JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Aalamarathu Paravaigal - Chapters 55 & 56

Uthaya

Member
ஆலமரத்துப் பறவைகள் – அத்தியாயம் 55 & 56

55

கொலை நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் இருக்கும், தீயில் எரிந்த எல்லா வீடுகளும் சுத்தம் செய்யப்பட்டு, புது கூரை வேயப்பட்டிருந்தது, வேலம்மாளின் கூரை வீடு தவிர. அவள் வீடு மட்டும் அது தீப்பிடித்து எரிந்த அன்று எப்படி இருந்ததோ அப்படியே கிடந்தது. அங்கயற்கண்ணி, வேலம்மாள் வீட்டிற்கு வந்து போக ஆரம்பித்து சில நாட்கள் ஆகிவிட்டன. அந்தச் சில நாட்களில் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டார்கள். இப்போதெல்லாம் அங்கயற்கண்ணி வேலம்மாளின் வீட்டிலேயே இருந்தாள். தன் சொந்த வீடுபோல் வேண்டியதை எடுத்துச் சாப்பிட்டாள். ஏதாவது வேலை பாதியில் கிடந்தால் அதைச் செய்து முடித்தாள். அங்கயற்கண்ணி வேலம்மாளின் வீட்டைத் தன் வீடாகவே பாவிக்கத் தொடங்கிவிட்டாள்.

ஒரு நாள் பேச்சினூடே அங்கயற்கண்ணி வேலம்மாளைப் பார்த்து, “ஏங்க்கா, ஒங்க வீடு, அந்தப் பக்கம் இருக்க வீடு, அப்பிடியே கெடக்கே. அதுக்கு ஒரு வழி செய்ய வேண்டாமா?” என்றாள்.

வேலம்மாள், “ஆமா. எனக்கு இருந்த வெறுப்பில அப்பிடியே போட்டுட்டேன். அந்த மனுசன் ஆடுன ஆட்டம், செஞ்ச காரியமெல்லாம்தான் என்ன அப்பிடி ஆக்கிருச்சு. அவரோட சேமிப்பெல்லாம் அங்கதான் இருக்கு. அதான் அந்தப்பக்கமே போக எனக்கு மனசு லரல,” என்றாள்.

அங்கயற்கண்ணி, “தீ பட்டதில எல்லாம் எரிஞ்சு போயிருக்காதா?” என்றாள்.

வேலம்மாள், “அது அப்பிடி ஒண்ணும் சாதாரணமான ரூம் இல்ல. அது எல்லாப் பக்கமும் சிமிண்டு காங்கிரீட் போட்டு கட்டிருக்கு. மேக்கூரையும் காங்கிரீட்தான். கதவுகூட இரும்பால அடிச்சது. அந்த ரூமைப் பொறுத்தவரைக்கும் ஓலக்கூரை சும்மா பேருக்குத்தான் இருந்தது,” என்றாள்.

ஆச்சரியப்பட்ட அங்கயற்கண்ணி, “அப்படி என்னதான் அதுக்குள்ள இருக்கு,” என்று கேட்டாள்.

வேலம்மாள், “மத்த ஆள்கட்ட எழுதி வாங்கின புரோ நோட்டுபத்தரம், வீடு, நிலம் வாங்கின பத்திரம், அடகு வாங்கின நகை நட்டு எல்லாம் அதிலதான் இருக்குக்குன்னு நினைக்கிறேன். ஏன், ரொக்கமும் அதுலதான் இருக்கணும்,” என்றாள்.

அங்கயற்கண்ணி, “அப்பம் அத பத்தரப் படுத்த வேண்டாமா?” என்றாள்.

வேலம்மாள், “எனக்கு எதுக்கும்மா அது? சனியம்பிடிச்ச சொத்து. அவரு நல்ல மனுசனா எங்கூட குடும்பம் நடத்திருந்தா இப்பிடியெல்லாம் ஆயிருக்குமா. அந்த சொத்தச் சேக்கத்தான அப்பிடி அலஞ்சாரு. ஊர்க்குடும்பத்தைக் கெடுத்து, ஒலகெமெல்லாம் கெட்ட பேரு. இதெல்லாம் வேணுமா, நாங்கேட்டனா? அந்தப் பக்கம் போகவே எனக்குப் பிடிக்கலத்தா,” என்றாள்.

அங்கயற்கண்ணி, “ஆமாக்கா, நீங்க சொல்லுதது எல்லாம் சரிதான். ஒங்களுக்கோ எனக்கோ பணம் பொருள் வேண்டாம், நம்ம வாழ்க்கையே போனபின்னால துட்டு என்ன செய்திரும்? ஆனா, அந்த மனுசன் ஊர்மக்களுக்குச் செஞ்ச கெட்ட செயலை நீங்க சரிசெய்ய ஒரு வாய்ப்பு இருக்கே, அத நீங்க நெனச்சீகளா?” என்றாள்.

வேலம்மாள் அமைதியாய் நின்று அங்கயற்கண்ணியைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தாள். பின், “நீ சொல்லுததும் சரின்னு படுது. ஆமா, நம்ம ஏன் பிராயச்சித்தம் பண்ணக்கூடாது?” என்றாள்.

அங்கயற்கண்ணி, “அப்பிடிச் சொல்லுங்கக்கா. அந்த மனுசனால வந்த வினைய அந்த மனுசன் சேத்துவச்ச சொத்த வச்சுத் தீக்கப் பாப்போம்,” என்றாள்.

அந்த வினாடியே இருவரும் காரை வீட்டை விட்டு இறங்கி, பழைய கூரை வீட்டை நோக்கி நடந்தனர். கொலை செய்யப்பட்ட சங்கரலிங்கத்தின் வீடு என்பதாலோ, வேலம்மாள் பார்த்துக்கொண்டிருப்பாள் என்பதாலோ, விளையாட்டுப் பிள்ளைகள்கூட அங்கே வந்ததாகத் தெரியவில்லை. கூரை எரிந்து எங்கும் ஒரே சாம்பலாகக் கிடந்தது. கூரையில் சில பெரிய பனை வளைகளைத் தவிர, ஓலை, வரிச்சு எல்லாம் எரிந்து விட்டிருந்தது. வளைகளிலும் பாதிக்குமேல் கீழே விழுந்து கிடந்தன. உபயோகமற்றுக் கிடந்த சமையல் அறை, காலியாகக் கிடந்தது, அதன்மேல் இருந்த கூரை ஒரு கம்புவிடாமல் முற்றிலும் எரிந்து விழுந்திருந்தது. அருகில் இருந்த அறையில் ஒரு கட்டில் எரிந்து கிடந்தது. கட்டில் அருகில் சில துணிமணிகள் எரிந்து கிடந்தன. அடுத்து இருந்த அறையின் கதவு முக்கால்வாசி எரிந்துவிட்டிருந்தது. எங்கும் சாம்பல் பறந்துகொண்டிருந்தது.

பாதிக்குமேல் எரிந்து விட்டிருந்த கதவைத் தள்ளி உள்ளே நுழைந்தாள் வேலம்மாள். அங்கயற்கண்ணி தொடர்ந்தாள். அந்த அறையின் ஒரு பக்கச் சுவரில் ஒரு பெரிய இரும்புக் கதவு தென்பட்டது. அந்தச் சுவரே வித்தியாசமாகத் தோன்றியது.

வேலம்மாள், “இந்தச் சுவரு சிமெண்ட்டு வச்சு கட்டினது. மொதல்ல இந்த ரூம் பெருசா இருந்தது. அதுல பாதியப் பிரிச்சு உள்ள சிமெண்டு சுவரு கட்டி, மேலயும் சிமெண்டு கூர கட்டி, இரும்புக் கதவு மாட்டிட்டாரு. ஏன் தரைகூட ரெண்டடி காங்கிரீட்டுத்தான். அதால, இது ஒரு பலமான அரங்கு வீடா ஆயிருச்சு. இத தீயால கூட எரிக்கமுடியாது,” என்று சொல்லியவாறே அக்கதவைத் தள்ளிப் பார்த்தாள்.

இரும்புக் கதவு இம்மிகூட விட்டுக் கொடுப்பதாய்த் தெரியவில்லை. இரண்டுபேரும் சேர்ந்து தள்ளிப்பார்த்தார்கள். கதவு விட்டுக் கொடுக்கவில்லை. அப்போதுதான் ஞாபகம் வந்தவளாக, “ஏங்க்கா, சாவி எங்க?” என்றாள் அங்கயற்கண்ணி.

வேலம்மாள், “வீட்டுக்கு வா போவோம்,” என்று கூற, இரண்டு பேரும் வேலம்மாள் இருந்த வீட்டுக்குச் சென்றனர்.

வீட்டுக்குள் நுழைந்தபின் வேலம்மாள் சொன்னாள், “சாவிய அந்த மனுசந்தான் எப்பவும் வச்சிருப்பாரு, எங்கிட்ட ஓரு நாளும் தரமாட்டார். அண்ணாக்கயறுல முடிஞ்சு வச்சுக்கிடுவாரு. அங்க வச்சு சொல்ல வேண்டாமிண்ணுதான் இங்க கூட்டியாந்தேன்,” என்று அவள் கணவன் அந்த அரங்கின் சாவியை அவனுடைய அறைஞாண்கயிற்றில் கட்டி வைத்திருப்பான் என்பதை விளக்கினாள்.

அங்கயற்கண்ணி, “அய்யய்யோ, அப்பம் என்ன செய்ய. அந்தக்கதவு கடப்பார வச்சு உடச்சாக்கூட ஒடயாதே,” என்றாள்.

வேலம்மாள், “எனக்கே இன்னைக்கித்தான் அந்த வீட்டப் பத்தியும் அந்த ரூமபத்தியும் ஞாபகம் வந்தது. அதுவும் நீ சொல்லாட்ட அதபத்தியே யோசிச்சிருக்க மாட்டேன். சரி பாப்போம்,” என்றாள்.

அங்கயற்கண்ணி, “அந்தச் சாவி எங்கயாது விழுந்து கிடக்கும். இல்லையிண்ணா அவர் அண்ணாக்கயறுலேயே கட்டி இருந்தா போலீஸ்தான் வச்சிருக்கும்,” என்றாள்.

வேலம்மாள், “சரி எப்பிடியும் போலீஸ் நம்மட்டத்தான குடுக்கும். காத்திருப்போம்,” என்றாள்.

அங்கயற்கண்ணி, “ஆமாக்கா, அதத் தவற நமக்கு வேற வழியில்ல,” என்றாள்.

பின் எப்போதும் போல் பேசிக்கொண்டே சமையல் செய்து, சாப்பாட்டை எடுத்துக்கொண்டு பச்சையம்மாள் வீட்டுக்குக் கொண்டு சென்றனர்.

அவர்களைப் பார்த்த பச்சையம்மாளுக்கு மகிழ்ச்சி கட்டுக்கடங்கவில்லை, வாய் திறந்து சிரித்தாள். கட்டிலில் உட்கார்ந்திருந்தவள் எப்போதும் போல் கயிற்றைப் பிடிக்காமல் எழுந்து, அவர்களை அன்போடு, “வாங்க, வாங்க ரெண்டுபேரும்,” என்று வரவேற்றாள்.

அங்கயற்கண்ணி, “முட்டக்கொழம்பு வச்சாக, அக்கா. அதான் ஒங்களுக்கும் பிள்ளைகளுக்கும் குடுத்திட்டுப் போவலாமின்னு வந்தோம்,” என்றாள்.

வேலம்மாள், “கொழம்பு வச்சது நானில்ல, தங்கச்சிதான். குடுத்திட்டு அப்பிடியே ஒன்னையும் பாத்திட்டுப் போகலாம்மின்னு வந்தோம்,” என்றாள்.

பச்சையம்மாளின் நடையும் எப்போதும் போல் இல்லாமல் எவ்வளவோ தேறியிருந்தது. அவளின் நடையின் மாற்றத்தைக் கவனித்த அங்கயற்கண்ணி, வேலம்மாளைப் பார்த்தாள். அவளும் நானும் பார்த்தேன் என்பதுபோல் தலையசைத்தாள். ஆனால் இருவரும் பச்சையம்மாளின் உடலில் சில நாட்களாக நிகழ்ந்துவரும் மாற்றத்தைப் பச்சையிடம் சொல்லவில்லை. முற்றிலும் சரியாகட்டும், பாதியில் சொல்லி அது அவளின மனதை எவ்வாறேனும் பாதித்துவிடக்கூடாது என்று அவர்கள் சொல்லவில்லை.

சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு, வேலம்மாளும் அங்கயற்கண்ணியும் அவரவர்கள் வீட்டுக்குச் சென்றனர்.




56

அங்கயற்கண்ணி அடுத்த நாள் மாலை ஊர்மாடு திரும்பும் சமயம் மைதிலியைப் பார்க்கச் சென்றாள். ஊர்மாடும், தங்கச்சாமியும் வர இன்னும் சற்று நேரம்தான் இருந்தது. அங்கயற்கண்ணியைப் பார்த்த மைதிலி, மகிழ்ச்சியுடன் வரவேற்றாள், ஆனாலும் அவள் முகம் வாடியிருந்தது.

மைதிலியின் முகத்தைக் கவனித்த அங்கயற்கண்ணி, “என்ன மைதிலி ஒரு மாதிரி வாட்டமா இருக்க?” என்றாள்.

மைதிலி சோகமான முகத்துடன், “எனக்கு பயமா இருக்குக்கா. எப்பம் அந்த போலீஸ் வந்து எம் புருசனக் கூட்டிட்டு போயிருமோன்னு,” என்றாள்.

அங்கயற்கண்ணி, “ஏம்மா, யாராது என்னமாவது சொன்னாகளா?” என்றாள்.

“இந்த கோபாலும், வடக்குத்தெரு லச்சுமணணும் வந்து, ‘போலீஸ் அங்கயும் இங்கயும் லாந்திது (அலையுது). தங்கச்சாமி மாடு மேய்க்கிற இடத்துக்கு மாறு வேசம் போட்டுக்கிட்டு அவனை நோட்டம் விடுது. இன்னும் எண்ணி எட்டே நாளுக்குள்ள அவன கைது பண்ணத்தான் போகுது,’ன்னு சொல்லிட்டுப் போறான். ரெண்டு பேரும். அதான் எனக்கு வயித்தக் கலக்குது,” என்றாள் மைதிலி.

அங்கயற்கண்ணி, “சும்மா ஒன்ன பயங்காட்டுறானுக. இவன் கண்டானாக்கும்? ஒங்க வீட்டுக்காரர பிடிக்கதுக்கு ஒரு காரணமும் இல்ல. நீ பாட்டுக்கு மனசக் கொழப்பிக்கிடாத. அதெல்லாம் ஒன்னும் நடவாது. சட்டமுன்னு ஒன்னு இல்லையா என்ன,” என்று ஆறுதல் சொன்னாள்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஊர் மாடு வந்து சேர்ந்தது. சிறிது நேரத்தில் தங்கச்சாமியும் வந்து சேர்ந்தான். அங்கயற்கண்ணியைப் பார்த்ததும், “என்ன விருந்தாளி வந்திருக்காப்பில இருக்கு,” என்றான்.

அங்கயற்கண்ணி சிரித்துக்கொண்டே, “விருந்தாளு வேத்தாளுன்னு ஒதிக்கி வச்சிராதீங்க,” என்றாள்.

தங்கச்சாமி, “அப்பிடியெல்லாம் ஒண்ணுமில்ல. சும்மா வெளையாட்டுக்குச் சொன்னேன். இது ஒன் வீடு மாதிரி. நீ எப்பம் வேணுமின்னாலும் வரலாம்,” என்றான்.

அதற்குள் மைதிலி, “தண்ணி தாரேன், கால் கைய கழுவிட்டு காப்பி குடிங்க, பிறகு போய் குளிச்சிட்டு வாங்க. வந்து சாப்பிடலாம்,” என்றாள்.

தங்கச்சாமியும் மகிழ்ச்சியோடு, “சரி,” என்று தண்ணியை வாங்கி, கை கால் கழுவினான். பின் திண்ணையில் அமர்ந்து மைதிலி கொடுத்த காப்பித் தம்ளரை கையில் வாங்கினான். வாங்கியவன் அங்கயற்கண்ணியைப் பார்த்தான்.

அங்கயற்கண்ணி, “நான் குடிச்சிட்டேன் அய்யா,” என்றாள்.

“சரி,” என்று தலையாட்டிவிட்டு, காப்பி என்ற பெயரில் டீயைக் குடித்தான்.

அப்போது அங்கே செல்லையா வாத்தியார் தோன்றினார். திண்ணையில் இருந்த தங்கச்சாமி எழுந்து, “மாமா வாங்க. காப்பி சாப்பிடுதேகளா?” என்றான்.

எப்போதும் போல் நேராகப் போய்க்கொண்டே, “வேண்டாமய்யா. நீங்க சாப்பிடுங்க,” என்று சொல்லிக்கொண்டே போகாமல். நின்று படியேறி, தங்கச்சாமியின் அருகில அமர்ந்து, “காப்பி மிச்சம் இருந்தா குடுங்க, இல்லாட்ட வேண்டாம்,” என்றார்.

தங்கச்சாமிக்கு ஆச்சரியம், “அதெல்லாம் இருக்கும்,” என்று உள்ளே பார்த்தான்.

அதற்குள் மைதிலி வந்து, “சித்தப்பா, வாங்க. காப்பி இருக்கு, கொண்டாறேன், சாப்பிடுங்க,” என்றாள்.

அங்கயற்கண்ணியும் வெளியே தலைகாட்டி, “வணக்கம் வாத்தியாரைய்யா,” என்றாள்.

செல்லையா வாத்தியார், சிரித்துக்கொண்டே, “சரி நீயும் இங்கதான் இருக்கயா? ஒரு செய்தி சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன். எல்லாரும் இருந்தா நல்லதுதான்,” என்றார்.

செல்லையா வாத்தியார் சொல்வதற்கு முன்பே அவர்களுக்குத் தெரியும் ஏதோ முக்கிய காரியமாகத்தான் அவர் வந்திருக்க வேண்டும் என்று. காரியமில்லாமல் அவர் மற்றவர்கள் திண்ணையில் உட்கார்ந்து, ‘சரி காப்பி கொண்டா,’ என்று சொல்ல மாட்டார், என்று அவர்கள் நன்றாக அறிவார்கள்.

அதற்குள் மைதிலி டீயைக் கொண்டு வர, அதைக் கையில் வாங்கிகொண்ட செல்லையா வாத்தியார், அதை வாயில் வைக்காமேலயே பேச ஆரம்பித்தார். “போலீஸ்.. இல்ல இல்ல நல்ல காரியம்தான், பயப்படவேண்டாம். போலீஸ் வெள்ளச்சாமியப் பிடிச்சு, அவன்தான் குற்றவாளியா இருக்கணும்மின்னு அவன் மேல வழக்குப் போட்டுருச்சு. இனிமேல் வேற யாரையும் பிடிக்க மாட்டாங்கன்னுதான் நெனைக்கேன்” என்றார்.

மைதிலி ஓடி வந்து, “சித்தப்பா ரொம்ப சந்தோசம். இந்த செய்தியச் சொன்னதுக்கு,” என்றாள்.

டீயைக் குடித்தவாறே, “நான் இப்பந்தான் கேள்விப்பட்டேன். சரி நீங்க எல்லாரும் வருத்தப் பட்டுக்கிட்டு இருப்பீங்களேன்னு, போய் சொல்லிறலாம்ன்னு வந்தேன்,” என்றவர் டீயை வேகமாகக் குடித்தார். பின் தொடர்ந்தார், “இன்னும் ஒரு வேல பாக்கி இருக்கு. ஒங்களுக்கு நல்ல செய்தியைச் சொன்ன நான், இன்னொருத்தருக்கு கெட்ட செய்தியையும் சொல்லித்தான் ஆகணும். எங்கூட யாராது வர விரும்புறீங்களா?” என்றார்.

அங்கயற்கண்ணி முன்வந்து, “அய்யா, நான் வாறேன். ஒரு நிமிசம் இருந்தேகண்ணா ஒடி போய் வேலம்மாக்காவையும் கூட்டிட்டு வந்திருதேன்,” என்றாள்.

செல்லையா வாத்தியார் தலையசைக்க, அங்கயற்கண்ணி தெருவில் இறங்கி, சொன்ன மாதிரி இரண்டே நிமிடத்தில் வேலம்மாளுடன் திரும்பி வந்தாள். மூவரும் பச்சையம்மாள் வீட்டை அடைய மூன்று நான்கு நிமிடங்கள் பிடித்தது.

அங்கயற்கண்ணி, வேலம்மாள் இருவருடன் செல்லையா வாத்தியார் கூட வருவதைப் பார்த்த பச்சையம்மள், ஏதோ நடந்துவிட்டது, அல்லது நடக்கப் போகிறது என்று யூகித்துக்கொண்டாள். இருப்பினும் எழுந்து கைகூப்பி, “எல்லாரும் வாங்க,” என்று சொல்லி, செல்லையா வாத்தியாரின் முகத்தையே பார்த்தாள்.

வாத்தியார் பச்சையம்மாளைப் பார்த்து, “ஒனக்குச் செய்தி தெரியுமோ இல்லையோ, ஒன் வீட்டுக்காரன் வெள்ளச்சாமிய கைது செய்திட்டாங்க. அவன் மேல கொலக்கேசு போடப்போறாங்க. எனக்குத் தெரிஞ்சு, ஒனக்கு சொல்லாம இருக்கக் கூடாதுன்னுதான், கெட்ட செய்தின்னாலும் போய் சொல்லுறது கடமைன்னு வந்தேன். தப்பா நெனைக்க வேண்டாம். எனக்கு போலீசு, கேசு பற்றி ஒண்ணும் தெரியாது. வேற ஏதாவது உதவி வேணுமின்னாச் சொல்லு,” என்றவர் நிறுத்தி பெண்கள் மூவரையும் பார்த்தார்.

அங்கயற்கண்ணி, “அய்யா நீங்க இம்பிட்டுச் சொன்னதே போதும். இனிமே நாங்க பாத்துகிடுதோம்,” என்று அவர் நிலமையை அறிந்து அவரைப் போகச் சொன்னாள்.

“சரி வாரேன்,” என்ற சொற்களோடு வெளியேறினார் செல்லையா வாத்தியார்.

அவர் சென்றபின் அங்கயற்கண்ணியும் வேலம்மாளும், பச்சையம்மாளைப் பக்கத்துக்கு ஒருவராக அணைத்துக் கொண்டு, அவளைக் கட்டிலில் உட்கார வைத்தனர்.

பல நிமிடம் அமைதி காத்த பச்சையம்மாள், அழவில்லை. தனக்குப் பாதகமாக எங்கோ மேலிருந்து வந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள, தன் மனதையும் உடம்பையும் தயார் செய்துகொண்டு, பின் அத்தீர்ப்பை நெஞ்சில் வாங்கிக்கொள்பவள் போல நின்று ஏற்றுக்கொண்டாள். “எனக்குத் தெரியும்,” என்று முனங்கினாள்.

பச்சையம்மாள் அழாவிட்டாலும் அவளுக்கு ஆறுதலாக வேலம்மாளும் அங்கயற்கண்ணியும் அவளுடன் இருந்தனர். அவளுடைய குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து, உறங்க ஏற்பாடு செய்தனர். இரவு வெகு நேரம் ஆனபின் பச்சையம்மாளே, “நீங்க ரெண்டுபேரும் போய்ட்டு நாளைக்கு வாங்க. எனக்கு ஒண்ணுமில்ல. எம் பிள்ளைகளுக்குத்தான் எப்பிடிச் சொல்லன்னு தெரியல,” என்றாள்.

அங்கயற்கண்ணி, “இப்போதைக்குச் சொல்ல வேண்டாம். அதுக்குன்னு நேரம் வரும் போது சொல்லிக்கிடலாம்,” என்றாள்

பச்சையம்மாள் தலை அசைத்தாள். அங்கயற்கண்ணியும் வேலம்மாளும் விடைபெற்றுக்கொண்டு அவரவர் வீட்டுக்குச் சென்றனர்.

 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top