JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Aalamarathu Paravaigal - Chapters 47 & 48

Uthaya

Member
ஆலமரத்துப் பறவைகள் – அத்தியாயம் 47 & 48

47

தண்ணிக்காரி, “சரி நீங்க நன்றி சொன்னது போதும். எனக்கு ஒரு கேள்வி. எப்பிடி இவ்வளவு தூரம் வந்து அந்தக் காரியத்தைச் செய்திட்டு திரும்பியும் போய் வேலைக்குச் சேந்திட்டேக,” என்றாள். பின் தண்ணிக்காரி தொடர்ந்து, “சொல்ல பிடிக்கலைண்ணா சொல்ல வேண்டாம்,” என்றாள்.

ஒரு நிமிடம் அமைதியாய் இருந்துவிட்டு விரால் பேச ஆரம்பித்தான். “எனக்கும் யார்கிட்டயாது சொன்னாத்தான் நல்லதுன்னு படுது. யாருக்கும் தெரியாத இந்த ரகசியம் என் மண்டையக் கொடையிது. நான் எல்லாத்தையும் ஒங்ககிட்ட சொல்லிருதேன். நீங்க யார்கிட்டயும் சொல்ல மாட்டேகன்னு எனக்குத் தெரியும்,” என்று தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.

“நான் மொதல்ல இருந்து சொல்லுதென். அந்த வெள்ளிக்கிழமை, அதான் அந்த வெள்ளிக்கிழமை, சங்கரலிங்கம் தலைய நான் ஒரே வெட்டுல துண்டா வெட்டின நாள். பகல் பன்னிரெண்டு மணிவரைக்கும் மலையில குமிளிக்கும் மேல இருக்கித நீலாம்பரி எஸ்ட்டேட்ல நான் வேல செஞ்சிக்குட்டு இருந்தேன். மனசில சொல்லமுடியாத கவல. என் பொன்னுத்தாய் நெனப்பா என்னண்ணு சொல்ல மிடியல. மோகன் மேனேசரும் பாத்திட்டு, “என்ன விராலு நீ சரியில்லையே. வேணும்மிண்ணா தேனி போய்ட்டு வாரயா?”ன்னார். நான் மாசம் ஒரு வெள்ளிக்கிழமை பகல் பன்னிரெண்டு மணிக்கு எஸ்ட்டேட்ட விட்டுக் கிளம்பி, பஸ்ச பிடிச்சு தேனி வந்து நல்லா கறி முட்டை சாப்பிட்டுட்டு, மேல பிராந்தி அடிச்சிட்டு, சினிமாப் பாத்திட்டு, காலையில அஞ்சு மணி பஸ்ச பிடிச்சு எஸ்ட்டேட்டுக்குப் போயிருவேன்.”

அவனை இடை மறித்த தண்ணிக்காரி, “ஆமா பன்னிரெண்டு மணிக்கே வேல முடிஞ்சிருமா அங்க,” என்றாள்.

“நாலு மணிக்குத்தான் வேல முடியும். ஆனா எனக்கு எஸ்ட்டேட்டு மேனேசர் நல்ல பழக்கம். உண்மைய சொல்லப் போனா, எனக்கு எஸ்ட்டேட்டு முதலாளியயும் நல்லாத்தெரியும். சனி ஞாயரு முழுக்க முதலாளி வீட்டுலதான் வேல செய்வேன். அவருட்ட நான் தேனி போகணும்ன்னு சொன்னா, போய்ட்டு வான்னுதான் சொல்லுவாரு, ஆனா நான் பெரிய ஆள்ககிட்ட அத எதுக்கு சொல்லிக்கிட்டுன்னு சொல்றது இல்ல. அதனால மேனேசர்ட்ட சொல்லிட்டு பன்னிரெண்டு மணிக்கே கிளம்பிருவேன். மேனெசர் ரிக்காடுல நான் வேல செய்ததாதான் குறிச்சுகிடுவாரு. நான் அவருக்குத் திரும்பி வரும்போது, ஒரு சிறு பாட்டில் கொண்டாந்திருவேன். பாட்டில்காகவெல்லாம் மாறுகிற ஆள் இல்ல அவரு. நான் ஒரு நட்புக்காக வாங்கியாருவேன். ஆனா நான் அவருக்குப் பல உதவி செய்திருக்கேன், என்ன வேலைன்னாலும், சொந்த வேலையின்னாலும், மருக்காமச் செய்வேன், ராப் பகலுன்னு பாக்கமாட்டேன். ஒருதரம், ‘விராலு இந்தக் காரியத்த நாளைக்கு காலையில முதலாளி வாரதுக்கு முன்ன முடிச்சிரணும், இல்லாட்ட எனக்கு கெட்டபேர் வரும்,’ன்னார். எல்லாரும் போய்ட்டாங்க, நான் தனியா அவருக்காக ராப்பூராம் செமந்தேன். காலையிலதான் முடிச்சேன். நடு ராத்திரிக்கு மேல அவரே முடியாம உறங்கிட்டாரு. காலையில வந்து எனக்கு அப்பிடி நன்றி சொன்னாரு. நான் தனியா இருக்கம்மில்லோ, பொழுது அடையனுமில்லோ, அதுனால நான் யாரு என்ன உதவி கேட்டாலும் தயங்காமச் செய்வேன். ஆகையினால என்னை எல்லாருக்குமே பிடிக்கும். ஒங்களுக்குத்தான் தெரியுமே, நான் யாருக்கும் உதவி செய்கிர ஆளுன்னு.

“அந்த வெள்ளிக்கிழமையும், சரி ஒரு மாத்து இருக்கட்டுமேன்னு பன்னிரெண்டு மணிக்கு, மோகன் மேனேசரும் சொல்லிட்டாரேன்னு, தேனிக்கு கிளம்பினேன். எஸ்ட்டேட்ல இருந்து வெளிய வந்த ஒடனே லோடு ஏத்திக்கிட்டு கீழ இறங்குர லாரி ஓன்னைப் பாத்தேன். அது மாதிரி நெறைய லாரி போகும். எனக்கு அவங்களைப் பழக்கம். அது மாதிரிப் பலதடவை லாரியில ஏறியிருக்கேன். கைய நீட்டினேன். டைவர் நிறுத்தி என்ன ஏத்திக்கிட்டார். தேனிக்கு மூணு மணிக்கெல்லாம் வந்திட்டேன். நான் சாதாரணமா, பஸ்சப் பிடிச்சு, அஞ்சு ஆறு மணிக்குத்தான் தேனிக்கு வருவேன். தேனியில எறங்கின ஒடனே, சரி ஏதாவது சாப்புடுவோம்மின்னு புரோட்டாக் கடைக்குப் போனேன். அங்க சாப்பிட உக்காந்தப்போ, எனக்கு எதிர ரெண்டுபேர் பேசிக்கிட்டு இருந்தாங்க. அவங்களப் பாத்தா லாரி ஓட்டுற ஆள்கள் மாதிரித் தெரிஞ்சது.

“அண்ணே எங்க போரிங்கன்னேன்.

டைவர் இருந்துக்கிட்டு, சும்மா இராம, “திருணவேலி போறோம் வாரையா,”ன்னார்.

நான், “சரி அண்ணே வாரேன்,”ன்னேன்

“அப்பம் நாங்க சாப்பிட்டதுக்கு துட்டுக் குடுத்திருவயா?” ன்னு டைவர் கேட்டார்.

நான், “நீங்க எந்த வழியாப் போவேங்க,” ண்ணு கேட்டேன்.

“ராசபாளையம், சங்கரங்கோயில், திருணவேலி,”ன்னார் டைவர்.

அவ்வளவுதான், “சரி அண்ணேன். நானும் வாரேன். எவ்வளவு வேணுமின்னாலும் சாப்பிடுங்க. நான் துட்டக் குடுத்திருதேன்,”ன்னேன்.

என் மண்டைக்குள்ள ஊருக்குப் போ போன்னு எதோ ஒன்னு குடையிரதுக்கும், லாரி டைவர் வா வான்னு கூப்பிட்டதுக்கும் சரியா இருந்தது. என் மனசில என் வீட்டுக்காரி பொன்னுத்தாயோட நினைவா இருந்தேம்மின்னு நினைக்கேன். சாப்பிட்டதும் லாரில ஏறிட்டேன். நான் தனியா இருந்ததால கையில காசு எப்பவும் நெறையா வச்சிருப்பேன். சும்மா வெட்டியாச் செலவு செய்யமாட்டேன், ஆனால் தேவப்பட்டா கைகூசாமச் செலவழிப்பேன்.

“லாரில ஏறுனதுதான், வேற எதையும் நான் நெனைக்கல. எம் பொன்னுத்தாயி, எதிர்பாராம நான் வந்து நின்னா என்ன சொல்லுவா, எஸ்ட்டேட்ல மேனேசர் என்ன சொல்லுவாரு, முதலாளிக்குத் தெரிஞ்சா என்ன செய்வாருன்னு நான் நெனைக்கல. தேனில ஏறினதிலிருந்து நாலு அஞ்சு மணி நேரத்தில வன்னிக்கோனேந்தல் விலக்குல இறங்கி, ஊரப் பாத்து நடந்தேன். மணி எட்டு அல்லது ஒன்பது இருக்கலாம். நடந்து வந்துக்கிட்டு இருக்கையிலேயே, ‘அட வந்த அவசாரத்தில ஒரு முழம் பூ கூட வாங்கியார மறந்திட்டோம,’ன்னு நெனைச்சென்.

நம்ம ஊர் எல்லைக்குள்ள வந்திட்டன். நம்ம கிருஷ்ணசாமி அண்ணன் கிணத்து மாமரத்து ஓரமா வந்தேன். கையில ஒரு பேட்டரி லைட்டு எப்பவும் வச்சிருப்பேன், எஸ்ட்டேட்டு வழக்கம். டக்குண்ணு லைட்ட மரத்துமேல அடிச்சேன். மாங்கா நல்ல நேரிகாயாக் கெடந்தது. சரி ரெண்டு காய பறிச்சா கிருஷ்ணசாமி அண்ணன் ஒன்னும் சொல்லமாட்டாரு. அப்புடியே கேட்டா இந்த மாதிரி வீட்டுக்காரிக்கு ஒன்னும் வாங்கியாராம வந்திட்டேன்னு சொன்னா ஒன்னும் சொல்ல மாட்டாருன்னு நெனைச்சிக்கிட்டு, மரத்துமேல ஏறுனேன்.

“அப்பம் பாத்து பேச்சுக் கொரலு கேட்டது. ஒரு உந்துதல்ல அவன் என்னதான் சொல்லுதாம்ன்னு கேக்க நெனைச்சு மரத்து மேலேயே உக்காந்துக்கிட்டேன். ரெண்டு பேரும் பேசிக்கிட்டே வந்தான், முதல்ல யாருன்னு பிடிபடல. கிட்ட வரவர யாருன்னு புரிஞ்சு போச்சு. வேற யாரும்மில்ல, கள்ளன் சங்கரலிங்கமும் அவன் கூட்டாளி வெள்ளச்சாமியுந்தான். இலையோட இலையா ஒட்டிக்கிட்டேன். வந்தவன் ரெண்டுபேரும் மரத்துக்குப் பத்துப் பதினைஞ்சு அடி தூரத்தில, சரளுக்கு இந்தப்பக்கம் உக்காந்து பேச ஆரம்பிச்சான்.

“இவங்க ரெண்டுபேரும் சரளுக்கு இந்தப்பக்கம் உக்காந்திருக்கையில சரளுக்கு அந்தப்பக்கம் யாரோ ஒருத்தன் வந்து உக்காந்தான். அவன் வந்து உக்காந்தது இவங்க ரெண்டுபேருக்கும் தெரியாது. ஒரு வேள அந்தப்பக்கம் இருக்கவன் ஏதாவது சத்தம் குடுத்தான்னா இவங்க ரெண்டுபேரும் கலைஞ்சு போயிருவானுகளோன்னு பயந்தேன். ஆனா அந்த மனுசனும் இவங்க ரெண்டுபேரும் பேசுரத கேட்டுக்கிட்டு கம்முண்ணு இருந்தான். மூணுபேருக்கும் மாமரத்தில நான் உக்காந்திருக்கது தெரியாது.

“இந்த களவாணிப்பயக ரெண்டுபேரும் எம் பெண்டாட்டி, பொன்னுத்தாயி மேல கைவைக்க திட்டம் போட்டானுக. நான் மாமரத்துமேல உக்காந்துகிட்டு கேட்டுக்கிட்டே இருந்தேன். அவனுக பேசிரதக் கேக்ககேக்க ரத்தம் கொதிச்சது. எங்க என் மூச்சே நான் இருக்கிறதக் காட்டிக் குடுத்துடுமோன்னு பயந்து மூச்சைப் பிடிச்சுக்கிட்டேன். முழுப் பேச்சையும் கேட்டுட்டு இவனை இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பாத்திடனும்மின்னு முடிவெடுத்திட்டேன்.

“களவாணிப் பயல்களுக்கு ஒருத்தருக்கு ரெண்டுபேரு ஒட்டுக் கேட்டுக்கிட்டு இருக்கோம்ன்னு தெரியாது. அவ்வளவு மெத்தெனம். அவனுக ரெண்டுபேரும் எம் பெண்டாட்டிய பத்தி மட்டும் பேசல. தங்கச்சாமி மச்சான் வீட்டக்காவப் பத்தியும் பேசினானுக. பாவம், அப்பாவி, அவருக்கும் சேத்து பழி வாங்கனும்மின்னு நெனச்சேன்,” என்ற விரால்ராசு, தங்கச்சாமியைப் பார்த்தான். நல்லவேளை மைதிலி அங்கு இல்லை என்று எல்லோரும் நினைத்துக்கொண்டனர்.

தங்கச்சாமி, தலையையும் கையையும் அசைத்து தொடர்ந்து பேசு என சைகை செய்தான்.

விரால்ராசு தொடர்ந்தான், “மனசில ஒரு எண்ணம் உதிச்சது. சரி நாம அங்க எஸ்ட்டேட்ல வேல பாத்துக்கிட்டுக் கிடக்கோம், இங்க நம்ம பெண்டாட்டி இந்த வழியில இறங்கிட்டாளோன்னு? எம் பொன்னுத்தாயி அப்பிடிப் பட்ட ஆள் இல்ல. மானக்காரி. எந்தப் பயலும் வந்தான்னா செருப்பால அடிச்சு அனுப்பிருவா. அதையுந்தான் பாத்திருவோமே. அவ மட்டும் என்ன ஏமாத்தினான்னு தெரிஞ்சது, சிறுக்கி பிள்ள, அவளையும் போட்டுத்தள்ளிட்டு போயிரவேண்டுயதுதான்னு முடிவு பண்ணிக்கிட்டேன்.

“என் வீடுதான் தெரியுமே, வெளிய காம்பவுண்டு மாதிரி மாட்டுத்தொழு, உள்ள ஒரு பக்கம் வீடு. தொழுவுக்குள்ள போயி ஒளிஞ்சிக்கிட்டேன். என் வீட்டுக்காரிக்குக்கூடத் தெரியாது நான் ஊருக்கு வந்ததும், ஒளிஞ்சிருக்கதும்.

அப்போழுது மைதிலி, பொன்னுத்தாயிக்குச் சாப்பாடு கொடுத்துவிட்டுத் திரும்ப வந்து, மற்றவர்களுடன் சேர்ந்துகோண்டு கேட்க ஆரம்பித்தாள்.

விரால்ராசு தொடர்ந்தான், “காத்துக்கிட்டே இருந்தேன், ரெம்ப நேரம் ஆனமாதிரி இருந்தது. பேசாம வீட்டுக்குள்ள போய் சாப்பிட்டுப் படுப்போமான்னு நினைச்சேன். ஆனா அந்த சங்கரலிங்கமும் வெள்ளச்சாமியும் பேசுன பேச்சு ஞாபகம் வந்தது. உடம்பெல்லாம் இறுகி முறுக்கேருச்சு. சரி விடிய வரைக்கும் ஆனாலும் காத்திருப்போம்ன்னு இருந்தேன். ஊர் அடங்கின பின்னதான வருவான்னு காத்திருந்தேன். ஊர் அடங்கி நாய் ஊளையிட ஆரம்பிச்சிருச்சு. சத்தம் மொத்தமும் அடங்கினபின்னால, அருவாள் வெள்ளச்சாமி தொழுக்கதவ தொறந்துக்கிட்டு உள்ள வந்தான். நேரப் போயி வீட்டுக் கதவ தட்டுனான்.

“எம் பெண்டாட்டி கதவத் தொறக்காமலே, “யாரு,” ன்னா

வெள்ளச்சாமி, “நாந்தான், வெள்ளச்சாமி வந்திருக்கேன். ஒரு நிமிசம் கதவத் தொற,” ண்ணான்.

பொன்னுத்தாயி கதவத் தொறந்து, “என்ன அண்ணென்,” ன்னா

“ஓனக்கு நல்ல நேரம் பிறந்திருச்சு. சங்கரலிங்கம் கூட்டியாரச் சொன்னாரு. வா, இனிமே ஒனக்குச் சங்கிலி சரப்புளியெல்லாம் கெடைக்கும்,” ன்னான்.

“எம் புருசனுக்குத் தெரிஞ்சா அவனை மட்டுமில்ல, ஒன்னையும் வெட்டிச் சாச்சிருவான். என்ன நெனைச்சிக்கிட்டு இங்க வந்த நீ. நாய்க்குப் பெறந்த பயலே, பேசாமப் போறயா செருப்பால அடிக்கவா?”ன்னு வஞ்சு, டப்புன்னு மூஞ்சில அடிச்சமாதிரிக் கதவையும் சாத்திட்டா.

“எம் பொன்னுத்தாயி அப்பிடிச் சொன்ன ஒடனெ, என் ஓடம்பெல்லம் வேர்த்து ஒரு ஆவேசம் வந்தது. அவ, அவ பங்கச் செஞ்சிட்டா. இந்தத் திருட்டு நாய்க மறுபடியும் வரமாட்டான்னு என்ன நிச்சயம். அடிமேல் அடி வச்சா அம்மியும் நகரும். அதுக்கு நான் எடம் குடுக்கலாமா. எம் பொன்னுத்தாயி அவ கடமையச் செஞ்சிட்டா. நான், ஆம்பள, எங்கடமைய செய்யவேண்டாமா? இந்த களவாளிப்பயகள விட்டு வைக்கலாமா?

“அருவாள் வெள்ளச்சாமி பளபளண்ணு அருவாள கையில பிடிச்சுக்கிட்டு திரும்பி நடந்தான். ரெடியா மம்பெட்டிக் கணைய கையில பிடிச்சிக்கிட்டுத்தான் ஒளிஞ்சிருந்தேன். அவன் தொழுக்கதவத் தொறக்கப் போகயில சடேர்ன்னு மம்பெட்டிக்கணையால மண்டையால ஓங்கி ஒரு போடு போட்டேன். பய சரிஞ்சிட்டான்.

“ஒரு இமைகூட தாமதிக்கல, வெள்ளச்சாமியோட அருவாள எடுத்துக்கிட்டு ஓடுனேன். யாரும் பாத்திடக்கூடாதுன்னு பயம், சீக்கிரமாப் போகணும்ங்கிற வெறி. வீட்டுக்கு வீடு இடையில கோடியிருக்குல்லோ அதுவழியா குறுக்கு வழியில தலைதெறிக்க ஓடுனேன். எனக்கு அதெல்லாம் அத்துப்படி, அந்தக் கோடிகளெல்லாம் நான் சின்ன வயசில விளையாண்ட இடங்க. ஒரு தெருவத்தாண்டி அடுத்த தெருவில் உள்ள மாட்டுத்தொழுவுக்குள்ள இருக்கிற ரூமலதான் சங்கரலிங்கம் காத்துக்கிட்டு இருப்பான்னு தெரியும்.

“வெள்ளச்சாமிய அடிச்சுப்போட்டு ஒரு நிமிசந்தான் இருக்கும், தொழுவுக்குள்ள நொழஞ்சிட்டேன். தொழுவுக்குள்ள பாதி இடம் தொறந்த வெளின்னாலும் ஒரே இருட்டு. நான் மாமரத்து மேல இருக்கும்போது ஆகாயம் வெள்ளி பூத்து கொய்ண்ணு வெளிச்சமா இருந்தது, அதுக்குள்ள மேகம் கூட, ஆகாயத்து வெள்ளியெல்லாம் மறஞ்சு போச்சு. அந்த கொஞ்ச நேரத்துக்கு முன்னால இருந்த வெள்ளியும் வெளிச்சமும் ஓடிப்போச்சு, இருட்டு மட்டும்தான் கைதூக்கி நின்னது. அது எனக்குச் சாதகமா அமைஞ்சது. ரூம் கதவு சாத்தியிருந்தது. ‘அண்ணே அண்ணே,’ன்னு கூப்பிடேன்.

“சங்கரலிங்கம், அருவாள் வெள்ளச்சாமிதான்னு நெனச்சு வெளிய வந்தான். ஒரு கணம் கூட இமைக்கல. ஓங்கி ஒரே வெட்டா தலைய வெட்டிட்டேன். நான் அருவாளத் தூக்கிக்கிட்டு அலையிற ஆள் இல்லன்னாலும், எஸ்ட்டேட்ல அருவாள் எனக்கு பழக்கமான ஆயுதம். ஏன், நாலு வருசமா நம்ம ஊர் பெரியாண்டசாமி கோயில் கொடையில என்னத்தான் கெடா வெட்ட கூப்பிடுவாங்க. நான் எங்கபோனாலும் கோயில் கொடைக்கு வந்திருவேன். அதுனால அருவாள் என் கையில விளையாடினது. இருந்தாலும் அதுவரைக்கும் அப்பிடி ஒரு வெட்ட நாம் பாக்கல. சங்கரலிங்கம் தல தெறிச்சு எட்டடி தள்ளி விழவும், வெள்ளச்சாமி தொழுவுக்குள்ள நுழையவும் சரியா இருந்தது. அவனும் நான் வந்த அதே கோடிவழியாத்தான் ஓடி வந்திருக்கணும். மூச்சு வாங்குச்சி அவனுக்கு. வந்த வேகத்தில எம் பக்க்..கத்தில வந்திட்டான். அருவாளை ஓங்கிட்டேன்.

“தப்பினாப் போதும்முன்னு ரூம்குள்ள ஓடி ஒளிஞ்சிக்கிட்டான். உள்ள இருட்டுக் கசமா இருந்தது. உள்ள போயி அவன கண்டுபிடிக்க முடியாது. நம்மளப் பிடிச்சிக்கிட்டு கூச்சல் போட்டான்னா மாட்டிக்கிடுவோமேன்னு நினைச்சேன். ஒரு செக்கண்டுல யோசன தோணிச்சு. டக்குன்னு சட்டை பையில இருந்த தீப்பெட்டிய எடுத்து, நான் கெட்டியிருந்த வேட்டிய உருவி தீ பத்தவச்சு ஓலை கூரமேல போட்டுட்டேன். அன்னைக்குப் பாத்து நான் வேட்டிக்குள்ள கால்சட்டயோ கோமணமோ கட்டல. அதப்பத்தியெல்லாம் கவலப்படுற நேரமில்ல அது. நான் தொழுவில ஒளிஞ்சுக்கிட்டு இருக்கையில வேர்த்ததுன்னு கால்சட்டய களத்திப் போட்டிருக்கணும். கூரையில உள்ள ஓலை நல்லா காஞ்சு கெடந்தது, ஒரு நிமிசத்துக்குள்ள பத்தி எரிய ஆரம்பிச்சிருச்சு. வெள்ளச்சாமிக்கு நான் வந்தது தெரிய வாய்ப்பே இல்ல. வெள்ளச்சாமி தீயில எரியட்டும், நாம இனி தப்பிக்கிற வழியத்தான் பாக்கணுமின்னு முடிவு செய்தேன்.

“உடம்புமேல போட்டிருந்த ஊதாச் சட்டைதான். கீழ வேட்டியோ கோமணமோ கிடையாது. ஆனா இடையில பெரிய இடைவார் (பெல்ட்) போட்டிருந்தேன், அதுலதான் என் துட்டுகிட்டு, முக்கியமான சாமானெல்லாம் வச்சிருந்தேன். தோளில துண்டு கிடந்ததா, என் தொழுவிலயே போட்டுட்டேனான்னு தெரியல. தல தெறிக்கக் கோடிவழியா ஓடி என் வீட்டுக் கதவ தட்டினேன். அந்த அவசரத்திலயும் கையில வச்சிருந்த அருவாள எங்கேயாது போட்டுறணுமிங்கத மறக்கல. கோடி வழியா ஓடி வாரவழியில ஒரு மாட்டுத்தொட்டி இருந்தது, அந்தத் தொட்டிக்குள்ள கெடந்த தண்ணிக்குள்ள போட்டுட்டேன்.

“வீட்டுக்குப் போனா, எம் பொன்னுத்தாயி என்னப் பாத்திட்டு பதறிப் போயிட்டா. ‘பயப்படாத, ஒன்னக் கெடுக்க இருந்தவனப் போட்டுத்தள்ளிட்டேன்,’ன்னேன். வீட்டுக்குள்ள இழுத்து கதவ மூடிட்டா. வாளியில தண்ணிய ஊத்தி, ‘சட்டைய அவித்திட்டு, சட்டிபான கழுவிர இடத்தில உக்காந்து குளிங்க’ன்னா. வேற வேட்டி சட்டயக் குடுத்து இப்பமே போங்கன்னா. “பொன்னுத்தாயி, நாளைக்கே ஒங்க சின்னையா மகங்கிட்ட போயி ஒரு கடிதம் போடு. நல்லா யோசிச்சு எழுது. தொழுவில கீழ முக்குல நான் ஒளுஞ்சு இருந்தேன், அங்க என்னோட லைட்டு, கால்சட்ட, துண்டுகிண்டு ஏதும் கிடந்தாலும் எடுத்து வச்சிக்கொ,”ன்னு சொல்லிட்டு பின் பக்கம் வழியா ஓடிட்டேன்.

மணி பன்னிரெண்டு அடிக்கல, மெயின் ரோட்டுக்குப் போறவரைக்கும் ஓட்டமா ஓடினேன். ஒரு லாரிவந்தது, கைய நீட்டுனேன், என் நல்ல நேரத்துக்கு நிறுத்தி ஏத்திக்கிடுச்சு. ராசபாளையம் போய்ச் சேந்திட்டேன். அங்க இருந்து நான் நெறையாத்தடவ லாரியில போயிருக்கேன். ரெண்டு லாரி மாத்தி காலையில அஞ்சு மணிக்கு, தேனியில எறங்கிட்டேன். அங்க இருந்து பஸ்சப் பிடிச்சு குமுளி வந்து ஓட்டமா ஓடி ஒம்போதரை மணிக்கு மொதலாளி வீட்டுக்கு வேலைக்குப் போய்ட்டேன். நான் போயி அரைமணி நேரம் கழிச்சுத்தான் மொதலாளி காலயிலயே எஸ்ட்டேட்டைச் சுத்திப் பாத்திட்டு வீட்டுக்கு வந்தார். மொதலாளியம்மா நான் போனபிறகுதான் எழுந்திரிச்சாங்க. என்ன யாரும் தேடல. நான் எப்பொழுதும் போல, ஒம்பது மணிக்கு வேலைக்குப் போனது மாதிரி நடந்துக்கிட்டேன்.

“என்ன அம்மணமாப் பாத்த யாரோ அம்மணத் திருடன் கொல செய்திட்டதா வதந்தியப் பரப்பிட்டாங்க. அடுத்த நாள் கடிதம் எழுதும்போது என் பொன்னுத்தாய் அதையும் சேத்து எழுதச்சொல்லி எனக்கு அனுப்பிட்டாள்,” என்று தன் கதையைச் சொல்லி முடித்தான்.

விரால்ராசு முடித்தவுடன் தங்கச்சாமி, “விராலு, நீ மரத்தில உக்காந்துக்கிட்டு இருக்கையில சரளுக்கு அந்தப் பக்கம் வந்து உக்காந்த்து நான்தான்,” என்றான்.

“அப்பிடியா,” என்று விரால்ராசு ஆச்சரியப் பட்டான்.

தண்ணிக்காரி தன் பங்குக்கு, “நாந்தான் அம்மணத் திருடன் கொலை செய்திட்டான்னு சொல்லி வதந்தியக் கிளப்பினேன். வேணுமின்னுதான் அப்படிச் செய்தேன்,” என்றாள்.

விரால்ராசு, “அதுவும் நல்லதுக்குத்தான்,” என்று முடித்தான்.

சில நிமிடங்கள் அங்கு அமைதி நிலவியது.




48

பேச்சுச் சுவாரசியத்தில் பொழுது போனதே தெரியவில்லை. விரால்ராசு உட்ப்பட அவர்கள் நால்வரும் விரால்ராசின் ரகசியத்தைச் சுமந்தவர்கள் மட்டுமல்ல, அதனைக் காப்பாற்றுபவர்களாகவும் ஆனதனால் அதுவே அவர்களை மிக நெருங்கிய நண்பர்களாய் ஆக்கிவிட்டது.

அன்றிரவு பிரிந்து போகுமுன் தண்ணிக்காரி, “நாளைக்கி என் வீட்டில சாப்பிட வாங்க எல்லாரும்,” என்றாள்.

எல்லோரும் அடுத்த நாள் தண்ணிக்காரி வீட்டுக்குச் சாப்பிட வருவதாக ஒத்துக் கொண்டனர். அதன்படி அடுத்த நாள் நால்வரும் தண்ணிக்காரி வீட்டில் இரவுச் சாப்பாட்டுக்காகச் சந்தித்தனர். பொன்னுத்தாயின் வீடு ஒதுங்கவைக்கும் வேலை இன்னும் ஓய்ந்தபாடில்லை, ஆகவே அன்றும் அவளால் தண்ணிக்காரியின் வீட்டுக்குச் சாப்பிடப் போக இயலவில்லை.

நெருங்கிய நண்பர்களாய்விட்ட அவர்கள், முன் தினம்போல் நல்ல சாப்பாட்டுக்குப் பின் பல கதைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.

இடையில் தண்ணிக்காரி, “வாழ்க்கை நம்மள எப்பிடி எல்லாம் சோதிக்கிது. இது கடவுள் செய்ற விளையாட்டா இல்ல, நம்மதான் வழிதெரியாமப் போய்க்கிட்டு இருக்கமா?” என்றாள்.

அதைக் கேட்ட மைதிலி, தண்ணிக்காரியைப் பார்த்து, “ஏங்க்கா,” என்றழைத்தாள். இப்போதெல்லாம் தண்ணிக்காரியை அவள் அப்படித்தான் அழைத்தாள். தண்ணிக்காரியும் என்ன என்பதுபோல் பார்த்தாள்.

மைதிலி, “எங்களுக்கு ஒரு சந்தேகம். இவ்வளவு புத்திசாலியா இருக்கேகளே நீங்க எப்பிடி இந்த...” என்று, எப்படி முடிப்பது என்று தெரியாமல் நிறுத்திவிட்டாள்.

தண்ணிக்காரி, “நான் எப்பிடி இந்தத் தொழிலுக்கு வந்தேன்னு கேக்கேகளா?” என்றாள்.

“தப்பா நெனைக்கலன்னா சொல்லுங்க,” என்றாள் மைதிலி. மற்றவர்களும் தலையசைத்து ஆமோதித்தனர்.

தண்ணிக்காரி, “நானே சொல்லனுமின்னுதான் இருந்தேன். இது நாள் வரைக்கும் யாரும் கேக்கல. இப்பமாவது கேட்டேகளே. எனக்குச் சொந்த ஊர் சாத்தூர்ப் பக்கம் வீரங்குளம். எங்க அம்மா அப்பா ரெண்டுபேரும் வேற வேற சாதி. ரெண்டுபேர் வீட்டுலயும் பயங்கர எதிர்ப்பு அவங்க கல்யாணத்துக்கு. எங்க அப்பா. “நீ வேணும்மின்னா ஒங்க அப்பா அம்மா சொல்ரபடி செய்துக்கோ. இப்பிடி சுத்தமா உறவெல்லாம் ஒதறிட்டு வரவேண்டாம்,”ன்னு சொன்னாக. ஆனா எங்க அம்மா ‘நான் வாழ்ந்தா ஒங்களோடதான் வாழ்வேன்,’ன்னு சொல்லிட்டாங்க.

“அதில இருந்து எங்களுக்கு உறவுன்னு சொல்லிக்கிட யாருமே இல்ல. ரெண்டுபேரும் சங்கரங்கோயிலுக்கு வந்து, வீடு வாங்கி, கடை வச்சு வித்தாங்க. பலசரக்கு, மளிகைச்சாமான் கடை. கடை நல்லா ஓடுச்சு. போதுமான அளவு லாபம் வந்தது. இதெல்லாம் எனக்கு எங்க அம்மா அப்பா சொன்னது. வீட்டில நான் ஒரே குழந்தை. நல்லா செல்லமா வளத்தாங்க. வாழ்க்கை தேனா இனிச்சது. படிக்க வச்சாங்க. எஸ்.எஸ்.எல்.சி வரைக்கும் நல்லா படிச்சேன். அதோட போதும்மின்னு நிறுத்திட்டாங்க. ஒரு வருசத்திலேயே கல்யாணமும் பண்ணி வச்சி நல்ல சீர் செனத்தையெல்லாம் குடுத்து அனுப்பிவச்சாங்க,” என்றாள் தண்ணிக்காரி.

விரால் குறுக்கிட்டு, “அடப்பாவி அவன் ஒங்கள கைவிட்டுட்டுப் போயிட்டானா?” என்றான் கோபமாக.

தண்ணிக்காரி, “அதெல்லாமில்ல. எம் புருசன் என்ன நல்லாவே பாத்துக்கிட்டாக. அவுக இருக்கவரைக்கும் எனக்கு ஒரு கொறையும் இல்ல. எனக்கு கல்யாணமாகி மூணு வருசத்தில ஒரு பெண் குழந்தை பிறந்தது. அம்மா அப்பா, என் வீட்டுக்காரரு எல்லாருக்கும் ரொம்ப சந்தோசம். குழந்தை நல்லா வளந்தது. ஒரு நாள் கடைய சாத்திட்டு வீட்டுக்கு வரையில, எங்க அம்மா அப்பா ரெண்டுபேரையும் லாரி அடிச்சுப் போட்டிருச்சு. ரெண்டுபேரும் அந்த இடத்திலேயே இறந்திட்டாங்க,” என்று கண்ணைத் துடைத்துக்கோண்டாள் தண்ணிக்காரி. மைதிலியும் கண்ணைத் துடைத்துக்கொண்டாள். மற்றவர்கள் அய்யோ பாவம் என்பதுபோலப் பார்த்தார்கள்.

விரால், “மனுசனோட வாழ்க்க அப்பிடி. யாருக்கு எது எப்பம் வருமின்னு சொல்ல முடியாது,” என்றான்.

ஒரு நிமிடம் கழித்து, மீண்டும் தண்ணிக்காரி தொடர்ந்தாள், “அப்பங்கூட எனக்கு என் வீட்டுக்காரர் இருந்து ஆறுதல் சொல்லி அணைச்சி வச்சிக்கிட்டார். ரெண்டு வருசம் போச்சு. ஆங், என் வீட்டுக்காரரும் பலசரக்குக் கடைதான் வச்சிருந்தாரு, கோவில்பட்டியில. நாங்க அங்கதான் இருந்தோம். எங்க பழைய உறவுக்காரங்ககூட நாங்க நல்லா இருக்கதைப் பாத்து திரும்பி வர ஆரம்பிச்சாங்க. நானும் எங்க அப்பா அம்மா இறந்த பாதிப்பில இருந்து மெல்ல மெல்ல சரியாகிகிட்டு வந்தேன். அப்பந்தான் இந்த சங்கரலிங்கம் எங்கெயிருந்தோ வந்தான்,” என தண்ணிக்காரி சொல்லவும், “அடப் பாவி” என்றான்,” தங்கச்சாமி. மற்றவர்கள் வாயைப் பொத்திக்கொண்டனர்.

தண்ணிக்காரி தொடர்ந்தாள், “எங்க வீட்டையாவோட அடிக்கடி வருவான், சாப்பிடுவான். என்னப் பாத்து ரொம்ப அழகா இருக்கன்னு சொல்வான். நான் நல்ல மனுசன்னு நெனச்சேன். எங்க வீட்டையாவும் அவனை நம்புனார். அவங்கூட வியாபாரம் செய்தார். ரெண்டு வருசம் எல்லாம் நல்லபடி போச்சு. அதுக்கு பிறகு வியாபாரத்தில சில பிரச்சனை வந்தது. அதை இத வித்து எங்க வீட்டையா சரிக்கட்டிட்டார். கடன் இருக்குன்னார். சரி வேலபாத்துக் கெட்டிரலாம் அப்படின்னு சொன்னேன். அவரும் சரி இது ஒன்னும் பெரிய பிரச்சனையில்ல, நான் சமாளிச்சுக்கிடுதேன்னார்.

“சங்கரலிங்கம் கூடவே இருந்தான். எங்க வீட்டைய்யாவுக்குப் பக்க பலமா இருந்தான், அப்பம் அப்பிடித் தோணுச்சு எங்களுக்கு. பல பத்திரங்களில எங்கிட்ட இருந்தும் எங்க வீட்டைய்யாகிட்ட இருந்தும் சங்கரலிங்கம் கையெழுத்து வாங்கினான். ஆனால் எப்பவும் அன்பா பேசுவான். ஒன்னும் கவலப்படவேண்டாம்ன்னு சொன்னான். அதனால நானுங் கேள்வி கேக்கல. என் புருசன் எல்லாம் அறிஞ்சவர்தான், ஆனா ஏனோ அவன் சொன்னதை நம்பினார். அதுமட்டுமில்ல, எம் புருசன் சங்கரலிங்கம்கூட சேந்த பிறகு, அப்ப அப்பம் குடிச்சிட்டு வருவாரு. நான், சரி ஆம்பளைக்குக் கவல இருக்கும், எப்பமாவதுதான குடிக்காகன்னு ஒன்னும் சொல்லலை. எம் புருசன், எல்லாம் சரியாப் போச்சு இனிமேல் பிரச்சனையில்லன்னு சொன்னாரு. நான், சரி கெட்ட காலம் முடிஞ்சதுன்னு நெனச்சேன்.

“ஒரு நாள் எம் புருசன் குடிச்சிட்டு வந்தாரு. வந்தவுடனே வாந்தி எடுத்தாரு. தண்ணிகுடுத்து வாயக்கொபபிளிக்கச் சொன்னேன். சட்டய அலசிப்போட்டேன். திரும்பிப்பாத்தா, மேலும் வாந்தி எடுத்தார். இப்பம் ரத்தம் கலந்து இருந்தது. நான் பய்ந்துபோய், ‘என்ன என்ன,’ன்னேன். அவரால பேச முடியல. நெஞ்சப் பிடிச்சிக்கிட்டார். எனக்குக் கையும் ஓடல காலும் ஓடல. பக்கத்து வீட்டு ஆளக்கூப்பிட்டு, குதிரைவண்டி பிடிச்சு ஆஸ்பத்திரி போரத்துக்குள்ள இறந்தே போனாக. என் உலகமே நின்னு போச்சு.

“துக்கம் கேக்க வந்த சொந்தக்காரங்க எல்லாரும், எங்கே என்னயும் ஏங்குழந்தையையும் பாத்துக்கிட வேண்டியது வந்திருமோன்னு உடனே போய்ட்டாங்க. சங்கரலிங்கம் மட்டும் வந்து போயிட்டு இருந்தான். நல்லா பாத்துக்கிட்டான். வாரத்தில ரெண்டு நாள் வந்து எல்லாம் நல்லா இருக்கான்னு கேட்டு சிலசமயம் மளிகைச்சாமாங்கூட வாங்கிக் குடுப்பான். ஒரு சில நாள் ராத்திரி தங்கினான். நான் ஒண்ணும் சொல்லல. ஆனா மெல்ல மெல்ல எங்கிட்ட இருந்த காசு எல்லாம் செல்வாயிப்போச்சு. அவன் காசு குடுத்து உதவுனான்.

“ஒரு வாரம் கழிச்சு, இனி இங்க இருக்கவேண்டாம் நாம தெங்காசி போயிரலாம். அங்க வீடு வாடக கம்மியா இருக்கும், எனக்குத் தெரிஞ்ச ஆள்கள் இருக்கிற ஊர்ன்னு சொன்னான். எனக்கு வேற வழியில்ல. சாமான பெறக்கிக்கிட்டு தெங்காசியில அவன் பாத்து வச்சிருந்த வீட்டில குடியேருனேன். வீடு சின்ன வீடு. ஒரு ரூம், சமையல் அறை, திண்ண, அவ்வளவுதான். சாமான் எல்லாம் வாங்கிக்குடுத்து என் மகளுக்கு வேண்டியதெல்லாம் செய்தான். மொத ரெண்டு நாள் திண்ணையில படுத்துக்கிட்டான். மூணாம்நாள் சாரல் மழை ஆரம்பிச்சது. நானே சொன்னேன். உள்ள படுங்க, திண்ணையில மழை அடிக்கப்போவுதுன்னு. அவ்வளவுதான் சில நாள்களிலேயே அவன் செய்த உதவிக்குக் கைம்மாறா எங்கிட்ட சலுகைகள எடுத்துக்கிட்டான். நானும் நமக்கு இனி யாரும் இல்ல, இந்த ஆள் உதவி செய்தாரு, இவர பகச்சிகிட்டா நாம எங்க போகமுடியும்ன்னு அவரு கேட்டதைக் குடுத்திட்டேன்.

“ஒரு மாதம்கூட இருக்காது, எனக்கு வியாபார வேல இருக்கு போய்ட்டு வாரன்னான். அதே மாதிரி நாலு நாள் கழிச்சு வந்தான், ஒரு நாள் தங்குனான் போயிட்டு ரெண்டு ஒரு நாள் கழிச்சு வந்தான். இப்பிடி வாரம் ரெண்டு மூணுநாள் வருவான், சாமான் வாங்கிக்குடுப்பான், போயிருவான். கையில காசு கொஞ்சம்தான் குடுப்பான், ஆனால் வீட்டுக்கு வேண்டிய சாமானெல்லாம் வாங்கிப் போட்டான். போகப் போக வாரம் ரெண்டு நாள் தங்குனாலே பெருசு. ஒரு வருசம் ஓடிப்போச்சு.

“ஒரு நாள் ஏம் மகளுக்குக் கடுமையான காய்ச்சல், வாந்தி பேதி. சங்கரலிங்கம் ஒரு வாரமா தலையக் காட்டல. கையில காசும் இல்ல. கவுர்மெண்டு ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப்போனேன். ராத்திரில வந்திருக்கேயம்மா பெரிய டாக்டரெல்லாம் போய்ட்டாங்களே. தனியார் ஆஸ்பத்திரிக்குப் போனா பாப்பாங்கண்ணாங்க. ஆனால் எங்கிட்ட காசு இல்ல.

“என்ன ஒருத்தன் பாத்துக்கிட்டே இருந்தான். நான் ஆஸ்பத்திரிய விட்டு வெளிய வரவும், அவன் ஏம் பின்னால வந்து கூப்பிட்டான். நான் நிண்ணேன். பக்கத்தில வந்து, “நான் ஒனக்கு நூறு ரூபாய் வாங்கித்தாரேன், நீ நான் சொல்றபடி செய்வயா,” ன்னான். அவன் என்ன சொல்லுதான்னு எனக்குப் புரிஞ்சு போச்சு, ஒரு நிமிசம் யோசிச்சேன், சரின்னு சொல்லிட்டேன். மொதல்ல காசு குடுன்னேன். அவன் முடியாது, ஆனா நிச்சயம் சொன்ன படி தருவேன்னு சொன்னான். ஒரு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனான். கொஞ்சநேரம் கழிச்சு நூறு ரூபாயோட ஏம் பிள்ளயத்தூக்கிக்கிட்டுத் தனியார் ஆஸ்பத்திரிக்கு ஓடுனேன். டாக்டர் ஏங்குழந்தையப் பாத்திட்டு, “என்னம்மா கொழந்த இறந்துபோச்சேன்னாரு.”

“அங்கேயே அரைமணிநேரம் பித்துப்பிடிச்சுப் போய் உக்காந்திருந்தேன். நர்ஸ், வீட்டுக்கு போம்மான்னா. நான் அப்பிடியே எங்கேயாது விழுந்து செத்திருக்கணும். ஏம் பிரச்சனை அதோட போயிருக்கும். ஏம் பிள்ளய அடக்கம் பண்ணிறதுக்குத்தான் அந்த நூறு ரூபாய் உதவிச்சு, காப்பாத்தயில்ல. அதுகூட, பொது மக்கள் உதவி செய்யப்போயி. ஆத்தில குளிச்சிட்டு வீட்டுக்கு வந்தேன். இருந்ததைச் சாப்பிட்டும் சாப்பிடாமலும் கெடந்தேன்.

“மேலும் ஒரு வாரம் ரெண்டு வாரம் ஓடியிருக்கும், சங்கரலிங்கம் வரல. வீட்டில குந்துமணி அரிசி இல்ல. அப்பந்தான் வயிரு அகோரமாப் பசிச்சது. வேற வழியே இல்ல. இருக்கெதுலேயே நல்ல துணியாப் போட்டுக்கிட்டு கவுர்மெண்டு ஆஸ்பத்திரி பக்கம் போனேன். அதே ஆள் வந்தான். “ஒங்குழந்தை எப்பிடி இருக்கு,”ன்னான். அவங்கிட்ட என் பிரச்சனைய சொல்ல பிடிக்கல. ‘நல்லா இருக்கு’ன்னு சொல்லிட்டேன்.

“பாத்தான். துட்டு வேணுமான்னான். நான் பேசவே இல்ல. ‘அம்பதுதான் இருக்குண்ணான்.’ நான் பதில் சொல்லலை. நடந்தான், பின்னாலயே போனேன். அம்பது ரூபாய் குடுத்தான். கடையில போயி வயிராறச் சாப்பிடேன். அன்னைக்குத்தான் சாப்பாடு ரொம்ப ருசியா இருந்த மாதிரி இருந்தது.

“ரெண்டு நாள் கழிச்சு ஆஸ்பத்திரி போனேன். அந்த ஆள் வந்தான். “உண்மையிலேயெ எங்கிட்ட பத்து ரூபாதான் இருக்கு. ரெண்டு நாளுக்கு ஒருக்க அம்பது நூறு குடுக்க எனக்கு வசதி இல்ல. ஆனா எனக்குத் தெரிஞ்ச ரெண்டு பேருகிட்ட இருந்து நூறு ரூபா வாங்கித்தாரேன்னான். அன்னைக்கு நூத்திப்பத்து ரூபாயோட வீட்டுக்குப் போனேன். அதுக்குப் பெறகு, வாரம் ரெண்டுதடவ ஆஸ்பத்திரிக்குப் போவேன் அந்த ஆள் ரெண்டோ மூனோ ஆள்ட்ட இருந்து அம்பது அம்பது ரூபா வாங்கித்தருவான். அவனுக்கும் எனக்கும் ஒரு பேசாத ஒப்பந்தம் ஏற்பட்டுருச்சு. ஒரு ஆளுக்கு அவனுக்குப் பத்து ரூபான்னு.

“எனக்குத் தொழில் பழக்கப்பட்டு ஒரு மாசங்கழிச்சு, சங்கரலிங்கம் வந்தான். ‘என்ன இவ்வளவுநாளா காணோம்,’ன்னேன். ‘எனக்கும் வேல இருக்கு, வீடுகுடும்பம் இருக்கு, வியாபாரமிருக்கு. வியாபார விசயமா ரொம்ப அலையவேண்டியதாய்ப் போச்சு,’ன்னான். நான் ஒன்னும் பேசல. சுத்துமுத்தும் பாத்தான். ‘பிள்ளய எங்க,’ன்னான். நான் பதிலே பேசல. எப்பிடி சமாளிச்சன்னான். அதுக்கும் நான் பேசல. அப்பிடி இப்பிடிச் சுத்திப் பாத்தான். அவனுக்குப் புரிய ரொம்ப நேரம் பிடிக்கல.

“சரி நான் வந்து போகலாமா? இல்ல... ண்ணு இழுத்தான். எப்பவும் போல வந்து போன்னுட்டேன். வாரம் ஒரு தடவ வருவான். எதாவது வாங்கிக் குடுப்பான், அடுத்த நாள் போயிருவான். ஆறு மாசங்கூட போயிருக்காது, ஒரு நாள் சங்கரலிங்கம் வந்திருந்தான். திடீர்ன்னு வீட்டுக்கு வெளிய கூட்டம். என்னண்ணு பாத்தா ஆம்பள பொம்பள எல்லாரும் என்னத்தான் அடிக்க வாராங்க. “இது குடும்பங்க இருக்க எடம், வேற எங்கயாவது போயித்தொலன்னு சொன்னாங்க. அந்த கூட்டத்தில ஒரு மூணு பேராவது எனக்கு பழக்கமானவங்க.

“சங்கரலிங்கத்தப் பாத்தேன். பேசாம எங்கூட எங்க ஊருக்கு வந்திரு. எனக்கு ஊருல ரெண்டு வீடு இருக்கு, ஒன்னுல நீ தங்கிக்கோன்னான். எதுக்கு அப்பிடிச் செய்தானோ தெரியல. ஒரு வேள அந்த நிமிசத்தில ஒரு வேகத்தில செய்தானோ அல்லது, தான் செய்ததுக்கு பிராயச்சித்தம் தேடினானோ என்னவோ. ஒரு வேள அவனுக்கு லாபம் இருக்குமின்னு செய்தானோ தெரியல. என்ன இங்க கூட்டிவந்து முதல்ல ஒரு வீட்டில குடி வச்சான். ஆனா நான் நடுத் தெருவில எல்லாரோடையும் குடி இருக்கிறது சிலபேருக்குப் பிடிக்கவில்லை. அதுக்கு அப்புறம்தான் நான் இப்பம் இருக்கிற வீட்ட கெட்டினான், ஊர் மக்கள் சொன்னமாதிரி கடைசி வீட்டவிட்டு அம்பது அடி தள்ளி கெட்டி, என்ன அதில குடி இருக்க வச்சான்.

“நான் இங்க வந்த பிறகுதான் அவன் வீட்டுக்காரி வேலம்மாள் ஊர் மக்கள் எல்லாரையும் பாத்தேன். நான் இங்க குடி வந்து மூணு நாள்தான் ஆயிருக்கும் ஒரு ஆள் கதவ தட்டிருச்சு. தொறந்தேன். சிரிச்சுக்கிட்டே உள்ள வந்து பத்து ரூபாய நீட்டுது,” என்றாள்.

“யார் அது,”ன்னான் விரால்ராசு.

“அய்யா, அது எதுக்கு இப்போம். ஏன் சொல்லுதேன்னா ஊர் மக்களுக்கு புரிஞ்சி போச்சு, யாரும் சொல்லாமலே. இந்த ஊர் பொம்பளன்னா தொடமாட்டாங்க. நான் யாரோதான. வந்து மூணாம் நாளே ஊருக்குச் சொந்தமாயிட்டேன் நானு.

“அதுக்கு பிறகுதான் சாராயம் பிராந்தி விக்கச் சொல்லிக்கொடுத்தான் சங்கரலிங்கம். வியாபாரம் நல்லாப் போச்சு. அப்பங்கூட சங்கரலிங்கம் என்ன ஏமாத்தினதா நினைக்கல. ஒரு நாள் நல்லாக் குடிச்சிட்டு பேசினான். அப்போம் சொன்னான், ‘நாந்தான் சாராயத்தில விசத்தக் கலந்து குடுத்தேன் ஒம் புருசனுக்கு,’ன்னு.

“நான் ஏன் அப்பிடிச் செய்தீகன்னேன். ‘அவன் போகப் போக அந்த காசு எங்க, அந்த நிலத்தை வித்திட்டு வேற இடம் வாங்குவோம், வெலதான் ஏறிருச்சே, அப்பிடின்னு பேச ஆரம்பிச்சான். சரி, இனி இவன விட்டு வச்சா காரியத்தக் கெடுத்திருவான்னு புரிஞ்சு போச்சு. நீயும் எம் பார்வைய புரிஞ்சமாதிரி தெரியல. ஒன்னையும் தொடாம இருக்க முடியல. என் துருதுருக்கிற கையக் கட்டுப்படுத்த முடியல. எல்லாத்துக்கும் சேத்து ஒரு நல்ல முடிவாச் சொல்லுன்னு சாமிய வேண்டிக்கிட்டேன். சாமியும் வழியகாட்டிருச்சு,’ன்னு சொல்லிச் சிரிச்சான்.

“அன்னைக்கே அவன் தலையில அம்மிக்கொளவிய தூக்கிப் போட்டு கொன்னுருக்கனும். நான் ஏன் செய்யலன்னு தெரியல. அதுல இருந்து அவன எப்பிடிப் பழி வாங்கிறதுன்னு யோசிச்சேன்,” என்று முடித்தாள் தண்ணிக்காரி.

அதுவரை அமைதியாய் இருந்த மைதிலி, “ஒங்க பேரு எப்பிடி தண்ணிக்காரிண்ணு மாறிப்போச்சு?” என்று கேட்டாள்.

“அது ஒரு சிறு கதை,” என்றாள் தண்ணிக்காரி.

“சொன்னாக் கேக்கத்தயாரா இருக்கோம்,” என்றான் தங்கச்சாமி.

“ஒரு நாளு, நான் இங்க வந்து ஒரு வாரந்தான் இருக்கும். பகல் பன்னிரெண்டு மணி, வெயிலு கொழுத்திது. ஒரு வயசான ஆள் வீட்டுக்குள்ள நொழஞ்சாரு. என்னையே உத்துப் பாத்தாரு. நானும் அவரைப் பாத்தேன். வயது எழுபது எம்பது இருக்கும். முதுகு கூனிப்போயி இருந்துச்சு. தண்ணி வேணும்மின்னாரு. ஒரு நொடி யோசிச்சேன், பின்ன டக்குனு செம்பு நெறைய தண்ணி மோந்து குடுத்தேன். கடகடன்னு குடிச்சாரு. குடிச்சிட்டு, “ஒம் பேரு என்ன,”ன்னு கேட்டாரு. நான், “அங்கயற்கண்ணி,”ன்னு சொன்னேன். அவர் காதில எப்பிடி விழுந்ததோ. வெளிய போய் எம் பேரு, ‘தண்ணிக்காரி’ன்னு எல்லாரிட்டையும் சொல்லிட்டாரு. அடுத்த வாரமே சங்கரலிங்கம் சாராயம், பிராந்தி விக்க ஏற்பாடு பண்ணினான். அதுல இருந்து நான் தண்ணியும் வித்தேன். ஆக அந்தப் பேரே தங்கிப்போச்சு,” என்று முடித்தாள்.

அன்று இரவு வெகுநேரம் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்துவிட்டு பிரியுமுன், அதுவரை தண்ணிக்காரி என்றழைக்கபட்ட அங்கயற்கண்ணி, நாளைக்கும் இங்கேயே சாப்பிடவாங்க என்றாள். பேச்சு இனிமையாகப் போய்க்கொண்டிருந்ததை ரசித்த அவர்கள் அனைவரும், விரால் போகுமுன் கடைசியாக மேலும் ஒருநாள் சந்திதுப் பேச விரும்பியதால் எல்லோரும் வருவதாக ஒத்துக்கொண்டனர்.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top