JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Aalamarathu Paravaigal - Chapters 63 & 64

Uthaya

Member
ஆலமரத்துப் பறவைகள் – அத்தியாயம் 63 & 64

63

வக்கீல் முத்துராமன் சொன்னது போல் சில நாட்கள் கழித்து வெள்ளச்சாமியின் மனைவி பச்சையம்மாளுடன் வந்தார். அவளைப் பார்த்தவுடன் மறுபடியும் கண்ணீர் மாலை மாலையாய் வடித்தான் வெள்ளச்சாமி. கணவன் மனைவி இருவரும் எதிர் எதிரே அமர்ந்திருந்தனர். ஆனால் பேசிக்கொள்ளவில்லை.

அவர்கள் இருவரும் கொஞ்சம் பேசிக்கொள்ளட்டும் என்று வக்கீல் முத்துராமன் சற்றுத் தள்ளி நின்றார். அவர்கள் இருவரும் பேசாதிருப்பதைப் பார்த்து அவரே எடுத்துக்கொடுத்தார், “ஏம்மா, ஒங்க பிள்ளைகள் ரெண்டும் நல்லா இருக்கா,” என்றார்.

பச்சையம்மாள் அப்போதுதான் தான் பேசாமல் இருக்கிறோம் என்பதை உணர்ந்தவள் போல், “ஆமா பிள்ளைகள் ரெண்டும் நல்லா இருக்கு. வேலம்மாளும் அங்கயற்கண்ணியும் தெனம் வந்து பாத்திட்டுப் போறாக. சாப்பாடு கொண்டுக்கிட்டு வருவாக. வேலம்மாள், நான் இருக்கேன் கவலப் படாத. ஒங்க மூணு பேரையும் ஒம் புருசன் வார வரைக்கும் பாத்துக்கிடுறது எம்பொறுப்புண்ணு சொல்லிட்டா,” என்றாள்.

வெள்ளச்சாமி, “அய்யோ, அப்பிடிப்பட்ட நல்ல மனுசிக்குத் துரோகம் பண்ணிட்டனே. அவ நல்ல மனுசி. ‘அண்ணே நீங்களாது சொல்லபிடாதா. இப்பிடி அலையிராறே இந்த மனுசன். எனக்கு தெனம் கெதக்கல். என்னைக்கி இவர எவன் போட்டுத் தள்ளுவானோன்னு பயம்மா இருக்குன்னு’ சொல்லியும், நான் அத காதுலயே வாங்காம அலஞ்சேன். ‘அண்ணன எவன் போடுவான் நான் இருக்கையில’ன்னு சவால் விட்டேன். அவ அழுதா, ‘அண்ணே பொம்பள விசயத்தில விட்டுக்குடுக்க மாட்டான். ஒருத்தன் பெண்டாட்டிய ஓருத்தன் வச்சிருந்தா எப்பிடி பொறுப்பான், சொல்லுங்க. கங்கணம்கட்டி வெட்டி போட்டுருவான்னு,’ சொன்னா. அவ சொன்னது மாதிரியே போட்டுதள்ளிட்டு ஏம்மேல பழிய போட்டுட்டு போயிட்டானே,” என்று கண்ணீர் விட்டுக் கதறி அழுதான்.

கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. பின் வெள்ளச்சாமி தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு, “சரி சரி, நல்ல வேள வேலம்மாளும் அங்கயற்கண்ணியும் பாத்துக்கிடுதம்மின்னு சொல்லப்போய் எனக்குக் கொஞ்சம் நிம்மதி. அவுக ரெண்டு பேரும் பாத்திகிடட்டும். பிள்ளைகள நல்லா பாத்துக்கோ. வக்கீல் அய்யா என் கேசு நிலம சரியில்லங்காக. எதுவுமே எனக்கு சாதகமா இல்லயாம்,” என்றான் வெள்ளச்சாமி.

பச்சையம்மாள் அது தனக்குத் தெரியும் என்பதுபோல் பார்த்தாள். அதன் பின் வக்கீல் முத்துராமன் பக்கத்து நாற்காலியில் அமர்ந்துகொண்டு இருவரையும் பார்த்துப் பேச ஆரம்பித்தார். “அதாவது, சங்கரலிங்கம் கொலை செய்யப்பட்ட நேரத்தில் அவங்கூட இருந்தது யாருன்னு கேட்டால், வெள்ளச்சாமின்னு எல்லாரும் சொல்றாங்க. நீயும் அத ஒத்துக்கொண்ட. கொலைக்கு உபயோகப் படுத்தப்பட்ட ஆயுதம் ஒன்னோட அருவாள்.

இது நீ கொலை செய்ய வாய்ப்பு இருக்குன்னு நிரூபிக்கிது. சங்கரலிங்கத்திடம் இருந்து நீ நெறையக் கடன் வாங்கி இருக்க, அதுக்கு சாட்சி, நீயும் அவனும்தான். அவனைக் கொன்னுட்டா நீ கடன் வாங்கலன்னு சொன்னால் மறுக்க ஆள் இல்ல. அதுதான் மோட்டிவ், அதாவது நீ கொலை செய்யக்காரணம்..,” என்றவரை முடிக்க விடாமல், இடைமறித்தான் வெள்ளச்சாமி.

“அய்யா, அஞ்சாயிரத்துக்கு மட்டுமில்ல, எவ்வளவு காசுண்ணாலும் சரி, காசுக்கொல்லாம் நான் கொல பண்ணுற ஆள் இல்லய்யா. நீங்களுமா நம்புதீக,” என்றான் வெள்ளச்சாமி. அவனுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

வக்கீல் முத்துராமன், “நான் நம்பலைய்யா. ஆனால் நான் சொன்னதெல்லாம் எதிர்கட்சி வக்கீல் சொல்லுவார் என்று சொல்ல வந்தேன். அவர் சொல்வதை இல்லைண்ணு சொல்லி நிரூபிக்கிறதுக்கு நம்மகிட்ட எந்த ஆதாரமும் இல்லை. நாம சொல்லலாம், வெள்ளச்சாமி அப்பிடிபட்ட ஆள் இல்லன்னு. ஆனா என்னப் பொறுத்தவரைக்கும் நம்ம மூணுபேரைத் தவிர வேற யாரும் நம்ப மாட்டாங்க,” என்றார்.

“ஏன் நம்பமாட்டாங்க?” என்றான் வெள்ளச்சாமி.

வக்கீல் முத்துராமன், “சரி நான் விளக்கிச் சொல்றேன். நான் சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்றேன், சரியா? வெள்ளச்சாமி நீயே இந்த கொலய கடனை இல்லன்னு மறைக்கதுக்காக செய்திட்டு இப்பிடி நாடகம் போட்டன்னு வச்சுக்கிடுவோம். ஒன்னோட வாய்சொல் தவிர ஒனக்கு ஒரு சாட்சியும் இல்ல. அப்போம் ஒன்னோட வாய்ச்சொல்ல நம்பி எப்பிடி ஒன்ன விடுதல செய்வாங்க. கொல செய்த யாருமே நான் கொலை செய்தேன் என்று ஒத்துக்கொள்வதில்லை. ஆகையினால, நாம வெற்றி பெறனும்னா, நீ கொலை செய்யல, அந்த இடத்தில நீ இல்ல, அந்த ஊரிலேயே நீ இல்ல. நீ இந்தக் கொலை செய்யக் காரணமே இல்ல அப்பிடின்னு நிரூபிக்கணும். அப்பிடி நிரூபிக்க முடிஞ்சால், நாம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கு,” என்றார்.

முதன் முறையாக பச்சையம்மாள் இடை புகுந்து, “அப்பிடி இந்த மனுசன் கொலை செய்யக் காரணம் இல்ல, அந்த இடத்திலயும் இவர் இல்லன்னு நிரூபிக்க முடியலண்ணா என்னாகும்,” என்றாள்.

வக்கீல் முத்துராமன், “ரொம்ப நல்லா யோசனை பண்ணி கேட்டிருக்கீங்க இந்த கேள்விய. எதிர்தரப்பு வக்கீல், இவர் அந்த இடத்தில இருந்தார், இவர் கொலை செய்யக் காரணம் இருக்கு, அப்பிடின்னு நிரூபிக்க முடிஞ்சால் ரொம்ப பிரச்சனை. வேற ஒரு ஆள் அங்க இருந்தான் அவனும் சங்கரலிங்கத்தைக் கொலைசெய்ய காரணம் இருக்குன்னு ஆதாரத்தோட நிருபிச்சால், யார் கொலை செய்ததுன்னு கேள்வி வரலாம். இல்லையின்னா வெள்ளச்சாமிதான் கொலையச் செய்திருக்கணுமுன்னு மற்றவங்க முடிவுசெய்திடுவாங்க.” என்றார்.

பச்சையம்மாள், “சரி இதுக்கு வேற வழியே இல்லையா? எப்பிடியாவது தண்டனையக் கொறைக்க வழி இருக்கா?” என்றாள்.

வக்கீல் முத்துராமன், “இப்போதைக்கு எனக்குத் தெரிஞ்ச ஒரே வழி, வெள்ளச்சாமிதான் கொலையச் செய்தான்னு ஒப்புக்கொள்வதுதான்,” என்றார்.

பச்சையம்மாள், “அய்யா, அதத்தான் சொல்லிட்டேகளே. இவர்தான் கொல செய்தார்ன்னு எல்லாரும் நம்புவாங்கன்னு, அப்போம் இவரு ஒத்துக்கொண்டா என்ன, இல்லாட்ட என்ன. சரி. இதுல தண்டனையக் கொறைக்க வழி இருக்கா அய்யா?” என்றாள்.

வக்கீல் முத்துராமன், “முதலில் நான் சரியா விளக்கிச் சொல்லவில்லை, திரும்ப விளக்கமாச் சொல்றேன். அதாவது இந்தக் கேசை கோட்டுல நீதிபதி முன்னால் வாதாடி ஜெயிக்க முடியாதுன்னு சொன்னேன். ஆகையினால வாதாடுவதற்கு முன்னாலேயே நாம் குற்றத்தை ஒப்புக்கொண்டால் தண்டனையக் குறைக்க வாய்ப்பு இருக்கு,” என்றார்.

பச்சையம்மாள், “கொலக் குத்தத்தை ஒத்துக்கிட்டா பின்ன அவுக ஏன் தண்டனைய கொறைக்கப் போறாக?” என்றாள்.

வக்கீல் முத்துராமன், “அவங்களும் இந்தக் கேசை நிருபிக்க பாடுபடனும். கொலையைப் பார்த்த சாட்சி இல்ல. எல்லாம் சூழ்நிலை ஆதாரங்கள்தான். ஆனால் நம்பகரமான சூழ்நிலை ஆதாரங்கள். அவங்க எதிர்பாராம ஏதாவது நடந்து போச்சுன்னா திடீர்ன்னு கேஸ் தோக்க வாய்ப்பு இருக்கு. வாய்ப்பு இருக்கோ இல்லையோ அந்த பயம் எல்லாருக்கும் இருக்கும். அதை நாம் உபயோகித்து, எங்க கட்சிக்காரருக்கு குறையாகத் தண்டனை வழங்க ஏற்பாடு செய்தால் நாங்க குற்றத்தை ஓரளவுக்கு ஒத்துக்கொள்வோம்ன்னு சொல்லலாம். அதுக்கு வழி இருக்கு,” என்றார்.

பச்சையம்மாள், “ஓரளவுக்குன்னா? கொலை கொலைதான? இதுல ஓரளவுக்குன்னா எப்படி,” என்றாள்.

வக்கீல் முத்துராமன், சிரித்துக்கொண்டே, “நல்லா பேசுறீங்கம்மா. படிச்சிருந்தால் வக்கீலா ஆகியிருக்கலாம். நான் என்ன சொல்ல வந்தேன்னா, கொலையில பல வகை. அதாவது திட்டமிட்ட கொலை, அதுக்கு தண்டனை அதிகம். மாறாக, ரெண்டு பேர்க்குள்ள வாக்குவாதம் முத்தி திடீர்ண்ணு கத்திய எடுத்துக் குத்திட்டால் அதுக்கு தண்டனை குறைவு. நாம அந்த மாதிரி கோபத்தில நடந்த கொலைண்ணு ஒப்புக்கொண்டால், தண்டனை குறைய வாய்ப்பு நல்லா இருக்கு,” என்றார்.

பச்சையம்மாள், “ஆமா அய்யா, நீங்க சொன்னது நல்லதாப்படுது. கொலை நடந்த இடத்திலதான் இவர் இருந்தாரு, அவரு அருவாளத்தான் கொலைசெய்யப் பயன்படுத்தி இருக்கு. கடன் வேற வாங்கி இருக்கார். அதுக்குச் சாச்சி இல்ல. இதெல்லாம் இவர் கொலை செய்யலைண்ணு சொல்ல வாய்ப்பே இல்லாம இருக்கு. ஆனால் சங்கரலிங்கம் இவர அடிச்சான். கண்டபடி பேசுனான். பெண்டாட்டி, அம்மா, ஆத்தா, உடப்பிறந்தாளப் பத்தி கேவலமா பேசினான். ஆகையினாலதான் நான் கோபத்தில செய்திட்டேன், தப்புத்தாண்ணு சொல்லி ஒத்துக்கிட்டா தண்டனை கொரையும்மிண்ணால் அப்பிடிச் செய்ய வேண்டியதுதான்,” என்றாள்.

வக்கீல் முத்துராமன், “ரெம்பச் சரியாச் சொன்னீங்கம்மா. நல்லாப் புரிஞ்சுக்கிட்டீங்க. வெள்ளச்சாமி, நீங்க என்ன சொல்றீங்க? நீங்கதான் பேசவேண்டிய ஆள்,” என்றார்.

பச்சையம்மாள், “அவர் எப்பிடி பேசுவாரு. வேலம்மாள் சொல்லிருக்கா, சங்கரலிங்கத்தை திருத்துங்கண்ணு. நான் தெனம் படிச்சு படிச்சு சொல்லி மையம்பிறந்தேன் (மன்றாடினேன்), ஒருத்தர் சொன்னதையாவது கேட்டாரா? இப்பமும் இவரு சீக்கிரம் வெளிய வரட்டும்முன்னு தெனம் கும்பிடாத தெய்வமில்ல. இவரு வெளிய வார வரைக்கும் சாமிய கும்பிட்டுக்கிட்டே இருப்பேன். ஆனா செய்த பாவத்துக்கு தண்டணை கெடைக்கத்தான செய்யும்.

அந்த சங்கரலிங்கமும் இவரும் சேந்து பல குடும்பத்தைக் கெடுத்திருக்காங்கய்யா. அதுக்கெல்லாம்தான் தண்டணை. கொல செய்ததுக்கில்ல. எனக்குத் தெரியும், நீங்க கொல செய்யக்கூடிய ஆள் இல்லன்னு. ஆனா தப்புச் செய்திருக்குல்லோ. அது உம்மதான (உண்மைதான்), இல்லன்னு சொல்ல முடியுமா? அதுக்கு கொறைச்சுத் தண்டணை கிடைச்சா நல்லது. அது போதுமய்யா. உங்க புண்ணியத்தில ஒரு ரெண்டு வருசம் உள்ள இருந்திட்டுன்னாலும் திருந்தி வெளிய வரட்டும். வேற வழியில்லையில்லோ,” என்று வெள்ளச்சாமியைப் பார்த்தாள்.

வெள்ளச்சாமி தாயிடம் திட்டு வாங்கும் மகன் போல் பச்சையம்மாள் சொல்வதைக் கேட்டுக்கொண்டே அமர்ந்திருந்தான். அவள் சொல்வது அத்தனையும் உண்மை என்று அவனுக்குத் தெரியும். மேலும் தன் குழந்தைகளையும் மனைவியையும் வேலம்மாளும் அங்கயற்கண்ணியும் பார்த்துக்கொள்வதாகச் சொன்னதே அவன் உள்ளத்தைக் குளிர வைத்து விட்டது. இனி அவன் சிறைச்சாலை என்ன, வனாந்தரத்திற்கும் செல்லப் பயப்படமாட்டான். அவன் மனைவி பச்சையம்மாள் சொன்னது போல் அவனும், தான் செய்த குற்றத்திற்கெல்லாம் சேர்த்துத் தண்டனை அனுபவித்துவிட்டு ஒரு திருந்திய மைந்தனாய் உலகத்திற்கு வந்தால்தான் நல்லது என்று நம்பினான்.

திரும்பவும் வக்கீல் முத்துராமன், “வெள்ளச்சாமி, நீ சொல்லுப்பா, ஒன் அபிப்பிராயம் என்ன?” என்றார்.

வெள்ளச்சாமி, “என் வீட்டுக்காரி பச்சையம்மாள் சொன்னது போல நான் தண்டனைய அனுபவிக்கத் தயார். நான் குற்றம் செய்திருக்கேன். ஆனால் நான் கொலை செய்யலை. ஆகையினால நீங்க எப்படியாவது தண்டனையக் கொறைக்க முடிஞ்சால் ஏற்பாடு செய்ங்க அய்யா. நான் நீங்க சொன்ன படி செய்றேன்,” என்றான்.

பச்சையம்மாளுக்குச் சிரிப்பு வந்தது. அப்பொழுதே தன் கணவன் தீக்குளித்துத் தான் செய்த துர்க்காரியங்களுக்குப் பிராயச்சித்தம் தேடிக்கொண்டதுபோல் பூரித்துப் போனாள்.

வக்கீல் முத்துராமன், “சரி ஆகட்டும். நான் மேற்படி நடக்க வேண்டியவைகளைப் பார்த்துக்கொள்கிறேன்,” என்றார்.

சில நிமிடங்களில் பச்சையம்மாளிடமும் வக்கீல் முத்துராமனிடமும் விடைபெற்றான் வெள்ளச்சாமி. பல நாட்களுக்குப் பின், வெள்ளச்சாமியின் முகம் தெளிந்து இருந்தது. அவனுடன் அடைக்கப் பட்டிருந்த சக கைதி ஒருவன் அவனைக் கண்ட உடன், “நீ போகும் போது இருந்ததுக்கும், வரும்போது இருக்கதுக்கும் ஏகமான வித்தியாசம் இருக்கு. போகும்போது ஏதோ தூக்குத் தண்டனைக்குப் போறவன்போல போன. வரும்போது ஒரே நிம்மதியா, ஏதோ கடவுளக் கண்டு பேசிட்டு வாரவன் மாதிரி அமைதியா இருக்க,” என்றான்.

அமைதியாய் தலை அசைத்துச் சிரித்த வெள்ளச்சாமி, “என்ன, ஒரு எட்டோ, இல்ல பத்தோ வருசம் கிடைக்கும். அதுக்குப் பின்னால் வீட்டுக்கு போய் நல்லபடியா வாழவேண்டியதுதான். இதுவரைக்கும் பயம், குழப்பம் ரெண்டும் எம்மனசை அரிச்சு எடுத்திருச்சு. இப்பம் அது போயிருச்சு. தண்டனையத் தாங்கிக்கிட எனக்கு வலு இருக்கு. தண்டனை எனக்குத் தேவைதான், ஏன்னா நான் தப்பு செய்திருக்கேன். கொலை செய்யலை, மத்த தப்புச் செய்திருக்கேன். அதனால நான் தண்டனைய எதிர் நோக்கி இருக்கேன். ஏன்னா தண்டனை அனுபவிச்ச பின் நான் புது வாழ்க்கை வாழப் போறேன். ஒரு நல்ல மனுசனாய் வாழ்வேன்,” என்றான்.




64



சில நாட்கள் கழித்து வெள்ளச்சாமியின் மீது தொடுக்கப் பட்ட வழக்கு சம்பந்தமாக மேற்க்கொண்டு என்ன செய்யலாம் எனக் கூடிப் பேசி முடிவெடுக்க அந்த வழக்கில் தொடர்புள்ள அனைவரும் கூடினர். வெள்ளச்சாமிக்காக வாதாட அரசு நியமித்த வக்கீல் முத்துராமன் வெள்ளச்சாமியின் சார்பில் கலந்து கொண்டார். அரசு தரப்பு வக்கீலாக ஜான் சீனிவாசகம் கலந்துகொண்டார். காவல்துறையின் தரப்பில் இன்ஸ்பெக்டர் ராஜாவும், எஸ்.ஐ. இளங்கோவும் கலந்துகொண்டனர். முதலில் இன்ஸ்பெக்டர் ராஜா, வெள்ளச்சாமி செய்ததது திட்டமிட்ட கொலை, ஆகவே அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டாலும் குறைந்தது பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கவேண்டும் என வாதாடினார்.

வக்கீல் முத்துராமன், “அப்படியென்றால் நாங்கள் கோர்ட்டிலேயே பார்த்துக்கொள்கிறோம்,” என்று சொல்லிவிட்டார்.

இன்ஸ்பெக்டர் ராஜா, “நீங்கள் தோத்தால் பதினான்கு ஆண்டுகள் தண்டனை கிடைக்கும், ஏன் தூக்குத்தண்டனை கூடக் கிடைக்கலாம்,” என்றார்.

வக்கீல் முத்துராமன், “கொலைக்குச் சாட்சிகள் இல்லை. சூழ்நிலை ஆதாரங்களை மட்டும் வைத்து எவருக்கும் தூக்குத்தண்டனை விதித்ததில்லை. அது மட்டுமல்ல, வெள்ளச்சாமி சங்கரலிங்கத்தைக் கொலை செய்ய வேண்டுமென்றால் அவனுக்கு வேறு நல்ல வாய்ப்புக்கள் கிடைத்திருக்கும். இரவில் காட்டில் செய்திருக்கலாம், சங்கரலிங்கம் அவனை நம்பி எங்கும் சென்றான். ஆகவே இக் கொலையை அவன் செய்திருக்க வாய்ப்பே இல்லை, என்று நாங்கள் வாதாடுவோம். மேலும் கேஸ் கோர்ட்டுக்குப் போனால் நீங்களும் தோற்க வாய்ப்பு உள்ளது என்பதையும் மறக்க வேண்டாம்,” என்றார்.

அரசுத் தரப்பில் வாதாட இருந்த வக்கீல் ஜான் சீனிவாசகம், “நீங்கள் சொல்வது நியாயமானதுதான். வெள்ளச்சாமியின் மீதுள்ள வழக்கு சூழ்நிலை ஆதாரங்களை மட்டும் வைத்துப் போடப்பட்ட வழக்குதான். சாட்சிகள் இல்லை, சரிதான். இன்ஸ்பெக்டர் பத்து ஆண்டுகள் தண்டிக்க வேண்டும் என்கிறார், நீங்கள் என்ன தண்டனை சரியானது என்று நினைக்கிறீர்கள்,” என்று வக்கீல் முத்துராமனைக் கேட்டார்.

வக்கீல் முத்துராமன், “வெள்ளச்சாமி கொலைகாரன் அல்ல. கொலைசெய்யப் பட்டவனுடன் கூடா நட்புக் கொண்டதுதான் அவன் செய்த ஒரே தவறு. அதற்காக அவனுக்கு நான்கு ஆண்டுகள் தண்டனை வழங்குவதே அதிகம்,” என்றார்.

வக்கீல் ஜான் சீனிவாசன், “சார், கொலைக்குற்றத்திற்கான தண்டனை நான்கு ஆண்டுகள் என்பது மிகக்குறைவு. எட்டு ஆண்டுகள் என்று முடிவுசெய்வோம்,” என்றார்.

இவ்வாறு முன்னும் பின்னுமாக இழுத்து கடைசியில் ஆறு ஆண்டுகள் தண்டனை வழங்கவேண்டும் என கனம் நீதிபதி அவர்களுக்குப் பரிந்துரை செய்யலாம் என அனைவரும் ஒரு மனதாக முடிவு செய்தனர்.

அடுத்த நாளே வக்கீல் முத்துராமன் வெள்ளச்சாமியைச் சந்தித்து, “வெள்ளச்சாமி, ஒனக்காக வாதாடி தண்டனைய ஆறு வருசமாக் குறைச்சிட்டேன். கூடிய சீக்கிரம் நீதிபதி ஒனக்கு ஆறு ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்குவார். ஆனால், சிறையில் நீ நல்ல படியா நடந்துக்கிட்டா, நன்னடத்தை என்கிற பேரில் உன் தண்டனையக் குறைச்சிருவாங்க, நீ மூணு அல்லது நாலு வருசத்தில் வெளிய வந்திரலாம்,” என்றார்.

வெள்ளச்சாமி, “சரி சார். ஒங்க உதவிய எப்பவும் மறக்க மாட்டேன். நான் இனிமேல் நல்லவனா வாழ்வேன் சார்,” என்று மனமார நன்றி சொன்னான்.
 

Nithyalakshmi

New member
Super anna apadi neenga ivalo azhaga antha kalathu nadai murai pechi court apadi allam nadathuvanga azhuthiringalo arumai pachaiyamal nala maneshi Valaichami thapuku thanai panathuku seriyana thandanai
 

Nithyalakshmi

New member
Super anna apadi neenga ivalo azhaga antha kalathu nadai murai pechi court apadi allam nadathuvanga azhuthiringalo arumai pachaiyamal nala maneshi Valaichami thapuku thanai panathuku seriyana thandanai
 

Nithyalakshmi

New member
Super anna apadi neenga ivalo azhaga antha kalathu nadai murai pechi court apadi allam nadathuvanga azhuthiringalo arumai pachaiyamal nala maneshi Valaichami thapuku thanai panathuku seriyana thandanai
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top