JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

  • Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், jbtamil18@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Dear Guest, Please register in the forum to read stories of the writers and post your valuable comments. Please email: jbtamil18@gmail.com or whatsapp: +91-6384850278 any login related queries.

JLine Bookstore Online

மஞ்சம் 27

Subageetha

Well-known member
அதியின் காதுகளில் நிரஞ்சனின் கார் சப்தம் கேட்பதாக இல்லை. அவளுக்கும் அலுத்துபோனது. அவன் தன் அம்மாவை பார்க்க போயிருக்கிறான் என்று தெரியும். பின்னர் அவன் எப்பொழுது வருவான் என்று எதிர்பார்த்து இருப்பது எதற்காக?
தன்னையே நொந்து கொண்டவளாக, எப்படியோ கவனத்தை சிதறாமல் திரட்டி புத்தகத்தில் தன்னை அழுத்திக்கொண்டாள். இன்னும் ஒரு மாதமே இருக்கிறது பரிட்சைக்கு. முடிந்தவரை அதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறாள். இந்த முறை எப்படியாவது பாஸ் செய்துவிடவேண்டும் என்ற எண்ணமும் அவளுக்கு உண்டு. எப்பொழுதோ முடித்திருக்க வேண்டியது, இன்னும் இழுத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் தாமதிப்பதில் அர்த்தமில்லை என்று தனக்குத்தானே ஆறுதலும் சொல்லிக்கொண்டே 'தான் எடுத்து வைத்த குறிப்புகளை மீண்டும்
படித்துக்கொண்டாள். தூக்கம் கண்களை சுழற்ற, தலையணை மேல் தலையை சாய்த்தவள் எப்பொழுது தூங்கினாள் என்பது அவளுக்கு தெரியாது . மாலை சூடான காபியுடன் நிரஞ்சன் வந்து எழுப்பும் வரை அவ்வளவு ஆழ்ந்த உறக்கம் .
அதியுடன் எங்காவது வெளியே சென்று வரவேண்டும் என்று வேகமாக வீட்டிற்கு வந்தவனுக்கோ சிறிது ஏமாற்றம்தான். தன்னைப் பற்றி அவள் கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லையா... தான் மட்டும் தான் அவளை மனம் முழுவதும் நிரப்பிக்கொண்டு... ப்ச் அவனுக்கு சிறிது சலித்துப் போய்விட்டது.தனக்கு இப்போது என்ன வேண்டும் என்றும் அவனுக்கு தெளிவில்லை,அவளுக்குள் தன் மீதான காதல் என்ற எண்ணத்தை எப்படி உண்டாக்குவது என்றும் அவனுக்கு புரியவில்லை. அவனது குழப்பம் அவன் முகத்தில் அப்பட்டமாய் தெரிய,வித்யாவும் விஸ்வமும் இங்கு நடக்கும் நாடகத்தை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அதிதி இவனுக்காக
அடிக்கு ஒருமுறை வாயிலை பார்த்ததைப் பற்றி இருவருமே அவனிடம் சொல்லவில்லை. ஏன், அதியிடம் கூட எதுவும் காண்பித்துக் கொள்ளவில்லை.நிரஞ்சன் அவன் அம்மாவிடம் என்ன பேசிவிட்டு வந்தான்'என்று தெரியாத நிலையில், இதை வேறு அவனிடம் சொல்ல வேண்டுமா... என்று இருவர் மனதிலும்.
தன் முன் நிரஞ்சனை கண்ட அதிக்கு அவன் நிற்பது கனவென்றே தோன்ற,மீண்டும் உறக்கத்தை தொடர தயாரானவளை, நிரஞ்சன் உலுக்கி எழுப்பி உட்கார வைத்தான். காஃபியின் மணம் நுரையீரலை நிரப்ப, நிரஞ்சனின் மணம் அவளில் குதூகலம் கொள்ள செய்தது. தூக்கம் கலைந்தும் கலையாமலுமான நிலையில்,'நீ இல்லாம ரொம்ப கஷ்டமா இருந்தது நீரு... எப்போ வருவேன்னு வெயிட் பண்ணேன்...நீ திரும்ப பெங்களூரு போய்ட்டா நா எப்படி சமாளிப்பேன் டா?' என்று வார்த்தைகளை விட, நிரஞ்சனுக்கு அவள் வார்த்தைகளே போதுமானதாக இருந்தது. அவளும் தன்னை தேடி இருக்கிறாள் என்பது நெஞ்சம் முழுவதும் தித்தித்தது. இந்த உணர்வைத்தான் அவளிடமிருந்து அவன் எதிர்பார்த்தான். ஆனால், இந்த வார்த்தைகள் காதல் சார்ந்ததல்ல, என்பதும் அவனுக்கு தெரியும். இப்போதைக்கு இதுவே போதும். அவனைப் பொருத்தமட்டில் அதிதி காதலியாக மனைவியாக கிடைத்தால் பெரும்பேறு. ஆனால், அவன் சந்தோஷமாக வாழ்வதற்கு, அவளது நட்பும் பிரியமான வார்த்தைகளும் போதும். இனி ஒருமுறை எந்த விதத்திலும் அவளை
இழப்பதற்கு நிரஞ்சன் தயாராக இல்லை.

' வெளியே போலாம் வர்றியா,அதி... என்று கேட்டவனை உற்சாக மீதூற பார்த்தவள், ஜஸ்ட் பைவ் மினிட்ஸ் நிரஞ்சன்... கிளம்பிடுவேன் என்ற வேகவேகமாய் தன்னை தயார் படுத்திக் கொண்டாள். இருவரும் மாலை நேரத்தை எலியட்ஸ் பீச்சில் கழிக்க திட்டமிட்டார்கள். விஸ்வம், இருவரும் கிளம்புவதை பார்த்தவருக்கு இதை எப்படியும் தடுத்தே தீர வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அவரைப் பொறுத்தவரை இந்த உறவு சரியானதல்ல. ஆண்-பெண் நட்பை இந்த உலகம் அவ்வளவு எளிதாக ஏற்பதில்லை. அதுவும் திருமணமாகி விவாகரத்தும் ஆன தன் பெண், இவ்வாறு
நிரஞ்சனுடன் வெளியே தனியே செல்வதை பார்ப்பவர்கள் நிச்சயம் இந்த உறவுக்கு பல்வேறு வர்ணங்கள் பூசி , இருவரது வாழ்க்கையும் கேள்விக்குறியாக்கி விடுவது தடுக்க முடியாதது என்றாகி விடும். அதற்குமுன் எதையாவது செய்து இந்த விஷயத்தை தடுத்தாக வேண்டும் என்று வெகு தீவிரமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டார். மகள் பரீட்சை முடியும் வரை வாயைத் திறப்பது அவ்வளவு சரியாக வராது என்ற எண்ணத்தில்தான் அவர் அமைதி காத்துக்கொண்டு இருப்பது. நூறாவது முறையாக வித்யாவிடம் நிரஞ்சனை அழைத்திருக்க வேண்டாமோ என்று கேட்டு வைத்தார். வித்யாவுக்கும் இது போன்ற எண்ணங்கள் வரத்தான் செய்கிறது. நிரஞ்சனுடனான உறவு காரணமாகத்தான் அதி தன் திருமண உறவை முறித்துக் கொண்டு விட்டு வந்து விட்டாள் என்ற பேச்சு பரவும் என்று வித்யா வெகுவாக பயந்தாள்.
நிரஞ்சனோ நேரடியாகவே வித்யாவிடம்,' நான் எந்த காரணத்தை கொண்டும் அதியை விடுவதாக இல்லை 'என்று ஏற்கனவே தெரிவித்தாயிற்று. அன்று நடந்த உரையாடல் பற்றி இன்னமும் வித்யா விஸ்வமிடம் கூறவில்லை. உடல் நிலை சரியாக இல்லாத நிலையில் மேலும் இது பற்றி யோசித்து அவர் தன் உடல்நிலையை மேலும் கெடுத்துக் கொள்வாரோ' என்ற பயம் வேறு. கணவனுக்காக பார்ப்பதா பெண்ணுக்காக பார்ப்பதா... இல்லை இத்தனை வருடங்களாக தன் பெண்ணை மனதிற்குள் ஆராதிக்கும் நிரஞ்சனுக்காக யோசிப்பதா... வித்யாவின் நிலைமை பரிதாபம்!

நிரஞ்சன் அதிதி இருவரும் கடற்கரைக் காற்றை உள்ளுக்குள் லயித்தார்கள். அதில் ஒரு சுதந்திர தன்மையை உணர்ந்தாள் அதி . அவள் ஆசைப்பட்ட எல்லாமே அவளை நெருங்கி வருவது போல் அவளுக்குள் ஒரு பிரமை. அவளது இளகிய தன்மையை புரிந்து கொண்டான் நிரஞ்சன். இதுதான் சமயமென்று,' அதி, நான் பெங்களூருக்கு திரும்ப போயிட்டா என்ன பண்ணுவ' என்று விட்டு சிறிது நேரத்திற்கு மௌனமானான். அதியின் மனதிலோ 'இன்று முழுவதும் இதே கேள்வியைத்தான் நான் எனக்குள் கேட்டுக் கொண்டிருந்தேன் என்று நினைத்துக்கொண்டாள்.'

'தெரியல நிரஞ்சன் எக்ஸாம் முடிஞ்ச அப்புறம் அப்பா தன்னோட ஆபிசுக்கு என்னையும் வர சொல்றாரு. சோ போகலாம்னு யோசிக்கிறேன் ' என்ற பதில் சொன்னவளை ஏமாற்றத்துடன் ஒரு பார்வை பார்த்தவன் அவளிடம் எதுவும் சொன்னான் இல்லை. அவளாகத்தான் தான் என்னை தேடி வர வேண்டும், அப்போது தான் அடுத்த கட்டம் நோக்கி செல்ல முடியும் என்று ஒரு வீம்புடன் தீர்மானித்தவன்... ம்ம்ம், 'தென் ஆல் தி பெஸ்ட்' அதி என்று வாழ்த்தி விட்டு அங்கிருந்து சட்டென எழுந்து நின்று தன் பேண்டில் ஒட்டியிருந்த மண்ணை தட்டி விட்டுக்கொண்டான். இவ்வளவு சீக்கிரமாவா கிளம்பணும்? என்ற பெண்ணிடம் ஹ்ம்ம்... நாளைக்கி ஆபீஸ் போக கொஞ்சம் ரெடி பண்ணனும் அதி... ஸோ இப்போ வா போலாம் என்றவனின் பதில் பட்டுக் கத்திரித்தது போல் இருக்க அந்திசாயும் அரை வெளிச்சத்தில் அவன் குரலில் இருந்த
பேதத்தை முகத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை அவளால்.
'சரி கிளம்பலாம' என்றவுடன் குரல் உள்ளிருந்து வெளியே வரவில்லை.
நிரஞ்சனுக்கும் எல்லாம் புரிகிறது. ஆனால் அவள் வாழ்வில் அவனது முக்கியத்துவத்தை அவள் தான் தெளிவாக முடிவு செய்தாக வேண்டும் என்ற எண்ணத்துடனேயே காரை கிளப்பினான்.

அதிதியின் பரீட்சை நாட்கள் வரை சென்னையில் தங்கி இருந்தவன், அவளது இறுதி பரீட்சை முடிந்த அன்று இரவே பெங்களூரு செல்ல ஆயத்தம் ஆகி விட்டான். அதிதியின் கண்கள் கண்ணீர் பொழிய, மனதின் உள்ளுக்குள் வலித்தாலும், வெளியே அவளைக் கேலி செய்தபடியே கிளம்பிவிட்டான். அதிதியும், தேர்வுகள் முடிந்த பிறகு வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் தன் அப்பாவுடன் அலுவலகம் செல்ல தொடங்கினாள். முதல் நாள் அன்று காலையில் இருந்தே நிரஞ்சன் போன் செய்து வாழ்த்துவான் என்று எதிர்பார்த்திருந்தவளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அதேபோல்,தினமும் காலையில் எழும் போதும், இரவு தூங்கப் போகும் பொழுதும் ஏதோ ஒன்று குறைவது போன்ற பாரம். நிரஞ்சன் அவனாக அதிதிக்கு போன் செய்து பேசவில்லை. முதலில் வேலை மும்முரமாக இருக்கும் என்று நினைத்தவள், அவன் வேண்டுமென்றே தன்னை தவிர்க்கிறான் என்று புரிந்து போக, அவளால் தன்னை சமன் செய்து கொள்ள முடியவில்லை. அந்த வார இறுதி மட்டும் இன்றி அதற்கடுத்த வாரங்களும் ஏமாற்றங்களுடனே அவளுக்கு கழிந்தது.

மனதை தேற்றியதாக தோன்றவேண்டும் என சிரித்த முகமாக வலம் வந்தாள். அவள் மீளத் தொடங்கியதாக அவள் பெற்றோர் கொஞ்சம் நிம்மதி அடைந்தார்கள். ஆனால், ஏன் அவன் என்னை மீண்டும் தவிர்க்கறான்? தவிக்க வைக்கிறான் எனும் எண்ணம் அவளை மன அழுத்தம் கொள்ளச் செய்தது.

நிரஞ்சனோ, அதி கனடாவில் எடுத்த புகைப்படம் பார்த்து அவளுடன் பேசிக்கொண்டிருந்தான். அவன் பொழுது புலர்வதும், அவனின் நித்திரை மடியும் அவனது மொபைல் போனில் உள்ள அந்த புகைப்படங்கள் தாம்.

நிரஞ்சன் மீண்டும் அதியுடன் தொடர்பு கொள்ளவில்லை என்பதில் அதிக்கு தவிப்பு எனில் அவள் பெற்றோற்கு நிம்மதி!

சுமனாவோ நிரஞ்சனிடம் மீண்டும் திருமணம் பற்றி பேசுமாறு அவள் அப்பாவிடம் நிர்பந்திக்க, அவரோ மகளின் இந்த மூடத்தனம் எதில் முடியும் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார். அவர் மனதில் ஆர்யான் அவனுடன் தன் மகளின் திருமண உறவு பற்றிய யோசனை... மகள் ஒப்புதல் தருவது நடக்காத ஒன்று. அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்று பெற்றவராக யோசிக்கிறார். மகளுக்கு புரியாதது அப்பாவுக்கு புரிந்துவிட்டது. மகளுக்கு எப்படி தெளிவு படுத்துவது என்ற குழப்பம் அவருக்குள்.
நிரஞ்சனின் மறுப்பு புரியாதவள் இல்லை சுமனா. ஆனால், புரிந்து கொண்டதை ஒப்புக் கொள்ள அவளுக்கு மனமில்லை. தூங்குவது போல் பாசாங்கு செய்பவர்களை எப்படி எழுப்ப முடியும்?

சமீபகாலமாக, சுமனா நிரஞ்சனது அனுமதியின்றி, அவள் பிளாட்டுக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டாள். இரண்டொரு முறை சொல்லி பார்த்தவன், நேரே அவள் அப்பாவிடமே இதுபற்றி சொல்லிவிட்டான். திருமணமாகாத பெண் இவ்வாறெல்லாம் வருவது வீண் குழப்பங்களை ஏற்படுத்தக் கூடும் என்றும் அதற்கு தான் எந்த பொறுப்பும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் வெளிப்படையாக அவன் கூறியதைக் கேட்ட சுமனா வின் அப்பாவிற்கு அவமானம் பிடுங்கித் தின்றது. நேரடியாக அவளைக் கண்டித்தும் பயனில்லை. அந்த அளவிற்கு அவள் நிரஞ்சன் மீது பித்தாகி போயிருந்தாள். அவன் மறுக்க மறுக்க காந்தம் போல் அவனை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கும் சுமனா விற்கு, அவள் விஷயத்தில் அவன் இரும்பு என்று புரியவில்லை. இப்படியும் அப்படியுமாக அலுவலகம் முழுவதும் இருவருக்கும் இடையே ஏதோ ஒன்று என்று பரவ ஆரம்பித்தது. இதில் பெண்ணவளுக்கு பெருமைதான். யாருக்கும் உருகாத ருஷ்ய ஸ்ருங்கர் என்னிடம் மயக்கம் கொண்டார் பார் என்பது போன்ற நிலையில் மிதந்தாள். நிரஞ்சன் இவை பற்றி எல்லாம் கவலை கொள்ள வில்லை. சுமனாவுக்கே கவலை இல்லை, எனக்கென்ன என்று வழக்கம் போல் தனது வேலைகளை செய்து கொண்டிருந்தான்.

இதற்கிடையில் அதிதியின் பரீட்சை முடிவுகள் வந்துவிட்டது. அவள் எதிர்பார்த்த அளவில் மதிப்பெண்கள் வரவில்லை தான் ஆனாலும் எல்லா தாள்களிலும் பாஸ் ஆகி விட்டாள். படிப்பில் முன்புபோல் தங்கள் மகளால் முடியுமா என்று யோசித்துக்கொண்டிருந்த விஸ்வம்- வித்யா தம்பதியினருக்கு இது பெருத்த மகிழ்ச்சியே! இந்த சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்து கொள்வதற்காக அதிதி நிரஞ்சனுக்கு அழைத்தாள். அவள் அழைத்த நேரம் நிரஞ்சன் தனது கிளையன்ட் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த சமயம், அவ்வளவு போன் காலை எடுக்கவில்லை. அதிதிக்கு சந்தோசம் முழுவதும் வடிந்த மனோபாவம். வித்யா தனது பங்கிற்கு நிரஞ்சனை அழைத்து விஷயத்தை சொல்லி விட, மிஸ்டுகாலில் அதிதியின் நம்பரை பார்த்தவனுக்கு, அதி எப்படி யோசித்து கொண்டிருப்பாள் என்பது புரிய, ஆன்லைனில் அவளுக்காக சுரிதார்செட் ஆர்டர் செய்து அவள் முகவரிக்கு அனுப்பி வைத்துவிட்டான். இரண்டு நாட்களுக்கு அவளிடம் அவனும் அழைத்துப் பேசவில்லை. மூன்றாவது நாள் காலை நிரஞ்சன் அனுப்பிய ஆடை வந்து சேர, அப்போதும் அதிதிக்கு கோபம் தான் வந்தது. இப்போ இந்த கிப்ட் எல்லாம் யார் கேட்டா... போன் பண்ணேன் தெரியுதுல்ல... கூப்பிட்டு விஷேஸ் சொல்ல முடியலையா சாருக்கு என்று கோபத்துடன் அவனை அழைக்க, அவனோ கூலாக அவளுக்கு வாழ்த்துக்கள் சொன்னான். அவன் குரலைக் கேட்ட நேரம், தனது கோபங்கள் எல்லாம் மறந்து அழ ஆரம்பித்து விட்டாள் அதிதி. நிரஞ்சனது பாராமுகம் அவள் இதயத்தில் கத்தியாக ஊடுருவி விட்டது. முதன்முறையாக, அவனுக்கான தனது உணர்வுகளை தனக்கே தெரியாமல்
வெளிப்படுத்தும் பெண்ணை புரிந்துகொண்டான் நிரஞ்சன்.தன்மன நிலைமையை புரிந்து கொள்ள வேண்டியவள் இனி என்ன செய்யப் போகிறாள்?
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top