JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Aalamarathu Paravaigal - Chapters 65 & 66

Uthaya

Member
ஆலமரத்துப் பறவைகள் – அத்தியாயம் 65 & 66

65

வெள்ளச்சாமியின் மீது போடப்பட்ட வழக்கில் அவன் சங்கரலிங்கத்தை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதனால், அவன் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தேவையில்லாமல் போய்விட்டது. இருதரப்பிலும் சம்பந்தப் பட்டவர்கள் கூடி பேசி முடிவெடுத்தபடி வெள்ளச்சாமிக்கு ஆறு ஆண்டுகள் தண்டனை வழங்கலாம் என தலைமை நீதிபதி காதர்பாஷா அவர்களுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

தலைமை நீதிபதி காதர்பாஷா தண்டனை பற்றித் தீர்ப்புக்கூற ஒரு நாளை நிர்ணயித்தார். அந்த நாளில் பச்சையம்மாள், வெள்ளச்சாமிக்காக வாதாடிய வக்கீல் முத்துராமனின் அழைப்பை ஏற்று, அங்கு வந்து அமர்ந்திருந்தாள். அவளுக்கு அடுத்து முத்துராமன் அமர்ந்திருந்தார். மேலும் எஸ்.ஐ. இளங்கோ மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜா வந்து அமர்ந்திருந்தனர். அழைப்புக் கிடைத்தும் வேலம்மாள் நீதிமன்றத்திற்கு வர விருப்பம் தெரிவிக்கவில்லை.

சிறிது நேரத்தில் வெள்ளச்சாமி கை கால் இரண்டிலும் விலங்கணிந்து கைதிக் கூண்டில் அடைக்கப் பட்டான். பச்சையம்மாளைப் பார்த்தவுடன் சிரித்தான். அவள் கொஞ்ச காலம்தான் பொறுத்திரு என்பதுபோல் கண்ணால் பேசினாள். வெள்ளச்சாமியும் ஒரு சிறு புன்னகை பூத்து, தலை அசைத்தான்.

குறிப்பிட்ட நேரத்தில் தலைமை நீதிபதி காதர்பாஷா நீதிமன்றத்தில் நுழைந்தார். வழக்கமான முறைப்படி கனம் நீதிபதி நுழைந்தவுடன் எழுந்து நின்று மரியாதை செய்தபின் நீதிமன்றம் ஆரம்பம் ஆனது. இருதரப்பினரும் முன்னமே ஏற்றுக்கொண்டபடி வெள்ளச்சாமி திட்டமிட்டுக் கொலை செய்யவில்லை, கொலை நடந்த அன்று சங்கரலிங்கம், குடித்துவிட்டு அவன் கேட்ட பெண் தனக்குக் கிடைக்காததால் வெள்ளச்சாமியைத் தாறுமாறாக வைததுமட்டுமின்றி, அவனைக் கை நீட்டி அடித்தான் என்றும். மேலும் அவனைத் தரக்குறைவாகப் பேசி, “அவளைக் கூட்டியாற முடியலைன்னா ஒம்பெண்டாட்டியக் கூட்டியா,” என்று சொன்னதாகவும். சங்கரலிங்கம் குடி போதையில் வெள்ளச்சாமியை மல்லுக்கட்டியதாகவும் அப்போது விளக்கு கீழே விழுந்து தீ பிடித்துவிட்டது என்றும். அதனால் மேலும் கோபம்கொண்ட சங்கரலிங்கம் வெள்ளச்சாமியின் அருவாளை பறிக்க முயன்றதாகவும்.

அது வரை சங்கரலிங்கம் தன்னை நடத்திய செயல்களால் கோபமுற்றிருந்த வெள்ளைச்சாமி, இனி இவன் தன்னைக் கொலை செய்துவிடுவான் என்று பயந்து, தற்காப்புக்காக சங்கரலிங்கத்தை தன் அருவாளால் வெட்டிவிட்டு ஓடி மறைந்துகொண்டதாகவும், இரு தரப்பினரும் எழுத்துமூலம் ஒத்துக்கொண்டதை கனம் தலைமை நீதிபதியிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தார்கள். அவரும் அனைத்தையும் படித்து அறிந்துகொண்டது மட்டுமல்லாமல் இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டு பரிந்துரை செய்யப்பட்ட தண்டனைக் காலத்தையும் ஆராய்ந்து கொண்டார்.

தலைமை நீதிபதி காதர்பாஷாவுக்கு அனுப்பப்பட்ட காகிதங்களில் உள்ள வாக்குமூலங்கள் சரிதான் என இரு தரப்பினரும் நீதிபதியின் முன் மீண்டும் ஒத்துக்கொண்ட பின், அவர் அவ்வழக்கில் பின்வரும் தீர்ப்பை வழங்கினார்.

தலைமை நீதிபதி காதர்பாஷா, “சங்கரலிங்கம் கெலை வழக்கில், இருதரப்பினரும் ஒத்துக்கொண்டு எழுதிக்கொடுத்த வாக்குமூலங்களைப் பரிசீலித்து அறிந்துகொண்டது என்னவென்றால், இக்கொலை திட்டமிட்டுச் செய்த கொலை அல்ல. நெடுநாள் வெறுப்போ கோபமோ காரணம் அல்ல இக்கொலை நிகழ்ந்ததன் காரணம். இக் கொலை சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நடந்துவிட்டது. கொலை செய்தவனும் கொலை செய்யப்பட்டவனும் ஒன்றாக, இரவு பகல் என்று பார்க்காமல், பல இடங்களுக்குப் போய் இருக்கிறார்கள். திட்டமிட்டுக் கொலை செய்யவேண்டுமென்றால் வெள்ளச்சாமி வேறு இடங்களில் சங்கரலிங்கத்தைக் கொலை செய்திருக்கலாம். மாறாக குடித்துவிட்டு நிதானம் இழந்த, சங்கரலிங்கமே இக்கொலைக்கு ஒரு காரணமாக இருந்திருக்கிறான். அவன் வெள்ளச்சாமியை பல வகைகளில் தாக்கி இருக்கிறான், அடித்திருக்கிறான், கேவலப் படுத்தி இருக்கிறான், அவன் குடும்பத்தையும் கேவலமாகப் பேசி இருக்கிறான். அதனால் சாதாரண மனிதனாகிய வெள்ளைச்சாமி நிதானம் தவறிக் கொலை செய்ய நேரிட்டது. இருப்பினும் கொலை கொலைதான். கொலைக் குற்றத்திற்குத் தண்டனை வழங்க வேண்டியது ஒரு நீதிபதியின் கடமை. ஆனாலும், வெள்ளைச்சாமி கொலையை ஒத்துக்கொண்டு வருத்தம் தெரிவித்திருக்கிறான். ஆகவே, அரசு தரப்பு வக்கீல் ஜான் சீனிவாசகத்தின் பரிந்துரையை முற்றிலுமாக ஏற்றுக்கொண்டு, அவனுக்கு ஆறு ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்குகிறேன்,” என்று முடித்தார். இருதரப்பினரும் பாதகமில்லை என்ற எண்ணத்தோடு நீதிமன்றத்தைவிட்டு வெளியேறினர்.

ஊரில் எல்லோரும் பேசிக்கொண்டபடி, குறைந்தது பதினான்கு ஆண்டுகள் தண்டனை வழங்காமல், ஆறு ஆண்டுகளோடு நீதிபதி தன் கணவன் வெள்ளச்சாமியை விட்டதில், பச்சையம்மாளுக்கு வெகு திருப்தி. அவள் ஏதோ தன் கணவன் விடுதலையே அடைந்ததுபோல் மகிழ்ச்சியோடு வீடு திரும்பினாள். அவள் மகிழ்ச்சிக்குக் காரணம், அவள் கணவனுக்கு நீதிபதி குறைவான தண்டனை வழங்கியது மட்டுமல்ல, வெள்ளச்சாமி சிறையிலிருந்து வெளியே வரும்பொழுது ஒரு திருந்திய மைந்தனாகத்தான் வருவான் என்ற அவளுடைய நம்பிக்கையும்தான் காரணம்.

ஆனால் அவளுக்கே புரியாத ஆச்சர்யம் என்னவென்றால், அன்றிலிருந்து பச்சையம்மாளின் முட்டுவாத நோய் முற்றிலும் குணமடைந்து விட்டது. அவளால் இப்போது கொஞ்சம்கூட வலியில்லாமல் முன்போல, நடக்க, உட்கார. எழும்ப முடிந்தது.




66

வேலம்மாளும் அங்கயற்கண்ணியும் காலையில் எழுந்ததிலிருந்தே சுறுசுறுப்போடு செயல்பட ஆரம்பித்தனர். காலை காப்பி குடித்து, சில நாழிகைகள் கழித்து உணவுண்ட பின், இருவரும் கூடிப் பேசினர். அப் பேச்சின் முடிவில் சில முடிவுகளை எடுத்தனர். அம்முடிவுகளை எவ்வாறு நிறைவேற்றுவது எனவும் தீர்மானித்தனர். அதன்படி அடுத்துவந்த நாட்களில் செயல் பட்டனர்.

அவர்களின் முடிவுப்படி அன்று செய்யவேண்டிய காரியங்களில் துரிதமாய் ஈடுபட்டனர். இருவரும் அரங்கில் இருந்த பத்திரங்களை எவரும் அறியாவண்ணம் சாக்கில் நிறைத்து வீட்டுக்குக் கொண்டு வந்தனர். பின் ஒவ்வொரு பத்திரமாக அங்கயற்கண்ணி வேகமாகப் படித்துப் பார்த்தாள். அதன்பின் ஒரு வெள்ளைக் காகிதத்தில் யார் எழுதிக்கொடுத்த பத்திரம், எதற்காக, மற்றும் எழுதிக்கொடுத்த தேதி போன்ற விசயங்களை எழுதிக்கொண்டாள். ஒவ்வொரு பத்திரத்தைப் படித்ததும் அங்கயற்கண்ணி வேலம்மாளுக்கு அதைப் பற்றிச் சொல்லவும் செய்தாள். வேலம்மாள் அவள் பங்குக்கு, பத்திரத்தில் வந்த நபர்கள் யார், எவர் போன்ற விசயங்களை அங்கயற்கண்ணிக்கு விளக்கிச்சொன்னாள்.

இடை இடையே அங்கயற்கண்ணியும் வேலம்மாளும் காப்பி போட்டுக் குடித்தார்கள், சமைத்துச் சாப்பிட்டார்கள். இதற்கிடையில் பச்சையம்மாளைப் போய்ப் பார்த்து வரவும் மறக்கவில்லை. ஆனால் அவர்கள் கண்ணுக்கு முன்பாகவே பச்சையம்மாள் உடல் நிலை தேறியவளாய் ஒரு பிரச்சனையும் இன்றி நடந்தாள். இருப்பினும் அங்கயற்கண்ணியும் வேலம்மாளும் அவளுக்குப் பண உதவிமட்டுமின்றி, எல்லா உதவியும் செய்யத் தயாராய் இருப்பதாகச் சொல்லிவிட்டு வந்தார்கள்.

பத்திரங்களை மட்டும் படித்து, கணக்கிட்டு குறிப்பெடுப்பதற்கே அவர்களுக்கு மூன்று வாரங்கள் பிடித்தன. பின் அவ்வாறே அடகு வாங்கிய நகைகளையும் கணக்கெடுத்தனர். பத்திரம் போன்று அதில் படிப்பதற்கு ஒன்றும் இல்லாததால், பெயர், தேதி, கடன் வாங்கிய தொகையைக் குறித்துக் கொண்டாள் அங்கயற்கண்ணி. அந்த வேலையை ஒரு வாரத்திலேயே செய்து முடித்து விட்டாள்.

மொத்தத்தில் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கடன் வாங்கி, நிலத்தையோ நகையையோ பிணையமாக வைத்திருந்தார்கள். அவர்களில் அனேகம்பேர் நகையையோ நிலத்தையோ திருப்ப வழியில்லாமல், வட்டி முதலைவிட அதிகமாகி, கடனில் மூழ்கி அவர்களுடைய வீடு நிலம் பொருளை இழந்தனர். இனி அவர்கள் திரும்ப வந்து கடனைக் கட்டி நிலத்தையோ நகையையோ திரும்பக் கேட்கும் வாய்ப்பை இழந்துவிட்டனர். ஒரு சிலர்தான் கடனைத் திரும்பச் செலுத்தி அவர்களின் உடைமைகளைத் திரும்பப் பெறும் காலகட்டத்திற்குள் இருந்தனர். அவ்வாறு பலர் கடனில் மூழ்கிவிட்ட காரணங்களில் ஒன்று, சங்கரலிங்கம் வசூலித்த அதிக வட்டி.

கணக்கெடுப்பு முடிந்தபின் ஒரு நாள் செல்லையா வாத்தியாரை வரவழைத்தனர். அவரிடம் அந்தப் பட்டியலைக் கொடுத்து அதைப் பற்றி விளக்கினர்.

எல்லாவற்றையும் கேட்ட செல்லையாவாத்தியார், ஆச்சரியத்தில் ஆழ்ந்துபோனார். எனினும் முடிவில், “சரி அடுத்து என்ன செய்யப் போறீக,” என்றார்.

அங்கயற்கண்ணி, “அய்யா, அதப் பத்தி ஒங்ககிட்ட கேக்கணுமிண்ணுதான் ஒங்களக் கூப்பிட்டோம்,” என்றாள்.

செல்லையாவாத்தியார், “இது ஒங்க சொத்து. நீங்க என்ன செய்யணுமுன்னு நான் எப்பிடிச் சொல்றது,” என்றார்.

வேலம்மாள், “சட்டப்படி இது எங்களுக்குச் சொந்தமின்னாலும் எங்களுக்கு இந்தக் கறை படிஞ்ச சொத்து வேண்டாம். அதுவும் மத்தமனுசரோட சொத்து வேண்டாம்,” என்றாள்.

செல்லையாவாத்தியார், “அப்படின்னா, அதன் அதன் சொந்தக்காரங்ககிட்ட குடுத்திற வேண்டியதுதானே,” என்றார்.

அங்கயற்கண்ணியும் வேலம்மாளும் ஒன்று சேர, “அதைத்தான் நாங்களும் விருப்புறோம். அதுக்கு நீங்க எங்களுக்கு ஒத்தாசையா இருக்கணும்,” என்றனர்.

“கரும்பு திங்க கூலியா கேப்பாக, தாராளமா என்னால ஏண்ட உதவியச் செய்யத்தயார்,” என்றார் செல்லையா வாத்தியார்.

அங்கயற்கண்ணியும் வேலம்மாளும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர். செல்லையாவாத்தியார் மீண்டும், “அப்பிடின்னா ஏன் காத்திருக்கணும். நாளைக்கும் அடுத்த நாளும் சனி ஞாயிற்றுக் கிழமை வருது. எனக்கும் லீவு நாள், நெனைச்ச நல்ல காரியத்தை செய்து முடிச்சிற வேண்டியதுதானே,” என்றார்.

“நாங்களும் அப்பிடித்தான் நினைக்கோம். அது மட்டுமில்ல, இன்னும் ஒரு மாசத்தில நம்ம ஊர் பெரியாண்டசாமி கோயில் கொடை வருது. அதுக்கு முன்னால் நகை நட்டைத் திரும்பிக் குடுத்திட்டா மக்கள் சந்தோசமாப் போட்டுக்கிடுவாக,” என்றாள் வேலம்மாள்.

செல்லையாவாத்தியார், “அதுவும் சரிதான். அது மட்டுமில்ல, இந்தப் பட்டியல்ல இருக்கிற சில ஆட்கள் வெளியூர்ல வாழ்றாங்க. அவங்க கோயில் கொடைக்கு வருவாங்க, அப்போம் மிச்ச சொத்தையும் உரியவங்ககிட்டச் சேத்திரலாம்,” என்றார்.

அங்கயற்கண்ணி, “அது சரிய்யா, அப்படியே செய்திரலாம்,” என்றாள்.

அப்பொழுது செல்லையா வாத்தியார் மனதில் பொறிதட்ட, “ஆங் அதான். ஒன்னு சொல்லணும்னு நெனைச்சேன், இப்பம் ஞாபகம் வந்திருச்சு. அந்த பட்டியல்ல மருதுங்கிறவர்ட்ட வீடு, நிலம், கிணறு எல்லாம் வாங்கி பத்து வருசத்துக்கு மேல ஆகிபோச்சுன்னு போட்டிருக்கில்லோ, அவர் இறந்து பல வருசம் ஆச்சு. அவருக்கு வாரிசு ஒண்ணும் இல்ல. ஆனால், அந்த நிலம் வீடு கிணறு எல்லாம் அவரோட பேரன் பூட்டன் காலத்தில இன்னொரு குடும்பத்திட்ட இருந்து ஒத்தி வாங்கினது. எழுதிக் குடுத்த குடும்பம், பஞ்சம் அதிகமாய்ட்டதால பஞ்சம் பிழைக்க வெளியேறிட்டாங்க, போனவங்க வந்து கேக்க வரவே இல்ல, அவங்க போன இடத்திலேயே தங்கிட்டாங்க. அந்தக் குடும்பம் வேறயாருமில்ல வேலம்மா, ஒங்க முன்னோர்தான்.

அவர் பேர் முருகையா, ஒங்க தாத்தாவோட அய்யா. நான் இந்த ஊர் வரலாறு பற்றிக் கேட்டு, படிச்சு தெரிஞ்சுக்கிட்டது மட்டுமில்ல, ஒங்க தாத்தா இங்க வந்து இருந்தபோது பேசினேன், ஞாபகம் இருக்கு. அவுக அய்யா கோயில் கொடைக்குக் கூட்டியாந்தபோது ஒங்க தாத்தா சின்னப் பையனா இருந்தாகளாம். பையனக் கூட்டிட்டுப் போய் இந்த வீடு, கிணறு நெலம் எல்லாம் நம்மளோடது. எழுதிக்குடுத்திட்டோம், கடன்ல மூழ்கிப் போச்சு. ஒன்னால முடிஞ்சா திருப்பு. அல்லது முடிஞ்சா விலையக் கொடுத்துத் திரும்ப வாங்கு. நம்ம பூர்வீகச்சொத்துன்னு சொன்னதா சொன்னாக.

ஆனால், அவுக ஏங்கிட்டச் சொல்லும் போது அவுகளுக்கு வயசும் ஆயிருச்சு, துட்டும் இல்ல. சொத்து திரும்ப வராவிட்டாலும் பூர்விகத்தில வந்து சாகப்போறோம்ன்னு சந்தோசந்தான். ஒங்க தாத்தா இறந்தபின்ன நான் மறந்துபோனேன். இப்பம் இந்த பட்டியல்ல மருது என்ற பேரைப் பாத்த உடனே எல்லாம் ஞாபகம் வந்திருச்சு. அந்த மருதுங்கிறவருக்கு வாரிசு இல்லங்கிறதால அந்தச் சொத்தை நீ ஒங்க அய்யா ஆத்தாவுக்கே குடுத்திட்டாலும் சரிதான்,” என்றார்.

அதைக்கேட்ட வேலம்மாளின் கண்களில் கண்ணீர் வழிந்தது, “எங்க அய்யா ஆத்தா, அவுக முன்னோர் எல்லாருக்கும் பூர்வீகச் சொத்தை திரும்பப் பெறாட்டலும் பூர்வீகத்து ஊர்லயாவது வாழனும்னு ஆசை. இப்பம் அவுக பூர்வீகச் சொத்தே கெடைக்கபோகுதின்னா ரொம்ப சந்தோசப் படுவாக,” என்றாள்.

அடுத்த நாள், சனிக்கிழமை, வேலம்மாளும் அங்கயற்கண்ணியும் காலையிலேயே சாப்பிட்டுவிட்டுக் காத்திருந்தனர். எட்டு மணிக்கு செல்லையா வாத்தியார் ஊர் நாட்டாண்மை செல்லையாவையும் கூட்டிக்கொண்டு வந்து சேர்ந்தார். நிலம் வீடு அடங்கிய பத்திரங்களை முதலில் தருவது என முடிவுசெய்தனர்.

அங்கயற்கண்ணி, “நீங்க ரெண்டுபேரும் சொல்லுதபடி செய்யலாம்,” என்றாள்.

அப்போது தெருவில் பள்ளி மாணவர்கள் குருசாமியும் முத்துச்சாமியும் வந்துகொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து செல்லையா வாத்தியார், “ஏய் தம்பிகளா!” என்று அழைத்தார். அவர்களும் ஓடோடி வந்தார்கள்.

“இன்னைக்கும் நாளைக்கும் நம்ம ஊர்ல முக்கியமான வேலை இருக்கு, ஒங்க ரெண்டுபேரோட உதவி தேவைப் படுது. சில ஆள்கள கூட்டிட்டு வர்ற வேலதான். முடிஞ்ச ஒடனே ஆளுக்கு எட்டு அணா தாரேன்,” என்றார்.

குருசாமி, “துட்டெல்லாம் வேண்டாம் சார். நீங்க சொல்றத செய்றோம்,” என்றான். முத்துச்சாமியும் தலையை ஆட்டி ஒத்துப் பாடினான்.

“சரி நல்லது. காசு பத்தி நாளைக்குப் பேசுவோம், இன்னைக்கு வேலைய செய்வோம்,” என்றார் செல்லையாவாத்தியார்.

சொன்னவர் பட்டியலில் இருந்து நான்கு பெயர்களைச் சொல்லி, “ஆளுக்கு ரெண்டு பேரைக் கூட்டிட்டு வாங்க,” என்றார்.

அவர் அனுப்பிப் பத்து நிமிடத்தில், ஒத்தப்பனை வீரமணி வந்தார், வரும்பொழுதே, “வாத்தியார் அய்யா, கூப்பிட்டேகளாமுள்ளோ?” என்றார்.

“ஆமா, வேற ஒன்னுமில்ல. நல்ல காரியம்தான். எட்டு வருசத்துக்கு முன்ன நீங்க சங்கரலிங்கத்துக்கு எழுதிக்குடுத்த நிலத்தை ஒங்களுக்கே திரும்பக் குடுத்துவிடுவதாக முடிவுசெய்திட்டாக வேலம்மாள். அவுகளுக்கு உதவியா அங்கயற்கண்ணியும் இருந்து, இந்த முடிவ எடுத்திருக்காங்க. நானும் நாட்டாண்மையும் எல்லாம் நல்லபடியாப் போக உதவி செய்ய வந்திருக்கோம்,” என்றார் செல்லையாவாத்தியார்.

ஒத்தப்பனை வீரமணி புரியாமல் விழித்தார். செல்லையா வாத்தியார், “இந்தப் பேப்பர்ல ஒரு கையெழுத்துப் போட்டுட்டு பத்திரத்தை வாங்கிக்கோங்க,” என்றார்.

ஒத்தப்பனை வீரமணி, செல்லையா வாத்தியார் சொன்ன இடத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு தன்னுடைய பத்திரத்தை வாங்கிக்கொண்டார். அவரால் நம்பவே முடியவில்லை, இப்படியும் நடக்குமா என்று.

அடுத்து வந்தவர், தூங்குமூஞ்சி நாராயணசாமி. அவர் சொன்ன இடத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு, “நான் எழுதிக் குடுத்த நெலத்தோட கிணறும் சேந்திருக்குமில்ல?” என்றார்.

செல்லையாவாத்தியார், “நீங்க எழுதிக் குடுத்த அதே பத்திரந்தான். அதுல என்ன எழுதிக் குடுத்தேகளோ, அது ஒங்களுக்கே திரும்பி வந்திருச்சு,” என்றார்.

முன்னாள் ராணுவவீரரான தூங்குமூஞ்சி நாராயணசாமி, நன்றாக விழித்துக் கொண்டவராய், விறைப்பாய் நின்று அவருடைய மிலிட்டேரி பாணியில் சல்யூட் அடித்தார். பின், “ரெம்ப நன்றிம்மா. ம்ம்... வாத்தியாரையா நான் ஒன்னு சொல்லலாமா?” என்று கேட்டார்.

செல்லையா வாத்தியார், “தாராளமாச் சொல்லுங்க,” என்றார்.

தூங்குமூஞ்சி நாராயணசாமி, “இந்த ஊர்ல எல்லாரும் என்னை தூங்குமூஞ்சிங்கான். நான் பட்டாளத்தில இருக்கும்போது, பாக்கிஸ்தானோட போர் நடந்தது. கொட்டும் பனியில நான் ஒரு வாரம் தூங்காம இருந்து நம்ம ராணுவவீரர்களைக் காப்பாத்தினேன். அதுக்குத்தான் எனக்கு வீர் சக்கராங்கிற பதக்கம் குடுத்தார், பிரதமர் நேரு. அதுக்குபின்ன நான் ஓய்வு பெற்று, ஊருக்கு வந்து, வயதாகிப் போச்சு. ஏனோ தெரியல ஒரே தூக்கம். என்ன செய்ய. இப்பம் என்னை எல்லாப் பயலும் தூங்குமூஞ்சிங்கான்,” என்றார்.

செல்லையா வாத்தியார், “ஐய்யா சுபேதார் நாராயணசாமி, நீங்க எவ்வளவு பெரிய வீரன்னு எனக்குத் தெரியும். நீங்க இந்திய இராணுவத்தில் ஒரு சுபேதார் என்பதையும் நான் மறக்கலை. இன்னையில இருந்து எல்லாரும் ஒங்களை சுபேதார்ன்னுதான் அழைக்கனும்ன்னு எல்லாரிட்டயும் சொல்றேன். நீங்க நம்ம நாட்டுக்குச் செய்த சேவைக்கு மிக்க நன்றி,” என்றார்.

அங்கயற்கண்ணி, “சுபேதார் ஐய்யா உங்க சேவைக்கு நன்றி,” என்றாள்.

அதற்குள் ஊரில் விசயம் பரவிவிட, வேலம்மாளின் வீட்டுமுன் கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது.

செல்லையாவாத்தியார், “அன்பான மக்களே, நம்ம முன்ன நிக்கிற நாராயணசாமிங்கிற மனிதர் நம்ம நாட்டுக்குச் செய்த சேவை கொஞ்சம் நஞ்சமில்ல. அவரை இனிமே நாம எல்லாரும், சுபேதார் நாராயணசாமின்னு கூப்பிட்டால் நாம அவருக்கு மட்டுமில்ல நம்ம நாட்டுக்கும் செய்ற நன்றிக் கடனாகும்,” என்றார்.

கூடியிருந்தவர்கள், “சுபேதார் நாராயணசாமி வாழ்க, சுபேதார் நாராயணசாமி வாழ்க,” என்று கோசமிட்டனர்.

சுபேதார் நாராயணசாமி, “உங்க எல்லாருக்கும் ரெம்ப நன்றி,” என்று மீண்டும் சல்யூட் அடித்துவிட்டு பெருமகிழ்ச்சியோடு விடைபெற்றார். அன்றிலிருது அவரின் தூக்க வியாதி அவரை விட்டுப் போய்விட்டது. அதன்பின் அவரை எல்லோரும் சுபேதார் நாராயணசாமி என்றே அழைத்தனர்.

கூடி இருந்த கூட்டத்தில், ஒரு சிலர்தான் பத்திரம் எழுதிக்கொடுத்தவர்கள், பலர் வேடிக்கை பார்க்க வந்தவர்கள். இருப்பினும், அது நல்லதாகவே ஆயிற்று. குருசாமியும் முத்துச்சாமியும் ஊரில் அலைந்து ஆட்களைக் கூட்டி வரத் தேவையில்லாமல் போயிற்று. இருந்தாலும், குருசாமியையும் முத்துச்சாமியையும் கூட இருந்து உதவி செய்யச் சொன்னார் செல்லையா வாத்தியார், அவர்களும் ஒத்துக்கொண்டார்கள்.

அதன்பின் தங்கள் பத்திரங்களை எதிர்பார்த்து வெளியே நிற்பவர்களை ஒவ்வொருவராக அழைத்து, கையெழுத்து வாங்கிக் கொண்டு அவர்களுடைய பத்திரத்தைத் கொடுத்து அனுப்பினர். பத்திரத்தைப் பெற்றுக்கொண்ட எல்லோரும் மிக்க மகிழ்ச்சியோடு சென்றனர். அவர்கள் வாழ்வில் இனி தங்கள் நிலத்தைத் திரும்பப் பெறவேமாட்டோம், போனது போனதுதான், என்றாவது பிற்காலத்தில் திறமைவாய்ந்த ஆண்மகன் தங்கள் குடும்பத்தில் பிறந்து சொத்துச் சம்பாதித்தாலன்றி தங்கள் சந்ததியினர் சொத்து இல்லாமல்தான் வாழ்வர் என நம்பி இருந்தவர்களுக்கு, தங்கள் முன்னோர்கள் சேர்த்துவைத்த சொத்து, தங்களுக்கே திரும்பவும் வந்து சேர்ந்ததை நினைத்து மிக்க மகிழ்ச்சியோடு தெய்வத்தை வேண்டிக்கொண்டனர்.

அன்று சாயுங்காலம் இருட்டுவதற்குள் உள்ளூரில் வாழ்ந்தவர்களின் பத்திரங்கள் அனைத்தும் திருப்பிக்கொடுக்கப் பட்டுவிட்டன. நான்கு பேர், பஞ்சம் பிழைப்பதற்காக வெளியூர் சென்றவர்கள், பஞ்சம் தீர்ந்த பின்னும் வராமல் அங்கேயே தங்கிவிட்டவர்களின் பத்திரங்கள் வாங்குவாரற்றுக் கிடந்தன. அவையும் வரும் பெரியாண்டசாமி கோவில் கொடையான, மாசிப்படைப்பன்று, அனேகமாக பெற்றுக்கொள்ளப் படும்.

தங்கச்சாமிக்கும் அவனுடைய அய்யா எழுதிக் கொடுத்து மீட்க முடியாமல் போன நிலம் மற்றும் கிணறு அடங்கிய பத்திரம் திரும்ப வந்து சேர்ந்தது. தங்கச்சாமிக்கும் மைதிலிக்கும் ஏக சந்தோசம். வீடு சம்பந்தப் பட்ட பத்திரம் ஏற்கெனவே எரிந்து சாம்பலாகி விட்டதை தங்கச்சாமி அறிவான், மைதிலி அது தொலைந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறாள்.

அடுத்த நாள் அடகு வாங்கப் பட்ட தங்க நகைகள் திரும்பக் கொடுக்கப் பட்டன. நகையைப் பெற்றுக் கொண்ட ஊராருக்கு ஏகமான மகிழ்ச்சி. ஒரு சிலர் தங்களுக்கும் நகை கிடைத்தாலும் கிடைக்கலாம் என ஓரு நப்பாசையில் வந்து கிடைக்காததால் ஏமாந்து சென்றனர்.

அவ்வாறு எதிர்பார்த்து நின்றவர்களில் தவளைவாயன் பொன்னுச்சாமி மட்டும் திரும்பிப்போகாமல், “வாத்தியாரையா நல்லா பாத்தேகளா? எங்க குடும்பத்திலயும் ஒருத்தராவது நகைய அடகு வைக்காம எப்பிடி இருந்திருப்பாங்க? திரும்ப ஒரு தடவை நல்லா பாருங்க,” என்றார்.

செல்லையா வாத்தியார், “இல்லைய்யா, முந்தியே யார் யார் நகை இங்க இருக்குன்னு பட்டியல் போட்டு வச்சிருக்கு. ஒங்க நகை ஒன்னும் இல்ல,” என்றார்.

நாட்டாண்மையும் அவர் கடனுக்கு, “இருந்தா குடுக்கத்தான செய்வாக. ஒங்களோட நகைய மட்டும் ஏன் வச்சுக்கிடுவாகளா என்ன?” என்றார்.

வேறு வழியில்லாமல் தவளைவாயன் பொன்னுச்சாமி தலையைத் தொங்கவிட்டவாறு போய்விட்டார்.

ஊரில் தங்க நகை அடகு வைத்தவர்கள் எல்லோருக்கும் அவரவர் நகை திரும்பிக் கிடைத்துவிட்டது. மைதிலி தன் வாசல் படியில் நின்று கொண்டு அவ்வாறு தங்கள் நகைகளை வாங்கிகொண்டு போகும் மனிதர்களை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டு நின்றாள். அவள் மனதில், ‘நாமும் செல்லையாவாத்தியார் சித்தப்பா சொன்னதுபோல், தன் கணவனுக்குத் தேவைப் பட்டபோது, தன்னுடைய நகையை அடகு வைத்திருந்தால் இப்போது திரும்பக் கிடைத்திருக்கும். ஆனால் அதுதான் தொலைந்து போய்விட்டதே. எடுத்தவன் எப்படிக் குடுப்பான்,’ என எண்ணி மனம் நொந்தாள். அடுத்த நிமிடமே முகம் மாறியவளாய், ‘சரி போனாப் போய்ட்டுப் போவுது. எனக்கு எம் புருசனும் பிள்ளைகளும் இருந்தாப் போதும்,’ என்று எண்ணிச் சிரித்துக்கொண்டாள்.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top