JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Aalamarathu Paravaigal - Chapters 43 & 44

Uthaya

Member
ஆலமரத்துப் பறவைகள் – அத்தியாயம் 43 & 44

43

அன்றொருநாள் நடந்த நிகழ்ச்சி இராஜகோபால் நினைவில் ஓடியது: அவருடைய பதினெட்டு வயதுப் பேத்தி பிரியாவை எப்படி சமாதானப்படுத்துவது என்று அவருக்குத் தெரியவில்லை. அவர் மகன் கார்த்திக்குக்கும் தெரியவில்லை. தனக்கு என்ன பிரச்சனை, தனக்கு என்ன வேண்டும் என்று பிரியாவுக்கும் தெரியவில்லை. அப்பொழுது விரால் தோன்றினான். கோபமாகக் கத்திக்கொண்டிருந்தாள் பிரியா. இராஜகோபால் விராலைப் பார்த்து, “விராலு இது ஏம் பேத்தி பிரியா. கூட்டிக்கிட்டு போயி நம்ம எஸ்ட்டேட்ல இருக்குற பறவைகள் எல்லாத்தையும் காட்டு,” என்றார்.

மறு பேச்சில்லமல் சமையலறைக்கு ஓடினவன் திரும்பிவந்து, “பிரியாம்மா, ஒரு அஞ்சு நிமிசம், வழியில ஒங்களுக்குப் பசிச்சா ஏதாவது சாப்பிடத் தயார் செய்யச் சொல்லிருக்கேன். அது ரெடியான ஒடனே போகலாம்,” என்றான் விரால்ராசு.

“அம்மா கிம்மால்லாம் வேண்டாம். சும்மா பிரியாண்ணு கூப்பிடு,” என்றாள் பிரியா.

அசராமல். “சரி பிரியா,” என்றான் விரால். அவருடைய பேத்தியின் பேச்சுக்கு எப்படி இணையாக இவனால் பேச முடிகிறது என்று வியந்தார் இராஜகோபால்.

சில நிமிடங்களில் இரண்டு தோள் பைகளைப் பக்கத்திற்ககொன்றாக குறுக்காக மாட்டிக்ககொண்டு பிரியாவோடு சென்றான். அவன் கையில் நீளக் கம்பு ஒன்று இருந்தது. அவர்கள் இருவரும் ஒரு நீண்ட சாலையில் சென்று சாலை செல்லும் வாக்கில் திரும்பி மறையும்வரை இராஜகோபால் பார்த்துக்கொண்டு நின்றார். அவர்கள் கிளம்பி இரண்டொரு நிமிடங்களிலேயே பிரியாவின் நடையில் ஒரு துள்ளல் தென்பட்டதைத் தூரத்திலிருந்தே கண்டார் பின் அலுவலகம் சென்றவர் வேலையில் மூழ்கி பேத்தியைப் பற்றி மறந்தே போனார்.

ஒரு மணிக்கு வேலையை முடித்துக்கொண்டு வீட்டுக்கு மதியம் சாப்பிடச் சென்றபோதுதான் பிரியாவைப் பார்த்தார். முதலாளியைக் கண்டவுடன் விரால்ராசு போய்ட்டுவாரேன் என்று அவரிடமும் பிரியாவிடமும் விடைபெற்றுச் சென்றான்.

இராஜகோபால் பிரியாவைப் பார்த்து, “எப்பம்மா வந்த?” என்றார்.

“இப்பந்தான் வந்தேன் தாத்தா. இந்த விரால் ரொம்ப இன்ரஸ்டிங் ஃபெல்லோ தாத்தா,” என்றாள் பிரியா.

“அப்பிடி அவன் என்ன செய்தான்?”

“ரொம்ப லாங் வாக்குக்கு போனோம் தாத்தா. மொதல்ல நான் பேசவே இல்ல, அவன்தான் பேசிக்கிட்டே வந்தான். ஆனா அவன் பேச்சு போரே அடிக்கல தாத்தா. இங்க உள்ள பறவைகள், மிருகங்கள், செடி, கொடி எல்லாம் பத்தி பேசிக்கிட்டே வந்தான். அஞ்சு நிமிசத்துக்குள்ள திடீர்ண்ணு பிரியா இங்க பாருண்ணு, செடிக்கு இடையில உக்காந்திருந்த ஒரு பறவையக் காட்டினான். வாட் அ பியூட்டிபுள் பர்ட். இது வரைக்கும் நம்ம எஸ்ட்டேட்ல அப்பிடி பறவைகள் எல்லாம் இருக்குண்ணு எனக்குத் தெரியவே தெரியாது தாத்தா.

அப்புறம் நான் என் கவலைய மறந்திட்டுப் பேச ஆரம்பிச்சேன். அவன் பேசுறதையே நிறுத்திட்டான். நான் பேசுறதையே கேட்டுக்கிட்டு வந்தான். நான் என் கவலைகள எல்லாம் அவங்கிட்ட சொன்னேன், அவனுக்குப் புரிஞ்சதோ இல்லையோ, காதுகுடுத்துக் கேட்டுக்கிட்டு வந்தான். நான் அவனைக் கேள்வி கேட்டா பதில் சொல்வான். பொறுமையா, அமைதியா நான் என்ன சொன்னாலும் கேட்டான். அப்ப அப்ப தாகமா இருக்கா, தண்ணி வேணுமா, டீ வேணுமாண்னு கேட்டு பையில இருந்து எடுத்துக் குடுத்தான். இடையில ஸ்நாக்ஸ் குடுத்தான். ரொம்ப முன் யோசனை உள்ளவன். ரொம்ப மரியாதையானவனும் கூட.

நான் பாறை ஓரமாப் போனேன், அங்க போகவேண்டாம்மின்னு சொன்னான். நான் கேக்கல, இன்னும் ரிஸ்கியா போனேன். பிரியா ஒங்க தாத்தா என்ன வேலையவிட்டு அனுப்பனும்மின்னா, அங்க போரன்னான். அதுக்கப்புறம் அவன் சொன்னால் ஒடனே கேட்டுருவேன்.

கழுத்தறுத்தான் குருவியப் பற்றியெல்லாம் சொன்னான் தாத்தா. டிராகன் ஃப்ளய்ய தட்டான்னு சொல்றான். அது எப்பிடி சின்ன பூச்சிய சாப்பிடுதுண்ணு காட்டுனான். மணல்ல சின்னக் குழி இருந்தது, யார் இப்பிடி சின்னதா அழகா குழி பறிச்சாங்கண்ணேன். அவன் இது யாரும் மனுசங்க பறிச்ச குழியில்ல இந்தக் குழிக்குள்ள மணல்ல ஒரு பூச்சி ஒளிஞ்சிருக்கும். வேற பூச்சி அந்த குழிக்குள்ள விழுந்தா பிடிச்சு சாப்பிட்டுரும்ண்ணு சொன்னான். அப்புறம் அந்த குழியத் தோண்டினான் ஒரு சின்ன ஸ்பைடெர் மாதிரி ஒரு பூச்சி இருந்தது. அதைப் பிடிச்சு அது கழுத்தில ஒரு நூல கட்டினான். கட்டி அந்தப் பூச்சிய இன்னொரு குழிக்குள்ள போட்டான். அது மணல்க்குள்ள புகுந்துக்கிச்சு. ஒரு நிமிசம் கழிச்சு நூல இழுத்தான், நூல்ல கட்டியிருந்த பூச்சி குழிக்குள்ள இருந்த பூச்சியப் பிடிச்சு இழுத்திட்டு வந்திருச்சு.

நெறையா பறவைகளோட கூடு காட்டினான். சில கூட்டில முட்டை இருந்தது, அதை தொடக்கூடாதுன்னுட்டான். சில கூட்டில குஞ்சு இருந்தது, அதையும் தொடக்கூடாது பாத்திட்டு போயிரனும்ன்னான். தரையில மிருகங்களோட கால்த் தடம் காட்டி, அது எந்த மிருகத்தோடதுன்னு சொன்னான். அந்த மிருகத்தையும் சிலசமயம் காட்டினான். பறவை, மிருகங்களோட பூப், அதான், எச்சம் கிடந்தா, அது எந்தப் பறவையோடது அல்லது மிருகத்தோடதுண்ணு சொன்னான். நான் இப்படியெல்லாம் பாத்ததே இல்ல தாத்தா. யூ நோ நான் பயாலஜி படிக்கப் போறேன். என்னெல்லாம் ஒண்டர்ஸ் இருக்கு நேச்சர்ல.

என்று சொல்லி முடித்த பிரியா ஓடி வந்து தாத்தாவின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, சாப்பிட உட்கார்ந்தாள்.

இராஜகோபால் தன் பேத்தி சொன்னதைக் கேட்டு ஆச்சரியத்தில் மெய்மறந்து உட்கார்ந்திருந்தார். பிரியா தன் கன்னத்தில் கொடுத்த முத்தம் ஞாபகம் வர தன் கனவில் இருந்து விடுபட்டு நிகழ்காலத்திற்கு வந்தார் இராஜகோபால். மீண்டும் தன்னைத்தானே கேட்டுக்கொண்டார், ‘எதற்காக நான் விரால்ராசு மேல் இவ்வளவு பரிவு காட்டுகிறேன்? அன்று என் பேத்தியின் முகத்தில் கண்ட மகிழ்ச்சிக்காகவா, அல்லது அவள் எனக்குத் தந்த முத்தத்திற்காகவா?” அவர் யோசித்தார்.

மெட்ராஸில் இருந்து வரும்பொழுது மனம் குழம்பி, வருத்தத்தோடு வந்த பிரியா, கல கலவென்று சிரித்து, “தாத்தா, டோண்ட் எவர் லூஸ் விரால். அவன எங்கையும் போகவிடாதீங்க. ஹி இஸ் அன் அசெர்ட் டு யுவர் எஸ்ட்டேட். அவன் இருந்தா உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது,” என்று போகும் பொழுது சொல்லிவிட்டுச் சென்றது ஞாபகம் வந்தது. இராஜகோபால் தன்னையே கேட்டுக்கொண்ட கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. மெல்லச் சிரித்துக்கொண்டார்.

தன்னை அறியாமலேயெ பாரதியின் பாட்டைத் தப்பும் தவறுமாக முணுமுணுத்தார்:-

எங்கிருந்தொ வந்தான்,

இடைச்சாதி நான் என்றான்,

மாடு கன்று மேய்த்திடுவேன்,

சொன்ன படி கேட்பேன்,

துணிமணிகள் காத்திடுவேன்,

சின்னக்குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைப்பேன்,

என்று அவருக்குத் தெரிந்த வரை பாடினார்.

போன போலீஸ் ஜீப் திரும்ப வந்துகொண்டிருந்தது. இராஜகோபாலுக்கு அவர் பேத்தி பிரியா தந்த முத்தமும், அவள் சொல்லிவிட்டுப்போன கடைசி வரிகளும் ஞாபகம் வந்தன.

எஸ்.ஐ., இராஜகோபாலிடம் வந்து பணிவாக, “சார் ரொம்ப நன்றி, நீங்க அனுமதி தந்ததுக்கு. உங்ககிட்டையும் சில கேள்வி கேட்க வேண்டியதிருக்கிறது. கேக்கலாமா சார்,” என்றார்.

இராஜகோபால், “சரி உக்காருங்க. நான் ரெடி,” என்றார்.

எஸ்.ஐ. இராஜகோபாலிடம் கேள்வி கேட்டார். இராஜகோபால் முன்பு சொன்னதையே சொன்னார். ஒரு வார்த்தைகூடப் பிறழவில்லை. ஏதாவது தப்புவிடுவார் நாம் அதை வைத்து இந்த மனிதரை வளைத்து நம் பக்கம் கொண்டுவந்து விடலாம் என்று எண்ணிய எஸ்.ஐ. சளைத்துப் போனார். இந்த மனிதரிடம் கேள்வி கேட்டு, தப்புச் செய்ய வைத்து, நம் பக்கம் திருப்புவதும், கல்லில் நார் உறிப்பதும் ஒன்றுதான் என்று முடிவு செய்த எஸ்.ஐ. நிறுத்திக்கொண்டார். இராஜகோபாலிடமிருந்து விடை பெற்று, மீண்டும் எஸ்ட்டேட்டுக்குள் போய் கடைசியாக ஒரு சிலரைப் பார்த்துப் பேசிவிட்டு, தன்னுடைய நிலையத்திற்குத் திரும்பினார்.

எஸ்.ஐ. போனபின்னும் இராஜகோபாலால், விரால்ராசின் விசயத்தை மறக்க முடியவில்லை. மீண்டும் அவனைப் பற்றிய அனைத்தையும் அசை போட்டார். யோசித்தவாறே உட்க்கார்ந்திருந்தவர் சட்டென்று தன்னை அறியாமலேயே நாற்காலியில் இருந்து எழுந்துவிட்டார்.

அப்படிப்பட்ட ‘என்னுடைய’ விராலையா இந்த எஸ்.ஐ. கொலைகாரன்னு சொல்றான், என்று நினைத்த இராஜகோபாலின் தாடைகள் கோபத்தில் இறுகின. ஒரு நிரபராதியைக் காப்பாற்றுவது நம் கடமை அல்லவா, என்றும் நினைத்தார். இருப்பினும் அவர் மனது கணக்குப் போட்டது, ‘நம் கம்பெனி வக்கீலை வைத்து இந்த நிரபராதிக்காக வாதாடினால் அதிகபட்சம் ஒரு பத்தாயிரம் ரூபாய் செலவாகலாம். அது அவன் கண்டுபிடித்துக் கோடுத்த இருபத்தையாயிரத்தில் பாதிகூட இல்லையே’. முக்கியமாக, தனக்காக உயிரைவிடத் தயாராய் இருக்கும் ஒரு நிரபராதியைக் காப்பாற்றாவிட்டால் தான் நிம்மதியாய் சாகக்கூட முடியாது என்பது மட்டுமல்ல, என்றாவது ஒரு நாள் தன் பேத்தி பிரியா வந்து விரால் எங்கே, அவனை ஏன் காப்பாற்றவில்லை என்று கேட்டால் தன்னால் என்ன சொல்ல இயலும், என்று எண்ணிப்பார்த்த இராஜகோபால். ‘எது வரினும் வரட்டும், ‘என்னுடைய’ விராலை இந்தப் பொய்க்குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்றுவது என் தலையாய கடமை,’ என முடிவு செய்துவிட்டார்.

முடிவை எடுத்த எஸ்ட்டேட் முதலாளி இராஜகோபாலின் கோபம் தணிந்து தாடைகளின் இறுக்கம் தளர்ந்தது. அதன் பின் விரால்ராசை அழைத்தார். விரால்ராசு மிக மரியாதையாக வந்து முதலாளியின் முன்னால் தலைகுனிந்து நின்றான். அவனுக்குத் தெரியும் அவனுடைய உயிரைக் காப்பாற்றியவர் முதலாளி என்று.

இராஜகோபால் சொன்னார், “ஏம்பா விராலு, நீ நல்லவன்னு எனக்குத் தெரியும். ஆனால் இன்னொரு வாட்டி போலீஸ் ஒன்னைத் தேடி வர்றதுக்குள்ள நீ உன் மனைவியயும் இங்க கூட்டிட்டு வந்துர்றதுதான் நல்லதுன்னு எனக்குத் தோணுது. போலீஸ் எப்படி நடந்துக்கிடும்ண்னு சொல்ல முடியாது. நீ வேணுமிண்ணா ஒடனே ஊருக்குப் போய் கூட்டிட்டு வந்திரு. நான் வக்கீல்ட்ட சொல்லி நீ திரும்பி வந்து சேர்ற வரைக்கும் ஒம்மேல ஒரு கண்ணு வச்சுக்கிடச் சொல்லுறேன். என்ன சொல்லுரே?” என்றார்.

விரால்ராசுக்குத் தெரியும், அவன் மயிரிழையில் போலீஸின் கையிலிருந்து தப்பி இருக்கிறான் என்று. திடீரென்று தன் மனைவி பொன்னுத்தாயைக் கூட்டிக்கொண்டு வருவதில் பிரச்சனைகள் இருந்தாலும் முதலாளி தன் நல்லதுக்குத்தான் சொல்கிறார் என அவனுடைய கூர்மையான மூளைக்குப் புரிந்தது. அவன் உடனே, “சரி சார், நான் இன்னைக்கே புறப்பட்டு, ஊருக்குப் போய் என் வீட்டுக்காரியக் கூட்டிட்டு வந்திருதேன் சார்,” என்றான்.

முதலாளி, மோகனைப் பார்த்து, “மேனேஜர், எல்லாத்தையும் கவனிச்சுக்கிடுங்க. அவனுக்கு வேண்டியதெல்லாம் செய்து குடுங்க. விராலு போய் ஒரு நாலு நாளுக்குள்ள வந்திரு. நீ வரலெண்ணா வேல கெடும்ங்கிறதுக்காச் சொல்லலை. ஒவ்வொரு நாளும் நீ அங்க இருக்கிறது ஆபத்தானது. கேசெல்லாம் முடிஞ்ச அப்புறம் வேணுமிண்ணா லீவுல போய் சந்தோசமா இருந்திட்டு வா. அப்போம் கிளம்பு,” என்றார்.

விரால்ராசு கை கூப்பி, “ரெம்ப நன்றி சார். நான் போய்ட்டு நாலே நாள்ள வந்திருவேன்,” என்று சொல்லிவிட்டு முதலாளியின் அலுவலகத்திலிருந்து வெளியேறி ஊருக்குக் கிளம்புமுன் தன் அறைக்குச் சென்று சில துணிமணிகளை எடுக்கச் சென்றான்.

தன் அறைக்கு நடந்து போகும் வழியில் விரால் சிந்தித்துப் பார்த்தான். முதலாளி தனக்கு எவ்வவு பெரிய உதவியைச் செய்திருக்கிரார். இனி தான் எவ்வளவுதான் உண்மையாக அவருக்காக உழைத்திருந்தாலும் அவர் செய்த உதவிக்கு ஈடுகட்ட முடியாது என்பதை உணர்ந்தான். ஆகவே தன் பாதுகாப்புக்காக மட்டுமல்லாமல், தான் முதலாளிக்குப் பட்ட கடனைத் தீர்ப்பதற்காகவும் அவன் மனைவியோடு எஸ்ட்டேட்டுக்கு வந்துசேர முடிவுசெய்துவிட்டான்.

விராலும் மோகனும் சென்றபின், இராஜகோபால் அடுத்த நடவடிக்கையாக மதுரைக்கு டிரங்கால் போட்டு தன் கம்பெனி வக்கீல் முருகேசன்துரையைக் கூப்பிட்டு சுருக்கமாக விரால்ராசு விசயம் பற்றிச் சொன்னார். மேலும், “அந்த விரால்ராசு நல்லவன் சார். என்னைக்கு கொலை நடந்ததுன்னு சொல்றாங்களோ அன்னைக்கு அவன் நம்ம எஸ்ட்டேட்லதான் வேலை செய்திருக்கான். அவனைக் காப்பாத்த வேண்டியது ஒங்க பொறுப்பு. காசப்பத்திக் கவலைப் படாதீங்க. செய்யவேண்டிய அத்தனை முன்னேற்பாடுகளையும் செய்ங்க,” என்றார்.

கம்பெனி வக்கீல் முருகேசன்துரை, பேர் ஊர் போன்ற முக்கியமான தகவல்களைக் குறித்துக்கொண்டார். பின், “உங்களுக்கு முக்கியம்னால் எனக்கு அது ரொம்ப முக்கியம் சார். நான் பாத்திகிடுறேன் சார்,” என்றார்.

போனை வைத்த வக்கீல் முருகேசன்துரை உடனே திருநெல்வேலியில் இருந்த தன் கிளை அலுவலகத்துடன் தொடர்புகொண்டு செய்யவேண்டிய ஏற்பாடுகள் அனைத்தையும் செய்தார். அடுத்த நாளே விரால்ராசுவுக்கு முன் ஜாமின் வழங்கப் பட்டுவிட்டது.




44

முதலாளியின் அலுவலகத்திலிருந்து தன் வீட்டுக்குச் சென்ற மேனேஜர் மோகன் சிந்தனையில் ஆழ்ந்தார். இன்னும் சற்று நேரத்தில் விரால்ராசு வருவான். அவனுக்கு ஊருக்குச் சென்று திரும்ப வேண்டிய எல்லா உதவிகளையும் செய்துதரச் சொல்லி முதலாளி கட்டளை இட்டிருக்கிரார்.

எஸ்.ஐ. தன்னைத் துளைத்துத் துளைத்துக் கேட்ட கேள்விகள் ஞாபகத்திற்கு வந்தன. உண்மையைச் சொல்லாவிட்டால் தனக்குப் பிரச்சனை வரலாமென்று மிரட்டிவிட்டுச் சென்றதும் அவர் மனதில் ஓடியது.

தன் இருக்கையில் அமர்ந்து மீண்டும் எஸ்.ஐ. கேட்ட கேள்விகளையும் தான் சொன்ன பதில்களையும் தன் மனதில் ஓட்டிப் பார்த்தார் மோகன்.

எஸ்.ஐ., “மேனேஜர், ஒங்க பேர் என்னண்ணு சொன்னீங்க,” என்றார்.

“மோகன் சார்.”

“மோகன், நீங்க எத்தன வருசமா இங்க மேனேஜரா இருக்கீங்க?”

“சுமார் பத்து வருசமா மேனேஜரா இருக்கேன், சார்.”

“அதுக்கு முன்னாள என்ன செய்திட்டு இருந்தீங்க,”

“மதுரையில இருந்தேன் சார்.”

“என்ன செய்திட்டு இருந்தீங்க மோகன்.”

“சும்மாதான் இருந்தேன் சார். பி.ஏ படிச்சுட்டு வீட்டில இருந்தேன் சார்.”

“படிச்சிட்டு எவ்வளவு வருசம் வீட்டில இருந்தீங்க?”

“ஏழு வருசம் சார்.”

“உங்களுக்கு இந்த வேல எப்படிக் கிடச்சது.”

“கல்யாணம் முடிச்சேன். மாமனார் வீட்டில வேல வாங்கிக் குடுத்தாங்க,” என்றார் மோகன் தரையைப் பார்த்துக்கொண்டே.

“மோகன், மாமனார் வீட்டில வேல வாங்கிக் குடுத்தாங்க எங்கிறதால வெக்கப்பட ஒன்னுமில்ல. நம்ம நாட்டுல பாதி இளைஞர்கள் வேலையில்லாமத்தான் இருக்காங்க. வேல குடுப்பதாய்ச் சொன்னா கல்யாணமென்ன கொலையே செய்யத்தயாராய் இருக்காங்க. என்ன, கெடைச்ச வேலய தக்கவச்சுக்கணும். அவ்வளவுதான்...,” என்றார் எஸ்.ஐ.

மோகன் மௌனமாகத் தரையைப் பார்த்தபடி நின்றார். “நான் சொல்றது விளங்குதா உங்களுக்கு?” என்றார் எஸ்.ஐ.

மோகன் தரையைப் பார்த்தபடியே இருந்தார். “நீங்க எங்கிட்ட ஏதேனும் பொய் சொன்னீங்கண்ணா அது சட்டவிரோதமானது. அதுக்கு ஜெயில் தண்டனை உண்டு. அதுக்கு அப்புறமும் ஒங்க முதலாளி ஒங்கள வேலையில வச்சிருப்பாரா?” என்றார் எஸ்.ஐ.

சாட்டையால் அடிபட்டவர்போல மோகன் எஸ்.ஐ.யை முறைத்துப் பார்த்தார். “நான் பொய் சொல்றேன்ங்கிறீங்களா?”

“அப்படி நான் சொல்லவே இல்ல. பொய் சொல்லி மாட்டிக்காதீங்கண்ணுதான் சொல்ல வந்தேன். இந்த விரால்ராசுக்கும் ஒங்களுக்கும் என்ன சம்பந்தம். மாமனா மச்சானா? நீங்க படிச்சு கௌரவமா வேலை செய்றீங்க. அவன் படிக்காத கிராமத்தான். அவன நீங்க பொய் சொல்லிக் காப்பாத்தத் தேவையில்லண்ணு சொல்லுறேன்.”

எஸ்.ஐ., விரால்ராசை ஒரு படிக்காத கிராமத்தான், என்று ஒரு மூடனை விவரிப்பது போல் விவரித்த அதே வினாடியில், மோகனின் மனதில் ஏனோ முன்பு அவன் பணம் நிரம்பி வழிந்த பையை முதலாளியிடம் கொடுத்ததும், அதிலிருந்து அவர் அவனை ஒரு செல்லப் பிள்ளை போல் நடத்துவது மட்டுமல்லாமல், அவனை ஒரு நம்பிக்கையான ஆளாக நடத்துவதும் மோகனுக்கு ஞாபகம் வந்தது. ஒரு வேளை விரால்ராசை, தான் காட்டிக் கொடுத்து, அந்த விசயம் முதலாளிக்குத் தெரிந்தால் அவர் தன்னைச் சும்மா விட்டுவைப்பாரா என்ற கேள்வியும் எழுந்தது மோகனின் மனதில்.

மோகனின் மௌனத்தைக் கண்ட எஸ்.ஐ., “மோகன் நீங்க படிச்சு வேலை பாக்கிற கௌரவமான மனிதர். உண்மையச் சொல்லுங்க போதும்,” என்றார்.

“சரி சார்.”

“அந்த வெள்ளிக்கிழமை. நான் சொல்றது புரியுதில்லோ மோகன், எந்த வெள்ளிக்கிழமையச் சொல்றேன்ண்ணு?”

“புரியுது சார். கொலை நடத்த நாள்.”

எஸ்.ஐ., “குட். நீங்க படிச்சிருக்கதால் கரைக்ட்டா சொல்றீங்க. அதே வெள்ளிக்கிழமையத்தான் சொல்றேன். அண்ணைக்கி விரால்ராசு எத்தனை மணிக்கு எஸ்ட்டேட்டை விட்டுக் கிளம்பினான்,” என்றார்.

“நாலு மணிக்கு சார். அதான் ரெஜிஸ்ட்டர்லயே பதிவாயிருக்கே.”

எஸ்.ஐ., “சார் ரெஜிஸ்ட்டர்ல என்ன பதிவாயிருக்குன்னு நான் கேக்கல. அவன் எத்தனை மணிக்கு இங்க இருந்து போனான். சிலர் அவன் சில சமயம் பன்னிரெண்டு மணிக்கே எஸ்ட்டேட்ட விட்டுக் கிளம்பி போயிருவான்னு சொல்றாங்களே?” என்றார்.

மோகன் சுதாரித்துக்கொண்டார், “அப்படி எல்லாம் போகல சார். அவன் அந்த வெள்ளிக்கிழமை நாலு மணிக்குத்தான் தோட்டத்த விட்டுப் போனான் சார்,” என்றார்.

“நாலு மணி வரைக்கும் இங்க இருந்ததை நீங்க கண்ணால பாத்தீங்களா? அல்லது இங்கதான் இருந்தாண்ணு நீங்க நம்புறீங்களா?”

“இங்கதான் இருந்தான் சார்.”

“கண்ணால பாத்தீங்களா?”

“ஆமா சார் கண்ணால பாத்தேன்,” என்று அதுவரை தரையைப் பார்த்துக்கொண்டு சொன்னவர், எஸ்.ஐ.யின் முகத்தைப் பார்த்துச் சொன்னார்.

எஸ்.ஐ., “நல்லா யோசிச்சு சொல்லுங்க மோகன். ஒங்க வேலையே நீங்க சொல்லுறதிலதான் இருக்கு,” என்றார்.

கோபமுற்ற மோகன், “நாந்தான் சொல்றேன்ல்ல சார். அவன் நாலுமணி வரைக்கும் இங்க வேலை செய்தான்னு” என்றார்.

எஸ்.ஐ., குரலைத் தணித்துக்கொண்டவராய், “உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன் மோகன். உண்மையச் சொல்லுங்க போதும்,” என்றார்.

“நான் உண்மையத்தான் சொல்றேன் சார்.”

“அப்பொம் ஏன் ஒங்க தோட்டத்தில் வேலை செய்ற ஒரு ஆள், விரால் சில சமயம் பன்னெண்டு மணிக்குப் போயிருவான்ணு சொல்ரான்,”

“அன்னைக்கு அவன் நாலுமணி வரைக்கும் இங்க இருந்தான் சார். அவன் எப்பமாவது முதலாளி வீட்டுக்கு வேலை செய்ய பன்னெண்டு மணிக்குப் போவன் சார். அவன் அப்படிப் போனால் அன்னைக்கு இங்க அவன் இல்லைண்ணு பதிவு செய்திருவோம் சார்,”

“அப்பிடிப் பதிவு செய்த நாள்களைக் காட்டுங்க பாப்போம்,”

மோகன் பதிவேட்டைப் புரட்டி, விரால்ராசு மாதம் இரண்டு மூன்று முறை மோகன் சொன்னது போல் அரை நாள் வேலை செய்ததாய் பதிவு ஆகியிருந்ததக் காட்டினார். மேலும், குறிப்பிட்ட அந்த வெள்ளிக்கிழமை மாலை நாலு மணி வரை வேலை செய்ததாய்ப் பதிவு ஆகி இருந்ததையும் காட்டினார்.

பதிவேட்டைப் புரட்டிப் புரட்டிப் பார்த்த எஸ்.ஐ., “இதுல விரால் மத்த நாள்ல முன்கூட்டியே போனாலும், வெள்ளிக்கிழமை சீக்கிரமாப் போனதா இல்லையே,” என்றார்.

மோகன் பதிவேட்டை மீண்டும் புரட்டி, கடந்த ஒரு ஆண்டில் விரால்ராசு ஐந்து தடவை வெள்ளிக்கிழமையில் அரைநாள் வேலை செய்ததாய்ப் பதிவு செய்திருந்ததைக் காட்டினார்.

எஸ்.ஐ. ஒரு பெரு மூச்சை இழுத்து விட்டார். பின், “மோகன் நல்லா யோசிச்சுச் சொல்லுங்க,” என்றார்.

மோகன், “நல்லா யோசிச்சுத்தான் சார் சொல்றேன். அந்த வெள்ளிக்கிழமை விரால்ராசு நாலு மணிக்குத்தான் போனான்,” என்றார்.

எஸ்.ஐ. வேறு வழி இல்லாதவராய், “மேலும் கேள்வி இருந்தா வருவேன், மோகன். உங்களுக்கு ஏதாவது சொல்லனும்மின்னு தோனினால் பக்கத்து போலீஸ் ஸ்டேசன்ல போய்ச் சொல்லுங்க, என்ன,” என்று விடை பெற்றார்.

எஸ்ட்டேட்டில் தோட்டவேலை செய்யும் அத்தனை தொழிலாளிகளையும் கடந்த பத்து ஆண்டுகளாய் மேற்பார்வை செய்யும் எஸ்ட்டேட் மேனேஜர் மோகன், தீவிரமாக யோசித்தார். எஸ்.ஐ. இளங்கோ, தன்னை விசாரிப்பதற்கு முன், எஸ்ட்டேட்டில் பலரையும் விசாரித்துவிட்டு, பின் அலுவலகம் சென்று அங்கு அனைவரையும் விசாரித்திருக்கிறார். அதன்பின் எஸ்ட்டேட் முதலாளி இராஜகோபாலையும் விசாரித்தார் எனக் கேள்விப்பட்டார். அடுத்து விரால்ராசுவைத் தீவிரமாய் விசாரித்துவிட்டு, அதற்கப்புறம்தான் தன்னை விசாரனை செய்ய வந்தார் என்பது மோகனுக்குத்தெரியும்.

ஓர் இரு வாரங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளையும் நினைத்துப் பார்த்தார் மோகன். அன்றொரு நாள் திடீரென எஸ்.ஐ. இளங்கோ வந்து விரால்ராசை விசாரணை செய்ததும். பின் விரால் முதலாளியின் கார் முன் விழுந்ததும் ஞாபகம் வந்தது மோகனுக்கு.

அன்று எஸ்.ஐ. இளங்கோ முன்னாலேயே முதலாளி இராஜகோபால் கேட்டார், “விரால், வெள்ளிக்கிழமை எத்தனை மணி வரைக்கும் வேலை செய்தான்,” என்று. அன்று மோகன், பதிவேட்டைப் புரட்டி, “நாலு மணி வரைக்கும் சார்,” என்றதும் ஞாபகம் வந்தது மோகனுக்கு.

ஆனால் மோகனுக்குத் தெரியும், விரால் சில வெள்ளிக்கிழமைகளில் சற்று முன்பாகவே கிளம்பிவிடுவான் என்று. சில சமயம் இரண்டு அல்லது மூன்று மணிக்கும், ஒரு சில வாரங்களில் ஏன் பன்னிரெண்டு மணிக்கேகூட கிளம்பிவிடுவான்.

மோகன் காலையில் இட்ட அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டுத்தான் செல்வான் விரால்ராசு. அதனால்தான் அவனை அவ்வாறு செல்ல அனுமதித்தோம் என்பதையும் நினைவுகூர்ந்தார் மோகன். தன்னைப் பொறுத்தவரை விரால் ஒரு உத்தமமான தொழிலாளி. ஒரு நாளும் அவன் வேலையிலிருந்து ஓடப் பார்க்கவில்லை, வேலையைத் தட்டிக் கழிக்கவில்லை. இட்ட வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு மாலையில் வேறு வேலை ஏதும் இருக்கிறதா என்று கேட்டுச் செய்துவிட்டுத்தான் செல்வான் விரால்ராசு. அவனுக்கு அசுர பலம் என்று தான் நம்பியதும் நினைவுக்கு வந்தது மோகனுக்கு.

மோகன் நினைத்து நினைத்துப் பார்த்தார். விரால்ராசுவைப் பொறுத்தவரை அவருக்கு ஓன்று மட்டும் தெரியும். அந்த வெள்ளிக்கிழமையன்று அவன் பன்னிரெண்டு மணிக்கே எஸ்ட்டேட்டை விட்டுக் கிளம்பிவிட்டான் என்று. மற்றப்படி விரால்ராசு சொல்வதில் எந்த ஒரு குழறுபடியும் இல்லை. ஏன் அடுத்த நாள் சனிக்கிழமை ஒரு பத்து மணி அளவில் அவனை முதலாளியின் வீட்டில் பார்த்த ஞாபகம்கூட இருந்தது மோகனுக்கு. ஒரு நாலு மணி நேரம்தான், அதுவும் தான் சொல்லித்தான் சென்றான். அதை மட்டும் வைத்து அவன் கொலைகாரன் என்பது அபத்தம். மற்றப்படி விரால் ஒரு தங்கம். அவனைவிட நல்லவன் இனிப் பிறக்கவேண்டும்.

விரால் இதுபோல் பல வெள்ளிக்கிழமைகளில் தன் பங்கு வேலையை முடித்துவிட்டுச் சீக்கிரம் கிளம்பி தேனி சென்று, உல்லாசமாய் இருந்துவிட்டு காலையில் மீண்டும் முதலாளியின் வீட்டில் வேலை செய்ததும், தனக்கு ஒரு பாட்டில் பிராந்தி வாங்கிவந்ததும் ஞாபகம் வந்தது. அது போலத்தானே அந்த வெள்ளியும் போனான். அதேபோல் அடுத்த நாள் முதலாளியின் வீட்டில் வேலை செய்தான். அந்த வெள்ளிக்கிழமை மட்டும் எப்படி அவனால் அவ்வளவு தூரம் சென்று ஒரு கொலையைச் செய்திருக்க முடியும்? தான் ஏதாவது உளறப்போய் ஒரு நிரபராதி கொலைக்குற்றம் சாட்டப் படுவதை மோகன் விரும்பவில்லை. அவ்வாறு நடந்தால் அது முதலாளிக்குத் தெரிந்தால் தன்னை வேலையில் வைத்திருப்பாரா என்றும் மீண்டும் எண்ணிப் பார்த்தார் மோகன்.

ஒரு நாலு மணி நேரம் விரால்ராசு எஸ்ட்டேட்டில் இல்லை, அவ்வளவுதான். எஸ்ட்டேட் எங்கே, அவன் ஊர் எங்கே? அந்த நாலு மணிநேரத்தில் விரால் கொலைசெய்தான் என்று சொல்வது அநியாயம் என்று பட்டது மோகனுக்கு. அப்படியே கொலை செய்திருந்தால், அக் கொலையைப் பார்த்தவர்கள் இருந்தால் அவர்கள் சொல்லட்டும். நாம் ஏன் ஒரு நிரபராதியைக் காட்டிக்கொடுக்க வேண்டும், என மனதில் உறுதி செய்துகொண்டார் மோகன். இருப்பினும் விரால்ராசைக் கேட்டுவிடுவது என்று முடிவுசெய்தார் மோகன்.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top