுவரை ஒரு வார்த்தைக் கூட உதிர்க்காது மௌனமே மொழியாகிப் போனது போல் நின்றிருந்த படைத்தலைவர்களையும் தளபதிகளையும் கண்டு வெறுப்பை உமிழ்வது போல் பார்த்தவன், விடுவிடுவென்று நடந்தான் தன் பள்ளியறையை நோக்கி.

***************************

மஞ்சத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பட்டத்துராணியும் இளவரசியும் அரசனின் வேகத்தைக் கண்டு அதிர்ந்தவர்களாக எழுந்து நிற்க, அறைக்குள் நுழைந்தவன் ஒரு வார்த்தைக் கூடக் கூறாது குறுக்கும் நெடுக்குமாகத் தீவிர சிந்தனையுடன் நடக்கத் துவங்க, கணவனின் ஆவேசத்திலும் சீற்றத்திலும் திகைத்துப் போனவராய் நின்றிருந்த பட்டத்து மகிஷி கணங்கள் சில கடந்து கணவனின் தோளைத் தொட்டு நடையை நிறுத்தினார்.

"ஏதேனும் பிரச்சனையா?"

"பிரச்சனையா? பெரும் விபரீதம் நடந்திருக்கின்றது!"

"விபரீதமா?"

"ஆம்! பகை நாட்டைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் வேவு பார்க்கவென்று என் இராஜ்யத்திற்குள்ளேயே நுழைந்தது மட்டுமில்லாது, நம் வீரர்களையும் கொன்றுவிட்டு அவன் உயிருக்கு எந்த விதச் சேதமுமின்றித் தப்பித்துச் சென்றிருக்கின்றான்."

"சிறுவனா?"

"ஆம்! சிறுவனே தான்.."

"யாரது அரசே?"

"மகிழேந்திர வர்மன்!"

தந்தையின் கூற்றில் அதிர்ந்து திடுக்கிட்டதில் உடல் தூக்கிவாரிப் போட, தன் பாதங்களுக்கு அடியில் பூமி இரண்டாகப் பிளந்து தன்னை உள்ளிழுத்துக் கொள்ள முயற்சிக்கின்றதோ என்று எண்ணியவளாய் தடுமாறிய பாண்டிய இளவரசி தொப்பென்று மஞ்சத்தில் அமர்ந்தாள்.

பெண்ணவளின் உள்ளுணர்வு எதனையோ எச்சரித்ததில் தன்னிச்சையாக இடது கரத்தில் அணிவிக்கப்பட்டிருந்த மோதிரத்தை தனது சீலைக்குள் மறைத்துக் கொள்ள, தந்தையின் வாயால் சொல்லப்பட்ட அந்தப் பெயர் மீண்டும் மீண்டும் உள்ளத்திற்குள் எழுந்துக் கொண்டிருந்ததில், இளையவளின் இதயமே உறைந்து போனது போல் தோன்றியதில் அவளது பேரழகு வதனமும் வெளிரியது.

"மகிழேந்திர வர்மனா? தங்கேதி தேசத்து இளவரசனா என்னை முத்தமிட்டது?"

**************************
தங்கேதி தேசம்..

ஆதிநல்லூர் மாநகரம்..

உதயேந்திர வர்மனின் தனியறை..

தனக்கெதிரே சிறிதும் அச்சமோ கலக்கமோ இல்லாது நின்றிருக்கும் மைந்தனை, உள்ளத்திற்குள் கொழுந்துவிட்டு எரியும் எரிமலையின் வேகத்துடன் ஆனால் தன் சீற்றத்தை வழக்கம் போல் சிறிதும் வெளியில் காட்டாது அமைதியாகப் பார்த்திருந்த உதயேந்திரனின் அருகில், வார்த்தைகளற்று அதிர்ச்சியில் கலங்கிப் போனவளாய் நின்றிருந்தாள் மகிழ்வதனி.

"எத்தனையோ முறை உன் தந்தை சொல்வதை மதியாது நீ பல காரியங்கள் செய்திருக்கின்றாய் மகிழா.. அதனால் எண்ணிலடங்காத ஆபத்துக்களையும் பெரும் இன்னல்களையும் உன்னுடன் சேர்ந்து நாங்களும் சந்தித்திருக்கின்றோம்.. அதற்கு இந்த இள வயதிலேயே உன் மார்பில் இருக்கும் வடுவே சாட்சி.. என்னதான் அது போர்களத்தில் ஏற்பட்ட காயத்தினால் வந்தது என்றாலும், ஒவ்வொரு முறை அதனைக் காணும் பொழுதும் ஒரு அன்னையாக என்னால் தாங்க இயலவில்லை.. அப்படி இருக்க இப்பொழுது நீ செய்து வந்திருக்கும் இந்த விபரீதக் காரியம்.. எதற்காகப் பாண்டிய தேசத்திற்குச் சென்றாய்? நம் தேசத்தைச் சேர்ந்த எவரையுமே பார்த்த நேரத்திலேயே கொன்று போட்டுவிடுமாறு பாண்டிய இளவரசன் கேசவப் பாண்டியன் கட்டளைகளை விதித்திருக்கின்றான் என்பது உனக்குத் தெரியாதா? அப்பேற்பட்டவன் தங்கேதி தேசத்தின் இளவரசனே தன் இராஜ்யத்திற்குள் காலடி எடுத்து வைத்திருக்கின்றான் என்பதை அறிந்தால் நேரும் விபரீதங்களை நீ உணரவில்லையா? எச்சூழ்நிலையிலாவது நீ அவனது கரங்களுக்குள் சிக்கிக் கொண்டால் உன் நிலை என்ன? உன்னை அவன் உயிருடன் விட்டுவிடுவானா? இவை அனைத்துமே தெரிந்தும் நீ இப்பேற்பட்ட ஆபத்தான காரியங்களில் ஈடுபடலாமா?"

கொந்தளித்துக் கொண்டிருக்கும் அன்னையின் அச்சம் தவழும் முகத்தைச் சிறு புன் முறுவலுடன் பார்த்த மகிழேந்திர வர்மன், அவளின் இரு தோள்களையும் இறுக்கப் பற்றியவனாய்,

"சிம்ம அரியாசனத்தில் அமர்ந்திருந்த சீராளனைக் கொன்றுவிடும் ஒரே நோக்கில், பதினேழு ஆண்டுகள் வன விலங்குகளும், துஷ்ட மனிதர்களும் சுற்றித் திரிந்த கானகத்திற்குள் தனித்து வாழ்ந்து வந்த என் அன்னையா அச்சத்தைப் பற்றியும், பகைவனின் தேசத்திற்குச் செல்வதினால் ஏற்படக் கூடிய இன்னல்களையும் பற்றிப் பேசுவது?" என்றான் சாரீரத்தில் குறும்பு விரவ, கண்களிலும் விஷமம் நிறைந்து வழிய.

"மகிழா! பெற்றோர்களாகிய எங்களுக்கு வரும் ஆபத்துக்களை விட எங்களின் பிள்ளைகளுக்கு வரும் அபாயமே எங்களை மிகுந்த அச்சத்திற்குள் ஆழ்த்தும் என்பதை எத்தனையோ முறை உனக்கு நான் எடுத்துக் கூறியிருக்கின்றேன். அதற்குள்ளாகவே மறந்துவிட்டாயா, என்ன?"

"மறக்கவில்லை அம்மா.. ஆனால் நீங்கள் பேசிக் கொண்டிருப்பது தங்கேதி தேசத்தின் பட்டத்து இளவரசனிடம், வருங்காலத்துப் பேரரசனிடம் என்பதை நீங்கள் தான் மறந்துவிட்டீர்கள் போல் தெரிகின்றது.."

"இல்லை மறக்கவில்லை, ஆனால் எதற்கும் ஒரு நேரமும் உண்டு காலம் உண்டு.. அதிமுக்கியமாக வயதும் உண்டு மகிழா.."

"களைகள் முளைக்கும் பொழுதே அதனை வெட்டி எறிந்துவிட வேண்டும் அம்மா.. வளரவிட்டுப் பின் அறுப்பது அறிவீலிகளின் செயல்.. கஜவீர பாண்டியனின் மைந்தன் கேசவப் பாண்டியன் ஒரு களைச்செடி போன்றவன்.. அவனைக் களையெடுக்க நான் நேரம் காலம் பார்க்கக் கூடாது.."

அன்னைக்கும் மைந்தனிற்கும் இடையில் நடந்தேறிக் கொண்டிருக்கும் விவாதங்களை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த உதயேந்திரன் மனைவியின் அருகில் வந்தவன், மகிழேந்திரனின் கரத்தை அவள் மீதிருந்து எடுத்தவனாக அவளைத் தன் தோள் வளைவிற்குள் கொணர்ந்தவாறே,

"எனக்கு ஒன்று மட்டும் கூறு மகிழா.. நீ பாண்டிய நாட்டிற்குச் சென்றது எதற்காக? பகைவனை வேவு பார்ப்பதற்காகவா அல்லது நாங்கள் அறியாத காரணம் வேறு எதுவும் உண்டா?" என்றான், புதல்வனின் இதயத்தை ஆய்ந்து ஆராய்ந்துவிடும் கூர்மையைக் கண்களில் படரவிட்டவனாக.

"சென்றதன் நோக்கம் வேறு அப்பா.. ஆனால் மீண்டும் செல்லப் போவதன் நோக்கம் வேறு.."

உதடுகளை விரித்து அழகிய புன்முறுவலுடன் பேசும் தன் ஆறடி இரண்டங்குல உயர மைந்தனை சடாரென்று அன்னாந்துப் பார்த்த அன்னையின் கன்னத்தை மிருதுவாக வருடிய மகிழேந்திர வர்மன், கண் சிமிட்டி புன்னகை முகத்துடன் அறையை விட்டு வெளியேற, அவன் சென்ற திசையையே பார்த்திருந்த மகிழ்வதனி இப்பொழுது அதிர்ச்சியுடன் நோக்கியது தன் கணவனை.

காரணம் மைந்தனின் பதிலில் கோபம் கொள்ளாது வாய்விட்டு சிரித்த கணவனின் சிரிப்பில் அரண்டுப் போயிருந்தாள் தங்கேதி தேசத்தின் மகாராணி.

"என்ன சிரிப்பு? அந்தக் கேசவ பாண்டியனின் கண்களில் படாது இவன் உயிர் தப்பி வந்ததற்கே நான் கூறிக் கொண்டிருக்கும் பிரார்த்தனைகள் இன்னமும் நிறைவடையவில்லை.. இதில், இவன் மீண்டும் பாண்டிய தேசத்திற்குச் செல்வேன் என்கிறானே.. அதை நினைத்து இப்பொழுதே என் மனம் பதறுகின்றது... என் அச்சத்தைப் பற்றிச் சிறிதும் அக்கறை கொள்ளாது, என்ன சிரிப்பு இது? சரி, அது இருக்கட்டும், இப்பொழுது பாண்டிய நாட்டிற்குச் சென்றது ஒரு காரணத்திற்காக என்றும், மீண்டும் ஒரு முறை அவன் செல்லப் போவதன் நோக்கம் வேறு என்றும் கூறுகின்றானே, என்ன காரணமாக இருக்கும்?"

திகைப்பும் குழப்பமுமாய்க் கூறியவள் கணவனின் முகத்தையே ஏறெடுத்துப் பார்த்திருக்க, அவளின் முகம் நோக்கி குனிந்த உதயேந்திரன் மனையாளின் மலர் அதரங்களை ஒரு விரலால் வருடியவாறே,

"நந்த இராஜ்யத்தின் சோலைக்குள் அந்த நள்ளிரவில் உன்னைப் பார்த்த எனக்கு மீண்டும் மீண்டும் உன்னைச் சந்திக்க வேண்டும் என்று தோன்றியது ஏன்? எச்சூழ்நிலையிலும் எந்தக் காரணத்திற்காகவும் உன்னை எவருக்கும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்று எனக்கு நானே சத்தியம் செய்து கொண்டேனே, அது ஏன்? எத்தகைய இன்னல்களும் இடையூறுகளும் வந்தாலும் உன்னைச் சந்திக்க மீண்டும் மீண்டும் ஏன் நான் பெரு முயற்சிகள் செய்தேன்?" என்று வினாக்களை அடுக்கினான் தங்கேதியின் வேந்தன், விழிகளிலும் குறும்பு பொங்க..

"ம்ம்ம்.. அதற்குக் காரணம் நீங்கள் என் மீது கொண்ட காதல்.."

"அதுவே தான், உன் மைந்தனையும் மீண்டும் பாண்டிய தேசத்தை நோக்கி பயணம் செய்யத் தூண்டியிருக்கிறது..."

கணவனின் பதிலில் அதிர்ந்து அரண்டுப் போனாள் மகிழ்வதனி.

"நம் மைந்தனின் மனதை கவர்ந்தவள் எதிரியின் தேசத்திலா?"

"ஆம்! எதிரியின் தேசத்தில் மட்டுமல்ல, எதிரியின் அரண்மனையிலேயே.. எதிரியின் உறவினளே.."

"என்னது?"

"ஆம்! உன் மைந்தனின் இதயத்தைப் பறித்துக் கொண்டிருப்பவள் கஜவீர பாண்டியனின் அருமை புதல்வி.. கேசவ பாண்டியனின் தங்கை.. பாண்டிய இளவரசி.. மதுரயாழினி.."

**************************

பூ மலர்ந்தால் வண்டுகளுக்குச் சொல்லிவிட வேண்டுமா என்ன?

நெடுந்தூரம் பறக்க வேண்டும் என்றாலும், பல விபரீதங்களைச் சந்திக்க வேண்டும் என்றாலும் தனக்கென்று மலர்ந்திருக்கும் பேரழகிலும் பேரழகு நறுமண மலரை நுகர வண்டு பறக்காதிருக்குமோ?

மகிழேந்திர வர்மன் vs மதுரயாழினி..
மகிழேந்திர வர்மன் vs கேசவ பாண்டியன்...

******************************

References
Jagdkommando Tri- Dagger : Built for the kill - A 7-inch weapon with a hollow handle. This thing is clearly designed to kill people.. It's one thing to stab something, but if you really want to go for the kill, you twist that blade around when it's in there.

 

Swapna

New member
மகிழேந்திரன் - combination of உதயவர்மன் + மகிழ் வதனி... Wow very eagerly waiting for this novel..
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top