JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

'Meenakshi - Shakthivel' - Episode 8

JLine

Moderator
Staff member
மீனாக்ஷி - சக்திவேல்

அத்தியாயம் - 8

சக்திவேலின் உத்தரவுப்படி, அந்தக்காவலரும் மீனாக்ஷியின் பின்னணியை அவளது பெற்றோர் பிறந்த ஊர்களிலும், அவர்கள் வாழ்ந்த ஊரிலும் விசாரித்தவர் அனைத்தையும் அவனிடம் பகிர்ந்தார்.

"சார், ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த எழிலரசியும், தலித் சமூகத்தைச் சேர்ந்த சங்கரும் ஒண்ணா ஒரே காலேஜில் படிச்சிருக்காங்க சார். படிக்கும் போதே ரெண்டு பேருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டிருக்கு, அப்புறம் அது காதலா மாறியிருக்கு. ஆனா எழிலரசியுடைய வீட்டுக்கு இது தெரிஞ்சதும் சங்கரைக் கடத்திட்டுப் போய் அடி அடின்னு அடிச்சு வெளுத்துருக்காங்க. பிறகு எழிலரசியை விட்டுடணும்னு சொல்லி அவரை மிரட்டி அனுப்பி விட்டுருக்காங்க. சங்கரும் வீட்டுக்கு ஒரே பிள்ளை, அதனால் அவருடைய பெத்தவங்க இதெல்லாம் வேண்டாம்னு அழுது அவருடைய மனசை மாத்தி வேற ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க. அவங்க பேரு தான் சுந்தரி. கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் கழிச்சு சங்கருக்கும் சுந்தரிக்கும் ஒரு குழந்தை, அதாவது பெண் குழந்தைப் பிறந்திருக்கு. ஆனால் சுந்தரி தன் குழந்தையோட சேர்ந்து கிணத்துல குதிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டு இறந்து போயிட்டதாக அவங்களுடைய ஊருல சொல்றாங்க. அதுக்குக் காரணத்தை விசாரிச்சால், சங்கருக்கு திரும்பவும் அவருடைய பழைய காதலி எழிலரசியுடன் தொடர்பு வந்திருச்சு, அதான் அந்தப் பொண்ணு குழந்தையோட சேர்ந்து தற்கொலை பண்ணி செத்துப் போச்சுன்னு சொல்றாங்க. ஆனால் அது உண்மையில்லை சார்."

"வாட்?"

"ஆமா சார். அதெல்லாம் வெறும் காசிப் சார், ஐ மீன் பொய், புரளி சார்."

"எதை வச்சு சொல்றீங்க?"

"சார், நான் எழிலரசியோட ஊருக்கும் போய் விசாரிச்சேன். அவங்களோட கதையைக் கேட்டால் எனக்கே கண்ணீர் வந்திடுச்சு சார்."

"ஸோ, நீங்க ஒரு போலீஸ் ஆஃபிசருங்கிறதை மறந்துட்டு அழுதிருக்கீங்க."

"என்ன சார்? போலீஸ் வேலைப் பார்க்குறவங்களும் மனுசங்க தானே சார்."

"ம்ப்ச், சரி விஷயத்தைச் சொல்லுங்க."

"சார், சங்கரும் எழிலரசியும் லவ் பண்ணும் போது அவங்களுக்கு வயசு 20 சார். சாதியைக் காரணம் காட்டி சங்கரை எழிலரசியிடம் இருந்து பிரிச்சு அவருக்குச் சுந்தரியைக் கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க, அப்போ அவருக்கு வயசு 22. ஆனால் எழிலரசியோட பிடிவாதத்தில் அவரை மேற்கொண்டு படிக்க அனுமதிச்ச அவங்களுடைய அம்மா அவங்க படிப்பு முடிஞ்சதும் ஒருவழியா மாப்பிள்ளைப் பார்த்து எழிலரசியோட கல்யாணத்தை நடத்தி வச்சிருக்காங்க. ஆனால் எழிலரசியால அந்தக் கல்யாணத்தையும் ஏத்துக்க முடியலை, சங்கரையும் மறக்க முடியலை. இப்படி மனசுக்குள்ள ஒருத்தரை வச்சிக்கிட்டு வேற ஒருத்தர் கூடக் குடும்பமும் நடத்த முடியாமல் கல்யாணத்து அன்னைக்கு நைட்டே கணவர்கிட்ட எல்லாத்தையும் சொல்லியிருக்காங்க. மறு நாளே அவங்க அம்மா வீட்டுக்கும் திரும்பி வந்துட்டாங்க.

இந்தச் சூழ்நிலையில் தான் தற்செயலா சங்கர் அவங்களைச் சந்திச்சிருக்காரு, ரெண்டு பேரும் பேசியிருக்காங்க. ஆனால் அந்த விஷயம் எப்படியோ சங்கரோட சம்சாரம் சுந்தரிக்குப் போயிருக்கு. அன்னைக்கு ஆரம்பிச்ச சண்டை தான் அவங்களோட தற்கொலை வரைக்கும் போயிருக்குன்னு அவங்க ஊர்காரங்க சொல்றாங்க சார். அப்போ சங்கர் சாருக்கு வயசு வெறும் இருபத்தி நாலு தான் சார்."

அவர் சொல்ல வருவது சக்திவேலுற்குப் புரிந்து போனது.

"ம்ம்ம்.. மேல சொல்லுங்க."

"பாவம் சார் அந்தச் சங்கர். அதே மாதிரி அந்த எழிலரசியும் பாவம் தான். சாதியை வச்சு ரெண்டு சின்னஞ்சிறுசுகளைப் பிரிச்சு வச்சிருக்காங்க, ஆனா பாருங்க, சில வருஷங்கள் கழிச்சு அவங்க விதி அவங்களைச் சேர்த்து வச்சிருக்கு. அவங்க ரெண்டு பேரும், அதாவது சங்கர் எழிலரசியைப் பிறகு கல்யாணம் பண்ணிருக்காரு, அவங்களுக்குப் பிறந்த பொண்ணு தான் சார் நீங்க விசாரிக்கச் சொன்ன மீனாக்ஷி. இதுல சங்கரும் எழிலரசியும் செஞ்ச ஒரே தப்பு, அதாவது தப்புன்னு சொல்ல முடியலை, ஆனால் மற்றவங்க பார்வையில் அது பெரிய தப்பா முடிஞ்சிருக்கு. அது சங்கருடைய மூத்த சம்சாரம் தற்கொலை செஞ்சுக்கிட்டு இறந்த மறுமாசமே அவர் எழிலரசியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது தான் எல்லாருக்குமே தப்பா தெரிஞ்சிருக்கு....

அதுக்கு அப்புறம் எழிலரசியின் குடும்பமும் அவங்களை மொத்தமா ஒதுக்கிவிட்டுட்டாங்க. ஆனால் அவ்வளவு சீக்கிரமா ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்குக் காரணம், எனக்குத் தெரிஞ்சு அவங்க ரெண்டு பேரும் இதுக்கும் மேல ரிஸ்க் எடுக்க விரும்பலைன்னு நினைக்கிறேன், அதான் உடனடியா கல்யாணம் பண்ணிருக்காங்க. ஆனால் விதி அவங்க எல்லாருடைய வாழ்க்கையிலும் மறுபடியும் விளையாடிடுச்சு போல. நான் விசாரிச்ச வரைக்கும் சங்கரும் எழிலரசியும் ரொம்ப ஆசையா அவங்க மகள் மீனாக்ஷிக்கு கல்யாண ஏற்பாடு செய்ததாகவும், ஆனால் அதற்குள் அவங்க ரெண்டு பேரும் ஆக்ஸிடெண்டுல இறந்துப் போயிட்டதாகவும் சொல்றாங்க. சொல்லப் போனா இறந்துப் போன சங்கருடைய மூத்த சம்சாரம் சுந்தரியோட சாபம் தான் இப்படி அல்பாயுசுல இவங்க செத்ததுக்குக் காரணமுன்னு கூட அவருடைய ஊருல பேசிக்கிறாங்க சார்."

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மிக முக்கியமான வழக்குகளாக ஒரு காலத்தில் சங்கர் மற்றும் எழிலரசியின் வழக்கு அனைத்துப் பத்திரிக்கைகளிலும் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி எழிலரசி, அதே கல்லூரியில் படித்த தலித் சமூகத்தைச் சேர்ந்த சங்கரைக் காதலித்ததாகவும், இருவரும் ரகசிய திருமணம் செய்து கொள்ள முயற்சித்த வேலையில் சங்கர் கடத்தப்பட்டதாகவும் அன்றைய நாட்களில் பிரபலமாகப் பேசப்பட்ட செய்தி.

ஆனால் இவை நடந்து பல வருடங்கள் ஆகிவிட்ட வேளையில் அவ்வப்பொழுது பழைய செய்திகளைப் புரட்டிப்பார்க்கும் பொழுது இந்தப் பெயர்கள் அடிப்பட்டிருந்ததை சக்திவேலின் புத்தி இப்பொழுது எடுத்துரைத்தது.

"சரி, நீங்க போங்க."

அந்தக் காவலதிகாரியை அனுப்பி வைத்த சக்திவேல், சங்கர் எழிலரசியைப் பற்றிய செய்திகளை இணையத்தளத்தில் தேட, அவர் கூறியது உண்மை என்று அனைத்துமே அப்பட்டமாகப் புலப்பட்டது.

ஆக, மீனாக்ஷி கூறுவது உண்மைதான். அவள் அப்படி ஒன்றும் கெட்டவள் இல்லை. அவனது உள்ளம் முணுமுணுத்தாலும், ஏனோ அந்த விஷயத்தைப் பற்றி, எவரிடமும், கார்த்தியிடம் கூடச் சொல்லாது இருந்துவிட்டான். ஒரு வேளை அவளிடம் நேரடியாக அதைப்பற்றிப் பேச நினைத்திருந்தானோ என்னவோ, அது சக்திவேலுக்கு மட்டுமே வெளிச்சம்.

அன்று இரவு தனிமையில் தன் படுக்கையில் சாய்ந்தவனின், அவனே அதுவரை உணர்ந்திராத இதயத்தின் கனமும் இப்பொழுது அவனே அறியாதவண்ணம் இலகுவானது போல் தணிந்தது.

ஆனால் ஒருவேளை அவன் அவளது பிறப்பின் பின்னணியில் இருக்கும் உண்மைகளைத் தன் குடும்பத்தினரிடம் சொல்லிருந்தால், பின்னாளில் அவர்கள் இருவருக்கும் இடையே உருவாகப்போகும் சிறிய இடைவெளியைக் கூடத் தவிர்த்திருக்கலாமோ!

***************************

இன்றோடு கல்லூரி மாணவன் ராகேஷ் தற்கொலை செய்துக்கொண்டு இறந்துப் போய் ஏறக்குறைய ஆறு மாதங்கள் முடிவடைந்திருந்த வேளையில், அவனது மரணம் தற்கொலை தான் என்று பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டும் கூறியிருந்ததில் ராகேஷின் வழக்கு மூடப்பட்டது.

ஆயினும் ஏனோ அவனது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவே சக்திவேலிற்குத் தோன்ற, அன்று காலையில் தனது பிரத்யேக சிகப்பு நிற ரேங்லர் ரூபிக்கான் ஜீப்பை செலுத்திக் கொண்டிருந்தவனின் நெற்றிச் சுருங்குவதும் பின் விரிவதுமாய் இருந்ததில் அவன் அருகில் அமர்ந்திருந்த யுகேந்திரனின் கண்கள் இடுங்கின.

"என்ன ஆச்சு சக்தி?"

யுகேந்திரனின் கேள்விக்கு சக்திவேல் பதிலளிக்காகதால் அவனது தோளைத் தொட, அதனில் நண்பனின் முகம் நோக்கித் திரும்பிய சக்திவேல் மீண்டும் சாலையின் புறம் பார்த்தவனாய், "எனக்கு என்னவோ இன்னமும் ராகேஷோட மரணம் தற்கொலையா இருக்க முடியாதுன்னு தோணிட்டே இருக்கு யுகா." என்றான்.

"I know. நீ சொல்றதை எல்லாம் வச்சுப் பார்த்தப்போ எனக்கும் அப்படித்தான் தோணுச்சு, பட் அட்டாப்ஸி ரிப்போர்ட் கிளியரா அது சூசைட் தான், கொலை இல்லைன்னு சொல்லுதுன்னு சொன்னியே சக்தி."

"யெஸ், ஆனால் அன்னைக்கு நைட் ராகேஷின் வீட்டுக்கு வந்துட்டுப் போன அவனுடைய ஃப்ரெண்ட்ஸ் யாருன்னு கண்டுப்பிடிக்கவே முடியலையே. அந்த விஷயம் தான் என் மூளையையும் போட்டு குடைஞ்சிட்டே இருக்கு. அவன் படிச்ச காலேஜிலேயும் விசாரிச்சுப் பார்த்துட்டேன். அவனுக்குன்னு நெருங்கின ஃப்ரெண்ட்ஸ் யாருமே இல்லை, அதுவும் இல்லாமல் யாருமே அவன் வீட்டுக்கு இதுவரை போனதே இல்லைன்னு அடிச்சு சொல்றாங்க. இதுல ஆர்மியில் வேலைப் பார்த்திருந்த ராகேஷுடைய அப்பா அவருடைய வீட்டிற்குள் இல்லைன்னாலும், வீட்டைச் சுற்றி ஒரு சில இடங்களில் மட்டும் சி.சி.டிவி கேமராக்கள் பொறுத்தியிருக்காரு, ஆனால் அன்னைக்கு முழுக்க அந்தக் கேமராஸ் வேலை செய்யலை. அன்றைய நாளுடைய எந்த ஃபூட்டேஜும் [footage] அங்க இல்லை. கேட்டால் இந்திய நேரப்படி நான் அன்னைக்குக் காலையிலேயே என் மகன் ராகேஷைக் கூப்பிட்டு விசாரிச்சேன், அவனும் திடீர்னு எல்லாக் கேமராஸும் வேலை செய்யலை, நான் டெக்னிஷியன்ஸுக்கு சொல்லிருக்கேன்னு ஏதேதோ காரணம் சொல்லி மழுப்பிட்டான்னு அவனுடைய அப்பா சொல்றாரு."

"ஆமா சக்தி, ஒரே நேரத்தில் வேலை செய்யாமல் எப்படி எல்லாம் கேமராஸும் போகும்ங்கிற ஆங்கிலிலும் விசாரிச்சிட்டேன்னு சொன்னியே."

"யெஸ், அதுக்கும் ஏதோ முதல் நாள் நைட் பயங்கிற இடி மழைன்னு இருந்ததினால் கேமராஸ் பழுதடைஞ்சிடுச்சுன்னு ராகேஷ் சொன்னான்னு சொன்னாரு, பட் நான் செக் பண்ணும் போது அப்படித் தெரியலையே யுகா. அதுவும் இல்லாமல், வீட்டிற்கு முன் இருக்கும் காரிடாரிலும், வீட்டிற்குள்ள போவதற்கான கதவுக்குப் பக்கத்திலும் இருந்த வீடியோ கேமராஸும் வேலை செய்யலை. இடி இடிச்சால் எல்லாக் கேமராஸும் பழுதடையுமான்னு கேட்டதுக்கு எனக்கு அந்தச் சந்தேகம்தான் இருந்ததுன்னு சொல்லிட்டு திருதிருன்னு முழிக்கிறாரு. அங்க தான் ஏதோ இடிக்குது.”

“உனக்கு என்ன தோணுது சக்தி?

“என்னைப் பொறுத்தவரை ராகேஷ் தான் எல்லாக் கேமராஸையும் செயலிழக்கச் செய்திருக்கணும். ஆனால் சூசைட் பண்ணிக்கிட்டு சாகப்போறவன் எதுக்காக வீட்டுக்கு வெளியில் இருக்கும் கேமராஸை அவனா ரிப்பேர் பண்ணி வச்சிருக்கான்னு அந்த ஆங்கிளிலும் அலசிப் பார்த்தாச்சு. ஆனால் விடை தான் கிடைக்கலை.”

“சக்தி, என் அப்பாவுடைய அநியாயக் கட்டுப்பாடுகள் தாங்க முடியாமல் நான் தற்கொலை செய்துக்கப் போறேன்னு கிளியரா அவன் சூசைட் நோட் எழுதி வச்சிட்டு செத்துப்போயிருக்கான். அந்த நோட்டில் இருந்தது அவன் கையெழுத்தான்னு செக் பண்ணி உறுதிப்படுத்தியாச்சுன்னு நீ சொன்ன. திரும்பவும் ஏன் திடீர்னு இவ்வளவு சந்தேகம்?”

“தெரியலை யுகா. ஆனால் என்னால அந்தக் கேஸில் இருந்து விடுபட முடியலை. ஒரு வேளை அன்னைக்கு அவன் வீட்டுக்கு வந்த ஃப்ரெண்ட்ஸில் ஒருத்தனாவது என்னிடம் சிக்கி இருந்தால் எனக்கு ஏதாவது க்ளூ கிடைச்சிருக்க வாய்ப்பு இருக்குன்னு மனசு சொல்லிட்டே இருக்கு."

"எனக்குத் தெரிஞ்ச வரை அவன் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் தான் அவனைப் பார்க்க வந்திருக்கணும் சக்தி. ஆனால் அவன் இப்படிச் சூசைட் பண்ணி செத்துப்போவான்னு அவங்களுக்குத் தெரிஞ்சிருக்காது. அதான் இப்போ உன்னிடம் மாட்டினால் அவனுங்களுக்குக் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடும்னு பயந்துட்டு மறைச்சிருக்கலாம்."

"ப்ச், யெஸ், இருக்கலாம்."

“சக்தி, என்னைக் கேட்டால், சாகுறதுக்கு முன்னாடி அவன் ஃப்ரெண்ட்ஸோட கொஞ்சம் சந்தோசமா இருக்கலாம்னு முடிவு செய்திருக்கலாம். அதுக்காகக் கேமராஸை அவனா வேலை செய்யாதமாதிரி ஏதாவது செஞ்சு வச்சிருக்கலாம். ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் போனதும் சூசைட் நோட் எழுதி வச்சிட்டு தற்கொலை செய்துட்டு இறந்துப் போயிருக்கலாம். இது தான் என் மனசுக்குப் படுது.”

யுகேந்திரன் எவ்வளவோ சமாதானமாகக் கூறியும் சக்திவேலின் மனம் அமைதியடையவில்லை.

அன்றைய நாளை தொடர்ந்து நடந்த அனைத்து விஷயங்களைப் பற்றியும் இருவரும் மீண்டும் விவாதித்துக் கொண்டே வர, ராகேஷின் வீட்டைச் சுற்றி இருக்கும் மற்ற வீடுகளிலும், கடைகளிலும் விசாரிச்ச அளவில், அது சாதாரண மக்கள் குடியிருக்கும் பகுதி என்பதால் ஒருவருடைய இடத்திலும் சி.சி.டிவி கேமராக்கள் பொறுத்தப்படாதிருந்தது. அதனில் அவனுடைய நண்பர்களைப் பற்றி ஒரு துப்புக் கூடக் கிடைக்காமல் போனதில் மனதளவில் அந்த வழக்கை மூடாமலேயே வைத்திருந்தான் சக்திவேல்.

"வேற வழியே இல்லை சக்தி. இந்தக் கேஸை இப்படியே விட்டுட வேண்டியது தான். அதுவும் இல்லாமல் அதற்குப் பிறகு தற்கொலையோ கொலையோ, ஐ மீன் இருபதில் இருந்து இருபத்தி ஐந்து வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள் யாருமே கொலை செய்யப்படலைங்கிறதில் ஒருவித நிம்மதி தான், ரைட்?"

நண்பனின் கேள்விக்குப் பதிலளிக்காமல் சாலையைக் கூர்ந்துப் பார்த்தவாறே ஜீப்பை செலுத்திக் கொண்டிருந்த சக்திவேலின் கவனத்தை இழுத்தது அவர்களது வாகனத்தை முந்திக் கொண்டு சென்ற இரண்டு பைக்குள்.

அவற்றை ஓட்டியவர்கள் இருபது வயதுகளில் இருக்கும் இளைஞர்கள்.

அது வரை சற்று வேகமாகவே ஜீப்பை செலுத்திக் கொண்டிருந்தவன் சட்டென வேகத்தைக் குறைத்து சிறிது நிதானமாக ஓட்ட, அவன் புறம் நோக்கினான் யுகேந்திரன்.

"Is everything alright Shakthi?"

"பைக்ஸ்.."

அதற்கு மேல் பேசாமல் சக்திவேல் அமைதியாகிவிட, "அதுக்கு என்ன சக்தி?" என்றான் யுகேந்திரன்.

"தெரியலை யுகா. ஆனால் என்னவோ இந்தப் பைக்ஸின் சத்தங்களைக் கேட்கும் போது ஏதோ நியாபகம் வருது, பட் எதுவும் க்ளியரா தெரிய மாட்டேங்குது."

"என்ன நியாபகம் வருது?"

"ஹேய், அதான் சொன்னேன் இல்ல, சரியா தெரியலைன்னு."

"இப்ப எதுக்கு உனக்கு இவ்வளவு கோபம்?"

"கோபம் எல்லாம் இல்லைடா, பட் இந்தப் பைக்ஸுக்கும் ஒரு சம்பவத்திற்கும் கனெக்ஷன் இருக்குற மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் எனக்குத் தோணுச்சு, ஆனால்."

"ஆனால்.."

"ம்ப்ச், சரி அதைவிடு.."

"சக்தி, நான் ஒண்ணு சொல்லட்டுமா?"

"என்ன?

"You need a break."

"ப்ரேக்கா, எதுக்கு?"

“எதுக்குன்னு என்னைக் கேட்குறதைவிட நீ உன்னையே கேட்டுக்க. சரி, அது இருக்கட்டும், நீ உன் அம்மாவைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு?"

"ஆறு மாசம் இருக்கும்."

"அப்படின்னா நீ அவங்களைப் போய்ப் பார்க்க வேண்டிய நேரம் வந்துடுச்சு."

"என்னடா சொல்ற?"

"நீ மருதூர்குளம் போகணும்னு சொல்றேன்."

"ஏன் திடீர்னு?"

"அதைத்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னேன். அப்பப்ப நாம ஒரு ப்ரேக் எடுத்துக்கணும் சக்தி."

"என்ன பேச்சு இது யுகா?"

"யெஸ் சக்தி. நான் சொல்லி இதை நீ தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏன்னா நாம செய்யற வேலை அப்படி. இல்லைன்னா இந்த வேலை நம்மைப் பைத்தியம் ஆக்கிடும்."

"பைத்தியமா? இதை எல்லாம் தெரிஞ்சு தான யுகா நாம் ஐபிஎஸ் படிச்சோம், இந்த வேலைக்கும் வந்தோம்."

"ஐ நோ, ஆனால் போலீஸ் ஆஃபிஸர்ஸ் எல்லாருமே ரோபோக்கள் இல்லை சக்தி. இன்னும் சொல்லப் போனால் நமக்குத்தான் அப்பப்ப ஒரு ரெட்ரீட் [retreat] தேவைப்படுது. எப்பவும் கொலை கொள்ளை குற்றங்கள் ரத்தம் இப்படிப்பார்த்து பார்த்து நாம நார்மல் லைஃபை எஞ்சாய் பண்ணாமலேயே போயிடுறோம். அதான் சொல்ல..."

அவனை முடிக்கவிடவில்லை சக்திவேல்.

"யுகா, நீ என்ன Psychologist-அ மாறிட்டியா, எனக்குக் கௌன்சலிங் பண்ண ஆரம்பிச்சிட்ட.”

“அடப் போடா.”

“சரி, இதை முதலில் சொல்லு. இப்ப நீ என்னிடம் சொன்ன எல்லாத்தையும் நீயா சொல்றியா இல்லை வேற யாரும் சொல்ல சொல்லி உன்கிட்ட கேட்டாங்களா?

"அதெல்லாம் யாரும் சொல்லலை, நானாத் தான் சொல்றேன்."

"நோ, எனக்கு அப்படித் தெரியலை."

கூறிய சக்திவேலின் முகம் நோக்கித் திரும்பிய யுகேந்திரன்,

"சரி, அம்மா தான் சொன்னாங்க. வீட்டுக்கு மூத்தவனா பிறந்து குடும்பப் பொறுப்பை எல்லாம் பார்த்துப்பான்னு நினைச்சா, அவன் பாட்டுக்கு அவங்க அப்பா எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் போலீஸ் வேலைப் பார்க்கப் போறேன்னு சொல்லிட்டு ஐ.பி.எஸ் படிக்கப் போனான். அதுக்கப்புறம் ஊர் பக்கம் வருவதே பெரிய விஷயமாகிடுச்சு. தூத்துக்குடிக்கு மாத்தல் வாங்கிட்டு வந்த பிறகாவது என்னைப் பார்க்க அடிக்கடி வருவான்னு நினைச்சேன். ஆனால் அந்த ஆசையிலும் கல்லைத் தூக்கிப்போட்ட மாதிரி ஒரே ஒரு தடவை வந்துட்டு போனவன், அதுக்கப்புறம் இந்தப் பக்கம் தலைக்காட்டவே இல்லை. தோப்புத்துறவு, தொழிலுன்னு இப்போ பாலாவும் கார்த்தியும் தான் எல்லாத்தையும் பார்த்துக்குறாங்க அப்படின்னாலும் அம்மா அப்பாவைப் பார்க்கவாவது அவன் வர வேண்டாமா? ஊருக்கு வந்துட்டுப் போய்க் கிட்டத்தட்ட ஆறு மாசம் ஆகிடுச்சு. என் கண்ணுக்குள்ளேயே அவன் நிக்குறான்ப்பா, நீயாவது அவன்கிட்ட சொல்லக் கூடாதான்னு கேட்குறாங்க.." என்றான் புன்சிரிப்புடன்.

"ஆக உத்தரவு அங்க இருந்து வந்திருக்கு.."

"அதுக்கென்னப்போ? நீ ஒரு முறை ஊருக்குப் போயிட்டு வந்துடு."

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம்."

சக்திவேல் கூறியதும் சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்த யுகேந்திரன் என்ன நினைத்தானோ திடுமென அந்தக் கேள்வியைக் கேட்டான்.

“நீ ஏன் ஊருக்கு போகமாட்டேன்னு இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிற சக்தி?”

“இப்போ நீ இந்தப் பேச்சை விடமாட்ட, அப்படித்தான?”

"யெஸ். அன்ட் ஆல்ஸோ நீ ஏன் போகமாட்டேங்குறன்னு எனக்குத் தெரியும்."

"ஏன்?"

"அந்தப் பொண்ணு மீனாக்ஷி தானே?"

"அவளுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் யுகா?"

"அந்தப் பொண்ணைப் பற்றித் தெரியாமல் அவளை வீட்டைவிட்டு அனுப்பிடுங்கன்னு அலப்பறை பண்ணிட்டு வந்துட்ட, ஆனால் இங்க வந்தற்கு அப்புறம் விசாரிச்சுப் பார்த்ததில் அவ நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணு தான்னு உனக்குத் தெரிஞ்சுது. இப்போ அந்தப் பொண்ணை வீட்டில் வச்சிக்க அனுமதிக்கவும் முடியாமல், அவளை விரட்டவும் முடியாமல் உன் மனசு கிடந்து அல்லாடுது. இதுல இப்ப ஊருக்குப் போனால் அவளை நிச்சயம் நீ சந்திக்கும் சூழ்நிலை வரும், அதை அவாய்ட் பண்ணத்தான ஊரு பக்கமே போகாமல் இருக்க, ரைட்? எதுக்கு இந்த ஈகோ சக்தி."

"ப்ச், அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை."

"அப்ப போயிட்டு வா."

"நீ விடமாட்ட? சரி பார்ப்போம்.”

கூறிய சக்திவேல் அடுத்து வந்த சில நாட்களில் வழக்கம் போல் தனது வரவை அன்னையிடமோ தம்பிகளிடமோ தெரிவிக்காது மருதூர்குளத்திற்குக் கிளம்பினான்.

ஊரை அடையும் பொழுது கிட்டத்தட்ட மணி மாலை ஆறு ஆகியிருக்க, வீட்டின் அழைப்பு மணி அடித்தவனின் சத்தத்திற்கு ஒருவரும் வந்து கதவைத் திறக்காததில் கடுப்பு ஏறியது.

சென்ற முறை இதே போன்ற ஒரு சூழலில் கதவைத் திறந்த மீனாக்ஷியின் முகம் மனதில் நிழலாட, அவளைப் பற்றிய எண்ணங்களை அசைப்போட்டவாறே பல மணித்துளிகள் கதவைத் தட்டியவாறும், அழைப்பு மணியை அழுத்தியவனாயும் நிற்க, ஆயினும் ஒருவரும் வந்து கதவைத் திறந்தபாடில்லை.

"சே, எல்லாரும் இந்நேரத்துல எங்கப் போயிருக்காங்க?"

சலித்துக் கொண்டவனாய் மெதுவாய் முணுமுணுத்தவாறே பாலாவின் அலைபேசிக்கு அழைத்தவன் விசாரிக்க, "நம்ம காளியம்மன் கோவில்ல திருவிழா நடக்குதுண்ணே. அங்க தான் எல்லாரும் போயிருக்காங்க?" என்றான்.

"இப்போ மணி ஆறாகிடுச்சு, இந்நேரம் வரை என்ன பண்றாங்க?"

தமையனின் கேள்விக்கு ‘முன்னப்பின்ன கோவிலுக்குன்னு போயிருந்தால் தானே திருவிழா பூஜை புனஸ்காரங்கள் பத்தித் தெரியும், ஆன்மீகத்தை நம்புவதைவிட நான் அறிவியலையே நம்புகிறேன்னு சொல்றவர்கிட்ட என்ன பேச முடியும்?’ என்று எண்ணியவனாய்,

"காலை ஏழரை மணிக்கே பூஜைத் தொடங்கிரும்ண்ணே, ஆனால் நைட் தான் சிறப்புப் பூஜை செய்வாங்க, அதுவும் இன்னைக்குப் பூச்சாட்டுதலோட பூஜைத் துவங்குது. அதான் எல்லாரும் அங்க இருக்காங்க. அவங்க எல்லாம் வீட்டுக்கு வர ரொம்ப நேரம் ஆகும்ண்ணே." என்று முடித்தான்.

"எல்லாரும்னா, வள்ளி, முத்து, மணி எல்லாருமா?"

"ஆமாண்ணே. எல்லாருமே திருவிழாக்குத் தான் போயிருக்காங்க."

"அப்ப நீ?"

"நான் இங்க ஒரு ஷிப்மெண்ட் எடுக்க வந்தேண்ணே. நீங்க இப்போ மருதூர்குளத்திலயா இருக்கீங்க?"

"யெஸ், ஆனால்.." என்று ஏதோ சொல்ல வந்தவன் சொல்லாமல் விட்டுவிட்டு, "பாலா, எனக்குக் கொஞ்சம் அவசர வேலை இருக்கு. என் ஜீப் வேண்டாம், உன் பைக்கை எடுத்துக்குறேன். நீ உன் வேலையை முடிச்சிட்டு பிறகு வா. அந்தக் கோவில் எங்க இருக்குன்னு மட்டும் எனக்கு அட்ரெஸ்ஸை டெக்ஸ்ட் பண்ணிடு. " என்று மட்டும் கூறிவிட்டு அலைபேசி அழைப்பைத் துண்டித்தான்.

ஆக வீட்டில் ஒருவரும் இல்லை. வீட்டுச்சாவியும் இப்போதைக்குக் கைவசம் இல்லை.

தனது ஜீப்பை எடுக்காமல் பாலாவின் சிகப்பு மற்றும் கருப்பு நிறங்கள் கலந்த, பளபளத்து ஜொலித்துக் கொண்டிருந்த [triumph trident 660] பைக்கை எடுத்தவன் திருவிழா நடந்து கொண்டிருக்கும் காளியம்மன் கோவிலை நோக்கி பயணித்தான்.

அன்றைய இரவு, அவனே அறியாத, வாழ்க்கையில் மறக்க இயலாத இரவாக மாற்றும் சக்திப் பெற்ற, இதயத்தைக் குளிர்விக்கும் பனிச்சாரல் போன்ற மென்மையான உணர்வை அவன் உணரப் போகின்ற இரவாக அது மாறக்கூடும் என்பதை அறியாது, அதிவேகமாய்ப் பாலாவின் ட்ரையம்ப் ட்ரைடண்ட் பைக்கை செலுத்திக் கொண்டிருந்தான் சக்திவேல்.

தொடரும்.
 
Last edited:

Hanza

Member
Enekkum doubt irukku… Rakesh case suicide illai nu… let’s see…

Acho… Bala kittayum bike irukka???

Shakthivel family la yarum culprit ah irukka koodathu 🙏🏻🙏🏻🙏🏻
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top