JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakalin Vettai - Episode 34

JLine

Moderator
Staff member
அரிமாக்களின் வேட்டை!

அத்தியாயம் - 34

இரவு முழுவதும் உறங்காது விழித்திருந்த துர்காவை நித்திராத்தேவி விடியலை ஒட்டி ஆரத்தழுவிக் கொண்டாள்.

காரணம், வருண் அவளை அழைத்து வந்த இரவு என்ன நினைத்தானோ அவளுக்குத் துணையாக யாரையாவது ஏற்பாடு செய்யுமாறு ஜாஃபருக்கு உத்தரவு பிறப்பித்திருக்க, ஜாஃபரும் தன் தங்கை ஃபாத்திமாவை அனுப்பியிருந்தான்.

அவளும் அவ்விரவு முழுவதும் துர்காவிற்குத் துணையாகத் தங்கி இருந்தாள்.

ஆனால் நேற்று இரவு ஃபாத்திமா வரவில்லை.

ஒரு வேளை நள்ளிரவில் கூட வருண் வந்துவிடலாம், அல்லது எந்நேரமும் அவனால் கதவுத் தட்டப்படலாம் என்ற பயத்தில் வலுக்கட்டாயமாக உறங்காது விழித்திருந்த துர்காவை அசதி தழுவிக் கொண்டதில், அவளையும் அறியாது உறங்கியும் போனாள்.

ஆயினும் இன்னும் உன் போராட்டங்கள் முடியவில்லை, அதற்குள் என்ன உறக்கம்? என்பது போல் மறுநாள் ஆதவன் தன் கதிர்களை அவளின் முகத்தில் வீசியடித்தான்.

கண்களில் பட்ட வெளிச்சத்தின் கூச்சத்தில் மெல்ல விழித்தவளுக்கு நடந்தவைகளை உணர்த்தியது, ஒருக்களித்துப் படுத்திருந்ததில் வெளிப்பட்டுக் கட்டிலில் புரண்டு கொண்டிருந்த தாலி.

விருட்டென்று எழுந்தவள், 'கடவுளே! இவ்வளவு நடந்தும் தூங்கியிருக்கேனா? அங்க அம்மா என்னைப் பத்தி தெரிஞ்சு எவ்வளவு பதட்டப்பட்டுட்டு இருப்பாங்க? ஆனால் நான் அதையெல்லாம் மறந்துட்டு இப்படித் தூங்கிட்டு இருந்திருக்கேனே..' என்று மனதிற்குள் தன்னைத்தானே வைதவளாய் எழுந்து அமர்ந்த வேளை சரியாகக் கதவு தட்டப்பட்டது.

"யாரு?"

மெல்ல கேள்வியை எழுப்பியவளுக்கு மீண்டும் வந்திருப்பது வருணோ என்ற சந்தேகம் எழுந்ததில் அச்சமும் வந்தது.

அதே சமயம் ஏனோ அவன் முகத்தைப் பார்க்கவும் மனம் ஏங்கியது.

'என்ன மனசுடா இது? எப்பப் பார்த்தாலும் ரெண்டுங்கட்டானாகவே யோசிச்சுட்டு.'

எண்ணியவளாய் கதவைத் திறக்க, அவள் எதிர்பார்த்தது போலவே அங்கு நின்றிருந்தது வருணே தான்.

"நல்ல தூக்கம் போல."

நக்கலாய் கூறியவனைக் கோபம் கொண்டு அவள் முறைக்க, இலேசாகக் கலைந்து அவளது முகத்தில் விழுந்துக்கிடக்கும் முடிக்கற்றைகளையும், உறக்கத்தில் நெகிழ்ந்து நலுங்கி கிடந்த பட்டுப் புடவையையும் ரசனையுடன் ரசித்துப் பார்த்தவனின் கண்கள், அவளின் கோபப் பார்வையில் நிலைக்க, சிறிய புன்சிரிப்புடன், "பயமா இருக்கு." என்றான்.

“யாருக்கு? உங்களுக்கு?”

“யெஸ்..”

“நான் நம்பிட்டேன்..”

“சந்தோஷம். சரி, என் தொந்தரவு இல்லாமல் நல்லா தூங்கி இருக்கப் போல இருக்கு..”

"ரொம்ப அழுதாலும் முகம் இப்படித்தான் தூங்கினது போலவே வீங்கியிருக்கும்."

தழுதழுக்கும் குரலில் கூறியவளை விநாடிகள் சில ஆழ்ந்துப் பார்த்தவன்,

"இன்னும் தெர்ட்டி மினிட்ஸில நாம இங்க இருந்து கிளம்பணும். எப்படியும் எங்க வீட்டுக்குப் போறதுக்கு மூணு மணி நேரமாவது ஆகும். அதுவரைக்கும் பாவம் உன் மாமா உனக்காகக் காத்துட்டு இருப்பான். ஏற்கனவே அவனுடைய என்கௌண்டர் லிஸ்டில் நான் இருக்கேன். இப்ப நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் லிஸ்டில் என் பேரை முதலிடத்துக்கு அவன் கொண்டு போயிருந்தாலும் போயிருப்பான். கமான், அவனை ரொம்ப நேரம் வெயிட் பண்ண வைக்க வேண்டாம், சீக்கிரம் கிளம்பு. " என்றவனாய் வெளியேறப் போனவனை அவளின் மெல்லிய குரல் தடுத்தது.

“ஒரு நிமிஷம்.”

“------”

"ஃபாத்திமாவை நாம கூட்டிட்டுப் போகலாமா?"

எதனையோ கேட்க வந்தவன் சட்டென்று நிறுத்தி பதிலொன்றும் கூறாது அறையைவிட்டு வெளியே சென்றான்.

******************************

"நிச்சயமா அவன் துர்காவைக் கூட்டிட்டு இங்க வருவான்னு நினைக்கிறியா ஷிவா?"

"யெஸ் அஷோக்."

"எனக்கு என்னவோ கொஞ்சம் சந்தேகமாத் தான் இருக்கு. நேத்துக் காலையில் அவனுக்கும் துர்காவுக்கும் கல்யாணமாகிடுச்சுன்னு ஃபோட்டோ அனுப்பினான். அதற்குப் பிறகு எந்தத் தகவலும் இல்லை. அவங்க அப்பா சஞ்சீவ் தேஸாயைக் கேட்டால் எனக்கு எதுவும் தெரியாதுன்னு வேற சொல்றாரு. அவங்களுக்கு மேரேஜ் முடிஞ்சு கிட்டத்தட்ட இருபத்தி நாலு மணி நேரம் ஆகிடுச்சு. இன்னும் அவன் இங்க வரலை.."

"அஷோக், அது தான் அவனுடைய திட்டமே.."

"ம்ப்ச், என்னடா திட்டம்?"

"நேற்றே வந்திருந்தால் துர்காவுடைய கழுத்தில் அவன் தாலியை மட்டும் தான் கட்டியிருப்பான். ஆனால் இப்போ அவளுடன் ஒரு நாள் முழுக்க இருந்திருக்கான்."

ஷிவா என்ன சொல்ல வருகின்றான் என்பது அஷோக்கிற்குப் புரிந்தது.

"துர்கா அதுக்குச் சம்மதிச்சிருப்பான்னு நினைக்கிறியா ஷிவா?"

நண்பனின் வினாவில் அவனைத் திரும்பிப் பார்த்த ஷிவா மீண்டும் வருணின் வீட்டினை நோக்கி திரும்பியவன்,

"நான் யாரை நம்புறேனோ இல்லையோ துர்காவை ரொம்பவும் நம்புறேன் அஷோக். இதே வருண் அவளைத் தூக்கிட்டுப் போய் ரெண்டு மாசங்கள் வச்சிருந்தாலும், அவன் அவளை எந்த விதத்திலேயும் தொந்தரவு செய்யலைன்னு சொன்னாள். அதுல நூற்றுக்கு நூறு உண்மை இருக்கு. காரணம், என்கிட்ட துர்கா பொய் சொல்ல மாட்டாள்.

ஆனால் அதே சமயம் என்னைக் கல்யாணம் செய்துக்க இஷ்டமில்லைன்னு அவள் சொன்னப்போ, நான் கேட்டதுக்கு அவள் காரணமா சொன்னது எதுவும் உண்மையில்லை. அவள் பொய் சொல்லலை, ஆனால் நிஜத்தை மறைச்சா. அதுவும் எனக்குத் தெரியும். அதுக்கான காரணமும் இப்போ எனக்கு நல்லாவே புரியுது.

ஏதோ ஒரு விதத்தில் வருண் அவளைப் பாதிச்சிருக்கான். அவனைத் தவிர வேற யாரையும் விரும்ப அவள் மனசு இடம் கொடுக்கலைன்னு நினைக்கிறேன். ஆனால் அதே சமயம் இப்படி வருண் திடீர்னு அவளைத் தூக்கிட்டுப் போய்க் கல்யாணம் பண்ணுவான்னு அவ கனவிலும் நினைச்சிருக்க மாட்டாள்." என்றவன் வேறு எதுவும் பேசாது சட்டென்று பேச்சை நிறுத்தினான்.

நண்பனின் மௌனம் அஷோக்கிற்குச் சந்தேகம் விளைவிக்க, நிமிடங்கள் சில கழித்து, "இது நான் கேட்ட கேள்விக்குப் பதில் இல்லையே ஷிவா." என்றான்..

சற்றே தொண்டையைச் செருமிய ஷிவா, "இருக்கு அஷோக். என்னத்தான் அவன் கட்டாயமாக அவள் கழுத்தில் தாலிக் கட்டினாலும், நிச்சயம் அவளை வேற எதுக்கும் அவன் ஃபோர்ஸ் பண்ணிருக்க மாட்டான்." என்றான்.

“எப்படி இவ்வளவு உறுதியா சொல்ற?”

“முதலில் துர்காவைத் தூக்கிட்டுப் போன வருண் அதற்குப் பிறகு அவளைப் பத்திரமா நம்மக்கிட்ட திருப்பி அனுப்பி எவ்வளவு நாட்கள் ஆகியிருக்கு பார்த்தியா? ஆனால் அதற்குப் பிறகு அவளை அவன் எந்த விதத்திலும் தொந்தரவும் செய்யலை, தொடர்பு கொள்ளவும் முயற்சிக்கலை. அதுக்குக் காரணம் துர்காவின் மனசில் என்ன இருக்குன்னு அவனுக்குத் தெளிவா தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் சித்துவின் வளைகாப்பு அன்னைக்கு அவ்வளவு கோபமா வந்த வருண் ஏன் துர்காவைப் பார்த்ததும் அமைதியாகிடணும்? அதே போல் அவ்வளவு காலமும் வருணைப் பற்றிப் பேசாத துர்கா ஏன் அன்னைக்கு வருணுக்கு கால் பண்ணணும்? அவள் நினைச்சிருந்தா சித்துக்கிட்ட இருந்து எப்பவோ வருணுடைய ஃபோன் நம்பரை வாங்கிப் பேசியிருக்கலாம் இல்லையா?

ஸோ, வருண் துர்கா, ரெண்டு பேருக்குமே ஒருத்தர் மேல் ஒருத்தருக்கு ஏதோ ஒரு விதத்தில் ஈர்ப்பு வந்திருக்கு. ஆனால் என்ன காரணத்தினாலோ ரெண்டு பேருமே அதை வெளியே காட்டிக்காமல் இருந்திருக்காங்க. இப்போ துர்கா வருணுக்கு கால் பண்ணிப் பேசியதும், அவளே உணராமல் அவனுக்குப் பச்சைக்கொடி காட்டியது போல் ஆகிடுச்சு. அதான் தூக்கிட்டான். ஆனால் நிச்சயம் வருண் துர்காவை கஷ்டப்படுத்தி இருக்க மாட்டான்னு தான் எனக்குத் தோணுது.”

“அப்படின்னா ஏன் அவன் இன்னும் இங்க வரவில்லை. இருபத்திநாலு மணி நேரம் அவன் அவளுடன் இருந்த மாதிரி காட்டத்தானே ஷிவா.”

“யெஸ். அப்படிக் காட்ட மட்டும் தான்.”

“ஸோ, துர்கா இன்னும்..” என்றவன் முடிப்பதற்குள் ஷிவாவின் அலைபேசி சிணுங்கியது.

"சார், வருண் தேஸாயோட கார் சிட்டிக்குள்ள நுழைஞ்சிடுச்சு."

"ஒகே."

"என்ன ஷிவா?"

"அவன் கார் சிட்டிக்குள்ள எண்டராகிடுச்சு அஷோக். இன்னும் ஒன் ஹவருக்குள்ள அவன் இங்க வந்துடுவான்."

ஷிவா கணித்தது போல் சரியாக ஒரு மணி நேரம் சென்று வருணின் கார் அவன் வீட்டின் வாயிலை அடைந்தது.

"வந்துட்டான் ஷிவா.."

"கொஞ்சம் வெயிட் பண்ணலாம் அஷோக். எனக்குத் தெரிஞ்சவரை அவனுடன் தான் துர்கா இருக்கணும். எதற்கும் கொஞ்ச நேரம் கண்காணிச்சிட்டு பிறகு போகலாம்.”

**********************************************

மலபார் ஹில், தெற்கு மும்பை.

வருணின் இல்லம்.

ஒரு பிரம்மாண்டமான கோட்டையின் அரண் போல் இருக்கும் அந்த மதில் சுவரின் உயரத்தை அதிசயத்துடன் பார்த்தவாறே காரினுள் அமர்ந்திருந்த துர்காவிற்கு, சுற்றுச்சுவரின் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த கதவு திறந்ததும் தெரிந்த கம்பீரமான அரண்மனையை ஒத்த மாளிகை பெரும் பிரமிப்பைக் கொணர்ந்தது.

பிரதான வாயிலின் இரும்புக் கதவு திறந்ததும் கார் உள்ளே செல்ல, மிடுக்குடன் உயர்ந்து நிற்கும் அரசர்களின் சிலைகளையும், விரித்து வைக்கப்பட்ட மரகதப் படுக்கையைப் போல் பச்சைப்பசேலன மின்னும் தோட்டத்தையும் பார்க்க பார்க்க, துர்காவின் இமைகள் கூட அசையவில்லை.

இதனில் மனதிற்கும் குளிர்ச்சியளிக்கும் விதமாய் வளர்க்கப்பட்டிருக்கும் மலர் செடிகளையும், அழகுக்காக வளர்க்கப்பட்டிருந்த க்ரோட்டன்ஸ்களையும் பார்த்தவாறே வந்தவளுக்கு இவை அனைத்துக்கும் நடுவில் ஓங்கி உயர்ந்திருந்த, செந்நிறக்கற்களால் கட்டப்பட்டிருந்த அந்த மாளிகையின் தோற்றம் பெரும் மலைப்பை உருவாக்கியது.

அவளின் விழி விரிப்பையும், திகைத்த வதனத்தையும் திரும்பிப் பார்த்த வருண், வீட்டின் வாயிலில் கார் நிற்கவும் கரம் பற்றினான்.

"வா.."

கார் கதவைத் திறந்து இறங்கியவன் அவளும் இறங்கியதும் வீட்டிற்குள் நுழைய, வெளியே இவ்வளவு அழகுணர்ச்சியுடன் அமைக்கப்பட்டிருக்கும் கோட்டையின் உட்பகுதி எப்படி இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா? என்ற எண்ணத்துடன் பார்த்தவளை, "கொஞ்சம் இருங்க, ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வந்துட்டு இருக்காங்க." என்ற ஃபாத்திமாவின் குரல் அடுத்தத் திகைப்பைக் கொடுத்தது.

"நீங்க எப்படி இங்க?"

துர்காவின் வினாவிற்குச் சிறு புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்த ஃபாத்திமா வீட்டினுள் பார்க்க, கையில் ஆலம் கரைத்த தட்டுடன் வந்தார் ஒரு வடநாட்டுப் பெண்மணி.

ஏதோ வடநாட்டு மொழியில் பேசியவரைப் புரியாதுப் பார்க்க, அவர் ஆரத்திச் சுற்றி துர்காவின் நெற்றியில் மட்டும் திலகமிட்டுவிட்டு ஃபாத்திமாவிடம் எதுவோ இரகசியமாய்க் கூறியவராய் முன் வாயிலை நோக்கிச் சென்றார்.

‘ஏன் எனக்கு மட்டும் பொட்டு வைக்கிறாங்க?’

எண்ணியவளாய் அந்தப் பெண்மணி சென்று கொண்டிருக்கும் திசையை நோக்கித் துர்கா திரும்ப,

"சாருக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு அவங்க சொல்றாங்க.. இருந்தாலும்..” என்று இழுத்த ஃபாத்திமா, சட்டெனத் தன்னைத் திரும்பிப் பார்க்கும் வருணின் பார்வையைக் கண்டு,”வலதுக் காலை எடுத்து வைச்சு வாங்க துர்கா." என்றதுடன் முடித்துக் கொண்டாள்.

இன்னமும் விடாது இறுக்கத் தன் கரத்தைப் பற்றி இருப்பவனை ஒரு முறை நோக்கிவிட்டு வீட்டினுள் நுழைய, அங்கு முன்னறையில் ஒரு ஆள் உயரத்திற்கு மாட்டப்பட்டிருந்த படத்தில் பேரழகுடன் தோன்றிய பெண்மணியின் புகைப்படம் வெகுவாய் துர்காவை கவர்ந்தது.

"அவங்க தான் என் அம்மா.."

கூறிய வருண் அவளை அழைத்துச் செல்ல, இவர்களைப் பார்த்தும் பார்க்காதது போல் ஸோஃபாவில் அமர்ந்து பத்திரிக்கையைப் படித்துக் கொண்டிருந்தவரைக் கண்டதும் ஒரு விநாடி திகைத்து நின்றாள்.

"ஏன் நின்னுட்ட?"

"அவர்?"

"He is my dad.."

ஒரு கையால் கழுத்தை அழுந்தத்தடவி இடது உட்கன்னத்தை அவன் பற்களால் கடிப்பதை வைத்தே கண்டுப்பிடித்தாள், இருவருக்கும் சுமூகமான உறவு இல்லை என்று.

மருண்டப் பார்வையுடன் அவரை நோக்க, மெல்ல தலையை நிமிர்ந்துப் பார்த்த சஞ்சீவ் தேஸாய் மீண்டும் படித்துக் கொண்டிருந்த பத்திரிக்கையில் கவனம் செலுத்த துவங்கினார்.

அவரின் செய்கை விசித்திரமாய் இருக்க, வருணைப் பார்த்தவள் மீண்டும் அவரின் புறம் நோக்க, சொல்லி வைத்தார் போல் வீட்டின் வாயிலில் அழைப்பு மணி அடித்ததில் இருவருமே வாயிலை நோக்கித் திரும்பினர்.

எஜமானனின் உத்தரவை எதிர்பார்த்து ஃபாத்திமா நிற்க, “உள்ள வரச்சொல்..” என்று மட்டும் கூறியவனின் கட்டளைக்குப் பணிந்து ஃபாத்திமா வாயிலை நோக்கி ஓட, மறு நிமிடம் வீட்டினுள் நுழைந்தான் ஷிவா.

இருக்கும் அதிர்ச்சிப் போதாது என்று இப்பொழுது தன் மாமனைப் பார்த்ததில் ஏறக்குறைய மயங்கும் நிலையைத் தழுவிய துர்காவின் தேகமும் நடுங்கியது.

அவளின் தடுமாற்றத்தை உணர்ந்த வருண் அவளின் தோள் பற்றி அணைத்து தனக்கு வெகு அருகே நிற்கச் செய்ய, நெருப்பில் நிற்பது போல் இருந்தது துர்காவிற்கு.

புதையலைக் காக்கும் நாகம் அதை எடுக்க வருபவரிடம் காட்டும் சீற்றத்தை ஒத்து, தன் தோளை இறுக்கப்பற்றி நிற்கும் கணவனின் கரத்தில் அளவுக்கதிமான அழுத்தம் இருந்ததில், மீண்டும் அவனை ஏறிட்டு நோக்கினாள்.

ஆயினும், துடைத்து எடுத்த உணர்ச்சிகளுடன், இரும்பாய் இறுகி நின்றிருந்தவனின் முகத்தில் இருந்து எதையும் கண்டறிய அவளால் இயலவில்லை.

தங்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருக்கும் மாமனைப் பார்க்க, கணவனுக்குப் போட்டிப் போடும் வகையில் எவ்வித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாது மிடுக்காய் நடந்து வந்தவன் அவர்களுக்கு எதிரில் நின்றதுமே, துர்காவின் பாதங்களுக்குக் கீழ் இருக்கும் பூமி நழுவியது போலவே இருந்தது.

"நீ வருவன்னு எனக்குத் தெரியும் ஷிவா."

"அதாவது நான் சொன்னதை நீ திருப்பிச் சொல்ற."

"நோ.. உன் வீட்டுக்கு, அன்னைக்கே நான் வருவேன்னு நீ எதிர்பார்க்கலைன்னு தான் நீ சொன்ன, ஆனால், நான் இதை எதிர்பார்த்தேன். எப்போ நான் என் வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கிறேனோ அப்பவே நீ வருவன்னு நான் எதிர்பார்த்தேன். நான் எதிர்பார்த்தது மாதிரி இதோ நீயும் வந்துட்ட..”

இதழ்கோடியில் நெளிந்த இகழ்ச்சி சிரிப்புடன் கூறிய வருண் தன் அருகே அரண்டு போய்ப் பயந்து நடுங்கியவளாய் நின்றிருக்கும் மனையாளைப் பார்த்தவனாய்,

"Meet my wife Shiva.” என்றவன் சற்று நிறுத்தி, “Do you think destiny is pre-written or do we make our own destiny? Nah, my destiny is not pre-written Shiva. I make my own destiny. And she is my destiny!!" என்றான், ‘she is’ என்ற வார்த்தைகளில் மிகுந்த அழுத்தத்தைக் கூட்டி.

[விதி முன்கூட்டியே எழுதப்பட்டதாக நீங்கள் நினைக்கிறீர்களா அல்லது நம் விதியை நாமே உருவாக்குகிறோமா? இல்லை, என் விதி ஏற்கனவே எழுதப்பட்டிருக்கவில்லை. நானே என் விதியை உருவாக்குகிறேன். இவளே என் விதி!!"]

இரு ஆண்களுக்கும் இடையில் சில அடிகள் இடைவெளிகளே இருந்த நிலையில், வருணின் வார்த்தைகளில் ஆங்காரத்தில் உந்தப்பட்ட ஷிவா கோபத்துடன் அடி எடுத்து வைக்க, அதுவரை நடப்பதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் பத்திரிக்கையில் ஆழ்ந்தவராய் அமர்ந்திருந்த சஞ்சீவ் தேஸாய் இருக்கையில் இருந்து எழுந்தார்.

அவரின் சத்தத்தில் திரும்பிய ஷிவாவைப் பார்த்து புன்னகைத்தவாறே, "வாங்க மிஸ்டர் ஷிவ நந்தன்." என்றார்.

அவரின் கனிவான வரவேற்பிலும், இவ்வளவு நடந்தும் அமரிக்கையாய் இருக்கும் அவரின் நிதானத்திலும் வியந்தவனாய் தலையசைத்து அவர் வரவேற்பை ஏற்றுக் கொண்ட ஷிவா மீண்டும் துர்காவின் புறம் திரும்பியவனாய், "வா துர்கா, போகலாம்.." என்றான்.

"மா.. மா.. மாமா.."

வழக்கம் போல் தன்னைக் கண்டு திக்கும் அத்தை மகளைப் பார்க்க ஒரு பக்கம் பரிதாபமாய் இருந்தாலும், மறுபக்கம் கோபமும் வந்தது.

"ம்ப்ச். என் மேல மட்டும் தான் உனக்குப் பயமிருக்கு துர்கா. மற்றவங்க மேல இல்லை. அப்படித்தானே?"

கூறியவன் இன்னமும் அவளின் தோளை வளைத்துப் பற்றியிருக்கும் வருணின் கரத்தைப் பார்க்க, "மாமா.." என்று மீண்டும் விளித்தாள், வேறு என்ன சொல்வது என்பதை அறியாது.

"சரி வா.."

"மாமா, நான் எப்படி?"

"ஏன்? எப்படின்னா, இப்படித்தான்.."

அவள் கரத்தைப் பற்ற எத்தனித்தவனைத் தடுப்பது போல் சட்டெனத் தன் மனைவியைச் சற்று தள்ளி தன் பின்னால் நிறுத்திய வருண், "ஏற்கனவே இவள் யாருன்னு உன்னிடம் Introduce (அறிமுகம்) பண்ணிட்டேன் ஷிவா.." என்றான்.

"வருண்.. இவளை ஏற்கனவே கடத்திட்டுப் போய் மாசக்கணக்கா அடைச்சு வச்சிருந்திருக்க. இப்ப இவளைத் திரும்பவும் தூக்கிட்டுப் போய்க் கல்யாணம் பண்ணிருக்க. இவ்வளவையும் பார்த்துட்டு, நான் இவளை உன்கிட்ட விட்டுட்டுப் போகணும்னு எதிர்பார்க்கிறியா?"

அமைதியாக, ஆனால் அழுத்தத்துடன் கர்ஜித்த ஷிவாவை, தன் ஸ்வாசக் காற்று அவன் முகத்தில் வீச நெருங்கி நின்ற வருண், "நான் தான் இவளைக் கடத்தினேன்னு சொல்ற. மாசக்கணக்கா அடைச்சு வச்சிருந்தேன்னு வேற சொல்ற, பட், அதற்கான ப்ரூஃப் உன்கிட்ட இருக்கா ஷிவா?" என்றதுமே ஷிவாவின் முகத்தில் ஒரு கணம் இருள் படிந்தது.

"நீ என்ன சொல்ல வர்றன்னு எனக்குத் தெரியும் வருண்."

"யெஸ், அதே தான். துர்கா என்னைப் பற்றிப் போலிஸில் ஏதாவது கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்காளா, என்ன?"

தன்னைக் குறிப்பார்த்து அடிக்கும் எதிரியின் வினாவில் நெஞ்சில் குமுறிய பல உணர்ச்சிகளுக்கு இடையில் மிகவும் அதிகமாக ஷிவா உணர்ந்தது அவமானத்தைத் தான்.

பதில் பேச முடியாத தன் நிலையை நினைத்து அவனது வலது கை முஷ்டி இறுகியது.

தங்களுக்குள் நடக்கும் விவாதத்திற்கு இடையில் வராது அமைதியாய் நின்றிருந்த துர்காவை அவன் திரும்பிப் பார்க்க, மாமனின் கை முஷ்டியை ஒரு கணம் பார்த்தவளின் நெஞ்சில் குளிரெடுத்ததில் அவளையும் அறியாது வருணின் முதுகுப் புறம் மென்மேலும் ஒன்றினாள்.

அவளின் செய்கையில் ஷிவாவினுள்ளும் நிழல் படிந்தது.

'என்னை விட இவன் உன்னைப் பாதுகாப்பான் என்று இவன் மேல் உனக்கு அவ்வளவு நம்பிக்கையா?'

மனம் கொந்தளிக்கத்தான் செய்தது!

ஆயினும் அவளை அங்கு விட்டுவிட்டு செல்லவும் அவனது மனம் இடம் கொடுக்கவில்லை.

"நீ சொல்றது கரெக்ட் தான் வருண். எங்க குடும்பத்தில் இருக்கும் பெண்களை ரொம்பப் பாதுகாப்பா வளர்க்கணும்னு நினைச்சு, அவங்களைக் கோழையா வளர்த்துட்டாங்களோன்னு நானே நினைச்சிருக்கேன். அது துர்கா விஷயத்திலும் நடந்திடுச்சோன்னு தோனுது. இல்லைன்னா உன்னைப் போல் ஒருத்தன் தன் கழுத்தில தாலிக் கட்டற வரைக்கும் அவள் பொறுமையா இருந்திருப்பாளா? இல்லை, பிறந்ததில் இருந்து என்னைப் பார்த்து வளர்ந்தவள் இன்னைக்கு என்னை விட்டுட்டு உன்னை மாதிரியான ஆளுக்குப் பின்னால் மறைஞ்சு நிற்பாளா?"

"ஸோ, இதுக்குக் காரணம் கோழைத்தனமுன்னு சொல்ற.”

“தென்?”

“ஏன், அது காதலா கூட இருக்கலாமில்லையா?"

"வாட்? காதலா? அதுவும் உன் மேலேயா?"

இகழ்வாய்ச் சிரிப்பது போல் கூறும் ஷிவாவையே விநாடிகள் சில தீர்க்கமாகப் பார்த்த வருண்,

"தன்னைத்தானே ஏமாத்திக்கிறதுல இவள் தான் கெட்டிக்காரின்னு நினைச்சேன். ஆனால் அவளை விட நீ கெட்டிக்காரனா இருக்க. சேன்ஸே இல்லை ஷிவா. I guess, இது உங்கள் குடும்பத்தில் எல்லாருக்கும் உள்ள பழக்கம்னு நினைக்கிறேன். ஐ மீன், உங்கள் முகத்தை மறைக்க நீங்க என்ன அழகா mask [முகமூடி] போட்டுக்கிறீங்க." என்றதில் கணவனின் வார்த்தைகளில் இதயத்தில் முட்கள் குத்தியது போல் இருந்ததில், கண்களில் மெலிதான நீர்ப்படலத்துடன் தலைக் கவிழ்ந்தாள்.

தன் அத்தை மகளின் நிலையை ஏறக்குறைய ஒரு கையாலாகாத நிலைமையில் பரிதாபத்துடன் பார்த்தான் ஷிவா.

ஆயினும், சட்டப்பூர்வமாக அரங்கேயிருக்கும் திருமணம் அது, அவளே விரும்பாவிடின் தற்போதைய நிலையில் அவளை வருணிடம் இருந்து பிரித்துச் செல்வதும் சாத்தியமல்ல!

"துர்கா.. உன்னுடைய வாழ்க்கைப் பாதை திசை திரும்பியதுக்குக் காரணம் நான். அது எனக்கு நல்லாவே தெரியும். அதைச் சரி பண்ண நான் எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் அது முடியலை. ஆனால் அதுக்குக் காரணம் நான் மட்டும் இல்லை துர்கா. நீயும் தான். நீ விரும்பி இவனை ஏத்துக்கிட்டியான்னு எனக்குத் தெரியலை. ஆனால் இவனை விட்டுட்டு நீ இந்த நிமிஷம் கூட என்னுடன் வந்துடலாம். அதை நீ செய்யலை.

இதோ இப்ப கூடச் சின்ன வயசில இருந்து ஒன்னா உன் கூட வளர்ந்த என்னைப் பார்த்து பயந்துட்டு இவன் கிட்ட ஒட்டிட்டு நிற்குற. ஸோ, இனி என்னால் மட்டும் இல்ல, உன்னைப் படைச்ச அந்தக் கடவுளால கூட உன்னைக் காப்பாத்த முடியாது துர்கா. ஏன்னா நீ நினைக்கிற மாதிரி இவன் கிடையாது. எப்படியும் இன்னும் கொஞ்ச நாளில் சில உண்மைகள் உனக்குத் தெரிய வரும். உனக்கு மட்டும் இல்லை, இந்த உலகத்துக்கே.. அப்போ நான் ஏன் இவனிடம் இருந்து உன்னைப் பிரிச்சு கூட்டிட்டுப் போக முயற்சி செஞ்சேன்னு உனக்குப் புரியும். ஆனால் அப்போ காலம் கடந்திருக்கும் துர்கா."

கூறியவனின் குரல் வெளிப்புறத்திற்கு அமைதியாகத் தெரிந்தாலும், இறுக மூடிய கைகளுடன், சுருங்கின புருவங்களும், இறும்பாய் விறைத்த உடல் மொழியும், ஷிவாவின் ஆங்காரத்தையும் கோபத்தையும் அப்பட்டமாய் வெளிப்படுத்தியதில், அவனின் இந்த தோரணை துர்காவை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது.

இதற்கு மேல் எனக்கு இங்கு என்ன வேலை என்பது போல் விருட்டென்று வீட்டின் பிரதான வாயிலை நோக்கி ஷிவா நடக்க, நடப்பதையும் நடக்கப் போவதையும் அந்தச் சில விநாடிகளுக்குள் அதிர்ந்து உணர்ந்துக் கொண்டவளாய், அவனிடம் செல்ல எத்தனித்துப் போராடியவளின் கையை இறுக்கப் பற்றித் தடுத்தான் வருண்.

புதையலைக் காக்கும் நாகம் அதை எடுக்க வருபவர்களிடம் காட்டும் சீற்றத்தை வருண் காட்டினான் என்றால், அது உனது புதையல் அல்ல, எங்களின் பொக்கிஷம் என்று அதே சீற்றத்தைக் காட்டும் ருத்திரத்தில் இருந்தது ஷிவாவின் உள்ளம்.

ஆயினும், தான் அவர்களுக்கு யார்? புதையலா அல்லது பொக்கிஷமா என்பதை அவர்களுக்கு உணர்த்தும் பொறுப்பில் இருந்தவளின் இதயமோ,

‘இங்கு நடந்து கொண்டிருக்கும் நாடகத்தில் என்னால் பேச இயலாது.. ஏனெனில் நான் இந்த நாடகத்தை உருவாக்கியவள் அல்ல. அதனில் ஒரு பகடைக்காய்.. அடமானம் வைக்கப்பட்ட பகடைக்காய்!’ என்ற கூற்றினிலேயே உழன்று கொண்டிருந்தது.

அவளின் கதறலுக்கு மாறாக ஷிவாவின் உள்ளமோ கருவறுக்கும் வெறியைத் தனதாக்கிக் கொண்டிருந்தது.

‘நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் என்னைத் தேடி துர்காவை நான் வரச் செய்வேன் வருண்.’

ஆக்ரோஷத்துடன் வருணது கோட்டையைவிட்டு வெளியே வந்து கொண்டிருந்த ஷிவாவை நோக்கி ஓட்டமும் நடையுமாக ஓடிய அஷோக், அவனுக்குப் பின்புறம் பார்த்தவாறே "துர்கா எங்க ஷிவா?" என்றான்.

பதில் எதுவும் கூறாது, கோட்டைச்சுவருக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த தனது ஆரஞ்சு நிற ஃபோர்ஸ் எக்ஸ்ட்ரீமில் ஏறிய ஷிவா, அருகே அமரும் அஷோக்கின் முகம் நோக்கித் திரும்பியவன்,

"அஷோக். ஃப்லேமிங் வெர்மிலியன் பற்றிய டீடெய்ல்ஸ் மட்டும் இல்ல, ட்ரக்ஸ் எக்ஸ்போர்ட் பற்றிய எல்லா விஷயங்களும் எனக்கு வேணும்.." என்றான்.

“ஷிவா?”

“யெஸ் அஷோக். அதுலயும் குறிப்பா வருண் பெயர் வரும் எல்லா ரிப்போர்ட்ஸும் என் கைக்கு வந்து சேரணும், உடனடியா..”

பேசியவாறே வாகனத்தைச் சீறிக் கிளப்பிச் சாலையில் அசுர வேகத்துடன் கலக்கும் நண்பனின் ஆக்ரோஷத்திலேயே தெரிந்து போனது, ஷிவா எதிர்நோக்கிய காரியம் வருணின் வீட்டில் நடக்கவில்லை என்று.

ஆயினும் ஷிவா செய்வதும் சரியல்ல என்று, ஒரு நேர்மையான காவலதிகாரியாக, தெளிவான குரலில்,

"ஷிவா.. இதுல ஆர்யன் தான் சம்பந்திப்பட்டிருப்பான்னு நாம் நினைச்சோம், ஆனால் அந்த ஆர்யனே இதுல சம்பந்தப்பட்டிருக்கிற மாதிரியான ப்ரூஃப்ஸ் எதுவுமே நமக்குக் கிடைக்கலை. இன் ஃபேக்ட், இதெல்லாம் கலானி மிர்சாவின் கொலைக்குப் பழிவாங்க மிர்சா கேங்கால் கிளப்பி விடப்பட்ட புரளியா இருக்குமோங்கிற சந்தேகமும் வந்திருக்கு. இந்த நிலையில் நாம் வருணை இதுல இழுக்கிறது சரின்னு எனக்குப் படலை." என்றான்.

"அஷோக், ப்ளீஸ். இதுல ஆர்யன் அண்ட் வருண், ரெண்டு பேருமே சம்பந்தப்பட்டிருக்காங்க. அஃப் கோர்ஸ் என்னிடம் அதற்கான ஆதாரங்கள் இல்லை, பட், இதில் நிச்சயம் வருண் சம்பந்தப்பட்டிருப்பான்னு என்னுடைய உள் மனசு சொல்லுது."

"ஆர் யூ ஷ்யூர்?"

"என்ன கேள்வி இது அஷோக்?"

"எப்போதும் உன்னுடைய இன்ஸ்டின்க்ட்ஸ் தவறாப் போனதில்லை ஷிவா, ஒத்துக்கிறேன். ஆனால் இப்போ இது தான் சரின்னு உன்னை முடிவெடுக்க வைக்கிறது உன்னுடைய அறிவு இல்லை. உன்னுடைய மனசு.."

அவன் கூறுவதன் அர்த்தம் ஷிவாவிற்கும் புரிந்து தான் இருந்தது, ஆயினும் காழ்ப்புணர்ச்சி மற்றவை அனைத்தையும் விடப் பெரிதானதுவே என்பது போல், அவனது அத்தை மகளின் மேல் அவன் கொண்ட பாசம் அவன் புத்தியை மழுங்கடித்தது.

"அஷோக், அவன் என்னை ஜெயிச்சிட்டதா நினைச்சுட்டு இருக்கான், ஆனால் அது பொய்ன்னு நான் காட்டணும்."

"அதுல அடிபடுவது துர்கா தானே ஷிவா.."

"அது எனக்குத் தெரியும்.. அவளை எப்படி அவன் கிட்ட இருந்து காப்பாத்துறதுன்னும் எனக்குத் தெரியும்.. இப்போ நான் சொன்னதை மட்டும் செய் அஷோக்.."

"ஷிவா?"

"Ashok,
Sometimes you have to give people a taste of their own medicine!"

கட்டளையைப் போல் உரைத்த நண்பனின் வார்த்தைகளைக் கேட்டு அஷோக்கின் மனதில் தோன்றிய கேள்விகளும் இவையே.

'அதுவரை துர்காவின் நிலைமை? இந்த வருண் அவளைச் சும்மா விடுவானா? இவன் கூறியது போல் நேற்று அவர்களுக்குள் எதுவும் நடக்காது இருந்திருக்கலாம், ஆனால் இனி வரும் நாட்களும் அப்படி இருக்க வருண் விட்டுவிடுவானா? அதற்குப் பிறகு அவளைக் காப்பாற்றிப் பயன் இருக்குமா? இவனுங்க ரெண்டுப் பேத்துக்கும் இடையில் பணயக் கைதியாகச் சிக்கி இந்தச் சின்னப் பெண் சின்னாபின்னமாகுவதா?’

ஒரு நல்ல நண்பனாக, நேர்மையான காவல் அதிகாரியாக, அஷோக்கின் மனதில் உருவான கேள்விகளுக்கு மாற்றாக நடந்து கொண்டான் ஷிவ நந்தன்.

அதன் விளைவு?

*******************************

அம்மாளிகையை விட்டுச் செல்லும் மாமனின் முதுகையே வெறித்துப் பார்த்திருந்தவளின் விழிகளைக் கண்ணீர் திரை மறைத்தது.

அவன் கூறிச் சென்ற வார்த்தைகள் அம்மாளிகை முழுக்கவும் எதிரொலிப்பது போல அதிர்ந்து ஒலித்ததில், செவிப்பறைகளும் கிழிந்தன போல் வலித்தன.

தன் நிலை புரிந்தும் புரியாமலுமாய் நின்றிருந்தவளின் கால்கள் தடதடக்க, தடுமாறிக் கீழே விழப் போனவளின் இடையை இறுக்கிப் பிடித்த வருண், "நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு, மற்றதை அப்புறம் பார்த்துக்கலாம்.." என்றான்.

"இல்ல.. நா.. நா.."

"நீ துர்கா தான், ஆனால் நான் அந்த ஷிவா இல்லை. அதனால் இனி பயத்துல இப்படித் திக்கித்திக்கி பேசணும்னு அவசியமும் இல்லை. என்ன சொல்லணுமோ அதைத் தைரியமா சொல்லு."

"நான் மாமாவைப் பார்க்கணும்."

"மாமாவையா? இப்பத்தான அவனைப் பார்த்த, திரும்பவுமா?"

"இல்ல.."

"பின்ன? ஓ, இந்த மாமாவையும் தவிர உனக்கு வேற மாமா இருக்கானா? எத்தனை மாமா-தாண்டி உனக்கு இருக்கானுங்க?"

"ம்ப்ச்.. நான் உங்க அப்பாவை சொன்னேன். எங்க ஊருல மாமனாரை மாமான்னு தான் சொல்லுவோம்.."

கூறியவளை அவன் ஆய்ந்து ஆராயும் கண்களுடன் பார்க்க,

"எங்க ஊரில் மருமகள் மாமனாரை பாபுஜி, பிதாஜி, பாப்பா-ன்னு கூப்பிடுவாங்கம்மா. அப்படின்னா அப்பான்னு அர்த்தம்." என்று தனக்குப் பின்னால் கம்பீரமாய்க் கேட்டக் குரலில் சற்றே திகைத்தவளாய் வெடுக்கென்று திரும்பிப் பார்த்தாள்.

அங்கு அவளது மாமனார் சஞ்சீவ் தேஸாய் நின்று கொண்டிருந்தார்.

நடந்த அனைத்தையும் அவர் கவனித்துக் கொண்டு தான் இருந்திருக்கிறார் என்பதைப் புரிந்துக் கொண்டவளுக்கு என்னை அப்பா என்று கூடக் கூப்பிடலாம் என்று அவர் மறைமுகமாகக் கூறியிருந்ததில், புயல்காற்றாய் சுழன்று அடித்துக் கொண்டிருந்த மனம் சற்றே சாந்தமடைந்தது போல் இருந்தது.

சட்டென்று அவரை நெருங்கியவள், "அப்படின்னா நான் உங்களை அப்பான்னுக் கூப்பிடட்டுமா?" என்றாள் சின்னக் குரலில்.

அதுவரை இறுகியிருந்த மனம் இலகுவாக, சிரித்தவர், "கூப்பிடும்மா. எனக்குத்தான் மகள் இல்லை. அதுக்குள்ள உன் மாமியார் போய்ச் சேர்ந்துட்டா. ஆனால் மருமகள் உருவில் மகளா ஒரு உறவு என் வீட்டுக்கு வந்திருக்குன்னு நான் நினைச்சிக்கிறேன்.. நீ அப்படியே என்னைக் கூப்பிடு.." என்றார்.

அதுவரை அடைப்பட்டது போல் தடைப்பட்டிருந்த ஸ்வாசம் மெல்லமாய் வெளிவந்ததில் சிறு முறுவலுடன் கணவனைத் திரும்பிப் பார்க்க, அவனின் கூரியப் பார்வையுடனான நெற்றிச்சுருக்கம் உணர்த்தியது, இதை அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்று.

“என்னங்க..”

“----”

"நீங்களும் வாங்க. அப்பா காலில் விழுந்து ஆசிர் வாங்கலாம்."

"உனக்கு இஷ்டம் இருந்தா நீ வாங்கிக்க.."

வெடுக்கென்று முகத்தில் அடித்தார் போன்று கூறியவன் தங்களுக்குப் பின்னால் நிற்கும் ஃபாத்திமாவை நோக்கித் திரும்பியவனாய்,

"ஃபாத்திமா.. நீயும் இந்த வீட்டுக்கு புதுசு தான். ஆனால் லீலாம்மா இங்க ரொம்ப வருஷமா வேலை செய்யறாங்க.. அதாவது எங்க அம்மா காலத்துல இருந்து. அவங்கக்கிட்ட துர்காவுக்கு இந்த வீட்டை சுற்றிக் காட்டச் சொல்லு.." என்றவன் விடுவிடுவென மாடிப்படிகளில் ஏறி தன் அறைக்குள் புகுந்து மறைந்தான்.

'லீலாம்மாவா..'

முதன் முறை அம்மாளிகைக்குள் நுழைந்திருக்கும் இரு பெண்களும் திருதிருவென்று விழிக்க,

"அவங்க பேரு லீலா. எங்களுக்குக் கல்யாணம் ஆன சமயம், என் மனைவியோட துணைக்கு அவங்க ஊரில் இருந்து வந்தவங்க தான் இந்த லீலா. அதற்குப் பிறகு தான் அவங்களுக்குமே கல்யாணம் ஆனது. அவங்க கணவரும் இங்கேயே வந்து எங்க வீட்டிலேயே வேலைப் பார்த்தார். ஆனால் பாவம், கல்யாணம் ஆகி ஒரு வருஷத்திலேயே அவங்க கணவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துட்டார். நாங்க எவ்வளவோ முயற்சி செய்தோம், ஆனால் அவரை எங்களால் காப்பாற்ற முடியலை. அதற்குப் பிறகு லீலா அவங்க ஊருக்கு திரும்பிப் போகலை. இங்கேயே தங்கிட்டாங்க. அவங்க வீட்டுல இருந்து வந்து கூப்பிட்டும் போக மறுத்துட்டாங்க. அதுலயும் வருணோட அம்மா இறந்ததற்குப் பிறகு அவங்கத்தான் வருணுடைய அம்மா போல அவனைப் பார்த்துக்கிட்டாங்க." என்று விளக்கமளிக்க, துர்காவின் கண்கள் அந்தப் பெண்மணியைத் தேடின.

"அவங்க சமையல் அறையில் தான் இருக்காங்க துர்கா. அவங்களும் கல்யாணம் ஆகி ஒரு வருஷத்திலேயே இப்படி ஆகிட்டதால், என் மனைவியும் சீக்கிரமே தவறிட்டதால் வருணாவது அவன் மனைவியோட ரொம்ப வருஷம் நல்லா இருக்கணும்னு அவங்க வெளியவே வரலை. இல்லைன்னா அவங்க தான் இன்னைக்கு உங்களுக்கு ஆரத்தி எடுத்து, உங்களை வரவேற்று இருப்பாங்க.."

அவர் கூற கூற அந்தப் பெண்மணியைப் பார்த்தே தீர வேண்டும் என்ற ஆவல் துர்காவை உந்தியது.

"அவங்கக்கிட்ட நான் ஆசிர் வாங்கணும்பா. அதுக்கு முன்ன உங்கக்கிட்ட.."

கூறியவள் சஞ்சீவ் தேஸாயின் பாதங்களைத் தொட, குனிந்து அவளின் தோள்களைப் பற்றியவர், "நல்லா இரும்மா." என்றவாறே அவளை எழுப்பினார்.

"நான் அவங்கக்கிட்ட ஆசிர் வாங்கிட்டு வரேம்பா.." என்றவளாய் சமையற்கட்டு எங்கிருக்கின்றது என்று பார்க்க, ‘வாங்க’ என்பது போல் தலையசைத்துச் சைகை செய்த ஃபாத்திமா அவளை லீலாவிடம் அழைத்துச் சென்றாள்.

அங்குக் கிட்டத்தட்ட தன் அன்னையின் தோற்றத்துடன் நின்றிருந்தவரைக் கண்டதில் வேகமாய் நடந்தவள் அவரின் கால்களில் விழுந்தாள்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத அப்பெண்மணி பதறியவராய் அவளின் தோள் பற்றி எழுப்பியவர், "என் காலில் எல்லாம் ஏம்மா விழுற?" என்றார்.

"அத்தை இருந்திருந்தா அவங்க காலில் விழுந்து ஆசிர் வாங்கி இருப்பேன்ல, அது மாதிரி தான்."

கூறியவளை அணைத்தவர் பூஜை அறைக்கு அவளைக் கூட்டிச் செல்ல, கடவுளின் படங்களையும், அவர்களுக்கு அருகில் மாட்டப்பட்டிருக்கும் மாமியாரின் புகைப்படத்தையும் நமஸ்கரித்தவளுக்கு மாளிகையைச் சுற்றிக் காட்டியவர் இறுதியில் அவளது கணவனின் அறைக்கு அழைத்துச் சென்றார்.

"இது தான் வருண் தம்பியோட ரூம். அதாவது மாஸ்டர் ரூமுன்னு சொல்லுவோம். இதுக்குள்ள தான் அவருடைய ஆஃபிஸ், ஜிம், பெட் ரூம் எல்லாமே இருக்கு."

கூறியவர் அறைக்கதவைத் தட்டுவதற்குக் கையை உயர்த்த, சொல்லி வைத்தார் போல் வருணும் கதவைத் திறந்தவன் தன் அறையின் வாயிலில், அழகாய் புத்தம் புது மாங்கல்யம் ஜொலிக்க நின்று கொண்டிருக்கும் மனைவியைக் கண்டு வெற்றி புன்னகைப் பூத்த அதே நேரம், அவனது அலைபேசியும் அலறியது.

அரிமாக்களின் வேட்டை!

தொடரும்
 
Last edited:
K

K. Vizeastry

Guest
Very interesting...இரண்டு அரிமாக்கள் மோதிக்கொண்டது..செம்மையா இருந்தது..
 

Vidhushini

Member
inbound4936596179744492189.jpg

வருண் தேஸாய் தனது ராஜ்ஜியத்தின் ராணியாக துர்காவைத் திருமணம் செய்து அழைத்துவந்தாலும், வருண்-ஷிவா மத்தியில் தன்னை ஒரு பகடைக்காயாய் உணர்கிறாள்....

inbound1496471010697449464.jpg

What if the pawn realises that she is the 'Queen'? And make both the Kings will be defeated one day by her, especially Varun?

inbound9011920352104142529.jpg

குருக்ஷேத்திரப் போரின் முடிவு எட்டப்படும் முன், சீதா-துர்கரூபிணி-சிதாரா ஆகிய பெண்களின் நிலை மனதளவில் எவ்வளவு துயரங்களைச் சந்திக்க நேரிடுமோ?

That phone call might be from Aryan....

Very interesting @JB @JLine sis❤️
 
Omg… Pawam Shivu… Avanukku theriyum Durga epdiyum vara matta nu… Durga manasula Varun than irukkan num… aanalum pawama irukkan…

Will Sanjay Desai turn approver against Varun?

Durga voda intention ennava irukkum????

Hope Shiv never goes wrong to prove Varun as culprit
 

saru

Member
Lovely update dear
drugs matter la Aryan Varun um irukrathu pola oru mayai create seidrukane
Enna randu perum sernthu ellam pandra mathiti Thane veliya triudu
Siva wrong route poga vaipila
Oru vela Varua vachi unmai edukka porana
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top