JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

'Meenakshi - Shakthivel' - Episode 5

JLine

Moderator
Staff member
மீனாக்ஷி - சக்திவேல்

அத்தியாயம் - 5

அன்று முற்பகலில் சக்திவேலைச் சந்தித்தது தான், அதற்குப் பிறகு தன் அறைக்குள் சென்றடைந்து கொண்ட மீனாக்ஷி பின் வெளியில் வரவே இல்லை.

இரவு உணவுக்கூட வேண்டாம் என்று மறுத்துவிட்டவளின் வேதனையும் பயமும் முத்தம்மாளிற்கும் புரிந்திருக்க, அவளை அதற்குப் பிறகு ஒருவருமே தொந்தரவு செய்யவில்லை.

அதே போல் தன் அறைக்குள் சென்ற சக்திவேலும் தூத்துக்குடி முழுக்கச் சமீபகாலத்தில் நடந்திருக்கும் கொலைகளைப் பற்றியும், கொலையானவர்களுடன் தொடர்புடையவர்கள், கொலை நடந்த இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட தடயங்கள் என்று அனைத்து விவரங்களும் அடங்கிய கணினி கோப்புகளில் [files] மூழ்கியவன் உணவை மறுத்துவிட்டான்.

இரவு முழுமையுமே இவ்வாறு கடந்து போக, விடிந்தும் விடியாததுமாய் மார்த்தாண்டம் தங்களின் தோப்பிற்குச் சென்றுவிட, அவர் சென்றுவிட்டதை அறிந்து நடைபயிற்சிக்குச் செல்லும் நோக்குடன் அறையை விட்டு வெளியே செல்ல எத்தனித்த சக்திவேலின் அலைபேசி ஒலித்தது.

அழைத்தது யுகேந்திரன்.

"சொல்லு யுகா, என்ன இவ்வளவு ஏர்லியா கால் பண்ணுற?"

"முக்கியமான விஷயம் சக்தி, அதான் கூப்பிட்டேன்."

"சரி சொல்லு."

"கொலை செய்யப்பட்டு, ஆனால் சூசைட் பண்ணின மாதிரி செட் செய்யப்பட்டிருந்த விஷ்ணுங்கிற பையன் நியாபகம் இருக்கா?"

"யெஸ் யுகா, நியாபகம் இருக்கு."

"அவன் வீட்டில் கண்டுப்பிடிச்ச முடியை [hair] எவிடென்ஸா ஃபாரன்ஸிக் டீம் எடுத்து வச்சிருந்தாங்க, அதை டெஸ்ட் பண்ணச் சொல்லி நீ சொல்லிருந்த, ரைட்? அதற்கான டி.என்.ஏ ரிசல்ட் வந்துடுச்சு."

"Good, any matching or resemblance from the rest?"

"அதான் இல்லை சக்தி. அவங்க வீட்டில் இருக்கும் யாருடைய டி.என்.ஏ-வுக்கும் அது ஒத்துப் போகலை. அதே போல் மற்ற கொலைகளில் நீ கண்டுப்பிடிச்ச ஆதாரங்களில் இருந்து எடுத்த டி.என்.ஏ-வுடனும் மேட்ச் ஆகலை. இது கம்ப்ளீட்லி டிஃபரண்ட் டி.என்.ஏ."

"ஷிட்.."

"ஸோ, இந்தக் கொலையை மற்ற கொலைகளுடன் சம்பந்தப்படுத்த முடியாது இல்லையா?"

"தெரியலை யுகா. பட் இந்த எல்லாக் கொலைகளுக்கும் ஏதோ ஒருவிதத்தில் சம்பந்தம் இருக்குன்னே என் இன்ஸ்டின்க்ட் சொல்லிட்டு இருக்கு."

"I believe in your instincts Shakthi. ஆனால் என்ன சம்பந்தம் இருக்குமுன்னு நினைக்கிற, இறந்துப் போனவர்களுடைய வயசைத் தவிர?"

"அதைத் தான் நாம கண்டுப்பிடிக்கணும் யுகா. ஆனால் நாம் ஏற்கனவே பேசியது போல அடுத்து இது போல் ஒரு கொலை நடக்கிறதுக்கு முன்னாடி நாம கண்டுப்பிடிக்கணும்."

சில நிமிடங்கள் விசாரணைகளைப் பற்றிப் பேசியவர்கள் இறுதியாக அலைபேசியைத் துண்டிக்கும் முன் யுகேந்திரன் கேட்ட அந்தக் கேள்வியில், ஏற்கனவே கொலைகளைப் பற்றிய சிந்தித்துக் கொண்டிருந்ததில் அமைதியின்மையில் தவித்த சக்திவேலுக்கு, இப்பொழுது சீற்றம் தலை தூக்கியது.

"வாட்?"

"யெஸ் சக்தி. நேற்று நைட் உனக்குக் கால் பண்ணினேன். ஆனால் ரிங் போகவே இல்லை. ஃபார் சம் ரீஸன் நாட் ரீச்சபில்-னே வந்துட்டு இருந்தது. அதான் வீட்டு நம்பருக்கு கால் பண்ணினேன். அம்மா தான் எடுத்தாங்க, விஷயத்தையும் சொன்னாங்க."

"அவள் எல்லாம் ஒரு ஆளுன்னு அம்மா இதைப் பத்தி உன்கிட்ட பேசினாங்களா?"

"ம்ப்ச், அந்தப் பொண்ணை விடு, பட் உனக்கு ஏன் அந்தப் பொண்ணு மேல இவ்வளவு வெறுப்பும் கோபமும்."

வினவியவனிடம் தனது தம்பி பாலாக் கூறியதைக் கூற, "சக்தி.. பாலா சொன்னதை நம்பித் தான் நீ மீனாக்ஷியை தப்பா பேசுற. பட், பாலா விசாரிக்கிறதுக்கும் நீ விசாரிக்கிறதுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. எனக்குத் தெரிஞ்ச வரை பாலா மீனாக்ஷியின் சித்தப்பா இருக்கும் ஊரில் தான் விசாரிச்சிருப்பாருன்னு நினைக்கிறேன். ஆனால் நீயே ஏன் அந்தப் பொண்ணுடைய சொந்த ஊரைச் சார்ந்தவங்க யாராவது ஒருவரிடம் விசாரிக்கக் கூடாது?" என்றான் தன்மையாக.

"ஹேய், எனக்கு என்ன வேற வேலை இல்லையா?"

"இல்லைன்னு சொல்லலை, ஆனால் அடவாடியா ஒரு பொண்ணை, அதுவும் பெற்றவங்க யாரும் இல்லாமல் தனியா இருக்கிற ஒரு பொண்ணை இப்படித் திடீர்னு வீட்டை விட்டு போன்னு சொல்றது எனக்குச் சரியா படலை சக்தி."

"யுகா, பாலா சரியா விசாரிச்சானோ இல்லையோ, ஆனால் அவ அம்மா ஒரு நல்ல பொம்பளைக் கிடையாது. ஏற்கனவே கல்யாணம் ஆன ஒருத்தரை மயக்கி ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க. அவ அப்பா ஏற்கனவே கல்யாணம் பண்ணின பொண்ணு இறந்த மறுமாசமே அடுத்தக் கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டவரு. அவங்களுக்குப் பொறந்த பொண்ணு எப்படி இருப்பா?"

"No.. எனக்கு என்னவோ நீ ஆராயாமல் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கன்னு தோணுது. ஆனால் இது உன் ஸ்டையிலே இல்லையே சக்தி. எதுக்கு இந்த அவசரம்?"

"சரி அதைவிடு, இப்போ அவளைப் பற்றிய பேச்சு எதுக்கு? நமக்குத் தலைக்கு மேல் கத்தி தொங்குற மாதிரி மர்டர் கேஸஸ் இருக்கு, அதை முதலில் பார்ப்போம்."

கூறிய சக்திவேல் அத்துடன் அந்தப் பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்தான்.

அதே நேரம், வெளியே வரவே பயந்து கொண்டு அறைக்குள் அடங்கி இருந்த மீனாக்ஷியும், அவள் தங்கி இருக்கும் அறைக்குள் குளியல் அறை இல்லாததினாலும், வீட்டுப் பின்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும் குளியல் அறையையே உபயோகிக்க வேண்டி இருந்ததாலும், வழக்கம் போல் துணிமணிகளை எடுத்துக் கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தவள், சுற்றும் முற்றும் பார்த்தாள்.

நல்லவேளை, சக்திவேல் எங்கும் தென்படவில்லை.

விடுவிடுவென்று நடந்தவள் பின்கட்டை அடைய, அங்கும் அவனில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு குளியல் அறைக்குள் புகுந்தவள், தான் அணிந்திருந்த புடவையைத் துவைத்து முடித்ததும் நீராடத் துவங்கினாள்.

நிமிடங்கள் சென்று துணியை உடுத்த ஆரம்பித்தவள் அப்பொழுது தான் கவனித்தாள், குளித்தப்பின் அணிவதற்கு என்று அவள் எடுத்து வந்த புடவை அங்கு இல்லாததை.

"புடவையைக் கையில தான வச்சிருந்தேன், எங்கப் போயிருச்சு?"

தனக்குத்தானே கேட்டுக் கொண்டவள் வெறும் ரவிக்கையையும் பாவாடையையும் மட்டுமே அணிந்தவாறே மெதுவாய் கதவைத் திறந்து அதன் சிறிய இடைவெளியில் எட்டிப் பார்க்க, புடவை அங்குக் கிடக்கும் தடயமே இல்லை.

'போச்சு, ரூமுக்குள்ளேயே விட்டுட்டு வந்துட்டேன் போல இருக்கு. ஐயோ! கடவுளே! இப்போ நான் எப்படிப்பா போவேன்? சரி, கட்டிட்டு வந்த புடவையைக் கட்டலாம்னா, அதையும் இல்ல துவைச்சிட்டேன். இவ்வளவு ஈரமா இருக்கிறதை போர்த்தினால் எப்படி என் உடம்பு மறையும், அசிங்கமாத்தான தெரியும்.. '

புலம்பியவளாகச் சில மணித்துளிகள் அங்கேயே இருந்தவள், முத்தம்மாளையும், மற்ற வேலைக்காரப் பெண்களையும் அழைத்துப் பார்த்தாள்.

ம்ஹூம், ஒருவருமே வந்தபாடில்லை!

வேறு வழியின்றிக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த பெரிய துண்டை எடுத்தவள் முடிந்தவரை உடம்பு மறையும் அளவிற்குப் போர்த்தியவளாய் வெளியே வர, அவள் நேரம், சொல்லி வைத்தார் போன்று சக்திவேலும் அவன் அறையைவிட்டு வெளியில் வந்தான்.

பரபரப்புடன் மீனாக்ஷி பின்கட்டு வழியாக வீட்டிற்குள் நுழைய, வழக்கம் போல் விடுவிடுவென வேகமாய்ப் படியிறங்கிய சக்திவேல் கீழ் தளத்திற்கு வர, ஆனால் அவன் தனக்கு எதிராக வந்து கொண்டிருக்கின்றான் என்பதைக் கூடக் கவனியாது சுற்றும்முற்றும் பார்த்தவளாய் ஓட்டமும் நடையுமாக வேக அடிகள் எடுத்து வைத்து வந்தவள், அகன்ற மார்பும், திரண்ட தோளுமென வாட்டசாட்டமாய் இருந்தவனின் மேல் மோதியதில் தடுமாறி கீழே விழப் போனாள்.

அதற்குள் சுதாரித்துக் கொண்டவன் அவளைப் பிடித்து நிற்க வைக்க, யார் மேல் மோதி இருக்கின்றோம் என்பது புரிபடவே மீனாக்ஷிக்கு சில நொடிகள் பிடித்தது.

புரிந்ததும் அண்ட சராசரமே சுழன்றது போல் தலை சுற்ற, 'ஐயோ! இவரா!' என்று மனம் அதிர, அவனைவிட்டு விலக எத்தனித்தவளின் தேகத்தில் வலியெடுத்தது.

காரணம் அவளை விழவொட்டாது பிடித்திருந்தவனின் பிடி உடும்புப் பிடியாக இருந்தது.

கால்களில் இலேசாக நடுக்கம் தோன்ற அது உடல் முழுவதிலும் பரவுவது போல் இருந்ததில் இதழ்கள் கூட நடுங்க, மெல்ல அவனது முகம் நோக்கி நிமிர்ந்தவள், உணர்ச்சிகளற்ற அவனது முகத்தில் கண்கள் பேசிய மொழியில் ஒட்டுமொத்த துணிவையும் இழந்தாள்.

"வி..வி..விடுங்க.."

ஈனஸ்வரத்தில் முனகியவளின் ஈர உதடுகளைப் பார்த்தவன் என்ன நினைத்தானோ பிடியை விலக்க மறுக்க, தளிர்மேனியில் இன்னமும் பணித்துளிகள் போல் தண்ணீர் முத்துக்கள் ஆங்காங்கு படர்ந்திருந்ததில், உடற்பயிற்சிக்கென்று அவன் அணிந்திருந்த மெல்லிய [Sleeveless Tank Top] சட்டையை ஊடுருவிய ஈரம் ஆண்மகனின் இதயத்தையும் சிலிர்க்கச் செய்தது.

உடலும் மனமும் இதுவரை அறியாதவண்ணம் புதுவகைப் பரவசத்தை அறியமுற்பட, ஒற்றைக் கையைக் கொண்டு அவள் போர்த்தியிருந்த துவாலையுடன் சேர்த்து அவளின் இடைப்பற்றியவன் இன்னமும் தன்னை நோக்கி நெருக்கியதில் பெண்ணவளின் முகம் சிவந்து போனது.

"என்ன பண்றீங்க, விடுங்க?"

மீண்டும் முனகும் குரலில் அவள் பேச, என்ன நினைத்தானோ சட்டென அவளை விட்டவன் அவளது கரத்தைக் கெட்டியாகப் பற்றியவாறே பின்புறத்திற்கு அழைத்துச் செல்ல, அவனது வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது தடுமாறியவள் ஒரு கையால் துண்டைக் கீழே விழுந்துவிடாது பிடித்திருக்க மிகச் சிரமப்பட்டாள்.

"தயவுசெஞ்சு விடுங்க.."

அவளால் கெஞ்ச மட்டுமே முடிந்தது.

வீட்டின் பின்புறம் அவளை இழுத்துச் சென்றவன் அனைத்துப் பக்கங்களிலும் பார்த்தவனாய் மல்லிகையையும் முல்லையையும் அருகருகே வைத்துக் கட்டப்பட்டிருந்த கொடிப்பந்தலைக் காணவும் அதற்கு அடியில் அவளை இழுத்துச் சென்றான்.

அவன் தன்னை விடப்போவதில்லை என்பதை உணர்ந்தாலும் அரைகுறை ஆடையுடன் இருக்கும் சூழ்நிலையில், இப்படி ஒரு ஆண்மகனின் பிடியில் சிக்கியிருப்பதில் மீனாக்ஷியின் மனம் பெரும் நடுக்கத்தில் துடித்தது.

"உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்குறேன், விடுங்க.."

"விடத்தான் கூட்டிட்டு வந்தேன், கொஞ்சிக் குலாவுறதுக்கு இல்ல."

அதுவரை பேசாதவன் பட்டென்று பதில் கொடுக்க, திடுக்கிட்டவள் அவன் முகம் பார்க்க, அவளைச் சுவரில் சாய்த்து நிறுத்தியவன், அவள் நகர்ந்து விடாதப்படிக்கு இருபக்கங்களிலும் கைகளை அரண்போல் ஊன்றி நின்றான்.

"சொல்லு, யாரை மயக்குறதுக்காக இப்படி அலங்கோலமாக வீட்டுக்கு நடுவில் நடந்துட்டு இருக்க?"

எவ்வளவு அருவருப்பான கேள்வி? ஏதோ பணத்திற்கு உடலை விற்கும் பெண்கள் போன்று என்னை நினைத்துவிட்டானா?

சாட்டைக் கொண்டு ஆயிரம் முறை அடித்தது போல் அவளைக் கிழித்தன அந்த வார்த்தைகள்.

ஆனால் அவளால் பதில் கூறத்தான் முடியவில்லை.

அமைதியாய் அவனையே பார்க்க, சுவரில் இருந்த கைகளை அகற்றாமலேயே சில அங்குலங்கள் அவளை விட்டு நகர்ந்தவன் அவளின் அழகிய மேனியின் ஒவ்வொரு அங்கத்தையும் பார்க்க, கூர்தீட்டிய ஈட்டி முனையாய் அவனது கண்கள் தன் தேகத்தைத் துளைத்ததில் நாணத்தால் கூனிக்குறுகிப் போனாள்.

ஆனால் தான் கேட்ட கேள்வியாலும், தனது ஆராயும் பார்வையாலும் பெண்ணவள் எந்தளவிற்குத் தவித்துக் கொண்டிருக்கின்றாள் என்பதை உணராது, செவ்வனே தனது கண்களை அவளின் உச்சியில் இருந்து பாதம் வரை ஓட்டினான்.

தலைக்குக் குளித்திருந்ததினால் துண்டைக் கொண்டு கேசத்தைக் கட்டியிருந்தவளின் முகத்தில், உச்சி வகிட்டில் இருந்து விழுந்த முடி இழைகள் ஈரத்தில் கச்சிதமாய் ஒட்டியிருந்தது.

மைத்தீட்டாமலேயே வசீகரிக்கும் விழிகளில் திரண்டிருந்த கண்ணீர்த்துளிகள் வைரமாய் ஜொலித்தன.

காற்றின் சலனத்தால் மல்லிகை முல்லைக்கொடிகளின் தழைகள் அசைந்ததில், பந்தலுக்கு உள்ளே வந்த அதிகாலைச் சூரியனின் கதிர்கள் மூக்கில் பதிந்திருந்த ஒற்றைக்கல் மூக்குத்தியை பிரகாசிக்கச் செய்தது. அதற்குக் கீழ் அச்சத்தில் மெல்லமாய்த் துடிக்கும், நீர் சொட்டும் உதடுகள் ரத்தினத்தால் பூசப் பட்டிருக்கின்றதோ என்பது போல் பளபளத்தது.

நுதலில் துவங்கி ஒவ்வொரு அங்கமாகப் பார்வையால் அளந்துக் கொண்டிருந்தவன் முகத்திற்குக் கீழ் இறங்க, அப்பொழுதுதான் அவனுமே கவனித்தான்.

அவளைச் சுவரில் படீரென்று தள்ளியதில் அவள் போர்த்தியிருந்த துவாலையும் சற்றே விலகி இருந்ததில்.

அவ்வளவு தான்!

ஏற்கனவே அவளின் பிரமிப்பூட்டும் அழகில் தன்னையும் அறியாது மயங்கி இருந்தவனின் உணர்ச்சிகள் பேரிரைச்சலுடன் எழுந்து அலைமோத, அடர்ந்த மீசைக்கடியில், வலிய உதடுகளின் இடதுகோடியில் நகைப்படர்ந்தது.

இமைகளைச் சிமிட்டாத அவனது பார்வையும், விகாரமான சூழ்நிலையிலும் சிரிக்கும் அவன் பழக்கமும், இதனில் அவனது ஒரு கையை எடுத்து நெற்றிப்பொட்டில் தேய்த்தவனது செய்கையும், மீனாக்ஷிக்கு எதனையோ உணர்த்தியது.

இதே போல் தான் நேற்று காலை என்னை முதன்முதலில் பார்த்தப் பொழுதும் செய்தார்.

ஆக, இது இவர் அதீதமாய்க் கோபப்படும் பொழுது செய்யும் செய்கைகளோ? ஆனால் இந்தச் சிறுநகை?

அவள் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே, "நான் கேட்டக் கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லலை." என்றான் கரகரக்கும் சாரீரத்தில்.

"****"

"என்ன பதில் சொல்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கியா?"

"****"

“ஏய்! உன்னைத்தான் கேட்குறேன்.”

"நீ.. நீங்க நினைக்கிற மாதிரியான பொண்ணு நான் இல்ல."

"அப்படின்னா இப்படி அரைகுறை ட்ரெஸ்ஸோட எதுக்கு நடமாடிட்டு இருக்க?"

"நான் பு.. புடவையை மறந்துட்டு குளிக்க வந்துட்டேன், அதான் எடுக்க.."

அவளை முடிக்கவிடவில்லை அவன்.

"What? புடவையை மறந்துட்டு குளிக்க வந்துட்டியா? இன்னைக்கு மட்டும் தானா, இல்லை எப்போதும் அப்படியா?"

"ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க?

"உன்னைப் பற்றித் தெரிஞ்சதுனால பேசுறேன்."

"என்னைப் பத்தி என்ன தெரியும் உங்களுக்கு?"

"உன்னைப் பத்தி இல்லை, உன் அம்மாவைப் பத்தியும் தெரியும். உன் அப்பாவை மயக்கி உன் அம்மா கல்யாணம் செஞ்சுக்கிட்டதும் தெரியும்."

"*****"

"என்ன அமைதியாகிட்ட?"

"*****"

"இங்கப்பாரு, நீ என்ன நோக்கத்தில் இங்க வந்திருக்கன்னு எனக்குத் தெரியும். பட், நான் சொல்றதை நல்லாக் கேட்டுக்க. என் தம்பி பாலா, அவனுக்கும் எங்க அத்தை மகளுக்கும் கல்யாணம் பண்றதா சின்ன வயசிலேயே முடிவு செய்துட்டாங்க. So, he is already engaged. கார்த்தி, சின்னப் பையன். இப்போ தான் காலேஜ் முடிச்சிட்டுப் பிஸ்னஸில் இறங்கி இருக்கான். இது மாதிரி ட்ரெஸ் பண்ணி அவனை மயக்க ட்ரை பண்ணாத. அவன் பக்கம் நீ போனன்னுத் தெரிஞ்சதுனால் உன்னை உண்டு இல்லைன்னு செய்துடுவேன். அதற்குப் பிறகு இங்க எங்க வீட்டில் உன் அழகில் மயங்க வேலைக்காரர்களைத் தவிர வேற யாரும் இல்லை, புரியுதா?"

கடவுளே! என்ன மாதிரியான கொடுஞ்சொற்கள்?

மனம் காயப்பட்டு ரணமாய் வலிக்க, இப்படி ஒரு அவப்பெயரை தீமழையாய் தன் மீது தெளித்துவிட்டவனின் முகத்தை அவமானத்துடன் பார்த்தவளுக்கு, நெஞ்சம் எரிமலையாய்க் கனன்றது.

'போதும்! இது போதும்! எங்கேயாவது போய்ச் செத்து வேணா போகலாம், ஆனால் இந்தப் பேச்சைக் கேட்டுக்கிட்டு இனி இந்த வீட்டில் இருக்கக் கூடாது. இனி இவர் கண்ணெதிரே என் வாழ்நாள் முழுக்க நான் வரவே கூடாது.’'

அவள் புத்தி சிந்தித்தது அதை மட்டும் தான்.

கண்ணீர் கன்னங்களைத் தொட, அதற்கு மேல் அவனுக்குத் தன் அழுகையைக் காட்ட விரும்பாதவளாய் ஒரே ஒரு விநாடி அவனை ஆழ்ந்துப் பார்த்தவள் அதற்கு மேல் அவன் முகத்தைப் பார்க்கும் சக்தியற்றவளாய் தலைக்கவிழ்ந்தாள்.

"பரவாயில்லை, கண்ணுலேயே பேசிடுவ போல இருக்கே. என்னாக் கண்ணுப்பா.."

மற்றவர்களுடைய காதுகளில் விழுந்துவிடக் கூடாது என்பதற்காக அவன் இதுவரை தணிந்தக் குரலில் தான் பேசினான்.

ஆனால் அந்தத் தணிந்த குரலிலும் அழுத்தம் திருத்தமாய் அவன் பேசிய விதத்தில் இளக்காரமே இருந்ததில், இனி இவன் முகத்தில் கூட விழிக்கக் கூடாது என்று அவள் மனம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தது.

விநாடிகள் நிமிடங்களாகக் கடக்க, இன்னமும் அவளைப் பூப்பந்தலின் கீழே நிறுத்தி வைத்திருந்தவன், "போ, போய்ப் பாத்ரூமிலேயே இரு. நீ சொன்ன மாதிரி உன் சாரியை [saree] ரூமில் மறந்து வச்சிட்டியான்னுப் பார்த்துட்டு வரேன்." என்றவன் பந்தலைவிட்டு வெளியே வர, அவர்களின் நேரம் சரியாகப் பின்புறத்திற்கு வந்து கொண்டிருந்தார் முத்தம்மாள்.

"சே.. இவங்க வேற.."

சலித்துக் கொண்டவன் மீனாக்ஷியைப் பார்க்க, அவளும் முத்தம்மாளின் வரவைக் கண்டு அதிர்ந்தவளாக, "ஐயோ! அத்தை வராங்க." என்று அழுகுரலில் பேச, அவளின் வாயை அவசரம் அவசரமாகத் தன் கரம் கொண்டு பொத்தினான்.

"ஷ்ஷ்.."

அவளை மௌனமாக்கியவன் பந்தலுக்கு இடையில் தெரியும் முத்தம்மாளின் மீதே பார்வையைப் பதித்திருக்க, பந்தலை நோக்கி அவர் நடந்து வரவும், "ஷிட்.." என்று முணுமுணுத்தவன் மீனாக்ஷியைத் தன்னுடன் அழுத்திக் கொண்டான்.

'சே.. அம்மா மட்டும் இந்தக் கோலத்துல இவளுடன் என்னைப் பார்த்தாங்க, அவ்வளவு தான். எல்லாம் இவளால வந்தது..'

அவன் மனம் மீனாக்ஷியைக் கடிந்துக்கொள்ள, என்ன நினைத்தாரோ சட்டென நின்ற முத்தம்மாள் திரும்பி நடந்தவர் வீட்டிற்குள் நுழைந்துவிட, "Whoof!" என்றவன் குனிந்துப் பார்த்த நேரத்தில் நிலைக்குலைந்துப் போனதில் மீண்டும் தன்னிலை மறக்க துவங்கினான் அந்தக் கட்டிளங்காவலதிகாரி.

சரியாகப் போர்த்தப்படாத அவளது மேனியின் அங்கலாவண்யங்கள் ஆடவனின் கண்களுக்கு விருந்தாக, ஒரு கரத்தால் அவளின் வாயை மூடியிருந்தவனின் மறு கரம் அவளைத் தன்னோடு புதைத்து இருந்ததில் நெஞ்சோடு நெஞ்சு அழுத்தப்பட்டிருக்க, அதற்கு மேல் அவ்வாறு நிற்க அவனது வயதும் இடம் கொடுக்கவில்லை, அவனது கண்ணியமும் அனுமதிக்கவில்லை.

மெதுவாய் அவளது உதடுகளில் இருந்து தன் கரத்தை எடுக்கவும், "இப்படி நம்மைப் பார்த்தாங்கன்னா நீங்க சொன்னது மாதிரி தான அத்தையும் என்னை நினைப்பாங்க? ப்ளீஸ், என்னைப் போக விடுங்க.." என்று பதறும் குரலில் அவள் யாசித்ததுமே அவளை விட்டு சற்று தள்ளி நகர்ந்தவன் பார்வையை மறுபக்கம் திருப்பினான்.

"நீ இங்கேயே இரு. நான் போய் உன் சாரியை எடுத்துட்டு வர்றேன்."

கூறியவன் விடுவிடுவென்று வீட்டிற்குள் புகுந்தவனாய் அவளின் அறைக்குள் நுழைய, அங்குத் தரையில் கிடந்த புடவையைக் கண்டதும் அவனது கண்கள் இடுங்கின.

'ஒருவேளை அவ சொன்னது மாதிரி புடவை அவ கையில் இருந்து நழுவி விழுந்திருக்குமோ? அது தெரியாம அவள் குளிக்கப் போயிருப்பாளோ?'

இதயம் அழகாய் எடுத்துரைத்தது, ஆனால் புத்தி தான் அதனை ஏற்க மறுத்தது.

பின் காவலதிகாரியின் மூளையாயிற்றே! மார்த்தாண்ட நாடார் எப்பொழுதும் கூறுவது போல் சந்தேகப்படுவது என்பது அவனது இரத்தத்திலேயே கலந்துவிட்டது போல் ஆகிப்போயிற்றே.

"இல்லை, அவளை நம்புவது மடத்தனம்."

தனக்குத்தானே பேசிக் கொண்டவன் புடவையைக் கையில் எடுத்தவனாய் யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு மீண்டும் பின்புறத்திற்கு வர, பந்தலுக்கு நடுவில் இறுக்கிப்பிடித்த துவாலையுடன் நின்றிருந்தவளின் மீது ஏனோ திடீரென அதிசயமாய் ஒரு இரக்கம் பிறந்தது.

ஆயினும் வழக்கம் போல் அவனது ஆணவமும் அகங்காரமும் அதனை ஒதுக்கி வைக்க, பந்தலுக்கு அருகில் சென்றவன் அவள் மேல் புடவையை எறிந்தான்.

"சீக்கிரம் கட்டிட்டு உன் ரூமுக்குப் போ."

அதற்கு மேல் அவன் அங்கு நிற்கவில்லை.

நின்ற இடத்தில் இருந்தே வேகவேகமாய்ப் புடவையை உடுத்தியவள் ஒருவரும் கவனித்துவிடாத வகையில் மறைவாய் வீட்டிற்குள் புகுந்தவள் தன் அறைக்குள் நுழைய, காலை உணவையும் கூட வேண்டாம் என்று மறுத்தவளின் மீது இரக்கம் கொண்ட முத்தம்மாள் அவளின் அறைக்கே உணவை வரவழைத்தார்.

"என்னம்மா, வேலு திரும்பவும் ஏதாவது சத்தம் போடுவான்னு பயமா இருக்கா?"

என்னது சத்தம் போடுவாரா? கடவுளே! காலையில் அவர் பேசிய பேச்சு மட்டும் இவங்கக் கேட்டிருந்தாங்கன்னா இப்படிப் பேசுவாங்களா? இதுல இவங்க என் ரூமுக்கே சாப்பாடு கொண்டு வந்திருக்காங்கன்னு தெரிஞ்சா, என்னைக் கொலை செஞ்சாலும் செஞ்சிடுவாரு.

"அத்த, எதுக்குத்த நீங்க சாப்பாட எடுத்துட்டு வர்றீங்க? நானே வந்து சாப்பிட்டுக்குவேனே?"

"நீ அவன் வீட்டுக்கு வந்ததுல இருந்து சாப்பிடவே இல்லை மீனா. அவன் கண்ணுல பட்டுடக் கூடாதுன்னு இப்படி ஜெயிலுக்குள்ள அடைஞ்சிருக்க மாதிரி கிடக்குற. அவன் ஒரு போலீஸ்காரன்னு அப்பப்ப நிரூபிச்சிக்கிட்டே இருக்கான். போறப்போக்கப் பாத்தா எல்லா நல்லவங்களையும் கெட்டவங்களா நினைக்க ஆரம்பிச்சிடுவான் போல இருக்கு."

"அப்படி எல்லாம் இல்ல அத்த. அவர் பக்கத்துல இருந்து பார்க்கும் போது அவருக்கு நான் தப்பாத் தெரியுறேன், அவ்வளவு தான். அதுவும் இல்லாம இது அவர் வீடு. அதுவும் இந்த வீட்டுக்கு அவர் முத்த புள்ள. அப்போ அவருக்குத் தான இங்க உரிமை அதிகம். அவரை மீறி நான் இங்க இருக்கிறது தப்புத்தானே.."

"நீ என்னைச் சமாதானப்படுத்த நினைக்கிற, அப்படித்தான? ஆனால் முதல் உரிமை என் வீட்டுக்காரருக்குத் தான். வேலுக்கு இல்ல. என் வீட்டுக்காரர் என்ன சொல்றாரோ அதை என் பசங்க எல்லாருமே கேட்டுத்தான் ஆகணும்."

அழகாய் மென்மையுடன் புன்னகைத்தவர் அவள் தலைமுடியை வருடிக் கொடுத்துவிட்டு வெளியேற, மீனாக்ஷியின் மனதிற்குள், 'உங்க மகன் பேச்சை மீறும் சக்தி பெரிய ஐயாவுக்குக் கூட இல்லைன்னு தான் எனக்குத் தோணுது அத்த.. இன்னும் என்னென்ன அசிங்கமான வார்த்தைகளை நான் அவர்கிட்ட இருந்து கேட்கப் போறேனோ!’' என்று எண்ணவே தோன்றியது.

அது அன்று இரவே நடக்கவும் செய்தது.

*******************************

காலை உணவை அறைக்குள் வைத்தே உண்டிருந்த மீனாக்ஷி மாலை வரை வெளியே வரவே இல்லை.

ஆயினும் அதற்கு மேல் அப்படி இருக்கவும் அவளுக்கு மனமும் வரவில்லை.

என்னத்தான் முத்தம்மாள் அவள் மேல் பிரியம் வைத்திருந்தாலும், அவர் மறுத்தும் அவள் ஏறக்குறைய அந்த வீட்டின் வேலைக்காரப் பெண்போல் தான் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து வந்திருந்தாள்.

இப்பொழுது எந்த வேலையையும் செய்யாமல் எஜமானி போல் அறைக்குள்ளேயே உணவு அருந்துவது எல்லாம் அவள் மனதிற்குச் சரியாகப் படவில்லை.

ஆகையால் அன்று மாலை அறையைவிட்டு வெளியில் வந்தவள் சக்திவேல் கீழ்தளத்தில் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டவளாய் ஓடிச்சென்று சமையல் அறைக்குள் புகுந்தாள்.

அங்கு அத்திப்பூப் பூப்பது போல் என்றாவது ஒருநாள் வரும் மூத்த மகனிற்குப் பிடித்த மாதிரி இடியாப்பத்தையும் காய்கறிகள் கொண்ட சொதியையும் செய்யுமாறு முத்தம்மாள் சமையல்கார பெண்மணியிடம் கூறிக் கொண்டிருக்க, அது யாருக்குப் பிடித்தமான உணவு என்பதைக் கவனியாமல் தானே சமைப்பதாகச் சொன்னவள் உண்டிகளைச் செய்யத் துவங்க, கிட்டத்தட்ட இரவு ஒன்பது மணி போல் அனைவரும் உணவு அருந்த டைனிங் ரூமில் குழுமினர்.

அனைவரும் அமர்ந்ததும் முத்தம்மாள் பரிமாறத் துவங்க, வழக்கத்திற்கு மாறாக வெகு ருசியாய்ச் சமைக்கப்பட்டிருந்த இடியாப்பமும், சொதியும் சக்திவேலின் நாவையும் மனதையும் கட்டிப்போட, "யாரும்மா, இன்னைக்கு டின்னர் செஞ்சது?" என்ற கணம் முத்தம்மாளுக்குப் பகீரென்றது.

'ஆத்தி! நானே செய்யறேன்னு மீனா நின்னப்பவே வேண்டாம்னு சொல்லிருக்கணும், இப்போ சரியா சொல்லி வச்சது மாதிரி கேட்குறானே.'

மகன் கேட்கும் கேள்விக்குப் பதில் கூறாமல் திருதிருவென விழிக்கும் அன்னையின் முகமாற்றத்திலேயே தெரிந்து போனது, இது மீனாக்ஷியின் கைங்கரியம் என்று.

அதுவரை நாவில் இருந்து வந்த ருசி மறந்து கசப்பெடுத்தது போல் இருக்க, அதற்கு ஏற்றார் போல் சக்திவேலின் முகமும் மாறியது.

"என்னாச்சும்மா? யாரு சமைச்சதுன்னு தானே கேட்டேன். அதுக்கெதுக்கு இவ்வளவு ஷாக் ஆகுறீங்க?"

மீண்டும் அவன் பேச, அடுக்களைக்குள்ளே இவர்களின் உரையாடல்களைக் கேட்டிருந்த மீனாக்ஷிக்குப் பயத்தில் கைகள் நடுங்க ஆரம்பித்தது.

'நீ ஒரு முட்டாள் மீனா. சமையல்காரவங்க சமைக்கிறேன்னு சொல்லும் போது பேசாம இருக்க வேண்டியதுதானே. நீயே திரும்பவும் வம்பை விலைக்கு வாங்கிட்ட பார்த்தியா?'

எண்ணியவள் முத்தம்மாள் என்ன கூறப் போகின்றாரோ என்று பதற்றத்துடன் நிற்க, "நம்ம சிவகாமி தான் சமைச்சுச்சு வேலு." என்று பொய்யுரைக்க, சக்திவேலின் கண்கள் கூர்மையாகின.

அமைதியாய் மீதி உணவை உண்டு முடித்தவன், தண்ணீர் பருகும் போது, "அப்பா, அந்தப் பொண்ணைப் பத்தி என்ன முடிவு செஞ்சிருக்கீங்க?" என்று தனக்கு எதிரில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த தந்தையைக் கேட்க, பாலா, கார்த்தி உட்பட அனைவருக்குமே அச்சோ என்று இருந்தது.

இவர் நிறுத்தவே மாட்டாரா? என்று கார்த்தி எண்ண, பாலாவோ தந்தையின் முகம் நோக்கினான்.

நிதானமாக உணவருந்திக் கொண்டிருந்த மார்த்தாண்டம் நிமிர்ந்தவர் சக்திவேலை நோக்க, "உங்களைத் தான் கேட்குறேன். இன்னும் எத்தனை நாளு அந்தப் பொண்ணு நம்ம வீட்டுல இருப்பா? அவளைப் பத்தி தான் எல்லாத்தையும் அம்மாக்கிட்ட நான் சொல்லிட்டேனே, இந்நேரம் அவங்களும் உங்கக்கிட்ட சொல்லிருப்பாங்க. பின்ன என்ன? அவளை வெளியில் துரத்த மனசில்லைன்னா வேற எங்காவது அனுப்பிடுவது தானே?" என்றான் பட்டென்று.

அங்குச் சமையலறைக்குள், இட்லி குண்டாவினுள் அவிக்கப்பட்ட இடியாப்பத்தைப் பதம் பார்த்து இறக்கி வைக்க முனைந்து கொண்டிருந்த மீனாக்ஷியின் காதில் சக்திவேலின் உரத்தப்பேச்சு தெளிவாய் விழுந்தது.

அதற்கு மார்த்தாண்டம் என்ன பதில் கூறப் போகின்றாரோ என்று எண்ணியவளுக்கு, "சரி, உன் இஷ்டம். ஆனால் இன்னும் ரெண்டு நாளுல வீட்டுல பூஜை இருக்கு, அதுக்காக உன் அம்மா வெரதம் எல்லாம் இருந்துட்டு வரா. பூஜை முடிஞ்சதும் அந்தப் பொண்ணுக்கு என்ன செய்யணுமோ, அதைச் செஞ்சிடலாம்." என்று கூறியவராய் எழுந்தவரின் பதிலில், சத்தியமாய் அவர் இவ்வாறு கைவிடுவார் என்று எண்ணியிராதவளின் கையில் பிடித்திருந்த அச்சுத்தட்டு இடியாப்பத்துடன் சேர்ந்து படீரென்று கீழே விழுந்தது.

அதன் சத்தத்தில் திடுக்கிட்டவராய் முத்தம்மாள் சமையலறைக்குள் ஓடியவர் "என்னாச்சு மீனா?" என்று சத்தமிட, சட்டென எழுந்த சக்திவேலும் சமையலறைக்குள் நுழைந்தான்.

"ஒண்ணுமில்லத்த, கைத்தவறி கீழே விழுந்துடுச்சு."

அழுகையுடன் கூறியவளாய் இடியாப்பத்தைக் கையில் எடுத்தவளில் விரல்களை அது சுட்டுவிட, “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்” என்றவாறே கையை உதறியவளின் தோற்றம் முத்தம்மாளிற்குப் பச்சாதாபத்தைக் கொணர்ந்தது.

"மீனா, பார்த்து.."

அவர் கத்த, பதைபதைப்புடன் சூடுப்பட்ட விரல்களை ஊதிவிட்டு மீண்டும் அச்சுத்தட்டை கையில் எடுக்க, அவளது கைகள் நடுங்குவதைக் கூர்ந்துப் பார்த்தவாறே, "பரவாயில்லை, நல்லா நடிக்கக் கூடச் செய்யற. இதெல்லாம் உன் குடும்பத்துக்கு ரொம்பச் சர்வ சாதாராணம் போல." என்ற சக்திவேல், பேரதிர்ச்சியுடன் அவள் தன்னை ஏறிட்டுப் பார்க்கவும் என்ன நினைத்தானோ அதற்கு மேல் அங்கு நிற்க விருப்பம் இல்லாதவனாய் விருட்டென்று அறையைவிட்டு வெளியேறினான்.

தொடரும்..
 
Last edited:

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top