JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakalin Vettai - Episode 17

JLine

Moderator
Staff member
அரிமாக்களின் வேட்டை!

அத்தியாயம் 17

நேரம்: வெள்ளிக்கிழமை நள்ளிரவு கடந்து 1 மணி

மறு முனையில் வார்த்தைகளை முடிக்காதவனாய் அமைதியாகிப் போன வருணின் அச்சம் ஜாஃபருக்கும் புரிந்தது.

"இல்லை சார். அப்படி எல்லாம் இல்லை.."

"எலக்ட்ரிசிட்டி பாசாகிற ஃபென்ஸில் கையை வைக்கிற அளவுக்குத் துர்கா முட்டாள் இல்லை ஜாஃபர், ஆனாலும் எப்படி?"

“சார். கரெண்ட் பாசாகாமல் இருக்க யாரோ அதனுடைய ஸ்விட்ச்சை ஆஃப் பண்ணிருக்காங்க சார்.”

“துர்காவுக்கு அந்த ஸ்விட்ச் எங்க இருக்குன்னு தெரியுமா ஜாஃபர்?”

“சார், எனக்குத் தெரிஞ்சு அவளுக்குத் தெரிய வாய்ப்பில்லை சார். ஆனாலும்?”

முடிக்காது விட்ட ஜாஃபரின் வார்த்தைகளிலும் அர்த்தம் இருக்கத்தான் செய்தது.

‘ஒரு வேளை துர்காவிற்கு அந்த ஸ்விட்ச் பற்றித் தெரிஞ்சு அவளே அதை ஆஃப் பண்ணிட்டு வெளிய ஓடிட்டாளா?’

குழம்பிப் போன வருண் அக்கணமே அலைபேசியில் விமானியை அழைத்தவனாய் வீட்டை விட்டு வெளியில் ஓடி வர, அவனது வீட்டிலேயே கட்டப்பட்டிருக்கும் விருந்தினர் அறையில் தங்கியிருந்த விமானியும் அரக்கப்பரக்க வெளியே வர, சில நிமிடங்களில் கட்சிரோலி கானகத்தை நோக்கி பறந்தது வருணின் ஹெலிகாப்டர்.

அதே வேளையில் ‘கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல’ என்ற கூற்றுக்கு ஏற்ப, கண்ணைக் கட்டாமலேயே பார்வையற்றவளைப் போல் இருட்டுக்குள் துழாவியவளாக நடந்து கொண்டிருந்த துர்காவின் பாதையை வழிமறிப்பது போல் சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருந்த உருவம் பெண்ணவளுக்குப் பெரும் திகிலைக் கொண்டு வந்தது.

‘கடவுளே! என்ன இது?”

இதயம் படபடவெனத் துடிக்க, அசைய மறுத்த தேகம் சிலைப் போல் நின்றுவிட, எதிரே இருந்த வடிவத்தை உறுத்துப் பார்த்தவளின் ஈரக்குலையே நடுங்கிப் போனது.

ஏறக்குறைய ஒன்பது அடி நீளமும், மூன்றரை அடி உயரமும் கொண்ட உருவம் அது.

அதன் எடை எப்படியும் நூற்றி ஐம்பது கிலோவாகக் கூட இருக்கலாம்.

தானும் ஒரு கல் சிற்பம் போல் நின்றவாறே துர்காவை பார்த்தவாக்கிலேயே நின்றிருந்த அந்த மிருகத்தின் அச்சுறுத்தும் பார்வையில் அழும் திராணி கூட இல்லாதவளாய் உறைந்துப் போய் நிற்க, உடலில் செங்குத்தான கருப்பு நிறக் கோடுகளுடன் சிவப்பும் ஆரஞ்சு நிறமும் கலந்த, மூன்று கிலோமீட்டர் தொலைவிற்குக் கூடக் கேட்கும் உறுமல் சப்தத்துடன் நின்றிருந்த அந்தப் புலி அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தது.

ஒரே தாவில், இருபது முதல் முப்பது அடிகளுக்கு முன்னோக்கி பாயும் திறனைக் கொண்டவை புலிகள் என்று எங்கோ படித்தது அப்பொழுது நினைவிற்கு வர, விழிகள் அதிர்ச்சியில் பிதுங்க, வெலவெலத்துப் போய் நின்றிருந்தவளுக்கு அக்கணமே தலை சுற்றத் துவங்கியது.

***********************************************************

மும்பாய் நகரம்.

நேரம்: முந்தைய நாள் வியாழன் இரவு மணி 10:00

வித்தியாசமான ஒரு படபடப்புடன் காரில் இருந்து கீழிறிங்கிய ஷிவ நந்தனின் மனதிற்குள் ஏனோ ஒரு புது நம்பிக்கை ஒளிர்வது போன்றே தோன்றியது.

துர்கா இருக்காளா இல்லையா? அவளை வருண் பாதுகாப்பா வச்சிருக்கானா இல்லை கொன்னுட்டானா? ஒருவேளை உயிரோடு வச்சிருந்து இவ்வளவு நாளா அவளுக்கு வேற ஏதாவது கொடுமை இழைச்சிட்டிருந்தான் அப்படின்னா?

இத்தனை வினாக்கள் மனதில் அரித்தாலும் ஏனோ சிதாராவின் பேச்சில் ஒரு நம்பிக்கை பிறந்ததில், சென்னையில் இருந்து மும்பைக்குப் பயணித்திருந்தான் ஷிவ நந்தன்.

அவனது பணி மும்பையில் தான்.

ஆயினும் துர்கா கடத்தப்பட்ட நாளில் இருந்து அவ்வப்பொழுது சென்னைக்குத் திரும்பி, தன் இல்லத்தில் தங்கி இருக்கும் துர்காவின் அன்னைக்கு ஆறுதலாக ஓரிரு நாட்கள் இருந்து விட்டுப் பின் மும்பைக்குத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

சிதாரா இன்று அழைத்த பொழுது அவன் இருந்தது சென்னையில் தான்.

அவள் அழைத்ததுமே மும்பைக்குச் செல்லும் விமானத்திலும் பயணித்துவிட்டான்.

"வாங்க சார்."

எதிர்பாராத வகையில் அவன் மும்பையில் தங்கியிருந்த அவனது இல்லத்தின் வாயிலருகே நின்றிருந்த சிதாராவின் மீது ஒரு பொருள் புரியாத பார்வையைப் பதிக்க,

"உங்களுடைய வீட்டைக் கண்டுப்பிடிக்கிறது அவ்வளவு என்ன கஷ்டமா சார்? SSP ஷிவ நந்தன் எங்கத் தங்கி இருக்காருன்னு கொஞ்சம் விசாரிச்சா தெரிஞ்சுடப் போகுது. அதுவும் இல்லாமல் நாம உடனடியா போகணும், அதான் உங்க வீட்டுக்கே வந்துட்டேன்." என்றவளை அனாயசமாய்ப் பார்த்தவாறே அவளைப் பின் தொடர்ந்தான்.

“என்னுடைய காரிலேயே போகலாம் சார்.”

அவளது வார்த்தைகளுக்கு அவன் பதில் கூறவில்லை.

ஏனெனில் அவனது பளீர் ஆரஞ்சு நிற ஃபோர்ஸ் குர்கா எஸ்யுவி வருணுக்கும் அவனைச் சார்ந்தவர்களுக்கும் அத்துப்படி.

ஆமோதிப்பதை போல் மெள்ள தலையசைக்க, வெளியில் நிறுத்தப்பட்டிருந்த இளம் ரோஸ் நிற ஜாகுவார் [Light Pink Jaguar F-type Coupe] காரினுள் ஏறியவள் அவனும் ஏறி அமர்ந்ததுமே,

"வழக்கமா நான் இந்நேரம் வருண் தங்கியிருக்கும் வீட்டுக்குப் பக்கத்திலேயே மறைவா காரை நிறுத்தி அவரைக் கண்காணிச்சிட்டு இருப்பேன். ஆனால் இன்னைக்கு நீங்க வருவதால் நான் அங்க போகலை. அதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கு. வேற யாரையும் அனுப்பலாமுன்னு நினைச்சாலும், ஒரு வேளை அவங்க வருணுடைய கண்ணில் பட்டால் அவ்வளவு தான். அப்புறம் நம்ம திட்டம் எல்லாம் ஸ்பாயில் ஆகிடும். அதான் விட்டுட்டேன்.." என்றவளாகச் சாலையில் கவனைத்தைச் செலுத்தினாள்.

மதியம் அவள் அழைத்ததில் இருந்தே மனம் பல வித எண்ணங்களில் உழன்று கொண்டிருக்க, தன்னால் கண்டுப்பிடிக்க முடியாத ஒரு விஷயத்தை இவள் கண்டு பிடித்திருக்கின்றாள் என்று பாராட்டத் தோன்றினாலும், இவளும் ஒரு இளம்பெண், வருணைப் பற்றியும் நன்கு அறிவாள், ஆயினும் என்ன தைரியத்தில் இவள் இப்படிப்பட்ட இரகசிய வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றாள் என்ற கேள்வியும் ஒரு காவல் அதிகாரியாக ஷிவ நந்தனை அரித்துக் கொண்டிருந்தது.

“சிதாரா..”

“ம்ம்.. சொல்லுங்க..”

“இன்னைக்குத் திரும்பவும் வருண் ஹெலிகாப்டரில் போவான், ஐ மீன், அது வருணாகவே இருந்தாலும் அவன் துர்காவைத் தேடி இன்னைக்கும் போவான்னு என்ன நிச்சயம்?”

“அது எனக்கு எப்படித் தெரியும்?”

“அப்ப அவன் போகும் வரை இப்படித்தான் அவன் வீட்டுக்குப் பக்கத்துல ரகசியமா காரை நிறுத்திட்டு அவனை ஸ்டாக் [stalk] பண்ணிட்டே இருக்கப் போறியா?”

“நான் ஒண்ணும் ஸ்டாக் பண்ணலை..”

“ஏதோ ஒண்ணு.. ஆனால் எவ்வளவு நாள்?”

“துர்கா கிடைக்குற வரைக்கும்னு வச்சிக்கங்களேன். பட், ஏன் கேட்குறீங்க?”

"Just curious.. உங்க வீட்டுல உன்னை யாரும் தேட மாட்டாங்களா?"

ஷிவாவின் வினாவில் திரும்பிப் பார்த்தவள் பெருமிதத்தோடு புன்னகைத்தவளாக,

"எங்க வீட்டில் என் மேல அவ்வளவு நம்பிக்கை. நான் எங்கே போனாலும் சரி, ஆனால் தப்பான இடத்துக்கு மட்டும் நான் என்னைக்கும் போக மாட்டேன்னு அவங்களுக்குத் தெரியும்.." என்றாள்.

"அதுக்காக இப்படி ராத்திரி நேரத்தில கூட வெளியில் சுத்திட்டு இருப்பியா?"

அவனது கேள்வியில் அதுவரை பெருமையில் புளங்காகிதம் அடைந்து கொண்டிருந்த பெண்ணவளின் வதனத்தில் மிளிர்ந்திருந்த புன்னகை சட்டென மறைந்தது.

"நான் என்ன சுத்திட்டா இருக்கேன்? ஏதோ அத்தைப் பொண்ணைக் காணோமேன்னு ரெண்டு மாசமா பரிதாபமா தேடி அலைஞ்சிட்டு இருக்கிற ஒருத்தருக்கு ஹெல்ப் பண்ணலாமுன்னு நினைச்சால், என்னை என்னவோ எல்லா நைட்டும் நான் இப்படி வீட்டுக்குப் போகாமல் கண்ட இடத்துல சுத்திட்டு இருக்கிற மாதிரியில்ல பேசுறீங்க.."

படபடவெனப் பொறியும் அவளின் வார்த்தைகளில் அது வரை இருந்து வந்த ஆயாசம் தளர்ந்து ஷிவாவின் முகத்திலும் முறுவல் மலர்ந்தது.

வழக்கத்திற்கு மாறாகப் புன்னகையுடன் இருக்கும் அவனைத் திரும்பி பார்த்தவள் வாய்க்குள் எதனையோ முணுமுணுத்தவாறே வாகனத்தைச் செலுத்த,

"ஏதோ உன் ஃப்ரெண்ட் துர்காவைக் கண்டுபிடிக்க உதவறதுக்காகத் தான் இவ்வளவு மெனக்கெடுறன்னு எப்பவுமே சொல்லுவ. ஆனால் இன்னைக்குத் திடீர்னு எனக்கு ஹெல்ப் பண்ணணும்னு நினைச்சன்னு சொல்ற. ஸோ, இந்த உன் தேடல், அதாவது இந்தப் புது துப்பறியும் வேலை துர்காவுக்காகவா அல்லது எனக்காகவா?" என்றதுமே பெண்ணவளுக்குத் திடுக்கிட்டது.

ஏனோ அவளின் மனதிலும் அதே கேள்வி கடந்த சில நாட்களாக ஓடிக் கொண்டிருந்தது தான் அந்தத் திடுக்கிடலுக்குக் காரணம்.

என்னதான் துர்காவிற்காக என்று அவள் இந்தத் துப்பறியும் வேலையை ஆரம்பித்திருந்தாலும், ஒவ்வொரு நாளும் அவளது இதயத்தை ஆக்கிரமித்திருந்தது, துர்காவைத் தன் மூலமாகக் கண்டுப்பிடிக்கும் வேளையில், ஷிவ நந்தனின் முகத்தில் அத்தருணத்தில் தோன்றும் மலர்ச்சியே.

ஆக, நான் துர்காவிற்காக அவளைத் தேடுகின்றேனா அல்லது ஷிவ நந்தனுக்கா?

அவளுக்கே புரியாத ஒரு கேள்விக்கு அவனே விடையளித்தது போன்று இருந்தது அவனது இந்த வினா.

ஆயினும் தன்னை அவனிடம் விட்டுக்கொடுக்கவும் அவளுக்கு மனம் வரவில்லை.

“ம்ப்ச்.. துர்கா என் ஃப்ரெண்ட். சின்ன வயசில் இருந்தே என் மனசுக்குப் பிடிச்ச தோழி. அவளை ஒருத்தர், அதுவும் எனக்கு நிச்சயிக்கப்பட்டவரே கடத்திட்டுப் போயிருக்காருன்னா நான் வீட்டில் சும்மா இருக்க முடியுமா?”

கூறியவள் அவனைத் திரும்பியும் பாராது அந்நேரத்திலும் எறும்புகள் போல் வரிசையாய், ஆனால் அமைதியற்றது போல் முண்டி அடித்துக் கொண்டு போகும் வாகனங்களின் மீது கண் பதித்துக் காரை ஓட்டுவதில் கவனத்தைச் செலுத்த, மீண்டும் புன்சிரிப்பு உகுத்தவன் ஜன்னலின் புறம் பார்வையைத் திருப்பினான்.

நிமிடங்கள் மணித்துளிகளாகக் கடக்க, இன்னமும் அவள் செல்லும் இடத்தைப் பற்றிக் கூறாதவளாய் காரை ஓட்டிக் கொண்டிருக்க, மெள்ள அவளின் புறம் திரும்பியவனுக்கு அந்தப் போக்குவரத்து நெரிசலிலும் இலகுவாய் வாகனத்தைச் செலுத்துவதில் அவளை மெச்சவே தோன்றியது.

ஆனால் அப்படிச் செய்துவிட்டால் அவன் ஷிவ நந்தன் அல்லவே!

“ரொம்ப நாளா ட்ரைவ் பண்ணிப் பழக்கமோ?”

“ஆமா. ஐஞ்சு வயசில் இருந்தே..”

“வாட்?”

“பின்ன என்ன சார்? எனக்கு இப்போ இருபத்தி அஞ்சு வயசாகுது. பதினெட்டு வயசில் ஸ்டிரியங்க் பிடிச்ச கை இது. அப்போல இருந்து ஓட்டிக் கொண்டிருக்கேன். அவ்வளவு தான்.”

“அது சரி. நீ பதினெட்டு வயசில் ஸ்டிரியங் பிடிச்சன்னு எனக்கு எப்படித் தெரியும்?”

“சேன்ஸே இல்லை.. நீங்க இப்படி எல்லாம் பேசுவீங்கன்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கலை..”

நானும் தான் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டவன் அதனைக் கூறாது மௌனமாகிப் போக, ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவர்கள் அடைந்த இடத்தைக் கண்டதும் ஷிவ நந்தனின் நெற்றிச் சுருங்கியது.

"சிதாரா. இது.."

“யெஸ் சார்..”

“ஏன்? நாம் வருண் இருக்கிற இடத்துக்குத் தானே போகப் போறோம். அதுக்கு எதுக்கு இது? காரில் போகக் கூடிய தூரத்தில் இல்லையா அவன்?”

“அதுக்கான காரணத்தை நான் கண்டிப்பா இன்னும் கொஞ்ச நேரத்துல சொல்றேன்.”

கூறியவள் தன் காரை நிறுத்திய இடம் ‘Chhatrapati Shivaji Maharaj International Airport - GA terminal’

உள்ளத்திற்குள் ஆயிரம் கேள்விகள் பிறந்தாலும் அவளை எதுவும் கேட்காது அமைதியாக அவளைப் பின் தொடர, அவர்களுக்குச் சற்றுத் தொலைவில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த சிறிய விமானத்தைக் கண்டதும் ஷிவாவின் புருவங்கள் வியப்பில் நெற்றி உச்சியை எட்டின.

Embraer Phenom 100 EX - எம்ப்ரேர் எக்சிகியூட்டிவ் ஜெட் விமானம்

உடம்பானது பளீர் வெண்மை நிறத்திலும், இறக்கைகள் மற்றும் வால் கருப்பு நிறத்திலும் வர்ணம் பூசப்பட்டிருக்க, அளவில் சிறியதாய் இருந்தாலும் பளபளத்து நின்றிருந்த அந்தத் தனியார் விமானம் ஷிவ நந்தனிற்கு ஆச்சரியத்தைக் கொணர்ந்தது.

“சிதாரா.. இது யாருடையது?”

“எங்களுடையது தான் சார்.. Embraer Phenom 100 EX..”

“வாட்?”

“எதுக்கு இந்த அதிர்ச்சி சார்?”

“ப்ரைவேட் ஜெட்?”

அரசியல் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்று ஏதோ திரைப்படத்தில் பார்த்தது நினைவில் வந்தது.

"யாருடைய பணத்தை யார் யாரோ அனுபவிக்கிறார்கள்.."

பட்டென்று கூறியவனின் பேச்சில் பொதிந்திருந்த நக்கல் சிதாராவின் கோபத்தைச் சீண்டிப் பார்க்க, வெடுக்கென்று அவனின் முகம் நோக்கித் திரும்பியவள்,

"இது யாருடைய பணத்திலேயோ வாங்கின ஜெட்டும் இல்லை, நாங்களும் ஒண்ணும் திடீர் பணக்காரர்களும் இல்லை. இதெல்லாம் ஒண்ணும் எங்க அப்பாவுக்குப் பெரிய விஷயமே இல்லை.. ஏன்னா பரம்பரை பரம்பரையா பிஸ்னஸஸ் செய்து கொண்டு வரும் குடும்பம் எங்களுடையது." என்றாள் படபடவெனப் பட்டாசாய்.

"அதாவது அரசியல் பிஸ்னஸ்.."

விடாது இகழ்ச்சியாய் பேசுபவனை என்ன செய்வது என்பது போல் ஒரு சில விநாடிகள் கோபப் பார்வைப் பார்த்தவள்,

"எங்க ஜெட்டுல வர்றதுக்குக் கஷ்டமா இருந்தா வேற ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க. நான் எங்க போகணும்னு மட்டும் சொல்றேன்.." என்றாள் எரிச்சலாய்.

"எங்க அப்பா ஒண்ணும் உங்க அப்பா மாதிரி அரசியல்வாதி இல்லையே."

"இப்போ என்ன தான் சொல்ல வர்றீங்க மிஸ்டர் ஷிவ நந்தன்?"

“ஆரம்பிச்சிட்டியா? எனிவேய்ஸ் என்னிடம் இது மாதிரி ஜெட் இல்லை.."

"அப்படின்னா பேசா.." என்று எதுவோ சொல்ல வந்தவள் இதழ்களைக் கடித்துக் கோபத்தை அடக்கிக் கொண்டவளாக அமைதியாகிவிட, "அப்படின்னா பேசாம வாயை மூடிட்டு வான்னு சொல்ற, அப்படித்தானே.." என்று அவள் கூறாது முடித்த வாக்கியத்தை அவன் சொல்லி முடித்தான்.

வாயைக் கூட அசைக்காது, "புரிஞ்சா சரி" என்று முணுமுணுத்தவளின் உதடுகளை ஒரு கணம் கூர்ந்துப் பார்த்தவன் சட்டென முறுவலிக்க, உறுத்து அவனைப் பார்த்தவள் அவனது நகைப்பில் கோபம் கொண்டவளாய் நடையில் வேகத்தைக் கூட்டினாள்.

அவள் செல்வதையே நொடிகள் சில பார்த்தவன் பிறகு அவளைத் தொடந்தவாறே எதிரே இருந்த விமானத்தின் மீதும் அதன் சுற்றுப்புறம் முழுவதும் பார்வையை ஓட்ட, அவனது கவனத்தை ஈர்த்தார் அவர்களைக் கண்டதும் விமானத்தின் கதவைத் திறந்து அதன் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த விமானி.

“ஹலோ மிஸ்டர் ஷிவ நந்தன்..”

விமானத்தை இருவரும் நெருங்கியதும் கைக்குலுக்குவதற்கு அவர் கையை நீட்ட அரைக் கணம் அவரைக் கூர்ந்துப் பார்த்த ஷிவா அவரது கையைப் பற்ற, அவனுக்கு அருகில் நின்றிருந்த சிதாரா சுற்றும் முற்றும் ஒரு முறைப் பார்த்துவிட்டு, "அப்பாவுக்குத் தெரியாது தானே அங்கிள்.." என்றாள்.

"நோ சித்து.."

"சரி அங்கிள், போகலாமா?"

தலையசைத்து அவர் விமானத்திற்குள் ஏற, அளவில் சிறியதாக இருந்தாலும் அனைத்து வசதிகளும் கொண்ட எம்ப்ரேர் எக்சிகியூட்டிவ் ஜெட்டிற்குள் ஏறிய சிதாராவைத் தொடர்ந்து தானும் ஏறிய ஷிவா, அவளின் அருகில் அமர்ந்தான்.

அது ஆறு பயணிகள் மட்டுமே பயணிக்கும் அளவிற்கான ஜெட் விமானம்.

விமானத்தின் சுவற்றோடு இணைத்து மேஜையைப் போன்ற 'ட்ரே'-யும், அதன் இரு புறங்களிலும் தலா ஒரு இருக்கையும் அமைக்கப்பட்டிருந்தது.

அதன் மறுபுறம் சதுரமான மேஜையும், அதன் இரு பக்கங்களும் தலா இரு இருக்கைகள் என்று நான்கு இருக்கைகள் ஒரு புறத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

அதனில் இரு இருக்கைகள் கொண்ட இடத்தில் அவள் அமர, அவளுக்கு எதிராக அவன் அமர்வான் என்று அவள் எதிர்பார்த்தால், அவளை உரசியவண்ணம் அவன் நெருங்கி அமர்ந்ததும் விமானத்திற்குள் இருந்த குளிரையும் தாண்டி அவளுக்குக் குப்பென வியர்த்தது.

இதில் அவர்களுக்கு எதிரில் நின்று கொண்டிருந்த விமானி வேறு அவளைப் பார்த்து இளம் முறுவலிக்க, 'இந்தப் பைலட் அங்கிள் இதுவரை அப்பாக்கிட்ட எதுவும் சொல்லாமல் இருக்கிறதே பெருசு. இதுல இவர் இப்படி நெருங்கி உட்கார்ந்தா என்ன நினைப்பார்..' என்று மனம் திகைத்தது.

"கிளம்பலாம் அங்கிள்..."

சரி என்றவர் காக்பிட்டிற்கு [plane cockpit] செல்ல, அவளின் செவி ஓரம் குனிந்தான் சிவா.

"ஆக, நீ செய்யற எதுவுமே உங்க அப்பாவுக்குத் தெரியாமல் தான் செய்வியா?"

ஏற்கனவே அவனது நெருக்கத்தில் குலைந்திருந்தவளுக்கு, அவனின் சுவாசக் காற்றுச் செவிகளில் உரச, அதிகப்படியாய் குனிந்திருப்பவனின் கம்பீரமான தோற்றத்தில் அவளின் தேகம் மென்மேலும் நடுங்கத் துவங்கியது.

ஆயினும் மனம் தடுமாறி புரண்டாலும் அவனின் கூற்றில் வழக்கம் போல் சிலிர்த்துக் கொண்டாள் பெண்ணவள்.

"ஆமா, நீங்க நினைக்கிற மாதிரி நான் ரொம்பக் கெட்டப் பொண்ணுத்தான். நான் செய்யற எதுவுமே எங்க அப்பாவுக்கு மட்டுமல்ல, எங்க வீட்டுல யாருக்குமே தெரியாது. போதுமா?"

"உங்க அப்பாவுக்குத் தெரியாதான்னு மட்டும் தான் கேட்டேன், நீ கெட்டப் பொண்ணுன்னு நான் எப்ப சொன்னேன்?"

தேசமெல்லாம் பேசப்படும் என்கௌன்டர் ஸ்பஷலிஸ்ட்.

ஏறக்குறைய 83 குற்றவாளிகளைக் கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றிச் சுட்டுக் கொன்ற ஆக்ரோஷமான மனிதன். A charming personality but attained notability as an encounter specialist என்று பல முறை இவனைப் பற்றிய அறிமுகத்தைத் தொலைக்காட்சிகளில் இவள் பார்த்திருக்கின்றாள். இவனது நேர்காணலைக் காணும் பொழுது எல்லாம், இவன் தனது கூரிய பார்வையாலேயே எதிரே நின்றுக் கேள்விக் கேட்கும் நிருபர்களை நடுங்கச் செய்வதைக் கண்ணாரக் கண்டிருக்கின்றாள்.

அப்படிப்பட்டவன், வழக்கமாக ஒன்று இரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசி முடித்துவிடுபவன், அவளிடம் மட்டும் பதிலுக்குப் பதில் பேசிக் கொண்டிருப்பது ஏன் என்பதை அவளும் அக்கணம் உணரவில்லை.

குடும்பத்தினரிடம் கூட ஒரு அடி தூரத்தில் தள்ளி நின்றுப் பேசுபவன், பெற்ற அன்னையில் துவங்கி கூடப்பிறந்த தங்கை முதற்கொண்டு அவனைக் கண்டால் அஞ்சி நகர்ந்து நிற்கச் செய்பவன், இன்று இத்தனை அருகில் அவளது மேனியை உரசிக் கொண்டு ஏன் அமர்ந்திருக்கின்றான் என்று அவனும் அப்பொழுது உணரவில்லை.

“நீங்க நேரடியா சொல்லலை. ஆனால் ஆரம்பத்தில் இருந்தே அதே மாதிரி தான் பேசிட்டு இருக்கீங்க..”

“இல்லையே.. நீ அப்படி நினைச்சிக்கிட்டா நான் என்ன செய்றது.”

அவனது வார்த்தைகளில் கோபம் விழிகளிலும் ஊசலாட, ஏற்கனவே சிவந்த தேகத்தைக் கொண்டிருந்தவளின் வதனம் மேலும் செக்கச்சிவந்து போக, வெடுக்கென அவனைத் திரும்பிப் பார்த்தவளுக்கு அவனது கண்களில் விரிந்த தீட்சண்யமும், இதழ் கோடியில் ததும்பிய நகைப்பும், ஒரு வித பயமும் பரவசமும் கலந்த விநோத சிலிர்ப்பை உருவாக்கியது.

இவன் சிரிக்கிறானா? இல்லை என்னைக் கேவலமா நினைச்சிட்டு கிண்டல் பண்றானா?

மனம் அதன் போக்கில் எண்ண, பதில் எதுவும் கூறாது மறு புறம் திரும்பியவள் ஜன்னலின் வழியே வெளியே பார்க்க, அதற்குள் ஜெட் விமானம் கிளம்பியது.

நிமிடங்கள் கரைய மௌனியாய் அமர்ந்திருப்பவளைக் கண்டவன், "சரி இப்பவாவது சொல்லாம் இல்லையா? நாம இப்போ எங்கப் போறோம்?" என்றான்.

அப்பொழுதும் அவள் பதிலுரைத்தாள் இல்லை. அவனைத் திரும்பிப் பார்க்கவும் இல்லை.

அவளை நோக்கி மேலும் சாய்ந்தவன், அவளது தாடையை இறுக்கப் பற்றித் தன்னை நோக்கி அவளது முகத்தைத் திருப்பியவாறே, "ம்ப்ச், இப்போ எதுக்கு இவ்வளவு கோபம். நான் சும்மா கிண்டலுக்காகத் தான் பேசினேன்னு தெரியாதா?" என்றான் சற்றே அதட்டும் குரலில்.

"ம்ம்ம், நாம் எதுக்கு, என்ன விஷயமா போறோம். என்னைவிட உங்களுக்குத் தான் இந்தச் சூழ்நிலையின் விகாரம் புரியும்.. அதைவிடுத்து இப்படி என்னைக் கிண்டல் செய்துட்டே வந்தால் எப்படி?"

"நீ எனக்குச் சொல்றியா? நான் தேடிட்டு இருக்கிறது நான் கல்யாணம் செய்துக்கப் போற என் அத்தை பொண்ணை. உன்னை விட அவள் மேல் எனக்கு அக்கறை இருக்கு..”

அவ்வளவு தான்! அவளே எதிர்பாராதவண்ணம் அவனது வார்த்தைகள் சரியாகக் குறிபார்த்து சிதாராவின் இதயத்தைத் தாக்கியது.

எங்குக் கண்ணீர் ததும்பிவிடுமோ என்று அஞ்சியவள் தனது வலியை மறைக்கும் விதமாய் மீண்டும் விமானத்தின் ஜன்னல் புறம் திரும்ப, அவளின் முகம் சட்டென்று வாடியதில் ஷிவாவின் கண்கள் இடுங்கியது.

அதற்கு மேல் அவளைச் சீண்டாது வந்தவனின் உள்ளத்திலும், ‘அவள் கூறுவதிலும் உண்மை இருக்கின்றதே.. அவளைச் சந்தித்த நாளில் இருந்தே இப்படித்தான் வார்த்தைக்கு வார்த்தை அவளிடம் வாதாடிக் கொண்டே வருகின்றேனே..’ என்றே தோன்ற, அவளின் நீண்ட அமைதி அவனை என்னவோ செய்தது.

தன் நிலை உணர்ந்தவன் சூழ்நிலையைச் சமன்படுத்தும் விதமாக, "சரி நான் கிண்டல் பண்ணலை, சொல்லு. எங்க போறோம்?" என்றான் சமாதானமாக.

அவனது அமைதியான சாரீரத்தில் அவளும் சற்றே இறங்கி வந்தாள்.

"இங்க இருந்து 2 ஹவர்ஸில் ஒரு ஃபாரஸ்ட் இருக்கு.. அங்கத்தான் போறோம்..”

“என்னது? ஃபாரஸ்டுக்கா? அங்கேயா வருண் இருக்கான்?”

“இல்லை.. ஆனால் அங்க துர்கா இருக்கிறதுக்கு வாய்ப்புகள் இருக்கு..”

“அவள் இருக்கும் இடம் உனக்குத் தெரியுமா சிதாரா? தெரிஞ்சும் இது வரை சொல்லாமல் நீ என்கிட்ட மறைச்சிட்டியா?”

“ம்ப்ச். இப்ப எதுக்குத் திரும்பவும் இவ்வளவு கோபப்படுறீங்க? எனக்கு உண்மையில் துர்கா இருக்கும் இடம் தெரியாது. தெரிஞ்சிருந்தால் இப்படி அமைதியா பேசிட்டு இருப்பேன்னா? நான் சொன்னேன் இல்லையா, ரெண்டு முறை வருண் தங்கி இருந்த வீட்டில் இருந்து அவருடைய ஹெலிகாப்டர் போனதுன்னு. அதைப் பற்றி நான் பைலட் அங்கிளிடம் சொல்லி விசாரிக்கச் சொன்னேன். அவர் யார்க்கிட்ட விசாரிச்சாரோ இல்லை பேசினாரோ, எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அந்த இடத்தில் இருந்து ஹெலிகாப்டர்ஸ் அடிக்கடி பறந்ததாகவும், அவை ஒரே இடத்திற்குச் சென்றதாகவும் சொன்னார். ஆனால் அவரால் துல்லியமா எதையும் தெரிஞ்சிக்க முடியலை. ஸோ, என்னையும் அந்த இடத்துக்குக் கூட்டிட்டுப் போக முடியுமான்னு கேட்டேன். அவர் முதலில் சம்மதிக்கலை. பிறகு நான் ரொம்ப வற்புறுத்தவும் சரின்னு சொல்லிட்டார். அதனால் இப்போ அங்க தான் நாம போகப் போறோம்.”

“எப்படி அவரால் ட்ராக் பண்ண முடிஞ்சது?”

“சார். எங்க பைலட் அங்கிள் ஏறக்குறைய இருபத்தி ஐந்து வருஷமா இந்த ஃபீல்டில் இருக்கார். அவருக்கு விமானப் போக்குவரத்து ஆணையத்தில் நிறையப் பேருடன் பழக்கம் இருக்கு. அதை வச்சு அவர் கண்டுப்பிடிச்சிருக்கார்.”

"இது வரை நான் அறியாத புது விஷயங்களை எல்லாம் நீங்க சொல்றீங்க?"

"இது தான் அரசியலுக்கும், அரசியலைச் சாராத மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் சார்."

“அது சரி. இதை ஏன் மதியமே நீ என்கிட்ட சொல்லலை?”

“மதியம் வரைக்கும் எனக்குமே இந்த விஷயம் தெரியாது. நான் உங்கக்கிட்ட பேசிட்டு ஃபோனை வைச்சதுக்குப் பிறகு தான் அங்கிள் எனக்குக் கால் பண்ணி சொன்னார். இல்லைன்னா இப்போ நாம ரெண்டு பேரும் வருண் தங்கி இருக்கிற வீட்டுக்கு தான் போயிருப்போம்.”

“ஸ்டில் ஐ ஆம் நாட் க்ளியர் சிதாரா..”

“உங்க குழப்பத்துக்குக் காரணம் எனக்குப் புரியுது சார். ஒரு வேளை இன்னைக்கு வருண் துர்காவைப் பார்க்க கிளம்பினாருன்னா, அங்க நாம் இருந்தால் அவரைப் பிடிக்க வசதியா இருந்திருக்கும்முன்னு நீங்க நினைக்கிறீங்க.. பட் என் உள் மனசுல என்னவோ நாம இப்போ போயிட்டு இருக்கிற பாதை தான் சரியான பாதைன்னு தோணுது. ஃபர்ஸ்ட் இங்க ட்ரை பண்ணுவோம். இல்லைன்னா வருண் இருக்கிற இடத்துக்கே போவோம்.”

“சரி. அந்த ஃபாரஸ்டுடைய பேர் என்ன?”

“கட்சிரோலி ஃபாரஸ்ட்..”

“சிதாரா..”

ஷிவ நந்தனின் குரலில் அதிர்ச்சியும் திகைப்பும் ஒருங்கே கலந்திருந்தது அப்பட்டமாய்த் தெரிந்தது.

“யெஸ் சார். அதே ஃபாரஸ்ட் தான். அந்த ஃபாரஸ்டுக்குள்ள முன்ன எல்லாம் மக்கள் போயிட்டு வருவாங்க. ஆனால் கொஞ்ச வருஷமா அங்க புலிகள் நடமாட்டம் இருக்குன்னு மக்கள் அந்தக் ஃபாரஸ்டுக்குள்ள போறதில்லைன்னு நீங்களும் கேள்விப்பட்டிருப்பீங்க. அந்த ஃபாரஸ்டுக்குள்ள தான் துர்காவை வருண் கடத்தி வச்சிருக்கணும்னு எனக்குத் தோணுச்சு, ஸோ இப்போ அங்க தான் நாம போறோம்."

ஏனோ தாங்கள் போவது சரியான இடத்திற்குத் தானா, அங்குத் தான் வருண் துர்காவை அடைத்து வைத்திருக்கின்றானா என்ற பெருஞ்சந்தேகம் அக்கணம் கூட ஷிவாவை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது..

'இவள் சின்னப் பெண் போல் பேசுகிறாள். அவ்வளவு எளிதாக இவள் கூறும் இடத்தை இந்த விமானியால் கண்டுப்பிடித்திருக்க முடியுமா? அப்படிக் கண்டுப்பிடித்து விடக் கூடிய இடத்தில் வருண் துர்காவை வைத்திருப்பானா? அப்படி என்றால் இந்நேரம் நானோ அல்லது எனது டிப்பார்ட்மெண்டைச் சேர்ந்த எவரோ கண்டுப்பிடித்திருப்போமே. இவளே கூறுவது போல் இது தான் காவல்துறைக்கும், அரசியல்வாதிகளின் அனுகூலம் பெற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசமோ?’

புத்தி சிந்தித்தாலும் அதனை வெளிப்படுத்தாது மேற்கொண்டு எதுவும் பேசாது அவன் அமர்ந்திருக்க, விமானி உட்பட அனைவரும் எதிர்பாராவண்ணம், விமானம் கிளம்பி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்து வானிலையில் பெரும் மாற்றம் தென்பட ஆரம்பித்தது.

அவர்கள் ஜெட் விமானத்தில் ஏறும் வரை வானிலை நன்றாகத் தான் இருந்தது.

தாங்கள் செல்லப்போகும் இடம் வரைக்கும் வானிலையில் எதுவும் பெரிய மாற்றம் இல்லை என்றும், பாதுகாப்பாகச் செல்லும் வகையில் தான் அனைத்துமே இருக்கின்றது என்பதைச் சரி பார்த்த பின்னர்த் தான் விமானியும் இந்தப் பயணத்தினை மேற்கொள்ளச் சம்மதித்தார்.

அதே போல் விமானங்களின் கட்டுப்பாட்டு அறையினரும் அவர்களின் பயணத்திற்குப் பச்சைக்கொடி காட்டிவிட, அதற்குப் பிறகு தான் விமானம் ஆகாயத்தை நோக்கிக் கிளம்பியது.

ஆயினும் திடீரென்று மேலும் கீழுமாய்ச் சடாரென்று ஏறி, பிறகு கீழிறங்கிய விமானத்தைக் கண்டு சந்தேகப் பார்வையுடன் ஷிவா சிதாராவைத் திரும்பி என்ன என்பது போல் பார்க்க, "நீங்க இதுக்கு முன்ன ஃப்ளேனில் எல்லாம் ட்ராவல் செய்ததில்லையா? டர்பியுலென்ஸ் [Turbulence ] வந்தால் இப்படித் தான் ஆகும்." என்றாள் அவனைச் சீண்டும் விதமாய்ப் புன்சிரிப்புடன்.

ஆயினும் ஷிவாவின் முகத்தில் தெளிவுப் பிறக்கவில்லை.

காரணம் இது ஒன்றும் அவன் விமானத்தில் பயணிப்பது முதல் தடவை அல்லவே! ஏகப்பட்ட முறைகள் அவன் விமானத்தில் பயணித்திருக்கின்றான். அந்நேரத்தில் எல்லாம் சில சமயங்களில் ஆகாயத்தில் ஏற்படும் மாற்றங்களையும், காற்று கொந்தளிப்புகளையும் பார்த்திருக்கின்றானே.

ஆனால் இது வழக்கமானது அல்ல!!

இருக்கையில் இருந்து எழுந்தவன் விமானியின் அறைக்குள் நுழைய, அவரும் இது சாதாரணக் காற்றுக்கொந்தளிப்பு தான் என்று கூறவும் மீண்டும் தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தான்.

"அவரும் டர்பியுலன்ஸுன்னு தான் சொல்றாரு. எதுக்கும் சீட் பெல்ட் போட்டுக்கோ.."

கூறியவனாய் அவனும் சீட் பெல்ட் போட,

“அதான் சொன்னேனே.. சின்னப் புள்ள மாதிரி நீங்க தான் பயந்து போய்க் காக்பிட்டுக்குள்ள ஓடுனீங்க..” என்று கிண்டலாய் கூறியவள் அவனது முறைப்பைத் தாங்காதவளாய் சீட் பெல்ட் போட, சில நிமிடங்களில் நின்றுவிடும் என்று அவர்கள் எதிர்பார்த்த டர்பியுலன்ஸ் நிற்காது, மாறாக மிகவும் அதிகரிக்கத் துவங்கியது.

இப்பொழுது திகைப்பது சிதாராவின் முறையானது.

ஒரு விதக் கலக்கத்துடன் ஷிவாவின் முகத்தைத் திரும்பிப் பார்க்க,

"இது உங்க சொந்த ஜெட் தான? இதுக்கு முன்னாடி இதுல ட்ரேவல் பண்ணிருக்கத் தான? அப்படின்னா டர்பியுலன்ஸைப் பார்த்ததே இல்லையா? இதுல சின்னப் புள்ளைன்னு என்னை நக்கல் பண்ற.." என்றான்.

"இப்போ நீங்க தான் என்னைக் கிண்டல் பண்றீங்க.."

ஏறக்குறைய அழுதுவிடும் குரலில் கூறியவள் வாழ்நாளில் முதன் முறையாக இது வரை காணாத வகையில் கொடுமையான காற்றுக் கொந்தளிப்பைக் கண்டதில் அரண்டு போய்க் கண்களை இறுக்க மூடிக்கொள்ள, ஆயினும் அவளையும் அறியாது அவளது வலதுக் கை ஷிவாவின் இடது கரத்தை இறுக்கப் பற்றிக் கொண்டது.

அவளின் செய்கையில் திரும்பிப் பார்த்தவன் முறுவலித்தவாறே, "பேசுறது தான் என்னவோ ஜான்ஸி இராணி இலட்சுமிபாய் மாதிரி.." என்றான் நக்கல் வழிய.

அப்பொழுதும் கண்களைத் திறக்காது தலையை நன்றாக இருக்கையில் அழுத்தி சாய்த்தவாறே, "ஆமா நீங்க வீரப்பாண்டிய கட்டப்பொம்மன், அதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிப் பார்த்தேனே. லேசா ஜெட் ஆட ஆரம்பிச்சதுமே ஓடிப் போய்ப் பைலட் அங்கிளிடம் விசாரிச்சுட்டு வந்தீங்களே.." என்றாள்.

நேரம் கடந்தது, ஆயினும் வானிலையில் நேர்மறையான மாற்றங்கள் எதுவுமே ஏற்படவில்லை.

மாறாகச் சூழ்நிலையின் விகாரம் பெருமளவு அதிகரிக்க, ஷிவாவின் உள் மனசு எதுவோ சரியில்லை என்பதை உணர்த்தியது.

தன் கையை இறுக்கப் பற்றியவளாய் கண்களை மூடி அமர்ந்திருந்தவளை ஒரு முறைத் திரும்பிப் பார்த்தவன் மெல்ல அவளது கரத்தை தன் கரத்தில் இருந்து பிரித்து எடுத்தவனாய் மீண்டும் எழுந்தவன் விமானியின் அறைக்குள் நுழைய, அங்குத் தனக்கு முன் இருக்கும், விமானத்தைக் கட்டுப்படுத்தும் பட்டன்களையும் கைப்பிடிகளையும் கொண்ட மின் சாதனத்தை இயக்கியவாறே அமர்ந்திருந்த விமானியின் கலங்கிய முகம் ஷிவாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

"இஸ் எவ்ரித்திங் ஆல்ரைட்?"

கேட்டவனைத் திரும்பியும் பாராது அருகில் இருக்கையில் அமருமாறு கூறியவர், ரேடியாவைக் கையில் எடுத்து "Mayday! Mayday! Mayday!" என்ற கூற, நிலைமையின் விபரீதம் தெள்ளத்தெளிவாகப் புரிந்து போனது.

இது சாதாரணமான நிகழ்வு இல்லை. ஏதோ பெரிய விபரீதம் நடக்க இருக்கின்றது!!!

புரிந்துக் கொண்டவனாக எழப் போனவனைக் கையை நீட்டித் தடுத்த விமானி, ரேடியோவில், "Experiencing heavy turbulence. Incapacitation. We are three souls on the board." என்று சிறிது சத்தமாகக் கூற, ஆனால் இருவரும் பெரும் அதிர்ச்சியடையும் அளவிற்கு, மறுமுனையில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

"பைலட்.."

திகைப்பு கலந்தக் குரலில் ஷிவா அழைக்க, "கண்ட்ரோல் ரூமுக்கும் நமக்கும் இடையேயான தொடர்பு கட்டாகிடுச்சு போல இருக்கு மிஸ்டர் ஷிவ நந்தன்.." என்று மேலும் திகிலை கிளப்பினார் விமானி.

"உங்களால் கீழே ப்ளேனை இறக்க முடியுமா?"

"அதுக்குத் தான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன்."

கூறியவர் விமானத்தைக் கீழிறக்க முயற்சிக்க, இரு ஆண்களுமே பெரும் அதிர்ச்சி அடையும் அளவிற்குப் பரிதாபமாய் விமானம் தன் கட்டுபாட்டை இழக்க ஆரம்பித்தது.

பின்னால் தனியாக அமர்ந்திருக்கும் சிதாராவின் நிலையை நினைத்தவன் விருட்டென்று எழுந்து காக்பிட்டை விட்டு வெளியே வர, அவனது அரவத்தில் கண் திறந்தவளின் விழிகளில் நீர் தட்டி இருந்தது.

விடுவிடுவென்று நடந்து வந்தவன் அவளுக்கு அருகில் வந்து அமர்ந்து அவளது கையைத் தான் பற்றிக் கொள்ள, "என்ன ஆச்சு?" என்றாள் மருண்ட விழிகளுடன் வெளிறிப் போன முகமாய்.

"ஒண்ணுமில்லை, பயப்படாத. He is going to land.."

அதற்கு மேல் அவனிடம் எதுவும் கேட்காது, தன்னுணர்வே இல்லாது அவனது கரத்தை எடுத்து அவனது விரல்களுடன் தன் விரல்களைக் கோர்த்துக் கொண்டவளாய் தன் மடியில் வைத்துக் கொண்டவள் தனக்குப் பிரியமான கடவுள்களை வேண்டத் துவங்க, அங்கும் இங்குமாக அல்லாடத் துவங்கிய அந்தச் சிறிய ஜெட் விமானத்தின் தலைவிதி சில நிமிடங்களில் முடிந்து போனது.

அது முடிந்த இடம் கட்சிரோலிக் காடு!

அரிமாக்களின் வேட்டை!

தொடரும்.
 
Last edited:

JLine

Moderator
Staff member
ஃப்ரெண்ட்ஸ்,
அரிமாக்களின் வேட்டை, ஏறக்குறைய 46 + அத்தியாயங்கள் கொண்ட கதையா வந்திருக்கு. கண்டிப்பாப் புத்தகமா போட்டால் ரெண்டு volumes வருமுன்னு நினைக்கிறேன். இதற்கு மேல் பெரிய அத்தியாயமா என்னால் கொடுக்க இயலாது. அப்புறம் one of the largest book மாதிரி ஆகிடும் :D
I hope everyone understands. And also there are several characters in this story, including the Mirza brothers. Hence it will be big for sure. We shall wait for Shiva and Varun encounter, which will happen soon, but not now.
Thanks

JB
 
Last edited:

Vidhushini

New member
துர்கா-வருண், ஷிவநந்தன்-சிதாரா ஜோடிகளின் (மனதில்) வாழ்க்கையில் ஏற்படும் பெரிய மாற்றங்களுக்கு கட்சிரோலி காடு சாட்சியாய் ஆகுமோ?

நிதர்சனம் உறைக்கும்போது பெண்கள் தங்களின் மனமாற்றத்தை வலியுடன் உணர்வார்களோ?....

Waiting for the next epi @JB sis🔥
 

saru

Member
Nice update
Sithara oh god
Durga edirla abathu
Ipo shiv and chithi
Varu enga
Ellarum ore idathila ana enna madri nizhaila nu trla
 
Omg… Another jodi has also landed in Gadchiroli forest…
🫣🫣🫣

Then, It should be declared as the memorial of love birds. ❣️❣️❣️😎😎😎

Seems Sithu loves Shivu…
Adhan My to be wife nu sollavum she got tears 🤣🤣🤣

Will Varun save Durga? Or Sithu and Shiv save her instead???
 

Wasee

New member
Shock mela shock kudukureenga.

Durga puli kitta paati kitta.

Shiv and sitara pona jet margaya va?

Puli kitta irunthu Durga va varun kapathum pothu avanoda love aa unarvana?

Adutha ud kaka eager aa waiting
 

Lucky Chittu

New member
Shiva Kum sithara Kum ana epi ya irundhuchu. Ivanga rendu perum purithalukkana epi but what about Durga ? Varun? Waiting for the next epi mam.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top