JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Aalamarathu Paravaigal - Chapters 57 & 58

Uthaya

Member
ஆலமரத்துப் பறவைகள் – அத்தியாயம் 57 & 58

57



அடுத்த நாள் மாலை நான்கு மணி வாக்கில் போலீஸ் ஜீப் வந்தது. மைதிலி மோட்டார் வாகனச் சத்தம் கேட்ட உடனே பயந்து நடுங்க ஆரம்பித்தாள். அவளுக்கு நேற்று செல்லையா வாத்தியார் வந்து அருவாள் வெள்ளச்சாமி மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்துவிட்டார்கள் என்று சொன்ன செய்தி அவள் மண்டையில் இன்னும் முழுதுமாக இறங்கவில்லை. ஆனால் சில நிமிடங்களில் அவளுக்கு அச் செய்தி ஞாபகம் வர, சற்று ஆறுதல் அடைந்தாள். ஜீப் நேராக வேலம்மாள் வீட்டின் முன் நின்றது. அதிலிருந்து எஸ்.ஐ. மட்டும் இறங்கினார். ஜீப் வரும் சத்தம் கேட்டு ஏற்கனவே கூர்ந்து கவனித்தவள் அது தன் வீட்டு முன் நிற்பதை சப்தத்தை வைத்தே அறிந்துகொண்டு வாசலைவிட்டு வெளியே வந்தாள்.எஸ்.ஐ. நேராக அவளிடம் சென்று, “இந்தாம்மா, இந்தச் சாவி ஒம் புருசன் அருணாக்கயறுல கட்டியிருந்தது. பிரேதப்பரிசோதனை செய்யும் போது கெடைச்சிருக்கு. இதப் பெற்றுக்கொண்டதற்குச் சாட்சியா இந்தப் பேப்பர்ல கையெழுத்துப் போடு,” என்றார்.

வேலம்மாள் பேசாமல் நிற்கவே. எஸ்.ஐ., “உனக்குக் கையெழுத்துப் போடத்தெரியாதா?” என்றார்.

வேலம்மாள் தலை அசைத்தாள்.

எஸ்.ஐ., “அப்பிடின்னா, கைரேகை போடணும். ஆனா அதுக்குச் சாட்சிக் கையெழுத்து வாங்கணுமே,” என்றவர். “ஒனக்குத் தெரிஞ்சவங்க யாராவது சாட்சிக் கையெழுத்துப் போடுவாங்களாம்மா?” என்றார்.

வேலம்மாள், “ஒரு நிமிசம் சார். எனக்குத்தெரிஞ்ச அம்மா ஒண்ணு இருக்கு, படிச்சுக் கையெழுத்தும் போடும். நான் சொல்லிவிட்டா ஒரு நிமிசத்தில வந்திரும்,” என்று சொன்னவள், அங்கே வந்த பள்ளிச் சிறுவன் குருசாமியின் காதில் கிசுகிசுத்தாள்.

குருசாமி ஒரே ஓட்டமாய் ஓடி மூன்றே நிமிடத்தில் அங்கயற்கண்ணியுடன் வந்தான். அங்கயற்கண்ணி வருவதைக் கண்ட எஸ்.ஐ. கொஞ்சம் அதிர்ந்தார், ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. அவர் எங்கோ பார்த்துக்கொண்டு நிற்பதுபோல் நின்றார்.

அங்கயற்கண்ணி அருகில் வந்ததும், “நான் சொன்ன அம்மா இன்னா வந்திருச்சு சார்,” என்றாள் வேலம்மாள்.

திரும்பிப் பார்த்த எஸ்.ஐ. அப்போதுதான் அங்கயற்கண்ணியைப் பார்த்தவர்போல், “எப்பிடிம்மா இருக்கீங்க? பாத்து ரெம்ப நாள் ஆச்சு. என்னை ஞாபகம் இருக்கா?” என்றார்.

அங்கயற்கண்ணி, “நல்லா இருக்கேன் சார். ஒங்கள எப்பிடி மறக்கமுடியும். நான் மாசாமாசம் ஒங்க ஸ்டேசனுக்கு வந்து போய்கிட்டுத்தான இருக்கேனே. நீங்கதான் ஆபிஸ் உள்ள இருந்துக்குட்டு வெளிய வரதில்லை,” என்றாள்.

எஸ்.ஐ., “அப்பிடியெல்லாம் இல்லம்மா. வேல விசயமா போயிருந்திருப்பேன்,” என்றவர், தொடர்ந்து, “வேலம்மாவோட வீட்டுக்காரர் சாவி கொண்டு வந்திருக்கேன். அவங்க வாங்கிகிட்டு, பெற்றுக்கொண்டதுக்கு ஆதாரமா கையெழுத்துப் போடணும், இல்லாட்ட கைரேகை வைக்கணும். நீங்க இத படிச்சுச் சொன்னபிறகு போட்டா போதும். அப்புறம் நீங்க சாட்சிக் கையெழுத்துப் போடணும்,” என்றார்.

அங்கயற்கண்ணி பேப்பரை வாங்கி மேலோட்டமாகப் பார்த்துவிட்டு வேலம்மாளிடம் கைரேகை பதிக்கச் சொன்னாள். பின் அதன் கீழ் சாட்சி என்றிருந்த இடத்தில் தன் கையெழுத்தைப் போட்டு, அதை எஸ்.ஐ.யிடம் நீட்டினாள். எஸ்.ஐ. சாவிக்கொத்தை வேலம்மாளிடம் கொடுத்தார். அச்சாவிக்கொத்தில் ஓரு பெரிய சாவியும் நான்கு சின்ன சாவிகளும் இருந்தன.

சாவியைக் கொடுத்துவிட்டு போக நினைத்த எஸ்.ஐ., ஒரு கணம் தயங்கி, அங்கயற்கண்ணியின் பக்கம் திரும்பி, “இந்தக் கேஸ்ல நான் தண்டன வாங்கி குடுத்திட்டேன்னா, நான் இன்ஸ்பெக்டரா ஆயிருவேம்மா. எஸ்.பி சாருக்கு எழுதினால் என்னைப் பத்தி நல்லபடியா எழுதுங்க,” என்று அவசரமாகச் சொல்லிவிட்டு, வேகமாக சென்று ஜீப்பில் ஏறிப் பறந்துவிட்டார்.

வேலம்மாள், தான் ஆவலாய்த் தேடிய சாவி கிடைத்ததைக்கூட மறந்து அங்கயற்கண்ணியை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தாள். அதற்குள் அங்கு கூடிய சிறு கூட்டமும் அங்கயற்கண்ணியை இதுவரை இல்லாத ஆச்சரியத்துடனும் அக்கறையுடனும் பார்த்தது.

சாவியைக் கையில் வைத்துக்கொண்டு வேலம்மாள் வீட்டுக்குள் செல்ல, அங்கயற்கண்ணி அவளைத்தொடர்ந்தாள். வீட்டுக்குள் சென்றபின், வேலம்மாள் கேட்டாள், “ஒனக்கு போலீஸ்காரனயெல்லாம் தெரியுமின்னு எனக்குத்தெரியாதே,” என்றாள்.

அங்கயற்கண்ணி சிரித்துக்கொண்டே, “அக்கா, போலீசுக்கு திருடன், கொலகாரன், கொள்ளக்காரன், ரவுடி மாதிரி ஆள்களதான தெரியும். என்னமட்டும் எப்பிடி தெரிஞ்சிருக்க முடியும்மின்னு நெனைக்கீக,” என்றாள்.

வேலம்மாள் தன் நாக்கைக் கடித்துக்கொண்டாள். பின் பேச்சை மாற்றும் வகையில், “சரி சரி, சாவி கெடச்சிருச்சு, இனி என்ன செய்யணும்மின்னு சொல்லு,” என்றாள்.

அங்கயற்கண்ணி, “முதல்ல காப்பி போட்டுக் குடிப்போம். அதுக்குள்ள வெளிய வேடிக்க பாத்திக்குட்டு நிக்கித கூட்டம் கலைஞ்சு போயிரும், அதுக்கு பெறகு அரங்குவீட்ட தெறந்து பாப்போம்,” என்றாள்.

வேலம்மாள் தன் உடன் பிறவாத் தங்கையைப் பெருமிதத்தோடு பார்த்தாள், “அதுக்குத்தான் ஒன்ன கேக்காம நான் எதையும் செய்யமாட்டேங்கது,” என்றாள்.

வேலம்மாள் பேசிக்கொண்டிருக்கும்போதே அங்கயற்கண்ணி, காப்பிச்சட்டியில் ஒரு செம்பு தண்ணீரை ஊற்றி அடுப்பில் ஏற்றினாள். வெளியே சென்று விறகுக் கட்டுப் பக்கத்தில் கிடந்த சுள்ளிகளை அள்ளி அடுப்பில் வைத்து தீக்குச்சை கீச்சி நெருப்பை மூட்டினாள். தீ நன்றாக எரிய ஆரம்பித்ததும், வேலம்மாள் கொண்டுவந்து வைத்திருந்த கட்டை விறகை அடுப்பில் வைத்தாள். அது எளிதில் பற்றிக்கொண்டது. பின் கருப்பட்டிப் பானையில் இருந்து ஒரு முழு வட்டு உடன்குடிக் கருப்பட்டியை எடுத்து அம்மியில் வைத்து நாலாய்ப் பிட்டு அது முழுவதையும் தண்ணீரில் போட்டாள். பின் நீர் கொதிக்கும் வேளையில் ஏற்கனவே அளந்து வைத்திருந்த ஒரு குழம்புக் கரண்டி அளவு தேயிலைத்தூளைப் போட்டாள். பொங்கிவிடாமல் இருக்க சில கட்டை விறகுகளை வெளியே எடுத்து தீயைக்குறைத்தாள். சில நிமிடங்களில் காப்பிச்சட்டியை அடுப்பில் இருந்து இறக்கினாள். வேலம்மாள் அருகில் இருந்துகொண்டு அவளின் உடன்பிறவாத் தங்கையின் கைப் பக்குவத்தைப் பார்த்துக்கொண்டே அவ்வப்போது உதவியும் செய்து வந்தாள். அங்கயற்கண்ணி காப்பியை இறக்கி வைத்துவிட்டு வேலம்மாளைப் பார்த்தாள்.

வேலம்மாள், “காலையில கறந்த பால் மிச்சம் இருக்கு, கொதிக்கவச்சு ஊத்தி வச்சிருக்கேன் அந்த எவர்சில்வர் பாத்திரத்தில,” என்றாள்.

எவர்சில்வர் என்னும் வெள்ளிபோன்ற உலோகத்தால் ஆன பாத்திரம் இந்தியாவில், அதுவும் தமிழ் நாட்டின் தெற்கு எல்கையாகிய நெல்லை மாவட்டத்திற்கு அப்பொழுதுதான் வந்திருந்தது. படித்தவர்களும் பணக்காரர்களும் மட்டும்தான் அப்பொழுது, என்றுமே பளபளப்பு மங்காத, அந்த எவர்சில்வர் பாத்திரத்தை வாங்க முடிந்தது. அங்கயற்கண்ணியிடம் கூட எவர்சில்வர் பாத்திரம் ஒன்றுகூடக் கிடையாது.

அங்கயற்கண்ணி அந்த எவர்சில்வர் பாத்திரத்தை மெல்ல எடுத்து ஒரு குழந்தையை அணைப்பதுபோல் தன் மடியில் வைத்து அணைத்துக்கொண்டாள். பின், பாலை ஒரு தம்ளரில் விளிம்புவரை ஊற்றினாள். மிச்சமிருந்த பாலை எவர்சில்வர் பாத்திரத்தோடு அது இருந்த இடத்திலேயே வைத்தாள்.

பின் கழுவி கவிழ்த்தி இருந்த ஈயம் பூசிய ஒரு பித்தளைப் பாத்திரத்தை எடுத்து அதில் பாலை ஊற்றி அதில் முதலில் கொஞ்சம் கொதிக்கும் காப்பியை ஊற்றினாள். மெல்லமெல்ல மீதமிருந்த காப்பியையும் ஊற்றி ஆற்றினாள் அங்கயற்கண்ணி. அதன்பின் இரண்டு தம்ளர்களில் விளிம்புவரை காப்பியை ஊற்றினாள், ஒன்றை வேலம்மாளுக்குக் கொடுத்தாள், மற்றதை தனக்கு வைத்துக்கொண்டாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே சூடான டீயைச் சுவைத்து அருந்தினர்.

வேலம்மாள் டீயை ரசித்தபடி, “நாங் காப்பி போட்டாக் கூட இப்பிடி இருக்காது. நீ போட்டாமட்டும் எப்பிடி இப்பிடிச் சுவையா இருக்கு? ஏன் நாம ரெண்டுபேரும் இப்பிடி அங்கயும் இங்கயுமா வேற வேற வீட்டில இருக்கணும். நீயும் இங்க வந்திரு. ரெண்டு பேரும் ஒன்னா இருக்கலாம்ன்னா£, கொஞ்ச நாள் பொறுப்போம்ங்க. நீ சொல்ததும் சரிதான். நீ என்னைக்கு வேணுமின்னாலும் வரலாம்,” என்றாள்.

அங்கயற்கண்ணி, “அது அதுக்கு வேள வரனும்பாங்க இல்லயா. கொஞ்சம் பொறுத்திருந்து பின்னால செய்வோம். சரி, போய் அரங்குவீட்டைத் திறந்து பாப்போம்,” என்றாள்.




58

அக்கா தங்கை இருவரும் அவர்கள் இருந்த காரைவீட்டைப் பூட்டிவிட்டு படி இறங்கி, தீப்பட்டு எரிந்து கிடந்த வீட்டை அணுகி, அதில் அரங்கு இருந்த அறைக்குள் நுழைந்தார்கள். பின் தன் கையில் வைத்திருந்த சாவிக்கொத்தை அங்கயற்கண்ணியிடம் கொடுத்தாள் வேலம்மாள். அதை வாங்கி, அதில் இருந்த பெரிய சாவியை வைத்து அந்த இரும்புக் கதவின் சாவித்துவாரத்தில் விட்டுத் திறந்தாள். கதவு மிக எளிதாகத் திறந்துகொண்டது. உள்ளே ஒரே இருட்டாய் இருந்தது. அவர்கள் நுழைந்த வாசல்வழியாக கொஞ்சம் வெளிச்சம் வந்தாலும், முக்கால்வாசி அறை இருட்டாகத்தான் தெரிந்தது.

இருவரும் அறையின் உள்ளே நுழைந்து, அங்கே இருந்த பெட்டிகளைப் பார்த்தனர். நான்கு பெட்டிகள் இருந்தன. அவற்றில் இரண்டு பெட்டிகள் பெரிதாக இருந்தன. முதலில் மிக இருட்டாகத் தெரிந்த அந்த அறையில் அவரகள் கண்கள் பழக்கப்பழக ஓரளவுக்கு வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது. முதலில் ஒரு பெரிய பெட்டியைய் திறக்க முயன்றாள் அங்கயற்கண்ணி. சாவி எது என்று தெரியாததால் ஒவ்வொரு சாவியாக போட்டுப் பார்த்துத் திறந்தவள், வேலம்மாளைப் பார்த்தாள்.

வேலம்மாள், “பெட்டியத்தொற பாப்போம்,” என்றாள்.

அங்கயற்கண்ணி பெட்டியைத் திறந்தாள். அதனுள் கட்டுக்கட்டாக பேப்பர்கள் மடித்து நூல்போட்டுக் கட்டி வைத்திருந்தது. ஒரு கட்டை எடுத்து வாசல் ஓரம்போய் நூலை அவிழ்த்து அந்தக் காகிதத்தைப் பிரித்துப் பார்ததாள். பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்துவிட்டது, அது ஒரு பத்திரம் என்று.

அதைப் பார்த்த வேலம்மாள், “பத்திரம் மாதிரி இருக்கே,” என்றாள்.

அங்கயற்கண்ணி, ஒரு நிமிடம் படித்துப் பார்த்துவிட்டு வேலம்மாளுக்கு புரியுமாறு விளக்கினாள், “இதுக்கா, ஆறு வருசம் முன்ன ஒருத்தர் தன் நிலத்தை எழுதிக்கொடுத்த பத்திரம்,” என்றாள். பின் அந்தப் பத்திரத்தைப் பெட்டிக்குள் திரும்ப வைத்துவிட்டு, வேறு இரண்டு மூன்று பத்திரங்களை எடுத்துப் பார்த்தாள். எல்லாமே நிலம், வீடு, கிணறு போன்ற சொத்துக்களை எழுதிக்கொடுத்த பத்திரங்கள்தான்.

வேலம்மாள், “இத மூடு, அடுத்த பெரிய பெட்டியப் பாப்போம்,” என்றாள்.

அடுத்த பெரிய பெட்டியைத் திறந்தாள் அங்கயற்கண்ணி. அதிலும் பத்திரங்களே இருந்தன, ஆனால் அவை நிலம் வீடு போன்றவற்றை வாங்கியதற்கான பத்திரமாகப் படவில்லை. “இது மத்த ஆட்கள் கடன் வாங்கியதுக்காக எழுதிக்கொடுத்த புரோ நோட்டுப் பத்திரங்க,” என்றாள் அங்கயற்கண்ணி.

இரண்டாவது பெட்டியை மூடிவிட்டு, “சரி, சின்னப் பெட்டியில என்ன இருக்குண்ணு பாப்போமாக்கா?” என்றாள் அங்கயற்கண்ணி.

“ஆமா அத தொர பாப்போம்,” என்றாள் வேலம்மாள்.

அடுத்து, இரு சிறு பெட்டிகளில் ஒன்றைத் திறந்தாள் அங்கயற்கண்ணி. அதில் பல சுருக்குப் பைகள் இருந்தன.

“ஒரே சுருக்குப் பையா இருக்கே,” என்றாள் அங்கயற்கண்ணி.

இருவரும் ஆவலுடன் ஆளுக்கு ஒரு பையை எடுத்து, சுருக்கை விரித்து, பைகளில் விரல்களை விட்டு, அவைகளில் இருந்தவற்றை எடுத்தனர். உள்ளே தங்கநகைகள் மின்னின.

“அடகு பிடிச்ச நகை,” என்றாள் வேலம்மாள்.

ஒவ்வொரு பையிலும் சிறு காகிதச் சீட்டு ஒன்று நூலால் கட்டி இருந்தது, அச் சீட்டில் நகையின் சொந்தக்காரர் பெயர் எழுதி இருந்தது. சில பைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நகைகள் இருந்தன. ஒரு சில பைகள் பெரிதாகவும் கனமாகவும் காணப்பட்டன.

“இத பூட்ட வேண்டாம், கடைசி பெட்டியில என்ன இருக்குன்னு பாப்போம்,” என்றாள் வேலம்மாள்.

அங்கயற்கண்ணி, அப்பெட்டியை அப்படியே விட்டுவிட்டு அடுத்த சிறு பெட்டியைத் திறந்தாள். அப்பெட்டிக்குள் பல சிறிய பெட்டிகள் இருந்தன. அவைகளுக்குப் பூட்டு இல்லை. ஒவ்வொன்றாகத் திறந்தாள் அங்கயற்கண்ணி. ஒவ்வொன்றிலும் ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாய் இருந்தன. அப்பெட்டியில் இருந்த சிறு பெட்டிகளையெல்லாம் இருவரும் திறந்து பார்த்தார்கள். அப்பெட்டிகளில் எல்லாமே பணம்தான். அப்பெட்டியை மூடி பூட்டிவிட்டு மீண்டும் நகை இருந்த பெட்டியை ஆராய்ந்தனர். அப்பெட்டியில், சிறிதும் பெரிதுமாக, நூற்றுக்கும் மேற்பட்ட சுருக்குப் பைகள் இருந்தன.

“எக்கா, இங்க வச்சு பாத்தது போதும். சின்னப் பெட்டி ரெண்டையும் வீட்டுக்கு கொண்டுபோய் பாப்போம்,” என்றாள் அங்கயற்கண்ணி.

“ஆமா, நீ சொல்லுதது சரிதான்,” என்றாள் வேலம்மாள்.

நகைகள் அடங்கிய பெட்டியைத் தூக்கிப் பார்த்துவிட்டு, “அய்யோ கிணாவுதமாக் (ரொம்ப) கனக்கு. நீ தூக்கிப் பாரு,” என்றாள் வேலம்மாள்.

அங்கயற்கண்ணி தூக்கிப் பார்த்துவிட்டு, “கனமாத்தான் இருக்கு, ஆனா நான் தூக்கியாந்திர முடியும். நீங்க அந்தப் பெட்டிய தூக்கிட்டு வாங்க,” என்று பணம் வைத்திருந்த பெட்டியைக் காட்டினாள்.

இருவரும் சிறு பெட்டிகள் இரண்டையும் அரங்குக்கு வெளியே கொண்டு வந்துவைத்துவிட்டு அரங்கைப் பூட்டினர். பின் அவரவர் பெட்டியைத் தூக்கிக்கொண்டு வேலம்மாளின் வீட்டுக்குச் சென்றனர். பெட்டிகளை உள்ளே வைத்துவிட்டு, ஒருவரை ஒருவர் பார்த்துப் பெருமூச்சு விட்டனர்.

அங்கயற்கண்ணி, “எக்கா, இப்போந்தான் பொழுது சாயுது. நாம அவசரப் படாம ராச்சாப்பாட்ட சமைச்சு சாப்பிட்டுட்டு. அதுக்கு பெறகு கதவ அடைச்சுக்கிட்டு அந்தப் பெட்டிகளைப் பாப்போம். இப்பமெ கதவ சாத்திக்கிட்டு கிடந்தொமின்னா ஊர் சந்தேகப்படும்,” என்றாள்.

“அது சரிதான். எப்பிடியும் சாப்பிடனுமுல்லோ. சமயல ஆரம்பிச்சிர வேண்டியதான்,” எனறு சொல்லியவாறே சமையலைத் தொடங்கினாள் வேலம்மாள். அங்கயற்கண்ணியும் அவள் கூடச் சேர்ந்து சமையலுக்கு உதவினாள்.

மண்பானையில் தண்ணீர் ஊற்றி உலை வைத்து, அரிசியைக் களைந்து கல்லில்லாமல் அரிசியை அரித்து சுத்தம் செய்து, கொதிக்கும் உலைத்தண்ணீரில் போட்டாள் வேலம்மாள். அங்கயற்கண்ணி, அவள் பங்குக்கு கத்தரிக்காய்ப் பொரியல் செய்து, ரசம் வைக்கும் வேலையில் ஈடுபட்டாள். சோறு வெந்துகொண்டிருக்கையில் வேலம்மாளும் காயை நறுக்கிக் கொடுத்தும், மசாலாச் சாமான்களை எடுத்துக் கொடுத்தும் உதவினாள். அவர்கள் இருவரும் ஆளுக்குப் பாதிவேலையாகச் செய்தாலும், விரகு அடுப்பில் சமைத்து சாப்பிட்டு முடிக்க இரண்டுமணி நேரத்திற்குமேல் ஆகிவிட்டது. வேலம்மாள் வீட்டில் கடிகாரம் இருந்தாலும் அவளுக்கு மணி பார்க்கத் தெரியாது.

அங்கயற்கண்ணி, “எக்கா, மணி ஒம்போது ஆக இன்னும் கால்மணி நேரந்தான் இருக்கு. பத்து மணிக்கு பாப்போமா?” என்றாள்.

வேலம்மாள், “ஓம் பேச்சுக்கு மறு பேச்சு பேசிருக்கேனா?” என்று சிரித்தாள்.

சற்று நேரம் வெளித்திண்ணையில் சுவரில் சாய்ந்தவாறே அமர்ந்துகொண்டு தெருவில் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தனர். அப்போது ஒரு சிலர் நின்று எப்போதும்போல் சில வார்த்தைகள் பேசிவிட்டுப் சென்றனர்.

மணி பத்து அடித்தது, ஊரில் நடமாட்டம் நின்று விட்டிருந்தது. இனி காட்டில் அதிக நேரம் வேலை செய்துவிட்டுத் திரும்பும் ஒரு சிலரே வருவர். வேலம்மாளும் அங்கயற்கண்ணியும் வீட்டை உட்புறம் பூட்டிக்கொண்டு நகைப்பெட்டியைத் திறந்து ஒவ்வொரு பையாய்ப் பார்த்தனர். பலவிதமான நகைகள் இருந்தன. பெரியாண்டபுரத்து மக்கள் மட்டுமல்லாமல் பக்கத்து ஊர் மக்களும் சங்கரலிங்கத்திடம் நகையை அடகு வைத்திருந்தனர் என்பதை அறிந்துகொண்டனர். கடைசியில் அங்கயற்கண்ணி ஒரு பெரிய பையைத் திறந்து நகைகளை வெளியே எடுத்தாள். வேலம்மாளும் அவள் எடுப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தாள். நகைகளை எடுக்க எடுக்க, இருவருக்கும் அந்த நகைகளை எங்கோ பார்த்த உணர்வு ஏற்பட, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். ஒரே நேரத்தில் இருவருக்கும் அந்த நகைகளின் உரிமையாளி யார் என்று புரிய, ஆச்சரியத்தில் ஆள்ந்தனர்.

வேலம்மாள், “இது, இது, நம்ம மைதிலியோட நெக்லசுல்லோ,” என்றாள்.

அங்கயற்கண்ணியும் வியப்பில் ஆழ்ந்தவாறே, “இது தொலைஞ்சில்லோ போச்சு. இது இங்க எப்பிடி வந்தது?” என்றாள்.

இரு பெண்களுக்கும் மைதிலியின் நகைகள் அந்தப் பெட்டிக்குள் எவ்வாறு வந்திருக்க முடியும் என விளங்க அதிக நேரம் ஆகவில்லை. அது புரிந்த மாத்திரத்திலேயே அவர்கள் இருவரின் மனதிலும் மாபெரும் வேதனை படர்ந்தது.

வேலம்மாள், மிக்க வேதனையுடன், “மனுசன் கந்து வட்டிதான் வாங்குனான்ணு நெனைச்சேன். களவாணிப் பயலாவும் இருந்தான்னு நெனைக்கவே இல்ல. அதுவும் அப்பாவி தங்கச்சாமி வீட்டில, அவன் பெண்டாட்டி உயிரா வச்சிருந்த நகையைக் களவாண்டிருக்கான்,” என்றாள்.

அங்கயற்கண்ணி நிலைமையை உடனே புரிந்துகொண்டு, “அக்கா அந்த மனுசந்தான் போய்ச்சேந்திட்டாரே. இனி அவரப் பத்தி பேசி என்ன ஆகப்போவுது? அவர் செஞ்ச கெட்டகாரியங்களுக்காக நாம முடிஞ்ச அளவுக்குப் பரிகாரம் செய்வோம். மன்னிப்புக் கேப்போம். அதில் ஒருவேளை அந்த மனுசனுக்கும் செத்த பிறகின்னாலும் பிராயச்சித்தம் கெடச்சிட்டுப் போகட்டும்,” என்றாள்.

வேலம்மாளுக்கு கோபம் தலைக்கேறியது, “அவனுக்கு மன்னிப்பே கெடையாது. அதுவும், இவ்வளவு காசு பணம் இருந்தும், மைதிலியோட நகைய திருடி வச்சுக்கிட்டவனுக்கு மன்னிப்பே கிடையாது. ஆனா.. நாம்ம ரெண்டுபேரும் நல்லதையே செய்வோம். அது வரைக்கும் நீ சொன்னது சரி,” என்றாள்.

பெட்டியை மூடிப் பூட்டைப் பூட்டி, சாவியை மறைத்து வைத்துவிட்டு, “படுங்கக்கா, நாளைக்குப் பாத்துக்கிடலாம்க்கா,” என்றாள் அங்கயற்கண்ணி. பின் இருவருக்கும் பாய் தலையணை போட்டு, வேலம்மாளை அமைதிப் படுத்தி படுக்க வைத்தாள். அதன்பின் முதல்முறையாக அங்கயற்கண்ணி வேலம்மாளின் வீட்டில் படுத்துக்கொண்டாள். ஆனால் இருவருமே உறங்கவில்லை. அவரவர் வாழ்க்கையில் நடந்தவற்றை நினைத்து உறங்காமல் இரவைக் கழித்தனர்.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top