JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakalin Vettai - Episode 2

JB

Administrator
Staff member
அரிமாக்களின் வேட்டை!

அத்தியாயம் 2

மகாராஷ்டிரா மாநிலத்தின் காவல்துறை தலைமை இயக்குனர் [DGP] ஆகச் சென்ற வருடம் பணியில் அமர்த்தப்பட்டிருந்த 58 வயதான நீரவ் பிரகாஷ், 1988 கேடர் [cadre] ஐபிஎஸ் அதிகாரி.

மும்பை காவல்துறையில் இணை போலீஸ் கமிஷனராக (சட்டம் மற்றும் ஒழுங்கு துறை) பணியாற்றிய நீரவ் பிரகாஷ் ஐபிஎஸ், டி.ஜி.பி யாகப் பொறுப்பேற்கும் முன்னர் ஊழல் தடுப்பு பணியகத்தின் (ACP) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அவரது தந்தை மனிக்கர் பிரகாஷும் ஐபிஎஸ் அதிகாரியாக நாக்பூரில் போலீஸ் கமிஷனராகப் பணிபுரிந்து பின்னர்ச் சிபிஐ அதிகாரியாகப் பணி மாற்றம் செய்யுப்பட்டு ஓய்வு பெற்றவர்.

விவரம் தெரிந்த நாளில் இருந்தே காவல் அதிகரியாகப் பணி புரிவதே கனவும் இலட்சியமும் என்று வாழ்ந்து வந்திருந்த நீரவ் பிரகாஷிற்கு, காவல்துறையில் சேர்ந்த அன்றே புரிந்து போனது கனவிற்கும் நிஜத்திற்குமான வித்தியாசம் பல ஆயிரம் மைல்கள் தூரம் என்று.

நியாயம் தர்மம் நேர்மை என்ற வார்த்தைகளுக்கு எதிர்மறையான எத்தனை வார்த்தைகள் இருக்கின்றதோ அது அனைத்தையும் உடல் பொருள் ஆவி என்று கொண்டிருக்கும் மனிதர்கள் காவல்துறையிலும் நிறைய இருக்கின்றனர் என்பதைக் கண்கூடாகக் கண்ட அன்று அதிர்ந்து போனார்.

இது பற்றாது என்று அரசியல், கார்ப்பரேட் உலகம், வணிகங்கள், சினிமா தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள், சட்டத்தையும் நீதியையும் காக்க வேண்டிய நீதிமன்றங்கள் என்று அனைத்திலும் ஊழல்.

ஆக, நான் ஆற்ற வேண்டிய பணிகளை நேர்மையாகச் செய்ய முடியாதா என்று கவலையுடன் இருந்தவரை ஊக்கப்படுத்தி உருவாக்கியது அவரது தந்தை தான்.

காலப்போக்கில் 'சட்டத்தை மதிக்காத எவனுக்கும் இவர் அஞ்சமாட்டார்' என்ற பெயரை எடுத்தவர் இறுதியாக ஊழல் தடுப்பு பணியகத்தின் ஏசிபியாகப் பணிப்புரிந்த காலத்தில் சந்தித்த நபர்கள் தான் வருண் தேஸாயும், அவனுக்குப் பக்கபலமாக இருக்கும் மத்திய அமைச்சர் ஆர்ய விக்னேஷும்.

*********************

வருண் தேஸாய் - CEO of Desai Group of Companies

[தேஸாய் க்ரூப் ஆஃப் கம்பெனிஸின் சி.இ.ஒ]

'The most efficient and brilliant young business magnet' என்று மத்திய அமைச்சர் பார்த்திபனால் புகழாரம் சூடப்பட்டவன்.

அமெரிக்காவில் படிப்பு முடிந்தக் கையோடு தன் தேசத்திற்குத் திரும்பி வந்திருந்த வருண் தேஸாயின் பெயர் அதிவிரைவில் தொழில் வட்டாரங்களில் பரவ ஆரம்பித்தது.

அந்த இளம் வயதிலேயே தொழில் உலகத்தில் டைக்கூன் என்ற பெயரால் அழைக்கப்பட ஆரம்பித்திருந்தவனின் கீழ் பற்பல துணை நிறுவனங்களும், சுயாதீனமான வணிகங்களும் உருவாக ஆரம்பித்தன.

அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

தேஸாய் ஹோட்டல் மேலாண்மை மற்றும் மேம்பாடு

தேஸாய் ஃபைனான்சியல்ஸ்

தேஸாய் ஹோல்டிங்ஸ்

தேஸாய் தயாரிப்புகள் மற்றும் ஏற்றுமதி

தேஸாய் இண்டஸ்ட்ரீஸ்

தேஸாய் ரியல் எஸ்டேட் ஹோல்டிங்

தேஸாய் மோட்டார்

இது போன்று இன்னும் பல நிறுவனங்கள்.

ஏற்கனவே கோடிகளை நிகர மதிப்பாகக் கொண்டிருந்த தேஸாய் க்ரூப் ஆஃப் கம்பெனிஸ், வருண் தேஸாயின் பிரவேசத்திற்குப் பிறகு ஐம்பதாயிரம் கோடிகளாக உயர்ந்தது.

அவனது புகழ் தேசம் முழுவதிலும் 'யங் பிஸ்னஸ் மேக்னெட் & பவர்ஃபுல் பிஸ்னஸ் டைக்கூன் ' என்றளவில் பரவிய நேரம் அவனது ஆதிக்கம் அரசியலிற்குள்ளும் நுழைந்தது.

தொழிலில் மட்டுமல்ல அரசியல்வட்டாரத்திலும் சாணக்கியன் என்ற நாமம் சூட்டப்பட்டவனின் பெயர் இருள் உலகிலும் அதிகளவில் புழங்க துவங்கியதுமே காவல்துறையினரின் சந்தேகக் கண்கள் அவன் மீது நகர்ந்தன.

**********

ஆர்ய விக்னேஷ்.

பிறந்த சில வருடங்களிலேயே பெற்றோர் இருவரையும் இழந்தவன்.

தெருக்களின் ஓரத்தையே படுக்கையறையாகக் கொண்டிருந்தவன். பசியின் கொடுமையுடனே வாழ்க்கை நடத்தி இருந்தவன்.

அனாதை சிறுவனாக இந்த உலகம் அவனுக்குக் கொடுத்த வலிகளை மறக்க இளம் வயதிலேயே போதை பழக்கத்துக்கு அடிமையானவனை வெளியே வரச் செய்தது, அவன் சந்தித்த ஒரே ஒரு தருணம்.

சோவியத் சர்வாதிகாரி என்று அழைக்கப்படும் ஜோசப் ஸ்டாலினைப் பற்றிய புத்தகம் அவன் கைக்குக் கிடைத்த கணம் தான் அது.

தெருக்களின் மூலை முடுக்குகளில் இரவு நேரங்களைக் கழித்திருந்தவன் ஒரு நள்ளிரவில் உறக்கத்திற்குப் பழைய புத்தகக்கடை ஒன்றின் தாழ்வாரத்தை அண்டினான்.

அவ்விரவே அவனது வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட இரவு!

ஏறக்குறைய ஆர்ய விக்னேஷின் பால்ய வயது வாழ்க்கையைப் போன்றே இருந்தது, அவன் புத்தகத்தில் படித்த ஜோசப் ஸ்டாலினின் வாழ்க்கையும்.

ஜோசப் ஸ்டாலினின் குழந்தைப் பருவம் மிகவும் கடினமானது. அவரது தந்தை அவரை உடல்ரீதியாகத் துன்புறுத்தினார். ஸ்டாலினுக்கு ஏழு வயதாகும்போது சின்னம்மை நோய் தாக்கி முகம் முழுவதும் தழும்புகள் ஏற்பட்டது. ஆகையால் அவர் மற்ற குழந்தைகளால் அவமானப்படுத்தப்பட்டார், கொடுமைப்படுத்தப்பட்டார்.

ஆனால் அதையே அவர் ஊக்குவிக்கும் சக்தியாக எடுத்துக் கொண்டார் என்றும் சொல்லலாம்.

கடுமையான வறுமையில் பிறந்த அவர், கம்யூனிஸ்ட் கட்சியில் உழைத்துப் பொதுச் செயலாளர் போன்ற உயர்ந்த பதவிக்குச் சென்றார். இறுதியில் விளாடிமிர் லெனின் மறைவுக்குப் பிறகு சோவியத் யூனியனின் தலைவராகத் தன்னை அறிவித்துக் கொண்டார்.

உலகம் முழுவதும் எந்த அறிமுகமும் தேவையில்லாத ஒரு மனிதர் இவர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நல்ல காரணங்களுக்காக அல்ல. வரலாற்றில் மிக மோசமான மனிதர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

ஒரு வேளை ஜோசப் ஸ்டாலின் இல்லாமல் இருந்திருந்தால் உலக வரலாறு வேறு மாதிரி இருந்திருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

அப்படிப்பட்டவரின் 'அதிகாரத்திற்கான பாதை' ('The Road to Power' Book by Joseph Stalin) என்ற புத்தகம் விதிவழியோ என்னவோ ஆர்ய விக்னேஷிற்கு அவனது பதினெட்டாம் வயதில் அந்தப் பழைய புத்தக்கடையின் மூலமாகக் கிடைத்தது.

அதனைப் படித்தவனுக்கு ஸ்டாலினில் மீது ஈர்ப்பு ஏற்பட, தேடித்தேடி அவரைப்பற்றிய பல புத்தகங்களை வாங்கியவன் அவற்றின் மூலமாகத் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டான், ஒரு சிற்பி போல.

அரசியலில் அடிமட்ட தொண்டனாகக் காலடி எடுத்து வைத்தான்.

படிப்படியாக உயர்ந்தவன் பல பொறுப்புகளுக்குப் பதவி வகிக்கும் அளவிற்கு வளர்ந்தான். தலைமைக்கு விசுவாசம், கட்சிக்கு உண்மை என்று தன்னைக் காட்டிக்கொண்டான். ஆட்சி அதிகாரத்திலும் அவன் வகிக்காத பதவி இல்லை என்று கூறுமளவிற்குத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டான்.

இறுதியில் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என்று உயர்ந்து நின்றான்.

வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்ற வெறியும் சர்வாதிகாரியாக அரசியலிலும் ஆட்சிப்புரிய வேண்டும் என்ற வன்மமும், அவனது உடல் பொருள் ஆவி அனைத்திலுமே தைப்பான் பாம்பினை ஒத்த நஞ்சைத் தானாகக் கலந்து கொள்ளச் செய்தது.

இன்று வருண் தேஸாயின் பாதுகாப்பான அரணுக்குள் ஏறக்குறைய ஒரு அரசியல் அரக்கனாகவே உருப்பெற்றிருக்கின்றான்.

அவன் மேலும் காவல்துறையின் கண்கள் பதிந்தன.

*********************************************

ஆக வெகு சாமர்த்தியமாய் நேர்மை நாணயம் என்ற போர்வையைத் தன் மேல் போர்த்திக்கொண்டு அமைதியாகத் தந்தையின் வணிகங்களைக் கவனித்துக் கொண்டு வந்த வருண் தேஸாயை எப்பக்கமும் இருந்தும் அண்ட இயலவில்லை.

காரணம் அவன் அப்பழுக்கற்றவன் என்று அனைவருமே எண்ணும் அளவிற்குப் புத்திசாலித்தனமாகத் தன் காய்களை நகர்த்திக் கொண்டு வந்திருந்தான், அப்பொழுது வெறும் இருபத்தி நான்கு வயதே ஆன அந்த இளைஞன்.

ஆனால் எப்படி ஒருவனின் பெயர் அரசியல், சினிமா வட்டாரம், உலகளாவிய வணிகம், பொருளாதாரம், பங்குச் சந்தை, தளவாடங்கள் என்று அனைத்து துறைகளிலும் இவ்வளவு விரைவில் பிரபலமாக முடியும்.

அப்பொழுது தான் ஆர்ய விக்னேஷ் மற்றும் வருண் தேஸாயின் சதுரங்க ஆட்டங்கள் நீரவ் பிரகாஷின் செவிகளில் அடிக்கடி விழ ஆரம்பித்தன.

இருவரையும் தீவிரமாகக் கண்காணித்து வரத் துவங்கியவருக்கு, அவர்களை நெருங்க எத்தனிக்கும் ஒவ்வொரு முறையும் எங்கிருந்தாவது அடி விழும்.

குறிப்பாக மத்திய அமைச்சகத்தில் இருந்து வரும் பொழுது வருண் தேஸாயைப் பற்றி அறியும் ஆர்வம் அவருக்கு வெகுவாய் அதிகமாகும்.

அக்கணம் தான் அவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் டி.ஜி.பியாகப் பணியில் அமர்த்தப்பட்டார்.

உற்பத்தித்திறன், வேலைவாய்ப்பு மற்றும் நிதிப் பாதுகாப்பு போன்ற இந்தியாவின் பொருளாதாரத்திற்கு மிகவும் குறிப்பிடத்தக்க சில கூறுகளையும், பல கோடிகளையும் வழங்கத் துவங்கியிருந்த தேஸாய் க்ரூப் ஆஃப் கம்பெனிஸ், நாட்டின் சந்தையில் பெரும் பங்களிப்பு வகிக்கத் துவங்கி இருந்ததில் ஒருவராலும் எட்டமுடியாத உயரத்திற்கு வளர்ந்திருந்தான் வருண் தேஸாய்.

அந்நேரம் தான் விதியே அவனது பாதையை மாற்ற விரும்பியது போல் சென்னையில் பணிபுரிந்து வந்த எஸ்.எஸ்.பி ஷிவ நந்தன் ஐ.பி.எஸ் மும்பைக்கு மாற்றம் கேட்டு நீரவ் பிரகாஷை தனிப்பட்ட முறையில் சந்தித்தான்.

இதோ இப்பொழுது தன் பணியையும் துவங்கிவிட்டான்.

**********************************************

காவல்துறை தலைமையகம்

மும்பாய்

ஆரஞ்சு நிற ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் [Orange Force Gurkha Xtreme] எஸ்.யு.வி அதிரடியாக அலுவலக வளாகத்திற்குள் நுழைந்த வேகத்தில், 121 வருடங்களுக்கு முன் ஆங்கிலோ-காதிக் பாணியில் கட்டப்பட்ட அந்தப் பாரம்பரிய கட்டிடமே அதிர்வது போன்று இருந்ததில் சுற்றிலும் நின்றிருந்த மக்களின் பார்வை சட்டென்று நகர்ந்தது, ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீமில் இருந்து கீழே இறங்கிய அந்த இளைஞனை நோக்கி.

"குட் மார்னிங் சார்.."

"வெல்கம் சார்.."

"உங்களைப் பார்த்ததில் ரொம்பச் சந்தோஷம் சார்.."

பல குரல்கள் அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒலிக்க, பளீர் வெண்மை நிற முழுக்கை ஷர்ட்டும், காக்கி நிற பேண்டும், அதற்கு ஏற்றார் போல் ப்ரவுன் நிற ஷூவும் அணிந்தவனாய் அலுவலகப் படிகளில் விடுவிடுவென்று ஏறியவன், தன்னை வரவேற்ற ஒவ்வொருத்தருக்கும் சிறிய தலையசைப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்துக் கொண்டு முன்னேறினான், டி.ஜி.பி நீரவ் பிரகாஷ் இருக்கும் அறையை நோக்கி.

"யெஸ் கம்மின்.."

அவரது குரலை கேட்டதும் அறைக்குள் நுழைந்தவனைக் கண்டு முறுவலித்தவர் தன் எதிரில் இருக்கும் இருக்கையில் அமருமாறு சைகை செய்தவாறே, "எப்படிப் போச்சு மாநாடு எல்லாம் மிஸ்டர் ஷிவ நந்தன்?" என்றார்.

"சார்.."

அவனது பார்வைக் கூறும் அர்த்தத்தைப் புரிந்துக் கொண்டவராய் மெல்லிதாகப் புன்னகைத்தவர், "ஒகே இனி மிஸ்டர் போடவில்லை. வெறும் ஷிவான்னு கூப்பிடுறேன் போதுமா?" என்றார்.

பதிலெதுவும் கூறாது இறுகிய முகமாய் விரைத்த தோள்களுடன் நின்றவன் புன்னகை என்பதையே மறந்தவன் போல், "யாரை எதிர்பார்த்துப் போனேனோ அவங்க எல்லாரையும் மீட் பண்ண முடிஞ்சது சார், குறிப்பா வருண் தேஸாய் அன்ட் ஆரிய விக்னேஷ்." என்றான் தன் காரியமே கண்ணாய்.

மனதிற்குள் அவனது உடல்மொழியை வைத்தே அவனது குணாதிசயத்தையும், நேரடியாக விஷயத்திற்கு வந்ததில் அவனது அரங்கத்தனத்தையும் புரிந்து கொண்டார் நீரவ் பிரகாஷ்.

"யெஸ், நானும் கேள்விப்பட்டேன். அவங்க ரெண்டு பேரும் அவர்களா வந்து உங்கக்கிட்ட பேசினாங்கன்னு.."

"யெஸ் சார். அதில் இருந்தே தெரிஞ்சது, நான் இங்க டிரான்ஸ்ஃபர் வாங்கி வந்திருப்பதன் காரணத்தை அவங்க யூகிச்சிருக்காங்கன்னு."

'கண்டிப்பா.. நாம அவங்களைக் கவனிக்கிறதைவிட நம்மை அதிகளவு கண்காணிச்சிட்டு வரவங்க தானே அவங்க. அதனால் தான் இவ்வளவு நாளா அவர்களைப் பிடிக்க நான் போட்டத் திட்டமெல்லாம் தோல்வியில் முடிஞ்சு போனது. நான் எந்த விஷயத்துக்காக அவங்களை நெருங்குறேனோ அதுக்கு ஏத்தமாதிரி சட்டத்துடைய உதவியோட அதில் இருந்து தப்புவதற்காக அவங்க தயாரா இருந்தாங்களே."

"Dumb criminals break laws. Smart criminals make laws sir." [முட்டாள் குற்றவாளிகள் சட்டத்தை மீறுகிறார்கள். புத்திசாலி குற்றவாளிகள் சட்டங்களை உருவாக்குகிறார்கள்]"

"யெஸ், யு ஆர் ரைட் ஷிவா.. சில நேரங்களில் ஜோடியாக் கில்லர் [Zodiac Killer] மாதிரி காவல்துறையையே கலங்கடிக்கிற புத்திசாலி கிரிமினல்ஸ் இருக்கத்தான் செய்யறாங்களே..”

அதுவரை முகத்தை வெகு இறுக்கமாய் வைத்திருந்தவன் அவரது கூற்றில் சற்று சிரித்துவிட்டான்.

“உங்களை வருணும் ஆர்யனும் ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிட்டாங்கன்னு நினைக்கிறேன் சார்.”

“Yes, it could be. ஆனால் பரவாயில்லை, உங்களுக்குச் சிரிக்கக் கூடத் தெரியுது ஷிவா. எனிவேய்ஸ் வேறு ஏதாவது முக்கியமான இன்ஃபர்ஷன் கிடைச்சதா?"

"எதிர்பார்த்த விஷயங்களையும் சேர்த்து நான் எதிர்பார்க்காத தகவல்களும் எனக்குக் கிடைச்சது சார். அதைத் தொடர்ந்து சில செயல்களில் இறங்கலாம்னு இருக்கேன். குறிப்பா வருணைப் பற்றியது. ஆனால் அவனைப் பிடிக்கிறதுக்கு முன் கேபினெட் மினிஸ்டர் ஆர்யனை வளைக்கணும். அது தான் உங்களைப் பார்த்து அதைப் பற்றி டிஸ்கஸ் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன்."

"குட்.. சொல்லுங்க.."

அவரது அனுமதிப் பெற்றவன் ஆர்ய விக்னேஷின் விவகாரங்களையும் அவனைப் பிடிக்கத் தான் வகுத்திருக்கும் திட்டங்களையும் விரிவாக எடுத்துரைக்க, மத்திய அமைச்சர் என்ற வலையைக் கொண்டு அரசியல் என்ற கடலில் ஆர்ய விக்னேஷ் வளைத்துப் பிடித்துக் கொண்டிருந்த அந்நிய செலவாணியைப் பற்றிக் கேட்டதில், டி.ஜி.பி நீரவ் பிரகாஷின் புருவங்கள் உயர்ந்தன.

"ஷிவா, நீங்க சொல்றதை வச்சுப் பார்த்தா ஏறக்குறைய இருபதாயிரம் கோடி ரூபாய் ஆர்யனிற்கு வருமானமா இதில் மட்டும் இருந்தே வரும் போல இருக்கே?"

"என்னுடைய கணிப்புப்படி அதற்கு மேலேயே வருவதற்கு வாய்ப்பு இருக்கு சார்."

"இவ்வளவு பணத்தை எப்படி ஷிவா அவன் நம்ம நாட்டுக்குள்ள கொண்டு வரான்? அதை எப்படி அவனுக்கு ஏதுவாகப் பயன்படுத்துறான்? அதில் ஹவாலா போல ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கே."

"அங்க தான் சார் வருணுடைய உதவி ஆர்யனுக்கு ரொம்பத் தேவைப்படுது. அதாவது வருண் இல்லைன்னா ஆர்யனால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாதுன்னு சொல்லலாம். அந்தளவுக்கு இந்த அந்நிய செலவாணி மோசடியில் ஆர்யனிற்குப் பக்கபலமா இருக்கான் வருண்.."

"ஸோ, இதில் வருணும் பார்ட்னர்.."

"பார்ட்னருன்னு சொல்றதைவிட இந்தத் திட்டத்திற்குச் சூத்திரதாரியே வருண் தான்.. அவனுடைய மூளை தான் இதன் பின்னால் இருக்குது. அதனால் இந்த வருமானத்தில் சரி பாதி வருணுக்குப் போகுதுன்னு சொல்லலாம். அதே போல வருண் இல்லாமல் ஆர்யனால அந்தப் பணத்தில் கை வைக்க முடியாது."

"ஏன்?"

"Money Laundering.."

ஷிவா கூறியதுமே அதுவரை வருணைப் பற்றிக் கேள்விப்படாத ஒரு விஷயத்தை இவன் இத்தனை எளிதாக, அதுவும் இந்த மும்பைக்கு மாற்றலாகி வந்த சில நாட்களுக்குள்ளாகவே கண்டுப்பிடித்துவிட்டானே என்ற பெரும் வியப்பில் நீரவ் பிரகாஷ் ஆழ்ந்து போனார்.

வருணை தங்களது வலையில் சிக்க வைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பது அவருக்குப் புரிந்து போனது.

கைகள் இரண்டையும் வயிற்றுக்குக் குறுக்கே கட்டியவாறே அமர்ந்திருந்த இருக்கையில் மேலும் நன்றாகச் சாய்ந்து அமர்ந்தவராய் ஷிவாவையே கூர்ந்து நோக்க, அந்த இளம் அதிகாரித் தொடர்ந்தான்.

"கருப்புப் பணத்தை வெள்ளைப்பணமா மாத்துற வேலையைச் செய்யறது வருண் சார். அதற்குப் பிறகு தான் ஆர்யனால் அந்தப் பணத்தைப் பயன்படுத்த முடியும்."

"அப்படின்னா நாம் முதலில் வருணைப் பிடிக்கலாமே.."

"இல்லை சார். எனக்குத் தெரிஞ்ச வரை இந்த ஒரு வழியில் மட்டும் இவங்களுக்குப் பணம் வரவில்லை. குறிப்பா வருணுக்கு. அவனுக்கு ஏகப்பட்ட வழிகளில் இருந்து பணம் வருது. அந்த வழிகளை எல்லாம் நாம் முதலில் கண்டுப்பிடிக்கணும், பிறகு தான் அவனைப் பிடிக்க முடியும். ஆனால் அவன் இப்போ இருக்கிற நிலையில், அதாவது இந்திய அரசாங்கமே அவனுடைய தேஸாய் க்ரூப் ஆஃப் கம்பெனிஸைத் தான் நம்பி இருக்குங்கிற மாதிரியான ஒரு சூழ்நிலையில் அவனை நாம் நெருங்கவே முடியாத ஒரு உயரத்தில் இருக்கான் சார். ஸோ, முதலில் ஆர்யன் மேல் கை வைப்போம், அது ஒரு எச்சரிக்கை மணியா வருணுக்கு அடிக்கட்டும். பிறகு அவனை நெருங்குவோம்."

"யெஸ் ஷிவா, நீங்க சொல்றதும் கரெக்ட்.. நான் கேள்விப்பட்டவரை இந்திய அரசாங்கத்திற்குப் பெருமளவு உதவி வருணுடைய நிறுவனங்களால் கிடைக்குது. அதிக வருமானவரி செலுத்துறது மட்டும் இல்லை, இந்தியப் பொருளாதாரத்துக்குக் குறிப்பிடத்தக்க சில வகையான நிதிப்பாதுகாப்பு, உற்பத்தித்திறன், வேலைவாய்ப்புன்னு எல்லாமே இவனால் கிடைக்குது. அதுவும் இல்லாமல் இவனுடைய தேஸாய் க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் அதிக வருமானம் ஈட்டுவதால் நாட்டின் சந்தையில் இவனுடைய பங்களிப்புப் பெருமளவு இருக்குது. அதனால் தானே இவன் மேல் கை வைக்க முடியாமல் இவ்வளவு நாளா நாங்க தடுமாறிட்டு இருக்கோம்."

"அதனால் தான் சார் சொல்றேன். Let's target Aaryan first.. [முதலில் ஆரியனை குறிவைப்போம்]. பிறகு வருணை நெருங்குவோம்."

"சரி, அப்போ உங்கள் முதல் அடி?"

"எனக்கு வந்த தகவலின் படி சைனீஸ் அன்ட் ஈரோப்பியன்ஸ் சிலரை கொண்டு ஆவ்கோர் [AaVCor] என்ற நிறுவனம் 2017 ஆம் வருஷம் துவங்கப்பட்டிருக்கு. விவசாயம், உணவு, ரசாயனம், கட்டுமானம், தளவாடங்கள், வனவியல், ஊடகத் தொழில்களை ஈரோப் மற்றும் சைனாவில் 250 துணை நிறுவனங்களுடன் இயக்குகிற ஒரு கம்பெனி அது. ஆவ்கோரின் 100 சதவீத பங்குகளை வச்சிருக்கிறது இரண்டு ட்ரஸ்டுகள் [two trust funds]."

"அதுக்கும் ஆர்யனுக்கும் என்ன சம்பந்தம்?"

"பார்ப்பதற்கு ஈரோப்பில் இருக்கும் ஒருவர் ஆவ்கோர் நிறுவனத்தை நடத்துறதாகத் தான் வெளியில் தெரியும். ஆனால் அந்த ரெண்டு ட்ரஸ்டுகளின் ஒரே உரிமையாளர், பெனிஃபிஷ்யரி, ஆர்யன்."

"வாட்?"

"யெஸ் சார். ஆவ்கோர் நிறுவனம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான யூரோக்கள் வருமானமாக ஆர்யனுக்கு வருது. அதை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்கு அவனுக்குப் பக்கபலமாக இருக்கிறது வருண். காரணம் இந்தத் திட்டத்தை ஆர்யனுக்கு ப்ளான் பண்ணிக் கொடுத்ததே வருண் தான். அவனுடைய உதவியால் பல ஆயிரம் கோடி கருப்புப் பணத்தை ஆர்யனால் வெள்ளையாக மாற்ற முடியுது. ஸோ, இந்த ஆவ்கோர்-ங்கிற கம்பெனியும், அந்த ரெண்டு ட்ரஸ்டுகளும் தான் என்னுடைய ஃபர்ஸ்ட் டார்கெட் சார்.. அது மூலம் தான் நான் நேரிடையாக ஆர்யனுக்கும், மறைமுகமாக வருணுக்கும் செக் வைக்கப் போறேன்.."

கூறியவனாய் மேற்கொண்டு சில நிமிடங்கள் அவரிடம் பேசிவிட்டு வெளிவர எத்தனித்தவனை நீரவ் பிரகாஷின் கேள்வி நிறுத்தியது.

"ஷிவா.. மிர்சா கேங்க்.."

நிதானமாக நின்றுத் திரும்பியவன், "இப்போதைக்கு என்னுடைய ஆட்டத்தில் இருப்பவங்க வருணும் ஆர்யனும் மட்டும் தான் சார். முதலில் இவர்களை வீழ்த்திட்டு அடுத்த ஆட்டத்தில் மிர்சாவை எதிர்கொள்ளலாம். மிர்சா ப்ரதர்ஸுக்கும் செக் வைக்கத்தான் போறோம், ஆனால் இப்போ இல்லை.." என்றவனாய் வெளியேறியவன் மேல் காவல்துறை தலைமையகத்தில் கூடியிருந்த அனைவரின் பார்வையும் பதிந்தது.

பளீர் வெண்மை நிற ஷர்டில் ஆறடி இரண்டங்குல உயரத்தில் பரந்த மார்பும் அகன்ற தோள்களுமாய் நீண்ட கால்களால் வேக அடிகள் எடுத்து வைத்தவன் பிரதான வாயிலை நோக்கி நடக்க, அவனது வேகம் அவர்களுக்கு உணர்த்தியது, இன்று தேசத்தில் பெரும் கிளர்ச்சி எழும்பப் போகின்றது என்று.

தங்களுக்குள் இரகசியமாய்க் கிசுகிசுத்துக் கொண்டவர்களை அலட்சியம் செய்தவனாய் விடுவிடுவென்று அலுவலகப் படிகளில் இறங்கியவன் தனது ஃபோர்ஸ் குர்கா எஸ்ட்ரீமில் ஏறிய நேரம், அலறியது அலைபேசி.

'Aunt Srimathi Calling..'

அழைத்தது அவனது தந்தை வழி அத்தை.

ஷிவ நந்தனின் பெற்றோர் தேவேந்திரனுக்கும் சாவித்திரிக்கும் பிறந்த இரு பிள்ளைகளில் ஷிவ நந்தனே மூத்தவன். இளையவள் தெய்வாம்பிகை. திருமணம் முடிந்து கோயம்புத்தூரில் மாமனார் மாமியார் கொழுந்தனார் நார்த்தனார் என்று கூட்டுக்குடும்பமாய் வாழ்ந்து வருபவள்.

தேவேந்திரனுக்கு இரு தம்பிகள், இரு தங்கைகள். அனைவரிலும் இளையவர் ஸ்ரீமதியே.

தன் கடைசி உடன்பிறப்பான ஸ்ரீமதியின் திருமணத்தைச் சீரும் சிறப்புமாகத் தேவேந்திரன் முடித்தாலும் ஏனோ அவரது மண வாழ்க்கை நீடித்து நிலைக்கவில்லை.

ஸ்ரீமதியின் ஒரே மகள் துர்க ரூபினிக்கு மூன்று வயதாக இருக்கும் போது எதிர்பாராதவண்ணம் இறந்து போனார் ஸ்ரீமதியின் கணவர்.

அன்று முதல் தமையன்கள் மட்டுமே எல்லாமுமாக மாறிப் போயினர் ஸ்ரீமதிக்கு.

ஆனால் தங்களுடனே வந்து தங்கிவிடுமாறு உடன்பிறந்தவர்கள் அழைக்கும் பொழுதெல்லாம், எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கணவரின் சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஓமலூருக்கு அருகில் உள்ள மல்லியக்குறிச்சி என்ற குக்கிராமத்தை விட்டு அவர் வெளியில் வருவதாயில்லை.

அதற்கு வேறு ஒரு காரணமும் இருந்து வந்தது.

தேவேந்திரனின் இளைய தம்பியான முத்துவேலின் மனைவி சுமதியின் குணம்.

எதற்கெடுத்தாலும் எடுத்தெறிந்துப் பேசும் குணம் படைத்த சுமதிக்கு, ஏனோ குடும்பத்தினர் அனைவருமே ஸ்ரீமதியை தாங்குவது பிடிக்காமல் போனது.

அனைத்திலுமே தனக்குப் போட்டியாக ஸ்ரீமதியை அவள் பார்க்க, மனம் நோகும் வகையில் பேசும் இளைய அண்ணனின் மனைவியைவிட்டு தள்ளி நிற்பதே நல்லது என்று முடிவிற்கு வந்திருந்தார் ஸ்ரீமதி.

அதற்குக் கைக்கொடுத்தது, கணவரின் பெயரில் இருந்த விவசாய நிலங்களும், தோப்புத்துரவுமே.

அவற்றைப் பராமரித்துப் பார்த்துக் கொண்டவராய் கணவரின் பரம்பரைச் சொத்தான கிராமத்து வீட்டிலேயே தங்கிவிட்டவர் அவர்.

என்ன தான் உடன்பிறந்தவர்கள் அனைவரும் பிரியத்துடன் அவரைப் பார்த்துக் கொண்டாலும் சுமதியைத் தொட்டு, சற்று விலகியே இருக்கும் அவருக்குத் தேவேந்திரன் என்றால் ஒரு கடவுள் போன்று.

அவரே துர்க ரூபினி ருதுவானதும் தனது மகன் ஷிவ நந்தனுக்கு அவளை மணமுடிக்கக் கேட்க, அன்றில் இருந்தே அவனை மாப்பிள்ளை என்று அழைக்கத் துவங்கி இருந்தவர் ஸ்ரீமதி.

ஆயினும் ஒரு பக்கம் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனாலும், மறு பக்கம் ஷிவ நந்தனின் அடவாடித்தனத்தையும், அடங்கா ஆக்ரோஷத்தையும் கண்டு பயந்திருந்தார்.

காரணம் சிறு வயதில் இருந்தே ஷிவ நந்தன் எதிரில் வந்தாலே நத்தைத் தன் கூட்டுக்குள் அடங்குவது போல் அடங்கிப் போவாள் துர்க ரூபினி.

அவள் ருதுவானது பன்னிரெண்டாம் வயதில், அப்பொழுது ஷிவ நந்தனிற்கு இருபது வயது.

அந்த வயதிலேயே வெகு உயரமாய்க் கூர்மையான பார்வையுடன் வீட்டிற்குள் நுழையும் மாமன் மகனைக் கண்டாலே துர்க ரூபினி ஓடி ஒளிந்துக் கொள்வாள் என்றால், இவள்தான் உன் வருங்கால மனைவி என்று தந்தை கூறிவிட்டதற்குப் பிறகு அவன் அவளை உரிமையாகக் கண்டிக்கும் போதும், நானே உன் பாதுகாப்பு என்ற எண்ணத்தில் அவளுக்கான சட்டத்திட்டங்களை வகுக்கும் பொழுதும், அரண்டுப் போவாள் துர்க ரூபினி.

அவன் வாய் திறந்து அதட்ட கூட வேண்டாம்.. இல்லை என்பது போல் மறுப்பாய் இலேசாகத் தலையசைத்தாலே போதும், வாயை மூடிக் கொண்டவளாய் படக்கென்று தலை கவிழ்ந்துவிடுவாள்.

ஆயினும் இப்படி ஒரு வரம் தன் மகளுக்குக் கிடைக்குமா என்று எண்ணியவராய் தன் அண்ணனின் ஆசைக்குச் சம்மதம் தெரிவித்திருந்தார் ஸ்ரீமதி.

இதோ இப்பொழுது இருபத்தி இரண்டு வயதாகும் துர்க ரூபினிக்கு ஷிவ நந்தனுடன் நிச்சயதார்த்தமே முடிந்துவிட்டது.

அத்தையின் பெயரை அலைபேசியில் படித்தவன் அதனை உயிர்ப்பிக்க, அங்குக் கவலைத் தோய்ந்த குரலில் பேசத் துவங்கினார் ஸ்ரீமதி.

"சொல்லுங்க அத்தை.."

"மாப்பிள்ளை, பிஸியா இருக்கீங்களா?"

"பரவாயில்லை சொல்லுங்க."

"இப்போ சென்னைக்குத் தான் மாப்பிள்ளைக் கிளம்பிட்டு இருக்கோம்."

கூறியவர் அமைதியாகிப் போக அவரது நெடுமூச்சே பறைசாற்றியது அவர் கவலையில் இருக்கின்றார் என்று.

அதற்குக் காரணமானவனும் அவன் தானே!

"துர்கா பக்கத்துல இருக்காளா அத்தை?"

"ம்ம்ம்.. இதோ கொடுக்கிறேன் மாப்பிள்ளை.."

"மா.. மாமா.."

"ம்ப்ச்.. இவ ஒருத்தி. ஆரம்பமே திக்குறவ.." என்று கடிந்துக் கொண்டவனாய், "என்ன, அம்மா ரொம்பக் கவலையா இருக்கிற மாதிரி தெரியுது.." என்றான்.

அவனது கோபம் வழக்கம் போல் அவளுக்கு மேலும் கிலியை ஏற்படுத்தியது.

பெருமூச்சுவிட்டுத் தன்னைத் திடப்படுத்திக் கொண்டவளாக, "நீங்க தி.. திட்டாம இருந்தா நான் தி.. திக்காம பேசுறேன். சரியா?" என்றாள் மெல்லிய குரலில்.

"சரி, திட்டலை. சொல்லு."

ஆசுவாசப் பெருமூச்செடுத்தவள் திக்காமல் தொடர்ந்தாள்.

"நானும் எவ்வளவோ எடுத்துச் சொல்லிட்டேன். ஆனாலும் அவங்க நேத்து பெரிய மாமா ஃபோன் பண்ணி விஷயத்தைச் சொன்னதில் இருந்து இப்படித்தான் இருக்காங்க."

"துர்கா, இங்க ஒரு பெரிய டாஸ்கை [task] எனக்கு அசைன் பண்ணிருக்காங்க. ஒரு நாள் நான் மும்பை விட்டு வெளியேறினாலும் நான் நினைச்சது நடக்காம என் கையைவிட்டு போய்விடும் வாய்ப்பிருக்கு. நான் எதுக்கு இந்த ஊருக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கி வந்தேன்னோ அதுக்கே அர்த்தம் இல்லாமல் போயிடும். அதுக்குத் தான் மேரேஜைக் கொஞ்ச நாள் தள்ளிப் போட சொன்னேன்."

"எனக்குப் புரியுது மாமா, ஆனால் அம்மா தான் மும்பைக்கு நீங்க போகாமலேயே இருந்திருக்கலாம்னு புலம்புறாங்க."

"துர்கா, நான் ஒண்ணும் சாதாரண வேலையில் இல்லை. எனக்குச் சில கடமைகள் இருக்கு. அதை நான் சரியான நேரத்தில் முடிச்சே ஆகணும். ஆனாலும் மேரேஜ் டேட்டை ஃபிக்ஸ் பண்ணும் போதே நான் இதைப் பற்றி உங்கக்கிட்ட பேசிருக்கணும், பட் நானே எதிர்பார்க்கலை, நான் வந்த விஷயம் இவ்வளவு சீக்கிரம் என் கையில் சிக்கும்னு. ஸோ, வேற வழியில்லை.."

"எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை மாமா.. நீங்க உங்க வேலைகளை முடிங்க, பிறகு பார்த்துக்கலாம்.. அம்மாவை நான் சமாளிச்சிக்கிறேன்."

கூறியவளின் குரலில் சிறிது துள்ளல் இருந்ததோ என்றே பட்டது அவளது மாமன் மகனுக்கு.

"அம்மாவுக்குத் தான் வருத்தம் போல இருக்கு, மகளுக்கு இல்லையோ??"

"புரியலை மாமா."

"நான் திடீர்னு மேரேஜைத் தள்ளிப் போடுங்கன்னு சொன்னதுல அத்தைக்குத் தான் வருத்தமுன்னு நினைக்கிறேன்.. மேரேஜைத் தள்ளிப் போட்டுட்டேன்னு நீ வருத்தப்படுவன்னு நினைச்சா, இப்போ சந்தோஷப்படுற மாதிரியில்ல தெரியுது. அப்போ நான் நினைச்சது சரி தான்னு நினைக்கின்றேன்."

"நீங்க என்ன நினைச்சீங்க?"

"என் அப்பாவும், உன் அம்மாவும் தான் உன்னை ஃபோர்ஸ் பண்ணி என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிக்க வைச்சிருப்பாங்கன்னு."

மறுமுனையில் விநாடிகள் சில அமைதி நிலவ தான் ஏதோ புரிவது போல் இருந்தது ஷிவாவிற்கு.

"துர்கா. என்ன சத்தத்தையே காணோம்? அப்ப நான் நினைச்சது சரிதானா?"

"ஐயோ இ.. இ.. இல்ல மாமா."

“நான் உன்னைத் திட்டவே இல்லையே டி.. ஆனாலும் திரும்பவும் திக்குற..”

“அப்படி இல்லைன்னு சொல்ல வந்தேன் மாமா..”

"துர்கா, நான் ஒரு ஃபோலீஸ் ஆஃபிஸர். ஒருத்தருடைய பேச்சுத்தொனியை வச்சே அவங்க உண்மையைச் சொல்றாங்களா இல்லை பொய் சொல்றாங்களான்னுக் கண்டுப்பிடிக்க முடியும்."

"மாமா, நிச்சயமா அப்படி எல்லாம் இல்லை மாமா. ஆனால் என்னைப் பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியுமே. எப்பவும் நான் உங்கக்கிட்ட சகஜமா பேசினதே கிடையாது. நம்ம ரெண்டுப் பேருக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்சதுக்குப் பிறகு தான் நான் உங்கக்கிட்ட இவ்வளவு பேசுறதே. அதுவும் எப்பவும் உங்கக்கிட்ட பேச ஆரம்பிக்கும் போதே திக்குது. அதுக்குக் காரணமும் உங்கக்கிட்ட பேசணும்னு நினைச்சு ஃபோனைக் கையில் எடுத்தாலே ஏதோ நடுக்கம் வருது. நான் என்ன செய்ய? இதெல்லாம் உங்களுக்கும் தெரியும். ஆனால் கல்யாணத்துக்கு அப்புறம் நான் எப்படி.." என்று முடிக்காது விட்டவளின் அச்சம் ஷிவாவிற்கும் நன்றாகவே புரிந்தது.

அவள் கூறுவது போல் இதுதான் தனக்குத் தெரிந்தவரை அவள் இடைவிடாது பேசிய பேச்சு என்றும் அவனால் உணர முடிந்தது.

மெல்லிய புன்னகை சிந்தியவனாக, "சரி, நீ அத்தைக்கிட்ட சொல்லிடு. என்னுடைய வேலை முடிஞ்ச அடுத்த முகூர்த்தத்துலயே நம்ம மேரேஜ்னு.." என்றவனாய் அலைபேசியைத் துண்டித்த அந்நேரம், ஆர்ய விக்னேஷின் 'வைப்பர் இன்ட்ஸ்ட்ரியல் பார்க்' -கிற்குள் நுழைந்தனர், ஐந்து வெளிநாட்டு வர்த்தகர்கள்.

இரு சீனர்கள், மூன்று ஐரோப்பியர்கள்.

Viper Industrial Park

ஆர்ய விக்னேஷிற்குச் சொந்தமான தொழிற்சாலை அது.

துருப்பிடிக்காத எஃகு, டைட்டானியம், சிறப்பு உலோகக் கலவைகள் மற்றும் பல வகையான பிளாஸ்டிக் கலவைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு வணிகங்களுக்கு உபயோகப்படும் ட்ரெய்லர்கள் முதல் கப்பல்களில் எடுத்துச் செல்லப்படும் பிரம்மாண்டமான கண்டெய்னர்கள் வரை தயாரிக்கப்படும் தொழிற்சாலை.

ஏறக்குறைய 70,000 சதுர அடிக்கு மேல் விரிவான உற்பத்தியாக வளர்ந்துள்ள அந்தத் தொழிற்சாலையின் கான்ஃபரன்ஸ் ஹாலில் அமர்ந்திருந்தவர்களின் பார்வை அறை வாயிலையே நோக்கி இருந்தது.

“ஐ ஆம் ஆன் மை வே..”

ஏறக்குறைய இருபது நிமிடங்களுக்கு முன் ஐவரின் அலைபேசிக்கும் தகவல் அனுப்பியிருந்தவன், இன்னும் வரவில்லை.

இந்த முப்பத்து ஐந்தி வயதிலேயே மத்திய அமைச்சர் பதவியில் அமர்ந்திருப்பவன், அவனது பெயரைக் கேட்டாலே திமிரும் ஆணவமும் கலந்த அரசியல் அரக்கன் என்று பெயர் எடுத்திருப்பவன்.

இம்மாதிரி நிலைமையின் விபரீதத்தைப் புரிந்துக்கொள்ளாத அளவிற்கான அசாத்திய திமிர் பிடித்த மனிதனான இவனுடன் இணைந்து தொழில் செய்கின்றோமே என்று நூறாவது முறையாக அவர்கள் திகைத்திருந்த நேரம் கான்ஃபரன்ஸ் ஹாலிற்குள் நுழைந்தான் ஆர்ய விக்னேஷ்.

அவனது உருவத்தையும் தோற்றத்தையும் பார்த்ததில் அது வரை இருந்து வந்த திகைப்பு மறந்து வியப்பு மேலோங்க, அவர்களின் புருவங்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

சியன்னா மணல் நிறத்தில் ஸ்போர்ட் ஷர்ட்டும், பளீர் வெள்ளை நிறத்தில் பாண்டும் உடுத்தியிருந்தவன் [sienna sand color Brunello Cucinelli linen sport shirt with white color pant], அணிந்திருந்த சன் கிளாசைக் கழட்டி சட்டையில் சொருகியவாறே உள்ளே நுழைய, அதுவரை தங்களுக்குள் முனகிக் கொண்டிருந்தவர்கள் மௌனமாகிப் போனார்கள்.

அந்த நீள மேஜையின் இரு பக்கங்களில் அவர்கள் அமர்ந்திருக்க, அதன் ஒரு முனையில் அமர்ந்த ஆர்யனின் நெற்றியில் சிந்தனைக்களுக்கான கோடுகள் நெளிந்திருந்தன.

அவனுக்கு எதிரில் அமர்ந்திருந்த ஐவரும் 'ஆவ்கோர்' நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் பார்ட்னர்ஸ்.

பெயருக்கு தான் அவர்கள் உரிமையாளர்கள். ஆனால் அதன் முழு உரிமையாளன் ஆர்யனே.

அவன் நினைத்தால் மற்ற ஐவரையும் அந்த நிறுவனத்தில் இருந்து துரத்திவிட்டு அவன் மட்டும் அதன் உரிமையாளனாகக் கொடி நாட்டாலாம். [அவ்வாறுதான் அவன் எண்ணியிருந்தான்]

ஆனால் சட்டப்படி இவ்வாறு ஒரு அமைச்சர் வெளிநாட்டில் நிறுவனங்கள் துவங்கி அதன் மூலம் இத்தகைய வருமானம் ஈட்டுவது குற்றம் என்பதாலேயே இவ்வழியில் இந்த 'ஆவ்கோர்' நிறுவனத்தை அவன் துவங்குவதற்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்தான் வருண் தேஸாய்.

"வழக்கமா வருவதைவிட இந்த வருஷம் நிறைய வருமானம் ஈட்டி இருக்கு நம்முடைய நிறுவனம். எல்லாருக்கும் பணம் சம்பாதிக்கிறது பிரச்சனைன்னா எனக்கு அந்தப் பணத்தைப் பாதுகாக்குறதும், அதை வெள்ளையா மாத்துறதும் தான் பெரிய கஷ்டமா இருக்கு.. கிட்டத்தட்ட கொலம்பிய ட்ரக் லார்ட், போதைப்பொருள் கடத்தல்காரன் பாப்லோ எஸ்கபார் [Pablo Escobar] மாதிரி. அவன் எப்படிப் போதைப்பொருள் பிஸ்னஸில் சம்பாரிச்ச பணத்தை வச்சே உலகப் பணக்காரர்களின் வரிசையில் ஏழாவது இடத்தைப் பிடிச்சானோ அதே மாதிரி இன்னும் கொஞ்ச நாளில் நானும் வர வாய்ப்பிருக்கு, ஆனால் அதை அனுபவிக்க விட மாட்டேங்குறானுங்களே.."

சிறிதுப் நகையுடன் நக்கல் தொனியில் கூறியவனைப் பார்த்தவாறே அமர்ந்த ஆவ்கோரின் சீன நாட்டுப் பிரதிநிதிகளில் ஒருவர் மெல்ல பேச வாய்த் திறந்தார்.

"யெஸ், எங்களுக்கும் அதே பிரச்சனை தான். அதான் உங்கக்கிட்ட இதைப் பற்றிப் பேசலாம்னு நாங்க நேரடியாவே வந்தோம்."

கூறியவர் அருகில் அமர்ந்திருக்கும் ஐரோப்பிய நாட்டு பிரதிநிதியின் பக்கம் திரும்ப, அவரும் அதற்கு இசைவது போல் தலையசைத்தவராய்,

"ஆர்யன், எங்க மேல எங்க கவர்ன்மென்டுக்குக் கொஞ்சம் சந்தேகம் வந்திருக்க மாதிரித் தெரியுது. இதே மாதிரி பணம் வந்துட்டு இருந்ததுன்னா கண்டிப்பா கவர்ன்மென்ட் அதை ஆராய்ச்சி செய்ய முனையும். அது மாதிரி ஒரு சூழ்நிலை வந்தால் நிச்சயமா நாங்க மாட்டுவதற்கு வாய்ப்பு இருக்கு. அது உங்களுக்கும் ஆபத்து. அதனால் ஏன் நாம் ஆவ்கோரின் சில பிஸ்னஸ்களைக் கொஞ்ச நாள் ஸ்டாப் பண்ணக் கூடாது?" என்ற விநாடி, அவர்களின் மீட்டிங்கை ஆர்யனின் அலைபேசி மூலம் (video call) காணொளிக்காட்சியாகப் பார்த்தவாறே, ஆர்யனின் தொழிற்சாலையை நோக்கி தன் சிகப்பு நிற மாசராட்டியை [Red Maserati GranTurismo] செலுத்திக் கொண்டிருந்த வருண் தேஸாயின் கைப்பிடி இறுகியது.

ஒரு கையால் வாகனத்தைச் செலுத்தியவாறே, மறு கையால் தன் கழுத்தை அழுந்த தேய்த்துக் கொண்டவனாய் இடது கன்னத்தின் உள்பக்கத்தைப் பற்களால் கடித்தவாறே நிமிர்ந்தவனின் செய்கை [mannerism] ஆர்யனுக்கு உணர்த்தியது, அந்த ஐரோப்பியரின் பேச்சு அவனுக்கு எரிச்சல் கொடுத்திருக்கின்றது என்று.

"வருண்.. நீ எங்க இருக்க?"

"ஆர்யன், டென் மினிட்ஸ்ல நான் வந்துடுவேன். ஆனால் அதற்குள்ள பிஸ்னஸை ஸ்டாப் பண்ணிடலாங்கிற மாதிரியான எந்தப் பேச்சும் அங்க நடக்கக்கூடாது.. நான் வந்ததும் மற்றதைப் பார்த்துக்கலாம்."

கூறியவனாய் அலைபேசியை அணைத்தவன் காரை செலுத்தும் வேகத்தைக் கூட்ட, அதே நேரம் ஷிவ நந்தனின் ஆரஞ்சு நிற ஃபோர்ஸ் எக்ஸ்ட்ரீம் ஆர்யனின் தொழிற்சாலை வளாகத்திற்குள் சீறும் வேகத்துடன் புகுந்தது.

தொடரும்..

References:


Zodiac Killer: https://www.britannica.com/biography/Zodiac-killer

 

Lucky Chittu

New member
Very nice epi mam. Varun oda pair thaan Durga roopini. Yena Durga romba bhayappudraa shiv ku. So ennoda guess mam. Waiting for the next update mam.
 
  • Love
Reactions: JB

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top