JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Aalamarathu Paravaigal - Chapters 67 & 68

Uthaya

Member
ஆலமரத்துப் பறவைகள் – அத்தியாயம் 67 & 68

67

அன்று மாலை ஊருக்குள் ஒரு புதிய மனிதன் தென்பட்டான். அவனது வயது ஐம்பதா எழுபதா எனக் கணிப்பது கடினம். தோள்வரை கிடந்த வெள்ளையாய் நரைத்துவிட்ட நீளத் தலைமுடியுடனும், அதே போல் நரைத்த நீளம் அதிகமில்லாத கொசகொச என்று இருந்த சிறு தாடியுடனும் இருந்தான். அவனுடைய வேட்டி காவிபோல தோன்றினாலும அது பலகாலமாய் உபயோகித்த வெள்ளை வேட்டிதான் எனக் கூர்ந்து பார்த்தால் தெரியும். அதே போலத் தோன்றிய துண்டு ஒன்று அவன் தோளில் கிடந்தது. கையில் ஒரு நீணட களியுடன் வந்த அவனைப் பார்த்தால், ஒருபுறம் ஊர் ஊராய் அலையும் பிச்சைக்காரனைப் போலத் தோன்றினாலும, மறுபுறம் அவன் பற்றற்ற ஒரு புலவனைப் போலும் காட்சியளித்தான். கையில் கமண்டலமோ, திருவோடோ, பிச்சைப் பாத்திரமோ இல்லாத அவன் தான் முற்றிலும் துறந்தவன் என்று பறைசாற்றிக் கொள்ளவில்லை.

அவன், வேலம்மாள் வீட்டின் முன் நின்ற கூட்டம் சென்றபின் அவ்வீட்டு வாசலில் நின்று, “அம்மா,” என்று அழைத்தான்.

அங்கயற்கண்ணியும் வேலம்மாளும் வெளியே எட்டிப் பார்த்தனர். புதிய மனிதனைக்கண்ட அங்கயற்கண்ணி, “என்ன வேணும்,” என்றாள்.

அம்மனிதன், “வயிறு பசிக்குதும்மா,” என்றான்,

அங்கயற்கண்ணி, “சரி இப்படி திண்ணையில உக்காரும்,” என்றாள்.

அவ்வாறு சொல்லிவிட்டு, அங்கயற்கண்ணி உள்ளே சென்று அம்மனிதனுக்கு உணவு எடுத்துவரச் சென்றாள். வெளியே நின்ற வேலம்மாள் அம்மனிதனிடம், “உமக்கு எந்த ஊர்?” என்றாள்.

அவன், “எனக்கு இன்ன ஊர்ன்னு இல்ல. எல்லாமே என் ஊர்தான்,” என்றான்.

வேலம்மாள், “சரி, உம்ம பேர் என்ன?” என்றாள்.

அம்மனிதன், “கிட்டுணன், ஆனால் எல்லாரும் என்ன கிட்டுன்னு கூப்பிடுவாங்க,” என்றான்.

வேலம்மாள், “ஏதாவது வேல செய்யத் தெரியுமா?” என்றாள்.

கிட்டு, “ஆடு மாடு மேய்ப்பேன்,” என்றான்.

அங்கயற்கண்ணி அதற்குள் ஒரு செம்பில் தண்ணீரோடு வந்து, “இந்தாரும், கையக் கழுவிட்டு உக்காரும், சாப்பாடு கொண்டாறேன்,” என்றாள்.

கிட்டுவும், “எல்லாரும் நல்லா இருக்கணும்,” என்று சொல்லிவிட்டு செம்பு நீரை வாங்கி, கையைக் கழுவிவிட்டுத் திண்ணையில் அமர்ந்தார்.

சில நிமிடங்களில் அவர் முன் ஒரு இலையைப் போட்டு அதில் சோறு, குழம்பு, காய் பரிமாறினாள் அங்கயற்கண்ணி. கிட்டு நன்கு உண்டு பசி ஆறினார்.

கிட்டு சாப்பிட்டு எழுந்தபின், “நீங்க சொன்னதெல்லாம் நானும் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன். இதுக்கு முன்ன எங்க இருந்தேங்க,” என்றாள் அங்கயற்கண்ணி.

கிட்டு, “தெங்காசிக்குப் பக்கத்தில, கீழச் சுரண்டைன்னு ஒரு ஊர் இருக்கு. அங்க வேலாயுதபெருமாள்ங்கிற மனுசன் வீட்டில மாடு மேய்ச்சேன். அவர் ஒரு வருசத்துக்கு முன்னால இறந்து போனாரு. நான் சின்ன வயசா இருக்கும் போது போய்ச் சேர்ந்தேன் அந்த வீட்டுல. அவர் இறந்தபின் அவரோட சொந்தக்காரங்க இருக்கச் சொன்னாங்க, எனக்கு ஏனோப் பிடிக்கல. ஊர் ஊரா அலைஞ்சிகிட்டு இருந்தேன். அப்பிடி நான் அலைஞ்சுக்கிட்டு இருக்கும்போது ஒரு மனுசன் சொன்னான், ‘பெரியாண்டபுரம் போன்னு,’ அதான் வந்தேன்,” என்றார்.

அங்கயற்கண்ணி, “இங்க ஊர் மாடு மேய்க்கிற வேல குடுத்தா பாப்பேரா?” என்றாள்.

கிட்டு, “தாராளமா மேய்க்கேன்,” என்றார்.

வேலம்மாள், “தங்கச்சி, நீ திட்டத்தோடதான் இருக்கே,” என்றாள்.

அங்கயற்கண்ணி, “ஆமா, இனிமே தங்கச்சாமி அய்யாவுக்கு விவசாயம் செய்யத்தான நேரம் இருக்கும். அவுகளுக்குத்தான் அவுக நிலம் கிணறு திரும்பக் கிடச்சிருச்சில்லோ,” என்றாள்.

அன்றே ஊர்ப் பெரியவர்கள் தங்கச்சாமியோடு பேசியபின் ஊர்மாடு மேய்க்கும் வேலையை கிட்டுணன் என்ற கிட்டுவிடம் விட்டுவிடுவது என்று முடிவானது. கிட்டு ஊருக்குப் புதியவர் என்பதால் தங்கச்சாமி கொஞ்ச நாள் அவருடன் சென்று காடுகளைக் காட்டிக் கொடுத்து விட்டால் அவர் பார்த்துக் கொள்வார் என முடிவு செய்தனர்.

வேலம்மாள் கிட்டுவிடம், “கிட்டுத் தாத்தா, சாப்பாட்டுக்கு இங்க வந்துருங்க. ராத்திரி அங்கயற்கண்ணி வீட்டுத் திண்ணையில தூங்குங்க. அவள் எனக்கு ஒத்தாசையா இங்க தங்கிறதனால நீங்க அங்க தூங்கினால் வீட்டுக்குக் காவல் மாதிரியும் இருக்கும்,” என்றாள்.

கிட்டுவும், “அப்பிடியே ஆகட்டும். ஒங்க உதவிக்கு நன்றி. ஒங்கள மாதிரி மனிதர்கள் இந்த ஊர்ல இருக்கிறதினாலதான் என்னை ஒரு மனுசன் ஒங்க ஊருக்குப் போகச் சொன்னான்னு நினைக்கிறேன்,” என்றார்.




68

மாசிப்படைப்புக்கு ஒரு மாதம் இருக்கும் பொழுதே பெரியாண்டபுரத்து மக்கள் மட்டுமல்ல, சுற்று வட்டாரத்தில் இருந்த அனைத்துக் கிராமங்களில் உள்ள மக்களும் மாசிப் படைப்பு என்னும் பெரியாண்டசாமி கோவில்க் கொடைத் திருவிழாவுக்கான நாட்களை எண்ண ஆரம்பித்துவிட்டனர். மாசி மாதம் மூன்று நாட்கள் கொடைவிழா ஜாம் ஜாம் என்று நடைபெறும். அவ்விழாவுக்கு பெரியாண்டபுரத்தைச் சுற்றியுள்ள நூறு கிராமங்களிலிருந்தும் மக்கள் வந்து சாமியைக் கும்பிட்டு, விழாவினைக் கண்டு களித்துவிட்டுச் செல்வார்கள்.

வெகு அருகில் இருக்கும் கிராமத்து மக்கள் நாள்தோறும் நடந்தே வந்து கண்டு களித்துவிட்டுச் செல்வர். பலர் பெரியாண்டபுரத்தில் உறவினர்கள் வீட்டில் தங்கி, மூன்று நாள் வேடிக்கைகளையும் காண்பார்கள். நாள்தோறும் நடந்து வர இயலாத தூரத்தில் இருப்பவர்கள் குடும்பத்தோடு மாட்டு வண்டிகளில் வந்து, கோவில் வளாகத்தில் தங்கி சாமியைக் கும்பிட்டுவிட்டு, விழாவையும் கோலாகலங்களையும் ரசித்துவிட்டு மூன்றாம் நாள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பிச் செல்வார்கள். வெகு தூரத்தில், நகரங்களில் வேலை செய்பவர்களும் மலை எஸ்ட்டேட்டுகளில் வேலை செய்பவர்களும் பேருந்துகளில் வருவார்கள், அவர்கள் உள்ளூரில் உறவினர்கள், தெரிந்தவர்கள் வீட்டில் அடைக்கலம் கேட்டுத் தங்கி இருப்பார்கள். பெரும்பாலானோருக்கு பெரியாண்டபுரத்தில் உறவினர்கள் இருந்ததால் அவர்களுக்குத் தங்கும் பிரச்சனை ஒன்றும் பெரிதாகப் படவில்லை.

மாட்டுவண்டியில் வருபவர்கள் சிறுவர்களை வண்டியில் ஏற்றிவிட்டு பெரியவர்கள் நடந்தே வருவார்கள், அப்படி நாள் முழுவதும் பயணம் செய்து கோவிலை அடைவார்கள். அவ்வண்டிகள் கோவில் சதுக்கத்தைச் சுற்றி நிற்கும். அவற்றின் எண்ணிக்கை ஐநூறுக்கும் மேல் இருக்கும். ஒவ்வொன்றிலும் ஒரு குடும்பம் வந்திருக்கும். அந்த மூன்று நாட்களும் அவர்கள் வண்டடியையே ஒரு கூடாரமாக மாற்றி, அங்கேயே தங்கி, சாமியைக் கும்பிட்டு கேளிக்கைகளைக் கண்டு கழித்துவிட்டுச் செல்வார்கள்.

சூரியன் உச்சியில் இருக்கும் பொழுது ஆரம்பிக்கும் விழாக்களும் கேளிக்கைகளும் இரவெல்லாம் நடைபெறும், காலையில் ஆதவன் கிழக்கே தலை காட்டியபின்தான் முடிவடையும். பகல் நேரங்களில் பெரும்பாலும் சாமி ஆடுதல், சாமிக்குப் பூசை வைத்தல், கிடா வெட்டுதல், போன்றவைகள் நடக்கும். சோப்பு சீப்பு வளையல் கடைகளில் முழு நேரமும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். உணவு விற்பனை செய்யும் கடைகளில் இட்டிலி, தோசை, வடை, டீ, காப்பி, சேவு, மிக்சர், சீனிமிட்டாய், கருப்பட்டிமிட்டாய் எல்லாம் தொடர்ந்து விற்பனையான வண்ணமே இருக்கும். கிராமங்களில், மற்றநாட்களில் இவ்வகைத் திண்பண்டங்கள் அதிகம் கிடைக்காதலால், கோவில்திருவிழாவில் எல்லோரும் அவற்றை ருசிபார்ப்பார்கள். எனவே அவற்றை விற்பனை செய்பவர்களுக்கு ஓய்வே கிடையாது, மக்கள் வெள்ளம் போல் வந்தவண்ணம் இருப்பார்கள்.

சில கேளிக்கைகள் வெயில் சற்றுத் தாழ்ந்தபின் மாலை நேரங்களில் ஆரம்பித்து இருட்டிய பின்னும் விளக்கொளியில் நடக்கும். கரக ஆட்டம் ஆரம்பித்துவிட்டது என்றால் இளவட்டங்கள் எங்கிருந்தாலும் ஓடோடி வருவார்கள். அது நடு ஆலமரத்துக்கு வடக்கில் மணல் அதிகம் இல்லாத இடத்தில் நடக்கும். இருட்டிவிட்டால் வெளிச்சம் தேவைப்படுமாதலால், பெட்ரமாக்ஸ் விளக்குகள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். பாட்டுப் பாடியபடியே குடங்களைத் தலையில் வைத்துப் பெண்கள் ஆடுவார்கள். மக்கள் கூட்டமாகச் சுற்றி நின்று பொழுதுபோவதே தெரியாமல் வேடிக்கை பார்ப்பார்கள். பின் ஆண்கள் ஒயிலாட்டம் ஆடுவார்கள். ஒயிலில் பல வகை உண்டு. ஒன்று ஆண்கள் நான்கு பேராக வரிசையில் நின்று வண்ணக் கைக்குட்டை ஒன்றைக் கையில் பிடித்துக்கொண்டு அதைக் கொடிபோல் ஆட்டி ஆட்டி குனிந்து வளைந்து குதித்துக் காலை உதைத்து ஆடுவார்கள். அவர்கள் ஆட்டத்தை ஒருமைப் படுத்தவும் அவர்களை உற்சாகப் படுத்தவும், அண்ணாவி என்ற தலைவர் குரல் கொடுத்துப் பாடுவார். ஆடுபவர்கள் அண்ணாவிக்குப் பின் அந்த வரியை திரும்பப் பாடியபடியே ஆடுவார்கள். சில சமயம் அவர்கள் ஆடுவது ஏதோ சண்டைப் பயிற்சி செய்வது போல் இருக்கும்.

ஒயிலாட்டம் முடிந்தபின் கழியாட்டம் ஆரம்பம் ஆகும். கழியாட்டத்தில் கைகளில் சிறுகழிகளைப் பிடித்த வண்ணம் ஆண்கள் ஆடுவார்கள். அது ஒருவகையில் பெண்கள் ஆடும் கோலாட்டம் போல் இருக்கும். ஆனால் ஆண்கள் உபயோகிக்கும் கழிகள் கோலாட்டத்தில் உள்ள குச்சிகளை விட பன் மடங்கு பெரிதாகவும் நீளமாகவும் இருக்கும். பாட்டுக்கு ஏற்ப அவர்கள் கழிகளை ஒன்றோடு ஒன்றை அடித்தும், முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் உள்ளவர்களின் கழிகளோடு அடித்தும், சத்தம் வரவைத்து ஆடியவாறே ஒரு வகைப் பின்னலில் சுற்றிச் சுற்றி வருவார்கள். அண்ணாவி பாட்டை வேகமாக பாடினால் ஆடுபவர்களும் வேகமாகவும் சுறுசுறுப்போடும் ஆடுவார்கள். பின் அண்ணாவி குரலைத் தாழ்த்தி மெல்லப்பாடினால் ஆட்டமும் மெல்லப்போகும். பலமுறை பயிற்சி செய்து பழக்கப் பட்டவர்களால்தான் இந்த ஆட்டத்தில் கலந்து கொள்ள முடியும். அனுபவம் அற்றவர்கள் ஆட முற்பட்டால் அருகில் உள்ளவர்கள் அடிக்கும் பொழுது கையில் அடி பட்டுவிட வாய்ப்பு உள்ளது. சிலசமயம் கழியைத் தவறவிட்டுவிட்டுத் தவித்தவர்களும் உண்டு. கழியாட்டம், பார்ப்பவர்களுக்கு நல்ல ஒரு உல்லாசமான பொழுதுபோக்கு.

இரவு பத்து மணி அளவில் வில்லுப் பாட்டு ஆரம்பித்துவிடும். மாபெரும் தசரத வில் ஓன்றை நாண் ஏற்றி அதனை நீளவட்டமாக தரையில் கிடத்தி அந்தக் கயிற்றில் பல வகை மணிகளைத் தொங்கவிட்டு, அந்தக் கயிற்றில் இரும்புக் கோலை வைத்து அடித்தால் இசை உதிக்கும். அதோடு ஒரு மண் குடத்தின் வாயில் வட்டமான அட்டை போன்ற கருவியை வைத்து அடித்தால், ஒரு வித்தியாசமான இசை கிளம்பும். இந்த இரு ஒலிக் கருவிகளையும் சரியாக உபயோகித்து, மற்ற இசைக்கருவிகளையும் சேர்த்து, இசை அமைத்துப் பாட்டுப் பாடி கதை சொல்வார்கள். பாடல் புரியாதவர்களுக்காக கதையை எளிய தமிழிலும் சொல்வார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையைச் சொல்லி மக்களை மகிழ்விப்பார்கள். இராமாயணம், மகாபாரதம் போன்ற காப்பியங்களை மட்டுமின்றி, நல்லதங்காள் கதை, முருகனின் இரு மனைவிகளான வள்ளி தெய்வானையின் கதை, நளன் கதை, அரிச்சந்திரன் கதை போன்ற மற்ற கதைகளையும் மக்களுக்கு எடுத்துரைப்பார்கள்.

கேளிக்கைகளைக் கண்டுகளிக்க, பலதரப்பட்ட மக்களும் மாறிமாறி வருவார்கள். கரகாட்டத்தைக் காண வாலிப ஆண்களும் பெண்களும் முண்டி அடித்துக்கொண்டும், ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளிக்கொண்டும் நின்று பார்ப்பார்கள். ஒயிலாட்டத்தைக் காண, முக்கியமாக ஆண்கள் வருவார்கள். வில்லுப் பாட்டைக் கேட்க முக்கியமாக பெரியவர்கள், வீட்டு வேலையை முடித்துவிட்டு, இரவில் வந்து அடுத்த நாள் காலை வரை கேட்டு இன்புறுவார்கள்.

இது தவிர, சாமி ஆட்டம் முக்கியமான ஒன்று. முக்கிய தெய்வமான பெரியாண்டசாமியின் முன்பு ஒருவரும், பெரியாண்டசாமிக்கு அடுத்து தனியாக மேடையில் இருக்கும் மூதாதையர் வழிபாட்டுச் சாமிகளுக்கு முன்பு சிலரும் சாமி ஆடுவார்கள். பெரியாண்டவனின் முன் ஆடும் சாமி குறி சொல்லும். அது மூன்று நாட்களும் தொடர்ந்து ஆடும். அந்தச்சாமி ஆடுவதை கேளிக்கைபோல் கண்டு களிக்க பலர் வருவார்கள். சிலர் தங்களின் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க வழி இருக்கிறதா என சாமியிடம் குறி கேட்டு தெரிந்துகொள்வதற்காகவே வருவதுண்டு.

கோவில்கொடையின் மூன்றாம் நாள் கிடா வெட்டிப் பொங்கலிடுவார்கள். மேள தாளங்கள் ஒரு புறம் ஒலித்துக்கொண்டிருக்க காலை சுமார் ஒன்பது மணிக்கு ஆட்டுக் கிடாவை வெட்டத்தயார் ஆவார்கள். ஆட்டுக் கிடாவை பத்துப் பன்னிரெண்டு மாதத்திற்கு முன்பே சாமிக்கு நேர்ந்து விடுவார்கள். சொந்த ஆடு இல்லாதவர்கள் ஒரு குட்டியை வாங்கி அதைச் சாமிக்கு நேர்ந்து விடுவார்கள். நேர்ந்துவிட்ட ஆட்டை நன்கு பேணி வளர்ப்பார்கள்.

கோவிலுக்கு நேர்ந்துவிட்ட ஆடு மற்றவர்கள் புஞ்சையில் மேய்ந்துவிட்டால் அவர்கள் அதிகம் கோபித்துக் கொள்ளமாட்டார்கள். வண்டி கட்டி வருபவர்கள் அந்த ஆட்டையும் வண்டியின் பின்னால் கயிற்றில் கட்டி நடத்திக் கூட்டி வருவார்கள். அதற்குத் தேவையான தீனியையும் வண்டியில் கொண்டு வருவார்கள். விழாவிற்கு வந்த இடத்தில் அந்தக் கிடாய்க்குத் தீனி தேவைப்பட்டால் பெரியாண்டபுரத்து மக்கள் மனமுவந்து உதவுவார்கள்.

அப்படி வளர்த்த ஆட்டை, பொட்டு வைத்து அதன் தலையில் ஒரு குடம் தண்ணீரை ஊற்றி, கோவிலைப் பார்த்து நிற்க வைத்து அதை பலி இடுவார்கள். எல்லோராலும் ஆட்டைப் பலி இட இயலாது, எனவே முடியாதவர்கள் ஆட்டைப் பலியிட வேறொரு ஆளை நியமிப்பார்கள். ஒருசிலர் தாங்களே தங்கள் ஆட்டை பலி இடுவார்கள். ஆட்டைப் பலி இடும் பொழுது துண்டு விழுந்து விடக்கூடாது.

ஆட்டைப் பலி இடுபவன் ஒரே வெட்டில் தலை வேறு உடல் வேறு என்றாக்கவேண்டும். அவ்வாறில்லாமல் இரண்டும் சிறு தோலால் இணைக்கப்பட்டிருந்தால் துண்டு விழுந்ததாகக் கருதுவார்கள். அவ்வாறு துண்டு விழுந்துவிட்டால், சாமி அவர்களின் நேர்த்திக் கடனை ஏற்றுக்கொள்ளவில்லை என்று பொருள்படும். அந்தக் குடும்பத்தவர்கள் அடுத்த ஆண்டும் சாமிக்கு ஆட்டுக்கிடா நேர்ந்துவிட வேண்டும்.

ஆட்டுக்கிடா, சேவல் போன்றவற்றைப் பலி கொடுப்பதற்காகவே கோவில் சதுக்கத்தில் பெரியாண்டவனின் கோவிலுக்குத் தெற்கே இடம் ஒதுக்கப் பட்டிருந்தது. கோவிலில் சாமிக்காக வெட்டப்பட்ட கிடாக்களும் சேவல்களும் தங்கள் ரத்தத்தினைச் சிந்தியபின் உரியவர்கள் வந்து அவர்களுக்குச் சொந்தமானவற்றை எடுத்துச் சென்று சமைத்து, பொங்கலும் வைத்து சாமிக்குப் படைத்துவிட்டு குடும்பத்தோடு உண்பார்கள். அவர்கள் உற்றார் உறவினர்களையும் உண்ண அழைப்பார்கள். அதற்குள் நேரம் மதியத்தைத் தாண்டிவிடும். பின் வெளியூர்க்காரர்கள் பிரியா விடைபெற்றுச் செல்வார்கள். கேளிக்கைகள் வெகு சீக்கிரம் முடிந்துவிட்டனவே என்ற வருத்தத்தோடு சிறுவர் சிறுமிகள் அடுத்த வருடம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்புடன், சாமிக்கும் மக்கள் கூட்டத்திற்கும் வணக்கம் சொல்லி விடை பெறுவார்கள்.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top