JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

  • Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், jbtamil18@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Dear Guest, Please register in the forum to read stories of the writers and post your valuable comments. Please email: jbtamil18@gmail.com or whatsapp: +91-6384850278 any login related queries.

JLine Bookstore Online

Episode 5 & 6

அத்தியாயம் 5 :
ரேஸ் தொடங்குவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்,
"அடி வாங்கிய நம்மளே வந்தாச்சு இன்னும் அவனை(செழியன்) காணல." பாண்டியின் கூட்டாளி ஒருவன் கேட்க,
"அவனை ரொம்ப எதிர்பார்க்குற போல" என்றான் மற்றொரு கூட்டாளி.
"அடி வாங்குன நம்ம ஆளே(பாண்டி) தில்லா வந்து நிற்கும் போது அவனுக்கு என்ன ஆகிருக்கும் இன்னும் வரல."
"அவன் வர வேண்டிய நேரத்திற்கு சரியாக வந்திடுவான்டா."
தன்னுடைய நண்பர்களே தனது எதிரியை பற்றி ஆர்வமாகவும், தூக்கி வைத்து பேசுவது பிடிக்காத பாண்டி,
"கொஞ்சம் வாய மூடிட்டு போறீங்களாடா!" என்று வெடித்தான்.
ஏற்கனவே செழியன் மீது வெறியில் இருக்கும் பாண்டிக்கு தனது நண்பர்களின் வார்த்தைகள் மேலும் செழியன் மீதான கோபத்திற்கு தூபம் போட்டது. அதோடு மட்டுமில்லாது ஒரு உதையில் தன்னை நிலைகுலைய செய்தவனை மொத்தமாக வீழித்திட வேண்டுமென்று துடித்துக் கொண்டிருந்தான்.
அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தான். அந்த பக்கம் ஏற்கப்பட்டதும்,
"அந்த செழியன் கதையை முடிச்சிடனும், அவன் ரெட்டை பாலத்தை தாண்டிடக் கூடாது. அவன் இனி எப்பவும் எனக்கு போட்டியா வந்திட கூடாது." அவனிடம் சிங்கத்தின் மீது தேவையில்லாது கொண்ட ஹைனாவின் பழிவெறி.
"வண்டி சக்கரத்தில் குச்சியை விட்டு, செழியனை நிலைதடுமாற செய்து கீழே விழ வைக்க வேண்டும், அதானே திட்டம் இப்போ வந்து ஆளையே காலி பண்ண சொல்றீங்க." ஏதிர்முனையில் இருப்பவன் படப்படப்பாக பேசினான்.
"அப்பவே சொல்லியிருந்தா ஒத்துட்டிருந்திருக்க மாட்டீயே அதான் இப்போ சொல்லுறேன்." பாண்டியின் குரலில் நயவஞ்சகம் கரை கண்டது.
"அமௌண்ட் கொஞ்சம் அதிகமாகும்." அந்த பக்கம் இருந்தவன் இதுதான் சமயமென்று செழியனின் உயிருக்கு விலை பேசினான்.
"என் சொத்தையே கூட எழுதி தரேன்... இனி எனக்கு போட்டியா அவன் எப்பவும் வர கூடாது." ஆக்ரோஷமாகக் கூறியவன், போட்டிக்கு தயாராக சொல்லும் மணி அடிக்கவும் தனது வண்டியை நோக்கி சென்றான்.
"என்கிட்ட வாங்கி தின்னுகிட்டே, அவனை பெருமையா பேசுதுக... பார்த்துக்கிறேன்" என்ற பாண்டி வண்டியில் சக்கரத்தின் மீது கால் வைத்து ஏறி அமர்ந்தான்.
இரண்டாவது மணியும் ஒலித்து அடங்க, தமிழ் செழியனின் வண்டியினை போட்டி கோட்டில் நிறுத்தினான்.
"என்னடா நீ ஓட்டபோறீயா?... அவனை காணல,
உங்க ஆளு பயந்துட்டான் போல,"
பாண்டியின் ஏளனத்தில் தமிழ் பதில் கொடுக்க வாய் திறக்கையில் தனது வேட்டியை தோரணையாக மடித்துக் கட்டியபடி அங்கே வந்த செழியன்... பார்வையாலே தமிழை அமைதியாக இருக்க வைத்து, ஒரே குதியில் வண்டியில் ஒய்யாரமாய் அமர்ந்தான்.
செழியனின் தோரணையிலேயே கூட்டத்தில் ஆர்பரிப்பு விண்ணை பிளந்தது.
"போட்டியாளர் எல்லாம் வந்தாச்சாப்பா" எனக் கேட்டுக்கொண்டே மூன்றாவது மணி அடிக்க... ஏழு ஊர் தலை கட்டும் ஒரு சேர கொடி அசைக்க இளம் காளையர்கள் கையில் காளை கட்டிய வண்டி பறந்தது.
ஒவ்வொருவரும் சுழன்றடித்து முன் செல்ல... அவர்களையெல்லாம் லாவகமாக பின் தள்ளி முன் சென்றான் செழியன். எதிலும் நிதானத்தை ஆளும் அவன் இதில் வேங்கையென பாய்ந்தான். அந்த வேகம் நான்காவது கோவிலினை கடக்கும் போதே சூறாவளியாய் சுழன்றது. செழியன் சாட்டையினை சுழற்றாமலே அவன் பிடித்திருக்கும் கயிற்றின் சூழலுக்கு ஏற்ப மாடுகள் கட்டப்பட்டன.
செழியனின் மீதே கவனம் வைத்திருந்த பாண்டி, எப்போதாட ரெட்டை பாலம் வருமென காத்திருந்தான்.
செழியனும் பாண்டியும் ஒருவருக்கொருவர் முந்தியடித்துக்கொண்டு செல்ல மற்ற வீரர்களெல்லாம் இவர்களுக்கு, பல மீட்டர் பின்னால் தங்கினர். இந்த ஆளில்லாத நிலையினை தான் பாண்டியும் எதிர்பார்த்தான்.
ஆறு கோவில்கள் கடந்து, நான்கு பெரிய பாலமும், மூன்று குறுகிய பாலமும் முடிவடைந்து இரெட்டை பாலத்தினை நெருங்கும் சமயம், பாண்டி வித்தியாசமாக ஒலியெழுப்பினான். தனது ஆட்களுக்கு செழியனின் வரவினை அவ்வொலியின் மூலம் தெரியப்படுத்தினான்.
செல்வத்தை அடிக்க நினைத்த போதே பாண்டியின் மனநிலையை கணித்திருந்த செழியன் பாண்டியின் எத்தகைய செயலுக்கும் தன்னை தயார்படுத்திக்கொண்டே வந்திருந்தான். இப்போது அவன் எழுப்பிய ஒலியில் மனம் எச்சரிக்கை செய்ய கண்களை நான்கு திசைகளுக்கும் அனுப்பினான். ஒவ்வொரு மறை பகுதியையும் ஆராய்ந்தான்.
"போட்டியின் முக்கிய விதி வண்டியில் அமர்ந்திருக்கும் வீரனின் கால் தரையை தொட்டு விட்டால் அவர் போட்டியிலிருந்து தானாக நீக்கப்படுவார். ஆதலால் போட்டி தொடங்கியது முதல் எல்லையை அடையும் வரை வீரன் மண்ணை தொட்டுவிடக் கூடாது."
எவ்வளவு தான் எச்சரிக்கை உணர்வுடன் செழியன் இருந்தாலும்... அவன் பாலத்திற்கு நடுவில் பயணிக்கும் சமயம், திடீரென பருத்த மரக்கட்டை ஒன்று வண்டி சக்கரத்திற்கு குறுக்கே விழும்போது சற்று நிலை தடுமாறினான். வண்டி ஆட்டம் கண்டு கொடை சாயும் நேரம் தனது மொத்த பலத்தையும் திரட்டி, மாடுகள் இரண்டையும் திடப்படுத்தி, தன் பிடியின் மூலம் அவற்றிற்கு தைரியம் அளித்தவன், அந்நிலையிலும் தன்னுடைய கால் தரையில் பட்டு விடாதவாறு இருப்பதில் அதிகம் கவனம் வைத்தான். பிறழ்ந்த வண்டி நொடியில் சீராகி பாதையில் ஓட்டத்தை அதிகரித்தது. அதற்குள் செழியனை முந்தியிருந்த பாண்டி கர்வமாக அவனை பார்த்து சிரித்தான்.
பாவம் அவனுக்கு தெரிந்திருக்கவில்லை வெற்றி தோல்வி என்பது நிரந்தரமில்லை, அதனின் நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம்.
என்ன நடந்தாலும் மாடுகளின் ஓட்டத்தை மட்டும் நிறுத்திடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான் செழியன். அந்த உறுதி அடுத்த இரண்டு நிமிடங்களில் பாண்டியை பின்னுக்க தள்ளியது.
செழியனின் திடத்தைக் கண்டு பாண்டி சற்று அதிர்ந்து தான் போனான். ஆனாலும் அவனின் ஜெயிக்கும் வெறி அவனை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் சென்றது. மறைவிலிருந்த தன்னுடைய ஆட்களுக்கு பாண்டி ஜாடை காட்ட, பாலத்திற்கு கீழே மறைந்திருந்த ஐந்தாறு மாட்டு வண்டிகள் மேலே போட்டி பாதையில் பயணிக்கத் தொடங்கியது.
திடீரென முளைத்தவர்களை கருத்தில் கொள்ளாது தனது இலக்கின் மீதே கண்ணாய் இருந்தான் செழியன்.
செழியனின் இரு பக்கமும் சூழ்ந்த இருவர் அவனின் வண்டி சக்கரத்தோடு தங்களது வண்டியை உராய்வது போல் சாய, நூலிழையில் அவர்களை முண்டியடித்தான் செழியன்.
மீண்டும் அவனை நெருங்கிய ஒருவன், செழியனின் வண்டியின் கடையாணியை கழட்ட முயல... தானமார்ந்திருந்த வண்டியிலிருந்தே செழியன் உதைத்த உதையில் அவனின் வண்டி குப்புற கவிழ்ந்தது. விழுந்த வண்டியில் பூட்டியிருந்த மாடுகளுக்கு ஒன்றுமாகவில்லை என்பதை உறுதி செய்துகொண்டே அந்நிலையிலும் தன்னுடைய வேகத்தை அதிகரித்தான் செழியன்.
ஆனால் அதற்குள்,
செழியனின் வேகம் மட்டுப்பட்ட நேரத்தினை தனக்கு சாதகமாகக்கிக் கொண்ட பாண்டி அவனை முந்திச்செல்ல, செழியன் முன்னேறி விடாதவாறு நான்கு பக்கமும் பாண்டியின் மற்ற ஆட்கள் அவனை சூழ்ந்தனர்.
ஒருவன் வலது பக்க சக்கரத்தினையும் மற்றொருவன் இடது பக்க சக்கரத்தினை தத்தம் வண்டிகளை கொண்டு இடிக்க, முன்னேவும் செல்ல முடியாது பின்தங்கவும் இயலாது செழியன் திணறினான். திடீர் மோதலில் காங்கேயம் இரண்டும் மிரள, அவற்றை கட்டுப்படுத்துவதும் கடினமாகிப் போனது.
சில நொடி கண் மூடி தன்னை சமன் செய்தவன்,
இதுவரை மாடுகளை விரட்டக் கூட பயன்படுத்திடாத சாட்டையை தனது முதுகிலிருந்து எடுத்தான்.
செழியன் ஏதோ அரிவாளை எடுக்கப் போகிறான் என்று மிரட்சியுடன் பார்த்தவர்கள் அவனின் கையில் சாட்டையை கண்டதும் கெக்களித்தனர்.
"இதுக்கா இவ்வளவு தோரணை" என்ற ஒருவன் இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியை எடுத்து செழியனை நோக்கி வீச... சாட்டையை கத்தியை நோக்கி சுழற்றிட, கத்தி அழகா சாட்டை கயிற்றில் சிக்கியது. சிக்குண்டிருந்த கத்தியை அதே லாவகத்துடன் சாட்டையிலிருந்து வீச, அது சரியாக தனக்கு சொந்தகாரனின் உள்ளங்கையை பதம் பார்த்தவாறு கீழே விழுந்தது. எதிர்பாராத வீச்சில் ரத்தம் பீறிட்டு கொட்ட, வலியில் துடித்தவன் தன்னுடைய பிடிமானம் இழக்க... வண்டியோடு சென்று சாலையோர மரத்தில் இடித்து கவிழ்ந்தான்.
ஒரு பக்க இடம் காலியானதும் அதனை பயன்படுத்திக்கொண்டு செழியன் பாதையிலிருந்து வண்டியை சற்று கீழிறக்கி... தனக்கு முன்னால் செல்லும் வண்டியை கடந்து முன்னேறினான். அவனின் இத்தகைய செயலை எதிர்பார்க்காதவர்கள் செழியனை நெருங்க முயற்சி செய்ய... தங்களது முயற்சி முடியாத நிலையில் தங்களிடமிருந்த கம்புகளை ஒவ்வொன்றாக செழியனின் முதுகினை குறி வைத்து எய்தினர். வண்டியை பாதையின் இருபுறமும் நெளித்து ஓட்டி கம்புகள் தன்னோடு சேர்த்து மாடுகளின் மீதும் பாய்ந்திடாதவாறு தற்காத்தவன், வண்டியின் முழு பொறுப்பையும் காங்கேயங்களிடம் ஒப்படைத்துவிட்டு... சட்டென்று தான் அமர்ந்திருந்த வாக்கில் வண்டியின் கட்டைப்பகுதியிலேயே பின்னால் திரும்பி நின்றான்.
செழியனை தாக்கிக் கொண்டு வந்தவர்கள் அவன் செய்கையில் குழம்ப, தன்னை நோக்கி வந்த கம்புகள் அனைத்தையும் பிடித்து... தனக்கு எதிர் திசையை நோக்கி மின்னலென வீசினான். குழம்பியவர்கள் நிலை தடுமாற, கம்புகள் வந்த வேகத்தில் ஒன்றும் செய்ய இயலாது நின்றிருந்தவர்கள் கம்பினால் உடனுக்குடன் தாக்கப்பட்ட, அவர்களது வண்டியின் சக்கரத்தினை பார்த்து சில கம்புகளை செழியன் வீச... கம்புகளினால் சிக்கிக்கொண்ட சக்கரங்கள் நகர மறுத்து ஒன்றோடு ஒன்று மோதி கடையாணி கழண்டு... மாடுகள் மிரண்டு சாலையோடு வண்டிகள் கவிழ்ந்து இழுத்து கொண்டு போக வண்டியோடு தடியர்களும் சேர்ந்து இழுத்து செல்லப்பட்டனர்.
'இந்நேரம் செழியனின் கதை முடிந்திருக்கும்... இன்று தனக்குத்தான் வெற்றி' என நினைத்து சென்றுகொண்டிருந்த பாண்டியின் ஆசையில் கூடை மணலை அள்ளிப்போட்டான் செழியன்.
பாண்டியின் நினைப்பு ஒரு நிமிடம் கூட நீடிக்கவில்லை...
தன்னை தாக்க வந்த பாண்டியின் ஆட்களை வீழ்த்திவிட்டு, அதே சமயம் தரையிலும் தன் கால் படாதவாறு வண்டியை செலுத்தி பாண்டியை மிகக் குறுகிய நேரத்திலேயே தொட்டிருந்தான்.
இப்போது இருவரும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க, இருவரும் மாற்றி மாற்றி முன் சென்று பின் தங்கிய நிலையில் இருந்தனர்.
'என்ன செய்தாலும் முன்னுக்க வந்துகிட்டே இருக்கானே' என நினைத்த பாண்டி தங்களுக்கு பின்னால் திரும்பி பார்க்க மற்ற போட்டியாளர்கள் அனைவரும் சிறு புள்ளியாக கண்ணுக்குத் தெரிய, தனது வண்டியில் மறைத்து வைத்திருந்த வீச்சறுவாளை கையில் எடுத்தவன்... நொடியும் கடத்தாது செழியனை நோக்கி குறி பார்த்து வீசினான்.
பாண்டி நேரடியாக தன்னை தாக்குவான் என எதிர்பார்த்திடாத செழியன் சுதாரித்து சாட்டையை எடுத்து அரிவாளை தடுப்பதற்குள் அவனின் புஜத்தினை அரிவாள் பதம் பார்த்திருந்தது. ரத்தம் மெல்ல கசியத் துவங்கியது.
செழியன் விசிறியடித்த சாட்டையும் சரியாக பாண்டியின் முதுகினில் பட... சாட்டையின் வேகம் அவனின் சட்டையை கிழித்துக்கொண்டு முதுகில் சுரரீரென்ற வலியை ஏற்படுத்தியது.
வலி கொடுத்த கோபம் பாண்டியின் முகத்தில் பரவ, செழியனை வெல்ல வேண்டுமென்கிற வெறி அதிகரித்தது.
'ஏதாவது செய்' என அவனின் மூளை முட்டி மோத அதனை தடை செய்யும் விதமாக மற்ற போட்டி வீரர்கள் இவர்களை நெருங்கியிருந்தனர். அவர்களுடன் நறுவி மற்றும் செல்வமும் இணைந்திருந்தனர்.
'இனி அவனைத் தாக்க முடியாது' என எண்ணியவன் தன்னுடைய மாடுகளின் ஓட்டத்தை அதிகரிக்க முயன்றான்.
செழியனுக்கு அருகில் சென்றவள் கையில் வழிந்த ரத்தத்தை பார்த்து "அய்யோ மாமா என்னாச்சு?" என்று பதற, அவளின் குரல் கேட்டு திரும்பி பார்த்தவன் பதிலேதும் சொல்லாது பாதையில் கவனமாகினான்.
"எதுக்கு இப்போ நீ இவ்வளவு பதட்டப்படுற" என்று கேட்ட செல்வம் செழியனின் கரத்தினை கவனிக்கவில்லை. செல்வம் கேட்டதற்கு பதில் சொல்லாத நறுவி சட்டென்று வண்டியின் பெட்ரோல் டேங்க் மீது கால் வைத்து குத்திட்டு அமர்ந்தாள்.
"ஹேய்... ஹேய்... என்ன பண்ற நீ, உன் கூட வந்தால் போய் சேர வேண்டியதுதான்" வாய்விட்டு புலம்பிய செல்வத்தினை அவள் கண்டு கொள்ளவே இல்லை.
"இந்தா வண்டியை பிடி" என்று ஆக்சிலேட்டரிலிருந்து கையை எடுத்துக்கொண்டாள்.
"ஏதே" என விழித்தாலும் அவள் விட்டதும் பட்டென வண்டியை தன் வசப்படுத்தினான் செல்வம்.
"அப்படியே மாமா வண்டிக்கு பின்னால் கிட்ட நெருங்கி போ" என்றாள்.
"இப்போ எதுக்கு இந்த குரங்கு வேலை" என்றாலும் அவள் சொல்லியதை சரியாக செய்தான் செல்வம்.
"என்ன பண்ணப்போற நறு."
செல்வம் கேட்டு முடிப்பதற்குள் இருசக்கர வாகனத்தின் மீது தட்டு தடுமாறி எழுந்து நின்றவள் செழியனின் கட்டை வண்டியில் தாவியிருந்தாள்.
நறுவி தாவியதில் வண்டி சற்று ஆட்டம் காண,
"இப்போ எதுக்கு இந்த சேட்டை, கீழ விழுந்திருந்தால் என்னாவது" என்று செழியன் கடிந்து கொள்ள... அதனை காதிலே வாங்காதவள் முன் பக்கம் நகர்ந்து அவனருகில் சென்று ரத்தம் கசியும் கையினை பிடித்துக் கொண்டாள். அவளின் கண்களில் கண்ணீர் சுரந்தது.
"எதுக்கு இப்போ அழற, சின்ன காயம் தான்." அவளை சமாதானப்படுத்த முயற்சி செய்தான். ஆனால் பலனில்லை.
"இவ்வளோ ரத்தம் வருது இது உங்களுக்கு சின்ன காயமா" என்றவள் ரத்தப்போக்கினை நிறுத்த என்னவழியென்று சிந்தித்து, தனது தாவணியின் நுனியை கிழிக்க முயல,
"அச்சச்சோ இது போன பொங்கலுக்கு மாமா எடுத்து கொடுத்ததாச்சே" என்று வாய்விட்டு கூறியவளுக்கு செழியன் வாங்கித் தந்த துணியை கிழிக்க மனம் வரவில்லை.
அவளின் மீது ஒரு கண் வைத்தவாறே வண்டியை செலுத்திக்கொண்டிருந்த செழியன் அவள் செய்யப்போகும் செயல் உணர, அவளின் துணி பற்றிய பேச்சு காதில் விழுந்ததும் சத்தமாக சிரித்தான்.
செழியனின் சிரிப்பில் தன்னுடைய கலக்கம் மறைய அவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள் நறுவிழி.
அவளின் பார்வை அவனை என்னவோ செய்ய, "ஒரு கையால் ஓட்டுவதற்கு சிரமமா இருக்கு, இந்த கையை கொஞ்சம் விடுகிறாயா?" என்று சொல்லுவதைப்போல் தன்னையும் மீட்டுக்கொண்டான். தன்னுடைய கையினையும் அவளின் பிடியிலிருந்து உருவிக்கொண்டான்.
செழியனின் பேச்சில் நினைவு திரும்பியவள் அவனின் காயம் நினைவிற்கு வர, செழியனின் கையையும், தன்னுடைய தாவணியையும் மாறி மாறி பார்த்தாள். திடீரென யோசனைத் தோன்ற செழியனின் கழுத்திலிருந்த துண்டினை எடுத்து ரத்தம் கசியும் அவனின் புஜத்தில் இறுக்கிக் காட்டினாள்.
கட்டும்போது வலியில் சுருங்கிய அவனின் முகம் கண்டு இவளின் நெஞ்சம் விம்பியது.
கண்கள் கலங்க, "எப்படி மாமா ஆச்சு" என்றவள் தங்களுக்கு பின்னால் இரண்டடி இடைவெளியில் வந்து கொண்டிருந்த பாண்டியை தீயாய் முறைத்தாள்.
நறுவியின் பதட்டம், தாவல், கண்ணீர், யோசனை, கலக்கம், இப்போது பாண்டியின் மீதான கோபம் அனைத்தையும் ஆரம்பத்திலிருந்து நினைத்து பார்த்தவன் மனம் மகிழ்வில் துள்ளியது. அவளின் அனைத்தும் அவனுக்காக அல்லவா, இதயம் துடிக்கும் ஓசைக்கு ஏற்ப தன்னவளின் பெயரை தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
"கைக்கு ரொம்ப அசைவு கொடுக்காத மாமா..." என்றவள், பாண்டியை முறைத்துக்கொண்டே "கை வலித்தாலும் பரவாயில்லை நீதான் ஜெயிக்கணும் மாமா" எனக் கூறினாள்.
கை வலி கொடுத்த போதிலும் தன்னவளின் அருகாமையே தனக்கு ஆயிரம் யானை பலம் கொடுப்பதை போல் உணர்ந்தான். ஒரு நொடி தன்னை மறந்து காதலாக தனது விழியை நோக்கினான்.
மனம் குறுகுறுப்பை உணர்ந்து செழியனை நறுவி நோக்க, பட்டென்று தனது முகத்தை மாற்றிக்கொண்டான்.
'இப்போ மாமா என்னை பார்த்தாங்களா!, அவங்க கண்ணுல என்னமோ தெரிஞ்சுதே... என்னது.' நறுவி யோசிக்கும் போதே ஆற்று பாதையை கடந்து மைதானத்திற்குள் செழியன் நுழைந்திருந்தான்.
செழியனை கண்டதும் அங்காங்கே நிழலில் ஒதுங்கியிருந்த மக்கள் அனைவரும் எழுந்து வந்து உற்சாகமாக கை தட்டி ஆர்பரித்தனர்.
இன்னும் ஐம்பது மீட்டர் இடைவெளியில் எல்லைக்கோடு இருக்க, செழியனை முந்த வேண்டுமென்கிற வெறியில் ஆக்ரோஷமாக வண்டியை செலுத்திய பாண்டி தனக்கு முன்னால் பாதையில் இருந்த கருங்கல்லினை கவனிக்காது முன்னேற, சக்கரம் கல்லின் மீது எரியிறங்கிய அதிர்வில் அச்சு முறிந்து வண்டி கொடையடிக்க... பாண்டி தலைகுப்புற மண்ணில் கவிழ்ந்தான்.
பாண்டி விழுந்ததை கண்டு,
'உனக்கு இது தேவை தான்' என ஒருவிரல் காட்டி மனதோடு பேசியவள் கைதட்டி குதுகளித்தாள்.
நறுவியின் சிறு பிள்ளைத்தனமான செயல் பிடிக்காத செழியன் "விழி" என்று அதட்டி, "அடுத்தவர்களுடைய சரிவில் நாம் எப்போதும் மகிழ்வு கொள்ளக்கூடாது" என்று கூறினான்.
சில நொடிகளில் செழியன் எல்லைக்கோட்டினைத் தொட்டு வண்டியிலிருந்து குதித்து இறங்க ஏழு ஊர் மக்களும் ஒன்றாக மகிழ்வோடும் உற்சாகத்தோடும் தங்களது சந்தோஷத்தினை துள்ளிகுதித்து ஆர்பரித்தனர்.
"செழியனின் வெற்றி தெரிந்த கதை தானேப்பா."
"எட்டு வருடமே அவன் தானே தொடர்ந்து ஜெயிக்கிறான்." போன்ற பேச்சுக்கள் வேறு மக்களிடையே சலசலத்து.
இது எதையும் கருத்தில் ஏற்றிடாத செழியன் தனது வண்டிக்கு முன்னால் வந்து, இரு காங்கேயத்தின் நெற்றியிலும் அழுத்தமாக தன்னுடைய இதழ் பதித்து... தன்னை வெற்றி பெற செய்த வாயில்லா ஜீவனுக்கு நிறைந்த மனதோடு நன்றியை தெரிவித்தான்.
செழியனின் செயலின் அர்த்தம் உணர்ந்த அவ்விரு காளைகளும்... கழுத்தில் தொங்கும் மணி சத்தமிட கழுத்தினை ஆட்டி, முன்னங்கால் ஒன்றை தரையில் தேய்த்து... தலையை தாழ்த்தி கொம்பினால் மண்ணை குத்தி பறித்து தன்னுடைய உற்சாகத்தை வெளிப்படுத்தியது.
ஒலிபெருக்கியில் செழியனின் வெற்றியை உறுதி செய்து. வருண பகவான் சிலையின் இருப்பிடம் இந்த வருடமும் செழியனின் ஊர் தான் எனக்கூறி, அன்று மாலை நடைபெறவிருக்கும் சாமி சிலை பல்லக்கு ஊர்வலத்தினைப் பற்றி பேசி போட்டியினை நிறைவு செய்தனர்.
தொடரும்...


*****


அத்தியாயம் 6 :
ரேக்ளா போட்டி முடிந்த கையோடு ஆற்றங்கரையில் இருக்கும் வருண கடவுள் சிலைக்கு அபிடேகம் நடக்கத் துவங்கியது.
அங்கு செல்ல முனைந்த செழியனை தடுத்த நறுவி, அவனின் கையை இழுத்துக்கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
செழியன் நினைத்திருந்தால் ஒற்றை விளிப்பில் அவளை தடுத்திருக்கலாம். ஆனால் அதனை செய்யாது, வாயில் மறுப்பினை தெரிவித்த போதும் நறுவியின் இழுப்புக்கு உடன் சென்றான்.
அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்த செல்வமும், நறு செழியனை இழுத்து செல்வதை கண்ட அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் அருகில் வந்தனர்.
"ஏன்டி, எதுக்கு இப்படி அவனை இழுத்துகிட்டு போற?" என்று தெய்வானை பாட்டி கேட்க,
"என்னடி இது பொது இடத்துல, வயசு பையன் கையை பிடிச்சு இழுத்துகிட்டு போற... வயசு பொண்ணா லட்சணமா இருக்கத் தெரியாது" என நறுவியை வளரம்மை கடிந்தார்.
"யாரோ ஒருத்தர் கையை பிடிச்சு இழுத்தாள் அவளுக்கு அண்ணா கட்டிக்கிற முறை தானே" என செல்வம் தன்னுடைய தோழிக்கு ஆதரவாக பேசினார்.
வளரம்மை எப்போதும் இப்படித்தான். நறுவியை அடக்கம் ஒடுக்கமாக வளர்க்கிறேன் என்று அவள் என்ன செய்தாலும் அதில் ஏதேனும் குறை கண்டுபிடிப்பார். இப்போதும் அதையே செய்தார்.
"முறையா இருந்தாலும் இப்படித்தான் செய்வங்களா?" என்று அவர் செல்வத்திடம் பாய,
"இந்தா வளரு இப்போ இங்க என்னாகிப்போச்சுன்னு இப்படி சலம்புற" என்று தனது தங்கையின் வாயினை அடைத்தார் சிவநேசன்.
தங்கையின் மீது சிவநேசனுக்கு அன்பு அதிகம் ஆனால் அதைக்காட்டிலும் மருமகளின் மீது உயிரையே வைத்திருக்கிறார். செல்வம் சொல்லிய கட்டிக்கிற முறை என்கிற ஆசை அவருக்கும் உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் செழியனுக்கு கல்யாண குரு தொடங்கவுள்ளது. அப்போது முறையாக வளரம்மையிடம் பேசிட வேண்டுமென்று அவர் காத்திருக்க, விதி வேறொன்றை முடிவு செய்து வைத்திருப்பதை அவர் அறியவில்லை.
"அதில்லங்கண்ணா, என்ன இருந்தாலும் ஊர் பேச்சுக்கு நாமளே சூழ்நிலையை உருவாக்கிடக் கூடாதே" என்ற வளரம்மை சிவநேசன் பார்த்த பார்வையில் தன் வாயினை மூடிக்கொண்டார்.
வளரம்மையின் இப்படிப்பட்ட பேச்சுக்களிலிருந்து காப்பதற்காகவே செழியன் நறுவியிடம் அதிகம் ஒதுங்கியே இருப்பான். செல்வம் அவற்றையெல்லாம் பொருட்படுத்தமாட்டான்.
"இன்னும் என்னடி அவன் கையவே பிடிச்சிட்டு நிக்குற." தான் இவ்வளவு சொல்லியும் நறுவி செழியனை பிடித்தபிடி விடாமல் இருக்க சற்று உரக்க கத்தினார்.
"மாமாக்கு அடிப்பட்டிருக்கும்மா, அதான்..."
நறுவி சொல்லி முடிப்பதற்குள் பாய்ந்து வந்து செழியனின் கையை பார்த்தவர்,
"அய்யோ சாமி என்னய்யா இது... எம்புட்டு ரத்தம், எப்படிய்யா ஆச்சு" எனக்கேட்டு செழியனின் கையை ஆதுரமாக பிடித்தார்.
என்ன தான் கோபமாக எப்போதும் சிடுசிடுவென்று இருந்தாலும் வளரம்மைக்கும் பிள்ளைகள் மீது அதிக பாசமுண்டு. அது எப்போதாவது இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் வெளிவரும்.
"அத்தை ஒன்னுமில்லை" என செழியன் கூறிக்கொண்டிருக்கும் போதே,
"என்னாச்சு கண்ணு" என்று சுமித்ரை கலங்கும் விழிகளோடு வினவினார். அதே கேள்வியை சிவநேசனும் தனது பார்வையால் கேட்க,
"அந்த பாண்டி பய அசந்த நேரமா பார்த்து போட்டுட்டான்ப்பா" என்று பதிலளித்தவன் நடந்த அனைத்தையும் கூறினான்.
"செல்வத்தை அடிக்க துரத்தினப்பவே என்கிட்ட ஏன் விடயத்தை சொல்லவில்லை" என்றவர் "மருத்துவமனைக்கு போகலாம்" என்க,
"காயம் ஆழமா படலப்பா, அறுவா உராய்ஞ்சுது அவ்வளவுதான். சும்மா மேத்தோல் கிழிஞ்சிருக்கு சின்ன காயம் தான் மஞ்ச(ள்) பத்து போட்டால் சரியாப்போகும்" என சாதரணமாகக் கூறினான்.
"எய்யா இவ்வளவு ரத்தம் போயிருக்கு சின்ன காயமுங்கிற, ஒரு எட்டு ஆஸ்பத்திரி போயிட்டு வந்துடுப்பா" என்ற பாட்டி... "வாத்தியார் வேலைக்கு படிச்சு என்னத்த" என புலம்பினார்.
"அது வந்து அப்பத்தா" என ஏதோ சொல்ல வந்தவன்,
"ப்ளீஸ் மாமா" என்ற நறுவியின் வார்த்தையில் மறுப்பின்றி செல்வத்தை அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்றான்.
மருத்துவமனை சென்று வீடு திரும்புகையில்,
"அண்ணா"
"சொல்லுடா"
"உன்கிட்ட ஒன்னு கேக்கணுமே!"
"ம், கேளு." என்னவாக இருக்குமென்று யோசித்த போதிலும் செல்வத்தின் அண்ணன் என்கிற அழைப்பே ஏதோ முக்கியமான ஒன்றை கேட்க விழைகிறான் என்பதை கணித்தான் செழியன்.
"உனக்கு நம்ம நறுவை பிடிக்குமா?"
"பிடிக்கும்."
"பிடிக்கும்ன்னா எப்படி... எந்த மாதிரி... எந்த வகையில்?"
"எப்படி... எந்த மாதிரின்னா?"
செல்வம் கேட்பத்தின் அர்த்தம் புரிந்தபோதிலும் புரியாத மாதிரி வினவினான்.
"உனக்கு நான் என்ன கேட்க வருகிறேன் என்பது தெரியும். உன் மனசுல என்ன இருக்குன்னும் தெரியும்."
"தெரியுதுல அப்புறம் ஏன் கேட்குற?"
"உன் வாயால் கேட்கத்தான்."
"நான் சொல்லுவதை விழி கேட்டால் மட்டும் போதும்."
"அப்போ உனக்கும் காதல் இருக்கு, அப்படியா!" செல்வம் குரலில் மகிழ்ச்சி ததும்பியது.
இதுநாள் வரை யாரிடமும் சொல்லாத தன்னுடைய மனதை தனது உடன் பிறப்பிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டுமென்கிற ஆவல் உந்த முதல்முறையாக தன்னுடைய காதல் மனதை செழியன் திறந்தான்.
"எஸ், அம் இன் லவ் வித் மை விழி. ஷீ இஸ் மை லைஃப்." செழியனின் குரலில் காதல் பொங்கி கரகரப்பாக ஒலித்தது.
இருசக்கர வாகனத்தின் கண்ணாடியில் தெரிந்த செழியனின் கண்கள் அலாதி காதலை பிரதிபலித்தது. அக்காதல் பார்வையில் ஒருநொடி செல்வமே ஸ்தம்பித்துவிட்டான்.
"உன் கண்ணுல காதலை பார்க்கும்போது நான் நறுவா இருக்கக் கூடாதுன்னு ஏக்கமா இருக்குடா அண்ணா." செல்வம் அப்பட்டமாக வழிந்தான்.
"நல்லவேளை நீ எனக்கு தம்பியா பொறந்துட்ட... இல்லை நான் செத்திருப்பேன்." செழியன் முற்றிலும் கேலியாய் தனது தம்பியை வாரினான்.
செல்வம் செழியனை முறையோ முறையென்று முறைத்தான்.
"நறுவும் உன்னை காதலிக்கின்றாள் தெரியுமா?"
"தெரியும்."
செல்வத்திற்கு சற்று ஆச்சர்யமாகவே இருந்தது. நறுவியின் காதல் எப்போதோ தெரிந்திருந்த செல்வம் அவள் இறுதி வரை தன்னுடைய காதலை சொல்லப்போவதில்லை என்பதை உணர்ந்து, தானாக அண்ணனிடம் பேசம் வேண்டுமென்று நினைத்தான். அதற்கு முன் நறுவியின் மீது அண்ணனுக்கு ஏதேனும் அப்படி இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும், நறுவியின் காதலை சொல்லி செழியன் மறுத்து விட்டாள் தன் தோழி மொத்தமாக மரித்துவிடுவாள் என்பதாலேயே செல்வம் இத்தகைய முடிவினை எடுத்தான். அதன் காரணமாக செழியனை சிறிது உற்று கவனிக்க ஆரம்பித்தான்.
அதன்படியாக செழியனின் அன்றாட நடவடிக்கைகளில் அவன் கண்டுபிடித்தவை,
செழியன் காலை எழுந்ததும் நறுவியின் முகம் பார்த்த பிறகே வயலிற்கு செல்கிறான். காலை நேர தேநீர் அவனுக்கு நறுவியின் கையால் தான். ஒருநாள் நறுவி எழ தாமதமாகி விட, தன்னுடைய அன்னை கொடுத்த தேநீரை தொடாது கூட அறைக்கு சென்று விட்டான். கேட்பாரற்று அத்தேநீர் கசப்பேறியது. அன்று அதன் பின்னர் நறுவி எழுந்து அவளின் அரவம் உணர்ந்த பிறகே அறையை விட்டு வெளியில் வந்தான். நேரமகிவிட்டதே அவன் தேநீர் பருகியிருப்பானென்று நறுவி நினைத்திருக்க, செழியனே அவளை அழைத்து தேநீர் கேட்டிருந்தான். இப்போதுதான்டா குடித்தாய் எனக்கேட்ட அன்னையின் கையில் ஆறிபிபோயிருந்த குவளையை திணித்தான்.
'செழியனின் மனதினை தெரிந்துகொள்ள இந்த நிகழ்வு மட்டும் போதாது.' மனதில் நினைத்த செல்வம் இன்னும் ஆழமாக செழியனை கவனிக்க ஆரம்பித்தான்.
ஒரு நாளின் அன்றாட அவனின் தேவைகள் அனைத்தையும் வீட்டிலிருப்பவர்களின் கவனத்தை ஈர்க்காது நறுவியே அவனுக்கு செய்யுமாறு உருவாக்கியிருந்தான் செழியன். காலை நறுவியின் கையால் கலக்கும் தேநீரில் ஆரம்பிக்கும் அவனின் பொழுது இரவு அவளின் கையால் பரிமாறப்படும் உணவோடு முடிவடையும். அதனை நறுவிழி கூட உணராதது தான் விந்தை.
காதலோடு சேர்த்து இருவரும் தன் இணையை கணவனாக மனைவியாக மனதில் உறுவகைப்படுத்தி இருந்தமையால் இச்செயல்கள் வித்தியாசமாக தெரியவில்லை போலும். இதே மனதில் காதல் இல்லையென்றால் 'இவன் எதற்கு அவனின் தேவைகளில் என்னை உட்புகுத்துகிறான்' என பேதையின் மனது கணக்கிட்டு பார்த்திருக்கும். ஆனால் நறு தான் மொத்தமாக அவனிடத்திக் வீழ்ந்து போயிருந்தாளே.
இதனையெல்லாம் பார்த்த செல்வத்திற்கு தான்,
'அடப்பாவி கல்யாணம் ஆகாமலே குடும்பம் நடத்துகிறானே' எனத் தோன்றியது.
'இருவரும் ஒரே அறையில் தங்கவில்லை அவ்வளவுதான் வித்தியாசம்' என்று நினைத்த செல்வம் செழியனிடம் அவனின் காதலைப்பற்றி கேட்பதற்கு சரியான தருணத்தை எதிர்பார்த்திருக்க, இன்று அவனுடனான இந்த தனிமை பயணத்தை பயன்படுத்திக் கொண்டான்.
செழியனின் தெரியும் என்கிற பதிலில் ஆச்சரியம் கொண்ட செல்வம் "எப்படி?" என வினவினான்.
"விழியின் என்மீதான காதலால் தான் எனக்கு அவள்மீது காதல் வந்தது." ஒரு வரியில் சொல்லியிருந்தான்.
"அப்போ நீயாவது அவகிட்ட காதலை சொல்லலாமே!" செல்வத்திடம் எதிர்பார்ப்பு கூடியது.
'நமக்கு விருப்பமான இருவர் வாழ்க்கையில் இணைந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் என்கிற எண்ணம் தோன்றுமல்லவா' அதே மனநிலையில் இப்போது செல்வம் இருந்தான்.
"சரி யாருக்குமே தெரியாத என்னுடைய காதல் உனக்கெப்படி தெரிந்தது?"
செழியன் யாருக்குமே தெரியாது என்று நினைத்திருக்க, செல்வம் இப்படி பட்டென்று கேட்டதும் சற்று அதிர்ச்சி தான் இருந்தாலும் அதனை சமாளித்திருந்தான்.
தான் கவனிதவற்றை செல்வம் கூற, செழியனின் கருவிழி வெளியே குதித்து விடுவதைப்போல் பார்த்தான்.
"அவ்வளவு அப்பட்டமாகவா தெரியுது!"
"ஆமாம், கொஞ்சமா" செல்வம் சிரித்துக் கொண்டான்.
"கொஞ்சம் உற்று கவனித்தாலும் உங்களின் காதல் வீட்டிலிருப்போருக்கு தெரிந்துவிடும். ஆனால் நம் வீட்டில் எல்லாம் மக்காக இருக்கிறது." செல்வம் சலித்துக் கொண்டான்.
"இதுதான் சாக்குன்னு எல்லோரையும் மக்கு சொல்லிட்ட... நீயும் இந்த மக்கு குடும்பத்தில் ஒரு அங்கம் தான்" என்ற செழியன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. செல்வம் தான் தனது தோழியின் காதலை சொல்லிக்கொண்டு வந்தான்.
"நீயாவது அவளிடம் சொல்." நடு நடுவே இதனையும் சொன்னான்.
"என்னடா நான் சொல்லுறது கேட்குதா?"
செழியனிடம் பதிலில்லாமல் போகவே அவ்வாறு கேட்டான்.
"எனக்கு ஒரு ஆசை இருக்கு டா!"
"என்ன ஆசை?"
"அப்பாவுக்கும் அப்பத்தாவுக்கும் எங்க ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம் செய்து வைக்க விருப்பம்."
"அதுக்கு."
"எனக்கு விழி அவள் காதலை முதலில் சொல்லணும் ஆசை."
"இதனால் தாங்கள் சொல்ல வருவது."
செழியன் என்ன கூற வருகிறான் என்பது செல்வத்திற்கு சுத்தமாக புரியவில்லை.
"எனக்கு இல்லை விழிக்கோ கல்யாணப் பேச்சு எடுக்கும் போது, எங்களை சேர்க்கத்தான் நினைப்பார்கள். அதுவரை விழி காதலை என்னிடம் சொல்லுகிறாளா பார்க்கிறேன். ('பார்க்கிறேன் என்பதை விட தவமாய் தவமிருக்கின்றேன்.' செல்வத்திடம் சொல்லும் அதே நேரம் மனதில் நினைத்துக் கொண்டான்.) இல்லையென்றால் முதலிரவில் என் ஒட்டுமொத்த காதலையும் என்னுடைய மனைவியாய் என் மடியில் அமர்த்தி கத்தி சொல்லுவேன்."
செழியனின் ஆசை காதலைப்பற்றி ஒன்றும் தெரிந்திடாத செல்வத்திற்கு கிறுக்குத்தனமாகத் தான் தோன்றியது.
"அப்போ கடைசி வரை ரெண்டு பேருமே சொல்லபோறதில்லை." பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவன், "நீயும் நறுவை காதலிக்கும் விடயத்தை நானே அவகிட்ட சொல்லுறேன்... வீட்டுக்கு போனதும் மொத வேலை அதுதான்" எனக்கூறி வண்டியின் வேகத்தைக் கூட்டினான்.
"நோ, வேண்டாம் செல்வம். என் காதலை நான்தான் சொல்லுவேன். நான் சொல்லும் போது என் விழியோட விழி விரிவதை நான் பார்த்து ரசிக்கணும். அவளை அப்படியே என் நெஞ்சில் புதைச்சிக்கணும்." இதனை சொல்லும்போதே செழியனின் கண்கள் காதலால் மயங்கியது. கருவிழி மேல்நோக்கி சொக்கி நின்றது.
"போதும் போதும்."
'செழியனின் வார்த்தைகள் தனக்கே காதலித்துப் பார்க்கும் எண்ணத்தை உண்டாக்கிவிடும் போலிருக்கே' மனதில் நினைத்தவன் சிறு எரிச்சலோடு செழியனின் பேச்சினை நிறுத்தியது.
"சரி யார் தான் சொல்லுறது. சொன்னாதானே தெரியும்."
"சொல்லும்போது சொல்லுவேன். அதுவரை உன் திருவாயினை நீ மூடிக்கொண்டிருந்தால் போதும்" என்ற செழியன், "உன்னையெல்லாம் நம்ப முடியாது, பிரண்டுகிட்ட மறைக்கமாட்டேன் அது இதுன்னு உலறனாலும் உலறிடுவ... அதனால நானா என்னுடைய காதலை விழிகிட்ட சொல்லுற வரை நீ வாய் திறக்கக் கூடாது. இது என் மேல் சத்தியம்" என அழுத்தமாகக் கூறினான்.
"இதென்ன போங்கு... நானே வச்சால் தான் அது சத்தியம்."
"அப்படியா!" செழியன் ஒரு மாதிரியாக பார்த்தான். அவன் பார்வைக்கான பொருள் செல்வத்திற்கு விளங்கவில்லை.
"ஆமாம்" சொல்லி சமாளித்தான்.
"நீ சத்தியம் வைக்கலன்னாலும், நானா வச்சுக்கிட்ட சத்தியம் எம்மேல... எப்படியிருந்தாலும் யார் சத்தியத்தை மீறினாலும் பின்விளைவு என்னவோ எனக்குத்தான் அதனால தம்பி யூ க்ளோஸ் தி டோர், டூ யூ அன்டெர்ஸ்டேண்ட்?." குறுஞ்சிரிப்போடு வினவினான்.
"வாத்தி அறிவாளியாத்தான் இருக்கீங்க" என்ற செல்வம் சரியென தலையை ஆட்டினான்.
இந்த சத்தியத்திற்கு தான் ஏன் உறுத்தியளித்தோம் என்று செல்வம் வெகு விரைவிலேயே வருத்தம் அடைய போகிறான்.
இவர்கள் வீட்டிற்கு வருவதற்குள் சாமி பல்லக்கு ஊர்வலம் இவர்களின் ஊரினை கடந்திருந்தது.
வீட்டிற்கு வந்ததும் அவனது புஜத்தில் போடப்பட்டிருந்த கட்டினை பார்த்து,
"என்னய்யா சின்ன காயமுன்னு சொன்ன, கட்டு போட்டிருக்கிறத பார்த்தாக்கா அப்படி தெரியலயே" என தெய்வானை பாட்டி சந்தேகத்தோடு கேட்டார்.
"ரத்தக்கசிவு நிக்கவே இல்லை அப்பத்தா, அதான் தச்சு விட்டுருக்காங்க. ஆனால் பயப்படும்படி ஒன்னுமில்லை."
செழியனிடம் கேட்ட கேள்விக்கு செல்வம் பதிலளித்தான்.
'வரும்போதே வீட்டில் சொல்ல வேண்டான்னு தானே சொன்னேன். ஏன்டா...' பார்வையால் முறைத்த செழியனை திரும்பியும் பாராது அங்கிருந்து நகர்ந்து விட்டான் செல்வம். அதன் பின்னர் அரை மணி நேரத்திற்கு நான், நீயென போட்டி போட்டு ஆயிரம் பத்திரம் சொல்லியே அவனை விடுவித்தனர் குடும்ப உறுப்பினர்கள். அவர்களின் நலன் விசாரிப்பிற்கு நடுவில் நறுவியால் செழியனிடம் பேசக்கூட முடியவில்லை.
இரவு தாமதமாகவும், செல்வம் உணவு வேண்டாம் என்று சொல்லியதால் செழியன் மட்டும் தனித்து சாப்பிட அமர்ந்தான்.
"நீங்களெல்லாம் சாப்பிட்டாச்சா?"
தனக்கு உணவு பரிமாறிய தனது அன்னை சுமித்ரையிடம் கேட்டவன், அவர் "ஆச்சு" என்றதும் உணவில் கை வைத்தான். அந்நேரம் தெய்வானை அவரது அறையிலிருந்து சுமித்ரையை அழைத்தார்.
அப்போதுதான் ஞாபகம் வந்தவராக, "அச்சச்சோ இந்த அத்தைக்கு மூட்டு வலிக்கு எண்ணெய் காய்ச்ச மறந்துட்டேனே" என்று தலையில் தட்டிக் கொண்டவர், "கண்ணு நீ போட்டு சாப்பிட்டுக்கய்யா... நான் வந்துடுறேன்" என அரக்கப்பரக்க அடுக்கலைக்கு சென்று இலுப்பை எண்ணெய்யினை காய்த்து மிதமான தனுப்பில் எடுத்துக்கொண்டு தன்னுடைய மாமியார் அறை நோக்கி ஓடினார்.
இன்றும் மாமியாரின் குரலுக்கு பயப்படும் தனது அன்னையை நினைத்து சிரித்துக்கொண்டவன் சாப்பாட்டினை கையினால் அள்ளி வாயிற்கு கொண்டு செல்ல மடக்க கட்டு போட்டிருந்த புஜத்தில் வலி பரவியது. வலி தாங்காது முகம் சுளித்தவன், அடுத்த வாயினை அள்ளி வைக்க யோசித்தான். வெட்டு பட்ட இடத்தில் தையல் போடுகிறேனென்று மருத்துவரும் ஊசியினை வைத்து குத்திருக்க, அவனால் வலியை பொறுத்துக்கொள்ள முடியாது போனது.
'இந்த வலிக்கு பசி எவ்வளவோ மேல்' என எண்ணியவன் உணவை உண்ணாது எழ, அவன் முகத்திற்கு நேரே வாயிற்கு அருகில் உணவு அடங்கிய தளிர் கரம் ஒன்று நீண்டது.
கரத்திற்கு சொந்தம் யாரென்று பாராமலே செழியனுக்கு தெரிந்தது.
"எனக்கு போதும் விழி." முகம் பார்த்துக் கூறினான்.
"தட்டில் போட்டது அப்படியே இருக்கு, நான் ஊட்டி விடுறேன் நீ சாப்பிடு மாமா." வலியில் அவன் முகம் சுளித்த போது, அவனிடம் பேச சந்தர்ப்பம் வேண்டி அவனையே நோட்டமிட்டிருந்த நறுவியும் தனக்கே வலித்தது போல வலியை உணர்ந்தாள். உணர்வின் தவிப்பில் இருந்தவளுக்கு தன்னை மறந்த நிலையில் செழியனின் அருகில் சென்று உணவினை நீட்டிட, உரிமையாக ஒருமை விளிப்பும் வந்ததும்.
இவ்வளவு நாள் மரியாதையாக அவள் அழைத்த போதெல்லாம் தோன்றிடாத ஒரு நெருக்கம் நீ என்கிற ஒருமையிலும், அவளது செயலிலும் செழியன் உணர்ந்தான். அதன் இதத்தில் அவன் அசையாது நிற்க,
"சாப்பிடு மாமா" என்றாள்.
"நான் செல்வதை கூப்பிட்டு சாப்பிட்டுக்குவேன் விழி..." தனக்கு அடிப்பட்ட வேதனையில், தன்னை மறந்து அவளின் காதல் வெளிப்படுகிறது. அதில் சுகமாக நனைந்தாலும் தனது சிறு செயல் கூட தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்திடக் கூடாது என்று நினைத்தான்.
"நான் கொடுத்தால் சாப்பிட மாட்டீயா மாமா." அவளின் கண்கள் கலங்கியதோ!
"அத்தை(வளர்) பார்த்தாக்கா தேவையில்லாமல் உன்னை திட்டுவாங்க விழி, நீ போ." எப்போதும் செழியனுக்கு நறுவின் நலனே முக்கியம்.
"அத்தை (சுமித்ரை) இருந்திருந்தால் மறுக்காமால் ஆ வாங்கிருப்ப தானே மாமா."
'நானும் உனக்கு இன்னொரு அம்மா என்கிறாளா!' நறு கூறிய வார்த்தைகளின் பொருளுணர்ந்த செழியன், மறுக்க மனமின்றி வாய் திறந்து உணவினை வாங்கிக்கொண்டான்.
செழியன் போதும் போதுமென்க, அதனை காதில் வாங்காது... "மாத்திரை போடணும் மாமா நல்லா நிறைய சாப்பிடு" என்று சொல்லிக்கொண்டே அவன் எப்போதும் சாப்பிடும் அளவையும் தாண்டி ஊட்டிக்கொண்டிருந்தாள்.
"இதற்கு மேல் சாப்பிட்டால் என் வயிறு நிச்சயம் வெடிச்சிடும் விழி" என்று செழியனே கிண்டல் செய்யவும் தான் அவள் உணவு அளிப்பதை நிறுத்தினாள்.
இருவரின் உள்ளமும் காதலால் நிறைந்திருந்தது. செழியன் இன்று அவளின் செயலால், தன்னவளை உரிமையாய் காதல் பார்வை கொண்டு வருடி கொடுத்தான்.
செல்வத்தின் போதனையால் கல்லூரியின் இறுதி தேர்வு முடிந்ததும் செழியனிடத்தில் தன்னுடைய காதலை சொல்லிட முடிவெடுத்திருந்த நறு, செழியனின் தற்போதைய இலகு நிலையும் அவனின் புதிதான பார்வையும் ஏதோ சொல்ல... அப்போதே தனது காதலை சொல்லிட தீர்மானித்து "மாமா" என்று ஒட்டு மொத்த காதலையும் அந்த ஒற்றை வார்த்தையில் தேக்கி அழைத்தால்.
'நம்ம ஆளுக்கு இன்னைக்கு என்னாச்சு, செயல், விளிப்பு எல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு... ஒருவேளை காதலை சொல்லப்போறாளோ.' தனக்குத்தானே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிக்கொண்டவன் உற்சாகத்தில் உள்ளுக்குள்ளே குதித்து வெளியே ஒன்றுமறியாது போல் "சொல்லு விழி" எனக் கேட்டான்.
ஏதோவொரு தைரியத்தில் அவனிடம் சொல்ல வாய் திறந்தாலும், நாக்கு ஒத்துழைக்காது தடுமாறினாள். அவளின் நேசம் வார்த்தையாக வெளிவர தவிக்க, குரல் சதி செய்தது. தன்னவளின் அப்போதைய நிலையை செழியன் அணு அணுவாக ரசித்தான்.
"மாத்திரை போட்டு சீக்கிரம் தூங்கணும் விழி, மாட்டுவண்டி ஓட்டுனது வேற ரொம்ப சோர்வா இருக்கு." அவள் சொல்ல வேண்டியதை விரைந்து சொல்ல வைக்க முயற்சித்தான்.
"அது... மாமா..."
"ரொம்ப நேரமா இது மட்டுந்தான் சொல்லிட்டு இருக்க." லேசாகா சலிப்பு தட்டுவது போல் நடித்தான்.
தனது தாவணி நுனியை திருகியபடி தயக்கத்தோடு இருந்தவள் அவனின் சலிப்பான குரலை உண்மையென நம்பி, பட்டென்று தாவணி திருகளை நிறுத்தி...
"உங்க முகத்தை பார்த்து சொல்ல முடியும் தோணலை மாமா, நீங்க அந்தப்பக்கம் திரும்பி நில்லுங்களேன்" என்றாள். அவளின் குரல் கெஞ்சலாக ஒலித்தது. பதட்டத்தில் வழக்கமான பன்மை பேச்சு தானாக வந்திருந்தது.
நறு காதலை சொல்லும் தருணத்தை அவளின் விழி பார்த்து ஆழ்ந்து அனுபவிக்க காத்திருந்தவன் அவளின் கெஞ்சலை பொருட்படுத்தவில்லை. சட்டமாக அவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்தவாறு நின்றிருந்தான்.
'இது வேலைக்காகது' என்று கருதியவள், இரு கைகளையும் மடக்கி பாவாடையை இறுக பற்றி கண்களை மூடிக்கொண்டு சொல்ல முயற்சித்தாள்.
அவள் நின்றிருந்த விதம் கவிதையாக செழியனை ஈர்த்தது. அவளை அணைத்திட துடிக்கும் மனதினை கடினப்பட்டு அடக்கினான்.
"நான்..."
"விழி கண்ணைத் திற." கட்டளையாக ஒலித்தது செழியனின் குரல்.
"ம்ஹூம்... முடியாது." வேகமாக தலையை உருட்டினாள்.
"சரி அப்போ நான் போறேன், நீ அந்த தூணுக்கிட்டே சொல்லிக்கோ" எனக்கூறியவன் இரண்டடி நகர்ந்திட பட்டென கண் திறந்தவள் சட்டென்று அவன் கரம் பற்றி அவனது நடையை தடை செய்திருந்தாள்.
சிறு புன்னகையோடு நின்றவன் "சொல்லு" என்பதை போன்று பார்த்திருந்தான்.
"நான்..."
"நீ..."
"உங்களை..."
"என்னை..."
செழியன் அவளோடு முதல்முறையாக உரிமையோடு விளையாடி பார்த்தான்.
"அய்யோ மாமா இந்த மாதிரி நடுவில் பேசினால் எனக்கு சொல்ல வராது" என அழகாய் சிணுங்கினாள்.
"சரி நான் பேசல" என்ற செழியன் அவளின் அசைவுகள் ஒவ்வொன்றையும் மனதோடு காதலாக பதிந்தான்.
"நான்... ஐ... ச்ச....
அது... மாமா....
வந்..த்...உ...து.... ல..ல்... அ...வ்
நான்... உங்களை..."
செழியன் ஆர்வமாகினான். 'பாதி வந்தாச்சு இன்னும் கொஞ்சம் தான்.'
"நான் உங்களை காதலிக்கின்றேன் அல்லது ஐ லவ் யூ." 'இதோ சொல்லிவிடப் போகிறாள். செழியனின் மனதில் எதிர்பார்ப்பு கூடியது. கண்கள் ஒளிர்ந்தன. முகம் பிரகாசமாகியது.
ஆனால் அவளோ,
"சத்தியமா உங்களை நேருக்கு நேர் பார்த்து இதை சொல்ல முடியும் தோணலை மாமா." மனம் முழுக்க காதல் கொட்டி கிடக்க, அதனை சொல்லிவிட துடித்த போதிலும் சொல்ல முடியாத தன்னுடைய தடுமாற்றத்தை நினைத்து அவளின் கண்களில் நீர் படர்ந்தது.
அதிக மகிழ்வோ, சோகமோ, இன்பமோ, துன்பமோ... அந்நிலையில் வார்த்தைகளை விட உணர்வுகளே அதிகம் பேசும். இப்போது நறுவியும் அந்நிலையில் தான் இருந்தாள்.
"முடியலான விடு விழி." ஏமாற்றம் பரவினாலும், அவள் காதலை சொல்ல தவிப்பதே அவனுக்கு மகிழ்வை கொடுத்தது.
செழியனின் விடு என்கிற வார்த்தை வலியை கொடுக்க, தன்னுடைய சொல்ல முடியா நிலையை எண்ணி கண்களில் உருளும் கண்ணீரோடு,
"நான் சொல்ல தவிப்பது உண்மையாவே உனக்கு புரியலையா மாமா" எனக் கேட்டிருந்தாள்.
'அவளின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது. புரிந்தும் புரியவில்லை என்றா அல்லது தெரிந்தும் தெரியவில்லை என்றா?' அவன் மனதோடு விவாதிக்க,
"என்ன புரியணும்?"
திடீரென இரவு நேரத்தில் முதுகுக்கு பின்னால், அக்குரல் சத்தமாக ஒலித்திட நறுவிற்கு பயத்தில் உடல் தூக்கிவாறி போட்டது.
தொடரும்...

​
 

Members online

No members online now.

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top