JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Aalamarathu Paravaigal - Chapters 45 & 46

Uthaya

Member
ஆலமரத்துப் பறவைகள் – அத்தியாயம் 45 & 46

45

சொல்லி வைத்தாற்போல் விரால்ராசு குறிப்பிட்ட நேரத்தில் கையில் பையோடு வந்து மோகன் வீட்டுக் கதவைத்தட்டினான். நல்லவேளை தன் மனைவி ஊருக்குப் போய் விட்டாள் என்று நினைத்தவாறே, கதவைத் திறந்த மோகன், “வா விராலு, ஊருக்குப் போக ரெடியாயிட்டாயா? ஏதாவது உதவி வேணுமா?” என்றார்.

விரால், “ரெடி சார். எனக்கு ஒண்ணும் தேவை இல்லை சார். நான் போயிட்டு வாரேன்னு சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன் சார். முதலாளி சொன்ன மாதிரி நாலே நாள்ல வந்திருவேன் சார்,” என்றான்.

“விரால், ஒரு நிமிசம் உக்கார். உங்கிட்ட கொஞ்சம் பேசனும்,” என்றார் மோகன்.

என்ன பேசப் போகிரார் என்று எண்ணியவாறே விரால்ராசு உட்கார்ந்தான். அவன் எதிரே அமர்ந்த மோகன், “விராலு, நீ நல்லவந்தான். எந்த வம்புக்கும் போகாதவந்தான். ஆனா நம்ம ரெண்டுபேருக்கும் தெரியும் நீ அந்த வெள்ளிக்கிழமை எத்தனை மணிக்குக் தோட்டத்தைவிட்டு கிளம்பினேன்ணு,” என்றார்.

விரால்ராசு எப்போதும்போல் பணிவாய், “ஆமா சார். நான் எப்பவும் போல தேனிக்குப் போயி நல்லா சாப்பிட்டுட்டு, தண்ணி அடிச்சிட்டு, சினிமா பாத்திட்டு வந்திட்டேன் சார்,” என்றான் அமைதியாக.

“கம்பம் தேனி தவிர, வேற அதைத்தாண்டி ஊர்ப் பக்கம் போகலயே,” என்றார் மோகன்.

விரால் மேனேஜர் முகத்தைப் பார்த்து, அமைதியாய் தலை அசைத்து, “இல்ல சார். எப்பவும் போலத்தான். ஊருக்குப் போறதா இருந்தா, ஒங்க கிட்ட சொல்லாம போயிருக்கேனா சார். காலையிலேயெ பையோடதான வருவேன். எஸ்ட்டேட்ல இருந்து ரெண்டு மணிக்கு கிளம்பினா, குமுளியில நாலு மணி பஸ்ச பிடிச்சு, பல பஸ் மாத்தி, அங்க அந்த எல்லையில, சங்கரங்கோயில்ல இருந்து எங்க ஊருக்குப் போற பத்து மணி கடைசி பஸ்ச பிடிக்கலாமிண்ணு போவேன் சார். அந்த வெள்ளிக்கிழமை நான் பை ஒண்ணும் கொண்டாரலையே சார். நான் எப்போம்போல தேனி போய்ட்டு வந்துட்டேன் சார். இப்பிடி கேள்வி வரும்ன்னு தெரிஞ்சா அத்தாட்சி வச்சிருப்பேன் சார். போலீசு பத்து பதினைஞ்சு நாள் கழிச்சு வந்து கேட்டா நான் என்ன செய்ய சார்,” என்று கவலையோடு சொன்னான் விரால்ராசு.

எஸ்ட்டேட் மேனேஜர் மோகன், விராலின் முகத்துக்கு அருகில் வந்து, சற்றுக் குரலைத் தழைத்துக்கொண்டு, “விராலு, எது எப்பிடியும் போகட்டும். அந்த வெள்ளிக்கிழமை நீ நாலுமணி வரைக்கும் இங்கதான வேல செய்த?” என்று அவனை நேராகப் பார்த்துக் கேட்டார்.

விரால்ராசு தலையை பலமாக ஆட்டி, “ஆமா சார், அதுதான் உண்மை. என் கழுத்தை அறுத்தாலும் அதத்தான் சொல்வேன். எக்காரணம் கொண்டும் ஒங்க வேலைக்கி ஆபத்து வராது சார். நான் நாலுமணி வரைக்கும் இந்த எஸ்ட்டேட்ட விட்டு எங்கேயும் போகலை சார்,” என்றான்.

எஸ்ட்டேட் மேனேஜர் மோகன், “சரிப்பா, அப்பம் ஊருக்குப் போய்ட்டு வா. சொன்னமாதிரி நாலு நாள்ல வந்திருப்பா,” என்று சொல்லி விராலை அனுப்பி வைத்தார்.




46

விரால்ராசு இரவெல்லாம் பயணித்து அடுத்த நாள் காலையில் சொந்த ஊரான பெரியாண்டபுரத்திற்கு வந்து சேர்ந்தான். வந்தவன் அவன் மனைவி பொன்னுத்தாயிடம் எஸ்ட்டேட்டுக்கு இரண்டாவது முறையாகப் போலீஸ் வந்ததையும், முதலாளி சொன்ன அறிவுரையையும் சொல்லி, இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குள் இரண்டு பேரும் எஸ்ட்டேட்டுக்குப் போய்விட வேண்டும் என்பதைத் தெளிவு படுத்தினான். அவளும் நிலைமையைப் புரிந்து கொண்டு அன்றே இலந்தைக்குளத்தில் இருந்த தன் பெற்றோர்களை, தன் சித்தப்பா மகனை விட்டுக் கூட்டி வரச்சொன்னாள். அவர்கள் கையில் தன் வீட்டை விட்டு விட்டு, தன் கணவனுடன் எஸ்ட்டேட்டுக்குப் போய்விட முடிவு செய்தாள்.

பொன்னுத்தாயின் பெற்றோர்களுக்கு விரால்ராசுவின் நிலைமை ஏற்கனவே தெரிந்திருந்ததால், அவர்கள் தங்கள் வீடு நிலம் எல்லாவற்றையும் தங்களோடு வாழும் தங்கள் மகனிடம் விட்டு விட்டு, மகளுக்கு உதவி செய்ய பொன்னுத்தாய் வீட்டிற்கு, அவள் சொல்லிவிட்ட அடுத்த நாளே வந்து சேர்ந்தனர். அவர்கள் அங்கேயே தங்கி மகளின் தோட்டத்தில் முக்கால்வாசி விளைந்துவிட்ட கடலையையும், கேப்பையையும் விளையவைத்து அறுவடை செய்துவிடுவதாக உறுதியளித்தார்கள்.

ஊரைவிட்டுப் போகுமுன் பொன்னுத்தாய் தன் வீட்டுச் சாமான்களை ஒழுங்கு படுத்தும் வேலையில் வெகு மும்முரமாக ஈடுபட்டிருந்தாள்.

பொன்னுத்தாய் வீட்டை ஒதுங்க வைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த வேளையில், விரால்ராசு ஊரில் தன் சொந்தக் காரர்களிடம் விடை பெற்றுக் கொள்ளவதற்காகப் பல வீட்டுப் படிகளை ஏறி இறங்கினான். அவ்வேலையாக விரால்ராசு, தங்கச்சாமி மைதிலி இருவரையும் பார்க்கச் சென்ற போது அங்கே தண்ணிக்காரியும் இருந்தாள்.

அவர்களுடன் சற்று நேரம் பேசிவிட்டுக் கிளம்ப இருந்தவனை மைதிலி, “விரால்ராசுத் தம்பி, இன்னைக்கி ராத்திரி எங்க வீட்டுல நீங்க ரெண்டு பேரும் சாப்பிட வாங்களேன்,” என்றாள்.

விராலுக்குத் தங்கச்சாமி ஒன்றுவிட்ட மாமன்மகன், இருவரின் தோட்டங்களும் அடுத்து அடுத்து இருந்தன. மேலும் விரால் சிறுவனாய் இருந்தபொழுது தங்கச்சாமி அவனை மிகவும் நேசத்துடன் நடத்தியதை அவன் இன்னும் மறக்கவில்லை. ஆகவே மைதிலி கூப்பிட்ட உடனே சரி என்று சொல்லிவிட்டான். விரால்ராசு மற்றச் சொந்தக்காரர்களைப் பார்த்துவிட்டு, இரவு சாப்பிடப் பொன்னுத்தாயோடு வருவதாய்ச் சொல்லிவிட்டுச் சென்றான்.

ஆனால் விரால் இரவு சாப்பிடக் கிளம்பும் பொழுது பொன்னுத்தாய்க்கு இன்னும் நிறைய வேலைகள் பாக்கி கிடந்ததால் அவளால் வர இயலவில்லை, எனவே விரால்ராசு மட்டும் தனியாகச் சென்றான்.

மைதிலி அதற்கு, “சரி பொன்னுத்தாய்க்குச் சாப்பாடு குடுத்துவிட்டாப் போச்சு,” என்றாள்.

விரால்ராசு போவதற்கு முன்பே தண்ணிக்காரியும் வந்திருந்தாள். அவன் வரவுக்காகக் காத்திருந்தவர்கள் போல் சிறிது நேரத்தில் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு முடிப்பதற்குள் இரவு நன்கு இருட்டிவிட்டது. நால்வரும் தரையில் அமர்ந்து சற்று நேரம் பேசிவிட்டுச் செல்லலாம் என எண்ணி பேச ஆரம்பித்தனர்.

அப்போது தண்ணிக்காரி தன் மடியில் வைத்திருந்த ஒரு துண்டை எடுத்து விரால்ராசுவிடம் நீட்டினாள். அந்தத் துண்டைக் கையில் வாங்கிய விரால்ராசு சிலையானான். அவசரமாக அத்துண்டைப் பிரித்து அதன் ஒரு முக்கில் இட்டிருந்த ‘வி’ என்ற குறியைப் பார்த்து ஒன்றும் பேச இயலாமல் விழித்தான். தன் பெயரின் முதல் எழுத்தான ‘வி’ என்ற அந்தக் குறி எஸ்ட்டேட்டில் துண்டு தொலைந்து போகாமல் இருப்பதற்காக அவன் போட்டது.

விரால்ராசு, “இது ஒங்ககிட்ட எப்பிடி வந்துச்சு? நான் தொலைஞ்சு போச்சுன்னு நெனைச்சேனே,” என்றான் பதட்டத்துடன்.

தண்ணிக்காரி, “அய்யா பயப்பட வேண்டாம். நான் இதுக்கு முன்னால இதப் பத்தி யாருட்டையும் சொல்லல. சரி இனி நீங்க எஸ்ட்டேட்டுக்கு குடிபெயரப் போறதுனால இதை குடுத்திரலாம்ன்னு நெனைச்சேன்,” என்றாள்.

சற்றுத் திருப்தி அடைந்த விரால், “இது எப்படி ஒங்ககிட்ட வந்தது,” என்றான்.

“ஊர்ல தீ விழுந்த அன்னைக்கி ராத்திரி நான் என் வீட்டு முத்தத்தில நின்னுக்கிட்டு இருந்தேன். அப்போம் ஒரு ஆளு ஓடுச்சு. ஓடும்போது அந்த ஆள் தோளில போட்டிருந்த துண்டு கீழ விழுந்ததைப் பார்த்தேன். அது நீங்கதான்னு ஒங்க வீட்டுக்குள்ள நுழையறப்போ நான் கண்டு பிடிச்சுக்கிட்டேன். வேற யாரு கையிலயும் சிக்கிரக்கூடாதுன்னு அந்தத் துண்ட நான் எடுத்து வச்சிக்கிட்டேன். என் வீட்டிக்குப் போய் விளக்கு வெளிச்சத்தில பாத்தா ரத்தக் கறை. அதனால பத்தரமா ஒளிச்சு வச்சிட்டேன்,” என்றாள் தண்ணிக்காரி.

விரால்ராசு சங்கடப்படுவதைக் கண்ட தண்ணிக்காரி, “அய்யா, நீங்க ஒண்ணும் பயப்பட வேண்டாம். கொடியவனைக் கொன்ன வீரன் நீங்க. எங்களைப் பொருத்தவரை நீங்க கம்சனைக் கொன்ன கிருஷ்ணன் மாதிரி. ஊரையே கெடுத்த ஒரு புத்து நோய் சங்கரலிங்கம், அவனைக் கொன்ன ஒங்கள நாங்க மூணுபேருமே பாராட்டுதோம். ஒரு நாளும் காட்டிக் குடுக்க மாட்டோம். இது சத்தியம்,” என்றாள்.

தங்கச்சாமி தலையை அசைத்து ஒத்துக் கொண்டான். மைதிலி, “தம்பி ஒங்களுக்கு கோடிப் புண்ணியம் எங்க குடும்பத்தைக் காப்பாத்தினதுக்கு,” என்றாள்.

இதையெல்லம் கேட்ட விரால்ராசு மனம் இளகினான். அதுவும் தண்ணிக்காரி நினைத்திருந்தால் தன்னைக் காட்டிக் கொடுத்திருக்கலாம். அதன்பின் எஸ்ட்டேட் முதலாளியால் கூடத் தன்னைக் காப்பாற்றி இருக்க முடியாது எனப் புரிந்துகொண்டான்.

விரால்ராசு அங்கு கூடியிருந்த மைதிலி, தங்கச்சாமி, தண்ணிக்காரி மூவரையும் நோக்கி, “நீங்கதான் என்னைக் காப்பாத்தியிருக்கீக. நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். இதுனால உங்க யாருக்கும் ஆபத்து வந்தாலும் நான் உண்மைய ஒத்துக்கிட்டு தண்டனைய அனுபவிக்கத் தயார்,” என்றான்.

மைதிலி குறுக்கிட்டு, “நீங்க பேசிக்கிட்டு இருங்க, நான் பொன்னுத்தாயிக்கு சாப்பாடு குடுத்திட்டு வந்திருதேன்,” என்று சாப்பாடோடு கிளம்பினாள்.

மற்றவர்கள் சரியென்று அவளை அனுப்பிவிட்டு, தங்கள் பேச்சைத் தொடர்ந்தார்கள்.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top