மீனாக்ஷி - சக்திவேல்
அத்தியாயம் - 10
காளியம்மன் கோவில் திருவிழா முடிந்து இன்றோடு ஏறக்குறைய ஒரு வாரம் கடந்திருந்தது.
அன்று மீனாக்ஷியுடன் வீட்டிற்குத் திரும்பிய சக்திவேலால் ஒரே ஒரு நாள் மட்டும் தான் மருதூர்குளத்தில் இருக்க முடிந்தது. உடனடியாக ‘தூத்துக்குடிக்கு வா’ என்று அழைத்த யுகேந்திரனின் அவசர அழைப்பில் சென்றவனால் அதற்குப் பிறகு மீனாக்ஷியைப் பற்றி நினைக்கக் கூட முடியாமல் போகும் வகையில் அடுத்து நடந்த நிகழ்வுகள் அவனை அதிர்ச்சி அலைகளுக்குள் சிக்கிப் போட்டது.
படுகொலை செய்யப்பட்ட பல மனிதர்களின் சிதைந்த சடலங்களைப் பார்த்துப் பழகியிருந்தவன் சக்திவேல்.
இனி எதுவும் எனக்கு அதிர்ச்சித் தராது என்று அவன் நினைத்திருக்கும் வேளையில், இம்முறை அவனது கடின உள்ளத்தையே ஆட்டிப்படைக்கும் வகையில் கடற்கரையோரம் கிடைத்தது ஒரு இளம் பெண்ணுடைய சடலத்தின் மிச்சமீதி.
மணப்பாடு (Manapad) - தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரைக் கிராமமாகும். இது மணவை என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூர் நகரிலிருந்து 12 கி.மீ தொலைவிலுள்ள, போர்த்துக்கீசிய கட்டிய கலையுடன் கூடிய பிரம்மாண்ட வீடுகளும், கிறிஸ்தவ ஆலயங்களும் என அழகாய் அமைந்திருக்கும் அந்தப் பெரிய கிராமம், மூன்றுபுறமும் கடலால் சூழப்பட்டு ஒரு தீவு போலக் காட்சியளிப்பதை பார்ப்பதே தனி அழகு.
அதே போல் நீண்ட மணல்செறிந்த அகலமான கடற்கரையின் ஒரு பகுதியில், படகுகள் நிறுத்தப்பட்டிருக்கும் இடமாகவும், மீன்கள் வந்திறங்கும் துறையாகவும் செயல்பட, கிழக்கில் வங்காள விரிகுடாவுக்குள் நீளும் ஒரு சிறிய தீபகற்ப பகுதி [peninsular region], பாறையும் மணலும் கலந்த ஒரு சிறு குன்றாக விளங்க, கண்களைவிட்டு அகல மறுக்கும் எழில் சுமந்தக் காட்சிகளைக் கொண்டது மணப்பாடு கடற்கரை.
ஆனால் அன்று அங்கு நிகழ்ந்தது வேறு!
மணலும் கவிபாடும் என்னும் பொருளிற்கேற்பதான் அக்கிராமத்திற்கு மணப்பாடு என்று பெயர் சூட்டியிருக்க முடியும் என்று மக்கள் எண்ணியிருக்க, ஆயினும் அன்றைய நாளில் கடற்கரை மணல் கவிபாடவில்லை.
மாறாக, கடற்கரையோரம் நிறுத்தப்பட்ட தனது ஜீப்பைவிட்டு இறங்கிய சக்திவேலுக்கு, யுகேந்திரன் அலைபேசியில் கூறிய, "It’s so eerie feel Shakthi. It’s like a mysterious, strange, and disturbed feeling which may chill up the spine." என்ற வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்று புலப்பட்டது.
அந்தக் கடற்கரையோரத்தை ஒட்டி உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்ட அக்கிராமத்தில் வசிக்கும் ஒரு காவலதிகாரி அன்றும் கரையை ஒட்டியே நடைப்பயணம் செய்து கொண்டிருக்க, சற்றுத் தொலைவில் சில சிறுவர்கள் கீழே கிடந்த எதனையோ உற்றுப் பார்த்தவாறே நின்றிருப்பதைக் கண்டு அவர்கள் அருகே சென்றார்.
காவலதிகாரி ஏற்கனவே அக்கிராமத்து மக்களுக்கு நன்றாக அறிமுகமாகி இருந்ததால், அவரைக் கண்டதும், அனைவரையும் முந்திக்கொண்டு "சார், ஏதோ மனுசனோட கால் மாதிரி இருக்குது சார்.." என்றான் சிறுவரில் ஒருவன்.
"நகருங்க.." என்றவாறே அவரும் அந்தப் பொருளை உற்றுப் பார்க்க, அவரது இதயம் தடதடத்துப் போனது.
தன் காவல் ஆய்வாளரை அழைத்தவர் தகவலை பகிர, சில நிமிடங்களில் அதிகாரிகள் அங்குக் குழும ஆரம்பித்தனர்.
வெறும் ஒரு கால் மட்டும் தான் கரை ஒதுங்கி இருக்கின்றதா அல்லது உடலின் மற்ற பாகங்களுமா என்று அவர்கள் ஆராய, தீபகற்ப பகுதியின் நுனியில், பிரேதத்தின் மற்ற பாகங்களும், தலை உட்பட, கிடைத்தன.
மனிதன்தானா என்ற சந்தேகம் அளிக்கும் அளவில் அது சிதைக்கப்பட்டிருக்க, பிரேதத்தைப் பரிசோதனைக்கு எடுத்துச் சென்ற அதிகாரிகள் கொடுத்த தகவலின் பெயரில் யுகேந்திரனுக்கு ஏதோ பொறித்தட்ட, உடனடியாக சக்திவேலை அழைத்திருந்தான்.
அடுத்த நிமிடமே மருதூர்குளத்தில் இருந்து கிளம்பிய சக்திவேலின் ஜீப் நேராகச் சென்று நின்றது மணப்பாடு கடற்கரையில்தான்.
அங்குச் சில மணித்துளிகள் மற்ற அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தவன் பிரேதம் எடுத்துச் செல்லப்பட்ட அரசு மருத்துவமனைக்குச் செல்ல, பரிசோதனைக்கு என்று கிடத்தப்பட்டிருந்த உடற்பாகங்கள், எதற்குமே அசராத அவனையே அசைத்துப் போட்டது.
அது ஒரு இளம்பெண்ணின் சடலம்.
இன்னார் என்று அறியப்பட முடியவில்லை எனும்படியாகச் சகிக்க முடியாதளவிற்குச் சிதைந்து போயிருந்தாலும், அது ஒரு இளம்பெண்ணின் சடலம் என்று கண்டறிய முடிந்ததில், ஏனோ மனம் அவனையும் அறியாது மீனாக்ஷியிடம் சென்றது.
வழக்கம் போல் நெற்றிப்பொட்டை அழுந்தத்தடவி தன்னைச் சமன்படுத்தியவன் பிரேத பரிசோதனை முடியும் வரை காத்திருக்க, வெளியில் வந்த மருத்துவர் அவனது சந்தேகத்தை உறுதிப்படுத்தினார்.
"Decomposition may be slowed down by cold water temperatures, but the process can still be significantly altered compared to a body found on land. ஆனால் இந்தப் பெண்ணின் உடலில் இருந்து எங்களால சில விஷயங்களைக் கண்டறிய முடிந்தது. அவளது வயது பதினேழில் இருந்து இருபதுக்குள் தான் இருக்க வேண்டும். அதுவும் இல்லாது சடலத்தின் மீது இருக்கும் பர்னாக்கிள்களின் பகுப்பாய்வு [barnacle Lepas anatifera L], சடலம் எவ்வளவு காலம் கடலில் மிதந்திருக்கக் கூடும் என்பதை மதிப்பிடுவதற்கு உதவும். அதை வச்சு இறந்ததிலிருந்து குறைந்தபட்ச நேரத்தை மதிப்பிட முடியும். அப்படிப்பார்த்தால் இந்தப் பெண் இறந்து இரு மாதங்கள் ஆகி இருக்க முடியும்."
[குளிர்ந்த நீரின் வெப்பநிலையால் சிதைவு குறையக்கூடும், ஆனால் நிலத்தில் காணப்படும் உடலுடன் ஒப்பிடும்போது இந்தச் செயல்முறை இன்னும் கணிசமாக மாற்றப்படலாம்.]
"டாக்டர், ஏறக்குறைய ரெண்டு மாதங்களுக்கு முன் ஒரு பொண்ணுக் காணவில்லைன்னு அவளுடைய பேரண்ட்ஸ் கம்ப்ளையிண்ட் செய்திருந்தாங்க. அதை வச்சு அந்த ஜூரிஸ்டிக்ஷனைச் சேர்ந்த போலீஸ் ஆஃபிஸர்ஸ் அந்தப் பொண்ணைத் தேட ஆரம்பிச்சிருக்காங்க, ஆனால் அவள் சென்ற இடமே தெரியாதளவிற்கு மிஸ்டீரியஸ்லி அவள் காணாமல் போயிருந்தாள். அது கொஞ்சம் பெரிய இடம். அந்தப் பொண்ணுடைய அப்பா அரசியல் செல்வாக்கு உள்ளவர் அப்படிங்கிறதால என் நேரடிப் பார்வைக்கு அந்தக் கேஸ் கொண்டு வரப்பட்டது. அன்றில் இருந்து இன்று வரை அவளைத் தேடிட்டு தான் இருக்கோம், பட் இன்னும் அவள் எங்களுக்குக் கிடைக்கலை."
"சக்திவேல் சார், இது அந்தப் பொண்ணு தான்னு உறுதியா சொல்ல முடியுமா?"
"நோ டாக்டர், என்னால் உறுதியா சொல்ல முடியாது, ஆனாலும் எனக்கு இது அந்தப் பொண்ணா இருக்குமோன்னு சந்தேகம் இருக்கு"
"எதை வச்சு சொல்றீங்க?"
"ஃபர்ஸ்ட் அந்தப் பொண்ணு இங்க திருச்செந்தூரில் இருக்கும் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குத் தன் ஃப்ரெண்ட்ஸோடு வந்ததாகவும், ஆனால் அவளுடைய பாய் ஃப்ரெண்ட் அவளைப் பார்க்க வருவதாகச் சொன்னதால் அவள் ஃப்ரெண்ட்ஸோடு வீடு திரும்பாமல் திருச்செந்தூரிலேயே தங்கிட்டதாகவும் சொன்னாங்க. அதற்குப் பிறகு அவளைக் காணலை. அதே போல் இப்போ உங்க போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில், அந்தப் பொண்ணுடைய ஒரு பல் ஏதோ ஒரு காரணத்தால் கீழே விழுந்து பிறகு அதை ரீ-இன்ஸெர்ட் பண்ணிருக்காங்கன்னு போட்டிருக்கு. அதே போல் அந்தப் பொண்ணும் அவள் காணாமல் போவதற்கு சரியா ஒரு மாசத்துக்கு முன்னாடி அவளுடைய ஒரு பல்லை ஒரு ஆக்ஸிடெண்டுல இழந்திருக்காள். அதுவும் நீங்க இங்க போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்டில் சொல்லிருக்க அதே கோரைப்பல் தான் அவளுக்கும் ஆக்ஸிடெண்டுல விழுந்து, பின் அதே பல்லை அவளுக்குப் பொறுத்தி இருக்காங்க. அதுவும் இல்லாமல் அவளுடைய வயசும் இருபது தான். ஸோ, அதை வச்சுப் பார்க்கும் போது இந்தப் பிரேதம் அந்தப் பொண்ணுடையதா இருக்கலாமோன்னு தோணுது."
"டி.என்.ஏ டெஸ்ட் எடுத்துப் பார்த்தால் உறுதிப்படுத்திடலாம் சார், ஆனால் அதற்கும் செலவும் ஆகும். அதன் ரிசல்ட் வருவதற்கும் பல வாரங்களும் ஆகலாம்."
"நான் ஏற்கனவே சொன்னது போல் அவளுடைய அப்பா அரசியல் பலம் இருக்கிற கோடீஸ்வர பிஸ்னஸ் மேன் டாக்டர். அவரால் இது சாத்தியம். நான் அவர்கிட்ட பேசுறேன்."
கூறிய சக்திவேல் அந்தப் பெண்ணின் தந்தையை மட்டும் அழைத்து விஷயத்தைப் பகிர, அவர் மறுமுனையில் கதறி அழுதது அவனுக்குப் வேதனையை அளித்தது.
எவரோ ஒருவருக்கு உடல் பொருள் ஆவி உயிர் என்று எல்லாமுமாக ஆன ஒரு உயிரை எப்படி யாரோ ஒருவன் குரூரமாய்ச் சிதைக்க முடியும்?
அதுவும் இது போன்று சிதைத்துவிட்டுக் குப்பையெனக் கடலில் வீசும் அளவிற்கு மிருகத்தையும் விடக் கேவலமாக ஒரு மனிதனால் செயல்பட முடியுமா?
அந்தளவிற்கு மனிதர்களின் உருவத்தில் உலாவும் ஈவுஇரக்கமில்லாத மிருகங்களை எந்த விதத்தில் தண்டிப்பது?
அந்தப் பெண்ணின் தந்தையிடம் அனுமதி வாங்கியவன் அவரின் அரசியல் செல்வாக்கை உபயோகித்து டி.என்.ஏ டெஸ்ட்டும் எடுக்க, சில நாட்களிலேயே அந்தச் சடலம் அவருடைய பெண்ணுடையது தான் என்று முடிவும் வந்தது.
அவள் இருபது வயது இளம் பெண், அனாமிகா.
BC கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவி [BC Arts and Science College, Tuticorin]
விவரம் அறிந்ததுமே சக்திவேலின் ஜீப் நின்றது, மிகப்பெரிய பெயர் பலகையுடன் கம்பீரமாய்க் காட்சியளித்துக் கொண்டிருந்த, ஆண் மற்றும் பெண் என்று இருபாலரும் பயிலும் அந்தக் கல்லூரியின் முதல்வர் அலுவலகத்திற்கு முன்.
ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு மேல் பழமையான அந்தக் கல்லூரி அன்று சக்திவேலின் வரவால், அவன் கொடுத்த தகவலால் அல்லோல கல்லோலப்பட்டுப் போனது.
அதற்குக் காரணம், அனாமிகா, அக்கல்லூரியில் படிக்கும் அழகிய பெண்களுள் ஒருத்தியாகக் கருதப்பட்டவள்.
பிறந்தது செல்வச்செழிப்பு உள்ள வம்சத்தில் என்றாலும், பார்க்கும் எவரையும் சொக்கிப் போட வைக்கும் தேவதையானாலும், வெகு அமைதியான பெண்.
அணியும் பண்பார்ந்த உடைகளிலும், மெல்லிய குரலில் பேசுபவளின் அமைதியான சாரீரத்திலும், பணக்காரத் திமிர் என்பதே இல்லாத அவளின் நடத்தையிலும் கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் மட்டுமல்ல, அவளுக்காகவே தினந்தோறும் கல்லூரிக்கு வெளியில் காத்திருக்கும் இளவட்டங்களும் மயங்கிக் கிடந்தனர்.
ஆயினும் அவள் யாருக்கும் மயங்கினதாய் தெரியவில்லை. அப்படிப்பட்ட பெண்ணிற்குப் பாய்ஃப்ரெண்டா? என்ற கோணத்தில் தான் முதலில் காவல்துறை அதிகாரிகள் விசாரிக்க ஆரம்பித்தனர்.
ஆனால் இருக்கலாம் என்று சிலரும், இல்லவே இல்லை என்று சிலரும் கூற, மாற்றுக் கருத்துக்களால் எதனையும் கண்டுப்பிடிக்க முடியாது திணறிப் போனார்கள் அதிகாரிகள்.
அதுவும் இல்லாது திருச்செந்தூர் கோவிலில் ஆங்காங்கு வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வீடியோக்களைச் [footages] சலித்துச் சளைக்கும் அளவிற்குத் தேட, ஏனோ அனாமிகா அவள் தோழிகளுடன் இருக்கும் சில காட்சிகள் தான் அகப்பட்டதே ஒழிய, அதற்குப் பிறகு அவள் தனித்து இருக்கும் காட்சிகள் ஒன்று கூட அவர்களிடம் சிக்காமல் போனது.
அத்துடன் நாளாக ஆக அந்த வழக்கும் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் ஒன்றாகக் கருதப்பட்டிருக்க, இப்பொழுது அவளது சடலமும், அதுவும் திருச்செந்தூருக்கு சற்று அருகில் மணப்பாடு கடற்கரையோரத்தில் கிடைத்துவிட்டதில் மீண்டும் அவளின் வழக்கு முன்னுரிமைப் பட்டியலில் முதலிடத்திற்கு வந்தது.
தன் பார்வைக்குக் கொண்டு வரப்பட்ட அவ்வழக்கில், தீவிரமாக விசாரணையை முடுக்கிவிட்ட சக்திவேலின் கட்டளைப்படி, கோவில் மட்டுமல்லாது அதனைச் சுற்றி இருக்கும் பல வீதிகள், கடைகள், தெருக்கள் என்று அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்கள் பரிசோதிக்கப்பட்டன.
அதனில் சக்திவேல் எதிர்பார்த்தக் காட்சிகள் எதுவும் கிடைக்காவிட்டாலும், திருச்செந்தூருக்கு சற்றுத் தொலைவில், மணப்பாடுக்கு சற்று அருகில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்புவதற்கு வரிசையாக நின்ற வாகனங்களின் காட்சிகள் சக்திவேலின் கவனத்தை ஈர்த்தன.
அவை அனைத்துமே விலை உயர்ந்த ரக வகையைச் சார்ந்த பைக்குகள்.
அதன் ஓட்டுநர்களும் பதினெட்டில் இருந்து இருபதுகளின் ஆரம்பங்களில் (25 வயதுக்குட்பட்ட) இருக்கும் இளைஞர்கள் போல் தோன்றியது.
ஏனோ அந்தப் பைக்குகள் சக்திவேலின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய, அக்காட்சிகளை ஊன்றிப் பார்த்தவனுக்கு அந்தப் பைக்குகளுக்குப் பின்னால் நின்ற கருப்பு எஸ்.யு.வி [S.U.V] ஒன்று சந்தேகத்தை வரவழைத்தது.
கார்களில் கருப்பு கண்ணாடிகளைப் பயன்படுத்த இந்தியாவில் சுப்ரீம் கோர்ட் தடைவிதித்துள்ளது.
அதனால் அந்தக் கருப்பு நிற எஸ்.யு.வி-யின் முன்பக்க கண்ணாடிகள் அனைத்தும் வரையறுக்கப்பட்ட சதவீதத்திற்குக் கீழ் கருப்பு நிறம் பூசப்பட்டாலும், அந்த இரவில் எஸ்.யு.வி-யினுள் இருப்பவர்களைச் சரியாகக் கணிக்க முடியவில்லை.
ஆயினும் அந்த எஸ்.யு.வியும் பல இலட்சங்களை விழுங்கி இருக்கும் வாகனம்.
பைக்குகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பெட்ரோலை நிரப்பிக் கொண்டு நகர ஆரம்பிக்க, அதனைத் தொடர்ந்து எஸ்.யு.வி-யும் நகர்ந்தது.
கேமராவில் பதிக்கப்பட்டிருக்கும் காட்சிகளைக் கூர்ந்துப் பார்த்துக் கொண்டே வந்த சக்திவேலின் கண்கள் இடுங்கும் வகையில், சில நொடிகளில் ஒரு சில காட்சிகளின் காணொளி அழிக்கப்பட்டுப் பின் தொடர்ந்து ஒளிபரப்பானது.
"வாட்? இது எப்படிச் சாத்தியம்?"
ஏற்கனவே கரும்போர்வையைப் போர்த்தியது போல் அந்தப் பெட்ரோல் பங்கைச் சுற்றியும் இருள் சூழ்ந்திருந்தது.
இதனில் வாகனங்களின் நம்பர் ப்ளேட் வேறு சரியாகத் தெரியாதிருக்க, இதனில் திடுமென அழிக்கப்பட்ட காணொளிக்காட்சி திரும்பி வரும் முன், அவ்வாகனங்கள் அந்தப் பெட்ரோல் பங்கை விட்டு வெளியேறி இருந்தன.
அப்பொழுது தன்னருகில் நின்றிருந்த யுகேந்திரனிடம், "தூத்துக்குடியில் கடந்த சில வருடங்களாக நடந்து கொண்டிருக்கும் கொலைகளுக்கும் இந்தப் பெண்ணின் கொலைக்கும் சம்பந்தம் இருக்க வாய்ப்புகள் இருக்கலாம்னு தோணுது யுகா.." என்றான்.
"இந்தப் பைக்ஸை வச்சு சொல்றியா சக்தி?"
"எஸ், நியாபகம் இருக்கா? நான் ஏற்கனவே இதைப்பற்றி உன்னிடம் பேசியிருக்கேன்."
"ஆமா, ராகேஷ் கொலை செய்யப்பட்டு சரியா ஆறு மாசங்கள் கழிச்சு நானும் நீயும் உன் ஜீப்பில் போயிட்டு இருக்கும் போது ரெண்டு பைக்ஸ் போனது. அப்போ அந்தப் பைக்ஸின் சத்தங்களைக் கேட்கும் போது ஏதோ நியாபகம் வருது, பட் எதுவும் க்ளியரா தெரிய மாட்டேங்குதுன்னு நீ சொன்ன."
"யெஸ், யுகா. அந்தப் பைக்ஸை ஓட்டிட்டு போனவங்களும் இந்தப் பசங்க மாதிரி இருபதுகளில் இருக்கும் இளைஞர்கள் தான். அன்றைய நிகழ்ச்சிக்குப் பிறகு வேறு கொலைகள் எதுவும் தூத்துக்குடியில் நடக்கலை. அதன் பிறகு நானும் அந்தப் பைக்ஸைப் பற்றி யோசிக்கலை. ஆனால் இன்னைக்கு இவங்களைப் பார்க்கும் போது ஏதோ இவங்களுக்கும் அன்னைக்கு நாம பார்த்த பசங்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கும்னு என் மனசு அடிச்சு சொல்லுது."
"தென் வாட்? விசாரிச்சிடுவோம்."
கூறிய யுகேந்திரன் அந்தப் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஊழியர்களிடம் விசாரிக்க, அவை விலை உயர்ந்த பைக்குகள் போல் தோன்றியது என்று மட்டுமே கூறினார்களே ஒழிய அவர்களிடம் இருந்து வேறு எந்தத் தகவலையும் பெற முடியவில்லை.
காரணம் பைக்கை செலுத்தி வந்த அனைவருமே ஹெல்மெட் அணிந்திருந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த உடையையும் காலணிகளையும் வைத்தே அவர்கள் இளைஞர்களாக இருக்கக் கூடும் என்று சந்தேகம் வந்தது.
அதுவும் அல்லாது ஒரு வாகனம் பம்பிற்குள் நுழையும் போது டிஜிட்டல் ஸ்கேன் மூலம் அந்த வாகனத்தின் நம்பர் ப்ளேட் சோதிக்கப்பட்டு, பின் கேமராவில் பதிக்கப்பட்ட காட்சிகளுடன் இணைக்கப்பட்ட பிறகே பெட்ரோலிற்கான ரசீது வழங்கப்படும்.
ஆனால் அது டில்லி போன்ற பெரிய நகரங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
தமிழ்நாட்டில், அதுவும் மணப்பாடு போன்ற கிராமத்திற்கு அருகே இருக்கும் பெட்ரோல் பங்குகளில் இன்னமும் அந்த வசதி வரவில்லை.
ஆக அந்த வாகனங்களைப் பற்றிய எந்த விவரமும் அகப்படாததால் மீண்டும் ஆரம்பித்த புள்ளியிலேயே வந்து நிற்பது போல் குழம்பிப் போனான் சக்திவேல்.
ஏனோ ஏதோ ஒரு பெரிய இடத்தின் தலையீடு அவன் காலடி வைக்கும் இடங்களில் எல்லாம், அவனுக்கு முன்பே சென்று அனைத்தையும் மாற்றி அமைத்தது போலவே அவனுக்குத் தோன்றியது.
அதனில் அங்கு வேலைப்பார்த்த பணியாளர்களைத் தனித்தனியாக விசாரித்தும் ஒருவரிடமும் இருந்தும் உருப்படியாக எந்த விஷயத்தையும் அவனால் கறக்கமுடியவில்லை.
இதில் என் பெண்ணிற்கு ஆண் நண்பர்கள் எவரும் இல்லை, அந்த நோக்கில் குற்றவாளியைத் தேடி நேரத்தை வீணாக்காதீர்கள் என்று அனாமிகாவின் பெற்றோர் வேறு பெரும் குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்க, காவல்துறையின் தலைமையிடமும் வேறு விதமாக விசாரணையை மேற்கொள்ள அதிகாரிகளை வலியுறுத்த ஆரம்பித்தது.
அதிகாரிகளும் சக்திவேலின் வார்த்தைகளையும் மீறி, வேறு வழியின்றித் தலைமையிடத்தின் கட்டளையை மீற முடியாமல் அனாமிகாவின் கொலையை முற்றிலுமாக வேறு கோணத்தில் விசாரிக்க ஆரம்பித்தனர்.
ஆயினும் சக்திவேலின் மனம் மட்டும் அதற்கு உடன்படவில்லை, இருந்தும் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.
சில வேளைகளில் இந்தளவிற்குச் செயலற்றவன் போல் எனது கைகளைக் கட்டிப் போடும் இந்தக் காக்கிச்சட்டையும் வேண்டாம், உத்தியோகமும் வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிடலாமா என எண்ணும் அளவிற்கு அவன் மனமும் குமுறிக் கொண்டிருக்க, அனாமிகாவின் கொலை வழக்கும் தூத்துக்குடியின் தீர்க்கப்படாத வழக்குகளில் ஒன்றாக அடங்கிப்போனது.
*************************
நாட்களும் அதன் போக்கில் உருண்டோடிப் போக, தூத்துக்குடிக்கு மாற்றம் செய்யப்பட்டதில் இருந்து போதை மருந்துக் கடத்துவோரையும், மாவட்டம் முழுக்க அதனை விற்பனை மற்றும் விநியோகம் செய்பவர்களையும் சல்லடைப் போட்டு சலித்தவனாய் பிடித்துப் போட்ட சக்திவேலுக்கு, ஏனோ நடந்து கொண்டிருக்கும் கொலைகளுக்குக் காரணமான கொலையாளிகளை மட்டும் பிடிக்க இயலாது போனது.
அதே போல் இந்த அனைத்துக் கொலைகளின் பின்னணியில் இருக்கும் கொலையாளிகளுக்கு இடையில், ஏதோ ஒரு பிணைப்பு இருக்கின்றது என்று மட்டும் அவனுக்குத் தோன்றிக் கொண்டே இருந்தது.
தனிப்பட்ட முறையில் விசாரணைகளைத் தீவிரமாய் மேற்கொண்டிருந்தவன் காவல்துறையின் தரவுத்தளம் மற்றும் குற்றவியல் வரலாற்றுப் பதிவுகள் அனைத்தையும் தேடிப்பார்த்தும், குற்றவாளிகளின் பட்டியலில் இருக்கும் எவரும் அந்நாள்வரை அவனது கவனத்தைக் கவரவில்லை.
ஆதலால் இதுவரை காவல்துறையிடம் சிக்காதிருக்கும் யாரோ சிலர் தான் இக்கொலைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்றும், அவர்களுக்குப் பின்னால் இருப்பவன் நிச்சயமாக ஒரே ஒருவனாகத் தான் இருக்கவும் வேண்டும் என்றும் அவனது அனுபவ அறிவு அவனுக்கு எடுத்துக்கூறியது.
ஆனால் அந்த யாரோ ஒருவன் மிகவும் புத்திசாலித்தனம் படைத்த மனிதனாக இருக்க வேண்டும். அல்லது சாணக்கியத்தனம் கொண்ட எவரோ அவனுக்கு உதவியாக இருக்க வேண்டும்.
இவையே சக்திவேலின் மூளையை அரித்துக் கொண்டிருந்த விஷயம்.
இதனில் இறந்துப் போன அனாமிகாவின் தந்தை பல வழிகளில் நெருக்கம் கொடுக்க, காவல்துறையின் மேலதிகாரிகளும் சக்திவேலிற்கு அழுத்தம் கொடுக்க, அவன் விரும்பியபடி தேட முடியாமல் மற்றத்திசைகளில் தேட ஆரம்பிக்க, எப்பக்கம் தேடினாலும் 'back to square one' என்பது போல் அவளது கொலை வழக்கு திரும்பவும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேர்ந்ததில் நொந்து போனான்.
அதே நேரம் மருதூர்குளத்தில் இருந்து வந்த ஒரு தகவலும் அவனைச் சற்றே திகைக்கச் செய்தது.
அவன் அந்நாள்வரை போட்டிருந்த கணக்கு ஒன்று தப்பாக முடியும் வேளையும் வந்தது!!
"ஆமா வேலு. திடீர்னு வந்து நின்னாங்க. என்ன ஏதுன்னு விசாரிச்சப்பத் தான் வந்தவங்க மீனாவுடைய அத்தைன்னு தெரிஞ்சது."
"அத்தையா?"
"ஆமாப்பா. மீனா அம்மாவோட கூடப் பிறந்தவரு ஒரே ஒருத்தர் தானாம், அவரும் அவரோட பையனுக்கு லண்டன்ல வேலைக் கெடைச்சதும் குடும்பத்தோட அங்க போயிட்டாராம். ஆனால் அவுக பையன் திடீர்னு ஏதோ வெளிநாட்டுக்காரப் பொண்ணக் கல்யாணம் பண்ணப் போறேன்னு சொல்லிருக்கான், அதைக் கேட்டதாலோ என்னவோ, ஆனா சில மாசங்களுக்கு முன்னால மீனாவோட மாமா மாரடைப்புல செத்துப் போயிருக்கார். அதுக்கப்புறம் அவங்க பொஞ்சாதி, அதான் மீனாவோட அத்த, ஹேமாவதி அவங்க பேராம், அவங்க லண்டன்ல இருக்க முடியாமல் இங்க வந்திருக்காங்க. அவுக தான் இங்க வந்தது."
"அவளுடைய பெத்தவங்க இறந்ததும் அவ அனாதையா நின்னுட்டு இருந்தாளே, அப்போ அவங்க எல்லாம் எங்க இருந்தாங்களாம்? ஏதோ அவங்க ஆக்ஸிடென்ட்ல இறந்த செய்தியைக் கேட்டும் அவங்க லண்டனில் இருந்து வரலைன்னு கேள்விப்பட்டேன். இதுல சித்தப்பன் வீட்டுல வேலைக்காரி மாதிரி இவளை நடத்தினாங்களே, அப்பவும் அவங்க வரவே இல்லை போல? இப்போ மட்டும் ஏன் திடீர்னு வந்தாங்களாம்?"
சக்திவேலின் பேச்சு முத்தம்மாளுக்கு, 'பேசுவது என் மூத்தவாரிசா?' என்ற பெரும் வியப்பையும், ஆர்வத்தையும் ஒருங்கே கொணர்ந்தது.
"மீனாவோட மாமா லண்டன்ல இருக்காங்கன்னு உனக்குத் தெரியுமா வேலு?"
"ம்ம்ம்."
"எப்படிப்பா?"
"அதெல்லாம் விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன்."
"எப்போ?"
"ப்ச்.. அது எப்பவோ? இப்ப அதாம்மா முக்கியம்? நீங்க நான் கேட்ட கேள்விக்குப் பதிலைச் சொல்லுங்க."
"அதே கேள்வி தான் அப்பாவும் அந்த அம்மாவைக் கேட்டாக வேலு. மீனாவுடைய அம்மாவுக்கு முதல் கல்யாணம் முடிஞ்ச மறுநாளே வீட்டுக்கு திரும்பி வந்ததில் இருந்து அதோட மாமா மீனாவுடைய அம்மாவுடன் பேசுறதை நிறுத்திட்டாகளாம். அதுலயும் மீனாவுடைய அப்பாவை ரெண்டாங்கல்யாணம் பண்ணியதும் அப்படி ஒரு தங்கச்சி இருந்ததையே அவர் மறந்துட்டாருன்னு சொல்றாங்க. ஆனா விபத்துல மீனாவோட அப்பாவும் அம்மாவும் இறந்த விஷயத்தை அவுக வீட்டுக்காரர் அவங்களிடம் சொல்லலைன்னு சொல்றாங்க வேலு."
"இதை நாம நம்பணுமா?"
"சத்தியம் பண்ணி சொல்றாங்கப்பா."
"சரி இப்போ திடீர்னு ஏன் வந்திருக்காங்களாம்?"
"அவங்க பையன் வெள்ளக்காரப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறது எனக்குப் பிடிக்கலை, அதான் இந்தியாவுக்கே திரும்பி வந்துட்டேன்னு சொல்றாங்க."
"ஜாதிவிட்டு ஜாதி கல்யாணம் பண்றதே அவ குடும்பத்துல இருக்குற யாருக்குமே பிடிக்கலை, இதுல வேற நாட்டுப் பொண்ண எப்படி ஏத்துப்பாங்க?"
"அதெல்லாம் எனக்குத் தெரியலை வேலு. ஆனால் இங்க இந்தியா வந்த பொறவுதான் மீனாவுக்கு நடந்தது எல்லாம் கேள்விப்பட்டுருக்காங்க. உடனே அவங்க சித்தப்பாவோட ஊருக்கும் போயிருக்காங்க. அந்த ஊரு நாட்டாமை நம்ம அப்பா மீனாவ இங்க நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டாகன்னு சொன்னதைக் கேட்டு நம்ம வீடு தேடி வந்திருக்காங்க. இப்போ மீனாவ என் கையோட கூட்டிட்டுப் போறேன். எனக்கும் என் மகனைத் தவிர வேற யாரும் இல்லை, இப்போ அவனும் எனக்கு இல்லைங்கிற மாதிரி ஆகிடுச்சு. இனி நான் ஒரு அனாதை மாதிரி, அதனால் மீனாவ என் கூட அனுப்பிடுங்க, அவள என் நார்த்தனார் எப்படிப் பார்த்துக்குவாளோ அதே மாதிரி என் மகளாட்டம் பார்த்துக்குறேன்னு சொல்றாங்க. மீனாவ மேற்கொண்டு படிக்க வைக்கிறேன்னு வேற சொல்றாங்க வேலு."
"அதுக்கு மீனா என்ன சொன்னா?"
"அந்தப் பொண்ணு என்ன சொல்லும் வேலு? கையைப் பிசைஞ்சுக்கிட்டு நின்னுச்சு."
"ஏன், போக முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே?"
மகனது இந்த எதிர்பாராத கேள்வியில் முத்தம்மாளுக்குக் கிறுகிறுவென்று தலையே சுற்றும் போல் இருந்தது.
அவளைப் பார்த்ததில் இருந்தே விரட்டுவதில் குறியாய் இருந்தவனிடம் இப்படி ஒரு கேள்வியை அவர் சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை.
பதில் கூற இயலாது அவர் அமைதியாகிவிட, அவரது மௌனத்தின் அர்த்தத்தை வெகு சரியாய் தவறாகப் புரிந்துக் கொண்டவனின் முகம் கோபத்தில் கடுகடுக்க ஆரம்பித்தது.
ஆயினும் இதுவரை அவன் மனதில் என்ன இருக்கின்றது என்று அவனே அறிந்திராத வேளையில் மீனாக்ஷிக்கு மட்டும் எங்கனம் தெரியும்?
அதை ஐபிஎஸ் படித்துக் காவல்துறையில் பெரும் பதவியில் இருக்கும் அந்த மெத்தப்படித்த மேதை அக்கணம் புரிந்துக்கொள்ளவில்லை. அவனது ஏமாற்றமும் ஆங்காரமும் அவன் கண்களையும், புத்தியையும் சேர்த்து மறைத்தது.
தாயும் பிள்ளையும் சற்று நேரம் பேசாமல் மௌனத்தைக் கட்டிக்கொண்டு நிற்க, என்ன நினைத்தாரோ திடீரென்று வேறு ஒரு பேச்சைத் துவங்கிய முத்தம்மாளின் மீது மட்டுமல்ல, அந்தப் பேச்சினால் அப்பா மார்த்தாண்டத்தின் மீது வெகு ஆவேசம் வந்தது சக்திவேலுக்கு.
"வேலு, அப்புறம் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி அப்பா பேசச் சொன்னாகப்பா?"
இதுக்கும் மேலாக முக்கிய விஷயம் இருக்க முடியுமா என்று அவன் சலித்துக் கொண்டிருக்க, அவரே தொடர்ந்தார்.
"நம்ம சுந்தரவாடி ஜோசியர் மூணு நாளைக்கு முன்னாடி வந்துட்டுப் போனாருப்பா."
அவர் ஆரம்பித்ததுமே மிச்சம் சொச்சமாய் இழுத்து வைத்திருந்த பொறுமையைக் காற்றில் அதிவேகமாய்ப் பறக்கவிட்டான் சக்திவேல்.
"ம்மா, எனக்கு நிறைய வேலை இருக்கு. நீங்க உங்க ஜோசியக் கதையை வேற யார்கிட்டவாவது பேசிக்கோங்க."
"கொஞ்சம் பொறுமையா கேளுப்பா. இது உன் கல்யாணம் விஷயம்பா?"
அவன் மனதிற்குள் அவனே உணர்ந்துக்கொள்ளாத, அழகாய் எழும்பத் துவங்கியிருந்த கனவுக் கோட்டை சல்லடைத் துளிகளுக்குள் புகுந்தது போல் உதிர்ந்து கொண்டிருக்க, இதனில் மீண்டும் கல்யாணத்தைப் பற்றிப் பேச வருபவரை நினைத்து ஏகத்துக்கும் எரிச்சல் விரவ, "ப்ச், அதைப் பத்தி எல்லாம் ரொம்ப யோசிக்காதீங்க, எனக்கு எப்ப வேணுமோ, அப்ப நானே அதைப் பத்திப் பேசுறேன்." என்றான் வெடுக்கென்று.
"நானும் அதைப் பத்தி தான்பா பேச வந்தேன்."
"வாட்? ஐ மீன், எதைப் பத்தி?"
"சுந்தரவாடி ஜோசியர்கிட்ட உன் ஜாதகத்தை அப்பா கொடுத்திருந்தாங்க. அவர் வந்துட்டுப் போனப்போ, இப்போதைக்கு உன்னோட கல்யாணத்தைப் பத்தி பேசவே வேணாம்னு சொல்லிட்டாருப்பா?"
"ரொம்பச் சந்தோஷம்."
"என்னப்பா இப்படிச் சொல்ற? அவர் சொன்னது வாரக்கணக்கா மாசக்கணக்கா இல்லை. வருஷக்கணக்கா சொல்றாரு. குறைஞ்சது ரெண்டு வருஷத்துக்கு உன்னோட கல்யாணப் பேச்சையே எடுக்காதீங்கன்னு பிடிவாதமா சொல்லிட்டுப் போயிட்டாருப்பா."
"சரி, அப்ப ஆளைவிடுங்க."
"வேலு, உனக்கு இப்பவே வயசு இருபத்தி ஒன்பது ஆகிடுச்சு. இன்னும் ரெண்டு வருஷம்னா? இதுல பாலாவுக்கும் வயசாகிட்டே போகுதுல்ல?"
"அப்ப பாலாவுக்கு முதலில் முடிச்சிடுங்க, அதான் அவனுக்குன்னு ஒருத்தி ரெடியா இருக்காளே?"
"நீ இந்த வீட்டுக்கு மூத்தப்புள்ளப்பா."
"ஏன் இளையவனுக்குக் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் மூத்தவனுக்குச் செய்யக்கூடாதா? இல்லை செய்யக்கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா?"
வெடுக்கென்று கேட்டவனின் தோரணையில் முத்தம்மாளின் தாயுள்ளம் வாடியது. ஆயினும் அவன் மறுமுனையில் பட்ட வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அவர் அறியவில்லையே!
"என்னப்பா இப்படிப் பேசுற? உங்க சட்டத்தை வீட்டுக்குள்ளேயும் குடும்பத்துக்குள்ளேயும் கொண்டு வராத வேலு."
"சரிம்மா, இதைப் பற்றிப் பிறகு பேசுவோம். நான் வச்சிடுறேன்."
அதற்கு மேல் பொறுமை இல்லாதவனாய் அழைப்பைத் துண்டித்தான்.
பட்டென அலைபேசியை வைத்துவிட்டவனின் வேகத்தில் முகம் கசங்க திரும்பிய முத்தம்மாளுக்கு, சில அடிகள் தொலைவில் நின்றிருந்த மீனாக்ஷியின் கலங்கிய கண்கள், தான் சக்திவேலிடம் பேசியதை அவள் கேட்டுவிட்டாள் என்பதை விளக்கியது.
ஆனால் மீனாக்ஷியின் வலியோ வேறு!
துவக்கத்தில் இருந்தே முத்தமாளின் ஒரு பக்க பேச்சினை மட்டும் கேட்டுக் கொண்டிருந்த மீனாக்ஷிக்கு, சக்திவேலின் எண்ண ஓட்டங்களும், அவன் தன்னைப் பற்றிப் பேசும் போதும், திருமண விவகாரத்திலும் எதற்கு இவ்வளவு கோபப்படுகின்றான் என்பது புரியாமல் போனதில் விசித்திரம் என்ன?
'ஆக, அவர் அடியோடு என்னை வெறுப்பதை இன்னும் நிறுத்தவில்லை. இக்கணம் வரை நான் அவர் வீட்டில் இருப்பதும் அவருக்குப் பிடிக்கவில்லை.'
உள்ளம் குமைந்தது.
குடியிருக்கக் கூடு இல்லாமல் பறந்துத்தவித்த பறவைக்கு, ஏதோ தொலைதூரத்து மரத்தில் என்றோ கட்டப்பட்ட புதுக்கூடு பாதுகாப்பானதாக விளங்கிய நிலைமைக்கு அவள் தற்பொழுது தள்ளப்பட்டாள்.
அடுத்து வந்த சில நாட்களில் கண்ணீரோடு முத்தம்மாளைக் கட்டி அணைத்து விடைபெற்றவளின் மனம் மட்டும் ஒரு இடத்தில் நிலைக்காது அல்லாடியது.
இது என் வீடு என்பது போல் சில மாதங்களாக வலம் வந்தவளுக்கு மார்த்தாண்டத்தின் குடும்பத்தினரையும், பணியாட்கள் பண்ணை ஆட்கள் என்று அனைவரின் மேலும் அதீத அன்பு வைத்திருந்ததால் அவர்களையும் விட்டுப் பிரிய மனமே வரவில்லை.
ஆயினும் எந்த நேரத்தில் அந்தச் சின்ன ஐயா என்ன செய்வாரோ? எப்பொழுது என்னை மீண்டும் கைப்பற்றி இந்த வீட்டை விட்டு விரட்ட முனைவாரோ என்று எந்நாளும் கதிகலங்கி இருப்பதைவிட, தன் பிறந்தவிட்டு ஒரே சொந்தமான அத்தையின் அநாதரவான நிலையும், பிள்ளையால் கைவிடப்பட்ட தாயைப் போல் தன்னை ஏக்கத்துடன் பார்த்த அவரது தோற்றமும் மீனாக்ஷியை அந்த முடிவு எடுக்க வைத்தது.
மருதூர்குளத்தில் இருந்து தூத்துக்குடிக்கு அவளது அத்தையுடன் (மாமன் மனைவி) பயணத்தைத் துவங்கினாள்.
அங்கு அவளுக்கு நேரப் போகும் பெரும் அவலம் தெரியாமல்!
அதனால் பலரது விதியே மாறப் போகின்றது என்பதையும் அறியாமல்!
தூத்துக்குடி நகரத்தில், அத்தை ஹேமாவதியின் வீட்டை அடைந்த மீனாக்ஷிக்கு, சிறிய ஆனால் அனைத்து வசதிவாய்ப்புகளுடன் அமைக்கப்பட்டிருந்த அவ்வீடு ஏதோ ஒரு விதத்தில் திருப்தியுடன் ஒரு உரிமையையும் கொணர்ந்தது.
கொண்டு வந்திருந்த பெட்டிகளை அவளுக்கென்று அவள் அத்தை ஒதுக்கிக் கொடுத்த அறையில் வைத்தவளின் கண்களை, அங்கு அலமாரியில் அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் கவர, அதனில் "Whispers from the Shadows" என்ற புத்தகத்தின் அட்டைப்படம் பெருமளவு ஈர்த்தது.
எடுத்துப் பார்க்க, அப்புத்தகம் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பு என்பதை உணர்ந்துக் கொண்டவளாய் பக்கங்களைப் புரட்ட, ஒரு கவிதையின் தலைப்பில் அவள் பார்வை நிலைத்தது.
ஆயினும் ஆங்கில அறிவு அந்தளவிற்கு இல்லையென்பதால் புத்தகத்தை மூடி வைக்க, ஒருவேளை அவளுக்கு அந்தக் கவிதைப் புரிந்திருந்தால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்திருப்பாளோ என்னவோ!
Destiny’s Shadow
She thought she was escaping her past,
But some destinies are written in blood and shadow,
Where memories fade, but the scars last—
A haunting truth that no one can outgrow.
She didn’t know the city had teeth,
Its hunger lurking beneath the streets,
A silent whisper, a cold deceit,
Waiting patiently where darkness meets.
She left her past behind, believing in light,
Not knowing her future had already been claimed,
By something worse than the darkest night—
A fate sealed and forever framed.
She thought she was chasing a new beginning,
But something dark had been waiting all along,
Where the echoes of her hopes were thinning,
And all her dreams turned into a song of wrong.
அக்கவிதை துல்லியமாக அவளது தலையெழுத்தை எடுத்துரைத்ததை அவள் அன்று அறியவில்லை.
தொடரும்.
References:
The analyses of the barnacles [present on the corpse aided in the evaluation of the floating time of the corpse which assisted in estimating the minimum time since death.
Poem translation:
விதியின் நிழல்
அவள் தனது கடந்தகாலத்தில் இருந்து தப்பிப்பதாக நினைத்தாள்,
ஆனால் சில விதிகள் இரத்தத்திலும் நிழலிலும் எழுதப்படுகின்றன,
எங்கு நினைவுகள் மங்கினாலும், காயங்கள் நிலைக்கும்.
அது ஒரு பயங்கரமான உண்மை, யாரும் அதனை மிஞ்சமுடியாது.
அவள் ஊருக்குள் பற்கள் இருந்ததை அறியவில்லை,
தெருக்களுக்கு அடியில் பதுங்கியிருக்கும் அதன் பசி,
ஒரு அமைதியான சத்தம், ஒரு குளிர்ந்த ஏமாற்றம்,
இருள் சந்திக்கும் இடத்தில் காத்திருக்கும்.
அவள் தன் கடந்த காலத்தை விட்டுவிட்டு, ஒளியை நம்பினாள்,
ஆனால் அவள் எதிர்காலம் ஏற்கனவே பிடிக்கப்பட்டிருப்பதை அறியவில்லை,
இருண்ட இரவை விட மோசமான ஒன்றால்.
அவளது விதி ஏற்கனவே நியமிக்கப்பட்டுவிட்டது.
அவள் ஒரு புதிய தொடக்கத்தைத் துரத்திக் கொண்டிருப்பதாக நினைத்தாள்,
ஆனால் ஏதோ ஒரு இருண்ட உணர்வு எல்லா நேரங்களிலும் காத்திருந்தது,
அவளுடைய நம்பிக்கைகளின் எதிரொலிகள் மெலிந்து கொண்டிருந்த இடத்தில்,
அவளுடைய கனவுகள் அனைத்தும் தவறான பாடலாக மாறியது.