JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

  • Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், jbtamil18@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Dear Guest, Please register in the forum to read stories of the writers and post your valuable comments. Please email: jbtamil18@gmail.com or whatsapp: +91-6384850278 any login related queries.

JLine Bookstore Online

Episode 19 & 20

அத்தியாயம் 19 :
கல்லூரி முடித்து வீட்டிற்கு வந்த செழியனின் மனம் முழுக்க அவனின் விழியே நிறைந்திருந்தாள். அவளை தன் கரங்களுக்குள் பொதிந்து தனது நெஞ்சுப்பகுதியில் நிறைத்துக் கொள்ள மனம் தவியாய் தவித்தது.
சீக்கிரம் நறுவை தனது மனைவியாக தன்னுடைய பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று துடித்தான்.
"இனியும் தன் மீதான காதலினால் அவள் கண்ணீர் சிந்தக் கூடாது" என ஒரு காதலனாக நினைத்தான்.
"இனி விலகி நிற்காது தனது காதலை அவளுக்கு உணர்த்த வேண்டும்" என்று எண்ணினான்.
அந்நேரம் அவனின் அலைபேசி தனது இருப்பை தெரிவித்தது. அழைத்தது செல்வம். செழியன் அழைப்பினை ஏற்றதும் செல்வத்தின் குரல் படு உற்சாகமாக ஒலித்தது.
"டேய் அண்ணா என்னுடைய சர்ப்ரைஸ் எப்படி இருந்துச்சு...!" அட்டகாசமாக சிரித்தான்.
"இது உன் வேலைதான்னு நறுவை என் கல்லூரியில் பார்த்ததும் புரிஞ்சிகிட்டேன் டா. இப்போ தான் ஒரு தம்பியா இந்த அண்ணனுக்கு உதவி செஞ்சிருக்க." செழியனின் குரல் அவனுக்கு இணையான உற்சாகத்தோடு இருந்தது.
"இனியாவது உன் காதலை அவளிடம் சொல்லலாமே...!" ஏக்கமாகக் கேட்டிருந்தான் செல்வம்.
"நான் எப்பவோ அந்த முடிவுக்கு வந்துட்டேன் செல்வா"என்ற செழியன் இன்று நடந்த அனைத்தயும் ஆதியோடு அந்தமாக தன் தம்பியிடம் பகிர்ந்துகொண்டான்.
"இந்த நறு முற்றிலும் புதிதுடா செல்வா... எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. என்னை நிமிர்ந்து பார்க்கவே தயங்குறவ, இப்போ என்னை நேருக்கு நேர் பார்த்து கண்ணடிக்குறா(ள்)டா...!" வெட்க புன்னகையோடு மென்மையாக ஒலித்த அண்ணனின் குரலில் செல்வத்திற்கு ஆனந்தமாக இருந்தது.
"நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும் அண்ணா" என்று கரகரப்பாக கேட்ட செல்வத்தின் குரலில், தன் நலனில் அக்கறை கொண்டிருக்கும் அவனின் பாசத்தை நினைத்து செழியன் நெகிழ்ந்து போனான்.
"உன் பிரண்ட் இருக்க ஃபார்முக்கு என்னை நல்லா வச்சு செய்வாள் போலிருக்கிடா." தம்பியின் மனநிலையை மாற்றும் பொருட்டு செழியன் பேச்சினை மாற்றினான்.
"அவளோட வலி செழியா அது. வலியை மறக்க, உன்மீதான கோபத்தை உன்னிடம் காட்டிடக்கூடாதே என்கிற பயத்தில் உன்னிடம் சேட்டை செய்கிறாள்." தோழியின் மனதை நன்கு படித்தவன் போல் உண்மையை கூறினான் செல்வம்.
இது செழியனுக்கும் புரிந்துதான் இருந்தது.
"உனக்கு எப்படி நானிருக்கும் இடம் தெரிந்தது?" நேற்றே கேட்க வேண்டுமென நினைத்த கேள்வியை இன்று கேட்டிருந்தான் செழியன்.
"ராஜசேகர் சார்."
"அவரு சொல்லியிருக்க மாட்டாரே..." செழியன் உறுதியாகக் கூறினான்.
"நீ வேற, அவரு சொல்லவே இல்லைடா... அப்புறம் தான் நறுவோட நிலையை சொல்லி, உன்னுடைய நலன் தெரிந்தால் மட்டும் போதும், உன்னை சந்திக்கக்கூட மாட்டேன் அப்படின்னு கெஞ்சினப்பிறகு சொன்னார்" என்று தான் எவ்வாறு அவனை கண்டுபிடித்தேன் என்பதை கூறினான்.
"நீ திரும்ப உனக்கு பிடிச்ச பேராசிரியர் வேலைக்கே போயிட்டன்னு தெரிஞ்சப்போ தான் எனக்கு நறுவை உன் காலேஜூக்கு படிக்க அனுப்பினால் நீங்க ரெண்டு பேரும் சேர ஒரு வாய்ப்பாக இருக்கும் தோணுச்சு. அதை உடனே செய்துவிட்டேன்." தனது காலரை கெத்தாக தூக்கி விட்டுக்கொண்டான் செல்வம்.
"ஆனாலும் நறுவை சமாளித்து அந்த கல்லூரி விண்ணப்ப படிவத்தில் கையெழுத்து வாங்குவதற்கும் போதுமென்று ஆகிவிட்டது போ"என்ற செல்வம் அன்று நடந்ததையும் விவரித்தான்.
"அப்போ விழி என்மேல் செம கோபத்தில் இருந்திருப்பாள் இல்லையா?" வருத்தத்துடன் கேட்டான் செழியன்.
"நறு அவ்வளவு கெஞ்சிக் கேட்டும் நீ ஏன் செழியா உன் காதலை சொல்லவில்லை?
அவளுக்கு அந்த திருமணத்தை நானெப்படியும் நிறுத்தி விடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் திடமாகவே இருந்தாள். ஊரார் பேசும்போது கூட கொஞ்சமும் அதற்காக அவள் சுணங்கவில்லை.
ஆனால் அவள் யாசித்து நின்றும் அவள் காதலை ஏற்காததை நினைத்து தான் அவ்வளவு வருந்தினாள்"என்று நீளமாக பேசிய செல்வம்,
"உன்மீது அவளால் கோபம் கொள்ள முடியாது செழியா" எனும் போது தனது அலைபேசியில் இரண்டாவது அழைப்பு வருவதை உணர்ந்து திரையை பார்க்க, அதில் நறு என்ற பெயர் ஒளிர்ந்தது.
"உன் ஆளு லைனில் வருகிறாள் செழியா" என செல்வம் கூற,
"அட்டென் செய்து கான் கால் (conference call) கனெக்ட் பண்ணுடா" என்றான் செழியன்.
அண்ணன் சொல்லியதை தம்பி செய்ய... செழியன் தனது காலினை ம்யூட் செய்திருந்தான்.
"உன் அண்ணன் என்னடா நினைச்சிட்டு இருக்காரு?"
"இப்படி தலையும் இல்லாது வாலு இல்லாது மொட்டையாகக் கேட்டால் எனக்கு என்ன நறு தெரியும்."
எடித்ததும் எதைப்பற்றியும் சொல்லாது அவள் நேரடியாக விடயத்திற்கு வரவும் செல்வத்திற்கு ஒன்றும் புரியவில்லை.
"தமிழண்ணா கூட பரவாயில்லைடா..."
நறு தமிழை அண்ணா என்று விளித்ததை செழியனின் மனம் குறித்துக் கொண்டது. அந்த அழைப்பு அவனுக்காக அல்லவா. அவன் சொல்லியதற்காகத் தானே...! அவனின் மனம் அன்று போல் இன்றும் அதிக உவகைக் கொண்டது.
"அவரே வந்து என்னிடம் பேசினார். ஆனால் உன் அண்ணா இருக்கிறாரே..."
"ஹேய் நிறுத்து நிறுத்து... உன் அண்ணாவா, நான் அண்ணா சொன்னால் கூட உன் மாமா சொல்லுன்னு என்னை சொல்ல வைப்பாய்... இப்போ என்ன என் அண்ணன்." நறுவின் பேச்சினை இடைவெட்டி தனது சந்தேகத்தை கேட்டிருந்தான் செல்வம்.
"வாயை மூடிட்டு சொல்லுறதை கேளுடா... அப்புறம் நான் மறந்திடுவேன்" என்று நறு கத்தியதில் இணைப்பில் அமைதியாக இருந்த செழியன் சத்தமேயில்லாது சிரித்தான்.
"சரி சொல்லு... உன் மாமா என்ன பண்ணாரு?" அடக்கிய சிரிப்புடன் செல்வம் கேட்டான்.
"என்னை பார்க்கக்கூட இல்லை செல்வா, அதுகூட பரவாயில்லை கிளாஸ் விட்டு வெளிய அனுப்பிட்டாரு" என்று நறு பாவம் போல் சொல்ல,
"நீ இதுக்காக அவனை எதாவது செஞ்சிருப்பியே... அப்படியே விட்டிருக்க மாட்டியே" என செல்வம் சரியாக அவளின் நாடி பிடித்தான்.
"கண்டுபிடிச்சிட்டியா" என்றவள் தான் செய்தவற்றை சொல்லியதோடு, "இனிமேல் தான் அவரை டார்ச்சர் பண்ணப்போறேன்" எனக்கூறி வில்லி சிரிப்பு சிரித்தாள்.
"ஆத்தா அவன் என்னை மாதிரியில்லை. பச்ச மண்ணு இப்படியெல்லாம் எதாவது செய்து அவனை அங்கிருந்தும் ஓட வைத்துவிடாதே" என செல்வம் கூற,
"என் காதல் வேணான்னு தானே ஓடிப்போனாரு... அவரையே என் காதல் வேணுன்னு வர வைக்கிறேன்... அதுக்கு இந்த லவ் டார்ச்சர் ரொம்ப முக்கியம் டா செல்வம். இதெல்லாம் உனக்கு புரியாது போ... போயி வேலையைப்பாரு" என்றவள் அழைப்பினை துண்டித்துவிட்டாள்.
"டேய் அண்ணா உன் ஆளு செம ஃபார்மில் இருக்கா, பார்த்து" என செல்வம் கூற...
"என்ன டார்ச்சர் பண்ணாலும் இனி அவளை தவிக்க விடுவதாக இல்லைடா...! அவளை தாங்கிக்கொள்ள நானும் என் இதயமும் பக்காவாக ரெடி ஆகிட்டோம்" என்ற செழியன் சந்தோஷத்தோடு செல்வத்திடமிருந்து விடைபெற்றவன் தனது தந்தைக்கு அழைப்பு விடுத்தான்.
திரையில் ஒளிர்ந்த புதிய எண்ணை கண்ட சிவநேசன் பண்ணையில் வேலை செய்தோருக்கான கூலி கணக்கை சரி பார்த்துக் கொண்டிருந்ததால் அழைப்பை ஏற்கவில்லை.
தந்தை ஏதும் வேலையாக இருப்பாரென்று சரியாக யூகித்தவன், இரவு உணவினை தயார் செய்து தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வந்து அமர, சிவநேசனின் அழைப்பின் காரணமாக செழியனின் அலைபேசி சிணுங்கியது.
"அப்பா...!"
சிவநேசனின் வருத்தம் கவலை சோகம் என அனைத்தும் இருந்த இடம் தெரியாது காணாமல் போக செழியனின் அப்பா என்ற ஒற்றை விளிப்பு போதுமானதாக இருந்தது.
"செழியா...!" மகனின் குரல் உணர்ந்து பரிவுடன் மகனை அழைத்தவர், மகனின் நலம் அறிந்ததில்... நீண்ட நாள் மனதினை அழுத்திக் கொண்டிருந்த பாரம் விலக நிம்மதியாக உணர்ந்தார்.
"இந்த அப்பாகிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே தம்பி...!" அவரிடத்தில், தன்னிடம் தன் மகன் உண்மையை சொல்லவில்லையே என்கிற ஆதங்கம்.
"சாரிப்பா." சிறு பிள்ளையென தந்தையிடம் மன்னிப்பை வேண்டியவன், தனது காதலையும், நறுவின் காதலையும் எவ்வித ஒளிவின்றி கூறினான். இப்போது நறு படிப்பதும் தான் வேலை பார்க்கும் கல்லூரி என்பதை தெரிவித்தவன், தன்னுடைய அம்மா, தாத்தா, பாட்டி என அனைவரிடமும் பேசியவன் இறுதியாக வளரம்மையிடமும் பேசினான்.
"என்னை மன்னித்துவிடு செழியா, உன்னை வளர்த்த எனக்கு உன் மனசு தெரியாமல் போய்விட்டதே...! அவரோட(வேதம்) குடும்பத்தோடு சேர வேண்டுமென்று யோசித்தேனே தவிர என் பிள்ளைகளின் சந்தோஷத்தை யோசிக்காமல் போய் விட்டேனே" என்று வருந்தியவரை அவரின் மனம் ஆறுதல் பெரும் வகையில் பேசி அலைபேசியை வைத்தான்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதியான சுகமான நித்திரையில் தன்னவளின் நினைவுகளோடு ஆழ்ந்தான்.
****
மறுநாள் மிகவும் துள்ளளோடு துறைக்குள் நுழைந்த செழியனை இரு ஜோடி கண்கள் கவனித்தன.
ஒன்று காதலோடு, மற்றொன்று ரசனை வழியும் தாபத்தோடு.
"என்ன மாலதி மேடம் இன்னைக்கு உங்க ஆளு படு ஸ்மார்ட்டாக தெரியுறாரு?" என்று சாந்தி கேட்க,
"என்ன நீங்களும் அவரை சைட் அடிக்க ட்ரை பண்றீங்களா" என மாலதி கேட்டதில் சாந்தி அமைதியாக தன் முகத்தை திருப்பிக் கொண்டார்.
"அவங்க வயதுக்கு மரியாதை கொடுத்து பேசுங்க மாலதி." வேறொரு ஆசிரியர் சொல்ல,
"அதெல்லாம் இந்த மரியாதை போதும். அவரை நான் மட்டும் தான் அழகாக இருக்கிறார் என்று கூட சொல்ல வேண்டும்" என்றவள் செழியனை நோக்கிச் சென்றாள்.
செழியன் இருக்கையில் அமர்ந்திருக்க, அவனை உரசுவது போல் ஒட்டி நின்ற மாலதி,
"ஹாய் சார்" என்க, நாசூக்காக இருக்கையிலிருந்து எழுந்தவன் சற்று தள்ளி நின்றுகொண்டான்.
"இன்னைக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க செழியன்." காதலில்லா ரசனையோடு மாலதி சொல்ல செழியனோ அவளின் வார்த்தைகளை காதில் கூட வாங்காது அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான்.
செழியன் கண்டு கொள்ளாததெல்லாம் மாலதி ஒரு பொருட்டாகவே கருதவில்லை. தன் காரியத்தில் கண்ணாக இருந்தாள்.
"உங்களுக்கு என் மனம் புரியவில்லையா செழியன்?" மாலதி காதலில் உருகி கரைபவள் போன்ற பாவனையில் கேட்க,
"மிஸ்.மாலதி" என்றழைத்தான் செழியன்.
முதல் முறையாக அவன் தன்னை பெயர் சொல்லி அழைத்ததில் மகிழ்ந்த மாலதி ஆர்வமாக அவனருகில் நெருங்க சற்று விலகிட... செழியனோ வழி கிடைத்ததில் அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
"கிரேட் எஸ்கேப் மச்சான்" தமிழ் முணுமுணுத்தது மாலதிக்கு நன்கு கேட்டது.
"என்ன தமிழ் அன்னைக்கே சொன்னனே உங்க வேலையை மட்டும் பருங்கன்னு." மாலதி தமிழிடம் கெத்து காட்டினாள்.
"நான் என் வேலையைத்தான் பார்க்கிறேன்... பாருங்க" எனத் தான் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த புத்தகத்தை அவள் முன் நீட்டினான்.
"நான் இதை சொல்லுல" என்றவள், "எனக்கும் செழியனுக்கும் நடுவில் நீங்க வராதீங்க" என கோபமாகக் கூறினாள்.
"அவன் என் பிரண்ட் மாலதி மேடம். துர்ஷ்டர்கள் கண் ஆக்ரோஷமாக என் நண்பனின் மீது படியும் போது, அவனை காப்பது தானே நல்ல நண்பனுக்கு அழகு. அதைத்தான் நான் செய்கிறேன்" என்ற தமிழ் மாலதியை ஏளனமாக பார்த்தான்.
"வேண்டாம் தமிழ் என்கிட்ட வச்சிக்காதீங்க..."
"நானும் அதையேதான் சொல்கிறேன் மாலதி மேடம்... என் நண்பனிடம் வச்சிக்காதீங்க. அவனை பற்றி சரியா உங்களுக்குத் தெரியல. அவன் ஒதுங்கி போகிறான். சோ, நீங்களே விலகிவிடுவது நல்லது."
"உங்களுடைய ஃப்ரீ அட்வைசுக்கு ரொம்ப நன்றி" என்ற மாலதி, "உங்க ஃபிரண்டை என் பக்கம் விழ வச்சுக் காட்டுறேன்" என சவாலாகக் கூறிச் சென்றாள்.
"இதெல்லாம் பட்டுதான் திருந்தும். இதெப்படி மாணவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லி கொடுக்குதோ" என்று தமிழ் புலம்ப,
"விடுங்க தமிழ் சார். அது மாலதியோட நேச்சர், செழியன் சாரை கொஞ்சம் கவனமாக இருக்க சொல்லுங்க" என சாந்தி கூறினார்.
அவருக்கு புன்னகையை பதிலாகக் கொடுத்த தமிழ் தன் வகுப்பிற்கு சென்றான்.
****
"அதான் செழியன் சார் உள்ளே போயிட்டாரே இன்னமும் என்ன அந்தப்பக்கமே பார்வை."
செழியன் கல்லூரிக்குள் நுழையும்போது அவனை பார்வையிட்ட காதல் பார்வைக்கு உரியவள் நறுவிழி.
அதனை சொல்லித்தான் ரம்யா நறுவை கிண்டலடித்துக் கொண்டிருக்கின்றாள்.
வகுப்புக்கு வெளியில் நின்று ஹரிஷுடன் பேசிக்கொண்டிருந்த தீபா வேகமாக ஓடி வந்து தன்னிடத்தில் அமர, அவளை வித்தியாசமாக பார்த்தாள் நறு.
அவளின் பார்வையை உணர்ந்த தீபா,
"மாலதி மேம் கிளாஸ்... ஷீ இஸ் கம்மிங்" என்றாள்.
"அதற்கு நீ எதுக்கு இந்த ஓட்டம் ஒடியாந்த...?" புரியாது வினவினாள் நறு.
"அவுங்க ஒரு மாதிரிடி... செழியன் சார் தான் நம்ம கிளாஸ் இன்சார்ஜ். அதனால நம்ம கிளாஸ்ல இருக்க ஆறு பொண்ணுங்களையும் அவங்களுக்கு பிடிக்காது."
"நீ என்ன சொல்லுற சுத்தமா எனக்கு புரியல." நறுவிற்கு தீபா சொல்லுவது சுத்தமாக விளங்கவில்லை.
"நான் சொல்லுறேன்" என்று நறுவை தன் பக்கம் திருப்பிய ரம்யா,
"அவங்களுக்கு செழியன் சார் மேல் ஒரு கண்ணு. அவரை லவ் பண்றன்னு சொல்லிட்டு இருக்காங்க. இது நம்ம டிப்பார்ட்மென்டில் எல்லாருக்கும் தெரியும். ஆனால் செழியன் சார் அவங்களை கண்டுக்கவே மாட்டார். ஒருநாள் சார் கிட்ட நாங்க டவுட் கேட்கன்னு ஸ்டாஃப் ரூம் போனோம். அப்போ சார் எப்பவும் போல நல்ல பிரண்ட்லியா எங்ககிட்ட பேசனது அந்த மேடத்துக்கு பிடிக்கல. அன்னையலிருந்து நம்ம கிளாஸ்க்கு வந்தால் எங்களையெல்லாம் வறுத்தெடுக்காமல் போகாது." விட்டால் ரம்யா அழுது விடும் பாவனையில் சொல்ல நறு சிரித்து விட்டாள்.
"என்ன நீ சிரிச்சிட்டு இருக்க... இந்நேரம் நீ சோகமா இருக்கணும்."
"எதுக்கு?"
"அவங்க ரூட் விடுறது உன் ஆளுக்கு."
"அப்படியா?"
நறுவின் அசல்ட்டான பதில் ரம்யா குழம்பி முழித்தாள்.
"அதான் நீயே சொல்லிட்டியே ரம்ஸ்... உங்க செழியன் சார் அவங்களை கண்டுக்கவே மாட்டாருன்னு, அப்புறம் நானெதற்கு டென்ஷன் ஆகணும்" என்ற நறு நேற்று வகுப்பிற்கு வெளியில் நின்றதால் அந்த வகுப்புக்கான குறிப்பை ஹரிஷிடமிருந்து வாங்கி, எழுதி முடித்து அவனிடம் நோட்டினை கொடுத்தவள்... அதில் அவனிடம் சந்தேகமும் கேட்க, அந்நேரம் சரியாக மாலதி உள் நுழைந்தார்.
அவர் வந்த பிறகு எப்படி பெஞ்சில் தாவி உள் நுழைவது என்று எண்ணிய நறு ஹரிஷிற்கு அருகிலேயே அமர்ந்துவிட்டாள்.
எல்லோரையும் ஒரு பார்வை பார்த்த மாலதி, நறுவை மட்டும் சில நிமிடங்கள் ஆழ்ந்து நோக்கினாள்.
அதில் நறு தானாக எழுந்து நின்று,
"ஹரிஷ் நோட்புக் பார்த்து காப்பி பண்ணிட்டு இருந்தேன் மேம் நீங்க வந்ததும் அப்படியே இங்கேயே அமர்ந்து விட்டேன்" என்று விளக்கம் கொடுத்தாள்.
"கிளாசில் இருப்பதே பதினோரு பேரு... நீங்க எங்க உட்கார்ந்தால் எனக்கென்ன, இப்போ ஒட்டி உட்காருவிங்க நாங்க கேட்டால் பிரண்ட்ஸ் சொல்லுவீங்க... அப்புறம் அவன் என்னை மிஸ் பிஹேவ் பண்ணிட்டான்னு சொல்லுறது" என்ற மாலதி "நேற்று நீ தானே செழியனை ஹலோ சார் என்று காரிடாரில் நின்று கத்தி அழைத்தது" எனக் கேட்க, நறு ஆமென்றாள்.
மாலதி சார் என்ற வார்த்தையை உடன் சேர்க்காது செழியன் என்று பெயரை மட்டும் சொல்லியது, அவனை நண்பனாக தங்களுக்குள் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும் அவனது வகுப்பு மாணவர்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியது.
நறுவியை "அப்படியே நில்" என சொல்லியவர் கால் மேல் காலிட்டு அமர்ந்தார்.
நறு ஹரிஷின் அருகில் அமர்ந்ததற்கு மாலதி பேசியது அங்கிருந்த மாணவர்களுக்கு சங்கடத்தை கொடுத்தது.
"மரியாதை என்றால் என்னவென்று தெரியாது, சக ஆசிரியரை ஒருமையில் விளிக்கும் இதுகிட்டயெல்லாம் நாம் பேச்சு வாங்க வேண்டியதாக இருக்கே" என்று தங்களுக்குள் கிசுகிசுத்தனர்.
மாணவர்களின் பேச்சு சத்தத்தை கூட பொருட்படுத்தாது சிறிது நேரத்தில் பாடத்தினை துவங்கிய மாலதி பத்து நிமிடத்திற்கு பிறகு,
நறுவை "சரி வெளியில் போ...!" என்றார்.
"மேம்..."
"ஒரு முறை சொன்னால் புரியாதா... கெட் அவுட்" எனக் கத்தினாள் மாலதி.
பாதி வகுப்பில் வெளியே வந்த மாலதி,
"காரிடாரை விட்டு கீழிறங்கி அந்த செடிக்கு பக்கத்தில் நில்" என நறுவியை வெயிலில் நிற்க வைத்துவிட்டு பாடமெடுக்கச் சென்றார்.
அன்று தொடர்ந்து இரண்டு வகுப்புகள் மாலதியுடையது. இரண்டாவது வகுப்பின் போதும் அவர் நறுவை உள்ளே அனுமதிக்கவில்லை.
வகுப்பு முடிந்து வெளியே வந்த மாலதி, "நான் சொல்லாமல் நீ கிளாஸிற்குள் செல்லக் கூடாது" எனக்கூறி வகுப்பிலிருந்து மூன்றாவதாக இருக்கும் ஸ்டாஃப் ரூமிற்குள் புகுந்துக் கொண்டார்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக வெளியில் நிற்பதாலும், காலையில் உணவினை தவிர்த்திருந்ததாலும், வெயிலின் தாக்கத்தால் நறுவின் கால்கள் துவள ஆரம்பித்தன.
எதற்கு இந்த தண்டனை என்று குழம்பி நின்றவள், தீபா வந்து கொடுத்த தண்ணீரையும் மறுத்து விட்டாள். பழச்சாறு வாங்கி வருகிறேன் எனக்கூறிய ரம்யாவையும் தடுத்து விட்டாள்.
இடைவேளைக்கு பிறகு வகுப்பெடுக்க வந்த செழியன், வகுப்பறையின் வாயிலில் நின்று கொண்டிருந்த ரம்யா, தீபா மற்றும் ஹரிஷை பார்த்து என்னவென்று வினவ அவர்கள் வாயிலுக்கு வெளியே கை காண்பித்தனர்.
வெளியில் வெயிலில் நிற்கும் நறுவை கண்டு தன் பதட்டத்தை மறைத்தவனாக அவளுக்கு அருகில் செழியன் செல்ல அவனின் மீதே மயங்கி சரிந்தாள் அவனவள்.
தொடரும்...


******

அத்தியாயம் 20 :
"கடைசியாக என்ன தம்பி சொல்லுறீங்க?"
"அதான் அண்ணாவே எல்லாம் சொல்லி உங்களுடைய எல்லா கணக்கு வழக்கையும் முடித்து வைத்துவிட்டாரே...!"
ஆலைகளில் பதப்படுத்தப்பட்ட பருத்திகளை கொள்முதல் செய்யும் விஸ்வத்திடம் செல்வம் பேசிக் கொண்டிருந்தான்.
பருத்தி ஆலையில் முன்பு செழியன் உபயோகப்படுத்திய அலுவலக அறையின் இருக்கையில் கால்மேல் காலிட்டு தோரணையாக அமர்ந்திருந்த செல்வத்தின் முன் அமர்ந்து தன் வழக்கத்திற்கு மாறாக தன்மையாக பேசிக் கொண்டிருந்தான் விஸ்வம்.
அவனுக்கு காரியம் ஆக வேண்டுமே, அதற்கு கோபம் கொள்வதைவிட பணிந்து போவதே நல்லது என்று அனுபவம் வாய்ந்த அவருக்கா தெரியாது.
அதனால் தனது கோபத்தை மறைத்துக் கொண்டவராக பேசினார் விஸ்வம்.
"அது உங்க அண்ணன் ஏதோ தெரியாமல் செஞ்சிட்டாரு தம்பி... இப்போதான் ஆலை பொறுப்பை நீங்க எடுத்து நடத்துறீங்களே...! அதனால் நாம் புதுசா ஒப்பந்தம் போடுவோம்." நயமாக பேசினார் அவர்.
"அண்ணன் ஒன்று செய்தால் அதற்கு மாற்று கருத்தே கிடையாது. அதனால் நீங்க கிளம்பலாம்." செல்வம் வாயிலை நோக்கி கை காட்டினான்.
"வேண்டாம் தம்பி இதுக்கான விளைவுகளை நீங்க சந்திக்க வேண்டியிருக்கும்." எவ்வளவு நயந்து பேசினாலும் இவன் தன் வழிக்கு வரப்போவதில்லை என்பதை அறிந்த விஸ்வம் கோபத்தினை வெளிப்படையாக காண்பித்தான்.
"விவசாயிகளை ஏமாற்றுகிற உனக்கே பின் விளைவுகள் எதுவும் இல்லாமல் நல்லாத்தானே இருக்க... அதனால் நிச்சயம் நான் ரொம்ப நல்லாவே இருப்பேன்." விஸ்வத்தின் குணம் அறிந்ததும் செல்வத்திடம் அவருக்கான மரியாதை பண்பு குறைந்திருந்தது.
"வேண்டாம் செல்வம் என்னை பகைத்துக் கொள்ளாதே...!
என்னால் உன் மில்லுல பதப்படுத்தி வைத்திருக்க அத்தனை டன் பருத்திக்களையும் ஏற்றுமதி செய்ய முடியாமல் அப்படியே தேக்கி வைக்க முடியும்" என்று மிரட்டினார் விஸ்வம்.
"நீ இல்லன்னா ஊருக்குள்ள ஆயிரம் டீலர்... போய்யா" என்ற செல்வம் அவர் நிற்பதையும் பொருட்படுத்தாது தனது வேலையை கவனிக்கச் சென்றுவிட்டான்.
'ஒருத்தன் அடிக்க வந்ததுக்கே பயத்துல செழியனுக்கு கால் பண்ணி வர வைத்த ஆளு... நீயா இன்னைக்கு ஒருத்தன் உன்னை கொலை செய்யவும் தயங்க மாட்டேன் என்று மறைமுகமாக சொல்பவனிடம் சிறிதும் பயமில்லாமல் பேசிவிட்டு வந்திருக்கிறாய்...! நீ வளந்துட்டடா செல்வம்.' மனதிற்குள் தன்னை நினைத்தே சிலாகித்துக் கொண்டான் செல்வம்.
தன்னை அவமதித்து பாதி பேச்சினிலேயே வெளியேறிய செல்வத்தின் மீது விஸ்வத்திற்கு கொலைவெறியே உண்டானது. செல்லும் அவனின் முதுகையே வெறித்த விஸ்வம்,
"என் தொழிலில் உன் அண்ணனால் எனக்கு பல கோடி நஷ்டம். இப்போ நீயும் உன் அண்ணன் செய்த தப்பையே செய்கிறாய்" என்று வார்த்தைகளை பற்களுக்கு இடையில் கடித்து துப்பியவரின் மனதில் " உன்னை என்ன செய்கிறேன் பார்... நானே நேரடியாக வந்தும் என் பேச்சினை ஏற்காமலா போகிறாய்" என்று வன்மத்தை பிரதிபலித்தார்.
சிவநேசன் போன்ற விவசாயிகளிடமிருந்து ஆலைகளில் பதப்படுத்திய பருதிக்களை நேரடியாக கொள்முதல் செய்து அதனை வாங்கும் விலைக்கு மேல் நான்கு ஐந்து மடங்கு விலை வைத்து பெரிய பெரிய கார்மெண்ட்ஸ் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து கொள்ளை லாபம் பார்த்து வந்தார் விஸ்வம்.
இதனை தொழிலை கையிலெடுத்த நான்காவது மாதமே செழியன் கண்டு கொண்டான்.
"விஸ்வம் விற்று வரும் லாபத்தில் இரண்டு சதவீதம் விவசாயிகளுக்கு விலையாக நிர்ணயத்தால் கூட, பருத்தி விளைவிக்க ஆகும் செலவை விட மூன்று மடங்கு லாபம் வரும்" என்பதை செழியன் சிவநேசனிடம் சொல்ல,
"உனக்கு எது சரியென்று படுதோ அதை செய் தம்பி" என்று சிவநேசன் பொறுப்பை செழியனிடம் ஒப்படைத்தார்.
அதன் அடுத்த கட்டமாக செழியன் தங்கள் நிலத்தில் விளையும் பருதிக்களை பதப்படுத்தி தானே ஏற்றுமதி மற்றும் பெரிய பெரிய கார்மெண்ட்ஸ் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்தான். அதில் அவன் எதிர்பார்த்த லாபம் வர, தன் கிராமம் மற்றும் சுற்றுப்புற கிராமத்திலும் விளையும் பருத்திக்களை தனது ஆலைக்கே கொள்முதல் செய்து, விற்று வரும் லாபத்தில் சரியான தொகையை விவசாயிகளுக்கு அளிக்க அவர்களும் தொடர்ந்து செழியனிடமே விற்கத் தொடங்கினர்.
இதனால் விஸ்வத்திற்கு தொழிலில் பல நஷ்டம். ஏற்கனவே பருதிக்களை கொடுத்த வியாபாரிகள் கூட திரும்ப பெற்றுக்கொள்வதாகக் கூற விஸ்வம் செழியனை வந்து சந்தித்தார். மிரட்டினார் என்பதே சரியகா இருக்கும்.
"நியாயமாக விவசாயிகளுக்கு சேர வேண்டிய லாபத்தை கொடுத்திருந்தால் நான் ஏன் இந்த வேலைக்கு வரப்போகிறேன்"எனக் கேட்ட செழியன் தன்னை நம்பி இறங்கியிருக்கும் விவசாயிகளை ஏமாற்ற மனம் வராது "நான் கொள்முதல் வியாபாரத்தை விடுவதாக இல்லை" என உறுதியாகக் கூறி விஸ்வத்தை அனுப்பி விட்டான்.
செழியனை ஏதேனும் செய்தே ஆக வேண்டுமென துடித்துக் கொண்டிருந்த விஸ்வம், திடீரென செழியன் காணாமல் போனதால் தன் தொழிலில் மீண்டும் லாபம் பார்க்கலாம் என்று கணக்கு போட்டுக் கொண்டிருக்க, ஏற்கனவே செழியன் செய்ததை தந்தையின் மூலம் அறிந்த செல்வம்... அண்ணன் செய்ததை தானும் தொடர்ந்தான். விஸ்வம் செல்வத்திடமிருந்து இதனை எதிர்பார்க்கவில்லை. அதனால் இன்று செல்வத்திடம் பேசி பார்க்கலாமென வந்த விஸ்வம் மூக்குடைந்து அவமானப்பட்டு, செழியன் மற்றும் செல்வத்தின் மீது வன்மம் அதிகரிக்கச் சென்றார்.
****
தன் மீது மயங்கி விழுந்த நறுவை கண்டு பதறிய செழியன்,
"விழி... விழி..." என அழைத்து அவளின் கன்னம் தட்டி எழுப்ப முயற்சித்தான். அதற்குள் நறுவின் வகுப்பு மாணவர்கள் அங்கு கூடிவிட, தன் பதட்டத்தை மறைத்து தீபாவின் கைகளில் நறுவை ஒப்படைத்தான். நொடியில் தானொரு ஆசிரியர் என்பதை மீட்டுக்கொண்டான்.
ஹரிஷ் ஓடிச்சென்று கொண்டு வந்த நீரினை நறுவின் முகத்தில் தெளித்த செழியன், அவள் மெல்ல கண் திறக்கவும்...
"ஆர் யூ ஓகே மிஸ்.நறுவிழி" என்று கலங்கிய குரலுடன் கேட்டான். என்ன முயன்றும் கலங்கும் மனதினை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.
அவனின் கலக்கத்தை நறு கண்டுகொண்டாளோ இல்லையோ அருகிலிருந்த தீபா நன்றாகவே கவனித்திருந்தாள்.
அங்கு தான் ஸ்டாஃப் ரூம் என்பதால், மாணவர்கள் கூடியிருப்பதைக் கண்டு வகுப்புக்கு செல்லாது எஞ்சியிருந்த ஆசிரியர்கள் அங்கு வந்தனர். மாலதி உட்பட.
அதற்குள் செழியன் நடந்தவற்றை மாணவர்களிடமிருந்து அறிந்து கொண்டான்.
அங்கு வந்த மாலதி செழியன் அருகில் நின்று கொண்டிருந்த மாணவனை பார்வையாலே விலக்கிவிட்டு, செழியனை இடிப்பதை போல் சென்று நிற்க... செழியன் இரண்டடி தள்ளி நின்றான்.
"வாட் ஹேப்பன் செழியன்?" ஏதோ ரசனையாகக் கேட்பதை போன்று மாலதி கேட்க செழியனுக்கு ஆத்திரமாக வந்தது. செழியன் பதில் சொல்லாது நின்றான்.
சாந்தி மேடம் தமிழிடம் கண் காட்ட, அவன் புரிந்தது என்பதை போல்,
"என்ன செழியன் சார் என்னாச்சு? ஏன் எல்லோரும் வெளியில் நிற்கிறார்கள்?" என்று கேட்டான்.
தமிழ் அவ்வாறு கேட்டதும் செழியன் மாலத்தியைத்தான் பார்த்தான்.
"தமிழ் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பன் அவனே என்னை மாணவர்கள் முன்பு சார் என்று தான் அழைக்கிறான்" என்பதை சொல்லுவதாக அவனின் பார்வை இருந்தது. புரிந்த போதிலும் மாலதி அலட்சியமாகவேக் காட்டிக்கொண்டார்.
"நறுவிழி மயங்கி விழுந்துட்டாங்க தமிழ் சார்." நண்பனுக்கு அவனுக்கு வேண்டிய பதிலை அனைவர் முன்பு மரியாதை பண்பினிலேயே செழியன் சொல்லியிருந்தான்.
என்ன இருந்தாலும் நறு தமிழுக்கும் ஒருவகையில் உறவுக்கார பெண் என்பதால், செழியனின் பதிலை கேட்டதும் நறுவின் அருகில் சென்ற தமிழ்... "நறு என்னாச்சும்மா உடம்பு சரியில்லையா" என்று அக்கறையுடன் வினவினான். அவனின் கேள்வியில் எவ்வித விகல்பமும் இல்லை என்றாலும், செழியனைத் தான் நெருங்குவதற்கு மிகப்பெரிய தடையாக இருக்கும் தமிழை அவமானப்படுத்த சந்தர்ப்பம் வாய்த்து விட்டதாக நினைத்த மாலதி அதனை பயன்படுத்திக் கொள்ள எண்ணினார்.
"என்ன தமிழ் சார்... அவள் தான் தண்டனை கொடுத்ததற்கு மயக்கம் வந்ததை போன்று நடிக்கிறாள் என்றால் அவளுக்காக நீங்க இப்படி பதறுறீங்க...!"
மாலதியின் பேச்சில் அங்கிருந்த மாணவர்கள் உட்பட, ஆசிரியர்களும் முகம் சுழிக்க... ஏதோ பேச வந்த தமிழனை கைகாட்டி தடுத்து நிறுத்திய செழியன் தன் மாணவர்களை பார்க்க... அவர்களோ புரிந்தது எனும் விதமாக அனைவரும் வகுப்பிற்குள் சென்றனர்.
தீபா நறுவை கரம் பிடித்து அழைத்துச்செல்ல,
"ஹேய் உன்னை நான் சொல்லாமல் கிளாஸிற்குள் பிகக்கூடாது சொன்னது நினைவு இல்லையா" என்றார் மாலதி.
நறு தயக்கத்துடன் செழியனை பார்க்க,
"தீபா நீங்க நறுவிழியை அழைத்துச் செல்லுங்கள்" என மாலதியை பார்த்துக்கொண்டே அழுத்தமாகக் கூறினான் செழியன்.
அதில் மாலதிக்கு முகம் கருத்தது.
"செழியன்." சுற்றம் மறந்து மாலதி உரக்க விளித்தார்.
"கால் மீ மிஸ்டர். செழியன் சார்" என அதீத அழுத்ததோடு கூறிய செழியன்,
"என் வகுப்பு மாணவர்களுக்கு தண்டனை கொடுக்க நீங்கள் யார் மேடம்..." என்றான்.
செழியன் சாரென்று அழைக்க சொன்னதில் மனதில் எழுந்த கோபத்தோடு,
"நானும் அவர்களுக்கு பாடம் எடுக்கின்றேன்" என்றார் மாலதி.
"அப்போ அதை மட்டும் செய்ய வேண்டியது தானே... இல்லாததை சொல்லி அவர்களை திட்டுவதற்கு உங்களுக்கு யார் மேடம் அனுமதி கொடுத்தது." செழியனின் சீற்றத்தை முதல் முறையாக அவனின் சக ஆசிரியர்கள் பார்க்கின்றனர்.
"தனக்கு பாடம் எடுக்கும் ஆசிரியரை மரியாதை இல்லாமல் ஹலோ என்றழைப்பது சரியா?" தன்மீது தவறு இல்லை என்பதை போல் பேசினார் மாலதி.
"உங்களை அப்படி அழைத்தார்களா?" யோசிப்பதை போன்று பாவனை செய்தவன், என் மாணவர்கள் என்னை அழைப்பதில் உங்களுக்கு என்ன மேடம் வந்தது."
"முதலில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நல்ல தோழனாக இருக்க வேண்டும்" என்ற செழியன், ஒரு ஆசிரியர் தனது மாணவியின் நலன் விசாரிப்பதையே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் உங்களுக்கு அனைத்தும் தவறாகத்தான் தெரியும்" என்றான்.
அந்த இடத்தில் செழியன் தன் நண்பனையும் விடுகொடுக்கவில்லை.
"என் வகுப்பு மாணவர்கள் தவறு செய்தால் என்னிடம் சொல்லுங்கள்... தண்டனை வழங்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை."
செழியனின் வார்த்தைகளில் மாலதி இறுகி நின்றிருந்தார்.
அங்கு நின்றிருந்த ஆசிரியர்களுக்கு செழியனின் நியாயமும் புரிந்தது. மாலதியின் அதிகார உரிமை மற்றும் அதிகபடியான செயலும் புரிந்தது.
அந்நேரம் துறை தலைவர் வர, அனைவரும் கலைந்து சென்றனர். தமிழ் பார்வையாலேயே நண்பனை ஆரத் தழுவிச் சென்றான்.
"செழியன் சார் இவ்வளவு பேசுவார் என்று இன்று தான் தெரியும்."
"அவர் பேசியது சரிதான். இந்த மாலதிக்கும் இது தேவை தான்."
சக ஆசிரியர்கள் இருவர் பேசிச்சென்றது மாலதியின் செவிகளில் நன்றாகவே விழுந்தது.
அனைவரும் சென்றதும் மாலதியை மட்டும் தடுத்து அழைத்த செழியன்,
"இனியொரு முறை என்னை செழியன் என்று அனைவரின் முன்பும் உரிமையோடு அழைப்பது... பக்கத்தில் உரசி நிற்பது, என்னிடம் பேசினால், என் வகுப்பு பெண் மாணவர்களை தேவையில்லாமல் திட்டுவது, சந்தர்ப்பம் கிடைக்கும்போது காரணமின்றி அவர்களை தண்டிப்பது இதெல்லாம் கூடாது" என்று விரல் நீட்டி எச்சரித்தவன்,
"வகுப்பிற்கு வந்த வேலையை மட்டும் செய்யுங்கள்" என்றவனாக தன் வகுப்பிற்குள் நுழைந்து கொண்டான்.
அந்த நொடி செழியனின் மீது தனக்கு இருப்பதை காதலென்று சொல்லிக் கொண்டிருக்கும் மாலதிக்குள் செழியனின் மீது வெறி உண்டாகியது.
'என்னையே மிரட்டும் உன்னை என்னிடம் அடங்கி போகச் செய்கிறேன்' என மனதில் நினைத்த மாலதி தன்னிடம் வந்து அமர்ந்தாள்.
மாலதியை பார்க்கும் போது வரும் சிரிப்பினை என்ன முயன்றும் சாந்தி மேடத்தால் மறைக்க முடியாது போக, அவரை முறைத்தார் மாலதி.
"மேடம் சிரிப்பு வந்தால் சத்தமாக சிரியுங்கள், சிரிப்பது உடம்புக்கு ரொம்ப நல்லது" என்று சாந்தியிடம் வேண்டுமென்றே சொல்லிய தமிழ்,
"சிரித்து வாழ வேண்டுன் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே" என்று பாட மாலதி அறையை விட்டே வெளியேறிவிட்டார். அனைவரின் சிரிப்பு சத்தமும் மாலதியை பின் தொடர்ந்தது.
****
வகுப்பிற்குள் வந்த செழியனின் பார்வை தனது விழியைத் தொட்டு மீண்டது. வகுப்பில் அதிகப்படியாக எதுவும் வேண்டாம் என்று நினைத்தவன்,
"நறுவிழி முடியவில்லை என்றால் பெஞ்சின் மீது தலை சாய்த்துக் கொள்ளுங்கள்... இல்லையென்றால் சைன் போட்டு விட்டு சிக் ரூமில் சென்று சற்று ஓய்வெடுத்துவிட்டு வாருங்கள்" என்றான்.
செழியனுக்கு பதிலேதும் சொல்லாத நறு பெஞ்சின் மீது தலை சாய்த்துக்கொண்டு அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மாணவர்கள் அனைவரும் உள் வந்து விட்டாலும், சன்னல் வழியாக வெளியே நடந்ததை பார்க்கவே செய்தனர். அவர்களுக்கு செழியன் பேசிய அனைத்தும் நன்றாகவே கேட்டது.
"சார் மாலதி மேடமுக்கு செம நோஸ் கட்." மாணவன் ஒருவன் சொல்ல,
"இனி நாங்க உங்ககிட்ட பேசினால் அவங்களால் ஒன்றும் செய்ய முடியாது" என்று மாணவிகள் பக்கம் குரல் வந்தது.
"கடைசியா நீங்க பேசனது செம பஞ்ச் சார்" என்றான் ஹரிஷ்.
"ஒரு ஆசிரியரை இப்படித்தான் கிண்டல் செய்வதா... நான் இன்று பேசியது அவர்கள் செய்த தவறுக்கு, என் மாணவர்கள் அந்த தவறை செய்ய மாட்டார்கள்" என்று நினைக்கிறேன் என கூர்மையாக தன் மாணவர்களை பார்த்தான்.
"சாரி சார்."
அனைவரும் ஒருமித்த குரலில் தங்கள் மன்னிப்பை வேண்டினர்.
என்னதான் மாணவர்களிடம் தோழனாக பழகி சிரித்து பேசினாலும், ஒரு ஆசிரியராகவும் நடந்துகொண்டான் செழியன்.
அன்றைய வகுப்பினை முடித்த செழியன் மணி அடித்ததும், வகுப்பிலிருந்து விடைபெற்று வெளியே வந்து நறுவிழியை அழைத்தான்.
மெல்ல நடந்து வந்தவளின் ஓய்ந்த தோற்றம் அவனின் காதல் மனதை பிசைந்தது.
நறு வெளியே வந்ததும் அடுத்து யாருடைய வகுப்பு எனக் கேட்டு அறிந்தவன் எதுவும் சொல்லாது முன் நடந்தவன், தன் பார்வையால் அவளை தன்னை பின்தொடர செய்தான்.
செழியன் ஸ்டாப் ரூமிற்குள் சென்று தன்னிருக்கையில் அமர, நறு தயங்கி வெளியவே நின்றாள்.
தமிழ் புதகத்தோடு வகுப்பிற்கு செல்ல ஆயத்தமாக,
"விழிக்கு டென் மினிட்ஸ் பெர்மிஷன் கொடுடா?" எனக் கேட்டான் செழியன்.
"சரிடா" என்ற தமிழிடம், "அவளை உள்ளே வர சொல்லிட்டு போடா" என்றான்.
"ம்ம்ம்... நடத்துடா மச்சி" என செழியனை கிண்டல் செய்து சென்ற தமிழ், வெளியில் நிற்கும் நறுவியிடம்...
"உள்ளே வர சொல்லுறான், போ" எனக்கூறிச் சென்றான்.
தமிழுக்கு மௌனமாக தலையாட்டிய நறு உள்ளே சென்றாள். அங்கு செழியனைத் தவிர வேறு யாருமில்லை. அனைவரும் தத்தம் வகுப்பிற்கு சென்றிருந்தனர்.
தனக்கு முன்னால் இருந்த இருக்கையைக் காட்டி நறுவை அமர செய்தவன், அவளுக்கு முன் மேசையின் மீது தான் கொண்டு வந்திருந்த உணவை டப்பாவை எடுத்து வைத்தான்.
அவனும் எதுவும் கேட்கவில்லை. அவளும் இதுதான் காரணமென்று எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவளின் நிலையறிந்து செயல்பட்டான். அவளின் காதல் மனம் அவனின் செய்கையில் மகிழ்ந்தாலும், பாக்சினை தொடாது கைகளை பிசைந்துகொண்டு தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள்.
"தமிழிடம் உனக்காக பத்து நிமிடம் தான் பெர்மிஷன் வாங்கியிருக்கேன்" என்ற செழியன், "நான் சமைச்சதா இருந்தாலும் சாப்பிடமாட்டியா விழி" எனக் கேட்டான்.
அடுத்தநொடி எதுவும் சொல்லாது, என்ன உணவென்று கூட பாராது கண்களில் நீர் கோர்க்க உண்டு முடித்தாள்.
"நான் செய்த சாப்பாடு அவ்வளவு மோசமாகவா இருந்தது. இப்படி அழற?" என்று அவளை சிரிக்க வைத்துவிட வேண்டுமென்று செழியன் பேச,
"என் காதலை நிராகரித்த உங்களுக்கு இந்த உணர்வு புரியாது" என்று அவனின் விழி பார்த்துக் கூறிய அவனின் விழி அவன் அதிர்ந்து நிற்பதை கூட உள்வாங்காது சென்று விட்டாள்.
அவளின் வார்த்தைகளினால் அவன் தான் உறைந்து நின்றான்.
தன்னுடைய நிராகரிப்பு எந்தளவிற்கு அவளுக்கு வலியை கொடுத்து இருக்கிறது என்பதை அந்நொடி முழுவதும் உணர்ந்தான்.
துன்பம் நேராமல் இன்பம் வாய்க்க பெருவதில்லையே...!
தொடரும்...
 

Members online

No members online now.

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top