JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Aalamarathu Paravaigal - Chapters 51 & 52

Uthaya

Member
ஆலமரத்துப் பறவைகள் – அத்தியாயம் 51 & 52

51

எஸ்.ஐ. இளங்கோவும் இன்ஸ்பெக்டர் ராஜாவும் ஜீப்பில் ஊரைச் சுற்றிப் பார்ததுக் கொண்டிருக்கையில் தற்செயலாக தூரத்தில் தெரிந்த பெரியாண்டசாமி கோவில் மரங்களைப் பார்த்தார் இன்ஸ்பெக்டர்.

இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.யை நோக்கி, “அங்க என்ன இளங்கோ அவ்வளவு பெரிய மரங்கள், அதுவும் ஒரு காடு மாதிரி அடர்த்தியாக இருக்கு?” என்றார்.

எஸ்.ஐ., “அது இந்த ஊர்க் கோவில் சார். ரொம்பப் பெரிய சதுக்கம், சுற்றிலும் மரங்கள். பெரிய கோவில் மட்டுமில்ல, சரித்திரப் பெருமை வாய்ந்ததும் கூட,” என்றார்.

ஆச்சர்யப்பட்ட இன்ஸ்பெக்டர், “அப்படியா! இந்த மாதிரி உள்ள இருக்கிற ஊர்ல இவ்வளவு பெரிய கோவிலா? அதுவும் சரித்திரப் பெருமை வாய்ந்ததா? எனக்கு சரித்திரத்தில பிரியம் உண்டு. அந்தக் கோவிலப் போய்ப் பாக்கலாமா?” என்றார்.

எஸ்.ஐ., “தாரளமாப் பாக்கலாம் சார். அதுக்கு முன்னால ஒரு மனிதரைப் போய்ச் சந்திப்போம். அவர் உங்களுக்கு இந்த ஊர் கோவிலைப் பத்திச் சொல்வார். அதுக்குப் பின்ன நாம கோவிலைப் பாப்போம். ஏன் அந்த மனிதரே நம்ம கூட வந்தாலும் வருவார்,” என்று சொல்லி ஜீப்பை சண்முகையா வீட்டுக்கு விடச்சொன்னார்.

ஜீப், சண்முகையா வீட்டில் நிற்கவும், சண்முகையா சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தார். போலீஸ் ஜீப் நிற்பதைப் பார்த்து வெளியே வந்து, “என்ன சார், என்ன வேணும்,” என்றார் எஸ்.ஐ.யைப் பார்த்து.

எஸ்.ஐ., “சார் திடீர்ன்னு வந்து நிக்கிறதுக்கு மன்னிக்கணும். இவங்க புதுசா வந்திருக்கிற இன்ஸ்பெக்டர் ராஜா. உங்க ஊர்க் கோவில் சரித்திரத்தைப் பற்றி தெரிஞ்சுக்கிட ஆசைப்பட்டாங்க. அதுதான் உங்ககிட்ட கூட்டி வந்தேன். நீங்கதான் அந்த விசயத்தில பெரிய ஆள்ன்னு,” என்றார்.

சண்முகையாவை கோவில், சரித்திரம் என்ற வார்த்தைகள் உற்சாகமூட்டின. உடனே முகம் மலர்ந்து, “வாங்க வாங்க, உள்ள வாங்க உக்காந்து பேசலாம்,” என்று உள்ளே அழைத்தார்.

சண்முகையா வீட்டில் அனைவரும் அமர்ந்தபின் அவர் பெரியாண்டபுரத்தின் கதையைத் தொடங்கினார்.

முன்காலத்தில இந்த ஊரை மூவரிருந்தாளிண்ணு அழைச்சாங்க. முதல்ல இந்த ஊருக்கு மூவரிருந்தாளிண்ணு பேர் எப்பிடி வந்ததுன்னு பாப்போம். ஏன்னா அதுவும் இந்த ஊர் சரித்திரத்துல மட்டுமில்ல, இந்த ஊர்க் கோவில் சரித்திரத்துக்கும் முக்கியமானது. அந்தக்காலத்தில இந்த ஊரை மூன்று அரசர்கள் ஆண்டு வந்ததாக வாய் வழிச் செய்தி. அதனால இந்தப் பேர் வந்ததாகச் சொல்லப் படுது.

அப்படி வழிவந்த இந்த ஊர் அரசனுக்கும், அதாவது மூவரிருந்தாளி அரசனுக்கும், கயத்தாறு அரசனுக்கும் கோவில் கட்டும் போட்டி நடந்தது. யார் முதலில் கோவிலைக் கட்டி முடிக்கிறார்கள் என்று. மூவரிருந்தாளி அரசன் கல்லைச் செதுக்கி, கல்லால் கோவில் கட்டினான். அவன் பாதி கட்டிக்கொண்டிருக்கும் போதே கயத்தாறு அரசன் சுட்ட களிமண்ணில் சிலைகள் செய்து கோவிலை முதலில் முடித்துவிட்டான். ஆகவே கயத்தாறு அரசன் போட்டியில் வென்றான்.

முயல் வேட்டையில் வெல்வதைவிட யானை வேட்டையில் முயன்று தோற்பதே மேல் என்று வள்ளுவன் சொல்லி இருக்கிறான்.

“கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது.”

என்பது குறள், அச்சொல்லுக்கு ஏற்றபடி, பெருமுயற்சில் ஈடுபட்டு முதலில் முடிக்காததால் தோற்றான் மூவரிருந்தாளி அரசன்.

முயற்சி பெரிதெனினும் தோல்வியை ஒப்புக்கொண்டான் மூவரிருந்தாளி அரசன். தோல்வியைத் தழுவிவிட்டு அவன் உயிருடன் இருக்க விரும்பவில்லை. ஆகவே அவனும் அவன் அரசியும் அக்கோவிலின் அருகே இருந்த தெப்பக்குளத்தில் விழுந்து உயிர் துறந்தார்கள் என்கின்றது வரலாறு.

என்று ஊர்க் கோவிலின் கதையைச் சொல்லி முடித்த சண்முகையா தொடர்ந்து, “கயத்தாறு அரசன் போட்டியில ஜெயித்தாலும் அவன் களிமண்ணால் கட்டிய அந்தக் கோவில் நாளாவட்டத்தில அழிந்து போய்விட்டது. ஆனால் மூவரிருந்தாளி அரசன் கல்லால் கட்டின கோயில் இன்னும் இருக்கு. நீங்க வேணுமிண்ணா போய்ப் பாக்கலாம். நானே உங்க கூட வந்து கோயில சுத்திக் காட்டுரேன். பிற்காலத்தில அந்த அரசன் கட்டிய கோவிலின் பெயரையே இந்த ஊருக்குச் சூடி இதை பெரியாண்டபுரம்ன்னு அழைக்க ஆரம்பித்தார்கள்,” என்றார்.

அவர்கள் அனைவரும் உடனே எழுந்து பெரியாண்டசாமி கோவிலைப் நோக்கிச் சென்றனர். ஜீப் கோவிலை நெருங்க நெருங்க, அக்கோவிலின் வளாகமே இன்ஸ்பெக்டர் ராஜாவை பிரமிக்க வைத்தது.

கோவிலின் நான்கு எல்கைகளிலும் எண்ணற்ற பெரிய வாகைமரங்கள், பத்து இருபது அடி இடைவெளியில் வளர்ந்து நிழல் தந்ததோடு கோவிலின் எல்கையையும் வரையறுத்துக் காட்டியது. அம்மரங்களின் இடையில் முட்டளவு உயரமுள்ள மண் கரை போடப்பட்டு இருந்தது. அந்தப் பரப்பின் நீளம் ஆயிரம் அடியும், அகலம் எழுநூறு அடியும் இருக்கும். மேற்கு எல்லையிலிருந்து இருநூற்றைம்பது அடி கிழக்கே ஒரு பிரமாண்டமான ஆலமரம் இருந்தது. அது மிக உயரமாயும் வெகுவாய் பரந்தும் இருந்தது மட்டுமன்று அதன் நூற்றுக் கணக்கான விழுதுகள் தரையைத்தொட்டு வேரூன்றி அவைகளும் மரங்கள் போல் தோன்றின. அதன் பருமனை உள்ளடக்க ஐம்பது பேர் கை கோர்த்த வண்ணம் வட்டம் அமைத்து நின்றால்தான் அடக்க முடியும் போல் தோன்றியது. அதற்குக் கிழக்கே இருநூறு அடி தூரத்தில் பெரியாண்டவன் கோவில் கிழக்கு நோக்கி நின்றது. பெரியாண்டவனுக்கு எதிரே ஐம்பதடி தூரத்தில் இருபது நந்திகள் வரிசையாக நின்றன. அவற்றில் நடுவில் நின்ற நந்தி படுத்துக் கிடந்தாலும் ஐந்தடி உயரம் இருக்கும்.

கிழக்கு நோக்கி நிற்கும் பெரியாண்டவனின் இடப்புறம் நூறு அடி தள்ளி மூதாதையர்கள் சிலைகள் கிழக்கு நோக்கி நின்றன். அங்கிருந்து இரு நூறு அடி கிழக்கே நடு ஆலமரம் நின்றது. அதற்குக் கிழக்கே, கிழக்கு எல்கையிலிருந்து நூறு அடி மேற்கே, கிழக்கு ஆலமரம் இருந்தது. கிழக்கு ஆலமரத்தின் அருகே சுடலைமாடன் கோவில் இருந்தது. மூன்று ஆலமரங்களும் பார்ப்பதற்குப் பிரமாண்டமாகத் தோன்றின. அவையும், கோவிலின் எல்கையைச் சுற்றி நின்ற வாகை மரங்களும் அக்கோவில் ஒரு மாபெரும் காட்டுக்குள் இருப்பதைப் போன்ற தோற்றத்தை அளித்தன.

அவர்கள் சென்ற நேரம் அந்தி நேரமானதால் ஆல மரங்களில் எண்ணற்ற மைனாக்களும், காக்கைகளும், கொக்குகளும் இரவுக்கு அடைய வந்து சேர்ந்த வண்ணம் இருந்தன. அப்பறவைகளின் கூக்குரல் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு மாபெரும் இசைக் கலைஞனின் இசைக் கச்சேரிபோல் இருந்தது. மரத்துக்கு அடியில் சென்றால் பறவைகளின் எச்சத்தில் குளிக்க வேண்டியதிருக்கும் என எச்சரிக்கவே எவரும் மரத்தின் அடியில் செல்லவில்லை.

“இவ்வளவு பெரிய மரங்கள் இருந்தும் இதன் நிழல் உபயோகமில்லையா? இதன் அடியில் சிறுவர்கள் விளையாட முடியாதா?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர் ராஜா.

அதற்கு சண்முகையா, “இல்ல சார். பறவைகள் சாயுங்காலம்தான் அடைய வரும். மற்ற நேரங்களில் சில பறவைகள்தான் இந்த மரங்களில் இருக்கும். அந்த நேரங்களில மக்கள் மரநிழலில் ஒதுங்குவாங்க. அது மட்டுமில்லை அந்த நடு ஆலமரம்தான் சிறுபிள்ளைகளுக்கு விளையாடப் பிடித்தமான இடம். அதுல உள்ள ஆலம் விழுதுகளில் கயறுகட்டி ஊஞ்சல் ஆடுவார்கள். மரத்தில ஏறி மரத்தான் விளையாடுவாங்க. ஆலம்பழம் காலத்தில் அதைப் பறித்து உண்டும் அனுபவிப்பார்கள். இப்படி அந்த மரம் இந்த ஊர் மக்களுக்கு ரொம்ப உபயோகப்படும்,” என்றார்.

இன்ஸ்பெக்டர், “அங்கே மேற்கே இருக்கிற பெரிய ஆலமரத்தில விளையாடுவாங்களா?” என்றார்.

சண்முகையா, “அந்த மரதுக்குப் பேரே பெரிய ஆலமரம்தான். அதன் வயது ஐநூறு வருசம் இருக்கும் எங்கிறார்கள். மரத்தின் நடுவுக்குப் போகபோக அதன் விழுதுகள் அதிகமாக இருக்கிறதனால நிறைய இடைவெளிகளும் பொந்துகளும் இருக்கு. அதில நாகம் ஒண்ணு இருப்பதா வேறு நம்பிக்கை. அதனால சின்னப் பிள்ளைகளை அந்தப் பெரிய ஆலமரத்தில விளையாட நாங்கள் அனுமதிக்கிறதில்லை,” என்றார்.

இன்ஸ்பெக்டர், “அங்க மணல் கிடக்கே, என்ன காரணம்?” என்று தென்கிழக்கைச் சுட்டிக்காட்டினார்.

“அந்த மணல் பல விசயங்களுக்கு உபயோகப்படும். சாய்ந்திர நேரங்களில் சிறு பிள்ளைகள் முதல் வாலிபர்கள் வரை இந்த மணலில், கபடி, கிளித்தட்டு, மல்யுத்தம் போன்ற, பலவிதமான விளையாட்டுக்கள் விளையாடுவார்கள். மிளகாய் காய்க்கிற காலங்களில் மிளகாய்ப் பழத்தைக் காயப்போட்டு வத்தலாக ஆக்குவதற்கு இந்த மணலப்போல சிறந்தது வேறு இல்ல,” என்றார்.

இன்ஸ்பெக்டர், “இந்தப் பக்கம் ஒரு சதுக்கமா இடம் கிடக்கே. இங்க ஏதாவது நடக்குமா?” என்று நடு ஆலமரத்தின் வடக்குப் பகுதியைக் காட்டினார்.

எஸ்.ஐ. உற்சாகத்தோடு, “சார் ஒரு வருசம் இந்தக் கோவில் கொடைக்கு நான் வந்திருக்கேன். இந்த கோவில் மாசிப் படைப்பு விழா பிரமாண்டமானது. இந்தச் சுற்று வட்டாரத்திலேயே மிகப் பெரியது. நீங்க காட்டிய இடத்திலதான் சாமி ஆட்டம் நடந்தது. நான் பார்த்து ரொம்ப ரசிச்சேன்,” என்றவர், “நான் அதைப் பற்றிச் சொல்லலாமா?” என்று சண்முகையாவைப் பார்த்தார்.

சண்முகையா, “தாராளமாச் சொல்லுங்க சார்,” என்றார்.

எஸ்.ஐ. ஆரம்பித்தார்:

அன்னைக்குப் பாத்தது இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. நான் சும்மா காவல் பந்தோபஸ்த்து காரியமாத்தான் வந்தேன். கோவில் திருவிழா என்னை ஈர்த்திருச்சு, நான் நின்று நிதானமா கோவில் கொடையப் பாத்திட்டுப் போக முடிவு செய்தேன். சரி அதைப் பற்றி முழுவதும் சொல்லாம சாமி ஆட்டம் பற்றி மட்டும் சொல்றேன். வடக்குப் புறம் இருக்கும் சின்ன மூதாதையார் கோயில் முன்னால ரெண்டு பேர் ஆடினாங்க. அவர்கள் நெத்தியில் விபூதி பூசி, சாமி அவர்கள் மேல் வந்து இறங்குவதை எதிர்பார்த்துக் காத்திருந்தாங்க. சாமி அவர்கள் மேல வந்து இறங்கியபின், முதல்ல அவங்க தலை சுத்துச்சு, பின்ன உடம்பே சுத்திச்சு. அப்புறம் ஆட ஆரம்பிச்சாங்க. சாமி முழுதுமாக தங்கள் மேல் இறங்கிய பின் குதித்துக் குதித்து ஆவேசமாக ஆடுனாங்க. ஆனா, அவங்க ஆட்டம் எனக்கு அவ்வளவா பிடிக்கல.

சரி வேற இடத்துக்குப் போகலாம்ன்னு கிளம்ப நினைக்கயில மேற்கே இருந்து இன்னொரு சாமி ஆடிக்கிட்டே வந்துச்சு. இந்தச் சாமி உயரமா இருந்ததோட மட்டும் இல்லாம கத்தோலிக்க மதத்தில போப்பாண்டவர் மாதிரி வெள்ளை அங்கியும் உயரமா வெள்ளைக் குல்லாவும் வச்சிருந்தது. அப்போம் அந்தச் சாமியப் பார்க்கையில ரொம்ப உயரமாத் தெரிஞ்சது.

அந்தச் சாமி பெரிய மேளதாளத்தோட வந்தது. சாமியைத் தொடர்ந்து ஆறு பேர் அடங்கிய குழு மேளம் அடிச்சுக்கிட்டே வந்தாங்க. அதில நாலு பேர் பலவிதமான மேளங்களை அடிச்சாங்க, ரெண்டு பேர் குழல் ஊதினாங்க. சாமி ஆவேசமா அங்கும் இங்கும் துள்ளிக் குதிச்சு ஆடியது ஒரு நடனம் ஆடுறமாதிரி இருந்தது. இந்தச் சதுக்கத்துக்கு வந்ததும் நடுவில பெரிய வட்டமான இடம் விட்டு கூட்டம் கூட ஆரம்பிச்சது. என்னண்ணு கேட்டேன். சார், சாமி குறிசொல்லப் போவுதுன்னு சொன்னாங்க. சரின்னு நானும் ஒரு பக்கம் நின்னு பாத்தேன். சாமி அருமையா ஆடிக்கிட்டே இருந்தது.

சாமி வலக் கையைத் தூக்கி விரல்களை விரிச்சுக் காட்டியது உடனே மேளம் அடிக்கிறவங்க மேளத்தை நிறுத்திட்டாங்க. சாமி மேளத்தை நோக்கி ம்ம்... என்றால் உடனே வேகமாக அடிச்சாங்க. எல்லாமே சாமியோட விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி போய்க்கிட்டு இருந்தது. சாமி ரொம்ப பிரமாதமா ஆடிக்கிட்டே இருந்தது.

திடீர்ன்னு ஒருத்தர், “சாமிய குளிப்பாட்டணும் குடத்தைக் கொண்டாங்க,” என்றார்.

ஒடனே மூணு ஆளுங்க குடத்தில தண்ணியோட வந்தாங்க. ஒரு ஆள் அந்த மூணு குடத்துத் தண்ணியையும் ஒன்னுஒன்னா சாமி மேல ஊத்தி குளிப்பாட்டினார். அப்பவும் சாமி ஒரு இடத்தில நிக்கலை, சாமி அங்கும் இங்கும் ஆடிக்கிட்டேதான் இருந்தது. சாமிய குளிப்பாட்டுற ஆளும் சாமி கூடவே அங்கும் இங்கும் ஓடித்தான் சாமியக் குளிப்பாட்டினார். குளிச்சதுக்கு அப்புறமும் சாமி ஆடிக்கிட்டேதான் இருந்தது. குளிப்பாட்டினபோது முழுதும் நனைந்துவிட்டிருந்த சாமியின் நீண்ட வெள்ளை அங்கி சாமி ஆடின ஆட்டத்தில வெகு சீக்கிரம் காஞ்சு போச்சு.

பின் கூட்டத்தில் ஒருவர் சாமி குறி சொல்லனும் என்றார்.

சாமி ஆடிக்கொண்டே, “கேளு,” என்றது.

அம் மனிதர், “சாமி, எம் மவளுக்குத் திருமணம் ஆகாம நாள் கடந்துக்கிட்டே போகுது. இதுக்கு நீங்கதான் ஒரு வழி சொல்லனும் சாமி,” என்றார்.

ஆடிக்கொண்டே கேட்ட சாமி ஒரு துள்ளுத் துள்ளி, மேளம் அடிப்பவனைப் பார்த்தது. “ஏய்!” என்று ஒரு கூக்குரல் எழுப்பிற்று.

பார்த்துக்கொண்டிருந்தவர்கள் பயந்தனர். ஒரு வேளை மேளக்காரன் தப்பாக அடித்து விட்டானோ என்னவோ, அவனுக்கு என்ன நடக்குமோ என நினைத்தனர்.

ஆனால் மேளக்காரன் பயப்படவில்லை. அவன் சாமியைப் பார்த்து, “சாமி?” என்றான்.

சாமி மேளக்காரனைப் பார்த்து, “ஏய், மேளத்த,” என்று ஆரம்பித்துவிட்டு முடிக்காமல் கிழக்கு நோக்கி ஆடிக்கோண்டே போனது. அங்கே அழகாக ஆடிவிட்டு, மீண்டும் திரும்பி மேற்கே வந்து, “மேளத்த ரண்ட ரட்டின, ரண்ட ரட்டின ண்ணு அடி,” என்று கட்டளையிட்டது.

உடனே மேளக்காரர்களின் தலைவன் மேளத்தின் அடியை மாற்றி சாமிசொன்ன தொனியில் உரக்க அடித்தான். பக்க வாத்திய மேளம் வாசிப்பவர்களும் குழல் ஊதுபவர்களும் அவனின் மேள இசைக்கு ஏற்ப தங்கள் இசைக் கருவிகளை வாசித்தார்கள்.

சாமி உச்சக்கட்டத்திற்கு ஏறியதுபோல் ஆடியது. சில நிமிடங்கள் அவ்வாறு ஆடிய சாமி சற்று நிதானித்து, மேளத்தைப் பார்த்து கையை விரித்துக் காட்டியது. உடனே மேளக்காரன் மேளத்தை நிறுத்தினான்.

சாமி குறி கேட்டவனைப் பார்த்து, “ஓம் மகளுக்கு தோசம் இருக்கு,” என்று ஆடிக்கொண்டே சொன்னது. பின் மேளக்காரனைப் பார்த்து கை அசைத்தது.

மேளக்காரன் மீண்டும் மேளம் அடிக்கத்தொடங்கினான். சாமி மீண்டும் குதித்துக் குதித்து ஆடியவாறே கிழக்கு நோக்கிச் சென்றது அங்கு சிறிது நேரம் ஆடிவிட்டு திரும்பவும் மேற்கே வந்து, மேளத்தைக் கையமர்த்தி நிறுத்தியது. மேளம் நின்றது.

சாமி விட்ட இடத்திலிருந்து தொடங்கி, “ஒம் மகளுக்கு தோசம் இருக்கு. அடுத்த வருசம் குடும்பத்தோட வந்து எனக்கு கெடா வெட்டி பொங்கல் விடு. அப்பிடி செய்தையானால் ஒம் மகளுக்குத் தோசம் தீரும். அதுக்கு பிறகு எல்லாம் நல்லபடியா நடக்கும்,” என்று சொல்லி விட்டு, மேளத்தை பார்த்து, “போடுப்பா மேளத்த,” என்று கட்டளை இட்டது.

மேளக்காரன் உரக்க அடிக்கத் தொடங்கினான். சாமி அங்கும் இங்கும் துள்ளித் துள்ளி ஆடியது. அப்படிப் பல நிமிடங்கள் ஆடிவிட்டு, பின் அடுத்த குறி சொல்லத் தாயாரானது. இப்படியே இரண்டு மணி நேரம் குறி சொல்வதும் ஆடுவதுமாக நேரம் சென்றது. பின் சாமிக்குத் தண்ணீர் வேண்டும் என்று சைகை செய்தது. இரண்டு பேர் பித்தளைக் குடங்களில் தண்ணீரோடு காத்திருந்தனர். ஒருவன் முன்வந்து குடத்தை தூக்கிப் பிடித்தவாறு நின்றான். சாமி ஒரு நிமிடம் அவனைப் பார்த்து வந்தது. ஊற்றும் நீரைக் குடிக்கத் தயாராய் தன் இரு கைகளையும் ஒன்று சேர்த்து வாயின் அருகே பிடித்துக் கொண்டு வந்தது. குடத்தோடு நின்றவன் ஊற்றத்தயாராக நின்றான், சாமி மிக அருகில் வந்ததும் நீரைச் சாமியின் கைகளில் ஊற்றினான். ஆனால் சாமி பின்வாங்கி ஆடிக்கொண்டே ஓடி விட்டது.

கொஞ்சம் நீர் கீழே கொட்டியதே தவிர, சாமி நீரைக் குடிக்கவில்லை. ஆனால் கிழக்கு வரை ஆடிச் சென்ற சாமி, மீண்டும் ஆடிக்கொண்டே தண்ணீரை நோக்கி வந்தது. கடைசி நிமிடத்தில் மீண்டும் பின் வாங்கி ஆடிக்கொண்டே ஓடியது. மக்கள் கூட்டம் வேடிக்கை பார்த்து ரசித்தது. இவ்வாறு பல தடவை வேடிக்கை காட்டிவிட்டு ஒரு வழியாக சாமி கொஞ்சம் நீர் அருந்தியது. ஆனால் திரும்பவும் துள்ளி ஆட ஆரம்பித்தது. ஒரு வழியாக, கொஞ்சம் கொஞ்சமாக, ஒரு குடம் நீரையும் குடித்து முடித்தது என்றாலும், முக்கால்வாசி நீர் கீழேதான் கொட்டியது. பின் ஆடிக்கொண்டே சுடு காட்டை நோக்கிச் சென்றது, சாமி. மேளம் அடிப்பவர்கள் அடித்துக்கொண்டே பின் தொடர்ந்தனர். ஊர்ப் பெரியவர்கள் பொது மக்களைச் சாமியின் பின் தொடர வேண்டாம் என்று அறிவுறுத்தினர். ஆகவே, மக்கள் கோவில் வளாகத்திலேயே நின்று சாமி போவதையே பார்த்தவண்ணம் நின்றனர். சாமி கண்ணைவிட்டு மறைந்தபிந்தான் மற்ற வேடிக்கைகளைக் காண மக்கள் சென்றனர்.

சாமி நள்ளிரவைத் தாண்டியும் ஆடிக்கொண்டே இருக்கும் என்பதைப் பார்த்தவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். சாமி மூன்று நாட்களும் நிற்காமல் தொடர்ந்து ஆடும் என்றும் கேள்விப்பட்டேன். மனித உருவில் ஆடும் இந்தச் சாமிக்கு அது எவ்வாறு சாத்தியம் என நான் வியந்தேன். ஆனால், அன்று ஆடியது மனிதனா தெய்வமா என்று என்னால் பிரித்துச் சொல்ல இயலாது. ஒன்று மட்டும் உண்மை, அதுவரை நான் தில்லையில் ஆடிய நடராசனைக் கண்டதில்லை. அன்று ஆடிய ஆட்டத்தைக் கண்ட போது அந்தத் தில்லையில் ஆடிய நடராசனையே கண்டதுபோல் இருந்தது எனக்கு, என்று எஸ்.ஐ. முடித்தார்.

சாமி ஆட்டம் பற்றி எஸ்.ஐ. கூறியவற்றைக் கேட்ட சண்முகையா, “எஸ்.ஐ. சார் நல்லா விளக்கமாவே சொன்னார். நீங்க எல்லாரும் போகதுக்கு முன்ன உங்களுக்கு இங்க உள்ள ஆலமரங்களைப் பத்தி, முக்கியமா அந்தப் பெரிய ஆலமரத்தைப் பத்தி சொல்ல விரும்புறேன். ஏன்னா ஒரு வகையில அந்த ஆலமரமும் எங்க ஊரும் ஒன்னுதான். இந்த பெரிய ஆலமரத்துல எத்தனையோ பறவைகள் வந்து தங்கும். பகலெல்லாம் அவை எங்கேதான் போகும்ன்னு யாராலையும் சொல்ல முடியாது. ஆனா இருட்டவும் அதெல்லாம் இங்கதான் வந்து அடையும். அதுமாதிரித்தான் இந்த ஊர்மக்களும். வருசமுழுவதும் எங்கேயெல்லாமோ போய் வேலை செய்தாலும் மாசிப்படப்பு அன்னைக்குத் தவறாம அத்தனை ஜனங்களும் சொந்த மண்ணுல மிதிக்கணும்ன்னு வந்து சேந்திருவாங்க. சுருக்கமா சொன்னா இந்த ஊர் மக்களும் இந்த பெரிய ஆலமரத்து பறவைகள் மாதிரிதான்,” என்றார்.

பெரியாண்டசாமி கோவிலைப் பற்றிக் தெரிந்துகொண்ட திருப்தியில், எஸ்.ஐ. இளங்கோவும், இன்ஸ்பெக்டர் ராஜாவும், சண்முகையாவுக்கு நன்றி தெரிவித்து விட்டு, அவர்களின் சக ஊழியர்ளோடு தங்கள் அலுவலகத்திற்குத் திரும்பினர்.




52

இன்ஸ்பெக்டரும் எஸ்.ஐ.யும் பெரியாண்டபுரம் சென்று காவல் நிலையம் திரும்பியபின் டீ வரவழைக்கப் பட்டது. இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டே டீ குடித்துக்கொண்டிருந்தனர்.

இன்ஸ்பெக்டர் கேட்டார், “இளங்கோ, கிராம்ஸ் யாரோ அந்த ஊர்ல சாராயம் விக்கிறதாச் சொன்னாரே, அது யாரு. அந்த பொம்பளைய நாம் கண்காணிக்கிறோமா?” என்றார்.

எஸ்.ஐ., “அந்த பொம்பள எஸ்.பிக்கு வேண்டிய ஆள் சார்,” என்றார் சிரித்துக்கொண்டே.

இன்ஸ்பெக்டர் ஆச்சரியமாகப் பார்த்து, “எஸ்.பிக்கு வேண்டியவளா? அவர் மதுரையில இருக்காரே, இங்க எப்பிடி கனைக்சன் ஏற்பட்டது?” என்றார்.

எஸ்.ஐ., “அது நடந்து பல வருசமாச்சு சார். அந்த ஊர்ல, அதான் பெரியாண்டபுரத்தில, ராமச்சந்திரன்னு ஒரு ஆள் அவள ஏதோ கலாட்டா பண்ணியிருக்காரு. அவள் அதுக்கு சம்மதிக்கல. அவருமேலதான் தப்பு, ஆனா அவரு அப்பம் இருந்த இன்ஸ்பெக்டருக்கு வேண்டியவரு. அது சம்பந்தமா அவளைக் கொஞ்சம் தட்டி வைக்கணும்ன்னு அவர் சொல்ல, இன்ஸ்பெக்டர் அந்த பொம்பளைய ஸ்டேசனுக்கு வரச்சொல்லியிருந்தார்.

அன்னைக்குப் பாத்து எஸ்.பி திடீர்ன்னு இன்ஸ்பெக்சன் வந்தார். அவளைப் பாத்து எஸ்.பி அது யார்ன்னு கேட்டார். நாங்க அவ சாராயம் மட்டுமில்ல, அந்தத் தொழிலும் செய்றவன்னு, சொன்னோம். எஸ்.பி கொஞ்சம் சபலப் பட்டுட்டார். இப்பிடி எஸ்.பி ஆசைப் படுறார்ன்னு சொன்ன ஒடனே அவ சரின்னுட்டா. சாயங்காலம் அவர் தங்கியிருந்த ரூமுக்குக் கூட்டிட்டு போய் விட்டுட்டு வந்தோம்,” என்றார்.

இன்ஸ்பெக்டர், “அப்பம் இருந்த இன்ஸ்பெக்டர் யார்,” என்றார்.

எஸ்.ஐ., “அவரு பேரு, லட்சுமணன், மதுரைப் பக்கம்,” என்ற எஸ்.ஐ., தொடர்ந்தார், “அடுத்த நாள் இன்ஸ்பெக்டர் எஸ்.பி ரூம்ல நுழைஞ்சார். அவள் எஸ்.பி பக்கத்தில உக்காந்துகிட்டு டேபிள்ல சாப்பிட்டுக்கிட்டு இருந்தா. இன்ஸ்பெக்டரைப் பாத்ததும் எழுந்து நிண்ணாள். எஸ்.பி அவளைப் பாத்து, ‘நீ உக்கார். நான் இருக்கிறவரைக்கும் நீ என்னோட கெஸ்ட். நீ யாருக்கும் எழுந்திருக்கத் தேவையில்ல,’ன்னுட்டார்.

“எஸ்.பி முன்னால இன்ஸ்பெக்டர் நின்னுக்கிட்டு இருக்கார். அவ உக்காந்து இட்டிலி, வடை சாப்பிட்டுக்கிட்டு இருக்காள். இன்ஸ்பெக்டர் வெளிய போகப் பாத்தார்.

“நில்லுங்க இன்ஸ்பெக்டர்,”ன்னார் எஸ்.பி.

இன்ஸ்பெக்டர் நின்னார். “இன்ஸ்பெக்டர் இவ எங்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா. அவ மாசம் மாசம் கொடுக்கவேண்டிய தொகையக் கொடுத்திடுறாதானே,” என்றார் எஸ்.பி.

இன்ஸ்பெக்டர், தலையை அசைச்சார். “அப்புறம் எதுக்கு அவளை ஸ்டேஷன்ல வச்சு தொந்தரவு பண்ணுறீங்க. ஏண்ணா அந்த ராமச்சந்திரன் ஒங்களுக்கு வேண்டியவன் அதனால்தானே,” என்றார் எஸ்.பி.

இன்ஸ்பெக்டர் மௌனம் சாதித்தார். எஸ்.பி, “ஒன்னு செய்ங்க. இப்பவே போய் அந்த ராமச்சந்திரனைக் கூட்டிட்டு வந்து அவகிட்ட மன்னிப்புக் கேக்கச் சொல்லுங்க. சரி போகட்டும்ன்னு விட்டுடுறேன். இல்லண்ணா அவர் மேல இவள் கம்பிளைண்ட் கொடுப்பா, நீங்க அவர அரஸ்ட் பண்ண வேண்டி வரும்,” என்றார்.

இன்ஸ்பெக்டர் முகத்தில் ஈ ஆடவில்லை, “சரி சார்,” என்றார்.

சொன்ன மாதிரியே அந்த ராமச்சந்திரனைக் கூட்டிட்டு வந்தார். அதுக்குள்ள எஸ்.பியும் அவளும் சாப்பிட்டு முடிச்சிட்டாங்க. அவள் எஸ்.பி பக்கத்தில் சோபால உக்காந்திருந்தா. அவள் முன்னால் நின்னு அந்த ராமச்சந்திரன் மன்னிப்புக்கேட்டார்.

எஸ்.பி, “இனி எப்பவும் இவள்கிட்ட வம்புக்குப் போகக்கூடாது. போனால் நடக்கிறதே வேற, சரியா,”ன்னார்.

ராமச்சந்திரன் கையக்கட்டி வாயபொத்தி, “இனி நான் இந்த அம்மா பக்கமே போகமாட்டேன்,” னுட்டார்.

அவ்வளவுதான் அதில இருந்து போலீஸ் டிப்பார்ட்மென்ட் மட்டுமில்ல, யாருமே அவள தொந்தரவு செய்றதில்லை. அவகிட்ட எஸ்.பி தன்னோட போன் நம்பர குடுத்திட்டு போயிருக்கார்னு பேச்சு. இந்தக் கொலையில அவள் சம்பந்தப்பட்டு இருந்தான்னா விசாரிக்கலாம்.

ஆனா சும்மா சின்ன விசயத்துக்கெல்லாம் தொந்தரவுக்குப் போகவேண்டாம். அவள் இன்னும் மாசாமாசம் மாமுல் குடுத்துக்கிட்டுத்தான் இருக்கா, சார்.” என்று தண்ணிக்காரியப் பற்றி விபரமாகச் சொன்னார் எஸ்.ஐ.

இன்ஸ்பெக்டர், “சரி இளங்கோ, அப்புறம் நான் கௌம்புறேன். மேல ஏதாவது விபரம் கெடைச்சதுன்னா சொல்லுங்க,” என்று எழுந்தார்.

எஸ்.ஐ. எழுந்து சல்யூட் அடித்தார். இன்ஸ்பெக்டர் பதில் சல்யூட் அடித்துவிட்டு கிளம்பிவிட்டார்.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top