JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

'Meenakshi - Shakthivel' - Episode 7

JLine

Moderator
Staff member
மீனாக்ஷி - சக்திவேல்

அத்தியாயம் - 7

பூஜைக்கு வந்திருந்த உற்றார் உறவினர் அனைவரும் சென்றுவிட, அன்று மாலையே தூத்துக்குடியில் உள்ள காவலர் தலைமையகத்திற்குச் செல்ல வேண்டி இருந்ததால் மருதூர்குளத்தில் இருந்து கிளம்பினான் சக்திவேல்.

தனது சிகப்பு நிற ரேங்லர் ரூபிக்கான் [Red Wrangler Rubicon Jeep] ஜீப்பில் ஏறும் நேரம் சற்று நின்றவன் அருகில் நின்ற கார்த்தியிடம் ஏதோ கிசுகிசுக்க, அவன் மருதூர்குளத்தில் இருந்து கிளம்புவது ஒரு விதத்தில் நிம்மதியாய் இருந்தாலும், இனியும் நான் இங்கு இருக்கக் கூடாது என்று முடிவெடுத்திருந்த மீனாக்ஷிக்கு, தம்பியின் செவிகளில் இரகசியம் பேசிய சக்திவேலின் செய்கை பரிதவிப்பைக் கொணர்ந்தது.

பார்த்த நிமிடத்தில் இருந்தே என்னை வெளியே விரட்ட முனைந்தவர் இக்கணம் வரை அமைதியாக இருந்தது இந்தப் பூஜைக்காக மட்டுமே. அதுவும் இப்பொழுது நிறைவேறிவிட்டது.

இனி என்னை இங்கிருந்து விரட்ட அவர் தாமதிக்கமாட்டார் என்று எண்ணியிருந்தவளுக்கு அவன் எதுவுமே பேசாது கிளம்புவது குழப்பமாகத் தான் இருந்தது.

ஆனால் இப்பொழுது இரகசியமாய்த் தம்பியின் செவிகளில் அவன் எதனையோ கூறுவதைப் பார்த்தால் ஏதோ முடிவுடன் தான் செல்கின்றான் என்பது புரிய, இனியும் தாமதிக்கக் கூடாது என்று அவளது ஆழ்மனம் விடாப்பிடியாக முடிவெடுத்தது.

வீட்டினுள் இருந்தவாறே ஜன்னல் வழியாக அவர்களைப் பார்த்திருந்தவள் நீர்த்தட்டியிருந்த கண்களைத் துடைத்தவாறே தன் அறைக்குள் புகுந்தாள்.

அவளைப் பார்த்தும் பார்க்காதது போல் கார்த்தியிடம் விஷயத்தைப் பகிர்ந்துவிட்டு தன் ஜீப்பில் ஏறப் போன சக்திவேல் என்ன நினைத்தானோ திரும்பிப் பார்க்க, அவளது உருவம் ஜன்னலைவிட்டு அகல்வது தெரிந்தது.

ஒரு பக்கம் அவளது குடும்பத்தின் பின்னணி காவலதிகாரியாய் அவனுக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டே இருந்தாலும், ஏனோ இன்று காலையில் இருந்து அவளை உன்னிப்பாகக் கவனித்து வந்ததில் அவளது அப்பாவித்தனத்தையும், கலங்கமில்லாத மனதையும் அவளது கண்கள் வெளிப்படுத்துகின்றதோ என்றும் தோன்றியது.

"அண்ணே, நீங்க கிளம்புங்க, மற்றதை நான் பார்த்துக்குறேன்."

"எதுக்கும் நான் கால் பண்ணும் வரை பொறுமையா இரு கார்த்தி. அதுக்கு முன்ன எதுவும் செய்ய வேண்டாம்."

"ஷுயர்-ண்ணே"

கார்த்தி ஆமோதித்ததும் மீண்டும் ஒரு முறை ஜன்னல் பக்கம் திரும்பிய சக்திவேல் நெற்றிப் பொட்டைத் தேய்த்தவாறே ஜீப்பில் ஏற, அங்குத் தன் அறைக்குள் நுழைந்த மீனாக்ஷியின் எண்ணங்களோ ஒரே இடத்தில் நிலைத்திருந்தன.

'என்னதான் அவர் என்னை இங்க இருந்து துரத்துவதிலேயே குறியா இருந்தாலும், அத்தை என்னை அனாதை மாதிரி தனியா அனுப்ப மாட்டாங்க. ஆனால் நான் இங்க இருந்தா நிச்சயம் என்னால் இந்தக் குடும்பத்தில் பிரச்சனைகள் வரும். அதுவும் இல்லாம என்னைச் சித்தப்பாவிடம் கொண்டு போய் விட்டுவிடுமாறுத்தான் கார்த்தியிடம் ரகசியமா சொல்லிட்டுப் போறாருப்போல. அதுக்கு நான் இடம் கொடுக்கக் கூடாது. அதனால் நைட் வரை காத்திருந்து பிறகு எங்கேயாவது போயிட வேண்டியது தான்.'

மனம் அசைப் போட அணிந்திருந்த பட்டுப்புடவையைக் கழற்றி ஒரு ஓரமாய் மடித்து வந்தவள், தனக்கு வேண்டிய வெகு சில துணிமணிகளை மட்டும் எடுத்து ஒரு பையில் வைத்தாள்.

அவை அனைத்தையுமே முத்தம்மாள் தான் வாங்கிக் கொடுத்திருந்தார், ஆனால் இங்கு வந்த அன்று, தான் அணிந்திருந்த பழைய உடையைத் தவிர வேறு எதுவும் தனதானது இல்லாத நிலையில் உடைகள் இன்றி வெளியேறுவதும் புத்திசாலித்தனம் அல்லவே.

துணிமணிகளைத் தவிர வேறு எதனையும் எடுத்துப் போக மனமில்லாமல் இரவு ஏறும் வரை காத்திருந்தவள், அனைவரும் உணவு அருந்தி முடித்து அவரவர் படுக்கையறைகளுக்குச் செல்ல, நள்ளிரவு கடந்த வேளையில் அறையில் இருந்து வெளிவந்தாள்.

மனிதர்களின் நடமாட்டம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவளாக வீட்டின் பெரிய வாயில் கதவை மெள்ளத் திறக்க, "நீங்க இது மாதிரி எதையாவது செய்வீங்கன்னு அண்ணே சொல்லிட்டுத் தான் போனார். அவரு கெஸ் பண்ணியது மாதிரி சரியா நீங்களும் அதையே செய்றீங்க.." என்ற கார்த்தியின் குரலில் திடுக்கிட்டது.

உடல் பயத்தில் தூக்கிவாரிப் போட திகைத்தவளாய் திரும்பிப் பார்த்தவளைக் கண்டு அவளை நோக்கி நடந்து வந்தவன், "திடீர்னு என் குரல் கேட்டதுக்கே இப்படி உடம்பு முழுக்கத் தூக்கிப் போடுது. இதுல இந்த அர்த்தராத்திரியில் தனியா எங்கப் போறீங்க?" என்றான் அவள் கையில் பிடித்திருந்த பையை ஒரு தடவைப் பார்த்தவாறே.

"...."

"ம்ம்ம்.. சொல்லுங்க, அட்லீஸ்ட் எங்கப் போறதுன்னு ஒரு உத்தேசமாவது இருக்கா, இல்லை கால் போன போக்கிலப் போற மாதிரி ஐடியாவா?"

"அது..."

"நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம். அண்ணாவும் இதையே தான் சொன்னாரு. அந்தப் பொண்ணு எப்படிப்பட்ட பொண்ணு, நல்லவளா கெட்டவளான்னு நமக்கு எதுவும் தெரியாது, ஆனால் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவ முகத்தைப் பார்த்தேன். அவ ஏதோ ஒரு முடிவு எடுத்திருக்கிறது மாதிரி தெரியுது. அது நிச்சயம் இந்த வீட்டைவிட்டு வெளியப் போறதுக்கான முடிவாகத் தான் இருக்கணும். அவளை இந்த வீட்டை விட்டு அனுப்புங்கன்னு நான்தான் சொன்னேன், ஆனால் அதுக்காக அவளா ஏதாவது தப்பான முடிவு எடுத்துடக் கூடாது. அதனால் நீ எதுக்கும் அவள் மேல் ஒரு கண்ணை வச்சிக்க, மற்றதை நான் பார்த்துக்குறேன்னு சொல்லிட்டு தான் போனார். அவர் நினைச்ச மாதிரி, இதோ நீங்களும் பையைத் தூக்கிட்டு கிளம்பிட்டீங்களே."

கூறியவனாய் அவளது பையை வாங்கியவன், "எதுவா இருந்தாலும் காலையில் பேசிக்கலாம்.. வாங்க.." என்றுவிட்டு அவள் அறைக்குள் சென்று பையை வைத்தவனுக்கு, இதற்கு மேல் என்ன செய்வதென்று அறியாது விழித்துக் கொண்டிருந்தவளைக் கண்டு பரிதாபமாகிப் போனது.

"தூங்குங்க மீனா, மற்றதைப் பிறகு பார்த்துக்கலாம். குட் நைட்.."

கூறியவனாய் அவன் வெளியேற, கதவை சாத்திவிட்டுக் கட்டிலில் மெதுவாய் அமர்ந்தவளுக்குக் கண்ணீர் கரைபுரண்டு வந்தது.

அவர் ஊருக்கு வந்த நாளில் இருந்தே என்னைப் போ போன்னு துரத்திட்டு இருந்தவர் இப்போ போகாதன்னு ஏன் சொல்லணும்? ஒரு வேளை என் மேல் அவருக்குப் பரிதாபம் வந்துடுச்சோ, அதான் இப்படிச் சொல்லிட்டு போயிருக்காரா? என்று அவள் புத்தி பலவாறு யோசிக்க, ஆனால் சக்திவேல் கூறிய ஒரு விஷயத்தைக் கார்த்தி அவளிடம் சொல்லாமல் மறைத்திருந்ததை அவள் அறியவில்லை.

"என்னத்தான் பாலா அவளைப் பற்றி விசாரிச்சிருந்தாலும் நானும் கொஞ்சம் விசாரிக்கிறேன் கார்த்தி. ஏன்னா பாலாவுக்கு நான் கொடுத்திருந்த டைம் ரொம்பக் கம்மி, அதுக்குள்ள என்ன முடியுமோ அந்தளவுக்கு மட்டுமே அவன் விசாரிச்சிருக்கலாம். எனிவேய்ஸ் எப்படி இருந்தாலும் அவ இங்க இனி இருக்கக் கூடாது, ஆனால் அதுக்காக அவ ஏதும் ஏடாகூடமா செய்யவும் கூடாது. அப்படி அவ ஏதாவது செஞ்சுட்டா அது நம்ம குடும்பத்துக்குத் தான் கெட்டப் பேரு.. முக்கியமா அப்பாவுக்கு. அதனால் நான் சொல்ற வரை நீ அவ மேல ஒரு கண்ணு வச்சிக்கோ.."

சக்திவேல் இவ்வாறு கூறியதை கார்த்தி மறைத்துவிட்டான்.

அதை அறியாத பேதையாகக் கட்டிலில் அமர்ந்திருந்தவள் அப்படியே தலைசாய்க்க, அங்கு தூத்துக்குடியில், அவ்விரவிலும் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டுப் பின் தனது வீட்டினை நோக்கி ஜீப்பை செலுத்திக் கொண்டிருந்த சக்திவேலின் எண்ணம் முழுமையும் ஆட்கொண்டிருந்தது மீனாக்ஷியின் நினைவுகள் தான்.

தான் அவளது குரலை முதன்முதலாகத் தொலைபேசியில் கேட்ட நாளில் இருந்து இன்று மாலை அவளைப் பார்த்திருந்தது வரை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாகச் சிந்தித்தவாறே தனது ஜீப்பை செலுத்திக் கொண்டிருந்தவனைத் திடீரென்று கிறீச்சென்ற சத்தத்துடன் பிரேக்கிட்டு நிற்கச் செய்தது அந்த விபரீத ஓசை.

நள்ளிரவு கடந்து ஏறக்குறைய மணி ஒன்றாகி இருக்க, சாலை விளக்குகள் மட்டும் தூரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிந்து கொண்டிருக்க, ஏறக்குறைய காரிருளைப் போர்த்தியது போல் கருங்கும்மென்று கிடந்த வீதியின் ஒரு முகனையில் கட்டப்பட்டிருந்த வீட்டினுள் இருந்துக்கேட்டது அந்த அலறல் ஒலி.

ஒரு பெண் வீறிட்டு கத்தும் சத்தம்.

சாலையில் அந்நேரத்தில் வாகனங்கள் எதுவும் இல்லாது வெறிச்சோடிக் கிடக்க, தனது ஜீப்பை ஒரு ஓரமாக நிறுத்திய சக்திவேல் சுற்றும் முற்றும் பார்த்தவன், ஜீப்பைவிட்டுக் கீழிறங்கினான்.

ஒரே ஒரு முறைதான் அந்தப் பெண் அலறியது போல் தோன்றியது. அதற்குப் பிறகு தான் கேட்டது உண்மையா அல்லது பிரம்மையா என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு மயான அமைதி.

மீண்டும் அனைத்துப் பக்கங்களிலும் பார்த்தவனுக்கு வெகு தூரத்தில் இரு சக்கர வாகனங்கள் செல்வது போல் சத்தங்கள் கேட்க, ஆயினும் அந்தச் சாலையில் அவன் கண்ணுக்குப் பட்டதெல்லாம் வெறும் இருட்டு தான்.

மீண்டும் ஜீப்பினுள் ஏறி அமர்ந்தவன், சில விநாடிகள் கண்களை மூடி சத்தம் எந்தத் திசையில் இருந்து வந்திருக்கக் கூடும் என்று கூர்ந்து ஆய்வு செய்ய, கழுத்தை சற்று இடது புறமாகத் திருப்பியவாறே கண்களைத் திறந்தவனின் பார்வையின் வட்டத்தில் விழுந்தது, அந்த இரண்டு மாடிக்கட்டிடங்கள் கொண்ட வீடு.

அது சாதாரண நடுத்தரவர்க்கத்தைச் சார்ந்த மக்கள் வசிக்கும் பகுதி.

ஒரு முறை அவ்வீட்டைக் கூர்ந்துப் பார்த்தவன் சட்டென ஜீப்பைக் கிளப்பியவனாய் அவ்வீட்டு வாயிலின் முன் நிறுத்திவிட்டு இறங்க, அதே சமயம் சொல்லி வைத்தார் போன்று அவ்வீட்டினுள் பளீர் பளீர் என்று மின் விளக்குகள் உயிர் பெற்றன.

விடுவிடுவென நடந்தவன் வீட்டின் அழைப்பு மணியை அடிக்க, நிமிடங்கள் சில கடந்து ஐம்பது வயதைக் கடந்ததைப் போல் தோற்றம் அளிக்கும் ஒரு பெண்மணிக் கதவைத் திறந்தார்.

அவரது முகத்தில் அவ்வளவு கலக்கம்! கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருக்க, அவனது சந்தேகம் உறுதியானது.

"நான் ASP சக்திவேல். ஐ மீன் அடிஷனல் சூப்பிரண்டண்ட் ஆஃப்போலீஸ். இந்த வீட்டில் இருந்து யாரோ அலறும் சத்தம்.."

அவன் முடிக்கவில்லை.

"சா.. சா. சார், அது நா. நான் தான் சார்."

"என்னாச்சு?"

"உள்ள வாங்க சார்.."

கூறிய அந்தப் பெண்மணி விடுவிடுவென நடந்தவராய் அந்த வீட்டின் ஒரு அறையை நோக்கி நடக்க, இந்த நள்ளிரவை கடந்த வேளையில் போலீஸ் என்ற வார்த்தையைக் கேட்டதும் அடையாள அட்டையைக் கூடக் கேட்காமல் தன்னை வீட்டிற்குள் அழைத்துச் செல்பவரை நினைத்து சக்திவேலிற்கு ஆச்சரியமாய் இருந்தது.

அவர் பின் அவனும் செல்ல, அங்கு ஒரு அறையை அடைந்த அந்தப் பெண்மணி அதன் வாயிலில் நின்றவாறே, "சார், அங்க அங்க.." என்று அழுகுரலில் தடுமாறினார்.

என்ன என்பது போல் உள்ளே எட்டிப் பார்த்தவனுக்கு அதிர்ச்சியானது.

அறையினுள் ஒரு வாலிபன் தூக்கில் தொங்கி இறந்து போயிருந்தான்.

அலைபேசியை எடுத்து எவரையோ அழைத்தவன் தற்கொலையைப் பற்றிய செய்தியை கொடுத்தவனாய் திரும்பி அந்தப் பெண்மணியிடம் வந்தவன் விசாரிக்க ஆரம்பிக்க, அவரால் அதிர்ச்சியிலும் அழுகையிலும் முதலில் பேசவே முடியவில்லை.

அவரை ஆறுதல் படுத்தியவன் தைரியம் கொடுக்க, ஒரு வழியாகத் தடுமாறியவாறே சொல்ல ஆரம்பித்தார்.

"சார், என் பேரு விசாலாட்சி சார். நான் இங்க கிட்டத்தட்ட முப்பது வருஷமா வேலை செய்யறேன். இந்தப் பையன் பேரு ராகேஷ். இவங்க அப்பாவும் அம்மாவும் போன வாரம் தான் அமெரிக்காவுல இருக்குற அவங்க மகள் ரேவதி வீட்டுக்குப் போனாங்க. அந்தப் பொண்ணு மாசமா இருக்கு, அதைக் கவனிச்சிக்கிறதுக்காகத் தான் போயிருக்காங்க. எனக்கு இங்க பக்கத்துல தான் வீடு, ஆனா ராகேஷ் தம்பிய கவனிச்சிக்கிறதுக்காக நீ இங்கேயே இருந்துடுன்னு ஐயா சொல்லிட்டுப் போனதால நான் இங்க தான் தங்கி இருக்கேன்.”

சற்று நிறுத்தியவர் ஒரு சில நொடிகளுக்குள் தன்னைச் சமன்படுத்திக் கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தார்.

“காலேஜில் இருந்து திரும்பி வந்த தம்பி, ரூமுல உட்கார்ந்து வீடியோ கேம்ஸு விளையாடிட்டு இருந்தாப்புல. நான் ராத்திரி சாப்பாட்டைச் சமைச்சு முடிச்சிட்டு தம்பியையும் சாப்பிடச் சொல்லிட்டு என் ரூமுக்குள்ள போகலாம்னு நினைச்சப்ப, தம்பியோட ப்ரெண்ட்ஸுங்க வந்தாங்க. தம்பி தான் கதவைத் திறந்தாப்புல. என் ஃப்ரெண்ட்ஸ் கொஞ்சம் நேரம் இங்க இருந்துட்டு போவாங்க, நீங்க போய்ப் படுங்கன்னு தம்பி சொன்னாப்புல. அதான் நான் படுக்கப் போயிட்டேன். மணி கிட்டத்தட்ட பன்னிரெண்டரை ஆனப்ப யாரோ பெரிய கதவைத் திறக்கற சத்தம் கேட்டுச்சு. சரி அவர் ப்ரெண்ட்ஸ் எல்லாம் கிளம்புறாங்க போல இருக்குன்னு நினைச்சுட்டு, எதுக்கும் கதவை சாத்திட்டாரான்னு பார்க்கலாம்னு வெளிய வந்தேன். ஆனால் பெரியக்கதவு உள்பக்கமா பூட்டாமல் இருந்துச்சு.”

நிறுத்தியவர் என்ன நினைத்தாரோ சமாளிக்க முடியாமல் திரும்பவும் அழ, அவரை மீண்டும் சமாதானப்படுத்திய சக்திவேல் மேற்கொண்டு கூறுமாறு ஊக்கப்படுத்தினான்.

“தம்பியோட ப்ரெண்ட்ஸ் போனவங்க திரும்பியும் வருவாங்களோ, அதான் கதவைப் பூட்டாமல் தம்பி விட்டுட்டாரோன்னு தோணுச்சு. அதனால் நானும் என் ரூமுக்குப் போயிட்டேன், ஆனால் அதுக்குப் பிறகு எந்தச் சத்தமும் இல்லை. ஒருவேளை தம்பி கதவைப் பூட்டாமலேயே தூங்கிடுச்சோன்னு நினைச்சிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வெளியே வந்தேன். அப்பவும் கதவு உள்பக்கமா பூட்டாம இருக்கவும், நானே கதவை பூட்டிட்டு என் ரூமுக்குப் போகலாம்னு நினைச்சப்போ தம்பி ரூம் கதவு காத்துல அசைஞ்ச மாதிரி இருந்துச்சு. எனக்குத் தெரிஞ்சு தம்பி ரூம் கதவை சாத்தாம தூங்கவே தூங்காது. அதான் என்னன்னுப் பார்க்கலாம்னு வந்து கதவைத் தட்டினேன், ஆனால் கதவு தானா தொறந்துக்கிச்சு, அப்பத்தான்.."

கூறியவர் அதற்கு மேல் பேச முடியாதவராய் கதற ஆரம்பிக்க, இருந்தும் ஆதரவாக சக்திவேல் அவரது தோளை தொடவும், சிறிது நேரத்தில் தன்னைத் தேற்றிக் கொண்டவர், "சாயந்தரம் வரைக்கும் நல்லா இருந்த தம்பி ஏன் இப்படித் திடீர்னு தற்கொலை செஞ்சிக்கிடுச்சுன்னு தெரியலைங்க சார். அதான் தாங்க முடியாமல்.." என்று முடிக்காமல் விட்டார்.

"ராகேஷோட ஃப்ரெண்ட்ஸ் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா?”

“இல்லை சார். நான் அவருடைய ப்ரெண்டுங்க யாரையும் பார்த்ததே இல்லை.”

“இன்னைக்கு வந்தவங்க?”

"இல்லை சார், அவங்களையும் நான் சரியா பார்க்கலை."

"ஏன்?"

"காலிங் பெல் சத்தம் கேட்டு நான் ரூமைவிட்டு வெளிய வந்தேன், ஆனால் தம்பி தான் என் ஃப்ரெண்ட்ஸ் தான் வந்திருக்காங்க, நீங்க போங்க, நான் பார்த்துக்குறேன் சொல்லிடு அனுப்பிடுச்சு."

"ஸோ, நீங்க அவங்க முகத்தைக் கூடப் பார்க்கலை. சரி, அட்லீஸ்ட் எத்தனை பேரு இருப்பாங்கன்னு சொல்ல முடியுமா?"

"நான் என் ரூமுக்குள்ள போகும் போது அவங்க பேச்சுச் சத்தம் சன்னமா கேட்டுச்சு சார், அதை வைச்சு பார்க்கும் போது எப்படியும் மூணு நாலுப் பேர் இருப்பாங்கன்னு தோணுது."

“முப்பது வருஷமா இந்த வீட்டுல வேலைப் பார்க்குறேன்னு சொல்றீங்க, ஆனால் ராகேஷோட ஃப்ரெண்ட்ஸ் யாரையும் உங்களுக்குத் தெரியாதுன்னு சொல்றீங்க. இதுல இன்னைக்கு வந்தவங்களையும் சரியா பார்க்கலைன்னு சொல்றீங்களே. அதை நான் எப்படி நம்புறது?”

அவனது கூற்றுக்கும் கேள்விக்கும் அவர் சற்று தயங்கவே சக்திவேலின் நெற்றிச்சுருங்கியது.

"எதுவா இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்க, அப்பத்தான் ஏன் ராகேஷ் தற்கொலை வரை போனாருன்னு என்னால் கண்டுப்பிடிக்க முடியும்."

"சார், அது வந்து.."

"ம்ம் சொல்லுங்க.."

“சார், நான் இந்த வீட்டுல வேலை செய்யற பொம்பளை. நான் எப்படி இந்த வீட்டு விஷயங்களை..”

தயங்கியவரை அருகில் இருந்த இருக்கையில் அமரச்செய்த சக்திவேல் அந்த இளைஞன் தூக்கில் தொங்கியவாறே இறந்துக்கிடக்கும் அறையை நோக்கி தலையசைத்தவனாய், “அங்க இறந்திருக்கிறது கிட்டத்தட்ட பொறந்ததில் இருந்து நீங்க பார்த்து வளர்ந்த பையனாகத் தான் இருக்கும்னு நினைக்கிறேன். அவன் இறந்ததுக்குக் காரணம் கண்டுப்பிடிக்க வேண்டாமா? நீங்க சொல்றதுல தான் எல்லாமே இருக்கு. அதனால் தயங்காமல் சொல்லுங்க..” என்றான் ஒரு காவலதிகாரியின் தோரணையுடன்.

அவனது கம்பீரத்தில் அந்தப் பெண்மணிக்கும் தெம்பு வந்திருக்க வேண்டும் போல் சடசடவெனப் பேச ஆரம்பித்தார்.

"சார், இந்த வீட்டு ஐயா, அதான் ராகேஷ் தம்பியோட அப்பா மிலிட்டிரியில் இருந்தவரு. அவரு ரொம்பக் கண்டிப்பானவர். புள்ளைங்க தோளுக்கு மேல வளர்ந்துட்டாலும் பொது இடம்னுக் கூடப் பார்க்காமல் கண்டிக்கிறேன் பேர்வழின்னு கன்னம் கன்னமா அறையரவர் அவர். அந்த அம்மா பாவம் ஒரு வாயில்லாத பூச்சி, புள்ளைங்களை அவர் அடிக்கிறதைக் கூடத் தடுக்கத் தைரியம் இல்லாம தனியா அழுதுப் புலம்புவாங்க. இதுல இந்த வீட்டுல ஒரு சட்டம் இருக்கு. அவங்க புள்ளைங்களுக்கு ப்ரெண்டுன்னு யாரும் இருந்தாலும் முதல்ல அவங்களை ஐயா தான் சந்திப்பாரு, அவர் உத்தரவுக் கொடுத்ததுக்கு அப்புறம் தான் அவங்க அந்தப் புள்ளைகளோட பழகணும். ஆனால் அப்படியும் யாரும் எந்த ப்ரெண்டையும் இங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வரக் கூடாது. அப்படி ஒரு கண்டிப்பான பேர்வழின்னா பார்த்துக்கங்களேன். கிட்டத்தட்ட ஒரு ஜெயில் மாதிரியான வாழ்க்கை தாங்க என் புள்ளைங்களுக்குன்னு அம்மா எத்தனையோ முறை சொல்லி நான் கேட்டிருக்கேன்.......

அவங்க மக ரேவதிக்குக் கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகிடுச்சு, ஆனா இவங்களை அந்தப் பொண்ணு ஒரு தடவைக் கூட அமெரிக்காவுக்கு வாங்கன்னு கூப்பிடவே இல்லைன்னா அவங்க அப்பா மேல அதுக்கு எவ்வளவு வெறுப்புன்னு பார்த்துக்கங்க. இப்போ அந்தப் பொண்ணு கர்ப்பமா இருக்கு, ஆனாலும் நாங்களே பிரசவம் பார்த்துக்குறோம், நீங்க வரவேண்டாம்னு சொல்லிடுச்சுன்னு அம்மா என்கிட்ட சொல்லி அழுதாங்க. ஆனால் அந்த ஐயா தான் பிடிவாதமா நாங்க வருவோம்னு சொல்லி அந்தப் பொண்ணை வற்புறுத்தி விசா எல்லாம் எடுத்து, இப்போ அங்க போயிருக்காங்க. இது மாதிரியான சூழ்நிலையில வளர்ந்த அந்தப் பையன் திடீர்னு ப்ரெண்டுகளைக் கூட்டிட்டு வந்ததே எனக்குப் பெரிய ஆச்சரியம். இதுல அவங்க யாரு எப்படின்னு எனக்கு எப்படிச் சார் தெரியும்?"

"சரி, நீங்க மட்டும் தான் இங்க இருக்கீங்களா இல்லை உங்க குடும்பத்தினர் யாரும் உங்களோட தங்கி இருக்காங்களா?

"இல்லை சார். நான் மட்டும் தான்."

"உங்களுடைய ஃபேமிலி?

"சார், எனக்கு வீட்டுக்காரர் இல்லை. அவர் இறந்து போய்ப் பத்து வருஷத்துக்கு மேல ஆகிடுச்சு. எனக்கு ஒரே மகன் தான், அவனும் மும்பையில் வேலை செய்யறான். வருஷத்துக்கு ஒரு தடவை தான் அவனுக்கு லீவுக் கிடைக்கும், அதுவும் ஒரு வாரம் தான்."

"அப்போ உங்க மகன் உங்களைப் பார்க்க வருவாரா?"

"ஆமா சார். லீவுக் கிடைக்கும் போது வருவான். என் கூட ஒரு வாரம் தங்கிட்டு பிறகு மும்பை போயிடுவான்."

"அவர் பேர் என்ன? அவருக்கு என்ன வயசு?"

"ஏன் சார் அவனைப் பத்திக் கேட்குறீங்க?"

"சும்மா தான், சொல்லுங்க."

"அவன் பேரு கதிரவன். அவனுக்கு இருபத்தி ஐஞ்சு வயசு சார்."

"எப்போ உங்க மகன் கடைசியா இங்க வந்துட்டுப் போனார்?"

"சார், நீங்க என் மகன் மேல சந்தேகப்படுறீங்களா?"

"இல்லை, ஆனால் கேட்கறதுக்குப் பதில் சொல்லுங்க.."

"எட்டு மாசத்துக்கு முன்னாடி வந்துட்டுப் போனான். இனிமே அடுத்த வருஷம் தான் வருவேன்னு சொல்லிட்டுப் போயிருக்கான் சார்."

"ஆக, சமீபமா உங்க மகன் இங்க வரலை?"

"இல்லை சார்."

ஏனோ அவர் கூறுவதில் சக்திவேலின் மனம் உடன்படவில்லை.

இருந்தும் அவரை அதற்கு மேல் கேள்விகள் எதனையும் கேட்காமல் விட்டவன், "இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த ஏரியா போலீஸ் ஆஃபிஸர்ஸ் வந்துடுவாங்க, அதற்குள் நான் கொஞ்சம் வீட்டைச் சுற்றிப் பார்க்கலாமா?" என்றான்.

சரி என்ற அந்தப் பெண்மணி வீட்டைச் சுற்றிக் காட்டவும், அவனது மனம் அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொள்ள, ஏறக்குறைய பதினைந்து நிமிடங்கள் கழித்துக் காவலதிகாரிகள் அங்குக் கூடியனர்.

அவர்களுடன் யுகேந்திரனும் இணைந்து வீட்டினுள் நுழைய, சக்திவேலை நெருங்கியவன், "என்ன சக்தி, இறந்துப் போன பையனுடைய வயது இருபத்தி ரெண்டுன்னு கேள்விப்பட்டேன்.." என்றான் சற்று இரகசியமாய்.

"ம்ம்ம்.." என்று மட்டும் கூறியவன் மீண்டும் அந்தப் பெண்மணியை அழைக்க, அவர் அவர்கள் இருவரையும் நெருங்கியதும், "ராகேஷுடைய அம்மா அப்பாவுக்குச் சொல்லச் சொன்னேனே, சொல்லிட்டீங்களா?" என்றான்.

"சொல்லிட்டேன் சார். அந்த அம்மா அதிர்ச்சியில மயக்கம் போட்டுக் கீழே விழுந்துட்டாங்க. இன்னும் கொஞ்சம் நேரத்துல என்னைக் கூப்பிடுறேன்னு அவங்க பொண்ணு சொல்லிட்டு ஃபோனை வச்சிடுச்சு."

"ஒகே.." என்று மட்டும் கூறியவன் யுகேந்திரனை அழைத்துக் கொண்டு வேறு பக்கம் சென்றவனாய், "யுகா, எதுக்கும் இந்த லேடியைக் கொஞ்சம் வாட்ச் பண்ண ஆளுங்களை ஏற்பாடு செய்.." என்றான்.

"ஏன் சக்தி?"

யுகேந்திரனுடைய கேள்விக்குச் சில விளக்கங்களைக் கொடுத்தவன்,

"இங்க வீட்டுக்கு ராகேஷ் ஃப்ரெண்ட்ஸைக் கூட்டிட்டு வந்ததா சொல்றாங்க. ஆனா அவங்க யாரையும் நான் பார்க்கலை, அவங்களை அடையாளம் காட்டுறதுக்கு வழியே இல்லைங்கிற மாதிரி பேசுறாங்க. எதுக்கும் அவங்க மகனைப் பத்தி விசாரிக்கணும் யுகா. அவன் உண்மையில் மும்பையில தான் இருக்கானா, எப்போ தூத்துக்குடிக்கு வந்தான், எவ்வளவு நாள் இங்க தங்கியிருந்தான்னு விசாரிக்கணும். அண்ட் ஆல்ஸோ அவனுடைய ஆலுபையும் [alibi] பார்க்கணும்." என்றவன் மேற்கொண்டு சில விஷயங்களைப் பற்றிப் பேசிவிட்டு வெளியே கிளம்ப, அவனைத் தொடர்ந்து வந்த யுகேந்திரனின் வினாவில் சக்திவேலின் நடை நின்றது.

“சக்தி, I need to ask you something. ஆனால் அது நம்ம வேலை சம்பந்தப்பட்டது இல்லை.”

“தென்?”

“மீனாக்ஷியைப் பற்றி விசாரிச்சியா?”

"இப்போ எதுக்கு இந்தக் கேள்வி யுகா?"

"இப்போ எதுக்குன்னா?"

"ம்ப்ச், இப்போ அவளைப் பத்தி என்ன கேள்வின்னு கேட்டேன்."

"அப்படின்னா நீ அந்தப் பொண்ணு மீனாக்ஷியைப் பத்தி விசாரிக்கவே போறதில்லையா?"

"நோ.."

"அப்ப எதையும் முழுசா தெரிஞ்சிக்காம அந்தப் பொண்ணை வீட்டை விட்டு துரத்தப் போற, ரைட்?"

"துரத்தப் போறதில்லை.."

"பின்ன?"

"அனுப்ப போறேன். ஐ மீன் நானில்லை, எங்க அப்பாவே அவளை அனுப்ப ஏற்பாடு செய்யப் போறேன்."

"ஏன்டா நீ இப்படி இருக்க?"

"நான் இப்படித்தான்னு என்னைச் சந்திச்ச முதல் நாளே உனக்குத் தெரியும் யுகா.."

"யெஸ் எனக்குத் தெரியும். நீ ஒரு அடாவடியான போலீஸ் ஆஃபிஸருனு எனக்குத் தெரியும், ஆனாலும் பாவம்டா அந்தப் பொண்ணு.."

"ஹேய், நீ அவளைச் சந்திச்சதே இல்லை, ஆனாலும் அவ மேல பாவப்படுற. ஒரு போலீஸ் ஆஃபிஸரா, அதுவும் Deputy Superintendent of Police-அ இருந்துட்டு.."

"நீயும் போலீஸ் தான். ஆனால் நீ வேற, நான் வேற சக்தி.."

"Yes, very true. அதனால் அவளைப் பற்றிய டிஷ்கஷன் இனி நமக்குள்ள வேண்டாம் யுகா."

கூறியவன் அத்துடன் பேச்சு முடிந்தது என்பது போல் தன் ஜீப்பினுள் ஏறினான்.

அவனது அரங்கத்தனத்தையும் பிடிவாதத்தையும் நினைத்து வருந்தியவனாக யுகேந்திரனும் தன் வாகனத்தில் ஏற, இருவரும் அவரவர் வீட்டிற்குச் செல்லும் சாலைகளில் பிரிய, தன் ஜீப்பை நிதானமான வேகத்துடன் செலுத்திக் கொண்டிருந்த சக்திவேலின் எண்ணங்களை இக்கணம் ஆட்கொண்டது மீனாக்ஷியின் எழிலுருவமும், உண்மையை மட்டுமே பேசுகின்றனவா என்று ஐயுறவுகொள்ள வைக்கும், ஆத்மாவையே ஊடுருவும் அவளது கண்களும்.

'அங்குக் கார்த்தியிடம் சொல்லிவிட்டு வந்ததற்கு மாறாக இங்குப் பேசிக் கொண்டிருக்கிறாயே சக்தி. அவளைப் பற்றி நீயே விசாரிக்கப் போவதாகத் தானே அவனிடம் சொல்லிட்டு வந்த, இப்போ என்னவோ அதைச் செய்யவே போறதில்லைங்கிற மாதிரி யுகாக்கிட்ட சொல்லிட்டு வர.'

அவன் மனசாட்சி அவனைக் கேள்விக் கேட்டது.

இடது கையால் ஜீப்பின் ஸ்டியரிங்கைப் பிடித்திருந்தவன், வலது கை முழங்கையை ஜன்னலில் வைத்தவாறே நெற்றிப் பொட்டையைத் தடவ, அவனது மனம் இதயம் புத்தி என்று அனைத்தையும் ஆக்கிரமித்திருந்தவளின் கரங்கள் தனக்கு உணவு பரிமாறும் வேளையில் நடுங்கிய காட்சி மனக்கண்களின் முன் தோன்ற, அவனையும் அறியாது அவனது முகம் மலர்ந்தது.

அக்கணம் அவளைப் பற்றிய உண்மைகளை நீ எப்படியும் விசாரித்துத் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்று அவன் அறிவு அவனுக்கு உத்தரவிட ஆரம்பித்ததில், மறுநாள் பொழுது புலர்ந்ததுமே நம்பகமான ஒரு கீழ்நிலை காவலரை அழைத்தான்.

தொடரும்.

References:

An alibi is a claim or proof that a person was somewhere else when a crime or other event occurred. It's used as a defense in legal cases to demonstrate that the accused could not have been at the scene of the crime. - ஒரு ஆலுபை என்பது குற்றம் நடந்தபோது ஒருவர் வேறு எங்காவது இருந்தார் என்பதற்கான கூற்று அல்லது ஆதாரமாகும். குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் நடந்த இடத்தில் இருந்திருக்க முடியாது என்பதை நிரூபிக்கச் சட்ட வழக்குகளில் இது ஒரு பாதுகாப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
Last edited:

Hanza

Member
Ava enge pona unakku enna da Shakthi… ne romba over ah pannittu irukka… 😏😏😏

Antha friends…
Shakthi varum podhu avan kathula ketta antha motorbike sound…
Ellam connect aaguthe…

Antha Velaikkara amma edhum maraikkirnagala??? Avar magan mele doubt thirumbuthe…
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top