JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

  • Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், jbtamil18@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Dear Guest, Please register in the forum to read stories of the writers and post your valuable comments. Please email: jbtamil18@gmail.com or whatsapp: +91-6384850278 any login related queries.

JLine Bookstore Online

Episode 3 & 4

அத்தியாயம் 3:
செல்வத்தினை எதிர்பார்த்து அலைபேசியில் அவனுக்கு அழைப்பு விடுத்தவாறு நின்றிருந்த நறுவி தனக்கு மிக அருகில் உரசியவாறு வண்டியை நிறுத்தியது யாரென்று நிமிர்ந்து பார்க்க வந்தது தமிழ். செழியனின் நண்பன். ஒருவகையில் இவர்களுக்கு உறவினன்.
மருதவேல் தாத்தாவின் தம்பி சுந்தரவேலின் பேரன். இவருக்கு ஒரே மகள் பாவாயி. உள்ளூரிலேயே மணம் முடித்து, தனது கணவன் ராசு மற்றும் மகன் தமிழோடு வாழ்ந்து வருகிறார். சுந்தரவேல் ஐந்து வருடங்களுக்கு முன்னர் இயற்கை எய்திட அவரின் மனைவி காமாட்சி மகளோடு வசிக்கிறார். ராசுவின் பெற்றோர் தங்களது பேர பிள்ளையை கண் குளிர பார்த்ததுமே சில வருடங்களில் ஒருவருக்கு பின் ஒருவர் இறைவனடி சேர்ந்திருந்தனர்.
"ஹேய் தமிழ்..."
அவனை எதிர்பாராது அங்கு கண்டதும் உற்சாக கூவலோடு அவனின் தலையில் கொட்டு வைத்தாள்.
"குட்டி பிசாசு... வந்ததும் ஆரம்பிச்சிட்டியா?"
தமிழ் அவ்வாறு கேட்டதும் அவனிடம் ஏதோ சொல்ல வாய் திறந்த நறுவி வண்டியின் பின்னால் அமர்ந்திருந்த செழியனை கண்டு ஓரடி பின்னால் நகர்ந்தாள்.
அப்போதுதான் தமிழ் ஓட்டி வந்திருந்த வண்டியை கவனித்தாள், அது செழியனுடையது.
"ஏன்டா, மாமா இருக்காங்கன்னு ஜாடை காட்டியிருக்கக் கூடாது" என தமிழை முறைத்துக்கொண்டே முணுமுணுத்தாள். அவள் சொல்லியது செழியனுக்கும் நன்றாகவே கேட்டது.
"இப்படித்தான் பெரியவர்களை மரியாதை இல்லாமல் டா போட்டு பேசுவாயா, அதுவுமில்லாமல் அதென்ன அடிக்கும் பழக்கம்" எனக் கேட்டுக்கொண்டே வண்டியை விட்டு இறங்கிய செழியன் நறுவியை சிறு கண்டிப்புடன் பார்த்தான்.
"இனி இது போன்று நடந்துக் கொள்ள கூடாதென்று" அப்பார்வை சொல்லாமல் சொல்லியது.
"சாரி மாமா, இனி அடிக்க மாட்டேன்."
மென்குரலில் வெளிவந்தது அவளின் வார்த்தைகள்.
"அடிக்க மாட்டாய் சரி, அப்போ டா போட்டு அழைப்பாய் அப்படித்தானே?" என வினவினான்.
....................
அதற்கு நறுவி பதிலேதும் சொல்லாது மௌனமாக நிற்க,
"தமிழ் உன்னுடைய அத்தை மகன் தானே, இனி மாமாவென்று அழை" என செழியன் சொன்னதும் விலுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தவள், "எல்லோரையும் என்னால் மாமா என்று அழைக்க முடியாது, நீங்க சொல்லுவதற்காக வேண்டுமென்றால் அண்ணா என்று அழைக்கிறேன்" என்று படபடவென மொழிந்தாள்.
நறுவியின் வார்த்தைகளை கேட்ட தமிழ் நெஞ்சில் கை வைத்துக்கொண்டு "தங்கச்சீஈஈஈஈஈ" என்று ராகம் இழுக்க, செழியனுக்கு நெஞ்சில் இதம் பரப்பியது. அவனின் இதழ் கடையோரம் தானாக புன்னகை தோன்றி மறைந்தது.
'தன்னவள் தன்னை மட்டுமே மாமா என்று அழைக்க விரும்புகிறாள்' என அவனுக்கா தெரியாது. அதை அவள் வாய் வழியாகவே கேட்டதும் தனது விழியின் மீது இன்னும் காதல் பெருகியது.
ஆம் செழியன் நறுவிழியாளை இரண்டு வருடங்களாக நேசிக்கின்றான். அவளும் அவனை காதலிக்கின்றாள். ஆனால் எப்போதிலிருந்து எனக் கேட்டால் அவளிடம் பதிலில்லை. நறுவிழிக்கு செழியனிடத்தில் எப்போது எங்கு எப்படி காதல் வந்ததென்றெல்லாம் தெரியாது ஆனால் செழியனுக்கு நறுவியிடம் காதல் வரக் காரணமே அவன் மீதான அவளின் காதல் தான்.
ஒருமுறை தனது மாமன் மீதான காதலை நறுவி செல்வத்திடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது தற்செயலாக செழியனால் கேட்க நேர்ந்தது.
"நீ இப்படியே உருகி உருகி லவ் பண்ணிட்டு இரு... அண்ணாகிட்ட சொல்லுன்னு சொன்னாலும் சொல்லாத.. கடைசியில் உனக்கு போட்டியா எவளாவது வந்து நிற்க போகிறாள்" என்ற செல்வத்தை ஆழ்ந்து பார்த்த நறுவி சொல்லிய பதிலில் செழியனின் இதயம் அவளுக்காக எகிறி வெளியே குதித்தது.
"என் மாமாக்கு வேறு யாரையாவது பிடித்திருக்கிறதென்றால் நான் அமைதியாக விட்டுக்கொடுத்து விடுவேன். அவருடைய சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். என்னோடு இருப்பதைவிட அவர் விரும்பும் பெண்ணோடு இருப்பதுதான் அவருக்கு மகிழ்ச்சி. மாமாவுடைய காதலை எதிர்பார்த்து நான் அவரை காதலிக்கவில்லைடா. அவருக்கு என்மீது விருப்பமில்லை என்றாலும் அவர் மீதான என் நேசம் மாறாது. அவர் என் மாமா அதுக்காகவே அவரை ரொம்ப பிடிக்கும்."
அப்போது அவளின் கண்களில் வழிந்த காதலிலும், முகத்தில் தோன்றிய மலர்ச்சியிலும் விரும்பியே அவளிடத்தில் தலைகுப்புற கவிழ்ந்தான்.
அதுவரை அத்தை மகளென்று அன்புகாட்டியவன், அன்று முதல் தன்னுடைய மனைவியாக நெஞ்சில் பதித்தான்.
அதனை இப்போது நினைத்தாலும் அவனின் இதயம் தாறுமாறாக தாளம் போட்டது. முகத்தில் ஒளி கூடியது. அதனை மறைப்பதற்காகவே, தமிழிடமிருந்து வண்டியை வாங்கி ஆலை விடயமாக ஒருவரை பார்த்து வருவதாகக் கூறிச்சென்றான்.
செல்லும் செழியனின் முதுகினையே அவன் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்திருந்த நறுவி தமிழின் அர்த்தமான பார்வையில் தன்னை மீட்டாள்.
"என்ன அண்ணா அப்படி பார்க்கிறாய்?"
செழியனை காணும் அவளின் பார்வையில் வழிந்த ஏதோவொன்று தமிழுக்கு புரிந்த போதிலும் அதனை வாய்விட்டு கேட்காதவன் 'ஒன்றுமில்லை' என தலையசைத்து,
"என்ன அண்ணான்னு முடிவே பண்ணிட்டியா?" என்றான்.
"ஆமாம்" என்று வேகமாக மேலும் கீழும் தலையாட்டி, "என் மாமா உனக்கு மரியாதை கொடுக்க சொல்லியிருக்கும் போது கொடுத்துதானே ஆகணும்" என விளக்கம் சொல்லியவள் தமிழின் அர்த்தப்பார்வை இப்போது விளங்கிய பார்வையாக மாற அதனை கண்டு கொள்ளாது...
"நீங்க எங்கே இங்கு?" என்று வினவினாள்.
"செழியன் உன்னை அழைத்துப்போக வந்தான், எனக்கு இங்கு ஒரு வேலை அதான் அவனோடு வந்தேன்" என்ற தமிழின் பதிலில்,
"நான் செல்வத்தை வர சொன்னேனே" என மற்றுமொரு கேள்வி கேட்டாள்.
"இன்னைக்கு அவன் செய்த கூத்து இருக்கே" என்றவன் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க, தமிழை நோக்கி விளங்காத பார்வை ஒன்றை நறுவி செலுத்த... அந்நேரம் செழியன் வந்திருந்தான்.
"ஏறு போகலாம்". நறுவியிடம் சொல்லியவன்... "சீக்கிரம் வந்து சேருடா," என தமிழிடம் கூறினான்.
"வந்துடுவன்டா நீ மாட்டு வண்டியில ஜம்முன்னு உட்காருவதை பக்கத்துல இருந்து நான் பார்க்கணுமே" என்ற தமிழுக்கு சிறு தலையசைப்பை கொடுத்த செழியனின் கைகளில் அவனின் இருசக்கர வாகனம் வேகமெடுத்தது.
தன்னுடைய மாமனுடைய முதுகில் தனது தோள் உரச அமர்ந்திருந்த நறுவியால் அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியவில்லை.
'ஏதேனும் பேசு' என அவளின் மனம் உந்தி தள்ளிக் கொண்டிருந்தது.
செழியனின் மீது காதல் வருவதற்கு முன்பு அவன் அளவாக பேசினாலும், இவள் வாய் ஓயாது அவனிடம் பேசிக்கொண்டிருந்தவள் தான்... காதல் ஒன்று எப்போது மனதிற்குள் புகுந்ததோ அன்று முதல் செழியனை நேருக்கு நேர் பார்ப்பதை விட மறைந்திருந்து அவனறியாது பார்ப்பது, அவனருகில் வந்தாலே நெஞ்சம் படப்படப்போடு நிலம் நோக்கி நிற்பது ஏனோ உள்ளுக்குள் மகிழ்வளித்தது... இதோடு சேர்ந்து அவனிடம் பேசும் வார்த்தைகளும் வெளியே வர தயங்கின. காதலில் மனதோடு பேசிக்கொள்ளும் போது வெளி வார்த்தை எதுக்கென்று எண்ணிக்கொண்டாளோ.
'பேசு நறுவி.' மனக்குரல் காதில் எதிரொலிக்க... செழியனிடம் பேச வருவதுமாய் பின் தயங்குவதமாய் அவளிருக்க,
தன்னவளின் நெருக்கத்தில் லயித்திருந்தவன் வண்டியின் கண்ணாடி வழியாக நறுவியை பார்க்க அவளின் முகம் கண்டு செயலை யூகித்து மென்னகை புரிந்தவன் சில நிமிடங்கள் அவளாகவே பேசட்டுமென்று காத்திருந்தான்.
நேரம் போனதே தவிர அவள் பேசுவதாக இல்லை. அவள் பேசும்வரை பயண இடம் நீண்டு கொண்டேவா போகும்... ஏற்கனவே மூன்று கிலோ மீட்டரில் பாதியை கடந்தாயிற்று, இதற்கு மேலும் அவளாக பேச போவதில்லை என்பதை உணர்ந்தவன் தானே பேச்சைத் துவங்கினான்.
"தேர்வு நல்லா எழுதியிருக்கின்றாயா விழி?"
.............
அவனிடம் எப்படி என்ன பேசுவது என்ற யோசனையிலேயே வந்தவளின் செவிகளில் செழியன் கேட்டது விழவில்லை.
"என்ன பதிலையே காணோம்." அவளிடம் பதிலில்லாது போக இம்முறை சத்தமாகக் கேட்டிருந்தான்.
"ஆங்... என்ன... என்ன மாமா கேட்டீங்க...?"
"போச்சுடா... சுத்தம். எந்த நினைப்புல வர?"
"எல்லாம் உங்க நினைப்புல தான் மாமா."
நறுவியிடமே தனது முழு கவனத்தையும் பதித்திருந்த செழியனுக்கு அவளின் மெல்லிய முணுமுணுப்பும் தெளிவாக காதில் விழுந்தது. முறுக்கிய மீசைக்கு கீழே அவனின் உதடு தானாக நீண்டு விரிந்தது. சிறு வெட்கம் முகத்தில் தோன்றியதோ, காற்றில் அசைந்து ஆடும் முன்னுச்சி முடியை கோதிக்கொண்டான்.
"செல்வம் வரலையா மாமா?"
"ஏன் அவன் தான் வரணுமா?" தன் உடன்பிறப்பின் மீது சிறு பொறாமை துளிர்த்ததோ. அவர்கள் இருவரின் நட்பினை அறிந்தவன் அடுத்த நொடி பொறாமையை புறம் தள்ளினான்.
"அதை அவனிடமே கேட்டுக்கோ"என்று அவன் சொல்லும் அதே சமயம்,
"ரேசுக்கு போகலையா மாமா" என நறுவியும் ஒரு சேர கேட்டாள்.
"இன்னும் நேரமிருக்கே... மாலை தானே ரேஸ்" என்றவன் "கீழிறங்கு வீடு வந்தாச்சு" என்றான்.
'இன்னும் நீளாத இந்த பயணம்' என ஏங்கியவள் இறங்க மனமேயின்றி வண்டியிலிருந்து இறங்கி வீட்டிற்குள் சென்றாள்.
செழியனோடு இருசக்கர வாகனத்தில் முதல் பயணம்... அது தந்த இதத்தோடு உள் நுழைந்தவள் முற்றத்தில் போடப்பட்டிருந்த நீள் இருக்கையில் காலில் சிறு கட்டோடு அமர்ந்திருந்த செல்வத்தை கவனிக்க மறந்தவளாக உள் நோக்கி முன்னேற,
"ஒரு நாள் பயணத்துக்கே சுற்றம் மறந்தாச்சுப்போல" என்ற செல்வத்தின் கேலியில் நடப்பு மீண்ட நறுவி அப்போதுதான் அவனை கண்டு அருகில் வந்து முதுகினிலே நாலு மொத்து மொத்தினாள்.
"அடியேய் ராட்சசி எதுக்குடி இந்த அடி அடிக்கிற?"
"ஏன்டா வரல, மாமா மட்டும் வராமல் இருந்திருந்தால் நான் நடராணி தான் இன்னைக்கு" என்றவள் அப்போதுதான் அவனது காலில் போடப்பட்டிருந்த கட்டினை பார்த்து "என்னடா ஆச்சு" என வருத்தத்தோடு வினவினாள்.
"இவனுக்காகவெல்லாம் வருத்தப்படாதே நறுவி, அடிக்க வந்தவனுவல நாலு மிதி மிதிக்காமல்... பயந்து ஓடியாந்திருக்கான். செழியனுக்கு தம்பியா பொறந்துட்டு இப்படி தொடை நடுங்கியா இருக்கான்." இளைய மகனின் செயலை அலுத்துக்கொண்ட சுமித்ரை அவன் முன்பு ஆவி பறக்கும் தேநீரை வைத்துவிட்டு, கழுத்தை ஒரு வெட்டு வெட்டிச் சென்றார்.
"நான் ஒன்னும் பயந்தாகோலி பய கிடையாது, எதுக்கு வம்புன்னு ஓடினேன்." செல்வத்தின் குரல் சத்தமாக ஒலித்து இறுதியில் மெல்ல தேய்ந்தது.
"அதுதான் மணிக்கு எம்பது கிலோமீட்டர் வேகத்துல ஓடியாந்தியாமே" என்று கேலி செய்தவராக தெய்வானை பாட்டி வர அவர் பின்னே சிரிப்புடன் செழியன் வந்தான்.
"இந்த கிழவிக்கிட்டயா எல்லாம் சொன்ன" என்ற பார்வையை தனது உடன்பிறப்பை நோக்கி செல்வம் வீச அவனை கண்டு கொள்ளாதவாறு செழியன் சென்றுவிட்டான்.
"என்ன தான்டா ஆச்சு". சொல்லித்தொலையேன் என்கிற எரிச்சல் நறுவியிடம்.
"அந்த பாண்டி ஆளுங்க தான் காரணம்" என செல்வம் கூற அவனை தடுத்து...
"அதை நான் சொல்லுறேன்" என்ற பாட்டி கையால் கொசு வத்தி சுருளை சுற்ற நாமும் அவரோடு இரண்டு மணி நேரம் பின்னோக்கி செல்வோம்.
மாலை நான்கு மணியளவில் ரேக்ளா ரேஸ் நடைபெற உள்ளது. செழியனின் கிராமத்திற்கு நடுவில் ஓடும் ஆறு ஏழு கிராமங்களை தனதாக்கிக் கொண்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஏழு கிராம மக்கள் நெல் அறுவடை முடிந்து மழைக்கு நன்றி சொல்லும் விதமாக ஆற்றங்கரையில் வெட்ட வெளியில் சிறு மேடையில் நின்றிருக்கும் வருண(ன்) (மழைகடவுள்) சிலைக்கு, முதல் அருப்பு நெல்லினை படையிலுக்கு இட்டு பரந்து விரிந்திருக்கும் வானில் திரண்டு உருண்டு நகரும் மேகங்களுக்கு தங்களது மகிழ்வினைத் தெரிவிக்கும் வகையில் ஆட்டமும் பாட்டமும் மக்கள் கொண்டாட்டமும் கலை கட்டும். இரவு வருண பகவானை சிறு பல்லக்கில் வைத்து ஏழு ஊருக்கும் ஊர்வலமாக எடுத்துச் செல்வர்.
அதற்கு முன்னர் ரேக்ளா ரேஸ் நடத்துவர். விவசாயத்திற்கு மழை எவ்வளவு இன்றியமையாததோ அதேபோல் கால்நடைகளும்... மழைகடவுளான வருணனுக்கு படையிலிட்டு தங்களது நன்றியை தெரிவிப்பதைப் போன்று, கால்நடைகளில் முக்கியமான... விவசாயத்தின் முதல் படியான ஏர் உழுதலில் விவசாயிக்கு உதவியாக இருக்கும் மாட்டு இனத்தினை உற்சாகப்படுத்தும் விதமாக இப்போட்டி நடைபெறுகிறது. இதில் ஏழு கிராம இளைஞர்கள் கலந்து கொள்வர். ஒரு கிராமத்திற்கு இவ்வளவு பேர் தான் பங்கேற்க வேண்டுமென்கிற அளவு கிடையாது. இப்போட்டியில் வெற்றி பெரும் நபர் எந்த ஊரினைச் சேர்ந்தவரோ அவரது ஊர் மக்கள் தலைமை தாங்கி மறுநாள் வருண பகவானுக்கு ஏழு ஊர் மக்களும் ஒன்று சேர்ந்து நன்றி தெரிவிப்பதோடு அடுத்த ஒரு வருடத்திற்கு வருண பகவானின் சிலை வெற்றி பெற்ற கிராமத்தின் ஆற்றங்கரையிலேயே குடி வைக்கப்படும்.
சிலை எந்த கிராம பகுதியில் வீற்றியிருக்கிறதோ அந்த வருடம் அங்கு விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பது ஏழு கிராம மக்களின் நம்பிக்கை. பாராம்பரியமாக பழங்காலம் தொட்டு இவ்விழா நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கிராமமும் வெற்றி பெற்று வருடா வருடம் இடம் மாறிக்கொண்டே இருந்த வருண பகவான் கடந்த எட்டு ஆண்டுகளாக அதாவது செழியன் போட்டியில் பங்கேற்க தொடங்கியதிலிருந்து அவனது ஊரில் தான் வாசம் செய்கிறார். தன்னுடைய இருபத்தியோராம் வயதில் இப்போட்டியில் பங்கேற்க அரம்பித்தவன் கடந்த எட்டு வருடங்களாக வெற்றி வாகை சூடி வருகிறான். அதனால் மற்ற ஆறு ஊர்களிலும் இளைஞர்களில் இவனுக்கென்று தனியே எதிரிகள் உள்ளனர். அதில் ஒருவன் தான் பாண்டி. மற்ற பயலுகள் போட்டியின் போது மட்டுமே தங்களது எதிரியாக செழியனை பார்க்க, பாண்டி மட்டும் எப்போதுமே தனது முதல் எதிரியாக செழியனை நினைத்தான். அதற்கு காரணம் போட்டியில் வருடா வருடம் பாண்டியே இரண்டாம் இடத்தில் வருவான். சிறு இடைவெளியில் செழியன் தன்னை வென்றுவிடுவதாக அவன் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டான். ஊர் மக்கள் சாதாரண போட்டியாக பார்க்க, பாண்டி கௌரவமாக பார்த்தான். அது தான் அவன் மனதில் வன்மம் எழக் காரணமாக அமைந்தது.
இந்த வருடம் எப்படியாவது செழியனை வெற்றிகொள்ள நினைத்தவன் எப்படியென்று தனது நண்பர்களுடன் அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்கும் போது சற்று தூரத்தில் வந்து கொண்டிருந்த செல்வத்தை கண்டதும் தன் எண்ணம் ஈடேற போவதாக எண்ணி வெடி சிரிப்பு சிரித்தான்.
நண்பர்கள் என்னவென்று கேட்க,
"இந்த வருடம் சிலை நம்ம ஊருக்குத்தான் வரப்போகுது" என்றான்.
மற்றவர்கள் புரியாது பாண்டியை பார்க்க,
"அதோ வறானே செல்வம்... அவன் அந்த செழியனோடு தம்பி தானே, அவனுக்கு ஏதாவது ஆச்சுனா அந்த பய(செழியன்) எப்படி போட்டியில் கலந்துக்குவான். கூட பிறந்தவனா போட்டியான்னா... அவனுக்குலாம் உறவு தான் முக்கியம். அதனால எப்படியும் போட்டியில் செழியன் கலந்துகொள்ள மாட்டான்."
பாண்டி திட்டத்தை கூறவும் செல்வம் அவர்களுக்கு அருகில் வந்திருந்தான். அவர்களை கடந்து செல்ல முற்பட்டவனை,
"ஓய்... இந்தா இங்க வா."
பாண்டி அழைக்க திரும்பி பார்த்த செல்வம் யாரென பார்த்து, பாண்டியை அடையாளம் கண்டு முகம் சுளித்து மீண்டும் செல்ல ஆரம்பித்தான். அதில் கடுப்பாகிய பாண்டி ஓடிச்சென்று செல்வத்தின் இருசக்கர வாகனத்தின் பின்னால் பிடித்து இழுக்க, தடுமாறி வண்டியோடு சேர்ந்து கீழே விழுந்தான் செல்வம்.
செல்வம் தைரியமான ஆளெல்லாம் கிடையாது. எந்தவொரு செயலுக்கும் அவனுக்கு செழியன் அரணாக துணை நிற்க வேண்டும். ஆனால் புத்தி கூர்மையுடையவன்.
'எப்போதும் ஆபத்தில் எதிராளியை வீழ்த்துவதை விட தன்னை பாதுகாத்து கொள்வதே முதன்மை' எனக் கருதியவன் பாண்டி மற்றும் அவனோடு மேலும் நான்கு பேர் இருக்க அவர்களை ஒருமுறை கூர்ந்து நோக்கினான். அதற்குள் அவர்கள் செல்வத்தை சுற்றி வட்டமாக நின்று சுற்ற ஆரம்பித்தனர்.
'ஐந்து பேருடா செல்வா, நீ ஒத்த ஆளு ஒன்னும் பண்ண முடியாது பேசாமல் ஓடிடுடா' எனத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டவன்,
"அண்ணா சீக்கிரம் வா" என்று பாண்டியின் முதுகுக்கு பின்னால் இல்லாத தனது அண்ணனை அழைக்க ஐவரும் ஒரு சேர அங்கு பார்த்த நொடியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டவன் நொடியில் அவர்களிடமிருந்து தப்பி ஓடத் தொடங்கினான்.
இவர்களும் அவனை இன்று விடுவதில்லை என்பதாக துரத்திச் சென்றனர்.
ஓடிக்கொண்டே செல்வம் செழியனுக்கு அலைபேசி வாயிலாக தன் நிலையை கூற, தனக்கு எதிர்திசையில் தங்களது பருத்தி காட்டை நோக்கி செல்வத்தை ஓடிவரச் சொல்லிய செழியன் அவனும் அத்திசை நோக்கி ஓடினான்.
"இன்னைக்கு உன்னை விட மாட்டேன்டா" பாண்டியின் குரலில் அவ்வளவு வெறி.
கையில் கிடைத்த பெரிய கருங்கல் ஒன்றை எடுத்த பாண்டி செல்வத்தின் தலைக்கு குறி வைத்து எறிய... செல்வத்திற்கும் பாண்டிக்கும் இடையில் நொடிப்பொழுதில் சர்ரென்று வந்து நின்றான் செழியன்.
தொடரும்...

**********

அத்தியாயம் 4 :
"இன்னைக்கு உன்னை விட மாட்டேன்டா" பாண்டியின் குரலில் அவ்வளவு வெறி.
கையில் கிடைத்த பெரிய கருங்கல் ஒன்றை எடுத்த பாண்டி செல்வத்தின் தலைக்கு குறி வைத்து எறிய... செல்வத்திற்கும் பாண்டிக்கும் இடையில் நொடிப்பொழுதில் சர்ரென்று வந்து நின்ற செழியன் கல்லினை லாவகமாக பிடித்து செல்வத்தை நோக்கி ஓடி வந்தவர்கள் மீது வீச, கல் ஒருவனின் மண்டையை பதம் பார்க்க... "அய்யோ அம்மா" என்ற அலறளுடன் அவன் கீழே விழுந்தான்.
மடித்துகட்டிய வெட்டியுமாய், ஓங்கி உயர்ந்த தோற்றத்தில் இடது கையில் அணிந்திருந்த வெள்ளி நிற காப்பினை வலது கையால் திருகி உயர்த்தி, இடது கையால் வலது பக்க மீசையை முருக்கியவாறு கூர் பார்வையுடன் தங்களுக்கு முன் நிற்கும் செழியனைக் கண்டு உள்ளுக்குள் நடுங்கினாலும் வெளியே பாண்டி திடமாக தன்னைக் காட்டிக்கொள்ள, அவனின் எஞ்சிய மூன்று நண்பர்கள் அப்பட்டமாக தங்களது உதறலை உடலில் காட்டினர்.
"என்னடா இவனை பார்க்க வாத்தி மாதிரியே இல்லையே... அய்யனார் சிலை கணக்கா நிமிர்ந்து நிக்குறான்." பாண்டி தனக்கு அருகில் நிற்கும் ஒருவனிடம் முணுமுணுத்தான்.
"இப்போ அவன் வாத்தி வேலையை விட்டுப்போட்டு வயல் வேலை பார்த்துட்டு கிடக்குறான்." மற்றொருவன் பதிலளித்தான்.
"அதான் உடம்பு உரமேறி இருக்கு" என்ற பாண்டி, "இங்க பாரு செழியா இந்த தடவ சாமி எங்க கரைக்கு வரனும், அதுக்கு நீ போட்டிக்கு வர மாட்டேன்னு சொல்லு... உன் தம்பியை விட்டுவிடுகிறேன்" எனக் கூறினான்.
மெல்லிய கீற்று புன்னகையை படர விட்ட செழியன்... "உன்னால முடிஞ்சா என் தம்பி மேல கை வை" என்றவனாக அருகிலிருந்த கல்லின் மீது கால் மேல் காலிட்டு அமர்ந்து விட்டான்.
தன் அண்ணன் மீது கொண்ட நம்பிக்கையால் தானிருந்த இடத்திலிருந்து சற்றும் அசையாது திடமாக நின்றான் செல்வம்.
பாண்டியை தவிர மற்ற மூவரும் செழியனின் கம்பீரத் தோற்றத்திலேயே பயந்திருக்க, பாண்டி செல்வத்தை அடிக்குமாறி கண் காட்டிய பிறகும் முன்னோக்கி செல்லாது தயங்கி நின்றனர்.
"இப்போ நீங்க போகலன்னா நானே உங்களை தூக்கிப்போட்டு மிதிப்பேன்."
பாண்டியின் மிரட்டலில், "அவன் அடிச்சானா ஒரு அடியில தப்பிச்சிடலாம், இவன்கிட்ட மாட்டுனா அவ்வளவுதான் போதும் போதுங்க அடிப்பான்" என்று தங்களுக்குள் கிசுகிசுத்த மூவரும் செழியனை நோக்கி அடியெடுத்து வைத்தனர்.
செழியனை நெருங்கியது மட்டுமே மூவருக்கும் நினைவிருந்தது... பார்த்தால் தரையில் புரண்டு கொண்டிருந்தனர்.
இமைப்பொழுதில் செழியனின் அடியை கண்ட பாண்டிக்கே கண்களில் பூச்சி பறந்தது. அவனின் நிலை கண்டு செல்வம் எள்ளலாக சிரிக்க, செழியனை தாக்க ஓடி வந்த பாண்டி செழியனே எதிர்பாராது செல்வத்தை நோக்கி கையினை ஓங்கினான். நொடியில் சுதாரித்த செழியன் பாண்டியின் நெஞ்சில் தன் நீண்ட காலினை வைத்து ஒரு எத்து விட அருகிலிருந்த மரத்தில் மோதி கீழே விழுந்தான்.
பாண்டியின் முதுகில் மரத்தின் தண்டு பகுதி நன்கு மோதியிருக்க, எழ முடியா வலி அவனின் உடல் முழுக்க பரவி வலியில் முணகியவன்... மரத்தின் மீதே சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
"இனி அவன் எழ ரெண்டு மணி நேரமாகும்" என சொல்லிக்கொண்டே திரும்பிய செழியன், கீழே அமர்ந்து கணுக்காலினை பிடித்துக்கொண்டு வலியில் முகம் சுளித்த செல்வத்தை கண்டு பதறியவனாக தம்பியின் காலினை ஆராய்ந்தான்.
பாண்டி தன்னை தாக்குகிறானென்று அனிச்சை செயலாக பின்னோக்கி நகர்ந்த செல்வம் கால் இடறினான். இடறியதில் கணுகாலில் பிசகியதில் சுளுக்கு ஏற்பட்டது.
"டேய் அண்ணா வலிக்குதுடா" என வலியில் கத்தியவனை கண்டு செழியனுக்கு சிரிப்பு தான் வந்தது.
"ஏன்டா நாலு பேர அடிச்ச நானே அசரமா நிக்குறேன்... இந்த சின்ன சுளுக்குக்கு இந்த கத்து கத்துற" என்று செல்வத்தை கடிந்து கொண்ட செழியன் அவனை கைத்தாங்களாக அழைத்துச்செல்ல முயற்சிக்க...
"செழியா அடி வைக்கவே முடியலடா, என்னைத் தூக்கிட்டுப்போடா."
"என்னாது..."
செல்வம் சொல்லியதில் செழியன் சிறிது ஜர்க்காகினான்.
"ப்ளீஸ் அண்ணா, நடக்கவே முடியல அண்ணா... உன் தம்பி நான் பாவம் அண்ணா" என்று கெஞ்சினான். உண்மையிலேயே அவன் கெஞ்சினானா அல்லது நடித்தானோ அவனுக்குத்தான் தெரியும்.
"அண்..."
செழியன் அமைதியாக செல்வத்தை ஆராய, மீண்டும் செல்வம் அண்ணா என்று ஆரம்பிக்க...
"அடச்சீ... அண்ணா சொல்றத முதல்ல நிறுத்து. எனக்கே கடுப்பாகுது... நீ வார்த்தைக்கு வார்த்தை அண்ணா சொல்றதை கேட்பதற்கு உன்னைத் தூக்கிட்டே போயிடுவேன்" என்றவன் சொன்னதை செய்தான்.
வீட்டிற்கு வந்து நடந்ததை சொல்ல தெய்வானை பாட்டி சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் எண்ணெய் தேய்த்து வழித்து, நல்லெண்ணெய் தோய்ந்த வெண் துணியில் கட்டு போட்டு விட்டார்.
கதை கேட்டு முடிந்ததும் நறுவி சிரித்த சிரிப்பில், செல்வம் அசடு வழிந்தான்.
"ஏன்டா ஒரு அஞ்சு பேரை அடிக்க முடியாமல் மாமாவை துணைக்கு கூப்பிட்டிருக்க, எதுக்கு இவ்வளவு உயரம் வளர்ந்திருக்க..." என்று சத்தமாகக் கேட்ட நறுவி அருகிலிருக்கும் பாட்டிக்கு கேட்டுவிடாதவாறு மெல்ல செல்வத்திற்கு மட்டும் கேட்கும் வகையில், "இதுல என்னைத் தூக்க வேண்டிய மாமாவை உன்னைத் தூக்க வச்சிருக்க" எனச்சொல்லி நங்கென அவன் தலையிலேயே வேகமாக கொட்டு வைத்தாள்.
"ராட்சசி..." தலையை தேய்த்துக்கொண்டே அவளை பார்த்துக் கூறியவன் மெல்ல அங்கிருந்து எழுந்து சென்றான்.
அப்போது கருநீல சட்டையும், அந்நிறத்திற்கு ஏற்ற கரையிட்ட வெள்ளை வேட்டியும் அணிந்து கம்பீரமாக நடந்து வந்த செழியனை இமைக்கவும் மறந்து விழி விரித்து ரசித்து பார்த்தாள் விழி. அருகிலிருந்த பாட்டியோ, அவளை விளித்துக்கொண்டே எதிரில் வந்த வளரம்மையோ அவளின் கருத்தில் பதியவில்லை.
நறுவியின் துளைக்கும் காதல் பார்வை உணர்ந்த செழியனுக்கே சிறு வெட்கம் தோன்றியது. அதனை மற்றவர் பார்த்திடாது இருக்க பெரும்பாடு பட்டான். தன் தலைகோதி உள்ளுக்குள் பொங்கும் காதலை கட்டுப்படுத்தி முகத்தில் எழுந்த வெட்கத்தை மறைத்தவன் தெய்வானையின் காலிலும் அந்நேரம் அங்கு வந்த மருதவேல் தாத்தாவின் காலிலும் விழுந்து ஆசி பெற்றவன்,
"போட்டிக்கு நேரமாயிற்று வருகிறேன்" எனக் கூறிச்சென்றான்.
"அவன் போயிட்டான் வெரசா எல்லாரும் கிளம்புங்க, நாமளும் போட்டி பார்க்க போவணும்" என்று வீட்டின் மற்ற உறுப்பினர்களை பாட்டி துரிதப்படுத்த அனைவரும் சரியான நேரத்திற்கு மைதானத்திற்கு வந்திருந்தனர். செல்வம் கூட வலி தெறித்த காலினை கடினப்பட்டு அசைத்து வந்து சேர்ந்தான்.
மைதானம் ஏழு ஊர் மக்களால் நிரம்பி வழிந்தது. இளைஞர்களின் துள்ளல் அதிகமாகக் காணப்பட்டது.
நறுவி தனது அலைபேசியில் நடைபெறவிருக்கும் போட்டியை உயிர்ப்பாக இனஸ்டாவில் காண்பிக்க தயாராக....
"உன் வேலையை ஆரம்பிச்சிட்டியா" என்று வளரம்மை தனது மகளின் செயலில் பிடித்தமின்மையைக் காட்டிட,
"உங்களை மாதிரி பிள்ளைங்களயெல்லாம் இந்த சின்ன பெட்டியை வச்சிட்டு தான் நாசமா போறீங்க" என்றுக்கூறிய தெய்வானை பாட்டி "இதுல என்ற மூஞ்சியெல்லாம் காட்டக்கூடாது, என்னைய என் வீட்டுக்காரர் மட்டும் பார்த்தாக்கா போதும்" என கழுத்து வெட்டினார்.
"உன்னை காட்டினா வர விருப்பங்களும்(likes) வராமல் போயிடும், நீ கொஞ்சம் தள்ளி நில்லு பாட்டி" என்று வாயாடிய நறுவி தனது இனஸ்ட்டா நண்பர்களுக்காக நடைபெறவிருக்கும் ரேக்ளா போட்டியை பற்றி முதலில் ஒரு அறிமுக உரை ஆற்றினாள்.
ஏழு கிராமத்தை சுற்றி ஓடும் ஆற்றின் வழி பாதையில் வண்டிகள் செல்ல வேண்டும். கட்டை வண்டி அமைப்பில் இருக்கும் இந்த வண்டி ஒற்றை ஆள் மட்டும் அமர்வது போலிருக்கும். இது ஒரு மாடு அல்லது இரண்டு மாடுகள் பூட்டும் வகையில் இருக்கும். இந்த போட்டியில் பெரும்பாலும் காங்கேயம் காளைகளே பயன்படுத்தப்படுகிறது. மற்ற வகை மாடுகளை விட, காங்கேயம் காளைகள் அதிக தூரத்தை விரைவில் கடக்கும் திறன் கொண்டது. பொதுவாக ரேக்ளா போட்டி பதினைந்து முதல் அதற்கு மேற்பட்ட தூரத்தினை அளவீடாக வைத்து நடைபெறும். இன்று இங்கு ஏழு ஊரின் சுற்று பரப்பு இருபத்திரண்டு கிலோமீட்டர் தூரத்தினை அரை மணி நேரத்தில் கடந்து... போட்டியின் துவக்க புள்ளியிலேயே முற்று பெற வேண்டும்.
ஓரளவு ரேக்ளா ரேஸ் பற்றி கூறியவள்,
"இதுல எங்க ஊர் சார்பாக பல அண்ணாக்கள் கலந்துகிட்டாலும் எங்க வீட்டுலயிருந்து என்னோட மாமா செழியன் கலந்துகிறார். அவர் வெற்றி பெற வேண்டுமென்று தான் மற்ற அண்ணாக்களும் நினைப்பார்கள். சொல்ல வேண்டுமானால் மாமாவிற்கு உற்சாகம் அளிப்பதற்காகவே, எங்க ஊர் மற்ற அண்ணாக்கள் இதில் பங்கு பெறுகிறார்கள். கடந்த ஏழு வருடமா மாமாவை ஜெயிக்க முடியாமல் மற்ற ஆறு கிராம போட்டியாளர்களும் திணறுகிறார்கள். அதனால் சாமி சிலை எப்பவும் எங்க ஊர் அற்றங்கரையில் தான் குடியிருக்கின்றார். இம்முறையாவது யாராவது என் மாமாவை ஜெயிக்கிறார்களா பார்ப்போம்" என்று நறுவி நீண்ட உரையாற்ற, ஒலிபெருக்கியில் செழியன் களம் இறங்கியதாக அவனது பெயர் வாசிக்கப்பட்டது.
"அதோ இரட்டை காங்கேயம் பூட்டிய வண்டியில், கரு நீல சட்டையில்... மீசையை முருக்கிவிட்டு ஜம்முன்னு உட்கார்ந்திருக்காரே அவரு தான் என்னோட செழியன் மாமா" என்று அவள் செழியனை அடையாளப்படுத்த,
"ஹேய் உன் அலப்பறையை கொஞ்சம் நிறுத்து... உன் மாமா புராணம் கேட்டு காது ஜவ்வு அந்துபோச்சு, போட்டியை ரசிக்கலாம்" எனக்கூறிய செல்வம் நறுவியின் கையிலிருந்த அலைபேசியை வாங்கி தனது சட்டைப்பையில் போட்டுக்கொண்டான்.
போட்டியினை ஏழு ஊர் பஞ்சாயத்து தலைவர்களும் ஒரு சேர கொடியசைத்து தொடங்கி வைக்க, காளைகள் தங்களது பாதையில் சீரிப்பாய்ந்தன.
போட்டியின் அளவீடாக இருக்கும் இருபத்திரண்டு சுற்று பரப்பில் வீரர்கள் கடக்கவிருப்பது,
"ஆறு கோவில்கள், நான்கு பெரும் பாலங்கள், மூன்று சிறிய பாலங்கள், இரட்டைபாலம் ஒன்று, ஆலை அமைந்திருக்கும் குறுகியபாதை, இரு மங்கிலும் பச்சையை போர்த்திய வயல் பரப்பிற்கு நடுவில் நெலிந்து செல்லும் மண் பாதை, ஒரு அணை, இறுதியாக ஆற்றங்கரையில் பயணித்து மீண்டும் மைதானத்தில் முடிவடைகிறது."
பெரிய தலை ஒன்று ஒலிவாங்கியில் சொல்லி முடித்து சோடாவை தொண்டையில் சரித்தது.
"என்ன மாமோய் இவ்வளவு தூரத்தை வாயால் சொல்லும் போதே களைப்பா இருக்கா?"
கூட்டத்தில் இளந்தாரி ஒருவன் மேடையில் நின்றிருந்தவரை பார்த்து கேலியாக வினவ கூட்டத்தில் சிரிப்பலை எழுந்து அடங்கியது.
"வண்டிங்க வரவரைக்கும் செத்த அந்த நிழலில் போயிட்டு உட்காருவோம்." மருதவேல் தாத்தா சொல்ல அவரின் குடும்ப ஒரு மரத்திற்கு கீழ் சென்று அமர்ந்தது. ஊர் பெரிய தலைகளில் ஒருவராக சிவநேசன் மேடையில் அமர்ந்திருந்தார். அவர்களுக்கு பின்னாலேயே செல்ல முனைந்த செல்வத்தினை பிடித்து இழுத்த நறுவி, அவனை ஓரிடத்தில் உட்கார வைத்துவிட்டு, இரண்டு நிமிடங்களில் வருவதாகக் கூறி இருசக்கர வாகனத்துடன் அவன் முன்னால் வந்தாள்.
"புல்லட்டா!" நறுவி கொண்டு வந்த வண்டியை பார்த்து 'இவளை நம்பி இதில் போனால் அவ்வளவுதான்' என்று மனதில் அதிர்ந்தவன் "ஹேய் இந்த வண்டி வேண்டாம் நறு... உன் சின்ன வண்டியையே எடுத்து வா" என்றான். செல்வம் சொல்லியதை அவள் காதிலே வாங்கவில்லை.
"சீக்கிரம் ஏறுடா." அவளிடம் ஒரு வேகம். வண்டியை முடுக்கிவிட அவளின் கைகள் பரபரத்தன.
"இன்னும் கொஞ்ச நேரத்துல யாரு முதலில் வரான்னு தெரிய போகுது, அதை நேரில் போயி தான் தெரிஞ்சிக்கணுமா?" கால் வலியில் 'இவள் வேறு அலைகழிக்கின்றாளே' என்று கோபமாகக் கேட்டாலும் வண்டியின் பின்னால் அமர்ந்தான்.
தொடையில் கை ஊன்றி முகத்தை தாங்கியவன் உர்ரென "போ" என்றான்.
"நீ யாரையாவது லவ் பண்ணா நானும் உனக்கு இந்த மாதிரி துணைக்குலாம் வரேண்டா" எனக்கூறி நறுவி சிரிக்க,
தலைக்குமேல் கை கூப்பி கும்பிட்டவன், "காதலித்து, அதை சொல்ல கூட முடியாமல் நீ படுற அவஸ்தை உன்னோட மட்டும் இருக்கட்டும்... எனக்கு இந்த காதல் கண்றாவியெல்லாம் வேண்டாம்" என்று அழுத்தமாக உரைத்தான் செல்வம்.
"என்ன பண்றது மச்சி, மாமாவை பார்த்தாலே பேச்சு வர மாட்டேங்குது இதுல எங்கிருந்து காதலை சொல்லுறது" என்று பெரு மூச்சு ஒன்றை வெளியேற்றியவள், "எப்படியும் மாமாக்கு கல்யாணப் பேச்செடுத்தால் பாட்டியும், அத்தையும் என்னை தான் முதலில் மனசில் நினைப்பாங்க... அதனால மாமாக்கும் எனக்கும் தான் கல்யாணம்" என உறுதியாக கனவு கண்டாள்.
ஆனால் இந்த கனவு இன்னும் பத்து நாட்களில் காணாமல் போகப்போகிறது என்பதை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
"ஒருவேளை வீட்டிலுள்ளவர்களுக்கு விருப்பம் இருந்தாலும் அண்ணா வேண்டாம் என்றால்?" செல்வத்தின் வினாவில் வண்டியை சட்டென்று நிறுத்தியவள் பின்னால் திரும்பி செல்வத்தை பார்த்திருக்க, தனக்கு முன்னால் வந்த காரினை கவனிக்காமல் போனாள்.
நொடியில் அவளின் கண்கள் கலங்கி விட்டன.
"சாரி நறு." எப்போதும் சிரித்த முகமாக வலம் வருபவள் மனதில் சுமந்திருக்கும் காதலால் மட்டுமே தவிப்பையும் சோகத்தையும் உணர்கிறாள். அதனாலே காதல் என்பதன் மீது செல்வத்திற்கு கொலைவெறி. நறுவியின் இமையோரம் தேங்கி நின்ற நீரை கண்டவன் தன் மன்னிப்பை யாசிக்க,
"மாமாக்கு விருப்பம் எதுவோ அதுவே என் விருப்பமும்" என பட்டேன்று மொழிந்தாள்.
ஒரு நிமிடம் இருவருமே அடுத்து என்ன பேசுவதென்று தெரியாது ஒருவரையொருவர் பார்த்திருக்க,
"ஹேய் இடியட், அறிவிருக்கா... லவ் பண்றதுக்கு ரோடு தான் கிடைத்ததா?, நான் பிரேக் போடலன்னா இந்நேரம் பரலோகம் போயிருப்பீங்க" என்ற ஆணின் கர்ஜனையான குரலில் இருவரும் நடப்பு மீண்டு யாரென்று பார்க்க நிலைமை புரிந்தது.
செல்வத்தின் வீரியமான கேள்வியில் சுற்றம் மறந்த நறுவி நடு சாலையில் சட்டென்று வண்டியை நிறுத்த எதிரே வந்த கார் ஒதுங்கி செல்ல முடியாது, தான் வந்த வேகத்திற்கு வண்டியை நிறுத்தவும் முடியாது அருகில் அவர்களை உரசி விடாது வண்டிய ஒடித்து வளைத்து நிறுத்தியிருந்தான். இவ்வளவு கடினப்பட்டு வண்டியை நிறுத்தியிருந்த அதன் சத்தத்தில் கூட என்னவென்று நிமிர்ந்து பார்க்காது இருவரும் பேசிக்கொண்டிருக்க கார் ஒட்டி வந்தவனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் பெருகியது. எப்போதும் கோபத்தினை கட்டுப்படுத்த தெரியாத அவன் காரை விட்டு இறங்கி வந்து அழுத்தமாக வார்த்தைகளை உதிர்த்தான்.
தங்கள் மீது தவறு இருந்த போதும் அவன் கூறிய, அதாவது நறுவியையும் செல்வத்தையும் காதலர்கள் போன்று அவன் பேசிய வார்த்தை சினம் மூட்ட...
"பொண்ணும் பையனும் பேசினாலே அது காதல் தானா?" என்ற நறுவியின் கூர் பார்வை அவன் நெஞ்சத்தை தைத்தது.
தனது குரல் கேட்டு நறுவி திரும்பியதும், அவளின் அழகிய முகத்தில் சற்று தடுமாறியவன், அவளுக்கு நெருக்கமாக செல்வம் இருக்கவும் ஏனென்று தெரியாமலே செல்வத்தின் மீது கோபம் கொண்டான்.
'இப்போ அவன் மீது தனக்கு எதற்கு கோபம் வருகிறது?' தன் மனதோடு கேட்டுக்கொண்டவனுக்கு விடை நறுவியின் கேள்வியில் கிடைத்தது.
நறுவியின் காதலனென்று செல்வத்தின் மீது கோபம் வர, அவள் கேட்டதில் செல்வம் அவளது காதலன் இல்லையென அவன் மனம் மகிழ.. தன்னுடைய கோபம் மற்றும் மகிழ்வு இரண்டிற்கும் அவனிற்கு விடை கிடைத்தது.
'இதுக்கு பேர் தான் கண்டதும் காதலா?' மனதில் நினைத்தவன் நறுவியையே கண் சிமிட்டாது பார்க்க,
"இப்போ உங்களுக்கு அறிவிருக்கா, முன்ன பின்ன தெரியாத பொண்ண இப்படித்தான் வச்ச கண்ணு வாங்காமல் பார்ப்பாங்களா?" எனக் காட்டமாகக் கேட்டாள்.
பொதுவாக நறுவி இவ்வளவு கோபப்படும் ஆளெல்லாம் கிடையாது. யாரென்று தெரியாத ஒருவனிடம் அவளின் அதிகப்படியான கோபம் செல்வத்திற்கு வித்தியாசமாக பட, "நறு தப்பு நம்ம மேல தான் வா போகலாம்.. பந்தயம் முடிஞ்சிடப்போகுது" என்றான்.
அப்போதும் அவன் பார்வையை மாற்றிக்கொள்ளவில்லை.
"சாலைக்கு நடுவில் வண்டியை நிறுத்தியது தப்புதான்... ஆனால் நீங்க இப்போ அதைவிட பெரிய தப்பு பண்றீங்களே" என அவன் தன்னை வெறித்து பார்ப்பதை அவள் குறிப்பிட்டு கூறி,
"கண்ணை நோண்டி காக்காக்கு போட ரொம்ப நேரமாகுது" என்க,
பொதுவாக சண்டைக்கு பயப்படும் ஆளான செல்வம், அவளை கிளப்புவதில் குறியாக இருக்க... புதியவனோ அவளை மேலும் ரசனையாக பார்த்து வைத்தான்.
அதில் இன்னும் கடுப்பானவள், 'இவனிடம் சண்டையிடுவது கூட வீண்' என்று நினைத்தவள் "யோவ் தள்ளு" என்று மொழிய அவன் சிலையாக நின்றான்.
"நீ எந்தவூரு?"
நகர்ந்து செல்லாது தன்னிடம் தனது ஊரின் பெயரை கேட்டவனை ங்கே என பார்த்தவள், "டேய் இந்தாளுக்கு நடு சாலையில் பேய் பிடிச்சிருச்சு போலடா" என்று செல்வத்திடம் அவனை பற்றி நக்கலாகக் கூறியவள் வண்டியை சற்று பின் தள்ளி அவனை கடந்து சென்றுவிட்டாள்.
"நீயும் வரவர அண்ணா மாதிரி கோவப்படுற நறு" செல்வம் ஆதங்கமாக மொழிந்தான்.
"உன் அண்ணா பொண்டாட்டி உன் அண்ணா மாதிரி தானே இருப்பேன்" என்றவளிடம் மேற்கொண்டு பேசாது செல்வம் அமைதியாக வர... நறுவி போட்டியாளர்களை நெருங்கி விட்டாள்.
நறுவி போட்டியாளர்களுக்கு நடுவே சாலையில் கவனமாக முன்னோக்கி செல்ல செல்ல யார் யார் எந்தவூர் பயல்கள் போட்டியில் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று மனதில் குறித்துக்கொண்டே வந்தாள்.
எஜமானின் மிரட்டலுக்கு மிரண்டு சீரிப்பாயும் காளைகளின் மணி சத்தமும், கட்டை மர சக்கரத்தின் சத்தமும் அதிர்ந்து ஒலியெழுப்ப, ஏற்கனவே அதில் அஞ்சி கொண்டிருந்த செல்வம்...
சற்று தொலைவில் செழியனைக் கண்டுவிட்ட நறுவி இன்னும் வண்டியை முடிக்கி வேகத்தை அதிகரித்ததோடு இல்லாமல்... குறுகிய பாலத்தில் இரு வண்டிகள் போட்டிபோட்டுக் கொண்டு முன்னேற பார்க்க... அவர்களுக்கு நடுவில் சிறு நூலிழை இடைவெளியில் வண்டியை நுழைத்து அவள் கடந்த விதம் சற்று நொடியில் உயிர் பயத்தை செல்வத்திற்கு காட்டியது.
"அம்மா தாயே உன் காதலுக்காக என் உயிரோடு விளையாடாதே" என்ற செல்வத்தின் பேச்சில் சிரித்தவள் ஒரு கையால் தனது வாகனத்தை ஓட்டிக்கொண்டே மற்றொரு கையால் இடையில் தாவணி மறைவில் சொருகி வைத்திருந்த அலைபேசியை எடுத்து திறக்க, இருசக்கர வாகனம் சற்று தடுமாறியது.
"அய்யய்யோ பிடி, பிடி, பிடி..." செல்வம் பதறியே விட்டான்.
அவன் கத்திய கத்தலில் அவர்களுக்கு அருகில் போட்டிக்காக பாய்ந்து சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் தன்னிலை இழந்து மாட்டின் கயிறை விட்டுவிட, கீழே மல்லாக்க விழுந்தார். அவர் விழுந்த கோலம் கண்டு சிரிப்பு வந்தாலும் இருவரும் அவருக்கு உதவி செய்யவில்லை.
அவரோ அவர்கள் இருவரையும் திட்டியபடி எழுந்து நின்றார்.
"இப்படியாடா கத்துவ... நல்லவேளை மண் பாதைங்கிறதால அவருக்கு அடி பலமா இல்லை" என்றவள் மீண்டும் அலைபேசியை பார்க்க,
அவளிடமிருந்து அதனை பறித்தவன்...
"இப்போ என்ன உன் ஃபாலோவர்ஸ்க்கு செழியன் ஜெயிக்க போவதை காட்டணுமா" எனக் கேட்டவன் அதனை செய்தான்.
செழியன் அனைவரையும் முந்திக்கொண்டு முன் சென்று கொண்டிருக்க, இம்முறையும் அவனுக்கு பின்னால் இரண்டாவது இடத்தில் சென்று கொண்டிருந்த பாண்டியின் முகம் வெறியில் பளபளத்தது. அலைபேசி வழியாக அதனை கண்ட செல்வம், அரண்டு விட்டான்.
"அவன் மூஞ்சிய பார்த்தியா நறு, கொள்ளிக்கட்டை எரியுற மாதிரி எப்படி செவந்திருக்குன்னு."
"அந்த கருவா பய மூஞ்சில உனக்கு மட்டும் செவப்பு தெரியுதோ!"
அதுவரை செழியன் வண்டி ஓட்டும் அழகில் லயித்திருந்தவள், செல்வத்தின் பேச்சில் பாண்டியை பார்த்து வைக்க... அவனின் சட்டையெல்லாம் கிழிந்திருந்தது. அப்போதுதான் செழியனின் கையில் வித்தியாசமாக சிவப்பாக தெரிய... வண்டியின் வேகத்தை இன்னும் அதிகரித்து செழியனை நெருங்க முயற்சி செய்ய அவளால் அது முடியவில்லை.
செழியனின் மாட்டு வண்டி வேகத்தை அந்த புல்லட்டால் கூட முந்த இயலவில்லை. இல்லை நறுவிக்கு அவ்வளவு திடம் போதவில்லை போலும்.
அவனை நெருங்க முடியாது தவித்தவளின் கண்கள் செழியனின் கை மீதே நிலைத்திருக்க... சில வினாடிகளில் அந்த சிவப்பு வெறும் நிறமல்ல அவனின் ரத்தமென பாவை கண்டுகொண்டாள்.
செழியனின் வலது கை முழுக்க ரத்தத்தால் குளித்திருந்தது.
தொடரும்...
 

Members online

No members online now.

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top