JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Aalamarathu Paravaigal - Chapters 71 & 72

Uthaya

Member
ஆலமரத்துப் பறவைகள் – அத்தியாயம் 71 & 72

71



வீட்டில் மைதிலி குளித்து, குழந்தைகள் இருவரையும் குளிப்பாட்டி, அவர்களுக்கு இருந்ததிலேயே நல்ல உடைகளை அணிவித்துக் காத்திருந்தாள். தங்கச்சாமி வருவதைக்கண்டதும் எழுந்து, “வாங்க, நாங்க மூணுபேரும் ரெடி. ஒங்களுக்குக் குளிக்க லேசா வென்னி வச்சிருக்கேன், வேணுமின்னா கூட தண்ணி கலந்துக்கோங்க. குளிச்சிட்டு, காப்பி வச்சிருக்கேன் குடிச்சிட்டு நாம எல்லாரும் வேலம்மாள் அக்கா வீட்டுக்குப் போவம், சரியா?” என்றாள்.

தங்கச்சாமி, “பிள்ளைகள் ரெண்டும் மதியம் சாப்பிட்டுச்சா, காப்பி குடிச்சதா?” என்றான்.

மைதிலி, “ஆமா, நாங்க மூணுபேரும் சாப்பிட்டு, காப்பியும் குடிச்சு தயாரா இருக்கோம். நீங்க ரெடியானல் போதும்,” என்றாள்.

தங்கச்சாமி அவசரமாக, “சரி நான் விறுவிறுண்ணு குளிச்சிட்டு வந்திருதேன்,” என்றவன் வீட்டின் பின்பக்கம் சென்றான்.

அவன் வருவதற்குள் மைதிலி அவனுக்காக எடுத்து வைத்திருந்த வேட்டி துண்டை அவன் கண்ணில் படுமாறு உள் அறையில் பெட்டிமேல் வைத்தாள். தங்கச்சாமி அவசரமாக ஐந்தே நிமிடத்தில் குளித்து உடம்பைத் துவட்டி, உள் அறைக்குச் சென்று உடைமாற்றி வந்தான்.

அவனைப் பார்த்ததும் அவன் மகன் வீரபாண்டி சிரித்தான். மைதிலி அவள் அருமைமகனைப் பார்த்து, “ஏய், வீரபாண்டி, நீ என்னத்துக்கு படிக்கப்போறன்னு ஒங்க அய்யாட்டச் சொல்லு,” என்றாள்.

ஏழரை வயதே அடைந்திருந்த வீரபாண்டி, “இஞ்சினியர்,” என்றான்.

தங்கச்சாமிக்கு ஒரு புறம் பூரிப்பாக இருந்தாலும், மறுபுறம் அவன் மகன் என்ன சொல்கின்றான் என்பது புரியாததால் ஏமாற்றத்தில் மௌனமானான்.

மைதிலி, “வீரபாண்டி, இஞ்சினியர், அப்பிடின்னா என்ன, என்ன வேல செய்வன்னு ஒங்க அய்யாவுக்கு வௌக்கமாச் சொல்லு ராசா,” என்றாள்.

வீரபாண்டி சிரித்துக்கொண்டே, “இன்சினியர்ன்னா பெரிய படிப்பு. வடக்குத்தெரு ராசா சித்தப்பா படிக்கது மாதிரி. அப்பிடிப் படிச்சா கரண்டுல வேல பாக்கலாம். கழுகுமலயில மாவு அறைக்கித மிசின் எல்லாம் உற்பத்தி செய்யலாம். பெரிய பெரிய பாலங்கெட்டலாம், அணைக்கட்டு கெட்டலாம்,” என்றான்.

தங்கச்சாமி, “இவனுக்கு இதெல்லாம் எப்பிடி தெரியும். இவன் பாலம் அணைக்கட்டு எல்லாம் பாக்கலையே,” என்றான்.

மைதிலி, “இவன் தெனம் வாத்தியார் சித்தப்பா மகன் விசயக்குமார்கூடத்தான் விளையாடுதான். அவன் இவனோட ஒரு வயசு பெரியவண்ணாலும் இவன கூட்டி வச்சு நல்லா விளையாடுதான். அவந்தான் இவனுக்கு எல்லாத்தையும் சொல்லிக் குடுத்திருக்கான். அவன் ஊருக்குப் போய்ட்டு வந்து, இவங்கிட்ட எல்லாத்தையும் சொல்லுதான். புத்தகமெல்லாம் தெறந்து படமெல்லாம் காட்டுறான். ரெண்டுபேரும் பட்டம் பறக்கவிடுதாங்க. பேட்டிரிக் கட்டையும் பல்பும் வச்சு லைட்டு போடுதாங்க. இன்னும் என்னவெல்லாமோ செய்துக. நமக்குத்தான் வௌங்கமாட்டங்குது,” என்றாள்.

அன்பாகத் தன் மகனை அள்ளி அணைத்துக் கொண்டான் தங்கச்சாமி. அவை யாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த அவர்களுடைய ஐந்து வயது மகள் தன் தாயைக் கட்டி அணைத்துக்கொண்டாள்.

மகனை இறக்கிவிட்டுவிட்டு, மகளைக் கையில் அள்ளி, “ஏய், ராமலச்சுமி, நீ என்னவேலைக்கு படிக்கப் போற,” என்றான்.

அவன் மகள், சிரித்தவாறே, “நான் டீச்சரா படிக்கப்போறேன்,” என்றாள்.

“நம்ம வீட்டில ரெண்டும் படிச்சு கெட்டிக்காரப் பிள்ளைகளா வந்திரும்,” என்றாள் மைதிலி.

“வரட்டும். நல்லா படிக்கட்டும். நாந்தான் படிக்காமல் போனேன், நம்ம பிள்ளைகளாவது படிக்கட்டும். அவங்க ரெண்டுபேரையும் படிக்க வைக்கிறதுதான் நம்ம கடமை,” என்றான் தங்கச்சாமி.

நேரம் போவதை உணர்ந்த மைதிலி, “சரி காப்பியக் குடிங்க. நீங்க குடிச்சதும் போகலாம்,” என்றாள்.

சில நிமிடங்களில் நால்வரும் தெருவில் இறங்கி உல்லாசமாய் நடந்து வேலம்மாளின் வீட்டை அடைந்தனர்.

தற்போதெல்லாம் வேலம்மாளின் வீட்டில் நிரந்தரமாகக் குடியேறிவிட்ட அங்கயற்கண்ணியும் வேலம்மாளும், தங்கச்சாமியின் குடும்பத்தை வரவேற்றனர்.

அங்கயற்கண்ணி தங்கச்சாமியைப் பார்த்து, “இன்னைக்கு மாசிப்படப்பும் அதுவுமா, நல்ல நாளன்னைக்கு, முதல்ல நிலத்தை உழுது போட்டேகளாமுல்லோ. நல்லது, செழிச்சுச் சீரும் சிறப்புமா இருக்கட்டும். போய் பெரியாண்டசாமிய வேண்டிக்கிடுவோம்,” என்றாள்.

மைதிலி, “ஆமாக்கா, ஒங்க வாக்கு பலிக்கட்டும். நீங்க சொன்னதுபோல, போய் சாமிகிட்ட விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கிடுவோம்,” என்றாள்.

தங்கச்சாமி நன்றியுடன் தலையசைத்தான்.

வேலம்மாள், “ஆமாய்யா, நல்லா இருக்கட்டும். நல்லா சீரும் சிறப்புமா ஆணும் பெண்ணும் நல்லா இருக்கட்டும்,” என்றாள்.

தங்கச்சாமியும் மைதிலியும் மிக அன்போடும் பெருமையோடும் வேலம்மாளையும் அங்கயற்கண்ணியையும் பார்த்தார்கள். உடனே, அங்கயற்க்கண்ணி, “சரி பிள்ளைகளுக்குப் பசிக்கும். முதல்ல நீங்க நாலுபேரும் உக்காருங்க, சாப்பிட்டுட்டு அடுத்து கோயிலுக்கு போய்ட்டு வரலாம்,” என்றாள்.

மைதிலி, “அய்யாவும் பிள்ளைகளும் முதல்ல சாப்பிடட்டும், அடுத்து நான் ஒங்ககூடச் சாப்பிடுதேன்,” என்றாள்.

வேலம்மாள், “ம்..கும், நல்ல நாளும் பொழுதுமா நீ ஒன் மாப்பிளகூட உக்காந்து சாப்பிடு. நான் சொல்லதக் கேளு,” என்றாள்.

அங்கயற்க்கண்ணியும், “மைதிலி நாங்க ரெண்டுபேரும் ஒங்க நாலு பேருக்கும் பரிமாறத் தொலையல. நீ உக்காரு அய்யா பக்கத்தில,” என்றாள்.

அடுத்து, சில நிமிடங்களில் தங்கச்சாமியும் மைதிலியும் அருகருகே இருக்க அவர்களுடைய மகன் வீரபாண்டி அய்யாவுக்கு வலப்புறத்திலும், மகள் ராமலச்சுமி மைதிலியின் இடப்புறத்திலும் அமர்ந்து உண்டார்கள்.

வாழை இலையில் அவர்கள் இதுவரை உண்ணாத வகை வகையான உணவுகள் பலவற்றை அன்று உண்டு களித்தார்கள். அவர்கள் இலை காலியாக விடாமல் மேலும் மேலும் உணவு பரிமாறி, இனி ஒரு இம்மிகூட தங்கள் வயிற்றில் இடம் இல்லை என அவர்கள் சொன்னபின்தான் அவர்களை எழுந்திருக்கவிட்டார்கள் வேலம்மாளும் அங்கயற்கண்ணியும்.

அங்கயற்கண்ணி, “வீரபாண்டி நல்லாச் சாப்பிட்டயா?” என்றாள்.

வீரபாண்டி, “வயிறு வெடிக்க மாதிரிச் சாப்பிட்டுட்டேன் பெரியம்மா,” என்றான்.

விருந்தினர் நால்வரும் கைகழுவிவிட்டு வரும்வரை காத்திருந்த வேலம்மாள், தங்கச்சாமியையும் மைதிலியையும் வரவேற்று, “ஒங்க எல்லாருக்கும் இன்னைக்குக் கோடி(புதிது) எடுத்திருக்கோம். இந்தாங்க, உள் அறையில போய் மாத்திக்கிட்டு வாங்க. பிள்ளைகளுக்கும் வாங்கியாந்திருக்கோம்,” என்றாள்.

மைதிலி அதிர்ச்சியுற்றவளாய், “இதெல்லாம் எதுக்குக்கா, வீண் செலவு,” என்றாள்.

அங்கயற்கண்ணி, “நல்ல நாளும் பொழுதுமா ஊர்ல எல்லாரும் புதுத் துணி உடுத்தையில நாம புதுசு உடுத்தினா வீண் செலவா?” என்றாள்.

வேலம்மாள், “ஒங்க ரெண்டு பேருக்கும் நல்ல காலம் பிறக்கட்டும். வேண்டிக்கிடுவோம்,” என்றாள்.

உள் அறைக்குள் சென்று புது துணியில் திரும்ப வந்த தங்கச்சாமியையும் மைதிலியையும், “நீங்க ரெண்டு பேரும் இந்த நாற்காலியில உக்காருங்க,” என்றாள் வேலம்மாள்.




72

கோடித் துணி உடுத்திக்கொண்டு வந்த தங்கச்சாமியும் மைதிலியும் என்ன இது என்பதுபோல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு, அருகருகே இடப்பட்ட நாற்காலிகளில் அமர்ந்தனர். பின் அங்கயற்கண்ணி உள் அறையில் இருந்து ஒரு சிறு பெட்டியுடன் வந்தாள்.

மைதிலியின் அருகில் வந்த அங்கயற்கண்ணி, “மைதிலி உனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கு. நல்லதுதான். ஆனா, நீ எதிர்பார்க்காதது. அதனால கொஞ்சம் ஒன்ன ஆசுவாசப் படுத்திக்கோ,” என்றவள், தங்கச்சாமியின் பக்கம் திரும்பி, “நீங்களும் அதிர்ச்சி அடைய வேண்டாம். இந்தப் பெட்டியத் திறந்து அதில் உள்ள தாலிய எடுத்து மைதிலி கழுத்தில கட்டுங்க,” என்றாள்.

மைதிலி அதிர்ச்சியுடன் அங்கயற்கண்ணியைப் பார்த்தாள். பின் வேலம்மாளைப் பார்த்தாள், இது என்ன என்பதுபோல்.

வேலம்மாள், “நாங்க ஒன் நல்லதுக்குத்தான் யோசிச்சு முடிவு எடுத்திருக்கோம், பொருத்துத்தான் பாரேன்,” என்றாள்.

பெட்டியை வாங்கிய தங்கச்சாமி, உடனே அந்தப் பெட்டியைத் திறந்தான். உள்ளே பல அழகிய கல்பதித்த தங்க நகைகள் இருந்தன. அதில் ஒன்றை கையில் எடுத்துப் பார்த்தவன், அதிர்ந்தான்.

“இது, இது மைதிலியோடது மாதிரில்லோ இருக்கு,” என்றான் தங்கச்சாமி.

வேலம்மாள், “ஆமாய்யா, அந்தப் பெட்டியில இருக்கிறதெல்லாமே மைதிலியோடதுதான்,” என்றாள்.

மைதிலி, தங்கச்சாமியின் கையிலிருந்த கல் பதித்த நெக்லசை வாங்கிப் பார்த்துவிட்டு, “இது என்னோடதுதான். காணாமப் போன இந்த நகை இங்க எப்பிடி,” என்றாள்.

தங்கச்சாமியும், “அதான, காணாமப் போன இது..” என்றான்.

வேலம்மாள், “மன்னிச்சிக்கோங்க, ரெண்டுபேரும் மன்னிச்சுக்கோங்க. கெட்ட மனுசன் செய்த செயல். அடகு பிடிச்ச நகையோட இருந்தது. அத நல்ல நாள் அன்னைக்கு ஒங்கிட்ட ஒப்படைக்கனுமுன்னு நினைச்சோம். மேலும் நல்ல நாள் அன்னைக்கு, ஒனக்கு கல்யாணம் ஆன நாளில் ஒன் கணவன் கட்டிய அதே தங்கத் தாலிய, மீண்டும் கட்டவச்சு, ஒங்க புது வாழ்க்கையத் தொடங்கினால் நல்லதுன்னு நினைச்சோம்,” என்றாள்.

அங்கயற்கண்ணி, “எங்க மனசில பட்டது. ஒங்களுக்கு பிடிச்சாச் செய்யலாம்,” என்றாள்.

அதற்குள் சுதாரித்துக்கொண்ட தங்கச்சாமி, “நீங்க ரெண்டுபேரும் எடுத்த முடிவு நல்ல முடிவுதான். நீங்க சொல்லுத மாதிரியே நான் தாலி கட்டுதேன். எங்க வாழ்க்கை நல்லா இருக்கணும்மின்னு நீங்க ரெண்டுபேரும் இவ்வளவு பிரயாசப் பட்டுருக்கேக. நாங்க ரெண்டுபேரும் உங்களுக்கு நிறைய நன்றிக் கடன் பட்டிருக்கோம்,” என்றான்.

அங்கயற்கண்ணி, “அப்பிடி பெரிய வார்த்தையெல்லாம் பேசி எங்களப் பிரிச்சிர வேண்டாம்,” என்றாள்.

வேலம்மாள், “மைதிலி ஒண்ணும் பேசலையே,” என்றாள்.

மைதிலி எழுந்து, “நான் என் வீட்டய்யா பேச்சுக்குக் கட்டுப் பட்டு நடக்கேன். அது மட்டுமில்ல, நீங்க ரெண்டு பேரும் எங்களுக்காகச் செய்ததெல்லாம் நன்மைக்கே. இதுவரை எல்லாமே நல்லதாவே நடந்திருக்கு. நீங்க செய்தது எல்லாத்தையும் மறக்க மாட்டேன்,” என்றாள்.

மறு பேச்சை எதிர்பாராமல் தங்கச்சாமி ஏற்கனவே அந்தப் பெட்டியில் இருந்து எடுத்து தன் கையில் வைத்திருந்த தங்கத்தாலியை தன் மனைவி மைதிலியின் கழுத்தில் கட்டினான்.

அங்கயற்கண்ணி, “அந்தப் பெட்டியில இருக்கிறது எல்லாமே மைதிலியோட நகைதான். ஓவ்வொன்னா எடுத்து, அணிவிச்சு விடுங்கள்,” என்றாள்.

மைதிலி, “போதும் அக்கா. நீங்க வேணுமின்னா போட்டு விடுங்க. இல்ல நானே போட்டுக்கிடுதேன்,” என்றாள்.

வேலம்மாள், “வெக்கமாக்கும், சரி இருக்கட்டும்,” என்றாள். பின் அந்தப் பெட்டியில் இருந்த கல் நெக்லஸ், கம்மல், ஜிமிக்கி, வளையல் எல்லாவற்றையும் அங்கயற்கண்ணியின் உதவியுடன் மைதிலிக்கு அணிவித்தாள்.

மைதிலி கண்ணீரோடு எழுந்து அவள் கணவன் கால்களில் விழுந்தாள். தங்கச்சாமி அவளை கைத்தாங்கலாகத் தூக்கிவிட்டு, “நல்லா இருக்கணும்,” என்று வாழ்த்தினான்.

அடுத்து வேலம்மாள், அங்கயற்க்கண்ணி இருவரின் கால்களிலும் விழ இருந்த மைதிலியைப் பிடித்துக்கொண்டாள் அங்கயற்கண்ணி, “நீ எங்க கால்ல எல்லாம் விழ வேண்டாம். நீ நல்லா இருப்ப,” என்றாள்.

வேலம்மாளும், “நீ நல்லா இருக்கணும்,” என்று வாழ்த்தினாள்.

நினைவு வந்தவனாய், “நாம கோயிலுக்குப் போறோமில்லோ? அப்படின்னா, நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டாத்தான் கௌம்ப முடியும்,” என்றான் தங்கச்சாமி.

மைதிலி, “அக்கா நீங்க ரெண்டு பேரும் உக்காருங்க நான் பரிமாறுதேன்,” என்றாள்.

அடுத்து சில நிமிடங்களில் அங்கிருந்து ஒரு சிறு பட்டாளமாக, அவர்கள் அனைவரும் பெரியாண்டசாமி கோவிலை நோக்கி நடந்தனர். முதலில் தங்கச்சாமியும் மைதிலியும் நடக்க, அவர்களுக்கு இருபுறமும் குழந்தைகள் வீரபாண்டியும் ராமலச்சுமியும் நடந்தனர். அவர்கள் பின்னால் சிறு இடைவெளி விட்டு வேலம்மாளும் அங்கயற்கண்ணியும் நடந்து சென்றனர்.

அவர்கள் தெற்குத் தெரு வழியாக நடந்து, பூவரசுமரத் தெருவில் வலம் திரும்பி மேற்கே சென்றனர். பூவரசு மரத்தருகில் வரவும் தரையில் சிவப்பேரிய பூக்கள் கிடப்பதைப் பார்த்தான் தங்கச்சாமி. தான் முன் ஒரு நாள் தற்கொலை செய்யச் சென்ற பொழுது இதே போல் பூக்களைப் பார்த்த ஞாபகம் வந்தது. நல்லவேளை அன்று அங்கயற்கண்ணி நல்ல நேரத்தில் வந்து காப்பாற்றினாள் என்று நினைத்துக் கொண்டான்.

பூவரசுமரத் தெருவின் மேற்கு எல்கையில் ஊர் முடிந்தது. சாலைபோல் இருந்த வண்டித் தடத்தின் வழியாக தொடர்ந்தார்கள். பாதையின் தெற்கே வாகை மரங்கள் பெரிதாக வளர்ந்திருந்தன. அவற்றின் கிளைகளில் காக்கைகள் கூடுகட்டி இருந்தன. பாதையின் வடக்கே கருவேல மரங்கள் குச்சிகளில் குத்திவைத்த பெரிய பந்துகள் போல் நின்றன. அவற்றின் கிளைகளில் ஏராளமான வீட்டுக் குருவிகள் கீச்சிட்ட வண்ணம் அமர்ந்திருந்தன. அவற்றின் கூடுகள் பெரும்பாலும் வீட்டுக்கூரைகளிலும், சுவர்ப் பொந்துகளிலும் இருந்தன. அவை கருவேல மரத்தில், இரைதேடிய களைப்பை போக்க சற்று நேரம் வம்பளந்துவிட்டுப் போக வந்திருக்கவேண்டும், இல்லை என்றால் அவை இரைதேடி முடிந்தபின் கூட்டைத் தேடி அல்லவா செல்ல வேண்டும். இன்னும் சிறிது நேரம்தான், இருட்டுவதற்குள் அவை தத்தம் கூடுகளை நோக்கிப் பறந்துவிடும்.

மைதிலியும் தங்கச்சாமியும் அவர்கள் குழந்தைகளுடன், பெரியாண்டசாமி கோவிலின் சதுக்கத்துக்குள் கால் எடுத்து வைக்கவும், அந்த ஊரில் முதல் முறையாக மின்சார விளக்குகள், விசை திருப்பப் பட்டு, பிரகாசமாய் எரிய ஆரம்பித்தன. திடீர் என உயிர் பெற்ற பிரகாசமான விளக்குகள் தங்கச்சாமியின் குடும்பத்தை மட்டுமின்றி, ஊரார் அனைவரையும் அதிர்ச்சியுற வைத்தது. சில நிமிடங்களில் அதிர்ச்சி தெளிந்து, ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இவ்வளவு வெளிச்சாமா என்று வியந்தனர். சிலர் மின்சார விளக்கொளி கண்ணில் பட்டால் கண்கள் பாதிக்கப் படலாம், என பயந்து கண்களை மூடிக்கொண்டனர். விளக்குகள் கோவிலின் நான்கு எல்கைகளிலும், வேறு பல இடங்களிலும், பொருத்தப் பட்டு இருந்ததால், ஊர்ப் பெரியவர் பொறியைத் தட்டவும் ஒரே நேரத்தில் எல்லா பக்கங்களிலும் பிரகாசமாய் எரிந்தன. அந்த மிதமிஞ்சிய விளக்கொளியில் மைதிலியின் கழுத்து நகைகள் மின்னின.

ஆனால் மைதிலியின் மனம் அவள் கழுத்து நகைகளின் மேல் இல்லை. அவள் விளக்கொளியினால் அதிர்ச்சியுறவும் இல்லை. அவள் அவளுடைய அருமை மகனை நோக்கி, “வீரபாண்டி, இதுதானா மின்சார விளக்கு?” என்று கேட்டாள்.

அதற்குள் வேலம்மாளும் அங்கயற்கண்ணியும் அவர்களின் அருகே வந்து நின்றனர். வீரபாண்டி, “ஆமாத்தா, இதுதான் மின்சாரம். அது விளக்கு எரிக்க மட்டுமில்ல, பல காரியத்துக்கும் பயன்படும். அதுனாலதான் நான் மின்சாரக் கரண்டு பத்திப் படிக்கப் போறேன். நான் ஒரு பெரிய இஞ்சினியரா வருவேன்,” என்றான்.

மைதிலி அவன் முன் குதிங்காலிட்டு, “நீ படி ராசா, நான் இந்த நகைய வித்தாது ஒன்ன படிக்கப் போட்டுருதேன்,” என்றாள்.

தங்கச்சாமி, “நகைய எல்லாம் விக்க வேண்டியதிருக்காது. அப்பிடி தேவப் பட்டா பாத்துக்கிடலாம். நீ இஞ்சினியராப் படி வீரபாண்டி, நான் பாடுபட்டு ஒன்ன படிக்க வைக்கேன்,” என்று சொல்லி மகிழ்ச்சியில் பூரித்து நின்றான்.

அவனுடைய பெற்றோர் சொல்லை ஆமோதிப்பதுபோல், “நான் படிப்பேன்,” என்றான் வீரபாண்டி.

எவரும் எதிர்பாராதவண்ணம், படிப்பில் எனக்கும் பங்கு உண்டு என்பதுபோல் ராமலச்சுமி, “நானும் படிப்பேன்,” என்றாள்.

அருகில் நின்ற அங்கயற்கண்ணி, “ஒங்க பிள்ளைகள் ரெண்டும் நல்லாப் படிச்சிரும், இனி உங்க வாழ்க்கை நல்லா பிரகாசமா இருக்கும்,” என்றாள்.

முதல் முதலில் பெரியாண்டபுரத்திற்கு வந்திருந்த மின்சார விளக்கின் ஒளியில் நனைந்த அந்தச் சிறு குடும்பம், இதுவரை அவர்களைப் பிடித்திருந்த சனியன் விலகி, வாழ்விலும் இருளைவிட்டு விலகி, பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிப்பயணித்தது.

முற்றும்!!!
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top