JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

  • Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், jbtamil18@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Dear Guest, Please register in the forum to read stories of the writers and post your valuable comments. Please email: jbtamil18@gmail.com or whatsapp: +91-6384850278 any login related queries.

JLine Bookstore Online

மீண்ட சொர்க்கம் நீ எனக்கு 16

மீண்ட சொர்க்கம் நீ எனக்கு
பகுதி 16
மகேஷ் மது சொன்ன வார்த்தைகளைக் கேட்டு இன்ப வெள்ளத்தில் மூழ்கி இருந்தான். அவன் உள்ளம் கட்டுக்கடங்காமல்.. என்னென்னவோ கற்பனையில் இறங்கியது. அவன் மதுவை ரசனையுடன் பார்க்க.. அவன் பார்வை மதுவை நாணச் செய்தது.

மதுவுக்கு அவன் காதல் மனம் புரிந்த போதும் அவளால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை. மகேஷிடம் சமாதானம் ஆனது போல் சொன்னாலும் அவள் மனது அதை சற்றும் ஏற்கவில்லை. அவள் அடிமனதில் இப்போதும் சாவை எதிர்கொள்ளத் தயாராக வேண்டுமே.. என்று ஒரு அச்சுறுத்தல் ஆழமாக பதிந்து போனது.

“மகேஷ் வீட்டுக்கு போவோமா” என்றாள் விரக்தியுடன்.

“என்ன மது இப்படி கேக்குற? பரத்தைப் பார்க்க எப்பொழுது பெங்களூர் போகலாம்னு கேட்பாய்னு நினைச்சேன். ஏன் மது? ஏன் இப்படி டல் ஆகிட்ட”.. என்று மகேஷ் வினவ..

“இல்ல மகேஷ்.. அவன் நிச்சயம் உயிரோடு இருக்கப் போவதில்லை.” என்றாள் அவள் விரக்தியாக!.. அவளின் வாடிய முகம் அவனது உள்ளத்தையும் தாக்கியது.

சுசீலா விக்னேஷின் மரணம் வேண்டுமானால் விபத்தினாலோ இல்ல கொலையா கூட இருக்கலாம். ஆனா வேலாயுதம் சார்க்கு ஏன் திடீரென மாரடைப்பு வரணும்!! என்று கேட்க.. மகேஷும் விடை தெரியாமல் விழித்தான்.

“மது நான் ஒன்னு கேட்பேன்.. நீ தப்பா நினைக்கக் கூடாது.. ஒருவேளை பரத் உங்ககிட்ட இருந்து ஏமாற்றி.. அந்த சிலையை எடுத்து வித்துருப்பானோ?”..

மது சிறு அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள். “இல்ல மகேஷ்.. அப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. பரத்துக்கு கொஞ்சம் பண நெருக்கடி! அவங்க அம்மா வைத்தியத்திற்காக பெரிய தொகை தேவைப்பட்டது என்னவோ உண்மைதான். ஆனா அதுக்காக அவன் அப்படி எல்லாம் நிச்சயம் பண்ணி இருக்க மாட்டான்.” என்று மது நம்பிக்கையுடன் சொன்னாள்.

“சரி மது.. இந்த வேலாயுதம் சார் எப்படி?” என்று மகேஷ் வினவ..

“அவரைப் பத்தி இப்போ பேசி என்ன ஆகப் போகுது மகேஷ்.. நான் இன்னைக்கு உன்னைக் கூட்டிட்டு அவரைத்தான் அடுத்ததாக பார்க்கப் போகணும்னு நினைச்சு இருந்தேன். ஆனா அவருக்கு இப்படி ஆகும்னு நான் நெனச்சே பாக்கலை. அதேபோல விக்னேஷ் வீட்லயும் அவர் இப்படி முன்னுக்குப் பின் முரணாக அன்னைக்கு ஏன் பேசினார் என்றதும் மர்மமாகவே போயிடுச்சு..” என்று சொல்ல..

தன் நெற்றியை லேசாக தடவி யோசித்தவன்.. “சரி மது.. வா நாம அவர் வீடு வரையில் போயிட்டு வரலாம்” என்று அழைக்க..

“இப்பவா”.. என்று மது அதிர்ச்சியுடன் கேட்க..

“ஆமா..” என்றவன் அதற்கு மேல் தாமதிக்காமல் யாருடனோ ஃபோனில் பேசி.. வேலாயுதத்தின் விலாசத்தையும் பெற்றுக் கொண்டான்.

“அங்க போய் இப்ப என்ன விசாரிக்க முடியும் மகேஷ்”

“மது நான் நல்லா விசாரிச்சுட்டேன்.. இப்ப போனா துக்கம் விசாரிக்க போய் இருக்கோம்னு நினைச்சு யாரும் நம்மள சந்தேகப் படமாட்டாங்க.. வா” என்று அவன் அந்த விலாசத்தை நோக்கி காரைச் செலுத்தத் தொடங்கினான்.

எல்லா வசதிகளையும் உள்ளடக்கி.. குட்டி பங்களா போல் காட்சியளித்தது அந்த வீடு.மது தயங்கி நிற்க.. மகேஷ் அவள் கரங்களைப் பிடித்து தைரியமாக உள்ளே அழைத்துச் சென்றான்.

அங்கு வேலாயுதம் சிரித்துக் கொண்டிருக்க.. அவரின் பெரிய புகைப்படமும் குடும்ப படமும் ஹாலில் பெரிதாக தொங்கிக் கொண்டிருந்தது. மனைவி இரண்டு குழந்தைகள் என பார்த்தபோது மதுவுக்கு அவர் குடும்பத்தை நினைத்து வேதனை பிறந்தது.

அவர்கள் உள்ளே நுழையவும் அந்த வீட்டில் இருந்த ஒரு எழுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் அவர்களை நாடி வந்தார். அவரின் சாயலே சொல்லியது.. அது வேலாயுதத்தின் தந்தை என்று. “தம்பி நீங்க”.. என்று அந்தப் பெரியவர் யார் என்று கேட்காமல் கேட்க..

“நான் வேலாயுதம் சார் கூட வேலை பார்த்திருக்கேன். நியூஸ் கேள்விப்பட்ட உடனே என்னால நம்பவே முடியல”..

“உட்காருங்க தம்பி.. எல்லாம் விதி.. வேற என்ன சொல்ல சொல்றீங்க.. ம்ஹம்.. நீங்க வேலோட எந்த ஊர்ல வேலை பார்த்தீங்க”.. என்று அவர் சட்டென கேட்க..

மது இதயம் துடிக்க மறந்தது. சில நொடிகள் தாமதித்த மகேஷ்.. “தஞ்சாவூர்” என்று மட்டும் வாய் திறக்க..

“ஓ.. தஞ்சாவூரா.. நான் ஏன் அப்படிக் கேட்டேன்னா.. அவன் சுத்தாத ஊரே இல்ல.. கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கு முன்னாடி.. ஆராய்ச்சி ஆராய்ச்சி பண்றேன்னு.. ஒவ்வொரு ஊரா சுத்திக்கிட்டு இருந்தான். சரி கல்யாணம் பண்ணா பொறுப்பா ஒரு ஊர்ல இருப்பான்னு கல்யாணம் பண்ணி வைச்சேன்.

அதுக்கப்புறம் குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பு வந்ததால.. வேற வழி இல்லாம காலேஜ்ல வேலைக்குச் சேர்ந்தான். நானும் சந்தோஷப்பட்டேன். ஆனா அவன் காலேஜிலே வேலை பார்த்துட்டு.. வாரம் ஒரு நாள், ரெண்டு நாள் திரும்ப சிலையைத் தேடுறேன், கல்வெட்டு ஆராய்ச்சின்னு.. அடிக்கடி லீவ் போட்டு போய் விடுவானாம்.

சிதம்பரம், சீர்காழி, தஞ்சாவூர்ன்னு ஒவ்வொரு ஊரா சுத்தி வந்து இருக்கான்.

இப்பதான் ஒரு அஞ்சு வருஷமா சென்னையில எங்களோட நிம்மதியாக வாழத் தொடங்கி இருந்தான். என் மகன் மருமகள், பேரப்பிள்ளைகள் ன்னு வாழ்க்கை நிம்மதியாக போயிட்டு இருந்துச்சு. ஆனா போன மாசம் அவன் ஃப்ரெண்ட் வாசு அமெரிக்காவில் இருந்து வந்தான்.

அவனும் இவனும் காலேஜ்ல ஒன்னா படிச்ச பசங்க. ரெண்டு பேரும் தொல்பொருள் கல்விதான் படிச்சாங்க. அந்த வாசு இவன் கிட்ட என்ன சொன்னானோ தெரியல.. பழையபடி கல்வெட்டு ஆராய்ச்சி பற்றி பேச ஆரம்பிச்சுட்டாங்க.
தஞ்சாவூருக்கு ரெண்டு தடவை காலேஜுக்கு லீவு போட்டு போய்விட்டு வந்தான். இந்த அஞ்சு வருஷமா நிம்மதியா இருந்தவன். இந்த ஒரு மாசமா படபடப்போடு நைட்டெல்லாம் தூங்காம.. கல்வெட்டு, பழைய ஓலைச் சுவடி, சித்தர் அப்படின்னு என்னென்னமோ ஆராய்ச்சியில் இறங்க ஆரம்பிச்சு இருந்தான்.

அந்த ஆராய்ச்சி ரூம்ல ஒரு கட்டில் போட்டு அங்கேயே ஒரு மாசம் தூங்க ஆரம்பிச்சான். என் மருமகளும் புலம்பிட்டு இருந்தா. நானும் “தம்பி இதெல்லாம் நமக்கு வேண்டாம். உனக்கு என்ன குறை!.. கை நிறைய சம்பளம் வாங்குற.. மனைவி மக்களோடு வாழ்க்கையை அனுபவிக்கலாம். எதுக்கு காடு மலைன்னு சுத்தப்போற..” என்று சொல்லிப் பார்த்தேன்.

அவன் என் பேச்சை கேட்கவே இல்ல. எப்ப பார்த்தாலும் ஒரே டென்ஷனோடு சுத்த ஆரம்பித்து இருந்தான். நான் ரெண்டு தடவை வருத்தப்பட்டு கேட்டதுக்கு.. அப்பா.. இப்ப ஒரு பெரிய அசைன்மெண்ட் கிடைச்சிருக்கு.

இதை மட்டும் நான் சக்சஸ்ஃபுல்லா முடிச்சிட்டா.. நமக்கு காசு கொட்டோ கொட்டுன்னு கொட்டும். அதுக்கு அப்புறம் நம்ம பரம்பரையே வேலைக்கு போக தேவை இருக்காது. அப்படின்னு சொன்னான். என்ன புராஜக்ட்டோ? அது கடைசில என் பிள்ளை உயிரையே காவு வாங்கி இருச்சு.. என்று அவர் வருந்தி சொல்ல..

“என்ன ஆச்சு ஐயா.. சார் உடம்பு முடியாமல் இருந்தாரா” என்று கேட்க..

“இல்ல தம்பி.. தினமும் உடற்பயிற்சி எல்லாம் செஞ்சு ஆரோக்கியமா இருக்கிறவன்.. ஆனால் இந்த ஒரு வாரமா பதட்டமாக இருந்தான். அந்த பையன் வாசு.. ஃபோன் போட்டாலே போதும்.. ஒரே டென்ஷன் ஆயிடுவான்.

நேத்து ராத்திரி அவன் ஃபோனுக்கு கால் வந்துச்சு. என்ன நினைச்சானோ ஃபோனை ரொம்ப நேரம் எடுக்கவே இல்ல. அப்புறம் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தான். அப்பா நாளைக்கு காலைல நான் தஞ்சாவூர் போகப் போறேன்னு சொன்னான்.

“தம்பி காலேஜ்ல அடிக்கடி லீவு போட்டா பிரச்சினை பண்ணப் போறாங்க. நல்ல வேலையா இருக்கு” என்று சொன்னேன். “அப்பா இது தான் கடைசி தடவை. இனி எங்கேயும் போக மாட்டேன் போதுமா!!” அப்படி சொல்லி என்னைச் சமாதானம் செய்தான். அதுதான் அவன் என்கிட்ட கடைசியாக பேசிய வார்த்தைகள்.

வேலாயுதம் அப்படி சொல்லிட்டு.. அடிச்சிட்டு இருந்த அவன் ஃபோனுக்கு பதில் கொடுக்கப் போய் விட்டான். அப்புறம் காலைல அவன் அறையை விட்டு வெளிய வரவே இல்ல. எட்டு மணிக்கு தட்டி தட்டி பார்த்த போதும்.. பதில் இல்ல. அப்புறம் கதவை உடைத்து.. நாங்க பார்த்த போது.. பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தான்.

அதிகாலை நாலு மணிக்கெல்லாம்.. அவன் இறந்து போயிட்டதா டாக்டர் சொன்னாங்க. என் பிள்ளைக்கு ஒரு கெட்ட பழக்கம் கூட கிடையாது. ஆனா இந்த நாற்பது வயசுல ஹார்ட் அட்டாக் என்றால் நம்பவே முடியல” என்று முடிக்கும் போதே அவர் கண்களில் நீர் கோர்க்க..

“அழுவாதீங்க ஐயா.. “ என்றான் மகேஷ் அவருக்கு ஆறுதலாக

“தம்பி.. எங்க வீட்டுக்கு கெட்ட நேரம் ஆரம்பிச்ச விஷயத்தை.. இரண்டு நாள் முன்னாடியே ஒரு சாமியார் வந்து சரியா சொல்லிட்டு போய்ட்டார்” என்று அவர் சொல்ல..

“அப்படியா”..

“ஆமாம் தம்பி.. அவரை சாமியார்ன்னு கூட சொல்ல முடியாது.. ஒரு அகோரி மாதிரி இருந்தார். தாடி, நீளச் சடை சடையாய் முடி, நெத்தியில் பட்டை, ஒரு கையில் உடுக்கை வச்சுக்கிட்டு.. ராத்திரி எட்டு மணிக்கு எங்க வீட்டு வாசலில் வந்து நின்று.. சிவன் சொத்து குல நாசம் என்று கத்தினார்.

அப்போதே என் மனசுக்குள்ள எதோ சரியில்லை என்று பட்டதும். ம்.. இப்ப யோசிச்சு என்ன பயன்!” என்று அவர் சொல்ல..
மகேஷின் கண்கள் தானாக மதுவிடம் செல்ல.. “போச்சு சும்மாவே பயப்படுவா.. மறுபடியும் அந்த சாமியாரை பத்தி சொல்லிட்டாரு.. முதல்ல அந்த சாமியாரை தேடி கண்டு புடிக்கணும்” என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டவன் பெரியவரிடம் திரும்பி..

“ஐயா.. அந்த வாசு இப்ப எங்க இருப்பாரு”.. என்று மஹேஷ் வினவ..

“தெரியல தம்பி.. அவன் நிச்சயம் ஏதாவது ஸ்டார் ஹோட்டல்ல தான் தங்கியிருப்பான். நேத்து இந்த செய்தியை கேள்விப்பட்டு உடனே ஓடி வந்தான். கொஞ்ச நேரம் அழுதான். அப்புறம் வேலு ரூம்ல போய் எதையோ ரொம்ப நேரம் தேடிட்டு வந்தான். போகும்போது அப்பா வேலுவோட ஃபோனைக் கொடுங்கன்னு கேட்டான். ஆனால் என் புள்ள அவன் ஃபோனை எங்க வச்சான்னு தெரியலை. அவன் ஃபோனே கிடைக்கல. சரிப்பா தேடி வையுங்க அப்புறம் வந்து வாங்கிக்கிறேன்னு போயிட்டான்.

முன்னே எல்லாம் என் பிள்ளைக்காக அவனைப் பொறுத்துக் கொள்வேன். இப்ப அவனைப் பார்த்தாலே கோவம் வருது. அவன் மட்டும் ஊர்ல இருந்து வராம இருந்தா.. என் பிள்ளை நிம்மதியா இந்நேரம் உயிரோடு இருந்திருப்பான்.

அப்போது ஒரு கார் வரும் அரவம் கேட்க.. “சொல்லி முடிக்கல அதுக்குள்ள வந்துட்டானா” என்று அவர் கண்கள் இடுங்க..

“யாரு ஐயா”.. என்று மஹேஷ் கேட்க.. “வேற யாரு அந்த வாசு தான்”

“சரி ஐயா.. நீங்க தைரியமா இருங்க” என்று இருவரும் கிளம்ப..

அவர்கள் இருவரும் வாயிலை எட்டி இருக்க.. கூலர்ஸ் அணிந்து, மேல் நாட்டு செண்டின் மனம் வீச.. அந்த புதியவன் அவர்களைக் கடந்து சென்றான். அவனின் பார்வை பர்தாவிற்குள் இருந்த மதுவை நொடியில் ஊடுருவிப் பார்த்து சென்றது.

உள்ளே சென்றவன் “யார்ப்பா அது” என்று அதிகாரத்துடன் கேட்க..

“தெரிஞ்சவங்க.. உனக்கென்ன வேணும்” என்று அவர் கேட்க..

“ஃபோன்.. வேலோட ஃபோன்!!. அதுதான் நீ போய்த் தேடிப்பார்த்தீல. நான் என்ன ஒளிச்சு வச்சுட்டா இல்லன்னு சொல்றேன். இங்க பாரு மருமகள் பேரன் பேத்தின்னு எல்லாரும் இருக்குற வீடு.. நீ மொதல்ல இங்க வர்றத நிறுத்து.” என்று அவர் தன் மொத்த கோபத்தையும் கொட்ட..

“சரி நான் இனி வரல.. ஆனா அதுக்கு முன்னாடி.. உங்க பையன் என்கிட்ட வாங்கின இரண்டு கோடி ரூபாய் பணத்தைக் கொடுங்க. நான் உடனே போய் விடுகிறேன்”.. என்று சொல்ல..

“என்ன ரெண்டு கோடியா??.. செத்தவன் திரும்ப வர முடியாதுன்னு பொய் சொல்றியா வாசு!!” என்று வேலாயுதத்தின் தந்தை குரல் வெளியே நின்ற மகேஷுக்கும் மதுவுக்கு தெளிவாக கேட்டது.

தொடரும்

அன்புடன் லக்ஷ்மி.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top