JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

  • Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், jbtamil18@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Dear Guest, Please register in the forum to read stories of the writers and post your valuable comments. Please email: jbtamil18@gmail.com or whatsapp: +91-6384850278 any login related queries.

JLine Bookstore Online

மலரே என்னிடம் மயங்கிவிடு...! 10

Roja

Member

அத்தியாயம் 10​

அன்று கோவிலில் காட்டிய இணக்கம் மட்டுமல்லாது அடுத்தடுத்த நாட்களில் உறவினர்கள் வீட்டு விருந்துகளுக்கும் கூட மறுப்புச் சொல்லாமலே மலர்விழியோடு சென்று வந்தவன், தன் அப்பத்தாவுக்காகவே இந்த இணக்கம் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாலும், மலர்விழியின் ஒவ்வொரு நாளைய பரிணாமங்களும், அவளுடைய பேச்சும், சிரிப்பும், அவளின் சிறிது சிறிதான சிறு பிள்ளை செய்கைகளும் யுவாவை கட்டம் கட்டித் தான் அடித்தது.​

அன்றோடு யுவா மலரின் திருமணம் முடிந்து முப்பது நாட்கள் கடந்த நிலையில் கிராமங்களின் வழக்கப் படி பச்சைபுல் மிதிக்கக் கிளம்பியிருந்தனர் யுவாவும் மலரும்.​

புதுமணத் தம்பதியர்களின் மணவாழ்க்கை பச்சை பசேலென்று செழிப்பாக அமைய வேண்டும் என்பதாலோ என்னவோ திருமணம் முடிந்தப் பின்னர் மணமக்கள் இருவரும் தோட்டம் துறவு வயல்வெளி என்று இப்படி பசுமை நிறைந்த இடத்திற்குச் சென்று அந்த இயற்கை அன்னையை தங்கள் வெற்று பாதங்களில் தரிசித்து வரவேண்டும் என்ற ஒரு வழக்கத்தை இன்றும் ஒரு சில கிராமங்களில் முக்கிய ஐதீகமாகவே கடைபிடித்து வர அப்பத்தாவின் ஆசைப்படி புது மணமக்களோடு சேர்த்து மொத்தக் குடும்பமும் பெரியதோர் வேனில் யுவாவின் தோட்டத்தை நோக்கிப் பயணமானது.​

யுவா வீட்டுத்தோட்டம் சற்றே ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருப்பதால் அனைவரும் ஒரே வண்டியில் பயணம் செய்யலாம் என்று திட்டமிட்டிருக்க... யுவாவின் குடும்பத்தினர் மட்டுமல்லாது இன்னும் ஒரு சில நெருங்கிய உறவினர்களையும் அழைத்திருந்ததால் மாமன், மச்சான், அத்தை, சித்தப்பா, சித்தி என்ற உறவினர்களும் அவர்கள் குழந்தைகளும் என்று அந்த வேனே நிரம்பி வழிந்தது.​

முதலில் ஏறிய நண்டு சிண்டுகளெல்லாம் ஜன்னாலோர இருக்கைகளைப் பிடித்துக் கொள்ள, புதுப் பெண் அலங்காரமெல்லாம் முடித்து சற்றே தாமதமாக வண்டியில் ஏறிய மலரோ ஜன்னல் சீட்டை தேடி கிடைக்காது போனதில் அங்கிருந்த ஒரு சிறுவனிடம் சென்று....​

"டேய் டேய் நா இங்க ஒக்காந்துக்கறேண்டா நீ போய் உங்கம்மா பக்கத்துல ஒக்காருடா" என்று தன்னுடைய ஒன்று விட்ட சித்தப்பா பையனிடம் சொல்லிக் கொண்டிருக்க...​

அவனோ, "போக்கா எனக்கு ஜன்னல் சீட்டுத்தே புடிக்கும் நீ வேணா போய் எங்கம்மா பக்கத்துல உக்காரு" என்றவனிடம்​

"போடா" என்று திட்டிக் கொண்ட மலரோ இன்னொரு ஜன்னல் சீட்டில் அமர்ந்திருந்த தன் பெரியப்பா பேரனிடம் போய்...​

"விஸ்ணு விஸ்ணு அத்தாச்சிக்கு இந்த ஜன்னல் சீட்ட குட்றா நா வேணா உன்ன என்ற மடில உக்கார வச்சுக்கிறேன்" என்று கெஞ்சியவளிடம்...​

அந்த விஸ்ணுவோ "நானே சாக்குலேட்டு வாங்க காசு கேட்டதுக்கு, எங்கம்மா அடிச்சுப் போடுச்சுன்னு கடுப்புல இருக்கேன் நீ வேற என்னய ட்ரன்ஷன் பண்ணாம போ அத்தாச்சி" என்றவனைப் பார்த்து அழப் போவது போல் நின்றிருந்த மலரிடம் அவள் தமக்கை காயத்ரியோ...​

"ஏய் மலரு சின்ன பிள்ளகட்ட உறண்ட இழுக்காம பேசாமப் போய் ஒரு இடத்தில் உட்காரமாட்டியா.?" என்று அதட்டியவுடன்...​

"சரி" என்று முகம் சுணங்கிய மலர்விழி அந்த விஸ்ணுவின் அருகிலேயே அமர்ந்து கொள்ள... அடுத்தடுத்து ஆண்களும் வந்து வண்டியில் ஏறிக்கொள்ள அப்பத்தாவின் சொல்படி மலரின் அருகில் வந்து அமர்ந்த யுவாவோ அவள் மலர் முகம் வாடியிருப்பதைக் கண்டு துணுக்கமுற்றவன், அவளைப் பார்க்கக் கூடாது அவளிடம் அதிகம் பேசக்கூடாது என்று தனக்குள் விதித்திருந்த கட்டளைகளையும் மீறி லேசாக அவள் புறம் சரிந்தவன்...​

"ஏன் மலரு என்னாச்சு ஏன்டி ஒரு மாறியா இருக்க.?" என்று கேட்டவனுக்குப் பதிலாக...​

"எனக்கு ஜன்னல் சீட்தே வேணும் அத்தான் இந்த விஸ்ணுப் பையன் எழ மாற்றான்" என்று சிணுங்களாகக் கூறியவளின் கூற்றில் யுவா மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாலும் மலரின் அந்தக் குரலையும் அவளின் சுணங்கிய வதனமும் கண்டு மனம் தாளாமல், அப்படியே அவளை அள்ளி அணைத்துக் கொள்ள பரபரத்த கரங்களையும் அடக்கிக் கொண்டு... இப்பொழுது அந்த விஸ்ணுவிடம் அவனே அந்த ஜன்னல் சீட்டை வேண்டினான் யுவராஜ் தன் செல்ல மனையாளுக்காக.​

தன் அம்மா மிட்டாய் வாங்க பணம் தரவில்லை என்ற கோபத்தில் இருந்த விஸ்ணுவோ யுவாவுக்கு நூறு ரூபாய்க்கு வேட்டு வைத்து ஜன்னல் சீட்டை விட்டுக்கொடுத்து விட்டு தன் அன்னையிடம் ஓடிச் செல்ல, முகம் கொள்ளாப் புன்னகையோடு கணவனின் கையைப் பற்றி "தாங்க்ஸ் அத்தான்" எனக் கூறிக் கொண்டே ஜன்னல் சீட்டில் தள்ளி அமர்ந்த மலர்விழியோ அதன்பின்னர் யுவாவின் பக்கம் திரும்பிக் கூடப் பாராது அமர்ந்திருக்க...​

வெளியே வேடிக்கை பார்த்த வண்ணம், முகம் கொள்ளா புன்னகையோடும் காற்றில் படபடத்த கூந்தலையும், புடவையையும் அவ்வப்போது சரி செய்தவாறும், தங்கப்பதுமையென தன்னருகில் அமர்ந்திருந்த மலர்விழியை விட்டு யுவா தான் தன் பார்வையை விளக்கமுடியாது தவித்திருந்தான்.​

ஒருவழியாக பெரியவர்களின் ஊர்க் கதைகளோடும் சிறியவர்களின் ஆரவாரத்தோடும் யுவாவின் தோட்டத்தில் வந்து இறங்கியவர்கள், அங்கு பச்சைப் பட்டு உடுத்தியதைப்போல் செழித்து வளர்ந்திருந்த அருகம்புற்களில் லேசாக புது மணமக்களின் கால் தடம் பதிக்க வைத்தவர்கள்... தோட்டத்து ஓடையிலும் அவர்கள் கால்களை நனைக்க வைத்து, இயற்கை அன்னையின் ஆசீர்வாதத்தை இளம் தம்பதியினருக்குப் பெற்றுக் கொடுத்து, அவர்கள் வந்த காரணத்தை திருப்தியாக முடித்துவிட்டு உணவு தயாரிக்கும் வேலைக்குச் சென்றுவிட...​

புல் மிதிக்கும் போதும் தண்ணியில் கால் நனைக்கும் போதும், தன்னையுமறியாமல் அனிச்சையாகவே மலரின் மலர் கரத்தைப் பற்றி தன் கரங்களில் கோர்த்துக் கொண்ட யுவா...​

"பாத்து விழி" என்று சொல்லியவாறே கெண்டைக்கால் ஆழமே இருந்த நீரில் இறங்கியவன்...​

"அய்யோ தண்ணி ரொம்ப ஜில்லுன்னு இருக்குத்தான்" என்று ஆர்ப்பரித்து ஓடை நீரை கைகளாலும் தட்டித் தட்டி சிறிதளவே அவன் மேலும் தெளித்து விளையாடத் தொடங்கிய மலர்விழியின் அழகில் கிறங்கித்தான் போனான்.​

கிராமத்து வழமை எல்லாம் சிறப்பாக முடிந்து சிறுவர்கள் எல்லாம் விளையாடிக் கொண்டிருக்க, பெரியவர்களில் ஆண்கள் எல்லாம் கணக்கில்லாது பரந்திருந்த மிகப்பெரிய தோட்டத்தை வலம் வர, பெண்கள் எல்லாம் கொண்டு வந்த அரிசி பருப்பை வைத்து மதிய உணவுத் தயாரிப்பில் ஈடுபட...​

யுவாவோடு நின்றிருந்த கதிரவனை ரசித்துக் கொண்டே தான் குடித்துக் கொண்டிருந்த இளநீரை நீட்டி செய்கையாலே "வேணுமா.?" என்று கேட்டு பதிலுக்கு அவன் முறைப்பையும் பெற்றுக்கொண்டிருந்த ஜானுவின் அருகில் வந்த மலரோ...​

"ஏய் ஏய் ஜானு வாடி ரோஜாத் தோட்டத்துக்கு போலாம்" என்று அழைக்க...​

'இவவேற ஒரு மனுசிய நிம்மதியா சைட் அடிக்க விடுறாளா.?' என்பது போல் தன் தோழியைப் பார்த்தவள், "நா வரலடி பூந்தோட்டம் என்ன டில்லிலய இருக்கு நீ மட்டும் போடி" என்று கடுப்படித்தவளைப் பார்த்து...​

"ஜானு ஜானு எனக்குதே அந்த நாய பாத்தா பயம்னு உனக்குத் தெரியும்லடி, என் சீல கலருக்கு மேச்சா அங்க ஒரு ரோசாப்பூ இருக்குடி ப்ளீஸ் தொணக்கி வாடி அத பரிச்சிட்டு வெரசா வந்துரலாம்" என்று சற்று தொலைவில் உறுமியவாறு உலவிக் கொண்டிருந்த மூன்றடி உயர காவல் நாயைப் பார்த்துக் கொண்டே மூச்சு விடாமல் நச்சரித்தவளைக் கண்டு...​

"ப்ச்" என்று சலித்துக் கொண்ட ஜானுவோ, "உனக்கு இப்போ தொணக்கி ஒரு ஆள் வேணும் அவ்ளோதான, என்ற பின்னாடி வா" எனக் கூறிவிட்டு அங்கு யுவாவும் கதிரும் நின்றிருந்த இடத்தை நோக்கி விரைந்தாள்.​

யுவாவிடம் சென்ற ஜானவியோ "சின்னண்ணே, அப்பத்தா உங்கள மலர் கூட தொணக்கி போகச் சொல்லிச்சு" என்று தான் தப்பிப்பதற்காக தன் அண்ணனை மலரோடு கோர்த்துவிட்வளை...​

"இவ என்ன கூசாம இப்டிப் புளுகுறா" என்பது போல் பார்த்துக் கொண்டிருந்த மலரை நெருங்கிய யுவாவோ...​

"எங்கடி போணும்.?" என்று சற்று உரக்கவே வினவ... மலரோ "அங்க" என்று ரோஜா தோட்டத்தை நோக்கிக் கை நீட்ட....​

அதைப் பார்த்து "இவளுக்கும் இந்த அப்பத்தாக்கும் வேற வேலயேயில்ல" என்று பெயருக்கு சலித்துக் கொண்ட யுவாவும்... "சரி வா" என்று முன்னே நடக்க, கணவன் நடைக்கு ஈடு கொடுக்க முடியாத மலரோ அவன் பின்னோடே ஓடித்தான் சென்றாள்.​

கதிரோடு பேசிக்கொண்டிருந்த யுவாவை அவன் மனைவியோடு கோர்த்து அனுப்பிவிட்ட ஜானுவோ, அங்கு தனியாக நின்றிருந்த கதிரவனை நெருங்கி...​

"கதிரவா, என் பின்னாடி வா" என்றவளிடம் "மாட்டேன்" என்பது போல் தலையசைத்தவனை...​

"நா அங்க மாமரத்துக்கு பின்ன நிண்டு 10 வர எண்ணுவேன் அதுக்குள்ள நீ அங்க வரல, நேரா எங்கப்பா கிட்ட போயி நீ என்ன கைய புடிச்சு இழுத்தன்னு சொல்லுவேன்" என்று மிரட்டல் போல் கூறியவள் கூறியதைப் போலவே மாமரத்தின் பின்னே நின்று கொண்டு ஒன்று இரண்டு மூன்று என்று என்ன ஆரம்பிக்க...​

அவள் கூற்றிலும், செய்கையிலும் பதறிய கதிரோ, ஜானு "பத்து" என்று முடிப்பதற்குள், ஓடிவந்து அவள் வாயைத் தன் கரம் கொண்டு மூடியவன்....​

"அங்கன அத்தன பேர் இருக்காக கொஞ்சம் கூட பயமில்லாம இப்டிப் பண்றியே ஜானு" என்று கோபமாக தொடங்கி அவள் முகத்தைப் பார்த்து குழைவாகவே முடித்தவனிடம்...​

"என் புருஷன கூப்புட நான் ஏன் பயப்படனும்" என்றவளை சலிப்பாகத்தான் பார்த்தான் கதிர்.​

"என்கிட்ட இப்டி பேசாதன்னா கேக்க மாட்டியா ஜானு" என்று ஒரு வெற்றுக் குரலில் வினவிய கதிரிடம்....​

"உன்கிட்ட மட்டுந்தே கதிரவா என்னால இப்டி பேச முடியும்" என்று தலை சரித்துக் கூறியவளை​

ஒரு நிமிடம் விழுங்கி விடுவது போல் பார்த்தவன், தலையை உலுக்கிக் கொண்டு... "சரி எதுக்கு கூப்ட்ட ஜானு.?" என்று வினவ....​

அவளோ, "எனக்கு மாங்கா வேணும்" என்றாள்...​

அவனோ, "அதே சாப்புட்ற இடத்துல நிறைய இருக்குல்ல ஜானு" என்றவனுக்கு பதிலாக​

"எனக்கு மரத்திலிருந்து பிரஷ்ஷான மாங்காதே வேணும்" என்று சிறுபிள்ளை போல அடம்பிடித்தவளைப் பார்த்து, "இம்ச பண்றா" என்று முணுமுணுத்துக் கொண்டவனோ....​

"சரி பரிச்சுத் தர்றேன்" என்று மரத்தில் ஏறப் போனவனைத் தடுத்தவள்...​

"மாங்காய நாந்தே பறிப்பேன்" என்றவுடன்​

அவளை குழப்பமாக பார்த்தவனிடம் இரு கையையும் தூக்கி "என்னத் தூக்கு" என்பது போல் ஜாடை செய்தவளின் கூற்றில்...​

"முடியாது" என்று அலறியவனை இப்பொழுது, "அண்ணனிடம் கூறி விடுவேன்" என்று மிரட்டி தான் நினைத்ததைச் செய்ய வைத்த ஜானு,​

அவன் கைகளில் இருந்தபடி அந்த மாமரத்தில் தொங்கிய ஒரு அழகிய மங்காயை எக்கிப் பறித்துக் கொண்டிருக்க...​

அந்தக் காட்சியை பார்க்க முடியாது தலை தாழ்த்திக் கொண்டவன்...​

தன் உள்ளத்தைக் கொள்ளையிட்டுக் கொண்டிருப்பவள் இப்படி வழிய வந்து பழகும் பொழுது அவளைக் கண்டுகொள்ளாது இருக்க கதிரவனும் ஒன்றும் முனிவனல்லவே... அவள் பருவமெய்திய நாள் முதல் அவள் மேல் உயிரையே வைத்திருக்கும், உள்ளுக்குள் அவளை உருகி உருகி நேசிக்கும் அவளின் உயிர்க் காதலன் அல்லவோ.​

தன் பெண்மையின் மென்மையால் இன்னும் சிறிது நேரம் அந்தக் கன்னிப் பையனின் பிரம்மச்சரியத்தை சோதித்துப் பார்த்தவள், கையில் ஒரு மாங்காயை மட்டும் பற்றிக்கொண்டு அவனுடலில் சரிந்தவாறே மெல்ல கீழே இறங்க, இப்பொழுது முழுதாகத் தன்வசம் இழந்தவனோ அவள் இறங்கியும் கூட விட்டு விடாது, அவளைத் தன் கைவலைவுக்குள்ளேயே தான் நிறுத்தியிருந்தான் கதிர்.​

தன் மேல் முழுவதுமாக சாய்ந்து நின்றவளை விலக்கக் கூடத் தோன்றாது நின்றவன், அவள் கையில் இருந்த மாங்காயைப் பார்த்து, பின் அவளையும் பார்த்தவன்...​

"சாப்புடு ஜானு" எனக்கூற அவளோ அதை அவனுக்கு ஊட்ட...​

அவனோ "வேணாம் ஜானு" என்று மறுக்க...​

அவனைக் கடிப்பது போல் பார்த்துக் கொண்டே தன் கையிலிருந்த மாங்காயை காக்காய் கடி கடித்தவள் தன் கால்விரலால் எம்பி கதிரின் உயரம் தொட்டு அவனிதழில் தன் இதழைப் பொருத்த அடுத்த நொடி அவள் செவ்வாய் பட்டு மாம்பழமாய் தித்தித்த அந்த மாங்காய்த் துண்டை, தான் விழுங்கியிருந்தான் கதிரவன்.​

பெண்ணவளின் செயலில் கிறங்கி நின்ற ஆணவனின் மோன நிலையை தன் செயலுக்கு சாதகமாக்கியவள், மேலும் மேலும் அதே முறையில் அவனுக்கு மாங்காயை ஊட்ட, மாங்காயோடு சேர்த்து தன்னவளின் மாம்பழ இதழ்களையும் முதன் முறை ருசி பார்த்த கதிரவனோ சற்று நேரத்திலே ஜானுவின் செயலை தனதாக்கி இருக்க, இப்பொழுது அவன் இதழ்களுக்குப் போட்டியாக அவன் கரங்களும் கூட ஜானுவின் வெற்றிடையில் கவி எழுதத் தொடங்கியது.​

தன்னவளின் செவ்விதழ் சுவையிலும், அவளின் சிற்றிடையின் மென்மையிலும் தனை மறந்து சுகித்திருந்தவனை...​

"கதிர் எங்கப்பா.?" என்று தூரத்தில் கேட்ட சிதம்பரத்தின் குரலே நடப்புக்கு அழைத்து வந்ததில் சட்டென்று ஜானுவை விட்டு விலகியவனோ ஏதோ தவறு செய்தவன் போல் அவள் விழிகளை சந்திக்க முடியாது திணறிவன்... "என்ன மன்னிச்சுரு ஜானு" என்று மட்டும் கூறிவிட்டு நில்லாமல் விரைய...​

"டேய் கதிரவா, செய்றதெல்லாம் செஞ்சிட்டு கடசீல ஒண்ணுந் தெரியாத பாப்பா மாறி மன்னிப்பா கேக்குற.?" என்று ஓடும் அவனிடம் வெட்கச் சிரிப்போடு கேட்டுக்கொண்ட ஜானுவும் அங்கு சமைத்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தோடு போய் இணைந்து கொண்டாள்.​

அங்கு மலரோடு இணைந்து ரோஜாத் தோட்டத்திற்கு சென்ற யுவாவும், ரோஜாக்களுக்கு மத்தியில் இருந்த தன்னவளைப் பார்த்து நிஜமான ரோஜாமலர் எது என்று திணறியவாறே அவள் கேட்ட பல வண்ண மலர்களை அவனே தன் கரங்களால் பறித்துக் கொடுத்து, அவளை அழைத்து வர... வரும் வழியில் சிறு தொலைவிலே காவல் நாயைப் பார்த்த மலரோ பயத்தில் யுவாவை ஒட்டிக்கொண்டு அவன் கையை இறுக்கமாகப் பற்றிக் கொள்ள...​

என்ன ஏது என்று அறியாமலே தன் கரம் பற்றிய மலரை அனிச்சையாக தன் தோளோடு இருக்கிக் கொண்ட யுவாவோ பெரும் ஆழிப் பேரலைக்குள் தான் சிக்கிக் கொண்டான்.​

ரோஜாத் தோட்டத்தில் பல வண்ண ரோஜா மலர்களை பறித்துக் கொண்டு, அதில் ஒரு ரோஜாவை தன் தலையிலும் சொருகிக்கொண்ட மலரோ, அத்துணை நேரமும் காவல் நாய்க்கு பயந்து யுவாவின் கரத்தை பற்றியபடியே நடந்து வந்தவள், அங்கே பந்தி துவங்கி விட்டதைப் பார்த்தவுடன் யுவாவின் கரத்தை விட்டு விட்டு வேகமாக ஓடிச்சென்று...​

"கொஞ்சம் தள்ளி உட்காரு டீ" என்று ஜானுவை இடித்துத் தள்ளியவாறு வாழை இலையின் முன்னால் அமர்ந்து கொள்ள...​

இத்தனை நேரமும் அவளின் அருகில் ஒரு மோன நிலையில் நடந்துவந்த யுவாவோ...​

அவளின் சிறு பிள்ளை செயலைப் பார்த்து இருபுறமும் தலையாட்டி சிரித்துக் கொண்டவன்... அப்பொழுதும் கூட அந்தப் பிள்ளை மனம் கொண்ட பேதைப் பெண்ணிடம் அப்படி ஒரு நிபந்தனை வைத்தது தவறு என்பதை உணரவில்லையோ..???​

மனிதனின் கணக்கு ஒன்றென்றால் அந்த கடவுளின் கணக்கு ஓராயிரம் அல்லவா.​

"பந்திக்கு முந்து" என்ற பழமொழிக்கு இணங்க கூட்டாஞ்சோறையும் கோழி வறுவலையும் ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தவளின் அருகில் சென்ற யுவாவையும், மலரின் அருகில் அமர வைத்து உணவு பரிமாறிய உறவினர்கள், அவர்களை ஊட்டி விடச் சொல்லி கேலி பேசிச் சிரித்தவர்கள் அனைத்தும் முடிந்து வெயில் தாள வீட்டிற்குக் கிளம்பினர்...​

வரும்பொழுது அவன் புறம் திரும்பாமல் வேடிக்கை பார்த்த வண்ணமே வந்த மலர்விழி, இப்பொழுது முழுவதுமாக அவன் மேல் சாய்ந்து கொண்டு அவன் நெஞ்சில் கரம் வைத்தவாறு அவன் தோளில் தலைசாய்த்து உறங்கிக் கொண்டு வர...​

தன் காதல் மனைவியின் அருகாமையில் அவளின் எழில் அழகின் உரசல்களில் தன் ஆண் கர்வம் மொத்தமும் தகர்க்கப்பட்டு, தன் நிபந்தனையும் ஆட்டம் கண்டு விடுமோ, என்று அஞ்சிய வண்ணமே அமர்ந்திருந்தது அந்த ஆறடி அரிமா.​

மலர்விழியை மாமன் மகள் என்ற உறவோடு சிறுபிள்ளையிலிருந்தே பார்த்து வளர்ந்தவனானாலும் இன்று இப்பொழுது அவள் தன் மனைவி என்ற உரிமையோடு இத்துணை அருகில் அவளை பார்ப்பவனால், அவளுடைய ஒவ்வொரு செயல்களையும் அதில் வெளிப்படும் அவளின் சிறு பிள்ளை குணத்தையும், இன்னும் அவள் பருவத்தின் நளினத்தையும் என்று மொத்த மலர்விழியையுமே யுவாவால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.​

மாறாக தான் அவளிடம் விட்ட சவாலையும் மீறி, ரசிப்பதை ருசிக்கும் ஆவலும் அவன் நெஞ்சில் பேரலையாக எழும்ப...​

திருமண நாள் இரவிலும், மறுநாள் இரவிலும் மலர்விழியிடம் சற்று கடுமையாகவே நடந்து கொண்ட யுவாவுக்கு அவளைத் தன் நிபந்தனைக்கு சம்மதிக்க வைக்க வேண்டுமென்கிற பிடிவாதம் இருந்தாலும் அதற்காக அவளை வற்புறுத்தவும் விருப்பம் இல்லாதவனோ இத்துணை தினங்களாக அவளை விட்டு ஒதுங்கியே இருந்தவனின் அடக்கி வைத்திருந்த ஆசை உணர்வுகளை எல்லாம் அவர்களுடைய கோவில் பயணமும், தோட்டத்துத் தீண்டல்களும் வெகுவாகத் தூண்டி விட்டு இருக்க, அன்றைய இரவில் நிலவுக்குத் துணையாக உறங்காதிருந்தனோ மறுநாள் காலை சற்று தாமதமாகவே எழுந்து கீழே வந்தவனை மலர்விழியின் கிள்ளைக் குரலே வரவேற்றது.​

"ஜானு எனக்காக இது கூட பண்ணமாட்டியா ப்ளீஸு புள்ள ரொம்ப நாளாச்சுடி, வாங்கிட்டு வாடி, இன்னிக்கு உனக்கு டிப்ஸ், அம்பது ரூவாயா தரேன் டி" என்றவளிடம்...​

"அம்மா தாயே ஆள விடு அம்பது இல்ல ஐநூறு ரூவா கொடுத்தாக் கூட என்னால முடியாது உனக்கு வாங்கிக் குடுத்துட்டு எங்கம்மாட்ட யாரு வசவு வாங்கறது..." என்று மறுத்தவளிடம்....​

"நான் அத்தக்கித் தெரியாம பார்த்துக்குறேன் டி" என்று கெஞ்சலாகவே கூறிய மலரைப் பார்த்த ஜானவியோ...​

"அய்யோ எங்கம்மாவப் பத்தி உனக்குத் தெரியல, நீ முன்ன உங்க வீட்ல இருக்கப்பவே உங்கத்த மோப்பம் புடிச்சி நீதே என் மருமகளுக்கு கண்டதையும் வாங்கிக் குடுத்து கெடுக்கற, அவளுக்கு வாய்ல விரல வச்சாக் கூட கடிக்கத் தெரியாதுன்னு என்னயத்தே வறுத்தெடுக்கும், இப்ப நீ இங்கனயே இருக்க என்னால முடியாதுப்பா, எனக்கு காலேஜுக்கு டைமாச்சு ஆள விடு புள்ள" என்று கையெடுத்துக் கும்பிட்டவள் சிட்டாகப் பறந்து விட்டாள்.​

தான் கேட்டதை வாங்கி வர மறுத்துச் சென்ற தன் நாத்தியின் முதுகைப் பார்த்து "போடி இவளே" என்று திட்டிக் கொண்ட மலர்விழியோ "ச்சே எவ்ளோ நாளாச்சு... இந்த அரிசிமூட்ட வாங்கிட்டு வர மாட்டேனுட்டாளே" என்று தனக்குள்ளே பேசியவாறு சமையலறைக்குள் நுழைந்து கொள்ள....​

மாடியிலிருந்து இறங்கி வந்து அவர்களின் சம்பாஷணையை கேட்டிருந்த யுவராஜுக்கோ சட்டென்று "மலர் கேட்டதை நாம வாங்கிக் கொடுத்து அவளை கரெக்ட் பண்ணினால் என்ன" என்றொரு யோசனை தோன்றிய வேகத்திலேயே 'இது உனக்கே கேவலமா இல்ல' என்று அவன் மனசாட்சி அவனை அற்பமாகப் பார்த்தும், மலரை மடக்க ஒரு வழியும் அறியாதவன், கிடைத்த வழியை விட்டு விட விரும்பாதவனோ, அதை செயல்படுத்தும் நோக்கத்தோடு அன்றிரவே கையில் ஒரு பார்சலைச் சுமந்த படி மெல்ல தங்கள் அறைக்குள் நுழைந்தான் மலர்விழியின் மாமன் யுவராஜ்.​

ஒரு ஆணுக்கு காதல் மட்டும் இருந்தாலே கிறுக்குத் தனத்திற்கு அளவிருக்காது கூடவே கர்வமும் இருந்தால்...???​

மயக்கம் கொள்ளுமா மலர்..???,💘

 
Last edited:

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top