JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Aalamarathu Paravaigal - Chapters 69 & 70

Uthaya

Member
ஆலமரத்துப் பறவைகள் – அத்தியாயம் 69 & 70

69



மாசிப் படைப்புக்கு ஒரு வாரம் இருக்கும்போது, வேலம்மாளும் அங்கயற்கண்ணியும், தங்கச்சாமி வீடு திரும்பியபின் ஒரு நாள் மாலை அவனையும் மைதிலியையும் அவர்களுடைய வீட்டில் சந்தித்தனர். வேலம்மாள், “மாசிப்படைப்பு அன்னைக்கு நீங்க எல்லாரும் குழந்தைகளோட எங்க வீட்டுக்குச் சாப்பிட வரணும்,” என்றாள்.

மைதிலி, “நீங்க ரெண்டுபேரும் இதுவரை எங்களுக்குச் செய்திருக்கது போதாதா. நாங்கதான் ஒங்களுக்கு விருந்து வைக்கணும்,” என்றாள்.

அங்கயற்கண்ணி, “சரி விருந்து வையுங்க. முதல் நாள் அக்கா வீட்டில சாப்பிட்டுட்டு, அடுத்த நாள் வேணும்மின்னா தங்கச்சி வீட்டில சாப்புடுவோம்,” என்றாள்.

தங்கச்சாமி, “சரி நல்லது. அப்பிடியே செய்வோம்,” என்றான்.

எல்லோரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர், பின் வேலம்மாளும் அங்கயற்கண்ணியும் வீடு திரும்பினர்.

அடுத்து வந்த நாட்களில் வேலம்மாளும் அங்கயற்கண்ணியும் மட்டுமல்லாமல், ஊரார் அனைவருமே மாசிப் படைப்புக்குத் தங்களைத் தயார் செய்துகொள்வதில் செலவிட்டனர். தங்கச்சாமி ஏற்கனவே ஊராரும் அவனும் பேசி முடிவுசெய்ததன் படி, மாசிப்படைப்பு வரை ஊர்மாட்டைப் புதிதாக வந்த கிட்டு என்ற கிட்டிணனுடன் சென்று மேய்த்து அவருக்கு தேவையானவற்றைச் சொல்லிக்கொடுக்க வேண்டும், அதன் பின் கிட்டு பார்த்துக் கொள்வார். கிட்டுவை ஊர் மக்கள் ஏற்கனவே கிட்டுத் தாத்தா என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.

கிட்டு, தங்கச்சாமியிடம், “அய்யா நீங்க ஊர்மாட்ட எங்க எங்க மேய்க்கலாம், யார் யார் மாடு எதுங்கிறதெல்லாம் நல்லா சொல்லிக் குடுத்திட்டேக. இனி நீங்க எங்கூட வரணும்மின்னு இல்ல” என்றார்.

கிட்டுதாத்தா இனி ஊர்மாடு மேய்க்க வரவேண்டாம், இனி தானே பார்த்துக் கொள்வதாய்ச் சொல்லியும், தங்கச்சாமி மாசிப்படைப்பு வரைக்குமாவது வந்து அவருக்கு உதவி செய்வதாய் வாக்களித்தான். அவரும் மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டார்.

தங்கச்சாமிக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. ஊர்மாட்டை மேய்கும் பணியில், அவன் தன் கடமையைச் செய்து முடிப்பதாக உறுதி கூறி இருந்தாலும், அவன் தன் முந்தையத் தொழிலான விவசாயத்திற்குத் திரும்ப ஆவாலாய் இருந்தான்.

அவனுடைய வீடு, நிலம் கிணறு அனைத்தும் திரும்பக் கிடைத்துவிட்டதிலிருந்து அவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் நடமாடுவதைப் பார்த்துவிட்டு, அவன் மனைவி மைதிலிகூட அவனைக் கிண்டலாக, “என்ன நிலம் கிணறு கிடைச்சபின்ன, அய்யாவ கையில பிடிக்க முடியல,” என்றாள்.

தங்கச்சாமி, “ஆமா, நம்ம வீடு நிலம் கிடச்சதில எனக்கு அளவில்லா மகிழ்ச்சி. இனி நான் எப்பாடுபட்டாவது ஒனக்கு ஒரு தங்கச்சங்கிலி பண்ணிப் போட்டுருதேன். மழை மட்டும் பேஞ்சிரட்டும், நான் எவ்வளவு பிரயாசப்பட்டு உழைக்கவும் தயார்,” என்றான்.

திண்ணையில் நின்ற தங்கச்சாமியை மைதிலி உள்ளே வருமாறு சைகை செய்தாள், அவன் அறைக்குள் வந்தான். மைதிலி அவனைக் கட்டி அணைத்துக்கொண்டாள், “எனக்குத் தங்கச்சங்கிலி எல்லாம் வேண்டாம். நீங்களும் பிள்ளைகளும் இருந்தால் போதும்,” என்றாள்.

தங்கச்சாமி பதிலுக்கு மைதிலியின் முதுகைத் தடவிக் கொடுத்துவிட்டு, “சரிம்மா, இனி நம்ம சந்தோசமா இருக்கப் பாப்போம்,” என்றான்.

மைதிலி, “எப்பாடுபட்டாவது பிள்ளைகள் ரெண்டையும் படிக்க வச்சிறணும். பெரியவன், வீரபாண்டி, ஏற்கனவே வாத்தியார் செல்லையாமாமா மகன் விசயக்குமார் மாதிரி பட்டம் பறக்கவிடனும்ங்கான். அவனை மாதிரியே பெரிய பட்டணத்தில இருக்கிற மின்சாரத்தைப் பத்தி படிக்கப் போறானாம். எங்கேயோ தள்ளிப் போய்ப் படிக்கணுமாம். எல்லாம் செல்லையா மாமா மகன் விசயக்குமார்கிட்ட இருந்து தெரிஞ்சுகிட்டான்,” என்றாள்.

தங்கச்சாமி, “நம்ம பிள்ளை, அவ்வளவு தூரம் போய் படிக்கிறதில உனக்குச் சம்மதம்தானா?” என்று கேட்டான்.

மைதிலி, “எம்புட்டுத் தூரமின்னால் என்ன? எம்பிள்ள படிக்கட்டும். அதுக்கு நம்ம ரெண்டுபேரும் ஒத்துமையா வேலை செய்வோம்,” என்றாள்.




70

அன்று ஊரார் எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருந்த மாசிப்படைப்பு, ஊரின் காவல் தெய்வம் பெரியாண்டவனுக்கு வருடாந்திரக் கொடை விழா, ஆரம்ப நாள். மதியத்திலிருந்து மேளம் ஒலிக்க ஆரம்பித்து விடும். கோவில் சுற்றுப்புறங்கள் சுத்தப் படுத்தப் பட்டு, வெளியூர் வாசிகள் தங்கள் மாட்டுவண்டியை நிறுத்தும் இடங்கள் சுத்திகரிக்கப் பட்டிருந்தன. குடிக்க நீர்ப் பானைகள் ஆங்காங்கே வைக்கப் பட்டன. தற்காலிகக் கடைகள் ஓலையும் கம்பும் வைத்துக் கட்டப் பட்டிருந்தன. ஏற்கனவே தேனீரும் திண்பண்டங்களும் விற்க ஆரம்பித்துவிட்டனர். வளையல் சீப்பு சோப்புக் கடைகளும் துணிமணி விற்பனை செய்யும் கடைகளும், தங்கள் பொருள்களை விற்க தயாராய் இருந்தன.

இன்னும் சில மணி நேரத்தில் இருட்ட ஆரம்பித்துவிடும், அதற்குள் ‘வச்சாக் கிடைக்கும் வைக்கலனா கிடையாது’ என்று கூவி, சிறுவர் முதல் பெரியவர் வரை, தங்களின் அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்க்க அழைப்பான் சூதாட்டக்காரன். மற்ற விளையாட்டுகளும் கேளிக்கைகளும் எந்த நிமிடமும் ஆரம்பித்து விடும்.

காளையர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்க, எடைதூக்கும் போட்டியில் ஈடுபடுவது மட்டுமல்லாமல் இளவட்டக்கல்லைத் தங்கள் தோளுக்குத் தூக்கிக் தங்கள் பலத்தைக் காட்டி கன்னியர்களின் கடைக்கண் பார்வை தங்கள் மேல் படுமா என ஏங்குவர். ஆனால் இளவட்டக்கல்லைத் தூக்குவது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. பலர் தங்கள் முயற்சியில் ஏமாற்றத்தையே தழுவுவர். இருப்பினும் முயற்சி செய்ய பலர் முன்வருவர்.

ஆனால் முந்தைய வருடங்களைவிட மிக முக்கியமான வித்தியாசம் ஒன்று ஊர் மக்களை வியப்பில் ஆழ்த்தி ஆனந்தக் கூத்தாட வைக்கக் காத்திருந்தது. ஊர்ப் பெரியவர்களுக்கு மட்டும் ஒரு சில நாட்களுக்கு முன் அந்தப் புதுமை காட்டப் பட்டது. ஊர்ப் பெரியவர்கள் எல்லோரும் ஒத்துக் கொண்டது போல் மாசிப் படைப்பு அன்று ஊர் மக்களுக்கு அந்த வியக்கத்தக்க சாதனத்தை காட்டுவதாக முடிவு செய்யப்பட்டது.

கிட்டுத்தாத்தா தங்கச்சாமியிடம் முந்தின நாளே சொல்லிவிட்டார், “அய்யா நாளைக்குப் பெரிய நாள். வீட்டில இருந்து பெண்டாட்டி பிள்ளைகளொட கொண்டாடுங்க. மாட்டை நாம்பாத்துக்கிடுதேன்,” என்று.

ஆகவே காலையில் எழுந்த தங்கச்சாமி தன் தோட்டத்திற்குச் சென்று பார்வையிட்டான். எந்த நிலத்தில் எந்த மகசூல் வைப்பது என்று யோசித்த வண்ணம் தன் நிலங்களை வலம் வந்தான். பின் வீட்டுக்கு வந்து சாப்பிட்டான். பல வருடம் கழித்து, முதல் முதலாய் வேலை செய்யாமல் வீட்டில் இருந்தான். அவனுக்கு அது பிடிக்கவில்லை.

நேராக தன் பெரியப்பா மகன் சிங்கராசுவின் வீட்டுக்குச் சென்றான். அவனைப் பார்த்ததும், “வா தம்பி வா,” என்று வரவேற்றான் சிங்கராசு.

தங்கச்சாமி, “அண்ணே, திடுதிக்கினு வந்து கேக்கதுக்கு மன்னிச்சுக்கோங்க, ஒங்க காளை மாட்டையும் கலப்பையையும் ஒரு அரை நாள் கடன் வாங்கிக்கிடலாமா?” என்றான்.

சிங்கராசு, “என்ன தம்பி நேத்துவரைக்கும் ஊர் மாட்ட மேச்சிட்டு இன்னைக்குத்தான் ஓய்வுன்னு வீட்டில இருக்காம, மாட்டக்கட்டி உழவுல இறங்கப் போறயா?” என்றான்.

“ஆமாண்ணே, வீட்டில சும்மா இருக்க பிடிக்கல,” என்றான் தங்கச்சாமி.

“இன்னைக்கு மாசிப் படைப்பு வேற,” என்றான் சிங்கராசு.

“அது சாயங்காலந்தான ஆரம்பிக்கும். அதுக்குள்ள ரெண்டு குறுக்கத்த உழுது போட்டுட்டால் மாசிப்படைப்புக்குப் பின்ன சோளம் விதச்சு, பாத்தி கட்டிடலாமுன்னு நினைக்கேன். மூணு நாளுக்கு முன்ன பெய்த மழையில நிலம் நல்லா ஈரமா குளுந்து கிடக்கு. ஏன் நேரத்தையும் இந்த நிலத்தோட பக்குவத்தையும் வீணடிப்பானேன்?” என்றான்.

சிங்கராசு, “சரி தம்பி, மாட்டப் பத்திட்டுப் போ. ஏர்க்கால மோக்கால்ல கெட்ட நான் உதவி செய்யணுமா, நீயே செய்துக்கிடுவயா?” என்றான் சிரித்துக் கொண்டே.

தங்கச்சாமி, “நாம் பாத்துக்கிடுதேன் அண்ணே, நான் இன்னும் மறக்கல,” என்றான்.

சிங்கராசு, “ரெம்ப நல்லது தம்பி. ஒனக்கு எப்போம் எது வேணுமின்னாலும் வந்து வாங்கிக்கோ. பெரியாண்டவன் புண்ணியத்தில கூடியசீக்கிரம் நீயும் ஒரு ஜோடி காளையப் பிடிச்சு நல்லா சம்சாரித்தனம் பண்ணுவ. ஒம் பெண்டாட்டி ஒனக்கு ஒத்தாசையா இருந்து நீங்க ரெண்டுபேரும் பிள்ளைகளை நல்லபடியா முன்னுக்குக் கொண்டுவாங்க,” என்றான்.

தங்கச்சாமி, “சரி அண்ணே,” என்று சொல்லியவாறே காளைகளை அவிழ்த்து அவற்றின் கழுத்தில் மோக்கால் என்ற நுகத்தடியை வைத்துக் கட்டினான். பின் கலப்பையை முன்பின்னாகத் திருப்பி மோக்காவின் நடுவில் வைத்துக் கட்டினான். அதன்பின் காளைகள் கலப்பையை இழுத்துவர, அவைகளை அவனது நிலத்திற்கு ஓட்டிச் சென்றான்.

தங்கச்சாமியின் நிலம் உழுவதற்கு வசமாக சரியான ஈரப் பதத்துடன் இருந்தது. அந்நிலம் தங்கச்சாமியின் வரவுக்காக காலம் காலமாய்க் காத்திருந்ததுபோல் கலப்பையை உள் வாங்கி, எருதுகள் இழுக்க இழுக்க நிலம் பிளவுபட்டு, சிறிது நேரத்தில் பொன் புழுதியாய்க் காட்சி அளித்தது.

அவன் மதியம் சாப்பிட வராததை உணர்ந்த மைதிலிக்கு அவன் எங்கே போயிருப்பான் என்று எப்படியோ தெரிந்துகொண்டிருக்க வேண்டும். அவனைத்தேடி அவள் கிணற்றுக்கே வந்துவிட்டாள்.

அவளைப் பார்த்த தங்கச்சாமி பூரித்துப் போனான். “என்னம்மா, தலையில கலையத்தோட வந்திட்ட?” என்று ஆச்சரியத்தை அடக்க முடியாமல் கேட்டான்.

மைதிலி பெரு மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே, “எம் புருசன் உழுதுகிட்டு இருக்காகளே. பசிக்குமேன்னு கஞ்சி கொண்டாந்தேன்,” என்றாள்.

அப்போது எங்கிருந்தோ செல்லையா வாத்தியார் அங்கு வந்து சேர்ந்தார். அவர் காதுகளிலும் மைதிலியின் சொற்கள் விழுந்திருக்க வேண்டும். “அடிச்சக்க. இன்னைக்கே உழுது நிலத்தப் பண்படுத்த ஆரம்பிச்சுட்டேகளா ரெண்டுபேரும். நல்லது. கணவனும் மனைவியும் ஒருமித்து இருந்தாத்தான் குடும்பம் தழைக்கும். இனி ஒங்களுக்கு நல்லகாலம் காத்திருக்கு. எங்க தோட்டம் வரைக்கும் போய்க்கிட்டு இருந்தேன், ஒங்க ரெண்டுபேரையும் பாத்தேன். வந்து பாத்திட்டு போவோமேன்னு வந்தேன். காதல்கிளிகள் பேச்சில குறுக்கிட்டதுக்கு மன்னிச்சிருங்க,” என்று சிரித்தவாறே நடந்து மறைந்தார் செல்லையாவாத்தியார்.

அவர் செல்வதையே பார்த்து, மைதிலியும் தங்கச்சாமியும் மனதுக்குள் சிரித்துக்கொண்டனர்.

சற்று நேரத்தில் தங்கச்சாமி கலப்பையை நிறுத்திவிட்டு மாடுகள் இரண்டையும் அவிழ்த்து நிழலில் கட்டிவிட்டு அவசரமாகக் கையைக் கழுவி மைதிலி கொண்டுவந்த சோளச்சோற்றை மோரில் கரைத்து, சரியான அளவு உப்புக்கல்லையும் போட்டு, கலந்து குடித்தான். இடையில் அவள் கொண்டுவந்த வறுத்த உப்பு மிளகாயைக் கடித்துக்கொண்டான். ‘நல்லா இருக்கு’ என்று தலையை ஆட்டியவாறே முணுமுணுத்தான்.

அவன் கஞ்சியைக் குடித்து முடிந்ததும் கலையத்தைக் கையில் எடுத்தவாறே, “இன்னைக்கி சாய்ந்திரம் நம்ம வேலம்மா அக்கா வீட்டுல சாப்பிட்டிட்டு கோயிலுக்குப் போகணும். அதனால சீக்கிரம் வீட்டுக்கு வாங்க,” என்றாள்.
தங்கச்சாமி மேற்கே தூரத்தே இருந்த மரங்களுக்கு மேல் வானத்தை, தன் வலது கை ஆள்காட்டி விரலால் காட்டி, “சரி, தேரம் அங்க வரையில் உழவ அவுத்திருதேன்,” என்று சொல்லிவிட்டு மீண்டும் மாட்டை உழவில் பூட்டி வேலையைத் தொடங்கினான். சொன்னதுபோல் மூன்று மணிவாக்கில உழவை நிறுத்தி, மாடுகளையும் கலப்பையையும் சிங்கராசாவின் வீட்டில் ஒப்படைத்தது மட்டுமல்லாமல், மாடுகளுக்குப் போதிய அளவு தண்ணீர் காட்டிவிட்டு, அவைகளுக்கு உரிய இடங்களில் கட்டினான். பின் தொழுவின் ஓரத்தில் இருந்த மாட்டுத்தீவனத்தை அள்ளி அவைகளின் முன் போட்டுவிட்டு. சிங்கராசாவிடம் சொல்லிவிட்டு தன் வீட்டுக்கு விரைந்தான்.




 

Members online

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top