JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

  • Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், jbtamil18@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Dear Guest, Please register in the forum to read stories of the writers and post your valuable comments. Please email: jbtamil18@gmail.com or whatsapp: +91-6384850278 any login related queries.

JLine Bookstore Online

Episode 15 & 16

அத்தியாயம் 15 :
நறுவியை அழைத்துக்கொண்டு சென்னை வந்து சேர்ந்த செல்வம், கல்லூரி விடுதியில் இடம் கிடைத்திருக்கும் படிவத்தை வார்டனிடம் சமர்ப்பித்து, நறுவிக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொடுத்து...
"இன்று ஓய்வு எடுத்துக்கொள் நறு, நாளையிலிருந்து கல்லூரி செல்லலாம்" எனக்கூறி அவளின் தேவைக்கு குறிப்பிட்ட தொகையை அவளிடம் கொடுத்தவன் அன்றே தனது ஊருக்கு செல்ல பேருந்தில் ஏறிவிட்டான்.
விடுதி கல்லூரி வளாகத்தின் உள்ளே இருப்பதாலும், இன்னொரு அழுத்தமான காரணம் இருப்பதாலும், நறுவியின் பாதுகாப்பை பற்றிய பயமின்றி அன்றே செல்வம் புறப்பட்டு விட்டான்.
நறுவி முதுகலை என்பதால் அவளுக்கு தனியறையே கொடுத்திருந்தனர். அவள் விரும்பியதும் தனிமை தான்.
'கடைசி வரை என் காதலை நீங்க ஏற்றுக் கொள்ளவேயில்லையே மாமா.' நறுவியின் மனம் ஊமையாக அழுதது.
"எனக்கு பயந்தா மாமா நீங்க யாருக்கும் சொல்லாமல் போயிட்டீங்க?" அருகில் இல்லாதவனிடம் கேள்வி கேட்டவள் பதிலில்லாது போகவே கதறி துடித்தாள். அழுகையில் கரைந்தவள் எப்போது உறங்கினாள் என்று தெரியாது.
காலை செல்வத்தின் அலைபேசி அழைப்பில் கண் விழித்த நறுவி, அவன் ஊருக்கு சென்றுவிட்டதை அறிந்து, தன்னுடைய நலனையும் தெரிவித்துவிட்டு குளியலறைக்குள் புகுந்தாள்.
கல்லூரிக்கு தயாராகி வந்தவள் விடுதியிலிருக்கும் மெஸ்ஸில் சென்று, வாழ்வதற்காக சாப்பிட வேண்டுமென்கிற நிர்பந்தத்திற்காக இரண்டு இட்லிகளை விழுங்கி வைத்தாள்.
மீண்டும் அறைக்கு வந்தவள் சிறு பையினை(bag) எடுத்து தோளில் மாட்டி கல்லூரி கட்டிடத்தை நோக்கி நகர்ந்தாள்.
****
சென்னை வந்து சேர்ந்த செழியன், ஒரு பூங்காவிற்கு தமிழை வரவழைத்து, தமிழிடம் அனைத்தையும் மறைக்காது கூறினான். யாரிடமாவது சொன்னால் மனதின் பாரம் குறையுமே என்று அதனை செய்தான்.
"யூ ஃபூல் இடியட்... ஆர் யூ மேட்... உன்னலாம் என்ன சொல்லி திட்டுறது தெரியலடா, நறு அவ்வளவு கெஞ்சியும் கல்லு மாதிரி இருந்துட்டு வந்திருக்க, நீ லவ் பண்ண பொண்ணை எப்படிடா உன்னால் இன்னொருத்தனுக்கு தாரைவார்த்துக் கொடுத்துட்டு வர முடிஞ்சுது."
செழியன் மீது வந்த கோபத்திற்கு தமிழ் திட்டி தீர்த்துவிட்டான். தமிழ் தன் கோபத்தை கொட்டிய பிறகும் செழியன் அமைதியாகவே கல் மேடையில் அமர்ந்திருந்தான்.
செழியனின் வாடிய முகமும் நலுங்கிய தோற்றமுமே அவன் எந்தளவிற்கு உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருக்கிறான் என்பதை தமிழுக்கு உணர்த்தின.
'வேதனையில் துவண்டு வந்திருப்பவனை தானும் அதிகமாக பேசிவிட்டோமே' என வருந்திய தமிழ்,
"வாடா வீட்டிற்கு போகலாம். நீ என்னுடனே தங்கிக்கொள்" என்றான்.
"நான் இங்கிருப்பது யாருக்கும் தெரியக்கூடாது. செல்வத்திடம் கூட நீ என்னைப்பற்றி எதுவும் சொல்லக்க்கூடாது. நான் உன் வீட்டில் வந்து இந்த நிலையில் தங்கினால் சரிவராது. உன் அம்மாவிற்கு தெரிந்தால் நான் இங்கிருக்கும் தகவல் கண்டிப்பாக ஊருக்கு போய்விடும்."
தமிழ் எவ்வளவோ சொல்லியும் செழியன் மறுத்து விட்டான்.
"இதற்கு மேலும் வற்புறுத்தினால் நான் இங்கிருந்தும் செல்ல வேண்டியதாக இருக்கும்" என்ற செழியனின் மிரட்டலில் தமிழ் அடங்கிப்போனான்.
அன்றே தனக்கு தெரிந்தவர் மூலம், சிறிய அளவிலான தனி வீடு ஒன்றை செழியனுக்கு வாடகைக்கு பார்த்து கொடுத்தான் தமிழ்.
இரண்டு படுக்கை அறைகளுடன் கிச்சன், வரவேற்பறை, வீட்டிற்கு முன்னால் சுற்றுச்சுவரை ஒட்டி மல்லிகை பந்தல், பின்னால் சிறு தோட்டம் என்று அவனுக்கு போதுமான மற்றும் பிடித்த வகையில் வீடு இருந்தது.
அடுத்த நாளே கல்லூரிக்கு சென்று தனது பணிக்கான ஒப்புதல் படிவத்தை முதல்வரிடம் சமர்பித்தவன், தனக்கான கால அட்டவணையை பெற்று மாணாக்கருக்களுக்கு பாடம் நடத்த துவங்கிவிட்டான்
தன்னுடைய நண்பனின் சிபாரிசு என்பதோடு ராஜசேகர் சொல்லியது போலவே செழியனின் குணமும் நல்ல பண்பு மிக்கவனாக இருக்க, விரைவிலேயே முதல்வரிடம் மற்றும் தனது துறை தலைமை பேராசிரியரிடம் நன்மதிப்பு பெற்றிருந்தான்.
தந்தையின் உடல்நிலை காரணாமாக விவசாயம் செய்தாலும், ஆசிரியர் தொழில் செழியனின் ஆசை. நேசித்து விரும்பிய பணியை தந்தைக்காக விட்டுவிட்டு வந்தபோது மகனாக கர்வமாக இருந்தாலும் மனதின் ஓரத்தில் சிறு ஏக்கம் இருந்தது என்னவோ உண்மை. ஆனால் இன்று அந்த ஏக்கமும் அவனுக்கு தீர்ந்தது. அதே சமயம் விவசாயத்தை தொடர முடியாது போனதே என்ற வருத்தமும் அவனுக்கு இருந்ததது.
மிகவும் பிடித்தமான வேலை... ஆதலால் மனதில் எவ்வளவு சோகம் இருந்த போதிலும் கல்லூரிக்குள் அடி வைத்துவிட்டால் அனைத்தையும் புறம் தள்ளி, படு உற்சாகமாக பணியை செய்திடுவான். இளம் வயது என்பதால், மாணவர்களின் மனநிலை புரிந்து அவர்களுக்கேற்றவாறு பாடம் நடத்துவதாலும், ஆசிரியர் என்கிற பாகுபாடின்றி ஒரு தோழன் போல் பழகுவதாலும் மாணவர்களுக்கு பிடித்த பேராசிரியர் வரிசையில் விரைவில் இடம் பிடித்திருந்தான்.
கல்லூரி திறந்து ஒரு மாதமாகிய நிலையில்,
"செழியன் உங்க கிளாஸ்க்கு நியூ அட்மிஷன் ஒன்னு வந்திருக்கு, ரிஜிஸ்டரில் நேம் எழுதிக்கோங்க" என்று துறை தலைவர் சொல்லிய பெயரைக் கேட்டு பதிவேட்டில் எழுத உயர்த்திய அவனின் பேனா பிடித்த கை அந்தரத்தில் மிதந்தது.
அப்போதுதான் ஸ்டாஃப் அறைக்குள் நுழைந்த தமிழ்,
"என்ன மச்சான் காத்துல படம் வரைஞ்சிட்டிருக்க" என்று கிண்டல் செய்ததில் தன்னுணர்வு பெற்றவன்,
மீண்டுமொருமுறை துறை தலைவர் மோகனிடம் பெயரை கேட்டான்.
"நறுவிழி."
"ஓகே சார்."
தமிழுக்கு இப்போது புரிந்தது நண்பனின் இந்நிலைக்கான காரணம்.
பதிவேட்டில் காகிதத்திற்கோ வலிக்குமோ என்று மிக மிக மென்மையாக எழுதியவன், எழுதிய பெயரை தன் விரல் கொண்டு மெல்ல வருடினான்.
"போதும்டா... அது வெறும் பேப்பர்."
தமிழ் சொல்லியதில் பதிவேட்டை மூடி வைத்தவன், "உனக்கு கிளாஸ் இல்லையா" என்று கேட்டான்.
செழியனை ஏறயிறங்க பார்த்த தமிழ்,
"இது லன்ச் ஹவர்... வா சாப்பிடலாம்" என்றழைத்தான்.
வேண்டாமென்று மறுத்த செழியனின் மனநிலை புரிந்தவனாக,
"அது நம்ம நறுவாக இருக்காது மச்சான். கல்யாணம் முடிந்த நிலையில் அவள் ஏன் இவ்வளவு தூரம் படிக்க வரப்போகிறாள்" என்றான் தமிழ்.
"ஆமாம் அவள் ஒருவளுக்கு மட்டும் தான் இப்பெயர் இருக்க வேண்டுமா" என தமிழிடம் கேட்பதைப்போல் தன்னிடமே கேட்டுக்கொண்டான். ஆனால் அந்த பெயருக்கு உரிய பெண்ணை கண்டிட தவித்தான்.
அன்று முழுவதும் வகுப்பில் அப்படியொரு பெயரில் யாரும் இணையாது போக ஏமாற்றம் கொண்டான்.
'அது யாராக இருக்கும்' என்ற யோசனையிலேயே வீட்டிற்குள் நுழைந்தவன், நிலைப்படியில் இடித்துக்கொண்டான். நெற்றியில் ரத்தம் கசிய அவனுடன் வந்திருந்த தமிழ் தான் பதறிவிட்டான்.
"வரமாட்டேன்" என்று பிடிவாதம் பிடித்த செழியனை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் தமிழ்.
அடிபட்ட இடத்தினை சுத்தம் செய்து மருந்திட்டு சிறு பிளாஸ்டர் ஒட்டப்பட்டு வெளியில் வந்த செழியன் தமிழுக்கு அருகில் அமர்ந்திருந்தவனை கண்டு அதிர்ச்சியடைந்தான்
உடனே பக்கத்திலிருந்த சுவருக்கு பின்னால் தன்னை மறைத்துக் கொண்டான்.
"நீங்க டாக்டரை பார்க்க உள்ளே சென்றதை பார்த்துதான் உங்களுக்காக இங்கு காத்திருக்கிறேன் செழியன்."
தன் முதுகுக்கு பின்னால் ஒலித்த மாறனின் குரலில் மெல்ல திரும்பி அவனை சங்கடமாக பார்த்து வைத்தான் செழியன்.
"நீங்க.. இங்கு எப்படி?"
"நான் கேட்பதற்கு முன் நீங்க முந்திக்கிட்டீங்க" என்ற மாறன், "என் மனைவியை இங்கு தான் அட்மிட் செய்திருக்கிறேன்" என்றான்.
மாறன் அவ்வாறு சொல்லியதும் செழியனின் உடல் பதட்டத்தில் நடுக்கத்தை காண்பித்து அவனின் முகம் குப்பென்று வியர்த்துவிட்டது.
மாறனின் இருபக்க புஜத்தையும் தன் கைகளினால் அழுந்த பற்றியவன்,
"விழிக்கு என்னாச்சு மாறன், அவள் நன்றாகத்தானே இருக்கிறாள். அவளுக்கு ஒன்றுமில்லையே...!" எனக்கேட்டு அவனை உலுக்கினான்.
தமிழ் வந்துதான் மாறனிடமிருந்து செழியனை பிரித்தெடுத்தான்.
செழியன் கேள்வி கேட்டதிலேயே 'திருமணம் நின்று போனது செழியனுக்கு தெரியவில்லை போலிருக்கே' என யூகித்திருந்தான் மாறன்.
"லவ் பண்ண பொண்ணை இன்னொருத்தன் கல்யாணம் பண்ணிக்கிறதை பார்க்க முடியாமல் ஓடி வந்த நீங்க ஏன் இப்படி துடிக்கிறீங்க செழியன்?"
மாறன் கேட்ட கேள்வியில் நிதர்சனம் புரிய,
"சாரி" என்றான் செழியன்.
"வாங்க என்னுடைய மனைவியை பார்க்க போகலாம்...!"
அழைத்த மாறனுக்கு பின்னால் இறுகிய முகத்துடன் செழியனும், ஆறுதலாக நண்பனின் கரம் பற்றி தமிழும் சென்றனர்.
தீவிர சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்ததும்,
'என் விழிக்கு எதுவும் தப்பா இருக்காது' என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
அறையின் கதவை திறந்து உள் நுழைந்த மாறன் தன்னோடு வந்திருந்த செழியனிடம், வாடிய மலராக படுக்கையில் படுத்திருந்த நித்யாவை காண்பித்து... "மீட் மை வைஃப் மிஸ்டர்.செழியன்" என்றதில் செழியனும் தமிழும் விளங்காத பார்வை பார்த்தனர்.
"ஹோ... உங்களுக்கு முதலிலிருந்த சொன்னால் தான் புரியும்ல" என்றவன் முதல் முறை நறுவியை பார்த்திலிருந்து திருமணம் நின்றவரை அனைத்தையும் கூறினான்.
படுக்கையில் கிடைந்தவளை காண்பித்து... "ஷீ இஸ் நித்யா... மை லவ்" என்றவன் திருமணத்திற்கு முதல் நாள் நடந்த நிகழ்வினை விவரித்தான்.
மீனாட்சி பாட்டியும், செல்வமும் மறைந்திருந்து மாறனை பார்த்துக் கொண்டிருந்தபோது அவன் பேசிக் கொண்டிருந்தது நித்யாவிடம்.
என்ன தான் திருமணம் நடந்திடாது. மாறன் தனக்குத்தான் என்ற நம்பிக்கை நித்யாவிற்கு இருந்தாலும், தன்னவனால் இன்னொரு பெண்ணுக்கு தீயது நிகழ்வது நித்யாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆதலால் நறுவிக்கு எந்த கலங்கமும் நிகழாது இத்திருமணத்தை நிறுத்துங்களென்று நித்யா அன்றிரவு மாறனிடம் கெஞ்ச, அவனோ சற்றும் மனமிலகவில்லை.
"நாளை நான் ஏதாவது செய்துவிட்டால் என்னையும் இப்படித்தான் பழிவாங்கிட நினைப்பீர்களா?" எனக் கேட்க மாறனிடத்தில் பதிலில்லை.
"உங்களுடைய பாவத்துக்கு உங்க மனைவியாகிய நான்தானே பரிகாரம் செய்யணும். ஒரு பொண்ணோட கண்ணீருக்கு காரணமாகப் போற நீங்க எனக்கு வேண்டாம். நீங்க இல்லாமல் என்னால் வாழ முடியாது, அதனால் நான் சாகப் போகிறேன்" என்றவள் இணைப்பைத் துண்டித்துவிட்டு அளவுக்கு அதிகமான தூக்கமாத்திரையை உட்கொண்டாள்.
நித்யா அவ்வாறு சொல்லிய அந்த நொடி அவனுக்கு தன்னவள் நலனே முக்கியம் என்று மனதில் பட, பழிவாங்குதலை முற்றிலும் மறந்தவனாக தன்னவளை தேடி ஓடினான்.
அந்த நேரத்தில் அவன் செய்த ஒன்று, விடிந்ததும் சபையில் காண்பிப்பதற்காக தான் வைத்திருந்த நறு செழியன் புகைப்படத்தை அங்கேயே விட்டுச் சென்றதுதான். பதட்டத்தில் அவனுக்கும் சரிவர எதுவும் பிடிபடவில்லை.
மாறன் வரும் போது உடல் வெட்டியிழுக்க, வாயெல்லாம் நுரையாக... கண்கள் பாதி சொருகிய நிலையில் நித்யா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள்.
அந்நிலையிலும் செழியனை அடையாளம் கண்டு தன் கையினில் இறுக்கி மூடியிருந்த தாலியினை அவள் அவனிடம் காட்ட, நொடியும் யோசியாது, தாமதிக்காது அவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு... தன்னவளை சிறு குழந்தை போல் கைகளில் ஏந்தி மருத்துவமனைக்கு விரைந்தான்.
சிகிச்சையளித்து "உயிருக்கு எவ்வித ஆபத்துமில்லை" என்று மருத்துவர் சொல்லிய பிறகே மாறனின் இதயம் சீராக துடிக்க துவங்கியது.
ஆனால் கணக்கிலடங்கா மாத்திரைகள் உட்கொண்டதால் நினைவு திரும்பாது படுத்திருந்தாள்.
"இரண்டு நாட்களில் நினைவு திரும்பாவிட்டால் கோமா நிலைக்கு செல்லவும் வாய்ப்பிருக்கிறது" என்று மருத்துவர் சொல்லவும் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வந்தான்.
"இங்கு வந்தும் இரண்டு மாதங்கள் முடியப்போகிறது எவ்வித முன்னேற்றமும் இல்லை." மாறனின் கண்கள் கலங்கியிருந்ததோ.
அதற்கு மாறாக செழியனின் முகம் பிரகாசித்தது. இதழ் காதுவரை விரிந்திருந்தது.
"டேய் அவரு சோகமா இருக்காருடா... நீ ஈன்னுட்டு இருக்க." தமிழ் செழியனின் விலாவில் இடித்தான்.
"மச்சி என் விழிடா... கல்யாணம் நடக்கலடா" செழியனுக்கு துள்ளி குதிக்க வேண்டும் போலிருந்தது.
என்ன தான் செழியன் மெதுவாக சொல்லியிருந்தாலும் அந்த சிறிய அறையில் அவனுக்கு அருகிலேயே நின்றிருந்த மாறனுக்கு அவனது குரல் தெளிவாகவே கேட்டது.
"ஆமாம், நறு எப்போதும் உங்களுடைய விழி மட்டும் தான். உங்களுக்கு நடுவில் தேவையில்லாமல் நான் வந்து என்னென்னவோ நடந்துபோச்சு... என்னை மன்னிச்சிடுங்க செழியன்."
நித்யாவின் நிலை மாறனை முற்றிலும் மாற்றியிருந்தது. அதுவே அவனை தான் என்கிற நிலையிலிருந்து இறக்கியிருந்தது.
"பரவாயில்லை மாறன். எல்லாம் நல்லதுக்கே...!" என்று சொல்லிய செழியனுக்கு அப்போதே அவனது விழியை காண வேண்டும் போலிருந்தது. ஆனால் சடுதியில் அவனின் முகம் வேதனையில் சுருங்கியது.
மாறன் செழியனையே பார்த்திருக்க, அவனோ மாறனுக்கு என்ன சொல்வதென்று தெரியாது நின்றிருந்தான்
நீண்ட நிமிடங்கள் நீடித்த அமைதியை மென் குரல் ஒன்று கலைத்தது.
"மாறா."
அந்த குரல் மாறனின் உயிர்வரை சென்று சிலிர்த்தது.
வேகமாக சென்று படுக்கையில் கிடந்த நித்யாவின் கரத்தை பற்றியவன், "நித்தும்மா... நித்து" என்று அரற்றினான்.
விழி மூடியிருந்தாலும் நித்யாவின் உணர்வுகள் விழித்திருந்தன.
நடந்த அனைத்தும் தன்னவன் வாயினாலே சொல்லக்கேட்டு, அவன் தான் செய்ய நினைத்ததற்காக வருந்தி மன்னிப்பும் கேட்டதாலோ எங்கோ சுழன்று கொண்டிருந்த நித்யாவின் நினைவுகள் அவளை வந்தடைந்தன.
மூடிய விழிகளில் கருமணிகள் சுழல, மெல்ல இமை திறந்தவள்,
"எனக்காகவா...!" எனக் கேட்டிட... நீர் தலும்பும் விழிகளுடன் ஆமென்று தலையாட்டினான் மாறன்.
செழியனை கை நீட்டி அழைத்த நித்யா, அவன் அருகில் வந்ததும் அசைக்க முடியாத தனது கைகளை மெல்ல குவித்து விழிகளினால் மன்னிப்பை யாசித்தாள்.
பதறிய செழியன் நித்யாவின் கரத்தினை இறக்கிவிட்டு,
"எனக்கு எவ்வித கோபமுமில்லை... எல்லாம் என்னுடைய அவசரத்தால் நிகழ்ந்தது. ஆனால் என் விழிக்காக, உங்கள் உயிரையும் பணயம் வைத்து..."
வார்த்தைகள் வராது தடுமாறியவன், நன்றி தெரிவித்தான்.
அதன் பிறகு சூழ்நிலை சரியாக, செழியனும் தமிழும், மாறன் மற்றும் நித்யாவிடம் விடைபெற்று செழியனின் இல்லம் வந்தனர்.
வீட்டிற்குள் நுழைந்த செழியன் கை முஷ்டிகளை மடக்கி வானோக்கி தலையை உயர்த்தி வெறி பிடித்தவன் போல் கத்தினான்.
தொடரும்...
*******

அத்தியாயம் 16 :
மருத்துவமனையில் மாறனையும் நித்யாவையும் சந்தித்து விட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கி சென்ற செழியன் மௌனமாகமே வந்தான். கண்ணாடியின் வழியாக செழியனின் முகத்தினை பார்த்த தமிழால் அவனின் அமைதிக்கான காரணத்தை யூகிக்க முடியவில்லை.
தமிழ் வண்டியை நிறுத்திவிட்டு வருவதற்குள் வீட்டிற்குள் நுழைந்த செழியன் கை முஷ்டிகளை மடக்கி வானோக்கி தலையை உயர்த்தி வெறி பிடித்தவன் போல் கத்தினான்.
"டேய் செழியா... என்னடா என்னாச்சு...!"
செழியனின் செய்கையில் தமிழுக்கு பயந்து வந்தது.
அதிர்ந்து கூட பேச தெரியாதவன் இவ்வளவு சத்தமாக கத்தினால் பாவம் தமிழும் என்ன தான் செய்வான்.
"சொல்லிக்காமல் நான் இங்கு ஓடி வந்திருக்க கூடாது தமிழ்."
"ஆமாம் மச்சான் நீ அவசரப்பட்டுட்ட... நீ இருந்திருந்தால் அந்த சூழ்நிலையில் உனக்கும் நறுக்கும் திருமணம் நடந்தாலும் நடந்திருக்கும்" என்ற தமிழை விலுக்கென பார்த்த செழியன்,
"நான் அதுக்காக வருத்தப்படல தமிழ். மாறன் வீட்டு ஆளுங்க ஒரு போட்டோவை வைத்து விழியை என்னலாம் பேசியிருக்காங்க... அதுக்கு காரணமான நான் அவளுக்கு ஆறுதலாக இல்லாமல் போயிட்டேனே...!
என் விழி எப்படியெல்லாம் துடிச்சாலோ...!" என்றவன், அடுத்தநொடி முகத்தினை உள்ளங்கையினால் அழுந்த துடைத்து தன்னுடைய மனநிலையை சமன் செய்து,
"நிச்சயம் என்னுடன் இணைத்து பேசியதற்காக என் விழி சந்தோஷம் தான் பட்டிருப்பாள்.
அன்னைக்கு இரவு நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காது, உன்னோடு தானே... தப்பா பேசினால் பேசிட்டு போகட்டுமே...! எவ்வளவு சாதாரணமாக சொன்னாத் தெரியுமா தமிழ்.
என் விழிடா அவ(ள்). நிச்சயம் யாரோ ஏதோ சொல்றாங்கன்னு கலங்கியிருக்க மாட்டாள். நான் இல்லைன்னு தான் துடிச்சிருப்பாள்.
எவ்வளவு கெஞ்சினா(ள்) தெரியுமாடா...!
நான்தான் அத்தை, அப்பா வாக்கு தான் முக்கியமுன்னு கல்லு மாதிரி இருந்துட்டேன்.
கடைசியில் எனக்கே பயம் வந்துருச்சு. எங்கு நானே நிறுத்திடுவேன்னு. அதான் இந்த வனவாசம் எனக்கு."
செழியன் நிறுத்துவதாக தெரியவில்லை. மனதில் இருப்பதையெல்லாம் நண்பனிடம் கொட்டிக் கொண்டிருந்தான்.
"இப்போ புலம்பி என்ன பண்றது." தமிழ் தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டான்.
சிறிது நேரத்தில், மனதில் உள்ளதையெல்லாம் வெளியேற்றியதால் தெளிந்து அமர்ந்த செழியனிடம் "அதான் எதுவும் நடக்கலையே நீ ஊருக்கு போயேன் மச்சான்."
"எவ்வளவோ கெஞ்சினாள் மச்சான். அவ(ள்) கண்ணீரை பார்த்து கூட நான் மனசு இறங்கலையே...!
இப்போ எந்த முகத்தை வச்சிக்கிட்டு என் விழியை சந்திப்பேன்" என்ற செழியன்,
"என்ன நடக்கனும் இருக்கோ அதன்படி எல்லாம் நடக்கட்டும்" என்று கசந்து கூறியவன் நீள் இருக்கையிலேயே சுருண்டு படுத்துக் கொண்டான்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதில் நிம்மதி ஏற்பட்டதால் அவனறியாமலேயே உறக்கத்தை தழுவினான்.
செழியன் உறங்கியதும் பின்பக்க தோட்டத்திற்கு வந்த தமிழ் செல்வத்திற்கு அழைத்தான்.
அந்தப்பக்கம் அழைப்பை ஏற்றதும், தமிழை பேசவிடாது...
"அப்புறம் தமிழண்ணா எப்படியிருக்கீங்க... முக்கியமா உங்க ஆருயிர் நண்பர்ர்ர் எப்படி இருக்கின்றார்?" என்று வினவினான்.
நண்பர் என்ற வார்த்தை செல்வத்தின் பற்களுக்கிடையில் அழுத்தமாக கடி பெற்றது.
செழியன் இங்கு தானிருக்கின்றான் என்று நடந்ததை சொல்லலாம் என்று தமிழ் செல்வத்திற்கு அழைக்க, அவனோ தனக்கு எல்லாம் தெரியும் எனும் விதமாக பேசியதில் தமிழ் அதிர்ந்து நின்றான்.
"செல்வம்... செழி..."
"எனக்குத் தெரியும் தமிழண்ணா." தமிழை பேசவிடாது செய்தான் செல்வம்.
"சரி இவ்வளவு நாளில்லாமல் இப்போ மட்டும் எதுக்கு கூப்பிட்டு இருக்கீங்க?" எனக் கேட்டான்.
"சாரிடா செல்வா... செழியன் தான் சொல்லக்கூடாது சொல்லிட்டான்."
"ஹோ...
இப்போ அவரு நீங்க போன் பண்ணதுக்கு எதுவும் சொல்ல மாட்டாரா...!" செல்வத்தின் குரலில் கேலி வழிந்தது.
மருத்துவமனையில் மாறனை சந்தித்து, அங்கு நடந்தவற்றையெல்லாம் கூறிய தமிழ்,
"செழியனையும் நாம் கொஞ்சம் புரிஞ்சிக்கணும் செல்வா" என்றான்.
"லவ் பண்ணால் மட்டும் போதாதுண்ணா, அந்த லவ்வை அடையருதுக்காக உங்க பிரண்ட் என்ன செஞ்சாரு. முதலில் தன்னோட லவ்வை அந்த பொண்ணுக்கிட்டையாவது தைரியமாக சொல்லியிருக்காரா...!"
"என்ன செல்வா யாரோ மாதிரி பேசுற அவன் உன் அண்ணன்."
"என்னோட அண்ணாக்கு எதையும் நேருக்கு நேர் தைரியமாக எதிர்த்து நின்னு தான் பழக்கம். இப்படி ஓடி ஒளிய தெரியாது" என்று காட்டமாக மொழிந்த செல்வம் இணைப்பைத் துண்டித்திருந்தான்.
'என்கிட்டவே இந்த ஏறு ஏறுறான்னே, செழியன் மட்டும் மாட்டுனான் அவ்வளவு தான்.' மனதில் நினைத்து தமிழ் அரண்டு விட்டான்.
செழியன் எழுந்ததும் இரவு உணவு வாங்கி வந்து அவனை சாப்பிட வைத்த பிறகே அங்கிருந்து தமிழ் புறப்பட்டான்.
தமிழ் சென்றதும் சில நிமிடங்கள் யோசித்த செழியன் தன் தம்பிக்கு அழைத்தான்.
இரண்டு ரிங்கிலே அழைப்பினை ஏற்ற செல்வம் பேசாது அமைதி காத்தான். தமிழிடம் வெடித்ததை போல் தன் அண்ணனிடம் அவனால் கோபத்தை காட்ட முடியவில்லை.
தமிழ் சொல்லிய, "அவனையும் கொஞ்சம் புரிஞ்சிக்கணும்" என்ற வார்த்தை செல்வத்தை செழியனின் இடத்திலிருந்து யோசிக்க வைத்தது. அதனாலே இந்த பொறுமை.
"செல்வா."
நீண்ட நாட்களுக்குப் பிறகான தனது அண்ணனின் அழைப்பை கேட்ட செல்வத்தின் விழிகள் பனித்தன.
"அண்ணாகிட்ட பேச மாட்டியாட... இந்த அண்ணனை மன்னிச்சிடு செல்வா." செழியனின் குரல் கரகரப்பாக ஒலித்தது.
நலிந்து ஒலித்த அண்ணனின் குரலில் வேதனையை கண்ட செல்வம் அதன் பிறகும் தன் மௌனத்தை நீடிக்கவில்லை.
"அண்ணா" என்று கதறிவிட்டான்.
"நீ மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லைன்னா. உன் நிலையும் எனக்கு புரியுது" என்ற செல்வம் வீட்டிலிருப்போரை தேற்றுவதற்காக தன்னை திடமாகக் காட்டிக்கொண்ட முகத்தை கழட்டிவிட்டு எப்போதும் போல் இன்றும் தனது அண்ணனிடம் ஆதரவு தேடி நின்றான்.
தானும் மீனாட்சி பாட்டியும் சேர்ந்து போட்ட திட்டம் முதல் வீட்டில் உள்ளவரை தேற்றியது வரை அனைத்தையும் ஒருமுறை தன் அண்ணனிடம் சொல்லி தனது பாரத்தை மொத்தமாக அண்ணனிடம் இறக்கி வைத்தான்.
"இப்போ வயலு, மில்லெல்லாம் நான் தாண்ணா பார்த்துக்கிறேன்." செல்வம் சொல்லியதில் செழியன் உடைந்து விட்டான்.
"நானிருக்கும்வரை என் தம்பி எதுக்கும் கஷ்டப்படக் கூடாது. அவனுக்கும் சேர்த்து நான் உழைக்கிறேன். அவன் ஜாலியாக இருக்கட்டும்." அன்றொரு நாள் தன் தந்தையிடம் சொல்லியதை நினைத்துப் பார்த்த செழியன் 'தன்னால் தானே, நானில்லாததால் தானே பழக்கமில்லா வேலையை தன் தம்பி செய்கிறான்' என்று மனதில் வருந்தியவன் மீண்டுமொரு முறை செல்வத்திடம் மன்னிப்பு வேண்டினான்.
அதன் பிறகு வீட்டின் நிலை, அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அத்தை என அனைவரையும் விசாரித்தவன் மறந்தும் நறுவைப் பற்றி கேட்கவில்லை. தைரியமில்லாது ஓடி வந்துவிட்டு இப்போது எப்படி அவளைப் பற்றி கேட்பதென்று செழியன் தயங்க, நீ கேட்கவில்லை அதனால் நான் சொல்லவில்லை எனும் விதமாக செல்வம் நறுவின் பெயரை கூட உச்சரிக்கவில்லை.
"சரி செல்வா... ரொம்ப லேட் ஆகிருச்சு நீ தூங்கு. நாளைக்கு நான் அப்பாகிட்ட பேசுறேன்" என்ற செழியன் இணைப்பைத் துண்டிக்காது அமைதி காக்க,
"எண்ணன்னா, ஏதாவது கேட்கணுமா?" எனக் கேட்ட செல்வம் வந்த சிரிப்பை வாய்க்குள் புதைத்தான்.
"அவ்வளவு தானா செல்வா." மிக மென்மையாகக் கேட்டிருந்தான் செழியன்.
"அவ்வளவு தான் அண்ணா" என்ற செல்வம் இரவு வணக்கம் சொல்லி பேச்சினை முடித்துக் கொண்டான்.
காதிலிருந்து அலைபேசியை எடுத்து முகத்திற்கு நேராக பிடித்து பார்த்த செழியனின் முகத்தில் தனது விழியின் நலமறிய ஏக்கம் கரை புரண்டது.
அந்தப்பக்கம் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்த செல்வம், "நாளைக்கு காலேஜ் போ ண்ணா உன் ஏக்கமெல்லாம் காணாமல் போயிடும்" என அருகில் இல்லாதவனிடம் கூறினான்.
****
விடுதியிலிருந்து கல்லூரி வளாகம் ஐந்து நிமிட நட பயணத்தில் அமைந்திருந்ததது. ஒரே வளாகத்தினுள் இருப்பினும் கல்லூரி கட்டிடத்தையும் விடுதி கட்டிடத்தையும் பிரிக்கும் வகையில் நீள்வரிசையாக ஒன்று போல் மரங்கள் வளர்த்திருந்தினர். மதில் சுவருக்கு பதில் மரங்கள். கல்லூரிக்கு இடது பக்கம் ஆண்கள் விடுதி, வலது பக்கம் பெண்கள் விடுதி மையத்தில் கல்லூரி கட்டிடங்கள், பின் பக்கம் பொதுவாக பெரிய மைதானம்.
புதிய இடம் புதிய சூழல் அதுமட்டுமில்லாது ஒரு மாத கால தாமதம் என நறு சற்று பயந்திருந்தாள்.
கல்லூரி திறந்து ஒரு மாதமாகிய நிலையிலும் இன்னமும் ராகிங் நடந்து கொண்டிருந்தது.
ஆங்காங்கே மரத்தடி நிழலில் பத்து பதினைந்து பேர்... ஆண், பெண் என்கிற பேதமின்றி ஒன்றாக அமர்ந்து ஜூனியர்களை கலாய்த்துக்கொண்டும் ஏதாவது செய்ய சொல்லி பார்த்து சிரித்துக்கொண்டும் இருந்தனர்.
யூஜி படிக்க கல்லூரிக்கு சென்றிருந்தாலும் இதெல்லாம் நறுவிக்கு முற்றிலும் புதிது. கிராம பகுதிகளில் இருக்கும் பள்ளி கல்லூரிகளின் நடைமுறைகள் மற்றும் சூழல் முற்றிலும் வேறு. இங்கு நடப்பவற்றை, நகர சூழலை படத்தில் மட்டுமே பார்த்திருக்கின்றாள்.
மிரட்சியுடன் சுற்றி பார்த்துக்கொண்டே சென்றவள் மனதில் செல்வத்தை வறுத்தெடுத்தாள்.
"மனசுக்கு மாற்றம் வேணுமுன்னு இந்த செல்வா என்னை இப்படி மாட்டி விட்டுட்டானே... இங்கு எப்படி சமாளிக்கப் போறனோ ஆண்டவா" என்று வானத்தை பார்த்து புலம்பியவள் இடியென்று விழுந்த அரை சத்தம் கேட்டு, திரும்பி பார்த்தவள் அங்கு நின்றிருந்தவனை கண்டு ஸ்தம்பித்து விட்டாள்.
அவன் அவளுக்கு முதுகு காட்டி நின்றிருந்தாலும் தன்னவனை சரியாக அடையாளம் கண்டு பிடித்திருந்தாள்.
"மாமாவா... இங்கு...!" அவள் சந்தேகமாக யோசிக்கும்போதே மீண்டும் ஒருமுறை அடி சத்தம் கேட்டது. அதில் நறுவி பயந்து தன்னை அறியாமலேயே தன் கன்னத்தினை கை வைத்து மூடிக்கொண்டாள்.
"ஏன்டா... நீ சீனியருன்னா, பிஜி பொண்ணு கிட்ட முத்தம் கேட்பியோ..." எனக்கேட்டு அவனை மேலும் இரண்டடி அடித்த செழியன்,
"ராகிங் சீனியர் ஜூனியற்குள் ஒரு நட்புறவை ஏற்படுத்துவதற்கு தான். இப்படி கீழ்த்தரமான செயல்களை செய்வதற்கு அல்ல" எனக்கூறி அங்கிருந்து சென்றுவிட்டான்.
நறு தான் உறைந்து நின்றாள். செல்லும் செழியனின் உருவத்தை முழுதாக உள் வாங்கினாள்.
"யாரிடி... செழியன் சாரா அடிக்கிறாரு?"
தன்னை கடந்து சென்ற ஒரு பெண் தனது தோழியிடம் கேட்டது நறுவிற்கு நன்றாகவே கேட்டது. அதில் சந்தேகமில்லாது நறுவிழியின் கேள்விக்கு பதில் கிடைத்தது.
"அவரே தான்... ஜாலி டைப் அவரையே எவனோ சீண்டிட்டான் போலிருக்கே."
'டேய் செல்வம்.' நறுவிழியின் முன் இப்போது செல்வம் நின்றிருந்தால் அவனின் நிலை அதோகதிதான்.
மரத்தடியிலிருந்த கல் மேடையில் சென்று சிறுது நேரம் அமர்ந்தவள், நடப்பதை ஏற்று மனதை பக்குவப்படுத்திக் கொண்டு அங்கிருந்து எழுந்தாள்.
அருகில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் வேதியியல் துறை எங்குள்ளது என்று கேட்டறிந்தவள், தனது வகுப்பினை கண்டு பிடித்து சென்றமர்ந்தாள்.
மூன்றாவது பெஞ்சில் நறுவிழி சென்று அமர, அரக்க பறக்க ஓடி வந்த பெண் ஒருத்தி நறுவிழியை இடித்துக்கொண்டு அமர்ந்து நறுவிக்கு ஒரு ஹாயினை உதிர்த்தவள்"நியூ ஸ்டூடெண்ட்டா" எனக்கேட்டு அவள் பதில் சொல்லுவதற்கு முன், தனக்கு முன்னிருக்கையில் அமர்ந்திருந்த தீபா என்கிற பெண்ணின் முதுகினை சுரண்டினாள்.
தீபாவோ நிதானமாக திரும்பி,
"என்ன ரம்யா" எனக் கேட்டாள்.
"கியூட்டி பை (cutie pie) கிளாஸ் இன்னைக்கு இருக்கா?" என்று வினவிய ரம்யாவை முறைத்து பார்த்த தீபா, "தேர்ட் ஹவர்(3rd hour)" என்றதோடு "பார்த்துடி நீ விடுற ஜொள்ளு அந்த மாலதி மேடத்துக்கு தெரிஞ்சிடப் போகுது" என எச்சரித்தாள்.
"எப்படித்தான் வந்த ஒரு மாதத்திலேயே ஆட்டைய போடுறாங்களோ" என்று வெதும்பிய ரம்யா நறுவியை பார்த்து 'ஈ' என்று இளித்து தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.
"அம் ரம்யா... யூஜி இங்கேதான்" என ஆரம்பித்து தனது வீடு முதல் வாயிலில் கட்டிபோட்டிருக்கும் நாய் வரை ஒன்று விடாது எல்லாவற்றையும் சொல்லி முடித்த பிறகே நறுவியை விட்டாள்.
ரம்யாவின் கலகலப்பான பேச்சும், அவளின் சேட்டைகளும் நறுவிக்கு பிடித்தது. இருவருக்குள்ளும் கொஞ்ச நேரத்திலேயே நல்ல நட்பு துளிர்த்திருந்தது.
ஒரு மாதத்தில் நடத்தி முடித்திருந்த பாடக் குறிப்புகளை ரம்யாவிடம் நறு கேட்க, அவளோ தீபாவை அறிமுகம் செய்து வைத்து அவளிடம் வாங்கிக் கொடுத்தாள்.
நறுவிழியை பார்த்த தீபா "உங்க பெயர் மாதிரியே உங்க கண்ணும் அழகா இருக்கு" என்க,
அதற்கு நறு மென்னகை புரிய,
"உன் சிரிப்பும் அழகாக இருக்கு" என்று வைத்த கண் எடுக்காது பார்த்தாள் ரம்யா.
"எப்போ பாரு யாரையாவது சைட் அடிக்கிறதே இவளுக்கு வேலை. அதில் ஆண், பெண் பேதமேயில்லை" என்று ரம்யாவை கிண்டல் செய்த தீபாவும் நறுவியின் இன்னொரு புறம் வந்து அமர்ந்து கொண்டாள்.
"அழகா எது இருந்தாலும் ரசிக்கலாம் தப்பில்லை" என்ற ரம்யா நறுவின் கன்னத்தில் முத்தம் வைக்க, நறுவோ விழி தெறிக்கும் அளவிற்கு தனது அதிர்ச்சியை காட்ட,
"அவள் எப்பவும் இப்படித்தான் கண்டுக்காத" என்று தீபா, நறுவை ஆசுவாசப்படுத்தினாள்.
இருவருக்கும் நடுவில் தனது சோகம் மறந்து புன்னகை முகமாக அமர்ந்திருந்தாள் நறு. இதை மட்டும் செல்வம் பார்த்திருந்தால் மகிழ்ந்திருப்பான். அவன் வேண்டுவது தனது அன்பு தோழியின் சிரிப்பினைத் தானே.
அதன் பிறகு வகுப்புகள் துவங்கும் மணி ஒலிக்க, மாணவர்கள் தங்களின் அரட்டை கச்சேரிக்கு சற்று ஓய்வு அளித்தனர்.
"நீயென்ன மேஜர்?"
"பிஸிக்கல் கெமிஸ்ட்ரி." தீபாவின் கேள்விக்கு நறு பதிலளிக்க, "நாங்களும் அதேதான்" என ரம்யாவும் தீபாவும் கை தட்டிக் கொண்டனர்.
"இந்த ஹவர் குவாண்டம் கெமிஸ்ட்ரி அண்ட் மாக்ரோ மாலிக்யூல்ஸ், தமி..." என தீபா சொல்லிக் கொண்டிருக்கும் போதே தமிழ் உள் நுழைந்தான்.
தமிழை பார்த்த பிறகு தான் செழியனும் இந்த துறையை சார்ந்தவன் என்பதே நறுவிக்கு ஞாபகம் வந்தது.
"இதெல்லாம் அவனோட பிளான் தான். டேய் செல்வா" என்று நறு வாய்விட்டுக் கூற,
"என்னடி என்னாச்சு" என்று கத்தினாள் ரம்யா.
ரம்யாவின் சத்தத்தில் மொத்த வகுப்பும் அவளை பார்க்க, "வாட் ஹேப்பன் ரம்யா" எனக் கேட்ட தமிழ் அவளுக்கு அருகில் அமர்ந்திருந்த நறுவை கண்டதும், முதலில் அதிர்ந்து பின் தன்னை சமாளித்துக் கொண்டு நறுவை பார்த்து யாரும் அறியாது புன்னகைக்க முயல, அவளோ தமிழை முதல் முறை பார்ப்பதை போல் பார்த்து வைத்தாள்.
அதன் பிறகு பாடம் நடத்தும் போதும் தமிழின் பார்வை நறுவியை அடிக்கடி தொட்டு மீள அவளோ கர்ம சிரத்தையாக வேண்டுமென்றே ரம்யாவிடம் கதை பேசிக் கொண்டிருந்தாள்.
அவனால் ஏனோ நறுவை கண்டிக்கவும் மனம் வரவில்லை. அதே சமயம் நறுவை விடுத்து ரம்யாவை கண்டிப்பதும் தவறென அமைதியாக வகுப்பினைத் தொடர்ந்தான்.
வகுப்பு முடிந்ததும் வெளியில் சென்ற தமிழ்,
"நறுவிழி நீங்க தானே நியூ கம்மர்" என்று வெளியே அழைத்தான்.
யாருடைய பேச்சுக்கும் காரணமாக வேண்டாமென்று நறு அமைதியாக எழுந்து வெளியில் சென்றாள்.
"ஹேய் நறு... நீ எப்படி இங்கே, நல்லாயிருக்கியா?" என்று தமிழ் உற்சாகமாக வினவ,
அவளோ, "சாரி சார்... உங்களுக்கு என்னைத் தெரியுமா?" எனக் கேட்டு உன்னை எனக்குத் தெரியவில்லை என்று சொல்லாமல் சொல்லி அவ்வளவு தான் என்பதை போல், அவன் அதிர்ந்து நிற்பதை கூட கண்டுகொள்ளாது,
"அடுத்த கிளாஸ்க்கு டைம் ஆச்சு சார்" என்று வகுப்புக்குள் சென்று விட்டாள்.
"இவளுக்கு செல்வமே பரவாயில்லை. அவனாவது மதித்து ரெண்டு வார்த்தை பேசினான். இவள் நான் யாருன்னே தெரியாதுன்னுட்டு போயிட்டாள்.
"டேய் தப்பு பண்ணவன் நான் இல்லடா...!" என புலம்பிய தமிழ் செழியனைத் தேடி ஸ்டாஃப் ரூமிற்கு சென்றான்.
தொடரும்...
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top