மீனாக்ஷி - சக்திவேல்
அத்தியாயம் - 6
அன்று மார்த்தாண்ட நாடாரின் வீட்டில் மிகவும் உன்னதமான பூஜை எனச் சொல்லப்படும் சத்யநாராயணப் பூஜைக்கு ஏற்பாடாகியிருந்தது.
பொதுவாகக் குழந்தை பாக்கியம் பெறுவதற்கு, திருமணம் நடைபெறுவதற்கு, வேலை கிடைப்பதற்கு, பணப்பிரச்சனை தீருவதற்கு, நோய்கள் குணமாகுவதற்கு என்று ஒவ்வொரு பிரச்சனை தீருவதற்கும் ஒவ்வொரு விரதம் இருப்பது வழக்கம். ஆனால் என்ன கோரிக்கை நிறைவேற வேண்டும் என்றாலும் சத்யநாராயணப் பூஜையைச் செய்தால் போதும் என்பது நம்பிக்கை.
அப்பூஜை செய்ய நினைப்பவர்கள் தீவிர பக்தி மற்றும் அர்ப்பணிப்புடன் சத்யநாராயண விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
அதே போல் பூஜை செய்வதற்கு முன்னதாகப் பெளர்ணமியன்று வீட்டில் கோலமிட்டு மாவிலை தோரணம் கட்டி அலங்கரிக்க வேண்டும். பிறகு கோலத்தின் மீது மூன்று வாழை இலைகளை வைத்து அவற்றின் மீது அரிசியைப் பரப்பி, வெள்ளி, பித்தளை, செம்பினால் ஆன கலசத்தை நூலில் சுற்றி அரிசியின் மேல் வைக்க வேண்டும்.
தனது பெற்றோர் உயிருடன் இருக்கும் போதே இந்தப் பூஜையைத் தன் வீட்டில் அன்னையுடன் இணைந்து எளிமையாகச் செய்திருந்த மீனாக்ஷி, இன்று மார்த்தாண்ட நாடாரின் வீட்டில் வெகு விமரிசையாகச் செய்வதைப் பார்த்துப் பிரமித்துப் போனாள்.
முத்தம்மாளின் வார்த்தைகளின் படி ஒவ்வொன்றாகச் செய்தவளாய், கலசத்தினுள்ளே மாவிலைகளை வைத்தாள்.
பின் கலசத்திற்குச் சந்தனம் குங்குமம் பொட்டு வைத்ததற்குப் பிறகு மஞ்சள் பொடியைத் தண்ணீரில் குழைத்து தேங்காயின் மீது தூவி அனைத்தையும் அழகாய்ச் செய்து முடிக்கவும், பெண்பிள்ளை இல்லையே என்று பல காலமாக வருத்தமுற்று இருந்து முத்தம்மாளின் மனம் நிறைந்துப் போனது.
அதே போல் அவரும் வேண்டிய விரதங்களைக் கடைப்பிடித்தவராய் திருப்தியோடு இருக்க, இதனில் பூஜைக்குத் தேவைப்படும் ஒவ்வொன்றும் நேர்த்தியாய் மீனாக்ஷியால் செய்யப்படுவதைப் பார்த்து அன்பொழுக அவளின் தலையைத் தடவியவர் அவளிடம் தான் வாங்கிக் கொடுத்திருந்த பட்டுப் புடவையை அணியச் சொன்னார்.
"அத்த, நான் எதுக்குத்த? நல்ல நாளு அதுவுமா ஏதாவது பிரச்சனை ஆகிடப் போகுது?"
தயங்கியவாறே கேட்கும் மீனாக்ஷியை கனிவாய் பார்த்தவர்,
"வேலுக்குக் கடவுள் நம்பிக்கைக் கிடையாது, ஆனால் அதுக்காகச் சாமிக் கும்பிடற யாரையும் அவன் குறை சொன்னதும் கிடையாது. சாமி கும்பிடக் கூடாதுன்னு தடை செஞ்சதும் கிடையாது மீனா. அதே போல் பூஜையைத் தடுக்குற மாதிரியான காரியத்தையும் அவன் செய்ய மாட்டான். ஏன்னா, இந்தப் பூஜை எனக்கு எவ்வளவு முக்கியம்னு அவனுக்குத் தெரியும்மா.." என்றவர் அவளிடம் புடவையைக் கட்டுமாறு வலியுறுத்திவிட்டு மற்ற வேலைகளைப் பார்க்க சென்றுவிட்டார்.
ஆனால் மீனாக்ஷிக்குதான் கதிகலங்கியது.
சமையல் அறையில் இடியாப்பத் தட்டை நழுவவிட்டு பிறகு அவனது அவலமான பேச்சையும் முறைப்பையும் வாங்கிக்கட்டி இன்றோடு மூன்று நாட்கள் முடிவடைந்திருந்தது.
இதனில் தனக்குப் பக்கப்பலமாகத் தன்னை எந்நாளும் கைவிடமாட்டார் என்று அவள் பரிபூரண நம்பிக்கை வைத்திருந்த மார்த்தாண்டமும் தங்களின் மூத்தமகனிடம் வம்புக்கட்ட முடியாமல் பூஜை முடிந்ததற்குப் பிறகு அவளை அனுப்பிவிடலாம் என்று கைவிட்டுவிட்டதில் பரிதவித்து இருந்தாள்.
தூத்துக்குடிக்குச் செல்ல வேண்டும் என்று கிளம்பிய சக்திவேலை, பூஜை முடிந்ததும் செல்லுமாறு வற்புறுத்தி அங்கேயே தங்க வைத்துவிட்ட முத்தம்மாளின் மீதும் ஆற்றாமைத் தான் வந்ததே ஒழிய வருத்தம் வரவில்லை.
சக்திவேலோ, மார்த்தாண்டமோ, முத்தம்மாளோ, இது அவர்களின் வீடு.
அவர்களில் எவர் என்ன சொன்னாலும் தான் கட்டுப்படுத்தான் ஆக வேண்டும்!
குறிப்பாகச் 'சின்ன ஐயா' என்று ஊரே பயத்தில் விளிக்கும் சக்திவேலின் கூற்றுக்கு இங்கு மறுபேச்சுப் பேச மார்த்தாண்டமே யோசிக்கும் போது மற்றவர்கள் என்ன சொல்ல முடியும்?
ஆக இன்னும் ஓரிரு நாட்களில் இவர்களுக்கும் எனக்கும் எந்தவித பந்தமும் இல்லாமல் போகும் சூழ்நிலை வரலாம். அதுவரையாவது என்னை மகள் போல் பாவிக்கும் முத்தம்மாளின் பாசமான பேச்சைக் கேட்போமே என்று முடிவெடுத்தவள் அவர் தனக்கென்று வாங்கி வைத்திருந்த பட்டுப்புடவையை அதன் பெட்டியில் இருந்து எடுத்தாள்.
அவளின் பொன்னிறத்திற்குப் போட்டிப் போடும் வகையில், ராணி பிங்க் நிறத்தில் டெம்பில் பார்டர் கொண்ட காஞ்சீபுரம் பட்டுப்படவை [ Rani Pink Kanjeevaram Soft Silk Saree with Temple Zari Border] அவளது கண்களைப் பறித்தது.
அதன் அழகில் இலயித்தவளாய் அதனை வெளியில் எடுத்தவள் ஓரிரு விநாடிகள் அதனை இரசித்துப் பார்த்துவிட்டு முத்தம்மாளின் அன்பை நினைத்து உள்ளம் கசிந்துருக அதனை உடுத்த ஆரம்பிக்க, மீண்டும் அவளின் அறைக்கதவு தட்டப்பட்டது.
திரும்பவும் முத்தம்மாள் தான் வந்திருப்பார் என்று எண்ணி கதவருகில் சென்றவள், "அத்த, கொஞ்சம் வெயிட் பண்றீங்களா, நான் ட்ரெஸ் பண்ணிட்டு இருக்கேன்." என்றாள்.
"நான் பாலா.. அம்மா உங்கக்கிட்ட இதைக் கொடுக்கச் சொன்னாங்க. பட், நான் வெயிட் பண்றேன்."
பாலாவின் குரலைக் கேட்டதும் 'ஐயய்யோ இவரா!' என்று பதைத்தது மீனாக்ஷியும் உள்ளம்.
சக்திவேலைப் பார்த்தால் பேயைப் பார்த்தது போல் அரண்டுப் போவாள் என்றால், பாலாவைப் பார்த்தால் அவன் எதிரே கூட வரமாட்டாள்.
காரணம், அவன் மேல் இருந்த பயம் இல்லை.. மாறாக அந்த இளம் வயதிலேயே அவர்களின் அனைத்து தொழிற்களையும் சாதுரியமாகப் பார்த்துக்கொள்ளும், அனைத்திற்குமே ஏறக்குறைய எம்.டி போன்ற பொறுப்பில் இருந்தவனின் புத்திசாலித்தனமும், எப்பொழுதுமே டிப்டாப்பாக உடையுடுத்தி வலம் வரும் அவனது பெரிய மனிதத் தோரணையுமே அவன் மேல் ஒரு அபாரமான பக்தியையும் மதிப்பையும் கொண்டு வந்திருந்தது.
ஆனால் இவர் எதுக்கு என்னைப் பார்க்க வந்திருக்காரு, அதுவும் எனக்காக வெயிட் பண்றேன்னு சொல்றாருன்னா? ஒருவேளை அவங்க அண்ணா எதையும் சொல்லி அனுப்பி வைச்சிருப்பாரோ!
பயத்துடன் யோசித்தவளாய் மடமடவெனப் புடவையைக் கட்டியவள் கதவைத் திறக்க, அவள் பதற்றமாய்க் கதவைத் திறந்ததிலேயே அவளது உணர்வுகளைப் புரிந்துக் கொண்டவனாய் மென்மையாகச் சிரித்தவன், "அம்மா இந்த ஜ்வெல்லரி பாக்ஸை உங்களிடம் கொடுக்கச் சொன்னாங்க, இதை நீங்க போட்டுக்கணும்னு சொன்னாங்க." என்றான்.
சக்திவேல் அவளை ஒருமையில் தான் அழைப்பான், அதற்குக் காரணம் அவன் அவளை விட ஏழு வயது மூத்தவன்.
கார்த்தி அவளை விட ஒரு வயது மூத்தவனாக இருந்தாலும் அவனும் பன்மையில் தான் அழைத்தான். அது மார்த்தாண்டத்தின் முறையான வளர்ப்பினால் வந்தது.
ஆனால் பாலா? ஏறக்குறைய அவளைவிட நான்கு வயது மூத்தவன். பணக்காரர்கள் எல்லோருமே திமிர் பிடித்தவர்கள், அவர்களைவிட எளியோர்களையும் சிறியவர்களையும் மதிக்க மாட்டார்கள் என்று எண்ணியிருந்தவளின் எண்ணத்தை மாற்றி அமைத்தவன் பாலா. ஆயினும் அவளைப் பன்மையிலேயே அழைத்தான்.
அதனில் மீனாக்ஷிக்கு அவன் மேல் மிகுந்த மரியாதை உருவாகியிருந்தது.
அவன் இவ்வாறு நகைப்பெட்டியுடன் நிற்கவும் தயங்கி தயங்கி அதனை வாங்கியவள், "நான் இங்க வந்தப்பவே உங்கக்கிட்ட சொல்லணும்னு நினைச்சேன். நான் உங்களை விட வயசுல சின்னவ. நீங்க என்னை வாங்கப்போங்கன்னு சொல்றது எனக்கு ரொம்பச் சங்கோஜமா இருக்கு, அதனால் தயவுசெஞ்சு என்னை வா போ-ன்னே சொல்லுங்களேன்." என்றதில், அதிகம் பேசாத பாலா அதற்கும் வெறும் புன்னகையை மட்டுமே தந்துவிட்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்தான்.
'ஹப்பா கடவுளே! ஒரே வயித்தில் பிறந்தாலும் மூணு மகன்களுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கு! இவர் அமைதியின் சொரூபம்னா, கார்த்திப் படு சுட்டி. ஆனால் இவங்களுக்கு மூத்தவரா பொறந்திருக்காரே ஒருத்தர், அவர் சேன்சே இல்லைப்பா! இந்த ஒட்டு மொத்தக் குடும்பத்துக்கும் ஒரே ஆளா சேர்த்து வச்சு பெரும் அடாவடியா இருக்கார்!' என்று மனதிற்குள் உரையாடியவள் நகைப்பெட்டியைத் திறக்க, செக்கச்சிவந்த ரூபி கற்கள் பதித்த தங்க நகை செட் அவளை மெய்மறக்கச் செய்தது.
'ஐயோ! எதுக்கு இவ்வளவு விலை உயர்ந்த நகையை எல்லாம் இந்த அத்தக் கொடுத்தனுப்புறாங்க!'
ஆற்றாமையுடன் கட்டிலில் பொத்தென்று அமர்ந்தவள் விநாடிகள் நிமிடங்களாகக் கடப்பது கூடத் தெரியாமல் உட்கார்ந்திருக்க, கடிகாரம் மணி ஒன்பது என்று அடித்துக் கூறியதும் திடுக்கிட்டது.
"பூஜை ஆரம்பிக்க நேரமாகிடுச்சே!" என்றவளாய் நெக்லஸை அணிந்தவள் அதற்கு ஏற்ற வளையல்கள் மற்றும் தோடுகளையும் அதன் பெட்டியில் இருந்து எடுத்தவளாய் அணிந்தவளாய் அறையைவிட்டு வெளியே வந்தாள்.
அதற்குள் பூஜைக்கு வந்திருந்த மார்த்தாண்டம் மற்றும் முத்தம்மாளின் உற்றார் உறவினர்கள் ஒன்றாய் குழுமியவர்களாய் பூஜை நடக்கும் முன் அறையில் அமர்ந்திருக்க, வந்திருப்பவர்கள் அனைவரையும் தனித்தனியாகக் கவனித்து வரவேற்றுக் கொண்டிருந்தவளின் மென்சிரிப்புடன் கூடிய முகத்தைப் பார்த்தவாறே மாடிப்படிகளில் விடுவிடுவென்று இறங்கி வந்து கொண்டிருந்தான் சக்திவேல்.
'என்னவோ இவ வீடு மாதிரியும், வந்திருக்கவங்க எல்லாரும் இவளுக்குத் தெரிஞ்சவங்க மாதிரியுமில்ல வரவேத்துக்கிட்டு இருக்கா.'
எண்ணியவாறே முன்னறைக்கு வந்தவன் அங்கு இருந்த இருக்கையில் ஒய்யாரமாய் அமர்ந்தான்.
அது வரையிலும் சாந்தமாய் அனைவரையும் புன்முறுவலுடன் வரவேற்றுக் கொண்டிருந்தவளின் உள்ளுணர்வு, சக்திவேல் வந்துவிட்டான் என்பதை உணர்த்தியதோ என்னவோ தன்னையும் அறியாது அந்த அறை முழுவதிலுமாக அவனைத் தேடியவளின் தோற்றம், இருக்கையில் காம்பீரியத்துடன் சாய்ந்து அமர்ந்திருந்தவனைச் சற்றே நிமிரச் செய்தது.
அதனை உணராது சுற்றிலும் தேடியவளின் கண்கள் கடைசியாக அவன் அமர்ந்திருந்த இடத்திற்கு வர, தன்னையே வைத்தக்கண் வாங்காதுப் பார்த்திருப்பவனைக் கண்டதும் திகிலுற்றதில், வந்திருப்பவர்களின் விருப்பத்திற்கேற்ப நீர்மோரும், பழரசமும், தேநீரும் நிரம்பிய கோப்பைகளைக் கொண்ட தட்டைப் பிடித்திருந்தவளின் கைகள் நடுங்கத் தொடங்கின.
அதனைப் பல அடிகள் தொலைவிலும் கண்டுக்கொண்டானோ என்னவோ அவளையே பார்த்தவாறே இருக்கையில் அமர்ந்திருந்தவன் சட்டென எழுந்தவனாய் அவளை நோக்கி நடந்து வந்தான்.
அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் நெஞ்சம் முழுவதும் பயம் கவ்வ, அச்சத்துடன் கண்களை அகல விரித்துப் பார்த்தவாறே நின்றிருப்பவளை நெருங்கியவன் பொறுமையாய், "தட்டைக் கீழப் போட்டுடாத. இங்க கொடு.." என்றான் சன்னமான குரலில்.
திருதிரு என்று விழித்தவளாய் அவனையே பார்த்திருக்க, அவள் பிடித்திருந்த தட்டை தன் கையில் வாங்க எத்தனித்தவனின் முரட்டு விரல்கள் அவளது பிஞ்சு விரல்களின் மீது படிந்தன.
அவனது தொடுகை அன்று மல்லிகைப்பந்தலின் கீழ் அவன் தன்னைச் சிறைப்பிடித்து வைத்திருந்த காட்சியைக் கண்முன் கொணர்ந்ததில், அன்றைய அதிர்ச்சியை இன்றும் உணர்ந்ததில் வெடவெடத்துப் போனாள்.
ஆனால் சக்திவேலுக்கோ அவனே எதிர்பாராவண்ணம் வேறுவிதமான உணர்வுகள் அதிசயமாய்த் தோன்றின.
அவனது நாடி நரம்பெல்லாம் ஏதோ ஒரு புதுவிதமான சிலிர்ப்பு பரவியது போல் இருந்ததில் அவளது விரல்களை இன்னமும் அழுத்தமாய்ப் பற்றியதில் அவளுக்குத் திடுக்கிட, அவளது கைகளின் நடுக்கம் அவனைச் சுயநினைவிற்குக் கொணர்ந்தது.
அதனில் தன்னிலை உணர்ந்தவனாய் அவளின் சலனம் புரிந்து, "வந்திருப்பவங்களை நீ கவனிச்ச வரைக்கும் போதும், மீதியை நாங்கப் பார்த்துக்குறோம்." என்றவாறே தட்டை கையில் வாங்கியவன் அந்த அறையின் ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்த தனது அத்தை மகளைத் தலையசைத்து அழைத்தான்.
அவள் அவனை நெருங்கியதும், "பானு, வந்திருப்பவங்களுக்கு வேண்டியதை செய்யறது வீட்டு ஆளுங்களுடைய கடமை. அதை நீ செய்யாம எதுக்கு மத்தவங்களைச் செய்ய விடுற?" என்றான்.
மற்றவர்களுக்குக் கேட்கக் கூடாது என்று அமைதியாய் அவன் உரைத்தாலும் அவன் பற்களைக் கடித்துக் கொண்டு அவ்வாறு கூறியதில், இரு பெண்களுக்குமே பயம் பிடித்தது.
"சாரி மாமா. இவங்கக் கொடுக்குறாங்கன்னு தான் நான்.."
அவள் சொல்ல வருவதை முடிக்கவில்லை.
"ம்ப்ச். பரவாயில்லை. இந்தாப் பிடி.."
தட்டை அத்தை மகள் பானுமதியின் கையில் வைத்தவன் ஒரு முறை மீனாக்ஷியைப் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர, அவன் பேசியது ஒருவருக்கும் கேட்கவில்லை என்றாலும் மீனாக்ஷிக்கு அவமானத்தில் முகம் சிவந்து போனது.
சிறு வயதில் இருந்தே அவளுக்கு நல்ல பழக்கங்களையும், பாரம்பரியத்தின் மதிப்பையும், பெரிய மனிதர்களுக்கு மரியாதை செய்யும் வழக்கங்களையும் பயில்வித்திருந்தார் அவளது அன்னை.
அதிலும் விருந்தோம்பல் நமது பண்பு என்பதைச் சொல்லிக் கொடுத்திருந்தவர் அதனை அவளுக்குப் பழக்கப்படுத்தி இருக்க, தானாக முன்வந்து அனைவருக்கும் பழரசங்களையும் தேநீரையும் பரிமாறத் துவங்கியவளுக்கு இப்படித் தட்டை தன் கைகளில் இருந்து, அதுவும் விருந்தினர்களுக்கு முன், திடீரென்று பறித்ததில் சங்கடத்துடன் கலந்த வேதனையாகிப் போனது.
அதற்கு மேல் அவ்விடத்தில் நிற்க விரும்பாதவளாய் விடுவிடுவென்று தன்னறைக்குச் சென்றவள் அதற்கு மேல் தாங்கமாட்டாது முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
'இந்தச் சின்ன வயசுல இப்படித் தன்னந்தனியா இந்த உலகத்துல இருந்து கஷ்டப்படணும்னு உனக்கு விதி போல மீனா. உன்னை இப்படித் தனியா விட்டுட்டுப் போனதுக்கு எங்களை மன்னிச்சிடும்மா. எப்படியும் பூஜை முடிஞ்சதும் இவங்க எல்லாம் உன்னை அனுப்பிடுவாங்க. இப்படித் தினம் தினம் அவமானப்படுறதுக்குப் பதிலா நீயாகவே இங்க இருந்து போயிடு மீனா. அதான் உனக்கு நல்லது.’
ஏனோ அசிரீரியாய் அவளது அன்னையின் குரல் ஒலிப்பது போல் தோன்றியது.
அழுகையினூடே, "எங்கம்மா போவேன்? நீங்க அடிக்கடி உங்கக்கூடப் பிறந்த உங்க அண்ணன், அதான் என் மாமாவப் பத்தி சொல்லுவீங்க, ஆனால் அவங்க எப்படி இருப்பாங்கன்னுக் கூடச் சரியா எனக்குத் தெரியாது. இதுல நீங்களும் அப்பாவும் ஆக்ஸிடெண்டுல இறந்து போனது தெரிஞ்சும் என்னைப் பார்க்கக்கூட அவங்க வரலைன்னு சித்தப்பா சொன்னாங்க. அப்படின்னா எனக்குச் சித்தப்பாவை விட்டால் வேற யாரைத் தெரியும்? அங்க போனா நிச்சயம் அவரு என்னை அந்த வயசானவருக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துடுவாரு, அப்புறம் என் வாழ்க்கை நரகம் தானே. அதுக்குப் பேசாமல் செத்து வேணா போயிடறேன்." என்று முணுமுணுத்தவளுக்கு ஏனோ செத்துப்போவதே மேல் என்று தோன்றியது.
"சரிம்மா, பேசாம நானும் உங்களோட வந்துடுறேன். எனக்கு அப்பாவையும் உங்களையும் பார்க்கணும் போல இருக்கு. உங்க மடியில தலைவச்சு அழணும் போல இருக்கு."
கூறியவள் பூஜை முடியக் காத்திருப்பவள் போல் சுவற்றில் தலை சாய்த்தவாறே கட்டிலின் ஒரு ஓரமாய் அமர, சற்று நேரம் கழித்து அவள் அறைக்குள் கதவைத் தட்டிவிட்டு நுழைந்தார் மார்த்தாண்டம்.
அவள் அமர்ந்திருந்த தோரணையைக் கண்டதும் அவருக்குப் புரிந்து போனது.
ஆக நான் எதிர்பார்த்தது போல் சக்திவேல் அமைதியாக இருக்கவில்லை. இந்தப் பெண்ணைத் திரும்பவும் ஏதோ சொல்லிருக்கான்.
'ஏந்தான் அவன் இப்படி இருக்கானோ! அவனது அராஜகத்தை எல்லாம் இந்தச் சின்னப் பொண்ணிடம் காட்டி என்னத்த சாதிக்கப் போறானோ தெரியலை!'
உள்ளுக்குள் சலித்துக் கொண்டவராய், "மீனா." என்று அழைக்க, விட்டத்தைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தவளுக்கு அவர் வந்ததும் தெரியவில்லை, அவர் அழைத்ததும் தெரியவில்லை.
அவளின் நிலை அவருக்குக் கவலையைக் கொடுக்க அவளருகில் வந்தவர் அவளது தோளைத் தொடவும், திருதிருவென்று விழித்தவளாய் அவரை நோக்கினார்.
"மீனா, வேலு.."
அவர் முடிக்கவில்லை, சரசரவென்று அவள் கண்களில் இருந்து வழிந்த நீர் அவருக்குத் தனது மூத்தமகனின் கைங்கரியத்தை எடுத்துரைத்தது.
ஆழ இழுத்து மூச்சுவிட்டவர், அவளைக் கனிவோடு பார்த்தவாறே,
"உன்னைக் காணோமேன்னு வீடு முழுக்க உன் அத்தத் தேடிட்டு இருக்கா மீனா. கடைசியில இங்க இருக்க, அதுவும் அழுதுட்டு. காரணம் என்னன்னு நான் கேட்கப் போறது இல்ல. ஒண்ணு உனக்கு உன் அப்பா அம்மா நியாபகம் வந்திருக்கணும். ஏன்னா இது மாதிரி பூஜை, விசேஷம் எல்லாம் வீட்டில் நடக்கும் போது நமக்குப் பழைய நியாபகங்கள் வரது சகஜம் தானே. இல்லைன்னா அந்தச் சின்ன ஐயா, அதான் என் மூத்த வாரிசு ஏதாவது சொல்லிருப்பான். அதனால மனம் கசந்துப் போய் இப்படி வந்து உட்கார்ந்திருக்க.. ஆனால் மனசுக்குள்ள எதையும் வச்சிக்காம வா ஆத்தா. வந்து சாமியைக் கும்பிடு, உன் மனக்கவலை எல்லாம் தீர்த்து வைக்கிறதுக்கு அவரை விட்டா யாரு இருக்கா? அதுக்குத் தானே இதுமாதிரி பூசையெல்லாம் செய்யறது, வா?" என்றார் ஒரு தந்தையின் பாசத்தோடு.
அவர் தன் அறைக்கு வந்து, அதுவும் தன்னை அன்போடு அழைப்பதைக் கண்டவளுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாய் இருந்தது.
மறுபக்கம் பல ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் மதிப்புமிக்கத் தலைவராக இருப்பவர் முதன்முறையாக இப்படித் திடுமெனத் தன்னைத் தேடி வந்திருப்பதில் பிரமிப்பும் வர, அவரை வருத்தப்படுத்தக் கூடாது என்ற எண்ணத்துடன் அவரைப் பார்த்தவாறே கண்ணீரைத் துடைத்தவள், "சின்ன ஐயா ஒண்ணும் சொல்லைங்க ஐயா, அம்மா அப்பா நியாபகம் தான் வந்துட்டுது. அதான்.." என்றாள் மெல்லிய குரலில்.
"ம்ம்ம். என் பொஞ்சாதியை மட்டும் அத்தைன்னு வாய்க்கு வாய் கூப்பிடற பொண்ணு இன்னும் இந்த ஐயாங்கிறதை விட மாட்டேங்குது.."
மென்மையாய் சிரித்துக் கொண்டவர் அவள் கைப்பற்றி அழைத்தவராய் அறையை விட்டு வெளியே வர, அங்கு விருந்தினர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த சக்திவேலின் கண்கள் அவர்களின் மீது படிய, இருவரின் ஒற்றுமை ஏனோ அவனது மனத்தில் கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் வரவழைப்பதற்கு மாறாக ஒரு அமைதியை வரவழைத்தது.
அது ஏன் என்று அக்கணம் அவனுக்குப் புரியவில்லை.
*****************************
விநாயகர் பூஜை, சங்கல்பம் நவக்கிரகப் பூஜை, அஷ்ட திக் பாலக் பூஜை முதலியவற்றைச் செய்து அதன் பிறகு கலச பூஜை மற்றும் வருண பூஜையும் செய்ததற்குப் பின் சத்யநாராயணப் பூஜையைச் செய்து முடிக்கவும், சுவர்க்கடிகாரம் மணி ஒன்று என்று சத்தமிட்டுக் காட்டியது.
சிலர் காலையில் இருந்தே விரதம் மேற்கொண்டிருந்ததினால் நீராகாரம் எதையும் அருந்தாமல் இருக்க, வந்திருப்பவர்களுக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது.
வழக்கம் போல் அனைவரும் தரையில் விரித்து வைக்கப்பட்டிருந்த ஜமக்காளத்தில் அமரவும், வாழை இலைகள் வைக்கப்பட்டதும் உண்டிகளைப் பரிமாறப் பெண்கள் முன்வரவும், இப்பொழுதும் ஒரு ஓரத்தில் அமைதியாய் நின்றிருந்த மீனாக்ஷியின் அருகில் வந்தார் முத்தம்மாள்.
"போம்மா, போய்ச் சாப்பாட்ட எல்லாத்துக்கும் எடுத்துவை, பரிமாறுப் போ..."
"அத்த, அது வந்து.."
தயக்கத்துடன் கூறியவளின் பார்வை செல்லும் இடத்தை அவர் திரும்பிப் பார்க்க, அங்குத் தந்தைக்கும் ஊர் பெரியவர்களுக்கும் நடுவில் கால் மேல் கால் போட்டு சட்டமாய் அமர்ந்திருந்த சக்திவேலின் மேல் அவளது பார்வை நிலைத்திருப்பதைக் கண்டவர், தங்களுக்கு அருகில் சோறு வைத்திருந்த பாத்திரத்துடன் நிற்கும் பெண்ணை அழைத்தார்.
"சோறை மீனா வைக்கும். நீ போய்க் குழம்பை ஊத்து."
"சரிம்மா." என்ற அந்தப் பெண் சோற்றுப் பாத்திரத்தை மீனாவிடம் கொடுக்க, "நான் வேணா சமையல் அறையில் இருந்து எல்லாச் சாப்பாட்டையும் அதது பாத்திரங்களில் எடுத்து வைக்கிற வேலையைப் பார்க்குறேன். பரிமாறும் வேலையை மத்தவங்கப் பார்க்கட்டும் அத்த.." என்றாள் சற்றுத் தயங்கியவாறே.
"ஏம்மா? காலையில உன்கிட்ட இருந்த தட்டை வாங்கிப் பானுக்கிட்ட வேலு கொடுத்தானே, அத போல இப்பவும் எதுவும் அட்டகாசம் பண்ணுவான்னுப் பயப்படுறியா?"
"இல்லத்த, அப்படி இல்ல.."
"பின்ன எப்படி?"
"***"
"பதில் சொல்லாம நீ இருக்கும் போதே தெரியுது. போ, போய்ப் பரிமாறும் வேலையைப் பாரு.."
தயக்கத்துடன் அவள் சோற்றுப் பாத்திரத்தை வாங்க, அவர்களை விட்டுத் தொலைவில் அமர்ந்திருந்தாலும், மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருப்பவனின் பார்வை மட்டும் இவர்களிடம் நிலைக்க, தன் அன்னை ஏதோ கூறுவதும் அதற்கு மறுப்பாய் தலையசத்தவளாய் பாத்திரத்தை வாங்க மறுத்தவளின் செய்கையும் அங்கு என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதைச் சக்திவேலிற்குப் புரிய வைத்தது.
வலுக்கட்டாயமாக அவளிடம் பாத்திரத்தைக் கொடுத்த அன்னையின் மேல் கோபம் கொண்டவன் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து வெடுக்கென எழ, அவ்வளவு தான் பிடித்திருந்த பாத்திரம் நழுவிவிடுமோ என்று அஞ்சும் அளவிற்கு மீனாக்ஷியின் கைகளில் திரும்பவும் உதறலெடுக்க ஆரம்பித்தது.
'நான் செத்தேன்.'
மனதிற்குள் புலம்பியவளாய் அவனையே பார்த்திருக்க, அவளின் அச்சத்தை அவ்வளவு தூரத்திலும் அவன் உணர்ந்தானோ என்னவோ, என்ன நினைத்தானோ தன் தந்தையையும் ஊர் பெரியவர்களையும் அழைத்தவன் தானும் உணவு உண்ணும் பந்தியில் அமர்ந்ததில் புரிந்து போனது.
ஆகச் சாப்பாடு பரிமாறும் வரை வெயிட் பண்ணிட்டுப் பின் நான் அவருக்குச் சோறு போடும் போது பாத்திரத்தைப் பிடுங்கி யார்கிட்டயாவது கொடுக்கப் போறாரு. அப்பத்தான எல்லார் முன்னாடியும் திரும்பவும் என்னை நல்லா அவமானப்படுத்த முடியும்?
அவள் மனம் அதன் போக்கில் எண்ணத்துவங்க, இதனில் அவளின் தோள் பற்றிப் 'போ' என்பது போல் முத்தம்மாள் தலையசைக்கவும், வேறு வழியின்றித் தன் விதியை நொந்தவளாய் பரிமாறத் துவங்கினாள்.
அவள் ஒவ்வொருவரின் இலையிலும் அவரவர் வயதிற்கு ஏற்ப பாங்காகச் சோற்றைப் பரிமாறுவதைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தவன் தன் இலைக்கு வரவும், அண்ணாந்து அவள் முகம் நோக்க, இருவரின் கண்களும் ஒன்றாகக் கலந்த வேளையில் சக்திவேலின் உதடுகளில் புன்முறுவல் படர்ந்தது.
'போச்சு! சிரிக்கிறாரு!'
எப்பொழுதுமே இகழ்ச்சியாய் சிரிக்கும் அவனது சிரிப்பை அறிந்தவள் உள்ளுக்குள் வெடவெடத்தாலும் சோற்றைச் சிந்தாமல் சிதறாமல் அவனுக்குப் பரிமாறியவள் அடுத்த இலைக்குச் செல்ல, அப்பொழுதும் அவளையே பார்த்திருந்தவனின் கண்கள், தனக்கு அருகில், புடவைத் தடுக்காமல் இருக்க இலேசாக அதனைத் தூக்கி சொருகியிருந்தவளின் பாதங்களில் நிலைத்தன.
செக்கச்சிவந்த நிறத்துடையவளின் பாதங்கள் மிருதுவான செம்பருத்தியாய் மிளிர்ந்தன. அவற்றில் அவள் அணிந்திருந்த கொலுசுகள் செவிகளுக்கு இதமாய்ச் சரசமாய்ச் சிணுங்கின. நகச்சாயம் எதுவும் பூசப்படாத அவளின் பாத விரல்கள் கூடக் கவிதைப் பேசுவது போல் இருந்தது.
அதனில் தரைக்கும் பாதங்களுக்கும் கூடத் தெரியாமல் நடக்கின்றாளோ என்று தோன்றிய எண்ணத்தில், ஆண்மகன்களை அவளது பாதங்கள் கூடப் பித்தனாக்கக் கூடும் என்றே அக்கணம் தோன்றியது.
அவன் தன்னை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டதில் அவனைக் கடந்துவிட்ட நிம்மதியில் பெருமூச்சுவிட்டவள் பரிமாறும் வேலையைத் தொடர, இலேசாக மேலே தூக்கியிருந்த பட்டுப்புடவையின் அடிப்பாகத்தில் துவங்கி மேலே அவனது கண்கள் மெள்ள ஏற, வடித்து வைத்த சிலைப் போல் காட்சியளித்த பெண்ணவளின் ஒவ்வொரு அங்குலமும், கட்டிளங்காளையாய் திமிறிக் கொண்டிருந்த தன்னையே மயக்க ஆரம்பித்ததை அவன் அறியவில்லை.
பட்டுப்போன்ற பாதங்கள், உடலைத் தாங்குமா என்பது போல் மெல்லிய இடை, சிறிது பார்வையை உயர்த்தினால் பார்த்தமாத்திரத்தில் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும் தனங்கள், தன் வலிய உதடுகளைப் பதிக்கத் தூண்டும் சங்கு கழுத்து.
மயில் தோகைப் போல் நீண்ட கூந்தல், மனதைக் கொள்ளைக்கொள்ளும் வெள்ளைச் சிரிப்பு. உயிரை உருக்கும் பருத்திப்போன்ற மிருதுவான கன்னங்கள், கல்லையும் கரைய வைக்கும் காந்தப் பார்வை.
மனம் கவிதையாய் அவள் பின்னே தொடர, சாதாரணத் தோற்றத்திலேயே இவ்வளவு எழிலுடன் மிளிருபவள் அலங்கரித்து வந்தால் கற்பகிரகத்தில் வீற்றிருக்கும் அம்மனே எழுந்து நிற்பாளோ என்று அவன் இதயம் எண்ண, திடுக்கிட்டது அவனது புத்தி.
'சக்தி.. நீயாடா இது? ஊர் முழுக்க எடுத்திருக்கிறது அடாவடியான போலீஸ்னு பேர், ஆனால் இப்போ எல்லாம் மாறிடுச்சு போல இருக்கே? இப்போ இப்படிக் கவிதை மாதிரி வேற சிந்திக்க ஆரம்பிச்சிட்டியா? எப்ப இருந்து இவளை இப்படி அங்குலம் அங்குலமா ரசிக்க ஆரம்பிச்ச. அடேய், மனசை அடக்குடா.'
மூளை எச்சரிக்கை விடுக்க, பரிமாறப்பட்ட உணவை விரைவாக உண்டு முடித்தவன் பந்தியில் இருந்து எழ, அவனது அரவத்தில் மற்றவர்களுக்குப் பரிமாறிக் கொண்டிருந்தவள் திரும்பிப் பார்க்க, ஒரு கையால் நெற்றிப்பொட்டைத் தடவியவாறே அங்கிருந்து நகர்ந்தவனின் தோரணை மீனாக்ஷியை நிமிர்ந்து நிற்கச் செய்தது.
"என்னாச்சு மீனா.. சோறு தீர்ந்துப் போச்சா, பாத்திரத்தை கொண்டா, நான் போய்ச் சோறு எடுத்துட்டு வரேன்."
அருகில் இருந்த பெண் ஒருத்திக் கேட்க, "இல்லை, நானே போய் எடுத்துட்டு வரேன்.." என்றவள் விடுவிடுவென நடந்தவளாய் சமையல் அறைக்குள் நுழைய, அங்குக் கை அலம்புவதற்கு நின்று கொண்டிருந்த சக்திவேலை எதிர்பாராமல் கண்டதும் பாதங்கள் சரட்டென நின்றன.
'இவரு இங்க என்ன பண்ணிட்டு இருக்காரு?'
யோசனையுடன் அவனையே பார்த்தவளுக்கு அவன் நோக்கம் புரிய, அவளை நோக்கி நடந்து வந்தவன், “என்ன?” என்று வினவ, "கை கழுவறதுக்கு வெளியே தண்ணீர் வச்சிருக்காங்க.." என்றாள் அவளுக்கே கேட்காத மெல்லிய குரலில்.
அவள் கூறுவது அவனுக்குச் சரியாகக் கேட்காகவில்லை.
"வாட்?"
"***"
"ம்ப்ச்.. இது வேறையா?"
"***"
அவன் என்ன சொல்ல வருகின்றான் என்பது புரியாமல் போக, கண்களை அகலவிரித்து அவனைப் பார்த்தவள் அமைதியாய் நிற்க, அவளது உயரத்திற்கு ஏற்ப அவளின் முகம் நோக்கி குனிந்தவன், "என்ன சொன்ன?" எனவும், "கை..கை.. கழுவறதுக்கு வெ.. வெளியே த.. தண்ணீர் வச்சிருக்காங்க.." என்றாள் பதற்றத்துடன்.
"இதைத் தான் சொல்ல வந்தியா?"
"ம்ம்ம்."
"உனக்குச் சத்தமா பேசத் தெரியாதா இல்லை தெரியாத மாதிரி நடிக்கிறியா?"
"அப்படி எல்லாம் இல்லை."
"பின்ன, கேட்குற கேள்விக்கு ஒழுங்கா சத்தமா பதில் சொல்றது தான?"
"சாப்பிடறவங்களுக்குக் கைக் கழுவ தண்ணீயை வெளியத் தொட்டில வச்சிருக்காங்கன்னு சொன்னேன்."
"ஏன், நான் இங்க கழுவக் கூடாதா என்ன?"
"இல்லை, நான் அப்படிச் சொல்லலை.."
"பின்ன நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம்?"
"அது.."
"இது என் வீடு.. நான் எங்க கை கழுவணும்னு எனக்குத் தெரியும்.. புரியுதா?"
கூறியவன் சமையல் அறையின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குழாயைத் திறந்து கைகளை அலம்பியவனாய் அவளை முறைத்துப் பார்த்துவிட்டு செல்ல, அவன் சென்றும் பல விநாடிகள் அவ்விடத்திலேயே நின்றிருந்தவள் மெல்லத் திரும்பிப் பார்க்க, அவனுக்கும் அதே உணர்வு தோன்றியதோ என்னவோ அவனும் திரும்பிப் பார்த்தான்.
மீண்டும் இருவரின் கண்களும் சந்தித்துக் கொள்ள, திகைப்படைந்தவளாய் விசுக்கென மறுபக்கம் திரும்பியவளின் வேகத்தில் சக்திவேலின் உதடுகளில் மறுபடியும் புன்னகை அரும்பியது.
அது இகழ்ச்சியான புன்னகையா அல்லது மகிழ்ச்சியில் அரும்பியதா என்று ஆராய்ந்து அறிந்துக்கொள்ளும் நிலையில் அவன் அன்று இல்லை.
அவளது குடும்பத்து பின்னணியும், அவளது பெற்றோரின் மறுமணங்களும் காவலதிகாரியான அவனை அவனது தற்பொழுதைய உணர்வுகளை அறிந்துக்கொள்ள விடவும் இல்லை.
தொடரும்.

Last edited: