JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

'Meenakshi - Shakthivel' - Episode 3

JLine

Moderator
Staff member
1745861741177.jpeg
1745861777950.jpeg

மீனாக்ஷி - சக்திவேல்

அத்தியாயம் - 3

You often meet your fate on the road you take to avoid it.

- Jean de la Fontaine⁣

***************************************

முத்தம்மாளுக்கு அருகில் கைகள் இரண்டையும் கோர்த்துப் பிடித்து, விரல்களைப் பிசைந்தவாறே நின்ற மீனாக்ஷியின் காதுகளில் சக்திவேலின் வார்த்தைகள் சற்று மந்தமாய்த்தான் விழுந்தன.

அதனுடன் முத்தம்மாளின் முகமும் மாறுவதைக் கண்டவளுக்குத் தன்னிலைத் தெளிவாய் புரிய, கண்கள் கலங்க ஆரம்பித்தன.

"வேலு, நான் சொல்ல வர்றதை கொஞ்சம் பொறுமையா கேளுப்பா.."

"ம்ப்ச். நான் ஊருக்கு வர்றப் போவதை சொல்றதுக்காகத் தான் கூப்பிட்டேன். வேற ஒண்ணும் இல்லை. கொஞ்சம் பிஸியா இருக்கேன், ஊருக்கு வந்ததுக்கு அப்புறம் மற்றதைப் பேசிக்கலாம். ஆனால் முதலில் அந்தப் பொண்ணை அப்பா எங்க இருந்து கூட்டிட்டு வந்தாரோ அங்கேயே அனுப்பி வைக்கச் சொல்லுங்க. நான் வைச்சிடுறேன்."

கூறியவன் அவரது பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் தொலைபேசியைத் துண்டித்துவிட, மீனாக்ஷியின் நிலையை நினைத்து முத்தம்மாளிற்குத் தான் பரிதாபமாகிப் போனது.

விழிகளில் நீர் ததும்ப அருகில் நின்றுக் கொண்டிருப்பவளின் தோள் பற்றியவராய், "மீனா, நீ எதுக்கும் கவலைப்படாத. நான் பார்த்துக்குறேன். நீ போய் மத்த வேலையைப் பாரு.." என்று அனுப்பி வைத்தவர் கணவருக்கு அழைத்தார்.

முற்றத்தின் மத்தியில் சற்றுமுன் உலர வைத்துக் கொண்டிருந்த மிளகாயை ஒரு முறைத் திரும்பிப் பார்த்தவள், முத்தம்மாள் மார்த்தாண்டத்தை அழைக்கவும், அவருக்குத் தனிமைக் கொடுக்க விரும்பி பின்கட்டிற்குச் செல்ல, கணவரிடம் நடந்ததை விவரிக்க ஆரம்பித்தார் முத்தம்மாள்.

"நா அப்பவே சொன்னேன், நீங்க கேட்கலை. பாருங்க இப்ப ஒரேடியா அந்தப் பொண்ணை அனுப்பி வைங்கன்னு சொல்லிட்டு போனையும் படக்குன்னு வச்சிட்டான்."

"முத்து, நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன். நீ மீனாவிடம் கவலைப்பட வேணாமுன்னு சொல்லு."

"சொல்லிருக்கேங்க, ஆனா நம்ம வேலுவை மீறி.."

முடிக்காது இழுத்தவரை மார்த்தாண்டம் கடிந்து கொண்டார்.

"முத்து, உனக்கு நான் புருஷன், முதலில் நான் சொல்றதை நீ கேளு. அப்புறம் உன் மகனைப் பத்தி பேசு, புரியுதா?”

"ஆமா, எல்லாம் புரியுது. ஆனால் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில மாட்டிக்கிட்டுத் திண்டாடுறது நான்தான.."

"நீ ஒன்னும் திண்டாடவெல்லாம் வேண்டாம், நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன். நீ போய் உன் வேலையைப் பாரு."

மகனுக்குச் சளைத்தவனல்ல நான் என்பது போல் மார்த்தாண்டமும் வேகமாய் அழைப்பைத் துண்டித்தவர் தன் மூத்த மகனை சரிகட்டும் விதங்களை யோசிக்கத் துவங்க, அவருக்குமே அவனது பிடிவாதத்தையும், ஆங்காரத்தையும் நினைத்ததில், மீனாக்ஷியின் எதிர்காலத்தை நினைத்து சற்றுக் கலக்கம் வரத்தான் செய்தது.

ஆயினும் வீட்டிற்கு மூத்த தலைவராக அவனா நானான்னு பார்த்துடுவோம் என்று அவர் இருக்க, ஆனால் மறுநாளே தூத்துக்குடியில் நடந்தேறிய மற்றுமொரு கொலை வழக்கில் விசாரணைக்கென்று இறங்கிய சக்திவேல், கிராமத்திற்குச் செல்வதையே மறந்துப் போனதில், மார்த்தாண்டம் உட்பட அனைவருமே சிறிது நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

அந்தச் சிறு நிம்மதியுடன் பெரு வேண்டுதலையும் இணைத்து, அவர்களின் குலதெய்வமான ராஜகாளியம்மனின் கோயிலுக்குச் செல்லக்கூடிய சூழ்நிலை எப்பொழுது ஏற்படுகின்றதோ அப்பொழுது எடுத்துச்செல்லலாம் என்று எண்ணியவராய் ஒரு மஞ்சள் நிற துணியில் காணிக்கையை முடிந்து வைத்தார் முத்தமாள்.

ஆனால் அதற்கான நேரம் வருவதற்குள் அவரின் மூத்த வாரிசினால் அவரும் என்னென்ன அவஸ்தைப்படப் போகின்றார் என்பதை அக்கணம் அவர் அறியவில்லை!

********************************

Jilted lover stabs classmate to death, commits suicide.

கரும்பூர்பட்டிச் சேர்ந்த அயூப் என்பவரின் மகனான அஜ்மல் தனது வகுப்புத் தோழியான ஜெனிஃபர் டிசோசாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, பிறகு தன் மேலும் தீ வைத்துக் கொண்டு இறந்து போனார்.

கத்தியால் குத்தப்பட்டுப் படுகாயமடைந்த ஜெனிஃபரை வீட்டின் நடுவரைக்கு இழுத்துச் சென்று அவர் மேல் மண்ணெண்ணெய் ஊற்றிய அஜ்மல், பிறகு கேனில் இருந்த மண்ணெண்ணெய்யை தன் மீதும் ஊற்றி, இருவரையும் சேர்த்து தீ வைத்துக்கொண்டார்.

மாலையில் மகளின் அலைபேசிக்கு அழைத்துப் பேசும் பழக்கத்தைக் கொண்ட ஜெனிஃபரின் தந்தை திரு ஜார்ஜ் டிசோசா, 5 மணிக்கு மேலாகியும் மகள் தனது அழைப்பிற்குப் பதிலளிக்காததைக் கண்டு வீட்டிற்குத் திரும்பியவர் தீயில் கருகி இறந்துக் கிடக்கும் மகள் ஜெனிஃபரையும், அவரைக் கட்டிப்பிடித்தவாறே உயிரற்ற சடலமாகக் கருகிப்போய்க் கிடந்த இளைஞனையும் பார்த்தவர் பதறித் துடித்துப் போய்க் காவல்நிலையத்திற்கு அழைத்திருக்கின்றார்.

'விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. குற்றம் நடந்த இடத்தைத் தடயவியல் நிபுணர்கள் பார்வையிட்டுக் கொண்டிருக்கின்றனர். தூத்துக்குடி SP ரமணன், ASP சக்திவேல், கரும்பூர்பட்டி இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் குற்றம் நடந்த இடத்திற்குச் சென்றுள்ளனர். இறந்த இருவரும், GUP கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதுகலைப் பட்டதாரி மாணவர்கள், ASG கல்லூரியில் வணிக மேலாண்மை இளங்கலைப் படித்தவர்கள். ஜெனிஃபர் மாஸ்டர் ஆஃப் இன்டர்நேஷனல் பிசினஸில் முதலாம் ஆண்டு மாணவி. இவரது தந்தை ஜார்ஜ் டிசோசா கேரளாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்.'

அன்று தூத்துக்குடியை அலறச் செய்த செய்திகள் இவையே!

பெரும் வசதியானவர்கள் குடியிருக்கும் அந்தப்பகுதியில், அரண்மனைப் போன்ற வீட்டின் நடு அறையில் கருகிப்போன நிலையில் சடலமாகக் கிடந்த ஜெனிஃபர், அஜ்மல் இருவரின் அருகில் ஒற்றைக் காலை மடித்துக் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த சக்திவேலின் புருவங்கள் இடுங்கி இருந்தன.

"என்ன சக்திவேல்? Anything suspicious [ஏதாவது சந்தேகம்]?"

SP-யின் கேள்விக்கு, "பொண்ணு மட்டும் கொலை செய்யப்படலை, பையனையும் யாரோ கொலை செய்து தான் போட்டிருக்காங்க." என்று சக்திவேல் பதிலளித்ததில் அதிர்ச்சியடைந்தனர் அங்குக் கூடியிருந்த அதிகாரிகள்.

"வாட்?"

"யெஸ்..."

ஏறக்குறைய முக்கால்வாசி நெருப்பில் எரிந்துக்கிடக்கும் சடலங்களைக் கூர்ந்துப் பார்த்தவாறே அருகில் நின்றிருக்கும் தடயவியல் நிபுணரிடம் இருந்து கையுறையையும் ட்வீசரையும் [Disposable tweezers] வாங்கிய சக்திவேல், கையுறையை அணிந்தவனாய் ட்வீசரைக் கொண்டு அஜ்மலின் உடலில் கருகி இருந்த துணியின் ஒரு பகுதியை சற்றே உயர்த்தினான்.

"ஏதாவது தடயம் இருக்கா?"

"யெஸ். ஜெனிஃபர் இவனது லவ்வை ரிஜெக்ட் பண்ணிட்டான்னு அவளைக் குத்த வந்தவன் இந்த அஜ்மல். ஆனால் இந்த இடத்தைப் பார்த்தால் இவனையும் கத்தியால் முதலில் யாரோ குத்தியிருக்காங்க. கெரஸின் ஊற்றித் தற்கொலை செய்துக்கணும்னு நினைக்கிறவன் ஏன் தன்னைத் தானே கத்தியால் குத்திக்கணும்?"

“ஒரு வேளை ஜெனிஃபர் இவனைக் குத்தி இருக்கலாமில்லையா சக்திவேல்?”

“வாய்ப்பில்லை. இவனுடைய உடம்பில் இருக்கும் கத்திக்குத்துக்கள் ரொம்ப ஆழமாக இருக்கு. அதே நேரம் ஒரே இடத்தில் திரும்பத் திரும்பக் குத்தின மாதிரி கோரமாவும் இருக்கு. ரொம்ப ஆக்ரோஷத்துடன் யாரோ குத்தியிருக்காங்க. ஸோ, நிச்சயம் ஜெனிஃபர் மாதிரியான உடல்வாகு உள்ள பெண்ணால் அவ்வளவு ஆழமா ஒருத்தனை குத்த முடியாது.”

கூறியவனாய் அருகில் நின்று கொண்டிருந்த புகைப்பட நிபுணரை தலை அசைத்து வரச்சொன்னவன், "இந்தப் பையனோட உடலை ஒரு இடம் கூடப் பாக்கி இல்லாமல் ஃபோட்டோஸ் எடுங்க, க்ளோஸப் ஷாட்ஸ் எனக்கு வேணும்." என்றவாறே எழுந்து நின்றான்.

“அப்போ இவனை வேற யாரோ கத்தியால் குத்தி இருக்கணும்னு சொல்றீங்களா சக்திவேல்?”

"யெஸ், ஜெனிஃபரையும் இவன் தான் கொலை செய்தானா, இல்லை ரெண்டு பேரையும் யாரோ கொலை செஞ்சுட்டு, இவனுடைய இறப்பும் தற்கொலை மாதிரி தெரியணும்னு செட் பண்ணிருக்காங்களான்னும் கண்டுப்பிடிக்கணும். அதே போல் இந்தச் சூசைட்-மர்டர் நோட்ஸையும் ரிஸேர்ச் பண்ணணும். எனக்குத் தெரிஞ்சு ஒண்ணு இவனை மிரட்டி யாராவது தற்கொலையைப் பற்றிக் குறிப்பு எழுத சொல்லிருக்கணும். அல்லது இவனைப் போல் வேற யாராவது எழுதி இங்க விட்டுட்டுப் போயிருக்கணும். But this is not a suicide. It is a murder. Could be double murders. [ஆனால் இது தற்கொலை அல்ல, கொலை, இரட்டைக் கொலையாக இருக்கலாம்.]"

சக்திவேல் கூறியதுமே அங்குக் கூடியிருந்த அனைத்து காவலர்களையும் நிபுணர்களையும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தொற்றிக் கொண்டது.

சமீபகாலமாக எத்தனை கொலைகள்?? அனைத்துமே இது போன்று இருபத்தி ஐந்து வயதுக்குட்பட்ட இளைஞர்கள்.

ஆனால் இன்றைய கொலைகளில் ஒரு சிறு மாற்றம், கொலை செய்யப்பட்டிருப்பவர்களில் ஒருவர் இளம்பெண்.

சடச்சடவென நெருப்பாய் கொலை விவரங்கள் தூத்துக்குடி மாவட்டம் முழுக்கப் பரவ, இருபதுகளில் இளைஞர்கள் இருக்கும் வீட்டில் பெரியவர்களுக்கும் பயம் தொற்றிக் கொண்டது.

ஒவ்வொரு நாளும் கல்லூரிக்கும் வேலைகளுக்கும் சென்று வரும் தங்களின் இளம் பிள்ளைகள் வீட்டிற்குத் திரும்பி வரும் வரை வயிற்றில் நெருப்பைக்கட்டிக் கொண்டது போல் அரண்டுப் போய் இருந்தனர் அவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும்.

கடந்த ஆண்டு மட்டும் இது போல் ஏறக்குறைய ஆறு இளைஞர்கள் கொலையுண்டு இருந்தனர்.

இப்பொழுது மேலும் மூன்று கொலைகள் என்று தகவல்கள் வெளிவர, நடந்து முடிந்திருக்கும் ஒன்பது கொலைகளையும் பற்றிய உண்மைச் செய்திகள் அனைத்து ஊடகங்களிலும், இணையத்தளங்களிலும் வைரலாகப் பரவி கொண்டிருக்க, இறுதியில் அன்றைய தலைப்புச் செய்தியாகத் தூத்துக்குடி மாவட்ட மக்களை உறுத்தியது இருவார்த்தைகள்.

'Serial Killer'

ஜெனிஃபர், அஜ்மல் கொலைகள் நடந்து இன்றுடன் ஏறக்குறைய இருவாரங்கள் கடந்துவிட்ட நிலையில், கொலையாளி எப்பொழுது பிடிபடுவான் என்று அனைவருமே திகிலில் மூழ்கியிருக்க,

"ஏற்கனவே ஏழு பேர் கொலை செய்யப்பட்டிருக்காங்க, ஆனால் அவர்கள் எல்லாருமே இளைஞர்கள். இப்போ கொலை செய்யப்பட்டு இறந்திருப்போர் ரெண்டு பேர், ஆனாலும் அதில் ஒருவர் பெண். இதுல சீரியல் கில்லர் மாதிரியான விஷயங்களையும் நியூஸஸும், யூ டியூப் சேனல்ஸ் பலதும் வெளியிட்டுட்டு இருக்கு. ஆனால், எப்படி அந்த ஏழு கொலைகளுக்கும், இந்த இரண்டு கொலைகளுக்கும் சம்பந்தம் இருக்க முடியும்னு சொல்றீங்க?" என்ற நிருபரின் கேள்விக்கு வழக்கம் போல் எரிச்சலுடனே பதில் கொடுத்தான் சக்திவேல்.

"சொல்றது மீடியாஸ் தானே, அப்ப இந்தக் கேள்வியை ரிப்போர்டர்ஸான நீங்க உங்கக்கிட்டேயே கேட்க வேண்டியது தான்."

"சார், ஓரளவுக்கு எல்லா மீடியாஸும் இதைப் பற்றித் தான் பேசுறாங்க. இதுல ஃபேமஸ் சோஷியல் மீடியா நெட்வொர்க்ஸும் இதைத்தான் அலசிட்டு இருக்காங்க. அதனால் இனி போலீஸ் டிப்பார்ட்மெண்ட் மறைச்சு பயனில்லை. இது ஒரு சீரியல் கில்லரோட வேலையா இருந்தால் பொதுமக்களை எச்சரிக்கிறது உங்க கடமை இல்லையா?"

"இது சீரியல் கில்லரோட வேலைன்னு எப்படி இவ்வளவு உறுதியாச் சொல்றீங்க?"

தன்னைக் கேள்விக் கேட்ட நிருபரை கடுப்புடன் எதிர்கேள்விக் கேட்டான் சக்திவேல்.

ஆனால் ஒரு விநாடி கூடத் தாமதிக்காமல் அவர் கடகடவெனப் பதில் கூறினார்.

"Signature sir. ஒரு தொடர் கொலையாளியின் கையொப்பம் அப்படிங்கிறது ஒரு தனித்துவமான நடத்தை அல்லது செயல் ஆகும். கொலை செய்யப்பட்டவங்களோட உடல்களை ஒரு குறிப்பிட்ட வழியிலோ அல்லது இடத்திலோ கொலையாளி நிலைநிறுத்தலாம். அல்லது கொலை செய்யப்பட்டோரின் உடலில் எதையாவது செதுக்குவது போலச் சிதைக்கலாம். இறந்துப் போனவர்களைக் கொலையாளி மீண்டும் மீண்டும் அடிப்பது போலச் சித்திரவதையும் செய்யலாம். பலாத்காரம் போன்ற வண்கொடுமைச் செயலால் பாதிக்கப்பட்டவரைக் கொல்லத் தேவையில்லாத பிற செயல்களையும் செய்து கடைசியில் அவங்களைக் கொலை செயலாம்."

"ஆக, எல்லாத்தையும் நீங்களே முடிவே செய்துட்டீங்க."

"அது மட்டும் இல்லை சார்.. A serial killer is loose upon the streets of Tuticorin district. அல்லது கொலையாளி ஒருவருக்கு மேற்பட்டவர்களா இருக்கலாம் அப்படின்னு பேசிக்கிறாங்க. பொதுமக்களுக்கு எவ்வளவு அதிர்ச்சி தரும் செய்தி அது. ஸோ, அதைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்கன்னு எங்களுக்குத் தெரியணும் சார்."

அந்த நிருபரின் கூற்றில் ஏற்கனவே மேலிடத்தில் இருந்து வரும் அழுத்தத்திலும், சில முட்டாள்கள் இணையத்தளங்கள் முழுவதிலும், எல்லாமே தெரிந்த மாதிரி அவரவர் கருத்துக்களைக் கூறுவதில் கோபத்திலும் இருந்த சக்திவேலின் முகம் இப்பொழுது மேலும் கருத்தது.

அவனது அடர்ந்த மீசைக்குக் கீழ் இறுகிப் போய்க் கிடந்த உதடுகளின் கடைகோடி மென்மையாய் சிறுநகையில் வளைய, நெற்றிப் பொட்டைத் தேய்த்தவனாய் கூர்ந்து நிருபரைப் பார்த்தவன், "இதுவரை நடந்த அனைத்து கொலைகளையும் செய்திருப்பது ஒருத்தரா அல்லது வெவ்வேறு மனிதர்களான்னு இன்னும் கண்டுப்பிடிக்கப்படலை. அதே போல் இதுல சீரியல் கில்லர் சம்பந்தப் பட்டிருப்பாங்களாங்கிற கேள்விக்கும் என்னால் பதில் சொல்ல முடியாது. ஆனாலும் பொதுமக்கள் கொஞ்சம் கவனத்துடன் இருப்பது நல்லது. குறிப்பாக இளைஞர்கள்.."

கூறியவன் மேலும் கேள்விகள் தொடுத்த நிருபர்களிடம் போதும் என்பது போல் கையை மட்டும் காட்டிவிட்டு விடுவிடுவென்று தன் அலுவலகத்திற்குள் நுழையும் வேளை, அவனை எதிர்கொண்டான், Deputy Superintendent of Police ஆகப் பணி புரியும் யுகேந்திரன். சுருக்கமாக யுகா.

சக்திவேலின் பதவிக்கு அடுத்த நிலையில் (கீழ்) இருப்பவன். ஏறக்குறைய சக்திவேலின் வயதையும் ஒத்தவன்.

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் நடத்தப்பட்ட பொழுது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

பிறகு அது நட்பாக வளர்ந்த நிலையில், விதி அவர்களை ஒன்றிணைத்தது, கிளர்ச்சியாளர்களைக் களையெடுக்கும் ‘Operation Ace of Spades’ என்ற அதிரடி நடவடிக்கையில் பங்குப் பெற்ற பொழுது.

Frightful, fierce, raging [பயங்கரமான, கடுமையான, பொங்கி எழும்] என்று பெயர் எடுத்திருக்கும் சக்திவேலும், பரபரப்பான சூழ்நிலையிலும் நிதானத்தைக் கைவிடாதவன் என்ற பெயர் எடுத்திருக்கும் யுகேந்திரனும் Operation Ace of Spades-ல் பெரும் பங்கு வகித்தனர்.

அதற்குப் பிறகு இருவரும் வெவ்வேறு மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யப்பட, இப்பொழுது மீண்டும் ஒன்றிணைந்திருப்பது தூத்துக்குடியில் தான்.

"என்ன சக்தி? காலையிலேயே அந்த ரிப்போர்ட்டர் உன்னைக் கடுப்பேத்திட்டான் போலருக்கு?"

"அவனெல்லாம் எங்க இருந்து வர்றான் யுகா? ஏதோ புதுச் சேனலோட பெயர் போட்டிருக்கு. இல்லை யூடிபரா? அவனுக்குத் தான் எல்லாமே தெரியுங்கிற மாதிரி பேசுறான். இதுல சீரியல் கில்லர்ன்னா யாருன்னு எனக்கே விளக்கம் வேற சொல்றான். இவ்வளவு தெரிஞ்சவன் அப்படின்னா அவனே இன்வெஸ்டிகேட் பண்ணி கொலைக்காரர்களைக் கண்டுப்பிடிக்க வேண்டியது தானே. A real knucklehead. "

"அந்தத் தைரியம் அவனுக்கு இருந்திருந்தால் அவன் இந்நேரம் போலீஸ் டிப்பார்மெண்டில் வேலை செய்திருப்பானே."

"பட் நான் இங்க ட்ரான்ஸ்ஃபர் ஆகி வந்ததில் இருந்து பார்க்குறேன், சரியா என் ஆஃபிஸ் முன்னாடியே நின்னுட்டு இருக்கான். நான் எப்ப வருவேன், என்னிடம் கேள்விக் கேட்கலாம்னு காத்துட்டு இருப்பான் போல இருக்கு. ஓங்கி ஒரு அறைவிடலாமான்னு இருக்கு."

"விடு சக்தி. பட், இந்தக் கொலைகளைப் பற்றி, ஐ மீன் இது சீரியல் கில்லரோட வேலையா இருக்கலாம்ன்னு நீயும் நினைக்கிறியா?"

"யெஸ், ஆனா சீரியல் கில்லர் இல்லை யுகா.. கில்லர்ஸ்.."

அவனது பதிலில் சக்திவேலுக்கு முன்புறம் நடந்தவனாய் அவனது அறைக்குள் நுழைந்துமே இருக்கையில் அமரப் போன யுகேந்திரன் உட்காராது படீரென்று தனக்குப் பின்னால் நிற்கும் சக்திவேலின் புறம் திரும்பினான்.

"சக்தி, என்ன சொல்ற?"

"நிச்சயமா இந்தக் கொலைகளை ஒருவன் மட்டும் செய்திருக்க முடியாது யுகா."

"ஏன் சக்தி, கடைசியா நடந்த இரட்டைக் கொலைகளை வச்சு சொல்றியா?"

"நோ."

"பிறகு எப்படி? ஜெனிஃபரையும் அஜ்மலையும் கொலை செய்தவங்க ஒருத்தரா இருக்க முடியாதுன்னு வேணா சொல்லலாம், ஆனால் முன்ன நடந்த கொலைகள்?"

"யுகா, கொலைகள் நடந்த patterns, ஐ மீன் முறைகள் வெவ்வேறு மாதிரியா இருந்தாலும், அது ஒருத்தர் மட்டும் செய்திருக்க முடியாதுங்கிற மாதிரி சில எவிடன்ஸஸ் கிடைச்சிருக்கு. குறிப்பா வைன்-ல் [wine] பாய்சன் கலந்து குடிச்சி இறந்துப் போன விஜய், இருபத்தி இரண்டு வயது காலேஜ் ஸ்டூடண்ட்."

"அதாவது விஜய்க்கு ஆல்கஹால் பழக்கமே இல்லைன்னு அவங்க பேரண்ட்ஸ் சொன்னாங்க. ஆனால் வைன்-ல் பாய்ஸன் கலந்து அதைக் குடிச்சு இறந்துப் போயிருக்கான். அதனால அதைக் கொலைன்னு ஓரளவுக்குச் சொல்லலாம். அது மட்டும் இல்லாமல் அவனது நகங்களுக்கு அடியில் இருந்த ஸ்கின் செல்ஸ் டி.என்.ஏ டெஸ்டில் அவனது டி.என்.ஏ-விற்கு ஒத்துப்போகலை. ஸோ, இது தற்கொலை இல்லை கொலைன்னு நீ ப்ரூவ் பண்ணிட்ட. ஆனால் கொலை செய்தது ஒருத்தர் மட்டும் இல்லைன்னு எப்படிச் சொல்ற?"

யுகேந்திரன் கேட்க அவனை இருக்கையில் அமரச் சொன்னவனாய் தானும் தன் நாற்காலியில் அமர்ந்த சக்திவேல் சில விநாடிகள் யோசனையில் ஆழ்ந்தது போல் உட்கார்ந்திருந்தவன் பின் தொடர்ந்தான்.

"யுகா, வைன் பாட்டிலை கார்க் ஸ்க்ரூ [corkscrew] கொண்டு தான் விஜய் திறந்திருக்கான். பாட்டிலிலும் கார்க் ஸ்க்ரூவிலும் அவனுடைய கைரேகை மட்டும் தான் இருந்தது. ஆனால் அந்த ரூமில் ஒரு மூளையில் கிடந்த கார்க்கில் [cork] இருந்த கைரேகை வேற. அதுவும் இல்லாமல் அந்தக் கைரேகையில் இருக்கும் டி.என்.ஏ-வும், விஜய்யின் நகங்களுக்கு அடியில் இருந்த ஸ்கின் செல்லில் [தோல் உயிரணு] இருந்த டி.என்.ஏ-வும் வேற வேற. அப்படி வச்சுப் பார்க்கும் போது நிச்சயமாய் விஜயை ஒருத்தன் மட்டும் கொலை செய்திருக்கும் வாய்ப்பே இல்லை. அங்க வேற ஒருத்தன் இருந்திருக்கான். அந்த டி.என்.ஏ, ஒண்ணு கொலைக்காரணுடையதா இருக்கலாம், அல்லது கொலையாளியுடன் வந்தவனுடையதா இருக்கலாம்."

"ஒகே, பட் அதே கொலைகாரர்கள் தான் மற்ற கொலைகளையும் செய்திருப்பாங்கன்னு எப்படிச் சொல்ற?"

"ஜெனிஃபரின் பிரேத பரிசோதனையில், அவளது உடலில் கத்தியால் குத்தியது தான் மரணத்திற்கான காரணம்னு கண்டறியப்பட்டது உனக்குத் தெரியும். ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம் இருந்துட்டே இருந்தது. அதனால் ஸ்பெஷல் ரிக்வெஸ்ட் படி மெடிக்கல் எக்ஸாமினரிடம் ரேப் டெஸ்ட் எடுக்கச் சொன்னேன். மோசமாக எரிஞ்சு போயிருந்த அவளுடைய உடலில் இருந்து கூட யோனி ஸ்வாப் எடுக்கப்பட்டது. ஆசிட் பாஸ்பேட்டஸிற்கான ஸ்கிரீனிங் சோதனை எதிர்மறையாக இருந்தது, ஆனால் விந்தணுவிற்கான நுண்ணியப் பகுப்பாய்வு செய்யப்பட்டதில் விந்தணுக்கள் காணப்பட்டிருக்குன்னு ரிப்போர்ட்டில் குறிப்பிட்டிருக்காங்க யுகா,. பட், அது அஜ்மலின் டி.என்.ஏவுடன் ஒத்துப்போகலை."

"ஆனால் விஜய்யின் கொலைகாரனோட டி.என்.ஏவுடன் ஒத்துப் போயிருக்கு, ரைட்?"

"யெஸ், எல்லா டாட்ஸையும் [dots] கனெக்ட் பண்ணிப் பாரு யுகா. விஜய்யை கொலை செய்தது ஒருத்தருக்கு மேல். அதே போல் ஜெனிஃபரை ரேப் செய்து கொலை செய்ததும், அஜ்மலை எரிச்சதும் ரெண்டு பேர். அதுல ஒருத்தனுடைய டி.என்.ஏ ரெண்டு இடத்தில் நடந்த கொலைகளிலும் மேட்ச் ஆகுது."

"Oh my God! ஏன் எனக்கு இதைச் சொல்லலை சக்தி?"

"சாரி யுகா.. எனக்கே இதில் சில சந்தேகங்கள் இருந்தது, அதான் அதை க்ளியர் பண்ணிட்டு உன்னிடம் சொல்லாம்னு இருந்தேன்.."

ஆக, சக்திவேல் கண்டுப்பிடித்தது போல் இந்தக் கொலைகளைச் செய்தவர்கள் அனைவரும் ஒரே கூட்டத்தினர். அதிலும் மரபணு சோதனைகளின் படி சொல்லப்போனால், இந்தக் கொலைகளில் பங்கெடுத்தவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள்.

"ஆனால் யாரு சக்தி இவனுங்க? ஏன் இந்தக் கொலைகளைச் செஞ்சிருக்காங்க? அதைக் கண்டுப்பிடிக்கும் வரை இன்னும் எத்தனை எத்தனை கொலைகளோ?”

“யெஸ், அதுக்கு முன் நாம அவனுங்களைக் கண்டுப்பிடிக்கணும் யுகா..”

“ஆனால் இதுக்கு முன்னாடி இங்க தூத்துக்குடியில் கொலைகள் நிறைய, அதாவது இதே மாதிரி இளைஞர்கள் கொலை செய்யப்பட்டிருக்காங்களே. அந்தக் கொலையாளிகளுடன் இவனுங்க சம்பந்தப்பட்டிருக்கலாம் இல்லையா?”

“இன்னும் நிறைய ஓபன் கேஸஸ் ஏகப்பட்டது இருக்கு யுகா. ஐ மீன், இன்னும் நிறையக் கொலை வழக்குகள் கொலையாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் நிலுவையில் நிறைய இருக்கு, ரைட்? அதனால் ஏற்கனவே கொலையாளிகள் கண்டுப்பிடிக்கப்பட்டதால் மூடப்பட்ட வழக்குகளில் தேடிப்பார்க்கச் சொன்னேன். ஆனால் நம்மளுடைய டேட்டாபேஸில் இருக்கும் எந்த ஒரு குற்றவாளியின் டி.என்.ஏ-வுடன் இது ஒத்துப்போகலை. அதனால் நாம இந்த விசாரணையைக் கொஞ்சம் சீக்ரெட்டாகத் தான் செய்ய வேண்டியிருக்கு. இல்லைன்னா நாமே கொலைகாரர்களை எச்சரிக்கை அடைய செய்துவிடுற மாதிரியான சூழ்நிலைகள் உருவாகலாம். அதிலும் மக்கள் பயப்படற மாதிரி இது சீரியல் கில்லர்ஸோட வேலையா இருந்தால், அவங்க ஸ்டையில் படி கொஞ்ச நாள் நிறுத்திட்டுப் பின் திரும்பவும் நாம எதிர்பாராத நேரத்தில் கொலைகளைச் செய்யத் துவங்கினாலும் துவங்கலாம். அதற்கும் வாய்ப்பிருக்கு.."

சக்திவேல் பேசப்பேச யுகேந்திரனிற்குப் பெரும் திகைப்பு உருவானது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கொலையாளிகளா? அதுவும் இருவர் மட்டும் சம்பந்தப் பட்டிருக்கின்றார்களா அல்லது இருவருக்கும் மேற்பட்டவர்களா?

குழப்பம் சூழ்ந்த முகத்துடன் அழுந்த நெற்றியைத் தடவியவனைப் பார்த்தவாறே அவனுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த சக்திவேலுவிற்கும் அதே கேள்விகள் தான் தோன்றின, ஆனால் ஒரு கேள்விக்கும் பதில் தான் கிடைக்கவில்லை.

"ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் சக்தி. அப்போ நம்முடைய அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?”

யுகேந்திரனின் கேள்விக்கு சக்திவேல் விளக்கங்களைக் கொடுக்க, நேரம் நகர்ந்ததில் நள்ளிரவு கடக்க, ஒருவழியாய் இருவரும் அவரவர்களின் வீட்டிற்குச் செல்ல அலுவலகத்தை விட்டு வெளிவந்த நேரத்தில், சற்றுத் தயக்கத்துடன் மற்றுமொரு கேள்விக் கேட்டான் யுகேந்திரன்.

“சரி சக்தி, எல்லாம் இருக்கட்டும், பட், ஒரு மாசத்துக்கு முன்னாடியே ஊருக்கு போகணும்னு சொன்ன. இந்த டபுள் மர்டர் கேஸில் இறங்கியதும் அதை மறந்துட்டியா, என்ன?"

"ம்ப்ச். மறக்கலை, ஆனால் இந்த மர்டர்ஸ் பற்றி நினைச்சா தலையே வெடிச்சிடும் போல இருக்கு, இதுல அந்த விஜய்யோட அப்பா MLA-ங்கிறதால மேலிடத்திலும், அரசியல்வட்டாரங்களில் இருந்தும் வர்ற ப்ரஷர் வேற.."

"நம்ம வேலை அப்படிச் சக்தி, அதுக்காகக் குடும்பத்தில் இருக்கிறவங்களைப் பார்க்காமல் இருக்க முடியுமா? ஜஸ்ட் ஒரு ரெண்டு நாள் ப்ரேக் எடுத்துட்டு போயிட்டு வா, ஃப்ரஷ்ஷா ஆகிடும்."

“ஏன், என் அம்மாவிடம் ஏதாவது பேசினியா?”

“அதெல்லாம் இல்லை. உனக்கு ஒரு மாறுதலா இருக்குமேன்னு தான் சொல்றேன். தூத்துக்குடிக்கு மாற்றல் செய்து வந்ததிலேருந்து நீ ஊருக்கே போகலையே, அதான் சொன்னேன்.”

அவன் கூறுவதும் உண்மை தானே என்பதை உணர்ந்துக் கொண்டவனாய் மெள்ள ஆமோதிப்பாய் தலையசைத்த சக்திவேல் மறுநாளே மருதூர்குளம் நோக்கிப் பயணம் செய்தான்.

தனது வரவைப் பற்றி ஒருவரிடமும் தெரிவிக்காது வந்து கொண்டிருக்கும், 'சின்ன ஐயா' என்று அழைக்கப்படும் மூத்த மகனைப் பற்றி அறியாத முத்தம்மாள், வழக்கம் போல் பின்கட்டினில் முல்லைப் பூக்களை மீனாக்ஷியுடன் இணைந்து பறித்துக் கொண்டிருக்க, வீட்டின் அழைப்பு மணி அடித்தது.

ஒருவரும் எதிர்பாராதவண்ணம் அந்த வீட்டைவிட்டுப் போவதற்கு மீனாக்ஷியே முன்வரும்படி, அவரது மகன் பெரும் அட்டூழியத்தைச் செய்து வைக்கப் போகின்றான் என்பதை உணராது மீனாக்ஷியையே கதவைத் திறக்குமாறு அனுப்பி வைத்தார் முத்தம்மாள்.

வாயிலில் யார் நிற்கின்றார் என்பதை அறியாத மீனாக்ஷியும் கதவைத் திறப்பதற்குச் செல்ல, நான் யாரையும் அவ்வளவு எளிதாக விட்டு வைத்தது கிடையாது, இவர்களை விடுவதற்கு என்பது போன்று அவளது விதியும் காத்திருந்தது, கதவிற்கு அப்பால்!

You often meet your fate on the road you take to avoid it.

- Jean de la Fontaine⁣

தொடரும்

References:

DSP vs Addl SP: The rank above deputy superintendent of police is additional superintendent of police.

ACE of Spades: The ace of spades is often considered the most powerful card in a deck, symbolizing power, authority, dominance, good fortune, and even death or misfortune, depending on cultural interpretation.


 

Hanza

Member
Omg…!!! Cold blooded gruesome murders 😢😢😢
Yugi 😍😍😍

First meeting with his queen… acho ava veettai vittu porenu sollu alavukku enna panna poran?
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top