JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Kayalvizhi 5

அத்தியாயம் 🌾 5 :
அவ்விடமே ஆட்கள் நிரம்பி வழிந்து காற்றில் எங்கும் சதக் சதக் என்ற அருவாள் வெட்டும் சத்தமும் சர் சர்ரென்று காய்ந்த சருகு கிழியும் சத்தமும் நிறைந்திருந்தது.
அத்தோடு பெண்கள் அக்கம் பக்கத்து கதைகள் பேசும் கிசுகிசுப்பும்.
"சும்மா தொண தொணக்காம வேலையை பாருங்கக்கா. மதிய சாப்பாட்டு நேரம் வரதுக்குள்ள இன்னும் ஒரு லோடு ட்ராக்டரில் ஏற்றி இருக்கனும்" என்று சிவா வேலை செய்பவர்களை துரிதப்படுத்தினான்.
"அதெல்லாம் ஏத்திடலாம் சிவா. களைப்பு தெரியாம இருக்கத்தானே பேசுறோம்" என்று சிவாவிற்கு பதில் சொல்லிய பெண்... வெட்டி போட்ட கரும்பிலிருக்கும் சருகினை ஒதுக்க... மற்றொரு பெண் அடுக்கி கட்டி வைக்க... ஆண் ஒருவர் அதனை தலையில் வைத்து வரப்புகள் தாண்டி பாதையில் நின்றிருந்த டிராக்டரை நோக்கி கொண்டு செல்ல... வண்டியிலிருந்த ஒருவர் அதனை வாங்கி அடுக்கி வைத்தார்.
கரும்பினை வெட்டுவதும் வண்டியில் ஏற்றுவதும் ஆண்கள். அதனை அடுக்கி சுமை கட்டி வைப்பது பெண்கள்.
அதனை கயல் மேற்பார்வை செய்து கொண்டிருந்தாலும் அவ்வவ்போது கரும்புகளை கட்டியும் வைத்தாள்.
"பதினோரு மணிக்கு சூரியன் சுள்ளுன்னு விழுறான்" என்று சொல்லிய ஆண் ஒருவர் நடு வயலில் நின்று குடிக்க தண்ணீர் கேட்க... சிவா கிணற்றில் அவ்வெயிலிலும் குளிர்ந்து கிடந்த நீரை கொண்டு வந்து கொடுத்தான்.
சிறிது நேரத்தில் சரளா கொடுக்க சொல்லி அனுப்பியதாக மலர் மோர் கொண்டு வந்து வேலை செய்ய அனைவருக்கும் கொடுத்து முடித்து கயலுக்கு ஒரு குவளையை நீட்டினாள்.
"நீ காலேஜ் போடலையா?"
"இல்லைக்கா..." என்று தடுமாறியவள், "இன்டெர்னல் நடக்குதுக்கா, ஒருநாள் விட்டு ஒருநாள்" என்று சொல்லி கீழே கிடந்த கரும்பை எடுத்து அடுக்க ஆரம்பித்தாள்.
மலர் வயலுக்கு செல்வதை பார்த்த முகி அவளின் பின்னே சற்று இடைவெளிவிட்டு வந்திருக்க, கயலும் அவளும் பேசியதை கேட்டிருந்தான்.
மோரினை குடித்து முடித்த கயல், "நீ எழுந்திரு இன்டெர்னல் சொன்னியே வீட்டுக்கு போய் படிக்குற வேலையை பாரு" என்று மலரை கைபிடித்து எழுப்பி விட்டாள்.
அப்போது தான் முகி அங்கு நிற்பதை கண்ட கயல் "வாழை தோப்பில் ஆளில்லாமல், நீ எப்போட வந்த?" என்று வினவினாள்.
"வாழை தோப்பு வேலை முடிஞ்சுதுக்கா. அதான் வீட்டுக்கு போயிட்டு இப்போ தான் வந்தேன்" என்றான். அவனின் பார்வை முழுக்க மலரிடம்.
"சரி சரி... வெயில் வேற ஜாஸ்தியா இருக்கு. மலரை வீட்டில் விட்டுட்டு நீயும் ரெஸ்ட் எடு. இன்னும் ஒருமணி நேரத்துல ஆளுங்க களைஞ்சிடுவாங்க" என்ற கயல் கீழே குனிந்து விட்ட வேலையை தொடர்ந்தாள்.
காலையில் ஏழு மணிக்கு தொடங்கிய வேலை... உச்சி வெயில் வருமுன், மதிய உணவுக்கு கிளம்பிவிடுவர். அடுத்து மறுநாள் தொடங்குவர். இல்லையெனில் வெயில் குறைந்ததும் மீண்டும் தொடங்கி அந்தி சாயும் வரை செய்வர்.
அவன் அக்காவின் பேச்சிற்கு சம்மதம் சொல்லி முன்னால் நடக்கத் துவங்க...
"நான் நடந்தே போயிக்குறேன்க்கா" என்று தலையை குனிந்து கொண்டு சொன்னாள் மலர்.
"நான் உன்னை அவனோடு போகச் சொன்னேன்" என்று சற்று சத்தமாக சொல்லிய கயல் அவளை நிமிர்ந்தும் பாராமல் தன் வேலையை செய்து கொண்டிருந்தாள்.
மலரின் வார்த்தையில் தன் நடையை நிறுத்தியிருந்த முகி, கயலின் பேச்சில் தொடர்ந்திருந்தான்.
அவனுக்கு நன்கு தெரியும் கயலின் பேச்சிற்கு எதிர் பேச்சு மலரிடம் இருக்காதென்று. கயலென்றால் மலருக்கு அவ்வளவு அன்பு, மரியாதை.
முகியின் முதுகினை தொடர்ந்தவளுக்கு அவனின் அடக்கப்பட்ட புன்னகை அவனின் தோள் அதிர்வில் மலரால் நன்கு அறிய முடிந்தது.
"உன்னோடுலாம் என்னால் வர முடியாது. அக்கா கேட்டால் உன்னோடு தான் போனேன் சொல்லிடு" என்று அவன் சிரித்ததுக்கு கோபமாக பேசிவிட்டு முகியைத் தாண்டி வேகமாக பூமி அதிர நடந்தவள்... கால் வைத்த வேகத்திற்கு வரப்பில் சரிந்து கீழே விழுந்தாள்.
முகி சுதாரித்து பிடிப்பதற்குள் சேற்று வயலில் மல்லாக்க விழுந்திருந்தாள்.
அவளின் தோற்றம் சிரிப்பினை வரவழைத்த போதும்... அதனை மறைத்தவனாக அவள் எழும்ப கரம் நீட்டினான்.
'உன் கையை நான் பிடிப்பதா' என்ற அலட்சியமாக முகம் திருப்பியவள் தானே எழ முயற்சிக்க, பரம்படித்து கிடந்த சேறு நன்கு ஆழ புதைய மீண்டும் நிலை தடுமாறி விழுந்திருந்தாள்.
முகி மிதப்பாக பார்த்து நின்றான்.
'இந்த எருமை கை நீட்டிய போதே கையை கொடுத்திருக்கணும்.'
எங்கே எழ முயற்சித்தால் மீண்டும் விழுந்து விடுவோமோ என்று அஞ்சியவள் அப்படியே அமர்ந்து விட்டாள். முகியிடம் உதவி கேட்க அவள் மனம் இடம் கொடுக்கவில்லை.
அவளையே சில கணங்கள் பார்த்து நின்றவன், 'இவளா வாய் திறக்க மாட்டாள்' என சொல்லிக்கொண்டு அவள் முன்பாக தன் கரம் நீட்டினான்.
உச்சி வெயிலில் எவ்வளவு நேரம் தான் இப்படியே சேற்றில் அமர்ந்திருப்பது. சற்று நேரத்திற்கெல்லாம் உடல் அரிக்க ஆரம்பித்துவிடும். தோன்றினாலும் அவனை முறைத்துக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தாள். அவளின் அடிகண்கள் முகியை கிழிப்பது போலிருந்தது.
"என் கையை பிடித்தால் எரிஞ்சா போயிடுவா?"
'தன்னுடைய கையை தீண்டுவதற்கே இவ்வளவு யோசிக்கிறாளே' என்று அவனுள் கொஞ்சம் கொஞ்சம் இருக்கும் கோபம் எட்டிப்பார்த்தது.
"உனக்குதான் வேண்டுதல் இந்த உச்சி வெயிலில் இப்படி குளுகுளுன்னு உட்கார்ந்திருக்கனுமுன்னு. எனக்கென்ன, இப்போ வரியா இல்லையா?" சற்று அதட்டலுடன் தான் கேட்டான்.
"இந்த அதட்டுற வேலையெல்லாம் என்கிட்ட வச்சிக்காத!" அவனைவிட அதிகமாக இவள் சீறினாள்.
"சரி இப்படியே இரு... நான் போய் அக்காவை கூட்டிட்டு வறேன்" என்று நகர முயன்றவனின் நீட்டியிருந்த கையை நொடியில் பற்றினாள்.
"இந்த உருட்டுற மிரட்டுற வேலையெல்லாம் என்கிட்ட மட்டும் தான் போல" கயலை சொல்லியதும் அவள் தன் கையை பாய்ந்து பிடித்ததை நக்கல் செய்தபடி அவளை மேலே இழுக்க... தன் முறைப்பான பார்வையை சற்றும் மாற்றிக்கொள்ளாத மலர் அவனை ஒரே இழுவையில் சேற்றில் விழ வைத்து தான் வரப்பில் ஏறியிருந்தாள்.
கண நேரம் என்ன நடந்ததென புரியாமல் வயலில் விழுந்த மறுநொடி எழுந்து நின்றவன் தன் தலையை இரு பக்கமும் உலுக்கி கண்களை கசக்கி பார்க்க...
மலர் கிணற்று மேட்டில் நின்றிருந்தாள்.
வேகமாக எழுந்து அவளருகில் வந்தவன், "எதுக்குடி என்னையும் சேற்று வயலில் இழுத்து விட்ட" என்றவன் கேட்டு முடிப்பதற்குள்...
மோட்டர் தொட்டியில் இருந்த நீரினை அங்கிருந்த பக்கெட்டால் மோண்டு அவன் மீது விசிறியடித்தவாறு, "இந்த டி போடுற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம்" என்று கத்தினாள்.
முகத்தில் வழிந்த நீரை ஒரு கையினால் வழித்து... அதனை அவளின் முகத்திலேயே சுண்டி தெளித்தவன், "பொண்டாட்டியை டி போட்டு கூப்பிடாமல், பக்கத்து வீட்டு ஆயாவையா கூப்பிடுவாங்க?" எனக் கேட்டு, அவன் பொண்டாட்டி என்று சொல்லியதில் அவள் அதிர்ந்து நிற்பதை பொருட்படுத்தாது... "சேற்றை தண்ணீர் ஊற்றி கழுவி விட்டதுக்கு தேன்க்ஸ்... சீக்கிரம் நீ கழுவிட்டு வா நான் வண்டிக்கிட்டே நிக்குறேன்" என முன்னே நடந்தான்.
அவன் சொல்லிய வார்த்தையில் திக்பிரம்மை பிடித்தவள் போல் நின்றிருந்தவள், அவன் அழுத்திய வண்டியின் ஹாரன் ஒலியில் தான் சுயம் மீண்டாள்.
"இவனை இப்படியே விடக்கூடாது" என முணுமுணுத்தவள் வேகமாக உடலை சுத்தம் செய்துகொண்டு ஓட்டமும் நடையுமாக முகியின் முன் மூச்சுவாங்க நின்றாள்.
"உன் மனசில் நீ என்ன நினைச்சிட்டு இருக்க? நான் தான் முடியாதுன்னு சொல்லிட்டேனே?" என விரல் நீட்டி பேசினாள்.
முகிலனோ அதனை சட்டை செய்யாது... அவள் முன்பாகவே தன் சட்டையை கழட்டிக் கொண்டிருந்தான்.
"ஏய் என்ன பண்ற?" என்றவள் கை கொண்டு தன் கண்களை மூடியபடி பதறினாள்.
"இதை போட்டுக்கோ" என்று அவளிடம் நீட்டியவன், அவள் அப்படியே நிற்க... "சரி நில்லு... ஆனால், என் பொண்டாட்டியை நான் மட்டும் தான் பார்க்கணும்" என்று குரலில் அழுத்தம் கொடுத்து கூறினான்.
பார்க்கணும் என்பதில் அவன் கொடுத்த அழுத்தத்தில் கண்கள் திறந்து தன்னை பார்த்தவள் தானிருந்த கோலம் கண்டு படப்படத்து, அவன் நீட்டியபடி இருந்த சட்டையை வேகமாக தன்னுடைக்கு மேலாக அணிந்து கொண்டாள்.
உடல் முழுக்க சேற்றில் விழுந்ததாலும் தண்ணீர் கொண்டு கழுவியதாலும்... ஈர உடையில் பெண்ணவளின் தேகம் மிளிர்ந்து காட்சியளித்தது.
சற்று முன்னர் நனைந்த அவனின் சட்டை அவளுக்காக காத்திருந்த வேளையில் சற்று உலர்ந்திருக்க, காதல் கொண்ட பெண்ணிடம் கண்ணியம் காக்க கழட்டி கொடுத்திருந்தான்.
அவன் முன்பு இப்படி நிற்க நேரிட்ட நிலையை எண்ணி உள்ளுக்குள் குமைந்தவள் நிமிரவே இல்லை.
மலரின் மனநிலை புரிந்தவன், அவளின் நிலையை மாற்ற எண்ணி முகத்தினை ஊடுருவி பார்த்தவாறு, "ஏன் இன்னைக்கு காலேஜ் போகல?" என்று வினா எழுப்பினான்.
"நீயெதுக்கு கேட்குற" என்றவளிடம் உடல்மொழியில் தடுமாற்றம்.
"நீயா சொல்றியா இல்லை நானா கண்டுபிடிக்கவா?" அழுத்தமாகக் கேட்டான்.
கயலிடம் சொல்லிய அதே காரணத்தை அவனிடமும் சொல்ல போனவளை கை காண்பித்து தடுத்தவன்,
"அக்காக்கிட்ட சொன்ன பொய்யை என்னிடமும் சொல்லாதே!" என்றான்.
அதில் அப்பட்டமான அதிர்ச்சி அவளுக்கு. இருப்பினும் தன்னை சமாளித்தவள்,
"பொய்யில்லை" என்க, அவளை ஆழ்ந்து பார்த்து... "ஆஹான்... அப்புறம் எதுக்கு நேற்று காலேஜிலிருந்து வந்ததும் முற்றத்து தூணில் சாய்ந்து அமர்ந்தபடி அவ்வளவு அழுத" எனக் கேட்டான்.
கண்கள் விரிய அதிர்ந்தவள், 'இவங்களுக்குக்கு எப்படித் தெரியும்' என யோசித்தாலும்,
"நான் அழலையே!" என்க...
"நான் பார்த்தேனே" என்றான்.
"நான் தான் அழல சொல்றேனே!" என்றவள் திரும்பி நடக்க, அவளின் கை பிடித்து இழுத்தான்.
இழுத்த வேகத்தில் அவனின் நெஞ்சில் முகம் மோத நெருங்கி நின்றாள்.
அவனின் முதல் நெருக்கம். நாசி தீண்டும் அவனின் வாசம். அப்போது தான் தான் அணிந்திருக்கும் அவனின் ஆடை கொடுக்கும் பாதுகாப்பினையும் சிறு கதகதப்பையும் அவளின் உடலும் மனமும் அறிந்தன. அவளுள் ஏதேதோ உணர்வுகள் அலையலையாய் ஆர்பரித்தன. தன்னை மறந்து அவனின் முதுகுக்கு பின்னால் தன் கைகளைக் கொண்டு சென்றவள்,
"சொல்லாமல் நீ போக முடியாது" என்ற முகியின் குரலில் தன்னை மீட்டு... அவனிடம் தன் மனம் நெகிழ்வதை தடுக்க முடியாது தன்மீது தனக்கே எழுந்த கோபத்தை அவனின் நெஞ்சில் கைவைத்து வேகமாகத் தள்ளி அவனிடம் காண்பித்தாள்.
அதற்கெல்லாம் முகிலன் அசைந்தானில்லை. நீ சொல்லித்தான் ஆகவேண்டுமென்கிற திடத்துடன், அவளையும் அங்கிருந்து நகர்ந்துவிடாது தடுத்து நின்றிருந்தான்.
நிமிடங்கள் இருவரின் பிடிவாதத்திலும் மௌனமாகக் கரைந்து கொண்டிருக்க, கரும்பு கொல்லையில் அன்றைய வேலை முடித்து ஆட்கள் கிளம்பும் சத்தம் கேட்டு இருவருமே அத்திசையை நோக்கினர்.
"அய்யய்யோ வண்டியை எடுங்களேன். அக்கா வந்தால் இன்னும் ஏன் போகலை கேட்கும்" என்றவள், தான் அணிந்திருக்கும் அவனின் சட்டையை ஒருமுறை குனிந்து பார்த்துக்கொண்டாள்.
அவனோ பனியனோடு இருக்க, இந்நிலையில் யாரேனும் கண்டுவிட்டால் என்ற நினைப்பே பல கற்பனையான நினைவுகளுக்கு அவளை இட்டுச்செல்ல,
"வீட்டுக்கு வந்து நான் சொல்றேனே" என்று அவனின் கைகளை பிடித்து மன்றாடினாள்.
"ஏமாத்தலான்னு பார்க்காதே" என்றவன் வண்டியை உயிர்ப்பிக்க... அவனை உரசாதவாறு சர்வ ஜாக்கிரதையாக பின்னால் அமர்ந்தாள்.
அவர்கள் வீட்டிற்கு முன்பு ஓடும் பெரிய அகண்ட வாய்க்காலின் முன்பு வண்டியை நிறுத்தி அவளை இறங்கச் சொல்லியவன், "பத்து நிமிடத்தில் நீ மாடியில் இருக்கணும்" என்று சொல்லி வாய்க்கலின் குறுக்கில் நான்கடி அகலத்திற்கு போடப்பட்டிருந்த பனைமர பாலத்தின் மீது வண்டியை தள்ளியபடி வந்து பரந்திருந்த வீட்டு வாசலில் அதனை நிறுத்திவிட்டு, மலரை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டே வீட்டிற்குள் நுழைந்தான்.
மலரும் சொல்லாமல் அவன் விடப்போவதில்லை என பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி, அதே வாய்க்கலை கடந்து முகியின் வீட்டிற்கு அடுத்ததாக ஒட்டியவாறு இருந்த ஓட்டு வீட்டிற்குள் சென்றாள்.
எதிர்பட்ட சரளா மலர் அணிந்திருந்த ஆணின் சட்டையை பார்த்து மருண்டு நிற்க...
"இந்தம்மா வேற என்னான்னு தெரியாமலே அரண்டு போகும்" எனத் தலையில் தட்டிக்கொண்டு,
"ம்மா இப்போ எதுக்கு இப்படி நிக்குற, இது முகி மாமா சட்டை தான். சேற்றில் விழுந்துட்டேன். உடம்பெல்லாம் ஈரமாகிருச்சு, இப்படியே எப்படி போவன்னு அவங்க சட்டையை கழுட்டி கொடுத்தாங்க" என்று விளக்கமாக சொல்லி சரளாவின் பயத்தை போக்கினாள்.
கயலும், முகியும் மாணிக்கம் மற்றும் சரளாவை அக்கா, மாமா என்று அழைக்க மலரும் சிறு வயதிலிருந்து முகியை மாமா என்றழைத்து பழகிவிட்டாள். இப்போது அவளுக்கு அவனிடம் மாமா என்ற விளிப்பு இல்லையென்றாலும், மற்றவர்களிடம் முகியை சொல்லும்போது தன்னைப்போல் அந்த சொல் வந்துவிடும். அதனை அவளும் மாற்ற விருப்பம் கொள்ளவில்லை.
அவ்வழைப்பு எத்தகைய உரிமையான ஒன்றென்று அவளுக்கு மட்டும் தானே தெரியும்.
இப்போதும் தானாக தன் வாய் உதிர்த்த மாமா என்ற வார்த்தையை நினைத்து புன்னகைத்தவாறு குளித்து உடை மாற்றினாள்.
மலரின் வீடு நடுவில் மழைநீர் விழுவதைப்போல் முற்றம் வைத்து இருக்கும். முகியின் வீட்டு முதல் தளத்திலோ அல்லது மொட்டை மாடியில் நின்றோ பார்த்தால் மலரின் வீட்டு உள் பக்கம் நன்றாகத் தெரியும்.
மலர் வீட்டிற்குள் நுழைந்ததுமே, எப்படியும் சரளா அவளிருக்கும் தோற்றம் கண்டு கேள்வி கேட்பார் என்று கணித்தவன், மலர் என்ன பதில் சொல்லி சமாளிப்பாள் என்பதை அறிய வேகமாக மாடியேறி தன்னறை சன்னல் பக்கம் வந்து நின்று அவர்கள் வீட்டு முற்றத்தின் வழியே நடப்பதை கவனித்தான்.
ஓரளவிற்கு அவள் உண்மையைத்தான் சொல்வாளென்று எண்ணியவன், நிச்சயம் தன்னை மாமா என சொல்வாளென்று எதிர்பார்க்கவில்லை.
பல வருடங்களுக்கு முன்பு அவன் பேச்சாலே மாமா என்ற அழைப்பை நிறுத்தியிருந்தவள், அது தன்னளவில் மட்டுமே என்று இன்று கண்டு கொண்டதில் அகம் மகிழ்ந்து போனான்.
அதே மகிழ்வோடு வீட்டின் மொட்டை மாடிக்கு வந்தவன் தென்னை மரத்தின் நிழல் படும் இடத்தில் நின்று மலரின் வருகைக்காகக் காத்திருந்தான்.
அரை மணி நேரம் கடந்தும் மலர் வரவில்லை.
அவளின் வீட்டு பக்கம் சென்று எட்டிப்பார்க்க, மலர் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தாள். அந்த பெண் அவளின் தோழியென பார்த்ததும் கண்டு கொண்டான்.
கல்லூரி முடித்து நேராக மலரிடம் வந்திருப்பாள் போலும், கல்லூரி பை அப்பெண்ணின் தோளில் தொங்கிக் கொண்டிருந்தது.
அப்பெண்ணின் முகம் கலவரத்தில் இருக்க... மலரின் முகம் பயத்தில் வெளுத்துப்போய் இருந்தது.
'இவ(ள்) எதுக்கு இப்படி பயந்து போய் இருக்கிறாள்' என்ற யோசனையோடு மதில் சுவற்றை நெருங்கி நின்றான். அவனின் நிழல் மலரின் வீட்டிற்குள் விழுந்தது.
முகியின் நிழல் கண்டு மேலே பார்த்த மலர்... 'இப்படித்தான் நான் நேற்று அழுததையும் பார்திருப்பார் போல' என்ற எண்ணத்தோடு தன் பிரச்சனைக்கு வழி கிடைத்து விட்டதென்ற நிம்மதியுடன் தனது தோழியை அனுப்பி வைத்தவள் வேகவேகமாக கயல் வீட்டு மொட்டை மாடிக்கு ஏறினாள்.
மலர் வந்ததும்...
"என்ன நடக்குது, உன் ஃபிரண்ட் என்ன சொன்னாள், எதுக்கு நீ பயந்திருக்க?" என்று முகியின் கேள்விகள் நீண்டு கொண்டே சென்றன.
"நான் எல்லாமே சொல்றேன்" என்றவள் முகியை கூர்ந்து நோக்கியவாறு, "ஜஸ்ட் இது நான் உங்கக்கிட்ட கேட்கும் உதவி அவ்வளவுதான். இதுக்காக பதிலுக்கு என்னை நீங்க..."
"நிச்சயம் லவ் பண்ண சொல்லி கார்னர் பண்ண மாட்டேன்."
அவள் கேட்பதற்குள் அவன் முடித்தான்.
"லவ் தானா வரணும்... நம்மளை ஒருத்தன் உருகி உருகி லவ் பண்றானேன்னு உள்ளுக்குள்ள போட்டுத் தாக்கணும். உன்னை என்னை நோக்கி தள்ளனும். அப்படி நீயா என்கிட்ட வர காதல் தான் எனக்கு வேணும்."
முகியின் வார்த்தையில் மலரின் இதயம் உறைந்து நின்றது. காதலிக்கப்படும் சுகம் அவளின் மனமெங்கும் பரவியது. அவ்ளுள்ளும் அவன்மீதான நேசம் அமிழ்த்தப்பட்டு உள்ளது. உணர்ந்தும் மறுக்கும் காரணம் அவள் மட்டுமே அறிந்தது. அவளின் நுண்ணுணர்வை அவளின் விழிகள் அவனுக்குக் காட்டிக்கொடுத்தது. இருப்பினும் அதை அவளாக உணர்ந்து சொல்ல வேண்டுமென ஆசை கொண்டவன் பேச்சை மாற்றினான்.
"என்னன்னு சொல்லு?"
மலர் சொல்ல சொல்ல கேட்டவனின் கழுத்து நரம்புகள் புடைத்து, கை முஷ்டி இறுக மூடியது.
முகியின் முகத்தில் தெறித்த ரௌத்திரத்தில் மலர் இரண்டடி பின் சென்றாள்.


அத்தியாயம் 🌾 6 :
"ஹாய் வில்சென்."
தனக்கு எதிரில் ஏமாற்றம் தந்த கோப முகத்தோடு நின்றிருந்தவனை ஆர்பாட்டமாய் அழைத்தான் பார்த்திபன்.
"இந்த முறையும் என்னிடம் தோத்துட்டியே வில்லு..." என்று கேலியாக உச்சுக்கொட்டிய பார்த்திபன் நொடியில் தன் உடல் மொழியில் விறைப்புத் தன்மையையும், கண்களில் கடுமையையும் கொண்டு வந்திருந்தான்.
"என்கிட்ட மோதி ஜெயிக்க உன் அப்பனாலும் முடியாது. என் ஆளை விலைக்கு வாங்கி, என் முதுகில் குத்த பார்த்து நீ ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட... இனி இந்த ஃபீல்டில் நீயெப்படி நிக்குறன்னு நான் பார்க்கிறேன்" என்று கடித்த பற்களுக்கிடையேக் கூறியவன் சற்று தள்ளி நின்றிருந்த டெல்வினை நோக்கி பார்வையை பதித்தான்.
பார்த்திபனின் பார்வைக்கான அர்த்தம் விளங்கிய டெல்வின் நான்கே அடியில் அவனை நெருங்கி கையில் சில காகிதங்களை அளித்தான்.
"உன் கம்பெனியில் உன்னைத்தவிர மற்ற ஷார்ஹோல்டர்ஸ் ஷார்ஸ் மொத்தமும் வாங்கிட்டேன். இப்போ உன்னைவிட டென் பெர்சன்ட் அதிகம். சோ, உன்னைவிட எனக்கு அங்கு அதிகாரம் அதிகம். இனி ஒவ்வொன்னும் என்னைக் கேட்டுத்தான் நீ முடிவெடுக்கணும். நீயா உன்னோட ஷார்ஸ்யையும் என்கிட்ட கொடுக்க வைக்கிறேன்" என்று ஒருவித பழிவாங்களுடன் கூறிய பார்த்திபன் அந்த காகிதங்களை வில்லின் முகத்திற்கு நேரே விசிறி எரிந்தான்.
வில் தனது பங்குதாரர்களுக்கு அழைத்து என்னை கேட்காது எப்படி பார்த்திபனுக்கு கொடுக்கலாமென்று சினம் கொள்ள அனைவரும் ஒன்று போல் பார்த்திபனை பகைத்துக்கொள்ள முடியாதென்று கூற, வில்லிற்கு தான் மொத்தமாக பார்த்திபனிடம் தோற்ற உணர்வு.
பார்த்திபனின் கார் நேராக அவனது மென்பொருள் அலுவலகத்திற்கு சென்றது.
வேங்கையின் வேகம்... எதிர்பட்ட ஊழியர்கள் யாரையும் கருத்தில் கொள்ளாது புயலென கடந்து சென்றான்.
தன்னுடைய அறையில் இருக்கையில் அமர்ந்தவன்...
"கால் ஹிம்."
பார்த்திபனின் சீற்றத்தை கண்ட டெலவின்...
"கொஞ்சம் பொறுமையா..."
"டூ... வாட் ஐ செட்." சிங்கமென கர்ஜித்தான்.
அடுத்த நொடி பார்த்திபன் அழைக்கச்சொல்லிய நபரான நிகேத்தன் அவனின் முன்பு நின்றிருந்தான்.
எதற்காக அழைத்தான் என்பது தெரியாது நிக் பார்த்திபனையே பார்த்தவாறு இருக்க... அவனிடம் டெல்வின் ஒரு காகிதத்தை நீட்டினான்.
அதனை வாங்கி படித்த நிக்,
"சார் என்னதிது?" என்று அதிர்ந்து வினவினான்.
"வில்சன் உங்களுக்கு வேலை கொடுக்க ரெட் கார்பெட் போட்டு காத்திருக்கிறான்" என்று நக்கலாகக் கூறினான்.
தன் கையிலிருக்கும் டெர்மினேட் லெட்டரை ஒருமுறை பார்த்த நிக்...
"அம் சாரி சார்" என்று சொல்ல... அவனை தீயாக முறைத்தான் பார்த்திபன்.
"நீங்க செய்ததுக்கு பெயர் நம்பிக்கை துரோகம். அதுக்கு வெறும் சாரி தண்டனையாகாது" என்ற பார்த்திபன் டெல்வினிடம் கண் காட்ட... மற்றொரு காகிதத்தை நிகேத்தனிடம் டெல்வின் நீட்டினான்.
'இதிலென்ன குண்டோ' என்று வாங்கி பார்த்த நிக்கிற்கு இதயமே நின்று போனது.
"சார் இதெல்லாம் அநியாயம்." குரலுயர்த்தினான்.
"எது அநியாயம்... நீ செய்ததைவிடவா. நியாயம் அநியாயம் பற்றி பேசவெல்லாம் உனக்கு தகுதி கிடையாது" என்று மேசையைத் தட்டி தன் கோபத்தை வெளிப்படுத்தினான் பார்த்திபன்.
"உனக்கு ஒன்று தெரியுமா? அந்த புரோஜெக்ட் என் கைக்கு வந்தாச்சு. அப்புறம் இருந்தும் உனக்கெதுக்கு இந்த நிலைன்னா, கோடிங் அமௌண்ட்டை அந்த வில்லிற்கு லீக் செய்ததற்காக... சரியான நேரத்தில் உன்னை வில்லுடன் பார்த்ததை டெல்வின் என்னிடம் சொல்லவில்லையென்றால் முதல் முறையாக நான் தோற்றிருப்பேன்.
என் தோல்விக்கு காரணமான இடத்தில் நீ இருந்திருப்பாய் அல்லவா அதற்குத்தான் உனக்கு இந்த தண்டனை."
அன்று அலுவலகத்தில் இருந்த பார்த்திபனுக்கு டெல்வின் அழைத்து சொல்லிய விடயம் இதுதான்.
நிகேத்தன் வில்லினை நேரில் சந்தித்திருப்பதை டெல்வினே தன் கண்களால் கண்டான். அதனை உடனே பார்த்திபனுக்கு அழைத்து சொல்ல விடயம் என்னவாக இருக்குமென்று பார்த்திபன் எளிதில் யூகித்திருந்தான்.
அதன்படி தன் குழுக்களுடன் ஆலோசித்து கோட் செய்த மதிப்பை மாற்றி தானே தன் கைப்பட தயாரித்த பேப்பர்ஸை அனுப்பி வைத்தான்.
பார்த்திபன் கணித்தது போலவே வில் பார்த்திபன் முதல் கோட் செய்ய வைத்திருந்த மதிப்பை விட இரண்டு புள்ளிகள் குறைவாக கோட் செய்திருந்தான்.
அந்நேரம் டெல்வினிற்கு பார்த்திபன் நன்றி தெரிவித்துக்கொண்டான்.
வில் முதுகில் குத்த தீர்மானித்த பிறகு பார்த்திபனுக்கு இது தன்மான பிரச்சனையாக மாறிப்போனது. அதனால் தன்னை அழிக்க நினைத்தவர்களை தானே தன் கையால் அழிக்க முடிவு செய்தவன், வில்லைப்பற்றி ஆதி முதல் அனைத்தும் தெரிந்து... அவனின் தொழிலிலேயே கை வைத்தான்.
வில்லின் பங்குதாரர்களிடம் இருபது பத்து என பங்குகள் பிரிந்திருக்க... அனைத்தையும் மொத்தமாக கைப்பற்றி வில்லுடைய அலுவலகத்தையே தனக்கு கீழ் கொண்டு வந்து வில்லின் அதிகாரத்தை ஒன்றுமில்லாமல் செய்தான்.
அனைத்தையும் பார்த்திபனின் வாயினாலேயே தெரிந்துகொண்ட நிக்கிற்கு மூச்சு நின்று விடும் போலிருந்தது.
வில்லிற்கே இந்த நிலையென்றால் தனக்கும் இது ஏற்றத் தண்டனை தானென்று அவனின் மனம் கூறியது.
இருப்பினும் கையிலிருந்த காகிதத்தை ஒருமுறை பார்த்து பெருமூச்சு விட்ட நிக்,
"இதை கொஞ்சம் கன்சிடர் பண்ணலாமே!" எனக் கேட்டான். அக்காகிதத்திலிருந்த விடயம் அப்படி. அவனுக்கு சுமக்க முடியா மலைப்பாக இருந்தது.
"இது இங்கு வேலையில் ஜாயின் பண்ற எல்லாருக்கும் தான் நிகித்தேன். ஏன் உங்களுக்குத் தெரியாதா? ஜாயின் பண்ணும் போது டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் படிக்காமலா சைன் பண்ணீங்க?" பார்த்திபனின் குரலில் ஏகத்துக்கும் நக்கல்.
அவன் என்ன கண்டான். பெரிய கம்பெனியில் வேலையென்றதும் எதையும் படித்து பார்க்காமல் அல்லவா கையெழுத்திட்டிருந்தான்.
தவறிழைத்து வேலையை விட்டு நீக்கும் நிலை வந்தால், ஐந்து லட்சம் சிங்கப்பூர் டாலர் அபராதமாக நிர்வாகத்திற்கு அளிக்க வேண்டும். இதனை அடக்கிய காகிதம் தான் தற்போது நிக்கின் கையில் உள்ளது.
ஐந்து லட்சம் சிங்கப்பூர் டாலர் என்றால் சாதாரணமா என்ன? இந்திய மதிப்பிற்கு இரண்டு கோடி எழுபத்தி ஆறு லட்சத்து அறுபத்தி ஐந்தாயிரத்து நானூற்று அறுபத்தி ஒன்பது ரூபாய் நாற்பது பைசா(2,76,65,469.40). நிக்கிற்கு தலை சுற்றிக்கொண்டு வந்தது.
பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு நிக் பார்த்திபனை நோக்கி மன்னிப்பு வேண்டி நின்றான்.
"இந்த பணம் எனக்கு ஒரு வார வருமானம். நான் நினைத்தால் இது வேண்டாமென்று உன்னை விட்டுவிடலாம். ஆனால் உன்னை இப்படியே விட்டால் உனக்கு அடுத்து இன்னொருவன் முளைப்பான். இனி இங்கு வேலை செய்யும் யாருக்கும் உன்னை மாதிரி செய்யும் நினைப்புக்கூட வரக்கூடாது" என்றவன், "என்ன பணம் கொடுக்கிறாயா அல்லது ஒரு வருடம் ஜெயிலுக்குப் போகிறாயா?" என இரக்கமே இல்லாது வினவினான்.
டெல்வினிற்கு தான் பார்த்திபனின் இந்த முகம் கலவரமாக இருந்தது.
'நல்லாத்தான் இருக்கிறான். அப்பப்போ இப்படி அரக்கனா மாறிடுறானே!' பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினான்.
"என்ன டெல்வின் ரொம்ப சூடா இருக்கப்போல... சில்லுன்னு ஜூஸ் ஏதும் வேண்டுமா?"
பார்த்திபனின் கேள்வியில் பதறிய டெல்வின்... "நானில்லை" என்று வேகமாக அவ்வறைவிட்டு வெளியேறினான்.
அதில் முகத்தில் தோன்றிய புன்னகையை இதழுக்குள் ஒளித்தான்.
"ம்ம்... சாய்ஸ் இஸ் யூர்ஸ்?"
பார்த்திபனின் குரலில் குனிந்திருந்த தலையை நிமிர்த்திய நிக்கின் கண்கள் கசிந்தன.
இரண்டு கோடிக்கு எங்கு போவான் அவன். நடுத்தர வர்க்கத்தில் சேர்ந்த அவனின் குடும்பம் அவனால் தான் சற்று மேலே வந்து கொண்டிருக்கிறது. மேலும் உயர்த்தவே வில்லின் சூழ்ச்சி வார்த்தைகளை நம்பி அவனுக்கு உதவியாக நடந்து கொண்டான். புரோஜெக்ட் கைக்கு வந்த பின்னர் தான் உனக்கு பணம் என்று சொல்லியிருந்த வில், இந்நிலையில் நிக்கிற்கு பணம் கொடுப்பதும் சந்தேகம் தான். அத்தோடு இரண்டு கோடியெல்லாம் அவனால் தற்போது நினைத்துக்கூட பார்க்க முடியாது.
மௌனமாக நின்றிருந்தவன், "நான் ஜெயிலுக்கே போறேன் சார்" என்று உள்ளடங்கிய குரலில் கூறினான்.
"வெல்" என்ற பார்த்திபன், யாருக்கோ அழைப்பு விடுக்க, அடுத்த இரண்டு நிமிடங்களில் நிக் கைது செய்யப்பட்டான்.
அலுவலகத்தில் நிக்கின் பேச்சு அடங்க சில மணி நேரங்கள் ஆனது. அதனூடே பார்த்திபனின் மீதியிருந்த பயத்தின் அளவும் ஊழியர்களிடையே அதிகமாகியிருந்தது.
பார்த்திபன் வேலையில் கவனம் பதித்திருக்க...
"சார்... நியோ உங்களை பார்க்க வந்திருக்கிறார்" என்று டெல்வின் வந்தான்.
"இப்போ இவன் எதுக்கு?" என்று யோசித்தாலும் நியோவை உள்ளே அனுமதித்தான்.
"வாங்க நியோ" என்று வரவேற்ற பார்த்திபனின் விழிகள் நியோவை ஆராய்ந்தது.
'அப்போ இவன் வில்லிற்க்காக வந்திருக்கிறான்' என்று நொடியில் யூகித்தான்.
"என்னை அழிக்க நினைத்தால்... அந்த நினைப்பு மூளைக்குள் மறைவதற்குள் அவர்களை நான் அழித்திடுவேன். அதற்கு நீயே சான்று" என்ற பார்த்திபன் நியோவை உட்காரவும் சொல்லவில்லை, அவன் வந்த விடயம் எனவென்றும் கேட்கவில்லை.
தன் யூகம் எப்போதும் சரியாக இருக்குமென்ற எண்ணம் பார்த்திபனிடம்.
"அப்போ நான் வந்த விடயம் உனக்குத் தெரியும்." நியோவின் கேள்விக்கு பார்த்திபனிடம் பதிலில்லை.
"இதோடு நிறுத்திக்கோ பார்த்திபன்." மிரட்டும் தொணி நியோவிடம்.
"நீ போகலாம்." அவ்வளவுதான் என்று நியோவை வெளியேறக் கூறினான் பார்த்திபனின்.
"என் தம்பியை விட்டுடு."
"அது... அப்படி கெஞ்சு. இது கேக்குறது நல்லாயிருக்கே!
அதவிட்டுட்டு, கெஞ்ச வந்து மிரட்டுனா நாங்க பயந்திடுவோமா?
உனக்காகத்தானே என் ப்ரொஜெக்ட்டை தட்டி பறிக்க நினைத்தான் உன் தம்பி. என்னை ரொம்ப சாதரணாமா எடை போட்டுட்டான். இதுதான் அவனுக்கு ஆரம்பம்" என்ற பார்த்திபன், "நீயென்னடா சின்னப்பையன் மாதிரி எங்கம்மாகிட்ட உன்னை அடிச்சிட்டன்னு கம்பலைன்ட் பண்ணியிருக்க" எனக்கூறி சிரித்தான்.
பார்த்திபனின் சிரிப்பு எரிகிற தீக்கு எண்ணெய் வார்ப்பது போலிருந்தது நியோவிற்கு.
'இவனை ஒன்றுமே செய்ய முடியவில்லையே.' மனம் குமைந்தான்.
"என்ன என்னை எதுவும் செய்ய முடியலன்னு கஷ்டமா இருக்கா?" நியோவை கேட்ட பார்த்திபன்,
"இதுக்கு அப்புறம் இன்னும் கஷ்டமா இருக்கும்" என்றான்.
பார்த்திபனின் கண்களில் தெரிந்த நெருப்பில் நியோ தானாக வெளியேறினான்.
"என்கிட்ட வந்து மூக்கு உடையுறதே இவனுக்கு வேலை" என்று சொல்லிக்கொண்ட பார்த்திபன் இருக்கையின் பின்னால் நன்கு சாய்ந்தமர்ந்து சற்று ஆசுவாசமாக கண்களை மூடினான்.
வழக்கம்போல் மூடிய அவனது விழிகளுக்குள் அவளின் விழிகள்.
படக்கென கண்களைத் திறந்தவன்,
"சீக்கிரம் இந்த கண்ணாட்டியை கண்டு பிடிக்கணும். கண்ணை மட்டும் காட்டி மனுசனை கொல்லுறா(ள்)" என்று புலம்பியவன் அடுத்து வேலையில் கவனம் செல்லாது வீட்டிற்கு புறப்பட்டான்.
பார்த்திபன் வீட்டிற்கு வந்த சமயம் அங்கை சோகமே உருவமகா அமர்ந்திருந்தார்.
காரணம் தெரிந்த தேவராஜன் மனைவிக்கு ஆறுதல் சொல்லும் நிலையை விடுத்து,
"இன்னமும் அவன் நினைப்பு அண்ணன்னு உன் மனசுல இருக்குல. என்னைவிட அவன் உனக்கு முக்கியமா போயிட்டான் அப்படித்தானே. அப்போ வேண்டா வெறுப்பாகத்தான் என்னோட இருக்கியா?" என்று வார்த்தைகளை சிதற விட்டார்.
அன்னையின் முகத்தை பார்த்தபடியே உள் வந்த பார்த்திபன் தந்தையின் பேச்சில் அப்படியே நின்றுவிட்டான்.
"என்ன பேசறீங்க நீங்க... உங்களோட இருக்கேங்கிறதுக்காக என் கூடப்பொறந்த பொறப்பை நினைக்காமல் இருக்க முடியுமா? வருசத்துல ஒருநாள் என் அண்ணனை நினைச்சு வெசனப்படுறேன் அது உங்களுக்குப் பொறுக்கலையா?" என சினந்து கேட்ட அங்கை...
"எங்க அண்ணா பொறந்த நாளான இன்று... நீங்க என்னென்னலாம் செஞ்சு கொண்டாடியிருக்கீங்கன்னு நினைச்சு பாருங்க. எப்பவோ செஞ்ச தப்பை வருடங்கள் கடந்தும் தூக்கி சுமந்துக்கிட்டு திரிஞ்சா நமக்குத் தான் கனக்கும்" என்றார்.
தேவராஜிடம் அமைதி மட்டுமே.
புடவை தலைப்பால் தன் கண்களை ஒற்றிக்கொண்ட அங்கை...
"உங்க மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்க உங்க வார்த்தையை மீறி என் அண்ணன் சொல்லியிருப்பாருன்னு நீங்க நினைக்கிறீங்களா?
என் அண்ணனை விடுங்க, உங்க நண்பர் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?" என்று நலிந்த குரலில் வினவிய அங்கை...
"என் அண்ணனை விடவே நீங்க தான் எனக்கு முக்கியம். அதனால் தான் இத்தனை வருடம் ஆகியும் என் அண்ணனைப் பற்றி தெரிஞ்சிக்காமல் இருக்கிறேன்" என்றார்.
அந்த வார்த்தை தேவராஜ்ஜிற்கு இதயத்தில் அடித்த வலியை கொடுத்தது.
அவர்களின் பேச்சின் அடி பார்த்திபனுக்கு புரியவில்லை என்றாலும்,
தன் அன்னையின் அண்ணனுக்கும் தன் தந்தைக்கு ஏதோ பிரச்சனை. அதனால் சொந்த ஊரே வேண்டாமென்று தந்தை இருக்கின்றார். அத்தோடு அவர்களுக்கும் தங்களுக்கும் எவ்வித உறவும் தற்போதில்லை என்பதை அவர்களின் பேச்சுக்களின் மூலம் புரிந்துகொண்டான்.
'அப்படியென்ன பிரச்சனையாக இருக்கும்?'
'அன்னையின் பேச்சினை வைத்து பார்க்கும்போது அவர்களும் நல்லவர்கள் தான் போலிருக்கு. அப்புறம் எதனால் இந்த பகை.' அவனின் மனம் சிந்தித்தாலும் தற்சமயம் அதனை புறம் தள்ளினான்.
இருவரும் பேச்சற்று மௌனித்திருக்க... அப்போதுதான் வந்தவன் போல், "மாம் அண்ட் டாட்" என்று அழைத்துக்கொண்டே அவர்களை நெருங்கினான்.
அவர்கள் பேசியதை தான் கேட்டதுபோல் பார்த்திபன் காட்டிக்கொள்ளவே இல்லை.
மகனை கண்டதும் தன் முகத்தை சீராக்கிய அங்கை இப்போது பேசும் மன நிலையின்றி,
"வாப்பா சாப்பிடு" என்றவாறு கிச்சனிற்குள் புகுந்து கொண்டார்.
செல்லும் மனைவியின் முதுகையை வெறித்த தேவராஜன் 'அதிகமாக பேசிவிட்டோமோ' என்று வருந்த,
"ரொம்ப பேசிட்டீங்கப்பா! உங்களுக்குத்தான் உறவுன்னு யாருமில்லை. ஆனால் அம்மாக்கு அண்ணா இருக்கிறார் போல். அவர் இருந்தும் உங்களை மட்டுமே நம்பி இத்தனை வருடங்கள் உங்களுடன் இருந்த அம்மாவை நீங்க அப்படி கேட்டிருக்கூடாது டாட்" என்றவன் எழுந்து தன்னறை நோக்கி அடி வைத்தான்.
'இவன் கேட்டுட்டானா? மகனுக்கு எல்லாம் தெரிந்துவிட்டதா? அங்கு போகணும் சொல்லிவிடுவானோ?' என்று மனதோடு பயந்தார்.
அன்று இளம் ரத்தம். சூடாக அலசி ஆராயும் பக்குவமின்றி நண்பனை எடுத்து எறிந்து விட்டு வந்துவிட்டார். காலப்போக்கில் தன் நண்பனின் மீது தவறு இருக்காது என்று புரிந்தாலும் அன்று அப்படி நடந்துகொண்டு இன்று இறங்கி செல்ல தேவராஜின் தற்போதைய நிலை அவரை விடவில்லை. அதனாலேயே உறவென்று இருந்த ஒரு உறவையும் தள்ளி வைத்து தனித்து நிற்கிறார்.
அன்று கோபத்தில் மாமன் இருக்கின்றான் என்பதை காட்டிக்கொள்ளாது மகனை வளர்த்தவரால் இப்போது மகனிடம் அவ்வுறவைப்பற்றி சொல்ல முடியவில்லை. சொன்னால் மகன் அன்னையின் சந்தோஷத்தை அழித்துவிட்டீர்களே என்று கேட்டு விடுவானோ என்கிற பயம் அவருக்கு.
"டோன்ட் ஒர்ரி டாட். மேற்கொண்டு இதைப்பற்றி நானெதுவும் உங்களிடம் கேட்டு கஷ்டப்படுத்த மாட்டேன்" என்று மேலேறிய தன் நடையை நிறுத்திக் கூறியவன், 'நானா கண்டு பிடித்து என் அம்மாவை அவரின் அண்ணனோடு சேர்த்து வைக்கின்றேன்' என மனதோடு கூறினான்.
மகனின் குரலில் கலைந்தவர் அவனின் வார்த்தைகள் புரிந்த பின்னர் தான் சீரான மூச்சினை வெளியேற்றினார்.
தன்னறைக்குள் வந்த பார்த்திபன் சிந்தனையோடு அங்கிருந்த கோச்சில் அமர்ந்து விட்டான்.
சில நிமிடங்கள் பலவாறு யோசித்தவன், இந்தியாவிலிருக்கும் தன்னுடைய நண்பன் ஒருவனுக்கு அழைத்து நம்பத்தகுந்த டிடெக்டிவ் மூலம் தன் குடும்ப வரலாற்றினை கண்டறியக் கூறினான்.
அதன் பின்பே குளித்து முடித்து உணவருந்த கீழே வந்தான்.
உண்டு கொண்டிருந்த வேளையிலேயே அவனின் அலைபேசியில் அழைப்பு வர, சாப்பிடும் போது பேச அங்கை மறுத்துவிட்டார்.
மீண்டும் மீண்டும் ஒலிக்கவே, அதுவும் இந்திய எண்ணாக இருப்பதால் ஏதோ அவசரமென்று பாதி உணவில் கை கழுவி எழுந்தவன் அடுத்த ஒரு மணி நேரத்தில் இந்தியாவிற்கு செல்லும் விமானத்தில் அமர்ந்திருந்தான்.
இந்த பயணம் அவனின் கண்ணாட்டியை அவனிடம் காண்பிக்க இருக்கிறது என்பதை அறியாது... தான் செல்லும் காரியத்தின் எண்ணத்தில் சுழன்று கொண்டிருந்தான்.
அங்கு அவனது கண்ணாட்டியோ அவனைத்தேடி அலைந்து கொண்டிருந்தாள்.
 

Members online

No members online now.

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top